இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 13, 2019

தமிழ்த் திரைப்படங்கள் 2019 ஒரு பார்வை


சிறிய படங்கள் எவை? சிறிய பட்ஜெட் படங்களா, ஒருவகையில் இது சரிதான். ஆனால் பட்ஜெட் குறைவாகவே இருந்தாலே அது சிறிய படமாகிவிடுமா? இல்லை. எனில், மாற்றுப் படங்களைச் சிறிய படங்கள் என்கிறோமோ. இதையும் முழுக்க ஒத்துக்கொள்ள முடியாது. ஆனால், ஓரளவுக்கு மாற்றத்தை நோக்கிய படங்களைச் சிறு படங்கள் எனச் சொல்லலாம். படத்தின் உருவாக்கம், விநியோகம் பற்றிய கவலைகளின்றிச் சற்றுச் சுதந்திரமாக உருவாக்கப்படும் படங்களைச் சிறிய படங்கள் எனலாம். பிரபல நடிகர்களையும் பிரபலத் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மட்டுமே நாடாமல் கதைக் களத்தையும் அதற்கேற்ற நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நம்பி உருவாக்கப்படும் படங்களைச் சிறு படங்கள் என நமது வசதிக்காக ஒரு வரையறை செய்துகொள்ளலாம்.

எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ஆனால், ஆண்டின் இறுதியில் அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஓரிரு படங்களைக்கூடச் சிறப்பானவை எனக் குறிப்பிட முடியாத சூழலே தொடர்கிறது என்பது சினிமா ஆர்வலர்களுக்கு வேதனை தரும் விஷயமே. எனினும், சற்றுத் தளர்வான, கரிசனமான பார்வையுடன் பரிசீலித்தால், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகச் சில படங்கள் உள்ளன. முதல் காலாண்டில் சிகை, பேரன்பு, டூலெட், நெடுநல்வாடை, சூப்பர் டீலக்ஸ், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் போன்ற சில படங்களைக் குறிப்பிடலாம்.


ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் உருவான எதிர்பார்ப்பு காரணமாக சூப்பர் டீலக்ஸ் பெரிய நம்பிக்கைக்குரிய படமாக வெளியீட்டுக்கு முன் தோற்றம் கொண்டது. ஆனால், படம் வெளியான பின் அது கொண்டாடத்தக்க படமாக அமையால் போனது. ஒரு தரப்பினர் இதைக் கொண்டாடித் தீர்த்தனர் என்றபோதும் அந்த அளவுக்கான தகுதியைப் படம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. அதே போல் மாற்று ஊடகத்தில் வெளியான சிகை திரில்லர் பாணியிலான ஒரு சராசரிப் படமே. அதன் களம் மாத்திரமே அதைக் குறிப்பிடக் காரணமாகிறது. பேரன்பு மிகையுணர்வுடன் புரிதலின்மை கைகோத்த படமாகவே இருந்தது. மம்முட்டி போன்ற பெரிய நடிகர் நடித்தபோதும் அது கையாண்ட உள்ளடக்கம் காரணமாக அதைச் சிறிய படமாகவே கருத வேண்டியுள்ளது.


சிறிய படங்களையும் சமூக ஊடகங்கள் வழியே சரியாகச் சந்தைப்படுத்தினால் அதை வெற்றிப் படமாக முன்னிறுத்திவிடலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தது டூலெட். யதார்த்தமற்ற யதார்த்த படம் இது உலகத்தில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது என்ற பிம்பத்தின் வழியே தமிழின் சிறந்த படம் என முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால், சொந்த வீடு தரும் நிம்மதியையோ மகிழ்ச்சியையோ தராத சராசரியான வாடகை வீடு போன்ற திரைப்படமே இது. நெடுநல்வாடை திரைப்படம் கிராமத்து வாழ்வையும் உறவையும் ஓரளவு உயிர்ப்புடன் சித்தரித்திருந்தது. கிராமம், காதல், தியாகம் போன்ற மரபான அம்சங்கள் இருந்தபோதும், பூ ராமு போன்ற ஒரு குணச்சித்திர நடிகரை மையமாகக் கொண்டு ஒரு காலகட்ட வாழ்வைத் திரையில் முடிந்தவரை ஒப்பனையின்றி நிகழ்த்திச் சென்றது ரசிக்கத்தக்கதாக இருந்தது.


அடுத்த காலாண்டில் வெளியான சிறிய படங்களில் மெஹந்தி சர்க்கஸ், கேம் ஓவர், ஹவுஸ் ஓனர், ஜீவி போன்ற படங்களைக் கவனம் பெற்றவை எனச் சொல்லலாம். எண்பதுகளில், தொண்ணூறுகளில் சினிமாப் பாடல்கள் வழியாகவே வாழ்வின் முக்கிய தருணங்களைக் கழித்த ஒரு தலைமுறையின் வாழ்க்கையை நினைவூட்டிய, மெல்லிய உணர்வுகொண்ட படமாக இது அமைந்தது. ஊரூராக வந்து சர்க்கஸ் நடத்திய குழுவிலிருந்த பெண்ணுக்கும் பூம்பாறை என்ற ஊரின் பெரிய குடும்பத்துப் பையனுக்குமான காதல் படம் இது.  காதலியை அடைய கத்தி எறிய வேண்டிய சூழலில் அதைத் தவிர்த்து காதலிலிருந்து வெளியேறும் காதலனிடம் காதலி மீண்டும் கிடைக்கிறாள், ஆனால், அதற்கிடையே அவளுக்கு மணமாகி, பருவ வயது மகள் வந்துவிடுகிறாள். இறுதியாக காதலியைச் சுற்றிக் குறிதவறாமல் கத்தியைக் காதலன் எறியும்போது, அங்கே காலத்தைக் கடந்து காதல் சாகசம் நிகழ்த்துகிறது.  


அதே போல் ஜீவி திரைப்படமும் வழக்கமான பாதையைத் தவிர்த்த திரில்லர் என்ற வகையில் கவனிக்கவைத்தது. புத்திசாலித்தனமான திரைக்கதையைச் சார்ந்து பயணித்து சுவாரசியம் தந்த சினிமாவாக இது இருந்தது. ஹவுஸ் ஓனர் திரைப்படத்தைப் பொறுத்தவரை சென்னையை அச்சுறுத்திச் சென்ற 2015-ம் ஆண்டின் வெள்ள நிகழ்வின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதைத் தவிர்த்துக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த அம்சமுமில்லை. சென்னை வெள்ளம் எனும் சம்பவத்தின் துயரத்தில் துளி அளவைக் கூட உணர்த்த இயலாத உலர்ந்த படம் இது.


மூன்றாம் காலாண்டில் , ஆடை, கொளஞ்சி, தொரட்டி, பக்ரீத் போன்ற படங்கள் வெளியாயின. இதே வேளையில் வெளியான ஒத்த செருப்பு அளவு எண் 7, மகாமுனி ஆகிய படங்களையும் இந்தப் பட்டியலில் நினைவுகூரலாம். கூடா நட்பு கேடாய் முடியும் என்னும் பழமொழிக்காகவே ஒரு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததைப் போன்ற எண்ணத்தைத் தந்த படம் தொரட்டி. ஆனால், கிடை போட்டு வாழும் ஒரு சமூகக் குழுவின் வாழ்க்கை முறையைச் சித்தரித்திருந்த விதத்தால் இது தனித்துத் தெரிகிறது. புதிய முகங்களை வைத்து ஓரளவு நம்பிக்கைக்குரிய படத்தை உருவாக்கிட முடியும் என்னும் நம்பிக்கை தரத்தக்க படம் இது. பார்த்திபன் என்னும் ஒரே நடிகர் தன் திறமைமீது நம்பிக்கை வைத்துத் தன்னை மட்டுமே ஒரு முழுப் படத்தில் பார்க்கவைத்து, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டவகையில் ஒத்தச் செருப்புப் படம் முக்கியமான படமாகவே தென்படுகிறது.


ஆண்டின் இறுதிப் பகுதியின் வெளியான படங்களில், கே.டி.என்கிற கருப்பு துரை,  இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் நினைவுகொள்ளத் தக்கவை. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு தரமான படமாக மலர்ந்திருக்க வேண்டிய கதைக் களத்தைக் கொண்டிருந்தது. ஆனால், திரைக்கதை உருவாக்கத்தின் தொய்வுத் தன்மையும் குழப்பமும் கருத்தாசையும் சேர்ந்து படத்தைச் சாதாரணமானதாக்கியது. படம் எடுத்துக்கொண்ட களத்துக்குத் தொடர்பேயில்லாத ஆணவக் கொலை சாதி கடந்த திருமணம் போன்ற அம்சங்கள் படத்தின் கவனச்சிதறலாகிப் போயின. போர் பாதிப்பைச் சொல்ல முயன்றதற்குப் பதில் காயலான் கடை மனிதர்களின் நல்லது கெட்டதுகளை முறையாக எடுத்துவைத்திருந்தாலே அது குறிப்பிடத்தகுந்த படமாக மாறியிருக்கக்கூடுமோ என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியது.  

கே.டி. என்ற கருப்பு துரை சொல்லிக்கொள்ளத்தக்க மாற்றுப்பட முயற்சி எனலாம். அதன் நோக்கத்தை அது முழுமையாக எட்டவில்லை என்றாலும் முதியவருக்கும் சிறுவனுக்குமான உறவை முடிந்தவரை யதார்த்தமாகவும் மிகையுணர்ச்சியின்றியும் கலகலப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்த படம் இது. தலைக்கூத்தல் என்ற பண்பாட்டு அம்சமொன்றைக் கதைக் களமாகக் கொண்டிருந்தது.


சிறிய படங்கள் என்று சொல்லும்போது அவற்றின் முதன்மை நோக்கம் வெறுமனே லாபமீட்டுவது என்பது மட்டுமாகவே இருக்காது என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். என்றாலும், லாபத்தைக் கணக்கில்கொள்ளாமல் படங்களை உருவாக்கிவிடவும் முடியாது. இந்த இரண்டையும் பெரிய அளவிலான சமரசமின்றி சங்கமிக்கச் செய்து கிடைக்கும் புள்ளியில் நமது வாழ்வு சார்ந்த மண் சார்ந்த பண்பாடு சார்ந்த கதைகளைத் திரைக்கதைகளாக வடித்தெடுக்கப்படும்போது மட்டுமே உருப்படியான படங்களை உருவாக்கிட முடியும். அதற்கான இணையவெளிகள் முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது திறந்துகிடக்கின்றன. ஏனெனில் ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே திரையரங்கைச் சுமந்து திரிகின்றனர். அவர்களது ரசனையைப் பூர்த்திசெய்யும் படங்களுக்காகத் தான் அவர்களும் காத்திருக்கின்றனர். நமது படங்கள் இதைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. வருங்காலத்திலாவது புரிந்துகொண்டால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக