இந்த வலைப்பதிவில் தேடு

காமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 02, 2025

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்


எதேச்சையாக இன்றுதான் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசித்து முடித்தான். இன்று அவருடைய பிறந்தநாளாம். பள்ளிப் பருவத்தில் வாசித்த ஒரு நாவலை சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் வாசித்தால் அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தாலேயே ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலை வாசிக்கத் தொடங்கினான். அவன் பிறந்த ஆண்டு, பிறந்த மாதம் இந்த நாவலின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. சிறு வயதில் வாசித்தபோது இந்நாவலின் சில சம்பவங்கள் நினைவில் பதிந்திருந்தன. இப்போது வாசித்தால் அவை என்னவிதமான உணர்வைக் கொடுக்கும் என்பதை அனுபவம் கொள்வதற்காகவே நாவலை வாசித்தான்.

பள்ளி, கல்லூரிப் பருவங்களில் வாசித்த பல நூல்களை இப்போது வாசிக்க முயன்றபோதும், அவற்றை முடிக்க முடியவில்லை. ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கிய நாவல்களைக்கூட சுவாரசியக் குறைவு காரணமாக முழுமையாக வாசிக்காமல் அப்படியே வைத்துவிடுவதே அவனது வாடிக்கை. ஏன் அப்போது வாசித்தோம் என்பது விளங்காமலே நாவலை மூடிவைத்துவிடுகிறான். அப்படியான மனநிலையில் தான் இந்த நாவலையும் திறந்தான். ஆனால், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த நாவல் அவனை வாஞ்சையோடு தழுவிக்கொண்டது. அவனது இதயத்தைச் சுகமான உணர்வுத் தந்தியாக மீட்டியது.
நாவலில் இடம்பெற்ற பெண்களில் இருவருக்கு மட்டும் ஜெயகாந்தன் பெயரிடவில்லை. ஒருவர் சபாபதிப் பிள்ளையின் மனைவி. மற்றொருவர் புத்திபேதலித்துத் திரியும் அந்த இளம்பெண். உண்மையில் இந்த நாவல் சபாபதிப் பிள்ளையின் மனைவியால் தான் தொடங்குகிறது. அந்தப் பெண்மணி அந்த ஊரின் பரியாறி பழனியுடன் ஓர் அதிகாலையில் செல்வதுதான் நாவலின் தொடக்கப்புள்ளி. அந்த அதிகாலைச் சம்பவத்துக்குப் பிறகு சபாபதியின் வாழ்வு விடியவே இல்லை.
சபாபதிப் பிள்ளையால் அதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அன்னியோன்யமாகத்தான் இருவரும் வாழ்ந்தனர். பத்தாண்டு தாம்பத்யத்தில் குழந்தை பாக்யம் இல்லை என்பதைத் தவிர ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவரிடமில்லாத ஏதோ ஒன்று பழனியிடம் இருந்திருக்க வேண்டும்தானே? இல்லாவிடின் அந்தப் பெண்மணி ஏன் சபாபதிப் பிள்ளையை விட்டுவிட்டு பழனியுடன் செல்ல வேண்டும்? ஏன் சென்றார் சபாபதியின் மனைவி என்பதற்கு நாவலாசிரியர் எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை. ஆனால், நாவலின் இறுதியில் புத்திபேதலித்த அந்த இளம்பெண் - அவளை ஹென்றி முதலானோர் பேபி என்கிறார்கள், ஆனால் நாவலாசிரியர் அவளுக்குப் பெயர் எதுவும் தரவில்லை. ஹென்றியே நாவலாசிரியர் உருவாக்கிய பாத்திரம் எனும்போது, பேபி நாவலாசிரியர் தந்த பெயர்தானே என நீங்கள் தருக்கம் பேசலாம், அப்படி நீங்கள் பேசினால் மறுக்க இயலாது. – ஹென்றியின் வீட்டுக்கு ஏன் வருகிறாள், வீட்டைப் பழுதுபார்த்து முடிந்த பின்னர் அவள் வந்தபடியே சென்றும்விடுகிறாளே அது ஏன்? இதற்கு ஏதாவது பொருள் புரிந்தால் தான் சபாபதிப் பிள்ளையின் மனைவி பழனியுடன் சென்றதற்கான பொருளை உணர முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மிகக் குறுகிய காலத்தில் நாவல் நடந்து முடிந்துவிடுகிறது. கிருஷ்ணராஜ புரத்துக்கு ஹென்றி வரும்போது, தொடங்கும் நாவல் தன் பப்பாவின் பூர்வீக வீட்டை அவன் பழுதுபார்த்து புதுமனைபுகுவிழா நடத்தும் நாளில் முடிந்துவிடுகிறது. ஹென்றியும் அவனுடைய பப்பாவும் வாசகர்களை ஈர்ப்பதைப் போலவே நாவலின் பெண்களான அபிராமி, கனகவல்லி, கிளியாம்பாள், நவநீதம், பஞ்சவர்ணத்தம்மாள், நாகம்மா ஆகியோரும் ஈர்த்துவிடுகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள்.
தேவராஜனின் அக்கா அபிராமி – அவள் அக்கம்மா என்றே அழைக்கப்படுகிறாள்- சிறுவயதிலேயே கணவனை இழந்துவிட்டவள். அவளோடு தேவராஜனின் மனைவி கனகவல்லியால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே, கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். மணியக்காரரின் மனைவி நாகம்மா – மணியக்காரர் பெயர் ராமசாமி – கணவர் குடித்துவிட்டு வந்த அன்று பெரிய சண்டையிடுகிறாள். அன்றே தன்னை மாய்த்துக்கொள்கிறார் மணியக்காரர். அதன் பிறகு அதை எண்ணி துக்கத்தில் மூழ்குகிறாள். அவளுடைய மகள் கிளியாம்பாள், குழந்தை பெற்ற அவளை அவளுடைய கணவன் பார்க்க வரவில்லை. ஆனால், அவளுக்குக் கணவன் மீது பெரிய வருத்தமில்லை. அவளுக்கும் அவளுடைய அம்மா நாகம்மாவுக்கும் நடக்கும் சண்டையின் போது, அம்மாவும் மகளும் என்றபோதும், இருவருமே ஒருவர்மீது ஒருவர் விஷம் உமிழ்கிறார்கள்.
ஹென்றி ஒரு லட்சிய மனிதன். அப்படியொருவனை யதார்த்தத்தில் பார்க்கவியலாது. கிருஷ்ணராஜ புரமே ஒரு கற்பனையூராகத்தான் தெரிகிறது. தேவராஜன் ஒரு அசட்டு அறிவுஜீவி. அறிவுள்ளதாக நம்பும் ஆண்கள் எல்லோருமே அசடர்களாகத் தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தேவராஜன் நடந்துகொள்கிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியர்.
இந்த நாவலில் கல்யாண வாழ்க்கை இருக்கிறது. ஆனால், காதலோ காமமோ இல்லவே இல்லை. புத்திபேதலித்த இளம்பெண்ணான பேபி நிர்வாணமாக உலாத்தும்போதுகூட அந்த இடத்தில் துளியும் காமம் தலைதூக்க வில்லை. ஒரு பெண்ணின் நிர்வாணம், நிர்வாணம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதைப் போல் அந்தச் சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுப் போக முடிவெடுத்த தருணம் மிகவும் துயரகரமானது. அன்புக்குரிய மனைவி மற்றொரு மனிதருடன் செல்கிறாள் என்பதை நேரடியாகப் பார்க்கிறார். இப்போது, அவரால் என்ன செய்ய முடியும்? புலவரான அவர் அருந்ததி முதலான பதிவிரதைகளின் கதையைச் சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் அதைகூட இருந்து கேட்ட மனைவி இப்போது அவரை விட்டுச் செல்கிறார். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்த இருவருக்கு இடையே பகிர்ந்துகொள்ள முடியாத எண்ணம் இருந்திருக்கிறது எனும்போது, மனிதர் வாழ்வுக்கு என்னதான் பொருள் இருக்கிறது?
ஊருக்குப் பயந்துதான் சபாபதிப் பிள்ளை ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கிறார். அந்த ஊருக்கு அவர் மனைவி பழனியுடன் சென்றது கடைசி வரை தெரியவே தெரியாது. அவரும் அந்த ஊருக்கு, கிருஷ்ணராஜ புரத்துக்குக் கடைசி வரை வரவே இல்லை. அவர் இறந்து மூன்று நாள்களுக்குப் பிறகுதான் ஹென்றி அங்கே வருகிறான். ஹென்றி பள்ளிக்குச் சென்றிருக்கவில்லை, ஆனால் அவ்வளவு பண்பானவனாக இருக்கிறான். ஹென்றியைப் பெற்றெடுத்த அம்மாவும் அப்பாவும் நாவலில் வருவதில்லை. அவனைத் தத்தெடுக்கிறார் சபாபதிப் பிள்ளை. போரில் இறந்த நண்பன் மைக்கேலின் மனைவியைத் தன் வாழ்வுடன் இணைத்துக்கொள்கிறார் சபாபதிப் பிள்ளை. அவர்களுடைய வாழ்வுக்குப் பொருள் சேர்க்க வருகிறான் ஹென்றி.
பப்பா தன் கதையை ஹென்றிக்குச் சொல்கிறார். தன் மனைவி ஓடிப்போன கதையைத் துயரத்துடன் சொல்கிறார். அவரால் அந்தத் துயரத்திலிருந்து மீளவே இயலவில்லை. ஆனால் அவர் முழுமையாக ஒரு வாழ்வு வாழ்ந்து முடித்தும்விடுகிறார். பழனி தற்கொலைசெய்துகொள்கிறான். ஆனால், சபாபதியின் மனைவியும் பழனியும் என்ன வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது தெரியவில்லை.
பெற்ற அம்மா அப்பாவை இழந்து, வளர்த்த பெற்றோரையும் பறிகொடுத்துவிட்டு, ஆதரவற்ற மனிதனாக கிருஷ்ணராஜ புரத்துக்கு வரும் ஹென்றிக்கு ஊரும் உறவும் சொந்தமும் பந்தமும் நட்பும் கிடைக்கின்றன. மனிதரிடையே வெறுப்பும், விரோதமும், குரோதமும் மண்டிக்கிடக்கும்போது, மனிதநேயத்தை வலியுறுத்துவதாக இந்த நாவல் தோற்றம்கொள்கிறது.
மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒருவருக்கொருவர் ஏன் பிரிந்துகிடக்கிறார்கள்? வெட்கம், அவமானம் என்பதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? மனிதர்கள் அனைவரும் எப்போதும் ஏன் அன்புடனேயே நடந்துகொள்ளக் கூடாது என்ற ஏக்கத்தை எல்லாம் நாவல் ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால், மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்… கோபமும் வன்மமும் வெறுப்பும் புரையோடிப்போன வாழ்க்கையைத் தானே வாழ்ந்து தீர்க்கிறார்கள்… இந்த வாழ்க்கையை என்ன செய்துவிட முடிகிறது என்ற நினைப்பு ஒரு கசந்த குறுஞ்சிரிப்பாக முகத்தில் தவழ்ந்தது… நாவலை மூடிவைத்துவிட்டு சன்னலுக்கு வெளியே தென்படும் உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டான் அவன்.

(2024 பிப்ரவரி 24 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு)

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

வியாழன், டிசம்பர் 12, 2019

CIFF 2019: சப் டைட்டில் ஒழுங்கா போடுங்கண்ணே!

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2019


ஆண்டுக்கொரு முறை டிசம்பரில் நடத்தப்படும் சர்வதேசத் திரைப்பட விழா இன்று (டிசம்பர் 12) தொடங்கியது. காலையில் உற்சாகமாக கிளம்பிவிட்டேன். கேசினோவில் 9:45 மணிக்கு Thou Shalt Not Kill  படம் பார்க்கலாம் என்று சென்றால் தொடக்கமே தகராறுதான். சப் டைட்டில் ஓடவில்லை. கேசினோ சீரமைக்கப்பட்ட பிறகு இன்றுதான் செல்கிறேன். அந்த மினுமினுப்பு பத்திருபது நிமிடம்தானே தாங்கும். அதற்குப் பின்னர் சப் டைட்டில் இல்லாமல் படம் பார்க்க மனமில்லை. சரி இந்தப் படம் அவ்வளவு தான் என்று முடிவுசெய்துவிட்டேன். 

அடுத்ததாக, தேவி திரையரங்கில் 11:00 மணிக்கு Oh Mercy படத்துக்குச் சென்றால் அங்கேயும் அதே சிக்கல். முதல் இருபது நிமிடங்கள் சப் டைட்டில் இல்லாமல் படம் ஓடியது. அரங்கில் ஏற்பட்ட கத்தல் காரணமாகப் படம் நிறுத்தப்பட்டது. அடுத்த இருபது நிமிடங்கள் வெண் திரையை மட்டுமே பார்க்க முடிந்தது. படம் ஓடுவதாகத் தெரியவில்லை. வெளியேறிவிட்டேன். 

மீண்டும் 12:15 மணிக்கு கேசினோவில் Curiosa படத்துக்குச் சென்றேன். கேசினோவில் பால்கனியில் அமர்ந்தால் சப் டைட்டிலைப் பார்ப்பதற்கு பகீரத பிரயத்தனம் தேவைப்படுகிறது. முன்னால் இருப்பவரின் தலையைத் தவிர்த்துவிட்டு சப் டைட்டிலைப் படிப்பதற்குள் கழுத்துவலியே வந்துவிடுகிறது. படம் காதல், காமம் என்று பழகிய பாதையில் நடைபோட்டது. நாயகன் கேமராக் கலைஞன். அவனுடைய நண்பனின் மனைவிக்கும் அவனுக்கும் காதல். அவளுக்கோ கணவனைவிடக் கலைஞன் மீதுதான் காதல். சகட்டுமேனிக்குக் கட்டிப் புரள்கிறார்கள். இறுதியில் இந்த ஜோடியின் குழந்தைக்கு கணவன் தகப்பன் ஆகிறான். 1800களில் நடைபெறும் கதை. 

கேமராக் கலைஞன் பெண்கள் பலரை நிர்வாணப் புகைப் படமெடுத்து அதை ஆல்பமாக்கி வைத்திருக்கிறான். இறுதியில் நாயகி எழுத்தாளராகிவிடுகிறாள். கலாரசனையுடன் பார்க்க வேண்டிய படம். கலாரசனைக்குப் பதில் காம ரசனை என்றுகூடப் போட்டுக்கொள்ளலாம். 


அடுத்ததாக கேசினோவில் 2:45க்கு Hier என்ற படம் பார்த்தேன். இது பொறுமையைக் கோரிய படம். நாயகன் பல நாடுகளில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்துகிறான். வட ஆப்பிரிக்கா நாட்டுக்குப் பணி நிமித்தமாகச் செல்லும்போது அங்கே அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள்தான் திரைக்கதையாக விரிகின்றன.  அங்கே ஒரு பாரில் அவன் பார்க்கும் பெண்ணைத் துரத்திச் செல்கிறான். அதைத் தொடர்ந்து அவன் எதிர்கொள்ளும் விநோதச் சம்பவங்கள் கற்பனைக்கு அடங்காதவை. எங்கெங்கோ செல்கிறான். என்னென்னவோ நடைபெறுகின்றன. அந்தப் பெண் அவனை ஏமாற்றிச் சென்றவள் என்பதால் அவளைக் கண்டுபிடிக்கப் படாதபாடு படுகிறான். ஆனால், அது நடைபெறவே இல்லை. எல்லாமே ஒருவித மாயத் தோற்றமாகவே உள்ளது. உளவியல்ரீதியான சித்தரிப்புகளைக் கொண்ட படம். 

செவ்வாய், டிசம்பர் 10, 2019

காமம் வரும் முன்னே காதல் வரும் பின்னே


எந்தக் காரியத்தையும் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே முடிவுசெய்கிறார் தனுசு ராசிக்காரரான அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்). அவருக்குக் கன்னி ராசிப் பெண்ணுடன் திருமணம் நடைபெறுவது நல்லது என ஜோதிடர் கூறியதால் அந்தப் பெண்ணைத் தேடுகிறார் அவர். காதலியின் திருமணத்தன்று அவர் சந்திக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் (டிகங்கனா சூரியவன்ஷி) அவருக்கும் முதல்நாளன்றே உறவு ஏற்பட்டுவிடுகிறது. செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விஜயாவுக்கும் அர்ஜுனுக்கும் காதல் மலர்ந்ததா கல்யாணம் நடந்ததா இல்லையா என்பதே திரைக்கதை.

பரிகாரம் செய்யாமல் தந்தை மணமுடித்துக்கொண்டதால் தன் தாய் பாண்டியம்மாள் (ரேணுகா) இளம்வயதிலேயே கைம்பெண்ணாகிவிடுகிறார் என்பதை அறிந்ததிலிருந்து ஹரிஷுக்கு ஜோதிடத்தில் திடமான நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கும் எல்லாப் பெண்களையும் ராசி கேட்டே பழகுகிறான். இதனாலேயே எந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடிக்காமல் போய்விடுகிறது. அனிதாவுடனான (ரெபா மோனிக்கா ஜான்) காதலும் முறிந்துபோய்விடுகிறது. பார்த்த மாத்திரத்தில் காதல் வருவதற்குப் பதில் பார்த்த மாத்திரத்தில் காமம் வந்துவிடுகிறது. அதன் பின்னரே காதலிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்கள் இருவரும். இது கொஞ்சம் திரைக்கதையில் புதிதாக இருக்கிறது. உறவு கொண்டுவிட்டோமே எனப் பெரிதாக இருவரும் கவலைகொள்ளவில்லை. மூடநம்பிக்கைக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது திரைக்கதை.


ஹரிஷ் கல்யாணுக்கு வழக்கம்போல் துறுதுறுப்பான இளைஞன் வேடம். காதல் காட்சிகளில் கவர்கிறார். சோகக் காட்சிகளில் பெரியாத ஈர்க்கவில்லை. காதலியைக் கடலுக்குள் அழைத்துச் சென்று வெகுளிக் காதலனாக வெளிப்படுத்தும் அன்பு அழகு.

தன் பிரியத்துக்குரிய காதலனுடன் சேர்ந்துவாழும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தாலும் தன் லட்சியத்திலேயே உறுதியாக இருந்து செவ்வாய்க் கிரகத்துக்குப் போக முடிவெடுத்துவிட்ட பெண் வேடம் தமிழுக்குப் புதிது. இந்த வேடத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ள டிகங்கனா சூரியவன்ஷி வசீகரிக்கிறார். ரெபா மோனிக்கா ஜானுக்குப் பெரிய வேலை இல்லை. ஒரு பாடலிலும் சில காட்சிகளில் தலைகாட்டிப் போகிறார்.   

பிரியாணிப் பிரியரான, முற்போக்குச் சிந்தனைகொண்டவராக அர்ஜுனின் தாய்மாமா   வேடத்தில்  முனீஸ்காந்த் உற்சாகப்படுத்துகிறார். எங்கெங்கே என்ன பிரியாணி கிடைக்கும் என்பதைப் பட்டியில் போட்டு உண்ணும் பழக்கம் கொண்ட வேடம் கலகலப்பு. இறுதியாக, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார்.


பாண்டியம்மாளாக நடிகை ரேணுகா பாந்தமான அம்மா வேடத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். செக்யூரிட்டியாக வரும் நடிகர் சார்லி கனமான கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பைத் தந்திருக்கிறார். பரிகாரம் எல்லாம் செய்து, மணமுடித்துக் கொடுத்த  மகளை இழந்து வருந்தும் காட்சியில் உருகவைக்கிறார்.  

கட்டியக்காரன் போல் படத்தின் போக்கைக்  கதையாகச் சொன்னபடி வரும் யோகிபாபுவின் கதாபாத்திரம் படத்தில் தேவையற்ற ஒன்று. ஷெல்வி முதலான பிரபல சோதிடர்கள் வந்துபோகும் படத்தில் சோதிடராக  நடித்திருக்கிறார் பாண்டிய ராஜன்.  பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை சுமார் ரகம். ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது.  


காதல் என்பதற்காகவே உருகிய காலம் போய் லட்சியத்துக்குக் குறுக்கே காதல் வந்தால் விலகத் தெரிய வேண்டும் என்பதை உணர்த்திய வகையில் கவனிக்கவைக்கிறார் சஞ்சய் பாரதி. தன்னை நம்பாமல் ஜோதிடம் முதலான விஷயங்களை  நம்பித் திரிவதன் அபத்தத்தை எளிதாக எடுத்துவைத்திருக்கும் இந்த தனுசு ராசிக்காரனைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம்.

திங்கள், மே 06, 2019

நட்சத்திர நிழல்கள் 4: ஆனந்தியின் வாழ்வு ஒரு செய்தி

விடுகதை


சமூகத்துடன் இணைந்து வாழ்பவர்களுக்குப் பெரிய சிக்கல்கள் எழுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் கருத்துகளுடன் ஒத்துப்போய்விடுகி்றார்கள். அவர்களுக்கு அவ்வப்போது எழும் சின்னச் சின்ன சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சமூகம் தானாகவே முன்வந்து கைகொடுக்கும். ஆகவே, பெரும்பாலானோர் சமூகம் முன்வைக்கும் மரபுகளைப் பின்பற்றியே வாழ்ந்து மடிந்துவிடுகிறார்கள். அதற்கு மாறாகச் சிந்திக்க அவர்களது மனம் துணிவதில்லை. ஆனால், சிலரது மனமோ மரபு வலியுறுத்தும் விதிமுறைகளை மீறுவதற்கு எத்தனிக்கும். அத்தகைய மனம் வாய்க்கப் பெற்றோர் சமூகம் அதிகம் விரும்பாத வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் விருப்பம் கொண்டுவிடுகிறார்கள். அந்தச் சிலர் மீது சமூகத்தின் பார்வை பட்டபடியே இருக்கும். அப்படிச் சமூகத்தின் பார்வைக்குத் தப்பாத இளம்பெண் ஆனந்தி.

1997-ல் வெளியான ’விடுகதை’ திரைப்படத்துக்காக ஆனந்தியை உருவாக்கியவர் இயக்குநர் அகத்தியன். ஆனந்தியாக உலவியவர் நடிகை நீனா. ஆனந்தியின் வாழ்க்கை அவள் வயதையொத்த இளம்பெண்களின் வாழ்விலிருந்து பேரளவு வேறுபட்டது. ஆனந்தி சரியான அப்பா பொண்ணு. அவரிடம்தான் அவள் எல்லாக் கதைகளையும் பேசுவாள். அவர்கள் உலகத்தில் அவரும் அவளும்தான். தந்தையின் நண்பர்கள் அவளுக்கும் நண்பர்கள். அவர்களுடன் வாயாடுவதிலும் அவளுக்குப் பிரியம் உண்டு. ஆக, ஆனந்திக்கு வாய்த்ததெல்லாம் வயதைத் தாண்டிய சிநேகம்தான்.

அவளுடைய தந்தையான ராமநாதன் ஒரு மனோதத்துவ நிபுணர். வாழ்வை மிகவும் அதன் போக்கில் வாழும் மனிதர். அவரது கவனிப்பிலும் அக்கறையிலும் ஆனந்தி துணிச்சலுடனும் வெட்கப்படவே தெரியாமலும் வளர்ந்திருந்தாள். கல்லூரியில் அவளுடன் படிக்கும் மாணவர்கள் ஓரிருவர் அவள்மீது மையல் கொண்டு மயக்கத்துடன் அவளை அணுகியபோது, அதைச் சரியாக எதிர்கொண்டு அது காதல் அல்ல என்பதை அவர்களிடம் விளக்கி அவர்களிடமிருந்து விலகியவள். அந்த அளவுக்கு வாழ்க்கை பற்றிய, ஆண் பெண் உறவு பற்றிய புரிதலைப் பருவ வயதிலேயே பெற்றுக்கொண்ட பெண் ஆனந்தி. 

இரண்டு முறை மாரடைப்பை எதிர்கொண்ட ராமநாதன் எப்போது வேண்டுமானாலும் வரவிருந்த மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த மனிதர். மரணம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டும் என்பதால் அவர் உறங்கும்போதுகூடக் கதவைப் பூட்டாமல் வெறுமனே சாத்திவைத்து உறங்கும் பழக்கம் கொண்டவர். அப்பாவைப் பிரியப்போவது குறித்து ஆனந்திக்கு வருத்தமோ பயமோ எழும்போதெல்லாம் அவர் ஆனந்தியை உற்சாகப்படுத்துவார். மரணம் இயல்பானது என்பதையும் அது நிம்மதியானது என்பதையும் உணர்த்துவார். ஆனந்தியும் அதைப் புரிந்துகொண்டு அத்தகைய சம்பவங்களை மிகவும் இயல்பாக எதிர்கொள்ளத் தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.


ஆனந்தி பயந்த நாளும் ராமநாதன் எதிர்நோக்கிய நாளும் எதிர்பட்டபோதுகூட அவள் அதைச் சாதாரணமாக எதிர்கொண்டாள். தந்தை மரணமடைந்த அன்று அவர் கையெழுத்திட்டுத் தந்திருந்த வங்கிக் காசோலையைப் பணமாக மாற்ற வங்கிக்குச் சென்றுவந்தாள். தந்தையின் மரணத்துக்காக அவள் பெரிய கும்பலைக் கூட்டவில்லை; பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சொல்லப்போனால் அவள் அழக்கூடவில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துகொண்டாள். மறுநாளே கல்லூரிக்கு வந்துவிட்ட அவளை எல்லோரும் வியப்புடன் பார்க்கிறார்கள். அவள் இயல்பாக இருந்தபோதும் அவளைச் சுற்றியிருந்த மனிதர்கள் அவளை இயல்புக்கு மாறான நடத்தை கொண்ட பெண்ணாகவே பார்க்கிறார்கள். அது அவளைச் சற்றுப் பாதித்தது. ஆனாலும், அவள் அதை சட்டை செய்யவில்லை.

அப்படியான சூழலில் 18 வயதான ஆனந்தியின் வாழ்க்கைக்குள் வருகிறார் நீலகண்டன். அவருக்கு வயது 41. ராணுவத்தில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் வந்திருக்கும் மனிதர் அவர். ஆனந்தியின் வீட்டுக்கு வாடகைதாரராக வருகிறார் அவர். கிட்டத்தட்ட தன் தந்தை வயது கொண்ட நீலகண்டனை ஆனந்திக்குப் பிடித்துப்போய்விட்டது. தனிமையில் இருக்கும் நீலகண்டனுக்கும் ஆனந்தி ஒரு சாய்வாக இருந்தாள். ராணுவத்திலிருந்தே அவருடன் ஒட்டிக்கொண்ட உணவுக்கு முன்னான குடிப்பழக்கத்தைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை. அவர் மது அருந்தும்பொழுதில் அவரருகிலேயே இருந்து உரையாடுவாள். தன்னை மறந்து நீலகண்டன் தன் வாழ்வு குறித்து புலம்புவதற்குக் காது கொடுப்பாள்.

தனக்கான துணையாக நீலகண்டனே இருப்பார் என ஆனந்தி முடிவெடுத்தபோது, நீலகண்டன் முதலில் அதை மறுக்கிறார். வயது காரணமாக அவர் தயங்குவதைப் புரிந்த ஆனந்தி தன் மனத்தை அவருக்கு உணர்த்தி, சம்மதம் பெறுகிறாள். அவளுடைய தந்தையின் நண்பர்களுக்கே அந்த முடிவு சிறிது அதிர்ச்சியைத் தரத்தான் செய்தது. ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ஆனந்தியின் மனத்தை மாற்ற அவர்களாலும் முடியவில்லை.

திருமணத்துக்காகப் பதிவு அலுவலகம் சென்றபோது, அவளுக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் நான்கு மாதம் இருந்ததால் உடனடியாகப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதை விளக்குகிறார் பதிவுத் துறை அதிகாரி. ஆனால், ஆனந்திக்குத் திருமணம் என்ற சடங்கில் பெரிய நம்பிக்கை இல்லை. மனம் ஒத்துப்போனபின் இத்தகைய சடங்குகளுக்காகக் காத்திருக்க வேண்டுமா எனக் கேட்டபடி நீலகண்டனுடன் வாழ்வைத் தொடங்க முடிவுசெய்துவிட்டாள். சட்டம், திருமணம் போன்ற மரபுவழிவந்த சடங்குகளுக்காகத் தன் வாழ்வின் இன்ப துன்பங்களைப் பலிபீடத்திலேற்ற அவள் விரும்பவில்லை. சட்டரீதியான பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என நம்புமளவுக்கு அவளுக்கு நீலகண்டன்மீதும் வாழ்க்கை பற்றிய தனது புரிதல் மீதும் நம்பிக்கை இருந்தது. ஆகவே, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிவிட்டார்கள்.  

அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தபோதும் நான்கு பேர் நான்குவிதமாகத் தான் பேசினார்கள். கல்லூரிப் பேராசிரியர் அவள் தவறான முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார். ஆனந்தி நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாளா என்ற சந்தேகம் அவளுடைய கல்லூரி நண்பர்களுக்கு எழுந்தது. அந்தச் சந்தேகம் நீலகண்டனுக்கே வந்தபோது, ஆனந்தி அதிர்ந்துபோனாள்; ஆனாலும் சுதாரித்துக்கொண்டாள். வெளியில் தங்களை ஜோடியாகப் பார்ப்பவர்களுக்குத் தாங்கள் அப்பாவும் பொண்ணுமாகவே தோன்றுகிறோமோ எனும் சந்தேகம் தரும்படியான ஓரிரு நிகழ்வுகள் நீலகண்டனைப் பாதித்தன. அவருக்குத் தான் தவறு செய்துவிட்டோமோ எனும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனந்தியைத் தன்னால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமா என்ற ஐயம் அதிகரிக்கிறது. அவளிடமிருந்து விலகிட முடிவுசெய்துவிட்டார். அவளுக்கு ஏற்ற ஒருவனை அவள் திருமணம் செய்துகொண்டால் அவளுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆனந்தி ஒத்துழைக்கவில்லை.

திருமணம் என்பதை உடம்புக்கானது என்று மட்டும் ஆனந்தி நினைக்கவில்லை. அதை அவள் நீலகண்டனுக்கு உணர்த்தி அவரைத் தன்னுடனேயே தங்கவைக்கிறாள். வாழ்க்கையெனும் விடுகதைக்கு விடை தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மத்தியில் ஆனந்தி அந்த விடுகதையின் விடையை அறிந்தவளாக இருக்கிறாள். நான்கு பேர் சொல்வதற்காகவெல்லாம் நமது வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது நம் மனதுக்குச் சரியென்றுபடுவதன்படி செயல்படுவது நல்லது எனும் தெளிவு ஆனந்தியிடம் இருந்தது. அந்தத் தெளிவுதான் ஆனந்தி அவளைப் போன்ற பெண்களுக்குத் தரும் செய்தி.

திங்கள், அக்டோபர் 08, 2018

’தொண்ணூற்றாறு

ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கிறார்கள். இதில் முறிந்த காதல் ஜோடி ஒன்றும் சந்திக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்தக் காதலர்கள் எப்படி அந்தத் தருணத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை அதீத உணர்வுடன் நாஸ்டாலஜியா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்



தனி ஒருவனாகப் பயணங்களில் ஈடுபடும் புகைப்படக் காரரான கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) திடீரெனத் தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். பழைய நண்பர்களைப் பார்க்கத் தோன்றுகிறது. எல்லோரையும் வாட்ஸ் அப் வழியே பிடிக்கிறார். நண்பர்கள் ஒரு ரீயூனியனுக்குத் திட்டமிட்டு அதை நடத்துகிறார்கள். இதன்  வழியே பள்ளிப் பருவத்து நாட்களை அசைபோடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பிரிந்த ராமச்சந்திரனும் ஜானகிதேவியும் (திரிஷா) மீண்டும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். ஓர் இரவு முழுவதும் ஒன்றாக நாளைச் செலவிடுகிறார்கள்.  இந்தத் தருணத்தை ஒரு சிறுகதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மிகவும் சாதாரணக் கதை தான். ஆனால் திரைக்கதையில் சில தருணங்களைச் சுவாரசியமான தன்மையில் தந்திருப்பதால் படம் தப்பித்துவிடுகிறது. ரீ யூனியனில் நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ராமும் ஜானுவும் ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவுதான் படத்தின் பலம். அதுவும் ராமின் மாணவிகள் சூழ்ந்திருக்கும் காட்சியில் தன்னை ராமின் மனைவியாகவே காட்டிக்கொண்டு திரிஷா பேசும் காட்சி ருசிகரம். 


பள்ளிப் பருவத்தில் ராமச்சந்திரனாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், ஜானகியாக நடித்திருக்கும் கௌரி உள்ளிட்ட அனைவரும் பலருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறார்கள்.

பள்ளியில் பலமுறை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டும் ஒரு முறைகூடப் பாடாத யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடலை அந்த இரவில் ஜானு பாடும் தருணமும் ராமின்பரவசமும் ரசனையானவை. காதலித்தவனைத் தனக்குத் திருமணமான பிறகு சந்திக்கும் வேளையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறார் திரிஷா. நிறைவேறாத காதலை நினைத்தபடியே வாழ்வைக் கடக்கும் ராமச்சந்திரனாக விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம். அதை முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியும் திரிஷாவும் படத்தை முழுமையாகத் தோளில் தாங்கி நகர்த்தியிருக்கிறார்கள்.  


இரவில் ராம், ஜானு இரவும் வரும் நகர்வலக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கின்றன.கல்லூரியில் ஜானுவை ராம் சந்திக்க முயலும் ஒரே சம்பவத்தை மூன்று கோணங்களில் காட்டும்  அம்சம் திரைக்கதையில் மெருகு. தொண்ணூறுகளில் தேவாவும் ஏ. ஆர். ரஹ்மானும் வந்துவிட்டார்கள் என்றபோதும் இளையராஜா பாடல்களையே வைத்து அந்தக் காலக் கட்டத்தைக் காட்டியிருப்பது நெருடல்.

காதலை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்தியிருப்பதும்,  மெலோ டிராமாவைத் திகட்டத் திகட்டத் தந்திருப்பதும் அலுப்பு. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆட்டோகிராப் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து,  காதலுக்கு முன்னர் காலம் எம்மாத்திரம் என்ற பம்மாத்தைப் பரவசமான அனுபவமாகத் தந்திருக்கும் படம் 96.

திங்கள், அக்டோபர் 01, 2012

சின்ன விஷயங்களின் கடவுள்: காமத்திப்பூவும் கடவுளும்

தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில் பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல் என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்களின் மற்றொரு பக்கத்தைத் தோலுரித்த கடவுள் வெளியாக மேடை அமைத்துத் தந்தவர்கள் கிறிஸ்தவ அமைப்பினர் என்பது பகைவனையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள் வெறும் போதனைகளாகச் சுருங்கிவிடவில்லை என்பதை உணர்த்தியது. அதை உறுதிசெய்வது போல் அருந்ததி ராயைச் சமூக நீதிக்கான குரலை வலுவாக வெளிப்படுத்துபவர் என ஜான் அலெக்ஸாண்டர் புகழ்ந்துரைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியின் ஒலிக்காட்சி அரங்கில் அந்தச் சனிக்கிழமை மாலையில் முதலில் மலர்ந்தது காமத்திப்பூ. இதிலிருந்து சில கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு ரசித்துதான் வாசித்தார் சுகிர்தராணி. அந்த அரங்கில் காமம் குறித்த தன் அவதானிப்பை, காதலுக்கும் காமத்திற்குமான விலக்க முடியாத நெருக்கத்தை, மனம் சார்ந்த புனிதமும் உடம்பு சார்ந்த இழிவும் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைச் சொற்களால் அடுக்கிக்கொண்டே போனார் அருந்ததி ராய் வெளியிட்ட காமத்திப்பூவைப் பெற்றுக் கொண்ட பிரபஞ்சன். ஆண்குறியினரின் அபத்தங்களையும் யோனி கொண்டோரின் சிறப்புகளையும் அரங்கைச் சற்றே சலன மடையச் செய்யும் விதத்தில் அவர் வெளிப்படுத்தினார். இறுதியாக யோனியை ஆயுதமாகக் கொண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியதன் மூலம் ஔவையார், ஆண்டாள் வரிசையில் அடுத்த கவிஞர் சுகிர்தராணிதான் என மொழிந்து தன் உரையைப் பிரபஞ்சன் நிறைவுசெய்தார். யோனியை ஆயுதமாக்கிய கவிஞர் எனப் பிரபஞ்சனால் புகழப்பட்ட சுகிர்தராணி பிரியம் வழிந்த அணைப்பை அவருக்குக் காணிக்கையாக்கினார். அரங்கில் நெகிழ்ச்சி அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன.

அடுத்ததாகக் காலச்சுவடு நவயானா இணைந்து வெளியிட்டிருக்கும் பீமாயணம் என்னும் மொழிபெயர்ப்பு நூல் அரங்கின் மேடைக்கு வந்தது. சமூக விடுதலைக்கும் தீண்டாமைக்கும் குரல் கொடுத்த அம்பேத்கரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரங்கள் மூலமாக உணர்த்தும் புத்தகம் அது. வண்ணச் சித்திரங்களுக்கும் குழந்தைகளுக்குமான தீராப் பிணைப்பை உணர்த்தும் விதத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சோனியா, திருமூர்த்தி என்னும் குழந்தைகள். நூலை அருந்ததி ராய் வெளியிட்டார். நவயானா ஆனந்த் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சித்திரங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். அடுத்ததாக வெளியான ராஜா சாண்டோ ஒரு பதிப்பு நூல். பேசும் படம் என்னும் இதழை நடத்திய டிவி ராமநாத் எழுதிய இந்த நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து கலை வளர்த்த ராஜா சாண்டோவின் நூலைச் சென்னை முழுவதும் மிதிவண்டியில் - மிகச் சமீபத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் - சுற்றித் திரிந்து புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர் பரிசல் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டதும் பொருத்தமானதே. இந்நூல் குறித்து உரையாற்றிய தியடோர் பாஸ்கரன் மௌனப்படக் காலத்தின் சிறப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் மொழிந்தார். டிராட்ஸ்கி மருது உரை நிகழ்த்தியபோது, ஆளுமைகளின் பதிவு குறித்த அவசியத்தைச் சுட்டினார். பதின் பருவத்தில்தான் பார்த்து ரசித்த ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் போன்ற ஆளுமைகள் குறித்தும் ஓரிரு சம்பவங்கள் குறித்துமான சில ஞாபக துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டார். 

இறுதியாக வெளியிடப்பட்டது சின்ன விஷயங்களின் கடவுள். வெளியிட்டவர் சுகுமாரன், பெற்றுக்கொண்டவர் கலீஸியன் எழுத்தாளர் மரியா ரெமோண்ட். தமிழறியாத இவர் வாசித்த கொஞ்சு தமிழ் உரையை அரங்கினர் ரசித்தனர் என்பதன் வெளிப்பாடுதான் சுகுமாரன் அவருக்குத் தெரிவித்த கைகுலுக்கலுடன் கூடிய பாராட்டு. இந்நூல் வெளியீடு குறித்த பல விவரங்கள் விரிவாக இதே இதழில் தொடர்ந்த பக்கங்களில் வெளியாகியுள்ளன. இறுதியாக மைக்கேல் அமலதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். அரங்கை வடிவமைத்திருந்த ரோஹிணி மணி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்வில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சிக்குப் பின்னணிக் குரல் கொடுத்த சிந்து, விட்டு விடுதலையாகி என்னும் பாரதியின் பாடலைப் பாடிய ரவி சுப்பிரமணியன் போன்ற பலரது துணையுடனும் பார்வையாளர்களின் ஒத்துழைப்புடனும் எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவேறியது காலச்சுவடு பதிப்பகத்தின் இவ்வெளியீட்டு நிகழ்வு. இந்த மாலையின் நினைவைப்போல், பள்ளிக் குழந்தைகள் உருவாக்கிய, ஆசிரியர் எஸ். டி. ராஜ் அணிவித்த ஏலக்காய் மாலையின் மணமும் சில நாட்களுக்கு அருந்ததிக்குள் கமழ்ந்துகொண்டிருக்கக் கூடும்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்