இன்று (டிசம்பர் 14) காலை தேவியில் 11:00 Sibyl படம் பார்த்தேன். உளவியல் மருத்துவர் ஒருவர் அவரிடம் ஆலோசனைக்காக வரும் நடிகை, அவரது காதல், காதலன், மருத்துவரின் காதல், குடும்பம் எனச் செல்லும் படம் வாழ்க்கை குறித்துப் பேசியது. நடிகர் ஒருவரால் கர்ப்பமான நடிகை கர்ப்பத்தைக் கலைக்கவா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அது குறித்த ஆலோசனைக்காகத் தான் மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் ஓர் எழுத்தாளரும்கூட. தன்னிடம் ஆலோசனைக்காக வருபவர்களிடம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் நாவலொன்றை எழுதுகிறார். நடிகைக்கு ஆலோசனை தரத் தொடங்குபவர் ஒரு கட்டத்தில் முழுவதும் நடிகை போலவே மாறிவிடுகிறார்.
நடிகை முழுவதுமாக மருத்துவரின் ஆலோசனையை நாடியே இருக்கிறார். தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குக்கூட மருத்துவரை வரவழைத்துக்கொள்கிறார். இயக்குநருக்குப் பதில் மருத்துவரே காட்சிகளை விளக்குகிறார். படமும் எடுத்து முடித்துவிடுகிறார்கள். நடிகையின் காதலனுடன் மருத்துவருக்கு உறவு ஏற்படுகிறது. இப்படி என்னென்னவோ நடைபெறுகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனிதர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பேசுகிறது படம்.
அடுத்ததாக அண்ணா தியேட்டரில் The Silence of Om என்னும் படம் பார்த்தேன். ஒரு கேங்ஸ்டரின் மகன் ஒரு குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறான். சிறையில் அவனுடன் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் தகப்பனைக் கொன்று விட்டு மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான். தந்தையைக் கொன்றுவிட்டாலும் சிறையில் தான் இறந்தபின்னர் தந்தையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறான். கேங்க்ஸ்டரின் மகனுக்கும் தந்தைமீதான பிரியம் புரிகிறது. சிறுவயதிலிருந்தே அவனை அடித்துக்கொண்டே இருப்பவர் அவர். அவன் உடம்பில் டாட்டூ குத்திக்கொள்வது அவருக்குப் பிடிக்காது. அவன் வெளியில் வந்த பின்னர் அவனுடைய காதலி அந்த டாட்டூவைப் பார்க்க பிரியப்படும் கணத்தில் விழுந்து உயிரை விட்டுவிடுகிறாள். ஆசையை விட்டுவிடுவதே நல்லது என்னும் பௌத்தக் கருத்தை உணர்த்துகிறது படம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக