![]() |
பொதுச்செயலாளர் வ.மணிமாறன் உரையாற்றுகிறார் |
![]() |
பொதுக்குழுவில் உறுப்பினர்கள் |
அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்டு 12 அன்று மாலை 6.00 மணிக்கு வழக்கறிஞர் கார்க்கி வேலன் தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பின்னர் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
![]() |
தேர்தல் அலுவலராக கார்க்கிவேலன் பொறுப்பேற்கிறார் |
சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் 2025 (செப்டம்பர்) -2027 (செப்டம்பர்) ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையும் அதில் இடம்பெற்றிருந்தது. தலைவர் ஒருவர், துணைத்தலைவர் இருவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஐவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தது.
வேட்புமனு தாக்கல் ஆகஸ்டு 20 (20.08.2025) அன்று தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல்செய்வதற்கான இறுதி நாள் ஆகஸ்டு 27 (27.08.2025) என்றும், அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்டு 28 (28.08.2025) அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மனுக்களை ஆகஸ்டு 31 (31.08.2025) அன்று திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்குப்பதிவு செப்டம்பர் 14 (14.09.2025) அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாள்தோறும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை, ரிச்சி தெருவில் உள்ள எம்.யூ.ஜே. அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவைப் பெறலாம்; பூர்த்திசெய்த வேட்பு மனுவை அளிக்கலாம் எனவும் அந்த அறிவிக்கை தெரிவித்தது. தேவைப்படின் வாக்காளர் பட்டியலையும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 19 (19.08.2025) அன்று மாலை 5 மணிக்குச் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வோர், வேட்புமனுவை முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அந்த அறிவிக்கையானது, செப்டம்பர் 14 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
வேட்புமனு படிவத்தைத் தேர்தல் அலுவலரிடம் கொடுக்கும்போது,
1, வேட்புமனு படிவத்தில் அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது.
2, வேட்புமனு படிவத்துடன் வேட்பாளர், அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோரின் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் (ஜெராக்ஸ்) இணைக்கப்பட வேண்டும்.
3, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் போது, வேட்பாளருடன் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் உடனிருக்க வேண்டும்.
4, போட்டியிடும் பதவியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
5, சங்க உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் நடப்பு ஆண்டு சந்தா செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும்
ஆகிய விதிமுறைகளைத் தேர்தல் அலுவலர் சங்கத்தின் அலுவலரீதியான வாட்ஸ் அப் குழு வழியே தெரிவித்திருந்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பின்னர் ஆகஸ்டு 28 அன்று, தலைவர் பொறுப்புக்கு இருவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு ஐவர், பொதுச்செயலாளராக இருவர், இணைச் செயலாளராக இருவர், பொருளாளர் பொறுப்புக்கு இருவர் என மொத்தம் 13 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக பதினோரு பேரும் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ததாகவும் அதில் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று வெளியிடப்படும் என தேர்தல் அலுவலர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தது போல் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று மாலையில் வெளியிடப்பட்டது. எம்.யூ.ஜே. நிர்வாகிகள் தேர்தல் - 2025இல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், துணைத் தலைவர் பொறுப்புக்கு மனுதாக்கல் செய்திருந்த ஒருவரும், செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்குப் மனுத்தாக்கல் செய்திருந்த ஒருவரும் திரும்பப்பெற்றுவிட்டதாகவும் இறுதியாக 21 பேர் போட்டியிட உள்ளதாகவும் இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைவர் பொறுப்புக்கு 1. வி.செல்வின் வினோத்குமார் (தினகரன்), 2. எஸ்.ஆர்.சங்கர் (டைம்ஸ் ஆப் இந்தியா) ஆகிய இருவரும்; துணைத்தலைவர் பொறுப்புக்கு 1.எம்.முத்தையா (முரசொலி), 2.கே.நாகப்பன் (ஜீ மீடியா), 3.ஏ.பிரதாப் (டைம்ஸ் ஆப் இந்தியா), 4. டி.சரவணன் (சுயாதீனப் பத்திரிகையாளர்) ஆகிய நால்வரும்; பொதுச்செயலாளர் பொறுப்புக்கு 1.பி.கோபி (சன் நியூஸ்), 2. வ.மணிமாறன் (ஜனசக்தி) ஆகிய இருவரும்; இணைச் செயலாளர் பொறுப்புக்கு 1. திருமேனி சரவணன் (சன் டிவி), 2. எம்.வினோத் ராஜா (தினமணி) ஆகிய இருவரும்; பொருளாளர் பொறுப்புக்கு 1. எம்.அய்யனார் ராஜன் (ஆனந்த விகடன்), 2. ஜோசப் ராஜ் (ஈ டிவி பாரத்) ஆகிய இருவரும்; செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 1.ஜெ.மகேஷ் (சன் டிவி), 2.கே.பிரியா (தினகரன்), 3. வி.ரவிச்சந்திரன் (முரசொலி), 4. ஜி.சசிரேகா (சிகரம் மீடியா), 5. எம்.செந்தில்நாதன் (குமுதம்), 6. எஸ்.சுந்தர்ராஜன் (சன் டிவி), 7. இரா.தமிழ்க்கனல் (அந்திமழை), 8. கே.வெங்கடேஷ் (சன் நியூஸ்), 9. ஏ.விஜயகுமார் (தீக்கதிர்) ஆகிய ஒன்பது பேரும் என மொத்தமாக 21 பேர் தேர்தல் களத்தை எதிர்கொள்ளவிருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்தது.
இவர்கள் உழைக்கும் பத்திரிகையாளர் அணி, ஜனநாயக அணி என இரு அணியாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.