இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜூலை 08, 2021

உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா?


உள்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று அரசுகள் மார்தட்டிக்கொண்டபோதும் இன்னும் நமது ஊரகப் பகுதிகளிலும் நகரப் பகுதிகளிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. சரியான சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, சுகாதார வசதி போதுமானதாக இல்லை, கழிவுநீர் செல்லும் வசதி இல்லை, குப்பை மேடுகள் முறையாக அகற்றப்படவில்லை எனப் பல இல்லைகளைத் தொடர்ந்து மக்கள் கவனப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட ஊராட்சி அமைப்புகளில் பொறுப்பிலிருக்கும்போதே இப்படியான நிலைமைதான் உள்ளது என்றால், மக்கள் பிரதிநிதிகளும் இல்லாதபோது, மக்கள் எதிர்கொள்ளும் அவதியைச் சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன பிரச்சினைக்கும் அரசு அலுவலகத்துக்கு ஏறி இறங்க முடியாது; அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட இயலாது.   

பாசன நீர் கடைமடைவரை பாய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அரசு நிர்வாகம் அடிப்படை அலகான ஊராட்சிகள்வரை வந்து சேர்வது. ஊராட்சிகள்வரை அதிகாரம் வந்துசேரும்போதே செழுமையான நிர்வாகம் சாத்தியப்படும். மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத நிலைமை மாறுவதற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுதல் அவசியம். மக்கள் பிரதிநிதிகள் அந்த அமைப்புகளில் இருக்கும்போதுதான் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை உடனுக்குடன் கவனப்படுத்த முடியும். வீட்டில், தெருவில், ஊரில் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனடியாக மன்ற உறுப்பினரை அணுகித் தம் குறையைக் கூற இயலும். அது தீர்க்கப்படுகிறதா, இல்லையா என்பது வேறு கதை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சட்டப்பேரவைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தச் சிக்கலுமின்றி ஒழுங்காக நடந்துவிடுகின்றன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மாத்திரம் ஒருவிதச் சுணக்கத்தைக் காணமுடிகிறது. பொதுவாக, மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் கட்சி வலுவான நிலையில் உள்ளபோது உள்ளாட்சித் தேர்தலைச் சூட்டோடு சூடாக நடத்தி உள்ளாட்சி அமைப்புகளையும் தம் ஆளுகைக்குக் கொண்டுவருவதில் முனைப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்காதோ எனும் ஐயம் எழுந்தால் அவ்வளவுதான் உள்ளாட்சித் தேர்தல் எண்ணத்தையே அது மூட்டை கட்டிவைத்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, அந்த உற்சாகத்தில் பத்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 1996 அக்டோபரில் நடத்தியது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, இப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக மக்களால் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிமுக அரசு தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலை 2016 அக்டோபரில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசியல் காரணங்களால் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. அந்த ஒன்பது மாவட்டங்களிலும் மறுசீரமைப்பு பணிகளின் பொருட்டு அப்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு காரணமாக 2019 டிசம்பரில் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.  தமிழகத்தின் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2019 டிசம்பர் 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பத்தூர், தென்காசி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறைப் பணிகளை நிறைவுசெய்து 2020 டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவகாசத்தை வழங்கியிருந்தது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.நரசிம்மா தனது வாதத்தில், ”இந்தியாவிலேயே கொரோனா பரவல் தமிழகத்தில்தான் அதிகம். இதனால் இந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்துக்குள் செய்ய முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற வேண்டியுள்ளது. இந்தக் காரணங்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே மீண்டும் அவகாசம் வழங்க வேண்டும்என்று கோரினார்.

அதையேற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகளை நிறைவுசெய்து 2021 செப்டம்பர் 15க்குள் அங்கே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு ஊரக அளவிலான தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டு, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்கள் ஆகியவை நடத்தப்படாததால், அங்கு அரசு தனி அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்துவருகிறார்கள். இதற்கான அரசாணை ஆறு மாதத்துக்கு ஒருமுறை நீட்டிக்கப்படுகிறது. உள்ளாட்சித் துறையில் செயல்படும் அத்தகைய தனி அதிகாரிகளின் பதவிக் காலம் 2021 ஜூன் 30 அன்றுடன் முடிவடைவதால், மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் சட்ட மசோதாக்களைப் பேரவையில் தாக்கல் செய்தனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையின்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் சூழலிலும், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும்படி அமைச்சர் கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தேங்கிக் கிடந்தால் அதை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்கிறது ஆளும் தரப்பு. முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் காரணமாக 2021  இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்று பேசப்படுகிறது.

கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டாலும், மூன்றாம் அலை செப்டம்பரில் வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை உருவானால் அந்தச் சூழலில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது எந்த அளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. அதே வேளையில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கடுங்கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்வு நடத்துவதே பாதுகாப்பற்றது என்ற எண்ணம் உள்ளபோது, தேர்தல் நடத்துவது எப்படிப் பாதுகாப்பானது என்ற கேள்வி எழுவது இயல்பு. தேர்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது, பரப்புரை உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் பொதுவிடங்களில் திரளக்கூடும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை காரணமாகத் தமிழ்நாட்டின் இரண்டாம் அலை அதிகமாகப் பரவியது என்னும் விமர்சனமும் எழுந்ததை மறந்துவிட முடியாது. அதேவேளையில் கொரோனாவைக் காரணங்காட்டி மீண்டும் தேர்தலை தள்ளிவைக்க செப்டம்பர் 15 எனக் கெடு விதித்துள்ள உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா? ஒருவேளை அப்படித் தள்ளிவைத்தாலும் ஆளும் அரசுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாலேயே உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கேட்டு இழுத்தடிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் வாய்ப்பும் உள்ளது. ஆக, தேர்தலை நடத்தினாலும் சிக்கல் நடத்தாவிட்டாலும் சிக்கல் என்பதே உண்மை நிலை.

ஆனால், திமுக தம் கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறது என்பதைக் கருத்தில்கொண்டால், அது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். ஆக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் கட்சிக்காரர்களின் திசையிலேயே ஆளும் தரப்பும் பயணப்படுகிறது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தலைக் கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு; மக்கள் எதிர்பார்க்கும் காரணம் வேறு. அதே நேரத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை என்னும் கத்தி தொங்கிக்கொண்டிருப்பதையும் பரிசீலித்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எடுக்கப்படுவதே அனைவருக்கும் நல்லது. இந்தச் சிக்கல்களைச் சமாளித்து உள்ளாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டிய பெரும் சவால் ஆளுங்கட்சி முன் உள்ளது. அதை எப்படி ஆளுங்கட்சி சமாளிக்கப்போகிறது?

நியூஸ் ஸ்ட்ரோக் இதழுக்காக எழுதியது. அந்த இதழில் ஜூனில் வெளியானது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக