இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், செப்டம்பர் 09, 2025
இரும்புக் காலத்தின் முன்னோடி தமிழ்நாடு
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025
பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.
வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்.
மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.
திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும்.
ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.
செவ்வாய், செப்டம்பர் 14, 2021
அரசியல் சதுரங்கம் ஆட வருகிறாரா ஆளுநர்?
தென்னாட்டுக் காந்தி என அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்னும் சொற்றொடர் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார் என்றபோதும், ஆளுநர் பதவி ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை ஒன்றிய அரசு கண்காணிக்கச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு என்பதான எண்ணம் சுயமரியாதையைப் போற்றும் எந்த மாநில அரசுக்கும் இருக்கவே செய்கிறது. ஏனெனில், எந்தக் கட்சி மத்தியில் ஆள்கிறதோ அந்தக் கட்சிக்குச் சார்பான ஒருவரே ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது நடைமுறை உண்மை. ஆகவே, ஒன்றிய அரசுடன் இணங்கிப் போகும் மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் பெரிதாகக் கருத்து வேற்றுமைகளோ மோதல்களோ ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் ஒன்றிய அரசுடன் அரசியல்ரீதியாக முரண்படும் மாநில அரசுகள் ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எப்போதும் மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருபவர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்பது இந்திய அரசியலை அறிந்த எவருக்கும் தெரிந்த செய்தியே.
மாநில
சுயாட்சியை வலியுறுத்தும் திமுக எப்போதுமே ஆளுநரை ஆறாம் விரலாகத்தான் பார்க்கிறது.
அரசியல் சாசனம் அனுமதித்தபோதும் அந்தப் பதவி அநாவசியம் என்றே அது நினைக்கிறது. அதனால்
தான் கடந்த முறை அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநர் இல்லாத சமயத்தில்
அப்படியோர் ஆளுநர் தேவை என்று திமுக கோரிக்கை வைத்தபோது தமிழிசை சௌந்தர்ராஜன் திமுகவைக்
கிண்டல் செய்தார். திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆளுநரான சுர்ஜித் சிங் பர்னாலா
மட்டும் விதிவிலக்கு. அதேபோல் 1991இல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டுக்கு
ஆளுநராக வந்த சென்னாரெட்டிக்கும் அப்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்குமான
மோதல் போக்கு அரசியல் களத்தில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது. ஆளுநர் தன்னிடம்
தவறாக நடந்துகொள்ள முயன்றார் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசும் அளவுக்கு அந்த
மோதல் தரந்தாழ்ந்தவகையில் வெளிப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டு ஆளுநர் முதலமைச்சர்
உறவு பெரிதாக மோதலோ சர்ச்சையோவின்றி மிகவும் அமைதியான முறையிலேயே இருந்தது.
இப்போது மாறுதலாகிச் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு என்னும் பெயரில் நடத்திய நிகழ்வுகள் தமிழக அரசியல் நோக்கர்களைக் கொந்தளிக்கவைத்தன என்றபோதும், ஆளும் தரப்பு எல்லாவற்றையும் அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தது. எந்த முணுமுணுப்பையும் வெளிப்படுத்தாமல் எல்லாம் அவன் செயல் என்று காலம் கடத்தியது. இப்படியான சூழலைக் கடந்து வந்துள்ள தமிழ்நாட்டுக்கு இப்போது புதிதாக ஓர் ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ரவீந்திர நாராயண ரவி. 1976இல் ஐபிஎஸ் அதிகாரியாக கேரளத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பிஹாரைச் சேர்ந்த அவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பரவலான முணுமுணுப்பு எழுந்தது. ஏனெனில், அவர் ஆளுநராக இருந்த நாகாலந்து மாநிலம் அந்த ஆளுநர் மாறிப்போவதைக் கொண்டாடுகிறது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் உளவுத் துறையின் அதிகாரியுமான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு அரசியலில் சிக்கலை உருவாக்குவதற்காகவே நியமிக்கப்படுகிறாரோ என்னும் அய்யத்தை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார். அதில், முழுக்க,
முழுக்கக் காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில்
உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்
இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது
என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு
செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ என்று சந்தேகப்படுகிறேன்
என்றும் கூறியிருந்தார். இவை மட்டுமல்ல; புதிதாக
நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு
ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட
வேண்டிய சூழல் உருவாகும் என்றும் எச்சரித்திருந்தார்.
அதே
நேரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும்
மாண்புமிகு ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்று ட்வீட் செய்திருந்தார். அதில், தங்களது
வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும் என்று
குறிப்பிட்டிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆளுநர்களை எப்படிப் பயன்படுத்தியது
என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியான அரசியல் பின்னணி கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர்
எச்சரிக்கை விடுப்பதை அப்படியே விட்டுவிட முடியாது. அதே நேரத்தில் ஸ்டாலின் வரவேற்றிருப்பதையும்
சாதாரணமானது என்று கடந்துவிட முடியாது. ஏனெனில், ஆளுநர் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும்,
அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிவிட முடியாது என்பது வெளிப்படையான
விஷயம். பதவியேற்ற நாள்முதலாக ஆளும் பாஜகவைச் சித்தாந்தரீதியில் எதிர்கொள்ளும் முதலமைச்சருக்கு
ஒன்றிய அரசின் உண்மையான முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனில், அவர் ஏன் வாழ்த்தி
வரவேற்கிறார்? அதன் மூலம் ஒன்றிய அரசுக்கு என்ன உணர்த்துகிறார்? நீங்கள் என்னதான் முயன்றாலும்
தமிழ்நாட்டை அசைத்துவிட முடியாது என்று சொல்ல நினைக்கலாம். சர்ச்சைக்குரிய மனிதரை ஆளுநராக
நியமிப்பதன் மூலம் எங்களுக்கு ஒருவிதப் பதற்றத்தை
நீங்கள் உருவாக்க முயன்றால் நாங்கள் பதற்றமடையமாட்டோம் எனக் காட்டிக்கொள்கிறார்
எனப் புரிந்துகொள்ளலாம்.
அதே
வேளையில் ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தைக் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு அம்பலப்படுத்தவும்
முயலலாம். அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். ராஜாவைப்
பாதுகாப்பது மட்டுமே சதுரங்கப் பலகையின் எதிரெதிரே அமர்ந்திருக்கும் இரு தரப்பினருக்கும்
நோக்கம். அறுதிப் பெரும்பான்மை பெற்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் முதலமைச்சர் ஒரு
புறம் இருக்கிறார் என்றால் ஒன்றிய அரசின் பக்கபலத்துடன் ஆளுநர் மறுபுறம் இருக்கிறார்.
எந்த வேளையில் இந்த ஆளுநர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது உற்றுநோக்கத்தக்கது. ஒன்றிய
அரசு கொண்டுவந்த வேளாண்மைச் சட்டங்கள், குடியுரிமைச்
சட்டம் போன்றவற்றுக்கு எதிராகத் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறுகிறது.
அனைவரையும் அர்ச்சகராக்கும் செயல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. இந்திய நாகரிகத்தைவிடத்
தொன்மையானது தமிழ்நாட்டின் நாகரிகம் என்ற கருதுகோள் அழுத்தமாகத் தமிழ்நாட்டு முதலமைச்சரால்
முன்வைக்கப்படுகிறது. இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்ற முழக்கம்
சென்னையில் ஒலித்தாலும் அது தில்லியை அதிரவைக்கிறது. அரசியல்ரீதியான எதிர்ப்புகளைவிடச்
சிந்தாந்தரீதியான பண்பாட்டுரீதியான எதிர்ப்பை மிகவும் வலுவாகவும் தெளிவாகவும் துணிச்சலாகவும்
முதலமைச்சர் வெளிப்படுத்தும் வேளையில் இப்படியோர் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறார்
என்றால் அதை அப்படியே எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா என்ன? அதனால்தான் உடனடியாக
எதிர்வினை ஆற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகளின் தலைவர்
தொல் திருமாவளவன் போன்றோர். ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது
தமிழ்நாடு. அதே நேரம் முதலமைச்சரோ வரவேற்புத் தெரிவிக்கிறார். ஆகவே, இந்த அரசியல் சதுரங்கத்தில்
ஆளுநர் என்னும் பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு காய் நகர்த்தலையும் மிகவும் உன்னிப்பாகவும்
அதே நேரத்தில் அநாயாசமாகவும் எதிர்கொள்ளத் தயாராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றே
புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்நாடு போன்ற பண்பாட்டு பிடிப்பு கொண்ட மாநிலத்தில், மக்களின் பேராதரவைப் பெற்ற ஓர் ஆட்சியை, அதன் முதலமைச்சரை அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்பதை உணராமல் இருக்காது ஒன்றிய அரசு. இது எதிரும் புதிருமான இரண்டு பலம் வாய்ந்தவர்களின் விளையாட்டு. இந்த விளையாட்டுத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது, இன்னும் பல சுவாரசியமான காட்சிகள் அரசியல் சதுரங்கத்தில் அரங்கேறும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. ஆட்டத்தில் யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பதைவிட சுவாரசியமான ஆட்டம் ஒன்று அரங்கேறப்போகிறது என்பதே ஊடகங்களுக்கான செய்தி.
டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதி அதில் வெளியான கட்டுரை.
வெள்ளி, மே 07, 2021
மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை
1. மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்
பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புப் முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்
2. மாண்புமிகு திரு. துரைமுருகன் நீர்வளத் துறை அமைச்சர்
சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
3. மாண்புமிகு திரு. கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்
4. மாண்புமிகு திரு. இ.பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சர்
கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்
5. மாண்புமிகு திரு. க.பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சர்
உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்ன ணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்
6. மாண்புமிகு திரு. எ.வ.வேலு பொதுப்பணித் துறை அமைச்சர்
பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)
7. மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்
வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு
8. மாண்புமிகு திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர்
வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை
9. மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர்
தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி - மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்
10. மாண்புமிகு திரு. எஸ்.இரகுபதி சட்டத் துறை அமைச்சர்
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்
11. மாண்புமிகு திரு. சு.முத்துசாமி வீட்டு வசதித்துறை அமைச்சர்
வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
12. மாண்புமிகு திரு. கே.ஆர்.பெரியகருப்பன் ஊரக வளர்ச்சி துறைத் அமைச்சர்
ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்
13.மாண்புமிகு திரு.தா.மோ.அன்பரசன் ஊரகத் தொழில்துறை அமைச்சர்
ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், ஊரகத் தொழிற் துறை அமைச்சர்குடிசை மாற்று வாரியம்
14. மாண்புமிகு திரு. மு.பெ.சாமிநாதன் செய்தித் துறை அமைச்சர்
செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்
15. மாண்புமிகு திருமதி. பி.கீதா ஜீவன் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்
16. மாண்புமிகு திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர்
மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு
17. மாண்புமிகு திரு. ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சர்
போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து, மற்றும் இயக்கூர்தி சட்டம்
18. மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சர்
வனம்
19. மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு
20. மாண்புமிகு திரு. வி.செந்தில் பாலாஜி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)
21. மாண்புமிகு திரு. ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்
22. மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்
23. மாண்புமிகு திரு. பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு
24. மாண்புமிகு திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்
25. மாண்புமிகு திரு. பி.கே.சேகர்பாபு இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்
26. மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்
27. மாண்புமிகு திரு. சா.மு.நாசர் பால்வளத் துறை அமைச்சர்
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி
28. மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்
29. மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பள்ளிக் கல்வி
30. மாண்புமிகு திரு. சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
31. மாண்புமிகு திரு. சி.வி.கணேசன் தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு
32. மாண்புமிகு திரு. த.மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
தகவல் தொழில்நுட்பத் துறை
33. மாண்புமிகு திரு. மா.மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சர்
சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
34. மாண்புமிகு திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்




