இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025

வாக்காளப் பெருமக்களே...

பொதுச்செயலாளர் வ.மணிமாறன் உரையாற்றுகிறார்

செய்தியாளர் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காக 1954 ஆம் ஆண்டு முதல் சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) இயங்கிவருகிறது. எம்யூஜேவின் 70 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் 2025 ஜூலை 20 அன்று ரிச்சி தெருவிலுள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எல்.ஆர்.சங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மணிமாறன் வேலை அறிக்கையைக் கூட்டத்தில் உரையாக வழங்கினார். அதன் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பொருளாளர் வே.ஸ்ரீதர் நிதிநிலை அறிக்கையை அளித்தார். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய செயற்குழுவே தேர்தலை நடத்த வேண்டும் என்றும், ஆகஸ்ட் 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் பொதுக்குழு முடிவெடுத்துள்ளது. மேலும், செயற்குழு பரிந்துரைத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்க்கிவேலனைத் தேர்தல் அலுவலராக நியமித்தும் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. 

பொதுக்குழுவில் உறுப்பினர்கள்

அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஆகஸ்டு 12 அன்று  மாலை 6.00 மணிக்கு வழக்கறிஞர் கார்க்கி வேலன் தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பின்னர் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. 

தேர்தல் அலுவலராக கார்க்கிவேலன் பொறுப்பேற்கிறார் 

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் 2025 (செப்டம்பர்) -2027 (செப்டம்பர்) ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையும் அதில் இடம்பெற்றிருந்தது. தலைவர் ஒருவர், துணைத்தலைவர் இருவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஐவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிக்கையில் தகவல் வெளியாகியிருந்தது.

வேட்புமனு தாக்கல் ஆகஸ்டு 20 (20.08.2025) அன்று தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல்செய்வதற்கான இறுதி நாள் ஆகஸ்டு 27 (27.08.2025) என்றும், அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்டு 28 (28.08.2025) அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மனுக்களை ஆகஸ்டு 31  (31.08.2025) அன்று  திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும்  வாக்குப்பதிவு செப்டம்பர் 14  (14.09.2025) அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நாள்தோறும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை, ரிச்சி தெருவில் உள்ள எம்.யூ.ஜே. அலுவலகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவைப் பெறலாம்; பூர்த்திசெய்த வேட்பு மனுவை அளிக்கலாம் எனவும் அந்த அறிவிக்கை தெரிவித்தது. தேவைப்படின்  வாக்காளர் பட்டியலையும் அவரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 19 (19.08.2025) அன்று மாலை 5 மணிக்குச் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும் என்றும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்வோர், வேட்புமனுவை முன்மொழிவோர், வழிமொழிவோர் ஆகியோர் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்த அந்த அறிவிக்கையானது, செப்டம்பர் 14 அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை சங்க அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது. 

வேட்புமனு படிவத்தைத் தேர்தல் அலுவலரிடம் கொடுக்கும்போது,  

1, வேட்புமனு படிவத்தில் அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது.

2, வேட்புமனு படிவத்துடன் வேட்பாளர், அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் ஆகியோரின் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் (ஜெராக்ஸ்) இணைக்கப்பட வேண்டும். 

3, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை சமர்ப்பிக்கும் போது, வேட்பாளருடன் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் உடனிருக்க வேண்டும்.

4, போட்டியிடும் பதவியைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

5, சங்க உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் நடப்பு ஆண்டு சந்தா செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும்

ஆகிய விதிமுறைகளைத் தேர்தல் அலுவலர் சங்கத்தின் அலுவலரீதியான வாட்ஸ் அப் குழு வழியே தெரிவித்திருந்தார்.  

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பின்னர் ஆகஸ்டு 28 அன்று, தலைவர் பொறுப்புக்கு இருவர், துணைத்தலைவர் பொறுப்புக்கு ஐவர், பொதுச்செயலாளராக இருவர், இணைச் செயலாளராக இருவர், பொருளாளர் பொறுப்புக்கு இருவர் என மொத்தம் 13 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக பதினோரு பேரும் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்ததாகவும் அதில் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும்  தேர்தல் அலுவலர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று வெளியிடப்படும் என தேர்தல் அலுவலர் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தது போல் இறுதி வேட்பாளர் பட்டியல் ஆகஸ்டு 31 அன்று மாலையில் வெளியிடப்பட்டது. எம்.யூ.ஜே. நிர்வாகிகள் தேர்தல் - 2025இல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 23 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், துணைத் தலைவர் பொறுப்புக்கு மனுதாக்கல் செய்திருந்த ஒருவரும், செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்குப்  மனுத்தாக்கல் செய்திருந்த ஒருவரும் திரும்பப்பெற்றுவிட்டதாகவும் இறுதியாக 21 பேர் போட்டியிட உள்ளதாகவும் இறுதி வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தலைவர் பொறுப்புக்கு 1. வி.செல்வின் வினோத்குமார் (தினகரன்), 2. எஸ்.ஆர்.சங்கர் (டைம்ஸ் ஆப் இந்தியா) ஆகிய இருவரும்; துணைத்தலைவர் பொறுப்புக்கு 1.எம்.முத்தையா (முரசொலி), 2.கே.நாகப்பன் (ஜீ மீடியா), 3.ஏ.பிரதாப் (டைம்ஸ் ஆப் இந்தியா), 4. டி.சரவணன் (சுயாதீனப் பத்திரிகையாளர்) ஆகிய நால்வரும்; பொதுச்செயலாளர் பொறுப்புக்கு 1.பி.கோபி (சன் நியூஸ்), 2. வ.மணிமாறன் (ஜனசக்தி) ஆகிய இருவரும்;  இணைச் செயலாளர் பொறுப்புக்கு 1. திருமேனி சரவணன் (சன் டிவி), 2. எம்.வினோத் ராஜா (தினமணி) ஆகிய இருவரும்;  பொருளாளர் பொறுப்புக்கு 1. எம்.அய்யனார் ராஜன் (ஆனந்த விகடன்), 2. ஜோசப் ராஜ் (ஈ டிவி பாரத்) ஆகிய இருவரும்; செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு 1.ஜெ.மகேஷ் (சன் டிவி), 2.கே.பிரியா (தினகரன்), 3. வி.ரவிச்சந்திரன் (முரசொலி), 4. ஜி.சசிரேகா (சிகரம் மீடியா), 5. எம்.செந்தில்நாதன் (குமுதம்), 6. எஸ்.சுந்தர்ராஜன் (சன் டிவி), 7. இரா.தமிழ்க்கனல் (அந்திமழை), 8. கே.வெங்கடேஷ் (சன் நியூஸ்), 9. ஏ.விஜயகுமார் (தீக்கதிர்) ஆகிய ஒன்பது பேரும் என மொத்தமாக 21 பேர் தேர்தல் களத்தை எதிர்கொள்ளவிருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவித்தது. 

இவர்கள் உழைக்கும் பத்திரிகையாளர் அணி, ஜனநாயக அணி என இரு அணியாகத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மும்முரமான பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்கள். வாட்ஸ் அப் வழியேயான பரப்புரை சூடுபிடித்துள்ளது. நாள்தோறும் வேட்பாளர்களிடமிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.


செவ்வாய், செப்டம்பர் 02, 2025

ரஜினியோட ராசி நல்ல ராசி


நட்சத்திர நடிகர்களுக்குத் தங்களது நூறாம் படம் குறித்து பெரிய கனவுகள் இருப்பதுண்டு. சிவாஜி கணேசனின் நூறாவது படம் நவராத்திரி. 1964 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று படம் வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசன் ஒன்பது வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் நடிகை சாவித்திரி அவரை விழுங்கி ஏப்பம் விட்டுச் சென்றுவிடுவார். படம் மிகப் பெரிய வெற்றி என்கின்றன தகவல்கள். 

எம்.ஜி.ஆரின் நூறாம் படம் ஒளிவிளக்கு. 1968 ஆம் ஆண்டில் செப்டம்பர் 20 அன்று இப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராண்டார் கை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி அமெரிக்க மருத்துவமனையில் இருந்த வேளையில் இந்தப் படத்தின் இறைவா உன் மாளிகையில் பாடல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் எல்லாம் ஒலிக்கவிடப்பட்டது. 

சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்கள் போலவே நடிகர் சிவகுமாருக்கும் நூறாம் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. 1979 மே 18 அன்று படம் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது. தேவராஜ் மோகன் இயக்கிய இந்தப் படம் விமர்சனரீதியான வரவேற்பையும் பெற்ற படம். 

கமல் ஹாசன் நடித்த நூறாம் படம் ராஜபார்வை. 1981 ஏப்ரல் 10 அன்று வெளியாகியுள்ளது. ஹாசன் பிரதர்ஸ் என்னும் பெயரில் கமல் முதன் முதலில் தயாரித்த இந்தப் படம் படுதோல்வி. வசூல் ரீதியில் வெற்றிபெறாத இந்தப் படம் விமர்சனரீதியில் கமலுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப் படம்  வசூலை வாரிக்குவிக்காதபோது, ரசிகர்களின் நினைவில் நின்றுவிட்ட படம். 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த நூறாம் படம் ஸ்ரீராகவேந்திரர். ரஜினியின் விருப்பப்படி படத்தை கே.பாலசந்தர் தயாரித்தார்; எஸ்பி.முத்துராமன் இயக்கினார். ராகவேந்திர சாமிகள் மீது ரஜினி கொண்டிருந்த பற்றும் பாசமும் இப்படி ஒரு படத்தை உருவாக்க வைத்தது. படம் 1985 செப்டம்பர் 1 அன்று வெளியானது. படம் தோல்விப் படம் தான். விமர்சனரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ரஜினிக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்ல படம் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கும். மற்றபடி ரஜினியின் நூறாம் படமாக இருந்திருந்தபோதும், இது பத்தோடு பதினொன்று, அவ்வளவுதான். 

ரஜினி ஆசையோடு எதைச் செய்தாலும் அது உருப்படாது. ரஜினி முதலில் தயாரித்த மாவீரன் படு தோல்வி. நூறாம் படமான ஸ்ரீராகவேந்திரர் தோல்வி. முதல்முதலில் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்த வள்ளி தோல்வி. எஸ்பி.முத்துராமனுக்காக அவர் செய்துகொடுத்த பாண்டியன் படம் தோல்வி. ஆன்மிக அனுபவமாக உருவாக்கிய பாபா படு தோல்வி. இப்படி ரஜினி விருப்பத்தோடு எதைச் செய்தாலும் அது வெற்றிபெற்றதே இல்லை என்பதன் பெரிய எடுத்துக்காட்டு அவரது ஆன்மிக அரசியல். அது தோற்றுவிக்கப்படாமலேயே படு தோல்வியடைந்தது. 


ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2025

கிண்டலா, கேலியா?


வெகுளி வெள்ளச்சாமியோட புரோகிராம் கிண்டலா கேலியாவுக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க. வெள்ளைக்கு இதெல்லாம் நம்பவே முடியல. முதலில் வேலை தேடி அலைஞ்ச காலம் கண்ணு முன்னால வரும். ஒரு முறை ஒரு சினிமா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். ஒரு படத்தோட பூஜை அன்னக்கி வெள்ளப் பூசணியில் நாணயங்கள் போடுறதுக்காக அது மேல கேக் சைஸ்ல வெட்டி எடுத்துட்டு வான்னு வெள்ளைட்ட சொன்னாங்க. வெள்ளக்குப் புத்தி கொஞ்சம் மந்தமா இருந்தாலும், சொன்னத கரெக்டா செய்வான். கேக் மாதிரி வெட்டணும் அவ்வளவு தானேன்னு போன வெள்ள ஒரு தாம்பாளத்தில் பூசணியை வைத்து துண்டு துண்டா கூறு போட்டு டைரக்டர் முன்னால் கொண்டுபோய் பெருமையோட வச்சுட்டான். அங்க நின்ன அத்தனை பேரும் சிரிச்சிட்டாங்க. வெள்ளக்கு எதுவும் வெளங்கல. ஆனா அன்னக்கே அவன வேலையை விட்டுத் துரத்திட்டாங்க.

தன்னோட அறிவுக்கு வேலை கிடைப்பதே சந்தேகமோன்னு அவனுக்கே கஷ்டமாப் போச்சு. அந்த நேரத்தில தான் புதுசா ஆரம்பிச்ச அந்த சேனலில் வேலை காலியா இருக்குன்னு அங்க போனான். சம்பளம் கொறையா கேட்டா யாரன்னாலும் வேலைக்கு எடுக்கலாம் அப்படிங்கிற முடிவுல சேனல் இருந்ததால அவன வேலையில் சேத்துக்கிட்டாங்க. ஏவுற நேரமெல்லாம் ஏவி போடனும், டீ வாங்கியாரனும் இப்படியான எடுபிடி வேலைதான். புரொடக்‌ஷன் சாப்பாடு உண்டு. இதுக்கு மேல சம்பளம்னு வேற ஐந்தோ பத்தோ கொடுத்தாங்க. வெள்ளக்குச் செம குஷியாயிருச்சு. ஸ்டுடியோவுக்கு வர்ற எல்லாருடனும் நின்னு போட்டா எடுத்துக்குவான்.

அப்பதான், அங்க கிண்டலா, கேலியா?ன்னு ஒரு புரோகிராம் ஆரம்பிச்சாங்க. நாட்டு நடப்புகள கிண்டல் பண்ற புரோகிராம் அது. புத்திசாலித்தனத்தோட யாரும் பேசிறக் கூடாது, முட்டாள்தனமாத்தான் பேசனுங்கிறது நிகழ்ச்சியோட முக்கிய நோக்கம். இத ஒருங்கிணைக்கிறதுக்கு ஒருத்தர் தேவைப்பட்டார். நிறைய பேரக் கூப்பிட்டுப் பேசினாங்க. மாதிரி ஷோவெல்லாம் நடத்துனாங்க. முட்டாள்தனமா பேசுற நிகழ்ச்சியில் பங்கெடுக்கிற ஆளுங்களுக்குத் தமிழ்நாட்டுல பஞ்சமே இல்லங்கிற மாதிரி நிறையப் பேரு வந்து சேர்ந்தாங்க. ஆனா ஒருங்கிணைக்கத் தான் ஆளே இல்ல. புரோகிராம் புரொடியூசர் பயங்கர கடுப்பா திரிஞ்சுகிட்டு இருந்தாரு. அப்ப அவரோட நல்ல நேரமோ அல்லது வெள்ளையோட நல்ல நேரமோ தெரியல அவன் ஒரு கூறுகெட்ட வேலையைப் பாத்துட்டான். இதக் கவனிச்ச புரோகிராம் புரொடியூசர் இம்ப்ரஸாயிட்டார். நமக்கேத்த ஆளு இவன் தான்னு முடிவு பண்ணிட்டார்.

வெள்ளைக்கு வேர்த்துப்போச்சு. அதெல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது சார்னு மறுத்துப் பார்த்தான். ஆனா இதைச் செய்யாட்டி வேலையை விட்டே எடுத்துருவோம்னு புரொடியூசர் மிரட்டினாரு. ஒரு நிமிஷம் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். புரொடக்‌ஷன் சாப்பாடு போயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சான். எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் பண்ணிருவோம்னு கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டுச் சரின்னு ஒத்துக்கிட்டான். புரொகிராம் பயங்கர கிண்டலா இருக்கனும்னு நினச்ச புரொடியூசர் வெள்ளைக்குத் தொள தொளன்னு ஒரு கோட்ட போட்டுவிட்டார். அந்த கோட்ட போட்டுட்டு கேமரா முன்னால வந்து நிக்க வெள்ளைக்கே கூச்சமாயிருந்துச்சு. சார்லி சாப்ளினுக்குப் பெருமையே அவரோட கோட்டு தான்டா நல்ல வாய்ப்ப கோட்ட விட்டுடாதடா மடையான்னு புரொடியூசர் வெள்ளைய உரிமையா கண்டிச்சாரு. ஒன்னுமே பண்ண முடியல வெள்ளையால.

துணிஞ்சவனுக்குத் தூக்கு மேடையும் பஞ்சு மெத்தைங்கிற மாதிரி வெள்ள துணிஞ்சுட்டான். ஆனா வெள்ளையும் சும்மா வெளுத்து வாங்குனான். புரொடியூசர் என்னவெல்லாம் சொல்றாரோ அதையெல்லாம் அப்படியே சொன்னான். காதுக்குப் பின்னால உள்ள மைக்க கடவுள் மாதிரி நினைச்சுக்குவான் வெள்ள. ஷூட்டிங் போறதுக்கு முன்னால கடவுள் படத்துக்கு முன்னாடி அத வச்சு தொட்டுக் கும்பிட்டுட்டு தான் அத காதுக்குப் பின்னால மாட்டுவான். ஆனா பார்வையாளர் யாருக்கும் அது தெரியாது. அவனே முட்டாள்தனமாப் பேசுறதாத்தான் நினைப்பாங்க. அவ்வளவு தத்ரூபமா அவன் பேசுவான்.

புரோகிராமுக்கு வர்ற பலர் வெள்ளைகூட நின்னு போட்டோ எடுத்துக்குவாங்க. படிச்சவங்க பலரும் அவனோட இன்னொசன்ஸ ரசிச்சாங்க. ஒரு முறை புக் ஃபேருக்குப் போனான் வெள்ள. அறிவுஜூவி ஒருத்தரு எழுதுன ஒரு ஸ்டாலில் போய் புத்தகம் ஒன்ன எடுத்து வச்சுப் படிச்சிக்கிட்டிருந்தான். அத ஒரு பத்திரிகையாளர் போட்டோ எடுத்து கவர் ஸ்டோரியா எழுதுனாரு. அந்த இஷ்யூ வந்த உடனே அறிவுஜூவியோட புத்தகம் ஆயிரக்கணக்கா விற்பனை ஆச்சு. இதுல என்ன ஹைலைட்டுன்னா புத்தகத்தை வெள்ள தலைகீழா பிடிச்சிட்டு இருப்பான். அறிவுஜூவி, புத்தகம் விற்றதுக்குச் சந்தோஷப்படவா இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுருச்சேன்னு வருத்தப்படவான்னு தெரியாம தண்ணியப் போட்டுட்டு பாருல தலகீழ கெடந்தாரு.

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?


அவன் கிண்டி ரயில் நிலையத்தில் அந்தப் புறநகர் ரயிலில் ஏறினான். அது சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில். அவன் முதல் வகுப்பில் தனக்குக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு வலப்புறம் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சாதாரணமான பேண்ட், சர்ட் உடுத்தியிருந்த மனிதராகத் தென்பட்டார். கையில் வைத்திருந்த மொபைலில் ஏதோ காணொலியைக் கண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே இருந்தார். அவன் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்டான். 

ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”

அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.

அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.

“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”

“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”

“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.

அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை  வீசினார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.

அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.


செவ்வாய், ஆகஸ்ட் 26, 2025

இங்கேயும் ஒரு கங்கை


2025 ஆகஸ்டு 23 சனிக்கிழமை அன்று இரவில் மணிவண்ணன் இயக்கிய இங்கேயும் ஒரு கங்கை படத்தை யூடியூபில் பார்த்தேன். அந்தப் படத்தை முதன்முதலில் தென்காசி பரதன் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு, தென்காசி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, ஒருவர் கையிலிருந்த நாளிதழில் “அதிமுக அமோக வெற்றி” என்னும் செய்தியைப் பார்த்த நினைவு உள்ளது. 

இத்திரைப்படம் 1984 ஆகஸ்டு 10 அன்று வெளியாகியுள்ளது. அன்றுதான் தாத்தா இறந்த நாள். அந்த ஆண்டு தேர்தல் டிசம்பர் 24 அன்று நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது, திமுக  சார்பில் அச்சிடப்பட்டிருந்த, நண்பரின் நலிவு நீங்கிட நலமார்ந்த வாழ்த்துகள், நாட்டின் நலிவு நீங்கிட உதயசூரியனுக்கு வாக்குகள் என்னும் வாசகங்களைக் கொண்ட, சுவரோட்டியை இலஞ்சியின் சுவர்களில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரும் கலைஞரும் அருகருகே இருப்பது போன்ற படம் போட்டு அந்தச் சுவரொட்டி அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து 2014இல் ஒரு பதிவிட்டுள்ளேன். 

தேர்தல் முடிவுகள் டிசம்பர் 28 அன்று வெளியாகியுள்ளன. அன்றைய மாலை நாளிதழைத்தான் நான் பார்த்திருக்க வேண்டும். கணக்குப்படி பார்த்தால் அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் படம் பார்க்கப் போயிருக்கிறேன். சரி இனி படம் குறித்த விஷயத்திற்கு வருவோம். 

படத்தின் கதை, வசனம், பி.கலைமணி. மணிவண்ணன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒரு வில்லை வளச்சு வச்ச புருவமோ பாடல் காட்சியை முன்னர் பார்த்த நினைவு அப்படியே பசுமரத்தாணி போல் உள்ளது. இப்படத்தின் சோலை புஷ்பங்களே பாடல் அப்போது, இலங்கை வானொலியில் நீண்ட நாள்களாக முதலிடம் பிடித்த பாடலாக இருந்தது. நேயர்களின் வாக்குகள் அடிப்படையில்  டாப் டென்  பாடல்கள் போல ஒரு வரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அதில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். பி.சுசிலாவும் கங்கை அமரனும் பாடியுள்ளனர். 

இப்போது படத்தைப் பார்த்தபோது, சில காட்சிகள் மனத்தில் பதிந்திருந்ததை உணர முடிந்தது. குறிப்பாக, நடிகர் சந்திரசேகர் கையில் ஊன்றுகோலுடன் சண்டையிடும் காட்சி; நடிகை தாராவின் பின்னர் வாத்துகள் போகும் காட்சி... இவை ஓரிரு எடுத்துக்காட்டுகள். 

படம் இப்போது பார்க்கவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. உணர்வுபூர்வமான திரைக்கதை. மனசவிட மாங்கல்யத்தை முக்கியமா நெனைக்கிற தலைமுறை உள்ளிட்ட வசனங்கள் கலைமணியின் எழுத்துத் திறமையைக் காட்டுகின்றன. படத்தை இயக்கிய வகையில் மணிவண்ணனின் முத்திரையைப் பார்க்க முடிகிறது. படத்தில் வேண்டுதல் தொடர்பான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்தக் கோவிலில் மனதார வேண்டிக்கொண்டு அதை ஒரு காகிதத்தில் எழுதி அங்கே உள்ள மரத்தில் கட்டித் தொங்கவிட்டால் அது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அங்கே படத்தின் நாயகனும், நாயகியும் ஒரு காரியத்தை எண்ணித் தனித் தனியே வேண்டிக்கொள்வார்கள். ஆனால், அந்த இரண்டுமே பலிக்க மாட்டா. 

முரளி, தாரா, வினுச்சக்ரவர்த்தி, ஒய்.விஜயா, காந்திமதி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  முக்கோணக் காதல் கதைதான். ஆனால், காதல் கைகூடாவிட்டாலும் கவலைப்பட ஏதுமில்லை. வாழ்க்கை காதலைவிட மிகவும் பெரியது என்பதை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2025

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சில குறிப்புகள்


இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கும் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு எதிராக இந்தியா கூட்டணியின் வேட்பாளராக, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பி.சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவின் திருச்சி சிவா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணி  இன்று (2025 ஆகஸ்டு 19)  மதியம் சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளது. 

பாஜக அரசியல் ஆளுமையை வேட்பாளராக நிறுத்தியுள்ளது எனில், இந்தியா கூட்டணி அரசியலில் ஈடுபடாத ஒருவரை வேட்பாளராகக் கொண்டுவந்துள்ளது. எப்படியும் வெற்றிபெறப் போவது சி.பி.ராதாகிருஷ்ணன் தான் எனும்போது, அரசியல் சாராத ஒருவரை நிறுத்தியிருப்பதன் மூலம் இந்தியா கூட்டணி சரியாகவே நகர்ந்துள்ளது. 

1998 நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் 4,49,269 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரான கே.ஆர். சுப்பையனை 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டவர். என்னடா, பாஜக அவ்வளவு வாக்குகளை எப்படிப் பெற்றது என அதிசயிக்காதீர்கள். அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. அடுத்த தேர்தலில் அதாவது 1999 நாடாளுமன்றத் தேர்தலில் அதே கோயம்புத்தூரில் சி.பி.ராதா கிருஷ்ணன் 4,30,068  வாக்குகளைப் பெற்று, அவரை அடுத்த வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர். நல்லகண்ணுவைவிட 54,077 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றிருந்தார். 

மீண்டும் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  கோயம்புத்தூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதா கிருஷ்ணனைத் தோற்கடித்தார். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் 3,40,476. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் 3,88,911 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். 2019 ஆம் ஆண்டும் கோயம்புத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் 3,92,007 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டார். 

2023 ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களையும் கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்துக்கொண்டார். அதன் பிறகு மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஜூலை 21 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் உடல்நலக் காரணங்களைக் கூறி குடியரசு துணைத் தலைவராகவிருந்த ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானது.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 21. வேட்பாளர்கள் ஆகஸ்டு 25 வரை தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது.  வாக்குகள் அன்றே எண்ணப்படும். 

செப்டம்பர் 9 அன்று நடைபெற்ற தேர்தலில், மொத்த வாக்குகள் 782இல் 767 வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகளில் செல்லாதவை 15, பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றியை ஈட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 15 ஆம் குடியரசு துணைத் தலைவர் என்னும் பொறுப்புக்கு உரியவராகிறார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றிருந்தார்.    

பாஜகவின் அரசியல் நாடகம் வெற்றிபெறாது


குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக முன்னிருத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஆகஸ்டு 18 அன்று வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நெருக்கடியைத் தரலாம் என பாஜக நினைக்கிறது.  

வழக்கம்போல் பாஜக நடத்தும் அதே அரசியல் நாடகம்தான் இது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நிறுத்துவதால் திமுக அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பாஜக கோருகிறது. ஆனால், அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான ராதாகிருஷ்ணன் திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர். 

மேலும், ஒருவர் தமிழர் என்பதற்காகவே அவரை ஆதரிக்க இயலுமா? அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்வார்? திராவிட சித்தாந்தம் குறித்த அவரது அணுகுமுறை என்ன? புரிதல் என்ன? என்பவற்றை ஆழ்ந்து பரிசீலித்துத்தானே முடிவெடிக்க இயலும்.

திராவிட சித்தாந்த புரிதல் உள்ள எந்தத் தமிழரும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என நினைக்க மாட்டார். கொங்குப் பகுதியின் வாங்குவங்கிக்கான கணக்காகவே பாஜக சிபிஆரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது என்பதை அரசியலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த திருச்சி சிவா இந்தியா கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் வதந்தி ஒன்று நேற்று முதலே சமூக ஊடகங்களில் உலவுகிறது. அப்படி அவர் நிறுத்தப்பட்டால் அது சரியான நகர்வாகவே இருக்கும். தமிழர் என்பதால் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரும் பாஜக அப்போது எதுவும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.  பாஜக வேட்பாளரைத் தவிர்ப்பதற்கு ஒரு நியாயமான காரணம் திமுகவுக்குக் கிடைத்துவிடும். 

ஒரு வேளை அப்படி இல்லாத பட்சத்திலும் இந்தியா கூட்டணியின் சார்பில் வேறு ஒரு வேட்பாளரே நிறுத்தப்படும் பட்சத்திலும் திமுக ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல் தவிர்ப்பதே தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது. 

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஒருவரால் ஒருபோதும் தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடைபெறப்போவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வாகப் போவதால் தமிழ்நாட்டுக்கு அதனால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.  

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்