இந்த வலைப்பதிவில் தேடு

ரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 15, 2025

சில்லுன்னு ஒரு பயணம்


சினிமாக்களில் மட்டுமே பார்த்துவந்த மெட்ரோ ரயிலை சென்னைவாசிகள் நேரில் கண்டுவிட்டார்கள். கடந்த திங்களன்று (29.06.2015) சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டது. புறநகர் ரயில், பறக்கும் ரயில் வரிசையில் புதிதாக இந்த மெட்ரோ ரயிலும் சேர்ந்துகொண்டது.

மெட்ரோ ரயில் பயணம் சென்னைவாசிகளுக்குப் புதுவிதமான அனுபவமே. ஏனெனில், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பமான சென்னை நகரின் ஊடே மேம்பாலத்தில் செல்லுவது உண்மையிலேயே உற்சாகமாக இருப்பதாகவே மெட்ரோ ரயிலில் பயணம்செய்தவர்கள் கூறுகிறார்கள். வெளியே சுட்டெரிக்கும் வெயிலைக் கண்ணாடி வழியே பார்த்தபடி வானத்தில் மிதப்பது போல குளுமையுடன் பயணிக்கும்போது ஆசுவாசமாக இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட பறக்கும் ரயிலின் அமைப்பிலேயே மெட்ரோ ரயில் இருக்கிறது. பறக்கும் ரயிலில் உட்கார அதிக இடம் இருக்கும், நிற்க குறைவான இடம் இருக்கும். மெட்ரோவில் இருக்க குறைவான இடம், நிற்க அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையம்கூடப் பறக்கும் ரயில் நிலையம் போலவே விசாலமானதுதான்.

ஆனால், மெட்ரோவில் தொழில்நுட்ப வசதிகள் பறக்கும் ரயிலைவிட மேம்பட்டிருக்கின்றன. நடைமேடையில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல இங்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் நடைமேடைகள் இப்படி மேம்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்காது.

மேலும் பறக்கும் ரயில் வந்துசெல்லும் நிலையங்களில் காற்று உள்ளே வந்துவிடக் கூடாது என்று முன்யோசனையோடு கட்டியிருக்கிறார்களே என்று தோன்றும் அளவில் அவற்றை அமைத்திருப்பார்கள். வியர்வை வழிய வழியதான் நிற்க வேண்டும். பிளாட்பாரத்தின் முனைப் பகுதியில் மட்டுமே காற்று வர முடியும். ஆனால், இங்கே அந்தப் பிரச்சினை இல்லை.

மேலே கூரையில் திறப்புகள் உள்ளன. எனவே, காற்று வர வசதியுள்ளது, பார்வையில் வானமும் படுகிறது. பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் தானியங்கிக் கதவுகள் திறப்பதும் பின்னர் மூடுவதும் பார்க்க அழகாக இருக்கின்றன. ஏற்கெனவே, சென்னையின் சொகுசுப் பேருந்துகளில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதுதான். ரயிலில் இது முதல்முறை என்பது மட்டும் புதுசு.

பிற ரயில்களில் நின்றுகொண்டே பயணிப்பது போல மெட்ரோவில் மிகச் சுலபமாக நின்றுகொண்டு பயணம் செய்ய இயலவில்லை. கவனமாக நிற்க வேண்டியிருக்கிறது. சென்னையில் டிரெயிலர் பேருந்துகளில் செல்லும்போது பேலன்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதைப் போலவே உள்ளது மெட்ரோவின் பயணம். மெட்ரோவின் அகலமும் பிற ரயில்களைவிட குறைவு. ஆகவே, ஏதோ பொருட்காட்சி ரயிலில் போவது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அனைவரும் கண்காட்சியில் ஓடும் பொம்மை ரயிலில் குடும்பத்துடன் குதூகலமாக செல்வது போலவே செல்கிறார்கள்.

நகரின் சாலைகளையும் கட்டடங்களையும் போக்குவரத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊட்டி மலை ரயிலில் போவது போல சந்தோஷத்துடன் செல்கிறார்கள். இந்தச் சந்தோஷத்தின் காரணமாக ரயில் கட்டணம் அதிகம் என்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டூர் வந்தது போல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் உற்சாகமாக ஃபோட்டோகளும் செல்பிகளும் எடுத்து மகிழ்கிறார்கள். இதுவரை வெளிநாட்டுப் படங்களில் மட்டுமே பார்த்து மகிழ்ந்த மெட்ரோ ரயிலில் தாங்களே பயணிப்பதால் ஒருவித பரவசத்தை உணர்கிறார்களே எனத் தோன்றும்படி அமைகிறது அவர்களின் பயணம். பொதுமக்கள் போலவே விஜய்காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற பிரபலங்களும் இதில் பயணித்து மெட்ரோவைப் பெருமைப்படுத்தி விட்டார்கள்.

ரயில் கட்டணம் அதிகம் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பத்து ரூபாயும் அதிகபட்சமாக நாற்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினசரி மெட்ரோவில் செல்பவர்கள் இந்தக் கட்டணத்தில் ரயிலைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டண விஷயத்தில் ஏசி பேருந்து, ஆட்டோ போன்றவற்றுடன் ஒப்பிட்டு இப்போதைய கட்டணத்தை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், டெல்லி நகரின் மெட்ரோ கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. முதல் நாள் இருந்த கூட்டம் அடுத்தடுத்த நாள்களில் இல்லை. ஓரிரு மாதங்கள் சென்ற பின்னர் சென்னைக்கு மெட்ரோ எந்த அளவு பயன்படப்போகிறது என்பது தெரிந்துவிடும்.

இந்து தமிழ் திசையில் பிரசுரமானது. 

வியாழன், ஆகஸ்ட் 28, 2025

இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?


அவன் கிண்டி ரயில் நிலையத்தில் அந்தப் புறநகர் ரயிலில் ஏறினான். அது சென்னைக் கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில். அவன் முதல் வகுப்பில் தனக்குக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு வலப்புறம் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். சாதாரணமான பேண்ட், சர்ட் உடுத்தியிருந்த மனிதராகத் தென்பட்டார். கையில் வைத்திருந்த மொபைலில் ஏதோ காணொலியைக் கண்டுகொண்டிருந்தார். அவ்வப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே இருந்தார். அவன் அதைக் கவனித்தும் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்டான். 

ரயில் திரிசூலத்தைக் கடந்த நேரத்தில் அந்தப் பெரியவர் அவனிடம் பேச்சுக் கொடுத்தார். 

“நீங்க ரயில்வேல வேலை பாக்குறீங்களா?”

அவன் தலையை மறுத்து ஆட்டியபடியே, “இல்லையே” என்றான்.

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வச்சிருக்கீங்களா” எனும் அடுத்த கேள்வியை எறிந்தார்.

அப்போது, அவன் அவரைக் கூர்ந்து கவனித்தான். அவரது முதுகுச் சட்டையை மீறி நூலைக் காண வழியில்லை. ஆனால், பிடரியில் சிறிய அளவில் தென்பட்ட குதிரை வால் போன்ற மயிர்க் கற்றையைக் காண முடிந்தது. அவர் இன்னார் என்பதை உணர்ந்துகொண்டதால் சிறு திருவிளையாடலை நடத்த விரும்பினான்.

“நீங்க யாரு, உங்ககிட்ட நான் டிக்கெட் எடுத்தேனா இல்லையான்னு ஏன் சொல்லணும்?”

“நான் சாதாரணமாத்தான கேட்கிறேன், ஏன் கோபப்படுறீங்க?”

“நான் கோபப்படலைங்க... சாதாரணமாத்தான் சொல்றேன்... உங்ககிட்ட ஏன் நான் டிக்கெட்டைக் காட்டணும்?” மூஞ்சியில் புன்னகை தவழச் சொன்னான்.

அவனது பேச்சால் அவருக்கு எரிச்சலும் கோவமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“டிக்கெட் எடுத்தீங்களா?” அதிகாரத் தொனியில் வாலிமீது ராமன் அம்பெய்தது போல் கேள்வியை  வீசினார்.

அவன் சிரித்துக்கொண்டே, “இல்லை” என்று உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

“டிக்கெட் எடுக்கல... ஃப்ர்ஸ்ட் கிளாஸ்ல போறீங்க... வாழ்க வளமுடன்” என்று வஞ்சகப் புகழ்ச்சியில் வாழ்த்தியபடி குரோம்பேட்டையில் இறங்கிச் சென்றார்.

அந்த மனிதர் அவன் உள்ளத்தைச் சோற்றகப்பை போல் கிளறிவிட்டார். அவன் மனதில் தந்தை பெரியார் விஸ்வரூபமெடுத்தார். அந்தப் பெரியவர் சின்னதொரு கடுகு போல உள்ளங்கொண்ட மனிதராகத் தோற்றம் கொண்டார். இது நடந்தது 2025இல் எனில், 1925இல் நிலைமை எப்படி இருந்திருக்கும்?

பெரியார் ஏன் கைத்தடியைக் கடுங்கோவத்துடன் சுழற்றினார் என்பது புரிகிறதா? இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறான்னு யாராவது சொல்லத்தான் செய்றாங்க. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாகத்தானே உள்ளது.


புதன், ஜனவரி 06, 2016

ரயில் சிநேகம்



சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 06.01.2016 வெற்றிகரமாகத் தொடங்கியது. டிசம்பர் மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய விழா டிசம்பரின் கடும் வெள்ளம் காரணமாக கால தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. இன்று கேஸினோ தியேட்டரில் ஃபார் எவர் என்னும் திரைப்படம் பார்த்தேன். கிரேக்க நாட்டுப் படம்.


எளிமையான கதை. ஆனால் தத்துவார்த்தமான படம். மத்திய வயதைக் கடந்த ஆணுக்கு ஒரு பெண் மீது ஏற்படும் அன்பு தான் படத்தின் மையம். படத்தில் வசனங்கள் சொற்பம். படத்தின் மிகுதியும் காட்சிபூர்வ நகர்வே. படம் முழுவதுமே ஒரு பனிமூட்டம் போன்ற கலர் டோனைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட படத்தின் மனநிலையும் அதுதான். இரவுப் பொழுதில் மெட்ரோ ரயில் செல்லும் வழியெங்கும் கேமரா செல்வது ரம்மியம். லாங் ஷாட்டில் இரவில் தூரத்தில் ரயில் போகும் அழகை கேமரா படம் பிடித்திருக்கும் விதம் ரசிக்கத்தக்கது. தனியாகவே இருக்கும் நாயகன் தனியாகவே இருக்கும் நாயகி. இவர்கள் தான் மையப் பாத்திரங்கள். அவர் ரயில் இன்ஜின் டிரைவர். நாயகி படகு போக்குவரத்துத் துறையில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் உள்ளவர்.


வசனங்களைப் போலவே கதாபாத்திரங்களும் சொற்பமே. நீளம் குறைந்த படம். மிகவும் நிதானமாக ஆனால் அடர்த்தியான காட்சிகள் நிரம்பியிருந்த படம். மிகவு சிறந்த படம் என்று சொல்ல முடியவில்லை என்றபோதும் பார்க்கத் தகுந்த படமாக இருந்தது. பின்னணி இசையும் படத்தில் மிக மிக சொற்பம். பல காட்சிகள் இசையே இல்லாமலேயே நகர்கிறது.மிக அவசியப்பட்ட இடங்களில் மட்டும் காட்சிக்குத் தேவையான இசை சன்னமாக ஒலிக்கிறது.



ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பை விதவிதமாகச் சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கால ஓட்டத்தில் நாம் இழந்துபோனவற்றை எல்லாம் படம் நினைவுபடுத்துகிறது. நவீன வாழ்வு நம் கலாசார வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்தெடுப்பதை நயமாக எடுத்துச்சொல்கிறது. படத்தின் பூடகத் தன்மைக்காகவும் காட்சிகளின் நிதானத்துக்காகவும் அழகுக்காகவும் இந்தப் படத்தைக் காணலாம்.  திரையில் எழுதப்பட்ட கவிதை இந்தப் படம் எனலாம்.

திங்கள், மார்ச் 24, 2014

குக்கூ: மனத்தைக் கவரா குயில்


நகைச்சுவை, மசாலா படங்களுக்கு இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி இருக்கும் ஒரு எதார்த்த சினிமா முயற்சி ராஜு முருகனின் குக்கூ. எளிய மனிதர்களின் காதல் என்ற ஒருவரி கதை முழு நீளப்படமாகியிருக்கிறது. கண்பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம்.

சென்னைப் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் (தினேஷ்), கூடவே பாட்டுக் கச்சேரிகளிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரகொடி (மாளவிகா) இவரும் கண்பார்வை அற்றவர்.

வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக்கிறது இவர்களின் காதல். தமிழ் சுதந்திரகொடியைக் காதலிக்க, சுதந்திரகொடியோ கண்பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.

சாமானிய மனிதர்களின் வாழ்க்கையை முதல்படத்துக்கான கதைக்களமாக எடுத்துக்கொண்டதுக்கு ராஜுமுருகனுக்கு வாழ்த்துகள். கதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமட்டாமல், கதாபாத்திரங்கள் தேர்வு, வசனங்கள் ஆகியவற்றில் ராஜு முருகன் ஆச்சர்யப்படுத்துகிறார்.

தல, தளபதி இருக்கிற இடத்துல மஞ்சுளாவுக்கு என்ன வேலை, இப்ப சின்ன அண்ணன் தான் எல்லாம், பொம்பள வலியை முழுச புரிஞ்சவன் எவனும் இல்லை, கவர்னர் வந்தா ஆட்சியை களைச்சிடுவார்’ எனப் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது வசனங்கள்தான்.

அண்ணா ஹசாரே கூட்டத்துல பார்த்தேன், இன்னிக்கு பேஸ்புக்கல ஏகப்பட்ட லைக் விழும் என்று தற்போதைய இளைஞர்களின் சமூக சேவையை முகத்தில் அறைந்தது போல சொல்வது நச்.

வசனங்களுக்குச் சமமாக ஒளிப்பதிவும், இசையும் படத்துக்குப் பெரிய பலத்தைக் கொடுக்கிறது. கதைகளத்தைப் பின்னணி இசை மூலமாக உணர முடிகிறது. இத்தகைய உத்திகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவையே.

தினேஷ், மாளவிகாவில் ஆரம்பித்து படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபத்திரமும் ஏற்ற நடிகர்கள் நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.



எளிய மனிதர்களின் வாழ்க்கை, குத்துப்பாட்டு இல்லாதது, ஆபாச காமெடி இல்லாதது, வசனங்கள் என எத்தனையோ நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் கூட நிறைவான படத்தைப் பார்த்த திருப்தியை உணரமுடியவில்லை.

காதல், பரதேசி, வெயில் போன்ற டிரெண்ட் செட்டிங் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கு ஆசையில் உருவான படமாக உள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாகச் சொல்லப்பட்ட அதே காதல் கதை. பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள் எனப் படம் தனது இலக்கை எட்டத் தவறுகிறது.

முழுக்க முழுக்க பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது. எந்த இடத்திலும் அதிலிருந்து விலகவே இல்லை. ஆனால் அவர்களது எந்தத் துயரமும் மனதைத் தொடுமளவுக்கு காட்சிப்படுத்தப்படவில்லை. பார்வையற்றவர்கள் பற்றிய சித்திரிப்பு மிகவும் மேலோட்டமாக உள்ளது. படத்தின் நீளம் மிக அதிகம். திரைக்கதையில் திருப்பங்களை உருவாக்கும் காட்சிகளில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங். இதனால் படத்திற்கும் ரசிகர்களுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமாகவில்லை.

இரண்டாவது பாதியில் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டாலும், கொஞ்சம் இழுத்து ’ஐயய்யோ என்ன ஆகுமோ’ பார்வையாளருக்கு பதட்டத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதுவும் காதல், மூன்றாம் பிறை போன்ற படங்களை நினைவூட்டும் விதமாகவே உள்ளது. புதிதாக இல்லை. இளையராஜா பாடல்கள், நடிகர்கள் போல் வேடமணிந்து ஆடுவோர் போன்ற காட்சி சித்திரிப்புகள் தமிழ்த் திரைப்பட்டங்களில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. அதிலிருந்து மீண்டு வர வேண்டும் புதிய இயக்குநர்கள். மனதைக் கவர வேண்டிய குயில் கூவல் வெறும் சத்தமாக மட்டுமே நின்றுவிட்டது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்