இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, டிசம்பர் 22, 2019

ஹீரோ அல்ல ஜீரோ

சிறுவயது முதலே சக்திமான் மீது விருப்பம் கொண்டு சூப்பர் ஹீரோவாகும் ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). ஆனால், பிழைப்புக்காக அவர் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறார்.  கல்லூரிச் சேர்க்கை நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அதிலும் கமிஷன் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினைக் கண்காட்சிக்கு வைத்து அதனால் சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பைத் திருடிவிட்டார் எனச் சொல்லிவிடுகிறார்கள். 

அதில் மனமுடைந்த மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் சத்தியமூர்த்தி (அர்ஜுன்) இருக்கிறார். மதி தற்கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார் மகாதேவ் (அபய் தியோல்).  அபய் தியோலைப் பழிவாங்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சக்தி. அதில் அவர் வென்றாரா, எதிரிகளை ஒழித்தாரா, சத்ய மூர்த்தி எவ்வகையில் உதவினார் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ஹீரோ.

கல்விக்கு எதிரான கருத்துப் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். நமது கல்விமுறைக்கு எதிராகக் குரல் தருவதற்காகவே ஹீரோவின் திரைக்கதை பயணிக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன. சுவாரசியமற்ற சம்பவங்களாலும் காட்சிகளால் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். படம் முழுக்க அந்தரத்தில் பறப்பது போன்று எந்த ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இருக்கிறது.
திறமையிருந்தும் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களை சத்யமூர்த்தி அழைத்துவந்து படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார். புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அரசுக்கே தெரியாமல் அவர் கல்வி நிறுவனம் நடத்துகிறார் என்பதெல்லாம் காதில் சுற்றப்படும் பெரிய பூ. சத்திய மூர்த்தி மாணவர்களை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்புகிறார். அது எப்படி சாத்தியம்? அவர் நிறுவனம் நடத்துவதே தெரியாத போது என்ன அடிப்படையில் அவருடைய மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஏதாவது கண்டுபிடிப்பு வெளி உலகத்துக்கு வந்தால் அதை மோப்பம் பிடித்துவிடுகிறான் வில்லன். ஆனால், சத்திய மூர்த்தி அவனுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் செய்கிறார் என்பதையெல்லாம் நம்பும்படியாக இல்லை.  

மாணவர்களின் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அபகரித்து அவர்களை முடமாக்கிவிட்டுக் கண்டுபிடிப்புகளைக் காசாக்குகிறார் அபய் தியோல். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பே சரியாக இல்லை. அவர் யார், கல்வி நிறுவனம் நடத்துகிறாரா, எல்லா விஷயத்தையும் அறிந்து எப்படித் தடுக்கிறார்? இவை எதற்கும் பதில் இல்லை.

நல்ல மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்களிடமும் பெரிய திறமைகள் ஒளிந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால் மாணவர்கள் பெரிய அளவில் வருவார்கள். அதற்கு நமது கல்வி முறை உதவிகரமாக இல்லை. இதைச் சொல்லும் இந்தப் படம் அதை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் சொல்லவில்லை என்பது படத்தின் பெரிய பலவீனம்.
வழக்கறிஞர் ஒருவர் தான் படிக்க நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்வதாகக் கூறுகிறார். கல்வி முறை பற்றி அறிந்த ஒருவர் இதைக் கேட்டுச் சிரிக்கத்தான் செய்வார். மாணவர்களின் ரப் நோட்டில் அவர்களுடைய திறமையை அறியலாம் என்ற சாதாரணக் கருத்தை ஊதிப் பெருக்கி சூப்பர் ஹீரோவரை கொண்டு சென்றதே அபத்தம்.

சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடம் அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார். கதாநாயகி என்ற ஒருவர் வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை வைத்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இசை, பாடல்கள் யுவன் சங்கர் ராஜா. இறுதியில் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.   

கல்வி முறைக்கு எதிராகக் கருத்து சொல்வதற்கும் பெரிய கல்வி அவசியம். அது இல்லாமல் படமெடுத்தால் அது சூப்பர் ஹீரோ படமாக உருவாகாது. இப்படியான அமெச்சூர் படமாகத் தான் உருவாகும். இவன் ஹீரோ அல்ல வெறும் ஜீரோ.

வியாழன், டிசம்பர் 19, 2019

CIFF 2019: ஒரு குப்பைப் படம்

இன்று காலை 11 மணிக்கு தேவியில் X – The eXploited என்னும் ஹங்கேரி நாட்டுத் திரைப்படம் பார்த்தேன். அரசியல் தூவப்பட்ட கிரைம் திரில்லர் வகைப் படம். அடுக்கடுக்காக நடைபெற்ற பல தற்கொலைச் சம்பவங்கள் கொலை என காவல் துறை சந்தேகிக்கிறது. அதைத் துப்புத் துலக்க ஒரு பெண் அதிகாரி வருகிறார். அவருடைய கணவரும் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதுவும் ஒரு கொலை என்பது அவருக்குத் தெரியவருகிறது. இதனால் மனப் பாதிப்பு ஏற்படும் அந்த அதிகாரி அத்துடன் குற்றச் செயல்களின் பின்னணியைக் கண்டுபிடிக்கிறார். 

அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி மாற்றிக் காட்சிகளைக் கோக்கும் பாணியில் படக் காட்சிகள் வந்துசெல்கின்றன. அரசுக்கெதிராக சாதாரண மனிதர்கள் எதையும் செய்ய முடிவதில்லை என்பதையே படம் பேசுகிறது. அதிகாரிகளாலும் எதையும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம். இந்தப் படத்தின் உருவாக்கம் இதைப் பார்க்கும்படி செய்தது. 
அடுத்து கேசினோவில் Despite the Fog என்னும் இத்தாலிப் படம். முகம்மது என்னும் சிறுவன் எல்லை தாண்டிவந்துவிடுகிறான். கடலில் ரப்பர் படகு ஒன்றில் வரும்போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவனுடைய பெற்றோர் இறந்துவிடுகிறார்கள். அவனை சமீர் என்னும் இளைஞன் காப்பாற்றுகிறான். அவன் சுவீடன் செல்ல வேண்டும் எனச் சொல்வதால் சிறுவனும் அங்கே செல்ல நினைக்கிறான். இதனிடையே ஒரு கிறித்தவத் தம்பதியிடம் முகம்மது வந்துவிடுகிறான். அந்தத் தம்பதி தனது மகனை இழந்திருந்தவர்கள். எனவே அந்தப் பெண்ணுக்கு தன் மகனே மீண்டும் வந்ததுபோல் திருப்தி ஏற்படுகிறது. கிறித்தவ வீட்டில் வாழும் இஸ்லாமியச் சிறுவன் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறான், அவனால் அங்கே இருக்க முடிந்ததா என்பதைப் படம் பேசுகிறது. கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் என நம்பிச் சென்றால் படம் மிகவும் சுமார் ரகம். 

இறுதியாக கேசினோவில் இரவும் 7 மணிக்கு The Bra என்னும் மௌனப் படம். சில படங்கள் வசனமாகப் பேசிக் கொல்லும் இந்தப் படம் மௌனமாகக் கொன்றது. சரியான குப்பைப் படம். ஆனால் உலக சினிமா திரையிடலுக்குத் தைரியமாக அனுப்பியிருக்கிறார்கள். ரயில் இன்ஜின் டிரைவர் தனது இன்ஜினை ஓட்டிச் செல்லும்போது ஒருநாள் அவரது ரயிலில் பெண் ஒருவரின் மேல் உள்ளாடை மாட்டிக்கொண்டுவிடும். அது யாருக்குரியது என அவர் தேடி அலையும் அலைச்சல்தான் படம். சரியான பாடாவதிப் படம். 

CIFF 2019: மனிதரை ஆளும் ஆவணம்

இன்று (டிசம்பர் 17) தேவி தியேட்டரில் மதியம் 2 மணிக்கு Holy Boom என்னும் கிரேக்கத் திரைப்படம் பார்த்தேன். சூழல் காரணமாக வேறு நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர். அவருடைய கணவன் விபத்து ஒன்றில் இறந்துவிடுகிறான். அவனது சடலத்தை வாங்க வேண்டும் என்றால் இவரது பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அதை ஒரு குழு வைத்துக்கொண்டு தர மறுக்கிறது. கணவனின் சடலம் மருத்துவமனையில் கிடக்கிறது. சிறு குழந்தையை வைத்துக்கொண்டு அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்பது கதை. இதைத் தவிர இன்னும் சிலர் படத்தின் முக்கியப் பாத்திரங்கள். வேறு நாட்டில் அகதிகள் போல் வாழும் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பேசிய படம். 

கிரேக்கப் பெண்ணைக் காதலிக்கிறான் கறுப்பின இளைஞன் ஒருவன். அவனது சிக்கலைப் போக்கப் பணம் தேவைப்படுகிறது. காதலியும் அவனும் சேர்ந்து தேவாலயக் காணிக்கையைத் திருடத் திட்டமிடுகிறார்கள். திருடிவிட்டு வரும் வழியில் காதலன் மாட்டிக்கொள்கிறான். அவனைச் சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். அவனது ரத்தம் வழிந்தோடிய சாலையில் கிறிஸ்தவர்களின் ஆராதனைப் பவனி நடைபெறுகிறது. இப்படி வாழ்வின் அபத்தத்தைப் பேசும் படம் இது

சிறு வயதிலேயே தன் குழந்தையைப் பறிகொடுத்த முதிய பெண் ஒருவர் வருகிறார் இவர் அனைவருக்கும் உதவுகிறார். கிரேக்கப் பெண்ணுக்கும் அவருடைய காதலனுக்கு அடைக்கலம் தருகிறார். தனியே வீட்டில் அழும் குழந்தை குறித்து வருத்தம் கொள்கிறார். ஒருமுறை அந்தத் தாய் காவல் துறையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது குழந்தையின் அழுகை பொறுக்க மாட்டாமல் அதைக் கறுப்பின இளைஞன் மூலம் தூக்கிவந்து விடுகிறார் அந்த முதிய பெண்மணி. இந்த நேரத்தில் தாயின் பேச்சைக் கேட்டு குழந்தையைக் காண வீட்டுக்கு வரும் காவல் துறை அங்கே குழந்தை இல்லாததைக் கண்டு தாய் பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் என நினைக்கிறது.  

CIFF 2019: மனிதத் தவறுகள் குற்றங்களல்ல

இன்று (டிசம்பர் 16) காலையில் எந்தப் படமும் பார்க்கவில்லை. மதியம் 2:45 மணிக்கு கேசினோவில் Zero Floor என்னும் ஈரானியப் படம் பார்த்தேன். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன் இறந்துவிடுகிறான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் விவாகரத்துப் பெற்றவர்கள். அப்பா தன் தம்பியுடனும் அம்மா தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் வாக்குவாதங்களும் சிக்கல்களும் தான் படம். அதை மீறி அந்தப் பையனை எப்படிப் பெற்று இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதையே திரைக்கதை சித்தரித்திருந்தது. 
அடுத்ததாக, Irina எனும் பல்கேரிய நாட்டுத் திரைப்படம். உணவகம் ஒன்றில் பணிபுரியும் பணிப்பெண். கணவன் ஒரு சிறு குழந்தை ஆகியோரைக் கொண்ட சிறு குடும்பம். அவனுடனேயே அவளுடைய தங்கையும் வசிக்கிறாள். அவள் மட்டுமே சம்பாதிக்கிறாள். அவள் உணவகத்தில் மேற்கொள்ளும் சிறு சிறு திருட்டால் வேலை போய் விடுகிறது. பணத்துக்காக வாடகைத் தாயாகிறாள். ஒரு செல்வந்தத் தம்பதியின் குழந்தையைச் சுமக்கிறாள். மனிதர்கள் அவர்தம் நிறைகுறைகள் எனப் படம் செல்கிறது. 

இறுதியாக Summer of Changsha என்னும் சீனப் படம் பார்த்தேன். துப்பறியும் அதிகாரி இருவர். ஒரு கொலை நடக்கிறது. அதைத் துப்புத் துலக்கும்போது அது ஒரு மருத்துவரின் சகோதரன் என்று தெரியவருகிறது. அந்த மருத்துவரின் கனவில் அந்தச் சகோதரன் வந்து தன் உடன் எங்கெங்கு கிடக்கிறது என்பதைச் சொல்கிறான். கொலையாளி யார் எனத் துப்புத் துலக்குகிறார்கள். இதற்கிடையே மருத்துவருக்கும் துப்பறியும் அதிகாரிக்கும் காதல் வருகிறது. அவருடைய காதலி ஏற்கெனவே இறந்துவிட்டாள். மருத்துவரின் குழந்தையும் இறந்திருக்கும். இருவருக்குமான குற்றவுணர்வு காதல் என்று படம் சென்றது. மிக நிதானமான, சுமாரான படம்.  

புதன், டிசம்பர் 18, 2019

CIFF 2019: அவனுக்குப் பிறக்காத அவனுடைய மகன்

இன்று (டிசம்பர் 15) முழுக்க கேசினோ தியேட்டரிலேயே பொழுதை ஓட்டியாகிவிட்டது. காலையில் முதலில் Alice என்னும் படம் பார்த்தேன். பிரெஞ்சுப் படம். கணவனின் துரோகத்தை அறிந்த மனைவி தானும் அப்படியொரு தகாத பாதைக்குச் செல்லும் சூழலை எதிர்கொண்ட படம். தனது பணத்தை எல்லாம் ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்ட கணவனால் குடும்பமே மூழ்கிவிடும் சூழல் வந்து வாய்க்கிறது. கணவனும் எங்கேயோ சென்றுவிட்டான். அவளுடைய பெற்றோரும் உதவ முடியாத நிலையில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். அந்தத் தொழிலில் அவளுக்கு ஒரு தோழியும் கிடைக்கிறாள். அந்தத் தோழியிடம் தான் பணத்தை முழுவதும் கணவன் இழந்தான் என்பது இறுதியில் தெரிகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் மனைவியைத் தேடி கணவன் வருகிறான். அவனுக்கு மனைவியின் செயல்பாடுகளும் தெரியவருகின்றன. இருவருமே ஒரு புதிய வாழ்க்கையை வாழ முடிவுசெய்துகொள்ளலாம் என்கிறான் கணவன். அந்த மனைவியோ அவளுடைய தோழியுடன் சென்று புதிய வாழ்வை அமைத்துக்கொள்கிறாள். 
அடுத்ததாக Just 6.5 என்னும் ஈரான் திரைப்படம். போதைப் பொருள் கடத்தல் தான் படத்தின் அடிப்படை. முக்கியப் போதைப் பொருள் கடத்தல்காரரைத் தேடி ஓடும் காவல் துறையினர் இருவர் செல்கிறார்கள். முக்கிய நபருக்குப் பதில் வேறொரு நபர் கிடைக்கிறார். அவருக்கே இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதிகார மட்ட ஊழல், நேர்மையற்ற நீதி எனப் படம் செல்கிறது. வசனம் வசனம் வசனம் எனப் பேசித் தீர்க்கிறார்கள். சப் டைட்டிலை வைத்துக்கொண்டு பெரிதாகப் படத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு சப் டைட்டில் தொடர்ந்து திரையில் தென்பட்டுக்கொண்டேயிருந்தது. 
அடுத்து, Charcoal என்னும் ஈரானியத் திரைப்படம். மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய காரணத்துக்காக நகைகளைத் திருடி சிறைக்குச் சென்றுள்ள மகன், அவருடைய தந்தை இருவரும் மையப் பாத்திரங்கள். அவர் கரி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய எதிரி நகைக்கடைக்காரர். மகனையும் குடும்பத்தையும் காப்பாற்ற கடத்தலில் ஈடுபட வேண்டிய சூழலையும் எதிர்கொள்கிறார் அந்தத் தந்தை. படத்தின் தொடக்கத்தில் மகனைச் சிறையிலிருந்து அழைத்துவரும் தந்தை இறுதியில் அவரே சிறைக்குச் சென்றுவிடுகிறார். அத்துடன் படம் நிறைவுபெறுகிறது. 
இறுதியாக, A Son என்னும் துனிசியா நாட்டுப் படம். வேறுபட்ட கதைக் களம். மகிழ்ச்சியுடன் மனைவி மகனுடன் காரில் செல்கிறார் அவர். திடீரெனப் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாகப் புறப்பட்டுவரும் தோட்டா ஒன்று மகனைப் பதம் பார்த்துவிடுகிறது. உயிருக்குப் போராடும் மகனுக்கான சிகிச்சையில் அவனது கல்லீரலை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த பரிசோதனையில் அந்த மகன் அவருக்குப் பிறக்கவில்லை என்ற உண்மை தெரிகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவியில் அலுவலக நபர் ஒருவர் மூலம் அந்தக் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் சூழலை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படம். இதனிடையே லிபியா இரக்கமற்ற போர் ஆகியவை குறித்த சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தீவிரமான படம். பார்த்த ஓரிரு நல்ல படங்களில் இதுவும் ஒன்று.    

செவ்வாய், டிசம்பர் 17, 2019

CIFF 2019: சடலத்தைப் புதைப்பது எளிதல்ல

இன்று (டிசம்பர் 14) காலை தேவியில் 11:00 Sibyl படம் பார்த்தேன். உளவியல் மருத்துவர் ஒருவர் அவரிடம் ஆலோசனைக்காக வரும் நடிகை, அவரது காதல், காதலன், மருத்துவரின் காதல், குடும்பம் எனச் செல்லும் படம் வாழ்க்கை குறித்துப் பேசியது. நடிகர் ஒருவரால் கர்ப்பமான நடிகை கர்ப்பத்தைக் கலைக்கவா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அது குறித்த ஆலோசனைக்காகத் தான் மருத்துவரை நாடுகிறார். மருத்துவர் ஓர் எழுத்தாளரும்கூட. தன்னிடம் ஆலோசனைக்காக வருபவர்களிடம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் நாவலொன்றை எழுதுகிறார். நடிகைக்கு ஆலோசனை தரத் தொடங்குபவர் ஒரு கட்டத்தில் முழுவதும் நடிகை போலவே மாறிவிடுகிறார். 
நடிகை முழுவதுமாக மருத்துவரின் ஆலோசனையை நாடியே இருக்கிறார். தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்குக்கூட மருத்துவரை வரவழைத்துக்கொள்கிறார். இயக்குநருக்குப் பதில் மருத்துவரே காட்சிகளை விளக்குகிறார். படமும் எடுத்து முடித்துவிடுகிறார்கள். நடிகையின் காதலனுடன் மருத்துவருக்கு உறவு ஏற்படுகிறது. இப்படி என்னென்னவோ நடைபெறுகிறது. நவீன நகர வாழ்க்கையின் மனிதர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களைப் பேசுகிறது படம். 

அடுத்ததாக அண்ணா தியேட்டரில் The Silence of Om என்னும் படம் பார்த்தேன். ஒரு கேங்ஸ்டரின் மகன் ஒரு குற்றத்தில் சிக்கி சிறைக்குச் செல்கிறான். சிறையில் அவனுடன் இருவர் இருக்கிறார்கள். அதில் ஒருவன் தன் தகப்பனைக் கொன்று விட்டு மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறான். தந்தையைக் கொன்றுவிட்டாலும் சிறையில் தான் இறந்தபின்னர் தந்தையைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறான். கேங்க்ஸ்டரின் மகனுக்கும் தந்தைமீதான பிரியம் புரிகிறது. சிறுவயதிலிருந்தே அவனை அடித்துக்கொண்டே இருப்பவர் அவர். அவன் உடம்பில் டாட்டூ குத்திக்கொள்வது அவருக்குப் பிடிக்காது. அவன் வெளியில் வந்த பின்னர் அவனுடைய காதலி அந்த டாட்டூவைப் பார்க்க பிரியப்படும் கணத்தில் விழுந்து உயிரை விட்டுவிடுகிறாள். ஆசையை விட்டுவிடுவதே நல்லது என்னும் பௌத்தக் கருத்தை உணர்த்துகிறது படம். 

இறுதியாக தேவிபாலா திரையரங்கில் Amare Amaro என்னும் படம் பார்த்தேன். இதில் இறந்துபோன தன் சகோதரனைப் புதைக்க ஒரு தம்பி மேற்கொள்ளும் முயற்சிகளே படம். இதில் நிலக் காட்சிகள் அழகாக இருந்தன. இறந்த வீடு மூன்று நாட்களுக்குத் திறந்தே இருக்க வேண்டும் போன்ற பண்பாட்டு அம்சங்கள் இருந்தன. அதிகாரம் மிக்க நகரத்தின் தலைவரான பெண்ணின் மகளை அந்தத் தம்பி காதலிக்கிறான். இறுதியில் அண்ணனைப் புதைக்கும் முயற்சியில் அந்தத் தம்பியும் அவனுடைய காதலியும் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்துவிடுகிறார்கள். அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலையைப் படம் குறிப்புணர்த்துகிறது. 

ஞாயிறு, டிசம்பர் 15, 2019

காளிதாஸ்: காதலித்தால் போதுமா?

காதலித்து மணந்துகொண்டாலும் தன் முழு நேரத்தையும் காவல் துறைக்கு ஒதுக்கிவிட்ட ஆய்வாளர் காளிதாஸ் (பரத்). எப்போதும் வேலை வேலை என்று அலைந்து வீட்டைக் கவனிக்காததால் அவருடைய மனைவி வித்யாவுக்கு (ஆன் ஷீத்தல்) பெருங்கோபம். இந்தச் சூழலில் அவருடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் உயரமான மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். இந்த வழக்கை விசாரிக்க துணை ஆணையர் ஜார்ஜ் (சுரேஷ் மேனன்) வருகிறார். காளிதாஸ் இறந்த பெண்கள் தற்கொலைசெய்துகொண்டார்கள் என்கிறார். சுரேஷ் மேனன் அவை கொலையாகவும் இருக்கலாம் என்கிறார். மர்ம மரணங்கள் தொடர்கின்றன. அவை தற்கொலையா, கொலையா, இவற்றின் பின்னணி மர்மம் என்ன? காளிதாஸுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையிலான பிணக்கு தீர்ந்ததா போன்ற கேள்விகளுக்கு விடைகளாக விரிகிறது திரைக்கதை.
இதைப் போன்ற உளவியல்ரீதியான தொடர் கொலைப் படங்கள் பல வந்துவிட்டன. என்றபோதும், இறுதிவரை படத்தை இயன்ற அளவு தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில். ஜார்ஜ் கதாபாத்திரம் வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் போல் அல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறது. தனிமையின் துயரை வெளிப்படுத்தும் வகையில் வித்யா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான புலனாய்வுப் படம் போல் அல்லாமல், காவல் துறையினரின் கடமை உணர்வு குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் சிக்கல்களையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. காவலர் சிங்க துரையிடம் வித்யா உரிமையுடன் காளிதாஸ் குறித்துக் கோபப்படுவது, ஜார்ஜ் காளிதாஸ் வீட்டுக்கு வருவது போன்ற காட்சிகள் அழகு.

நாமெல்லாம் இங்க என்ன பெஞ்சு தேய்க்கவா உக்காந்திருக்கோம் என்று சுறுசுறுப்புடன் காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் பணியாற்றியபோதும், அந்தக் கதாபாத்திரத்தை முடிந்த அளவு ஒழுங்காகச் செய்திருக்கிறார் என்ற போதும் அவரை ஏனோ காக்கி உடையில் பார்க்கவே முடியவில்லை.  அலுவலகப் பணி தனிப்பட்ட நேரத்தையும் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க இயலாமலும், மனைவியின் துயரைப் போக்க இயலாமலும் உருவாகும் தவிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆன் ஷீத்தல் அழகாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திர உருவாக்கமே சற்று மாறுபட்டதாக இருக்கிறது.  அந்த மாறுபாடான நடத்தைக்குத் தேவையான நடிப்பை இயல்பாக வழங்கியிருக்கிறார். ஆசை ஆசையாகக் குழந்தையுடன் கொஞ்சுவது, மேல் மாடியில் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசனுடன் நேரத்தைச் செலவழிப்பது, கணவன் மீது உரிமையுடன் கோபம் கொள்வது என எல்லாக் காட்சிகளிலும் கவர்கிறார்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தாலும் சுரேஷ் மேனன்தான் படத்தை முழுவதும் கூட்டிச் செல்கிறார். காளிதாஸ் நாயகன் என்றபோதும் சுரேஷ் மேனனுக்கு முதன்மை தரப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணியாற்றியதால் அனுபவப் பட்டிருக்கும் நிதானத்தை அழகாகக் காட்டியுள்ளார். தேவையற்ற பதற்றம் எதுவுமின்றி வழக்கை விசாரித்துச் செல்லும் தன்மை ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.   

சுரேஷ் பாலா ஒரு திரில்லர் படத்துக்கான அமானுஷ்ய தன்மையுடன் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார். பறவைக் கோணங்களில் வரும் பல காட்சிகள் அழகாக உள்ளன. மழையில் நனைய வைத்தது ஒரு நாள் பாடல் அழகு. பின்னணி இசை பெரிய அளவில் உறுத்தலில்லை.   

போலீஸ்காரனுக்கும் லப் டப் லப் டப்புன்னு அடிக்குதுன்னு பப்ளிக்குகுத் தெரியட்டுமே. ஒருத்தர சாவடிக்கிறது அவருக்குக் கொடுக்குற தண்டனைன்னு நினைக்குறோம் ஆக்சுவலி அது அவருக்குக் கொடுக்கிற ஃப்ரீடம். தப்பு சரியெல்லாம் அவங்கவங்க மனசப் பொறுத்திருக்கு. வேலை கொடுத்தவண்ட்ட பம்மி பம்மிப் பேசுற வாழ்க்கை கொடுத்தவட்ட எரிஞ்சு எரிஞ்சு விழுற போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

விசாரணையின்போது, பெயரைச் சீருடையில் அணிந்திருக்கும் பாதுகாவலரிடம் பெயர் கேட்பதைக் கவனித்து நீக்கியிருக்கலாம்.  வித்யா பற்றி முழுவதும் அறிந்த பரத் அவளுக்கு முறையாக நேரம் ஒதுக்காதது சற்று உறுத்தல். எந்நேரமும் மொபைலில் மூழ்கிக் கிடப்பது, மனைவியைச் சரியாகக் கண்டுகொள்ளாத கணவர் எனச் சில அம்சங்களை ஒன்றிணைத்து எதிர்பாராத திருப்பங்களுடன் அமைந்திருக்கிறான் காளிதாஸ். இப்படியான படங்கள் புதிதில்லை என்பதால் காளிதாஸைப் பெரிய அளவுக்குக் கொண்டாட முடியவில்லை.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்