இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2015

உறைய வைக்கும் கதையில் கான் கேர்ள் நாயகி!

அமெரிக்கத் திகில் படமான ‘ரிடர்ன் டு சென்டர்’ இங்கிலாந்தில் மே மாதமே வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் வரும் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக இருக்கிறது. ஒரு சிறு நகரத்தில் மிராண்டா வெல்ஸ் நர்ஸாகப் பணியாற்றிவருகிறார். இயல்பான வாழ்க்கை நடத்திவரும் அவருக்குத் தோழி ஒருவரின் தூண்டுதல் மூலமாக விநோதமான ஆசை ஒன்று வருகிறது. அறிமுகமற்ற ஒருவருடன் டேட்டிங் போக வேண்டும் என முடிவுசெய்கிறார். கெவின் என்னும் நபரையும் சந்திக்க முடிவுசெய்து டேட்டிங்குக்கு வரச் சொல்கிறார்.

டேட்டிங் நாளன்று மிராண்டா கிளம்பிக்கொண்டிருக்கிறார். அப்போது வெளியே சத்தம் கேட்கிறது. சென்று பார்க்கிறார். ஒரு நபர் நிற்கிறார். அவர் தான் கெவின் என நினைத்து உள்ளே அழைத்து வருகிறார். ஆனால் வந்தவரின் நடவடிக்கைகள் விநோதமாக இருக்கின்றன. அவரைத் தவிர்க்கும் முன்னர் அந்த நபரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார் மிராண்டா. பின்னர் அந்த நபர் ஓடி ஒளிந்துவிடுகிறார்.

இப்போது வேறொருவர் வருகிறார். அவர்தான் கெவின். மிராண்டா டேட்டிங்குக்கு ஒப்புதல் தந்த நபர் என்பது புரிகிறது. முதலில் வந்த வில்லியம் ஃபின் என்பவரை போலீஸ் கைது செய்து சிறையிலடைக்கிறது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப மிராண்டா முயல்கிறார். இதனிடையே சிறையில் இருக்கும் வில்லியமுக்கு மிராண்டா கடிதம் எழுதுகிறார். ஒவ்வொரு முறையும் கடிதம் திரும்பி வருகிறது. விடாமல் கடிதத்தைத் தொடர்ந்து அனுப்புகிறார் மிராண்டா. இறுதியில் வில்லியம், மிராண்டா இருவருக்குமிடையே நட்பு உருவாகிறது.

சிறையிலிருந்து வெளியே வரும் வில்லியம் அடிக்கடி மிராண்டாவின் வீட்டுக்கு வருகிறார். இருவருக்குமிடையே விளையாட்டுக் காதல்கூட ஏற்படுகிறது. வீட்டுக்கு வரும் வில்லியமை வீட்டுக்குள் மிராண்டா அனுமதிப்பதில்லை. ஒரு நாள் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது பார்வையாளர்களை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது என்ன என்பதே படத்தின் சுவாரஸ்யமான திருப்பம்.

கான் கேர்ள் படத்தில் அசத்திய ரோஸமண்ட் பைக் மிராண்டாவாக நடித்துள்ளார். ஹல்க், ஹோட்டல் ருவாண்டா போன்ற படங்களால் அறியப்பட்டிருக்கும் நிக் நால்டே மிராண்டாவின் தந்தையாகவும் வில்லியமாக ஷைலோ ஃபெர்னாண்டஸும் நடித்திருக்கிறார்கள். உணர்வும் திகிலும் அலைமோதும் படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கானது இந்தப் படம்.

ஆகஸ்ட் 14 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

நகரத்தில் மாட்டிக்கொண்ட ஆட்டின் சாகசங்கள்

‘ஷான் த ஷீப்’ என்னும் பெயரில் ஒரு தொலைக்காட்சித் தொடர் வந்தது. அதை அடிப்படையாகக் கொண்டே ‘ஷான் த ஷீப்’ என்னும் இந்த அனிமேஷன் காமெடிப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரிச்சர்டு ஸ்டார்ஜாக், மார்க் பர்ட்டன் ஆகியோர் இணைந்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள்.

ஆர்டுமேன் அனிமேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. கடந்த ஜனவரியில் சன் டான்ஸ் திரைப்பட விழாவில் உலக பிரிமியராக இந்தப் படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கடந்த பிப்ரவரி மாதமே படம் வெளியாகிவிட்டது. அமெரிக்காவில் ஆகஸ்ட் 7 அன்று வெளியாக விருக்கிறது.

ஷான் என்பது துடுக்குத்தனமான ஒரு ஆடு. அது தனது மந்தையுடன் ஒரு பண்ணைவீட்டில் வசித்துவருகிறது. மந்தை வாழ்க்கையில் சலிப்புற்ற அந்த ஷான் என்னும் ஆடு எங்கேயாவது ஜாலியாக வெளியே செல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறது. அதற்குப் பண்ணை உரிமையாளர் அனுமதிக்க மாட்டார் என்பதால் அவரைத் தந்திரமாக நகருக்கு அனுப்பிவிடுகிறது.

அங்கே நேர்ந்த விபத்தால் பண்ணை உரிமையாளருக்கு நினைவு தப்பிவிடுகிறது. பின்னர் அவர் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையே, பண்ணை உரிமையாளர் இல்லாமல் தங்கள் வாழ்க்கை நலமாக அமையாது என்பதை ஷான் உணர்ந்துகொள்கிறது. உரிமையாளரைத் தேடி நகருக்கு வருகிறது.

ஷான் ஆட்டைத் தொடர்ந்து மந்தை ஆடுகளும் வந்துவிடுகின்றன. இது ஷானுக்குத் தெரியாது. இப்போது நகரத்தில் அவை என்னவிதமான சிக்கல்களை எதிர்கொள்கின்றன? உரிமையாளரை ஷான் சந்தித்ததா? அவருக்கு ஷானை அடையாளம் தெரிந்ததா? மீண்டும் அந்த ஆடுகள் மந்தைக்குத் திரும்பினவா? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் நீங்கள் ‘ஷான் த ஷீப்’ படத்தைப் பார்க்க வேண்டும்.

தமிழ்க் குழந்தைகளுக்கு க்ளே மாடல் கதாபாத்திரமாக அறிமுகமான ஷான் ஆட்டின் சுட்டித்தனமான நடவடிக்கைகளும் குறும்புகளும் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்ட வண்ணமயமான கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப்போட்டுவிடும்.

ஜூலை 31 தி இந்து நாளிதழில் வெளியானது

ஞாயிறு, ஜூலை 26, 2015

எழுந்து வரும் கடந்த காலம்!-

அந்தச் சிறுமிக்கு அப்போது ஏழு வயது. ஓரிரவில் அவரது பண்ணைவீட்டில் அவருடைய அம்மாவும் சகோதரிகளும் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். கொலை செய்தவரென அந்தச் சிறுமி சொந்தச் சகோதரனையே நீதிமன்றத்தில் கைகாட்டுகிறாள். 16 வயது நிரம்பிய அவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. தன் வாழ்வின் இருள் பகுதியான அந்த இரவைத் திரும்பிப் பார்க்கவே இல்லை அந்தச் சிறுமி.

ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சந்திக்கும் த கில் க்ளப் என்னும் அமெச்சூர் டிடெக்டிவ் ஏஜன்சி அந்தச் சிறுமியின் சகோதரன் ஒன்றுமறியாதவன் என்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் அதை நிரூபிப்பதாகவும் சொல்கிறது. அவர் அந்த இரவைத் திரும்பிப் பார்க்கும் அவசியம் வருகிறது. கொலைகாரன் தன் சகோதரன் இல்லையோ, அவன் ஒன்றும் அறியாதவனோ எனும் சந்தேகம் எழுகிறது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆவலால் மீண்டும் துயரம் நிறைந்த அந்த இரவுக்குப் பயணப்படுகிறார். அந்த இரவில் நடந்த மர்மம் என்ன? அவர் பார்த்தது என்ன? பார்க்காதது என்ன? இவை அனைத்தையும் சுவாரசியமான காட்சிகளாக்கினால் கிடைக்கும் திகில் படமே டார்க் ப்ளேசஸ்.

ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த கான் கேர்ள் படத்தின் கதையை எழுதிய கில்லியன் ப்ளைன் தான் இப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார். கில் பக்கே ப்ரென்னர் என்னும் பிரெஞ்சு இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்; படத்தின் திரைக்கதையையும் இவரே எழுதியிருக்கிறார். சார்லிஸ் தெரோன், கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ், நிக்கோலஸ் ஹோல்ட், ஸ்டெர்லிங் ஜெரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே ஏப்ரல் மாதமே இந்தப் படம் பிரான்ஸில் வெளியாகிவிட்டது. நிகழ்காலம் இறந்த காலம் எனப் படத்தின் திரைக்கதை மாறி மாறிப் பயணித்து ரசிகர்களிடம் டென்ஷனை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. ரசிகர்களுக்குச் சரியான திகில் விருந்தாக டார்க் ப்ளேசஸ் இருக்கும் என்னும் எண்ணத்தை இப்படத்தின் டிரெயிலர் ஏற்படுத்துகிறது. படமும் அப்படியே இருக்குமா என்பதை ஆகஸ்ட் 7 அன்று தான் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அன்று தான் டார்க் ப்ளேசஸ் வெளிச்சத்துக்கு வருகிறது.

ஜூலை 24 தி இந்து நாளிதழில் வெளியானது

திங்கள், ஜூன் 15, 2015

காக்கா முட்டை

அக்னிக் குஞ்சு பொறித்த காக்கா முட்டை



நமது பண்பாட்டை விட்டு நாம் விலகும்போது எதிர்கொள்ள நேரும் துயரங்களைச் சூசகமாகச் சுட்டுகிறது காக்கா முட்டை. சுற்றுச் சூழல் தினமான ஜூன் 5 அன்று வெளியான இப்படம் எளிய மனிதர்கள் மீதான பரிவையும் அன்பையும் அக்கறையுடனும் கலைநயத்துடன் வெளிப்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் தான் சொல்ல விரும்பியவற்றைப் படமாக்கியுள்ள விதத்தால் அவை நீர் மேல் மிதக்கும் பனிக்கட்டிகளாக அல்லாமல் தெள்ளிய நீரோடையின் அடியில் தென்படும் கூழாங்கற்களாகக் கிடக்கின்றன. திருப்பாச்சி அரிவாளோடு அறிமுகமாகும் இயக்குநர்கள் மலிந்திருக்கும் சூழலில் திரைப்பட அறிவால் வென்றுள்ளார் இந்த மதுரைக்காரர். சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்கள் குறித்துப் படமெடுத்தால் வட சென்னைக்குப் படையெடுப்பதுதான் நம் இயக்குநர்கள் வழக்கம். ஆனால் மணிகண்டனின் தேர்வோ தென்சென்னைப் பகுதியான சைதாப்பேட்டை.

அதன் அருகே 5 ஏக்கர் பரப்பில், 400 குடும்பங்கள் வசிக்கும் திடீர் நகர் என்னும் குப்பமே படத்தின் களம். அதன் மையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வீட்டைச் சேர்ந்த சின்ன காக்கா முட்டை. அவனுடைய அண்ணன் பெரிய காக்கா முட்டை. இந்தக் குடும்பத்தை வைத்துக்கொண்டுதான் உலகமயமாக்கலின் தந்திரக் கண்ணிகளைப் புலப்படுத்துகிறார் மணிகண்டன். தனிநபர் யாரையும் இயக்குநர் குற்றப்படுத்தவில்லை. ஆனால் அவர்களை இயக்கும் அமைப்புகள் எத்தகையவையாக உள்ளன என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.


தற்காலச் சூழலில் நேர்மையின் அபத்தத்தைச் சொன்னது 2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’. ஆனால் ‘காக்கா முட்டை’ என்றென்றைக்குமான நேர்மையின் பக்கம் சாய்கிறது. நேர்மை காலாவதியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் நேர்மையைத் தூக்கி நிறுத்தியுள்ளார் இயக்குநர். தற்கால அரசியல் தலைவர்களின் நேர்மையோடு ஒப்பிட்டால் காக்கா முட்டை சகோதரர்களும் அவர்களுடைய அம்மாவும் எவ்வளவு நேர்மையானவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ரயிலில் செல்பவரின் செல்போனைத் தட்டிப் பறிக்க முயல்கிறான் பெரிய காக்கா முட்டை. ஆனால் அது அவனால் முடியவில்லை. அவனது நேர்மை அவனைத் தடுத்துவிடுகிறது. அதே சமயம் மனித வாழ்வியலுக்குத் தேவையான தந்திரமும் அவனிடம் இருக்கிறது. காக்காய்க்குச் சோறு வைத்து அதன் கவனத்தைத் திசை திருப்பி அதன் முட்டையைத் திருடிக் குடிக்கிறான். அதை அவன் ஆயாவும் புன்னகையுடன் அங்கீகரிக்கிறாள்.

சமூகத்தின் இரு வேறு பிரிவுகளில் வசிக்கும் சிறுவர்கள் வாழ்க்கையை இயக்குநர் அவர்களின் பண்புநலன்களுடன் அழகாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். சின்ன காக்கா முட்டையும் பெரிய காக்கா முட்டையும் பணக்காரச் சிறுவனான லோகேஷை எப்போதும் வேலிக்கு வெளியே நின்றே சந்திக்கிறார்கள். லோகேஷை அவன் தந்தை பராமரிக்கிறார். சிறுவர்களைத் தாய் பராமரிக்கிறாள். லோகேஷ் வீட்டு நாயின் விலை ரூ. 25,000. ஆனால் 30,000 ரூபாய் இருந்தால் சிறையில் இருக்கும் காக்கா முட்டையின் அப்பா வெளியே வந்துவிடுவார்.


லோகேஷ் உண்மையான வாட்ச் அணிந்திருக்கிறான். ஆனால் சின்ன காக்கா முட்டைக்குக் கிடைப்பதோ பொம்மை வாட்ச். பணக்காரச் சிறுவர்களுக்கு சல்யூட் அடிக்கிறான் பீட்சா கடை செக்யூரிட்டி; கடையின் சிப்பந்தியோ அவர்களிடம் பணிவு காட்டுகிறான். ஆனால் பீட்சா வாங்கப் பணத்துடன் சென்ற பெரிய காக்கா முட்டைக்குக் கிடைத்ததோ பலமான அடியும் அவமானமும். பீட்சா சாப்பிடும் கனவு இருந்தாலும் லோகேஷ் தரும் எச்சில் பீட்சாவைச் சாப்பிடப் பெரிய காக்கா முட்டைக்குத் தன்மானம் இடம்தரவில்லை. இப்படியான இடங்களில் இயக்குநரின் ஆழ்மனம் எளிய மனிதர்களின்பால் சாய்வது தெளிவாகிறது.

மரம் வெட்டப்படும் காட்சி தேர்ந்த சிறுகதைக்கு இணையானது. சிறுவர்கள் ஆசையாய் விளையாடும் மைதானம் அது. அங்கே உள்ள பெரிய மரத்தில் காக்கா கூடு கட்டியுள்ளது. பீட்சா ஸ்பாட் அமைக்க அந்த இடத்தை விலைக்கு வாங்கிவிடுகிறார் பெரிய மனுஷனான சிவசிதம்பரம். சோகமாகப் பார்க்கும் சிறுவர்கள், கா… கா… எனக் கரைந்தபடி மரத்தின் மேலே வட்டமிடும் காக்கைகள், இதைப் பற்றிய கவலையற்று மரத்தை அறுத்துப் போடும் இயந்திரத்தின் ராட்சத பிளேடு ஆகிய ஷாட்கள் உதவியுடன் நெடுதுயர்ந்த நின்ற அந்த மரம் தடாலெனத் தரையில் விழவைக்கப்படுகிறது.


அந்த இழப்பு புரியாமல் மரம் விழுந்த பின்னர் கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள் சிறுவர்கள். இனிமேல் காக்கா முட்டையே குடிக்க முடியாது போடா என ஒருவன் கிண்டலடிக்க, “வெளையாட மட்டும் முடியுமா?” எனக் கேட்கிறான் பெரிய காக்கா முட்டை. “ஒரே நிமிஷம்தான் ஆயா ‘கொர்ர்’ருன்னு அறுத்துத் தள்ளிட்டாங்க” என்று பெரிய காக்கா முட்டை ஆயாவிடம் விசனப்படுகிறான். சின்ன காக்கா முட்டையோ “காக்கா நைட்லாம் எங்கடா போகும்?” என அப்பாவியாக வினவுகிறான். இந்தக் காட்சி, பீட்சாவுக்கு மாற்றாக ஆயா தோசை சுடும் காட்சி போன்றவை இயக்குநரின் படைப்பூக்கத்துக்குச் சான்றுகள்.

படத்தின் எந்த ஒரு ஷாட்டும் அநாவசியமானது என்று ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செய்தியைத் தாங்கியிருக்கின்றன. மறைந்த படத் தொகுப்பாளர் கிஷோரின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு படத் தொகுப்பில் பளிச்சிடுகிறது. சின்ன காக்கா முட்டை இரவில் தூக்கத்தில் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தைப் “பெரிய மனுஷனாயிட்டா நிறுத்திறப்போறான்…” என்கிறாள் ஆயா. அவள் இறந்த அன்று இரவில் சின்ன காக்கா முட்டை மூத்திரம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுகிறான். அவன் “பெரிய மனுஷனாயிட்டான்” என்கிறான் பெரிய காக்கா முட்டை. இண்டர் கட்டில் ஆயா சொன்ன ஷாட் வரவில்லை. அதே போல் இறுதிக் காட்சியிலும் ஆயா தோசை சுடும் ஷாட் வரவில்லை. ஆனால் பார்வையாளர் மனதில் அவை தோன்றிவிடுகின்றன.


பழரசம் கதாபாத்திரத்துக்கும் சிறுவர்களுக்குமான பிணைப்பு நெகிழ்ச்சியானது. தான் நிறைய சம்பாதிக்கும்போது பழரசத்துக்கும் பணம் தர வேண்டும் என்கிறான் சின்ன காக்கா முட்டை. தந்தை எதற்காகச் சிறையிலிருக்கிறார் என்பதே சிறுவர்களுக்குத் தெரியவில்லை. இது குறித்துப் பழரசம் கேட்கும் காட்சியில் “உனக்கெதுக்குப் பழரசம்”னு பேரென்று படக்கெனச் சின்ன காக்கா முட்டை கேட்கிறான். இது பதிலுக்கான கேள்வி அல்ல. இந்தக் கேள்வியே ஒரு பதில்.

“எந்த மொகரக் கட்டைக்கும் மதிப்பு, போட்டுருக்கிற சொக்காய வச்சுத்தானாம்”, “இல்லாதவங்க வீட்டு முன்னாடி கடையைப் போட்டு உசுப்பேத்தினு” போன்ற வசனங்கள் எளிமையானவை என்றாலும் உக்கிரமானவை.

குப்பத்தில் சிறு சிறு ஏமாற்று வேலைகளைச் செய்து பிழைத்து வருகின்றனர் ரமேஷ் திலக்கும் யோகி பாவும். ‘எத்தித் திருடும் அந்தக் காக்காய் அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா’ எனும் பாரதியின் வரிகளைத்தான் நினைவுறுத்துகிறார்கள். அவர்களை எம்.எல்.ஏ. கமிஷன் தராமல் ஏமாற்றுகிறான். வட்டிக்காரன் பணத்தைப் பிடுங்கிக்கொள்கிறான். போதாக்குறைக்கு டாஸ்மாக் வேறு அவர்கள் பணத்தைப் பங்குபோடுகிறது. சிறுவர்கள் அடி வாங்கும் காட்சி மூலம் சம்பாதிக்கலாம் என்று முயலும்போதும் செய்தி அலைவரிசை அவர்களை முந்திக்கொள்கிறது. சின்ன காக்கா முட்டையையும் பெரிய காக்கா முட்டையையும் ஓரத்தில் ஒதுங்கிப்போக, செய்தியாளர் அவர்கள் பற்றி முழங்கும் காட்சி, ஊடகத்துக்கும் உண்மைக்குமான இடைவெளியை வெட்ட வெளிச்சமாக்குகிறது.


மிகையற்ற நடிப்பு, தெளிவான திரைக்கதை போன்ற அம்சங்களைக் கொண்ட இப்படம் தேசிய விருதுக்கான முழுத் தகுதி பெற்றது. அதே நேரத்தில் விருதுக் குழு எவ்வளவு தட்டையானது என்பதன் அடையாளம் இதற்குக் கிடைத்த சிறந்த குழந்தைகள் படத்துக்கான விருது. சமூக விழிப்புணர்வு கொண்ட, சமகால அரசியலை விமர்சிக்கிற ஒரு படத்தை, இது குழந்தைகள் படம் என்று மட்டும் புரிந்துகொள்வது சிறுபிள்ளைத் தனமானது.

தி இந்துவின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் ஜூன் 12 அன்று வெளியான கட்டுரை இது.

திங்கள், மே 11, 2015

எது நடந்ததோ . . .


பெரு நகரத்தில் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களில் வசித்துவரும் நவீன மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தனக்கு வாய்த்திருக்கும் குறுகிய கால அவகாசத்தில் இக்குறும்படம் அழகியல் மிளிரக் காட்சிப்படுத்துகிறது. இவற்றின் வாயிலாக அவர்களுக்கேற்படும் அகச் சிக்கல்களைக் காட்சிகளின்றி உணர்த்திவிடுகிறார் இயக்குநர் அருணிமா ஷர்மா. ஏறக்குறைய 35 பாவங்களை வைத்துக்கொண்டு சுமார் 17 வருடங்களைத் தொலைக்காட்சி நடிப்பில் செலவிட்ட நடிகர் சமர் கிருஷ்ணராக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி நினா பற்றிவந்த திடீர்த் தகவல் அந்நாடகத்தை இடையிலேயே முடிவுக்குக்கொண்டுவருகிறது. மனிதனான அவருக்கு நேர்ந்த பிரச்சினையைச் சமாளிக்கக் கடவுள் அவதாரத் தோற்றத்தில் அந்த இரவில் புறப்படுகிறார். மனைவியைக் கண்டுபிடித்தாரா இரவு எப்படி விடிந்தது அவருக்கு என்னும் கேள்விகள் ஊடாக நகர்ந்துசெல்லும் காட்சிகள் மாநகரின் இரவுப் பொழுதை; வெவ்வேறு பிரதேசங்களைப் பல்வேறுபட்ட கோணங்களில் பார்வையாளனின் முன்னிறுத்துகின்றன.

தனி மனித வாழ்வில் கலைக்கும் உறவுகளுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு ஊடாடும் கலைஞனின் அகத்தில் நிகழும் உணர்ச்சிக்கொந்தளிப்புகளை ஆரவாரங்களோ ஆடம்பரங்களோவின்றி அப்படியே வெளிக்கொணர்ந்துள்ளது இக்குறும்படம். புராணக் கடவுள் பாத்திரமான கிருஷ்ணராக நடித்தவர் மனைவியைப் பிரிவதை எண்ணித் துக்கப்படுவது அவளை மீண்டும் கைப்பற்றிவிடத் துடிப்பது என்பனவெல்லாம் முரண்நகைதாம். ஆனால் என்ன செய்ய இருபதாண்டுக் காலம் அவரை நேசித்த அவருடைய காதல் மனைவி மற்றொருவருடன் காதல் கொண்டு இவரிடமிருந்து விலகிச் செல்லும்படியான சூழலை உருவாக்கிவிட்ட அந்த இரவையும் அந்தத் துக்கத்தையும் அவர் கடந்தாக வேண்டுமே. விமான நிலையம் வரை சென்றும் வெறும்கையோடு திரும்பும் நடிகரை அடையாளம் கண்டு அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பான கேள்விகளைக் கேட்கும் வாடகைக் காரோட்டியிடம் அவை காரணமாக ஏற்பட்ட மதிப்பிழப்பின் காரணமாகவே தன் மனைவியை இழந்ததாக எப்படி அவர் சொல்ல முடியும்? அவரது தவிப்பை, ஏக்கத்தை, புழுக்கத்தை வெறும் புகையாகப் பரப்பிவிட்டபடி அவற்றைக் கடக்கிறார்.


விஷ்ணு பிரசாத் என்பவர் காவலனாகப் பணிபுரியும் தானியங்கிப் பணம் வழங்கும் மையத்தில் பணமெடுக்கச் செல்கிறார் சமர். அங்கே பணமெடுத்துத் திரும்பும் விளம்பரப் பட நடிகை ஒருவர் இவரது தோற்றம் கண்டு வேடிக்கையாகச் சிரிக்கிறார். உள்ளே பணமெடுத்துக்கொண்டிருக்கையில் வெளியே சிறு விபத்தொன்று நிகழ அதில் காவலர் விஷ்ணுவின் கண்ணாடியும் நாற்காலியும் உடைந்துவிடுகின்றன. நடிகையின் நண்பிதான் விபத்தை நிகழ்த்தியவர். கண்ணாடிக்கு மாற்றாகத் தனது கண்ணாடியை விஷ்ணுவுக்கு அளித்ததோடு அருகிலிருந்த தனது வீட்டிலிருந்து நாற்காலி ஒன்றையும் அவருக்குத் தருகிறார் நடிகை. அந்தப் பயணத்தில் சமருக்கும் நடிகைக்கும் இடையே நெருக்கம் உருவாகிப் பின்னர் அது காதலாகப் பரிணமிக்கிறது. ஒருவருக்கு உடைந்துபோன நாற்காலிக்கும் கண்ணாடிக்கும் மாற்றுக் கிடைக்கிறது மற்றொருவருக்கோ மனைவிக்குப் பதில் காதலி கிடைக்கிறாள். எல்லா அதிசயங்களையும் அபத்தங்களையும் தனக்குள் அடக்கியபடி இரவு நகர்கிறது.

விஷ்ணு தனது அறைக்கு வந்த உடன் இரவு முழுவதும் தூங்காமல் பணிசெய்த களைப்பால் காலுறையைக்கூடக் கழற்ற அவகாசமின்றி அப்படியே உறங்கச்செல்கிறான்; சமர் தனது ஒப்பனையைக் கலைக்கக்கூடப் பொறுமையின்றி மனைவியைத் தேடி அப்படியே ஓடுகிறார். மாநகர வாழ்க்கை ஆற அமர எந்தவொரு செயலையும் செய்ய அனுமதிக்காமல் மனிதர்களை விரட்டிக்கொண்டே இருக்கிறது. விளம்பரப் படத்தில் மற்றொரு நடிகையின் உதடுகளை நீளவாட்டில் பொத்திய ஆள்காட்டி விரலும் அதன்பின் கன்னத்தை வருடியபடி வழுக்கிக் கீழிறங்கும் விரல்களும் மட்டும் தனதென அந்நடிகைக்கும் யூனிட்டில் உள்ளவர்களுக்கும் தானே தெரியும். இந்த ஏமாற்றை அறிந்தால் பார்வையாளன் விளம்பரத்தை ரசிக்கமாட்டான். இங்கே ஏமாற்று என்பது தொழில்ரீதியான புத்திசாலித்தனம். காரில்வைத்து ஒரு நாற்காலியை எப்படிக் கொண்டுவருவது என்பதைக்கூடச் சரிவரச் செய்ய இயலாத நகரத்து மனிதர்கள். இப்படிப்பட்டவற்றைக் காட்சிபடுத்தியிருக்கும் விதம் மாநகர வாழ்க்கை குறித்த நுணுக்கமான எள்ளல்களாகவும் விமர்சனங்களாகவும் காட்சிகொள்கின்றன.


ஏறக்குறைய இருபத்தி மூன்று நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் பலாப்பழம் போன்ற மனித வாழ்வின் தனிச் சுளை. காட்சி ஊடகத்தின் அறிவார்த்த திரைமொழி நேர்த்தியாக இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அநாவசியமாக ஒரு துண்டுக்காட்சிகூடப் படத்தில் இடம்பெறவில்லை. நடிகர்கள் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வசனங்களும் மிக மிகச் சொற்பம். ஒளியும் இருளும் பலகாட்சிகளில் இணைந்தே காணப்படுவது இன்பம், துக்கம் இரண்டுமே இணைந்த வாழ்க்கையைக் குறிப்பதுபோல் உள்ளது. வழக்கமான கேமராக் கோணங்களை இயன்றவரை தவிர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜி. முரளி. அவசியமான இடங்களில் தேவைக்கேற்ற அளவு மட்டுமே ஒளி பயன்பட்டுள்ளது. நுட்பமாக ஒளியைக் கையாண்டுள்ள தன்மை படத்தின் அழகியல் கூறை அதிகரிக்கிறது; இரவின் ரம்யத்தையும் அழகையும் தனிமையையும் தனிப்பட்ட குணாம்சங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது. அடர்த்தியான தனிமை நிறைந்த இரவில் பெருநகர வீதிகளில்  வாழ்க்கை குறித்து அசைபோட்டபடி சுற்றிய திருப்தியை ஏற்படுத்தும் இக்குறும்படத்தைக் கவனத்துடன் பார்க்கும் பார்வையாளனின் நினைவுவலைகளில் இது வட்டமிட்டுக்கொண்டேயிருக்கும்.

படக் குழுவினர் விருது பெறும் காட்சி
ஷ்யாம் ராத் ஸேஹெர்
இயக்கம்: அருணிமா ஷர்மா
ஒளிப்பதிவு: ஜி. முரளி
மொழி: இந்தி, ஆங்கிலம்
நேரம்: 22:30 நிமிடம்      

நண்பர் முரளியின் அடவி இதழில் வெளியானது

வியாழன், ஏப்ரல் 30, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது



தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கியிருக்கிறார் செல்லப் பாண்டியன் (சிம்ஹா). அவருடைய நண்பன் நாகராஜ் (பிரபஞ்செயன்) சினிமா கனவுடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருகிறான். செல்லப் பாண்டியன் அறையில் தங்கியிருக்கும் கார்த்தி (லிங்கா) பெண் மோகத்தில் உழல்பவன். நாகராஜ் தங்கியிருந்த அறையில் பிரச்சினை ஏற்படவே அங்கிருந்து செல்லப் பாண்டியனின் அறைக்கு வருகிறான். கார்த்திக்கும் நாகராஜுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. இந்நிலையில் கார்த்திக்கும் வினோதினி என்ற கிராமத்துப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எல்லை மீறிய உறவால் கர்ப்பமாகிறாள் வினோதினி. கார்த்தி அவளிடமிருந்து விலகுகிறான். செல்லப் பாண்டியனும் நாகராஜும் அவளுக்கு உதவுகிறார்கள். இதனிடையே செல்லப் பாண்டியன் தங்கியிருக்கும் அறையின் உரிமையாளருடைய மகள்மீது அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. செல்லப் பாண்டியன் காதலில் வெற்றிபெற்றானா, படம் இயக்கினானா, வினோதினியும் கார்த்தியும் இணைந்தார்களா என்பதையெல்லாம் யதார்த்தமான போக்கில் சொல்லிச் செல்கிறது சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.


அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இப்படத்தை மிகவும் யதார்த்தமான தளத்தில் நகர்த்திச் செல்கிறார். சினிமா பாவனைகளைப் பெருமளவில் தவிர்த்துள்ளார். சென்னையில் சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் தலையாயது சரியான ரூம் அமையாமல் போவது. வெற்றிபெற்ற பின்னர் சமூகத்தால் கொண்டாடப்படும் திரைத்துறையினர் தங்குவதற்கு ஓர் அறைகூடக் கிடைக்காத அவலத்தைப் பகடியாகவும் வேதனையாகவும் சித்தரிக்கிறது இப்படம். ஆனால் வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இல்லை இப்படத்தில். இப்படத்தைக் கட்டமைப்பவர்கள் சென்னையின் இக்கட்டுகள் நிறைந்த வாழ்வை எதிர்கால வெற்றி எனும் கனவால் சகித்துக்கொள்ளும், கொசுக்கடியால் தூங்க இயலாத அறைகூடக் கிடைக்காத அவலத்தையும் எதிர்கொள்ளும் பரிதாபத்துக்குரிய இளைஞர்கள். இவர்களிடம் பலவீனமான பல குணாம்சங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அப்படியே சினிமாவுக்கான ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகிநிற்கிறது.

வெவ்வேறு விதமான மனிதர்கள் தங்கள் வாழ்வு ஒளிர வேண்டி, விரும்பி சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (இயக்குநர் மருது பாண்டியன்) கதையோ வேறு. கிராமத்தில் குடித்து குடித்துச் சீரழியும் அவரைப் பிழைப்புக்காகவும், குடியிலிருந்து மீட்கவும் சென்னைக்கு அனுப்புகிறார்கள் குடும்பத்தினர். குடிகாரக் கணவன் ஆனாலும் அந்த மனைவிக்கு வெறுப்பு அவனது குடியின் மீது தானே ஒழிய அவன்மீது அல்ல. ஆனால் எப்போதும் படம் திருடுபோய்விட்டதாகச் சொல்லி அந்தப் பணத்துக்கு குடித்துவிடும் கணவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும்போது அதை நம்ப முடியாத மனைவி நடுத்தெருவில் அவரைத் துடைப்பத்தால் கடுமையாக அடித்துவிடுகிறார். சரவணனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் கணவன் மனைவி உறவு சிறிதுகூட அரிதாரம் பூசப்படாமல் அப்படியே ஈரத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



கார்த்தியின் காதலி வினோதினிக்குக் கார்த்தி துரோகம் இழைத்து தலைமறைவாகச் சென்றுவிடுகிறான். ஒவ்வொரு முறையும் உன்னை மட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என மொழிகிறான். அதை நம்பி அந்தப் பேதைப் பெண் தன்னை இழக்கிறாள். ஆனால் அவன் பழகும் அனைத்துப் பெண்களிடமும் அதேபோல்தான் பேசுகிறான். ஆனால் ஏற்கெனவே மணவாழ்க்கையிலிருந்து வெளியேறிய வினோதினி அவனது வார்த்தைகளை அப்படியே நம்புகிறாள். அவனது ஏமாற்றத்தை எதிர்கொண்டபோதும் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. ஏனெனில் அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவன் அவளைத் தேடி வருவானோ மாட்டானோ தெரியாது. ஆனால் அவனை மட்டுமே உள்ளத்தில் இருத்தி அவனுடன் கழித்த அன்பான நாட்களின் நினைவாக அவன் தந்த குழந்தையுடன் அந்தப் பெருநகரில் சிரமமான ஒரு வாழ்வை நடத்துகிறாள். அவளால் கிராமத்துக்குப் போக இயலாது. உன்னத கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெரு நகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிற போக்கில் சொல்கிறது.

கார்த்தியைக் காமம் அலைக்கழிக்கிறது. பெற்றெடுத்த தாய் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கையில் தனக்குக் காமத்தை வாரி இறைக்கத் தயாராகும் காதலியின் அணைப்பைத் தவிர்க்க இயலாமல் கார்த்தி காமத்தில் நனைகிறான்.  அதே கார்த்தி தாய் இறந்த சோகத்தைச் சொல்லும் பாடல் ஒலிக்கும்போது தன்னை மறந்த போதையில் விக்கித்து அழுகிறான். அவன் துரோகி என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் கார்த்தி சாதாரண மனிதன். உணர்வுகள் உந்தித் தள்ளும்போது அதைத் தட்டிவிடத் தெரியாமல் அவற்றிடம் சரணாகதி அடைந்துவிடும் சாமானியன்.



இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் அவனுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகாநந்தரின் பொன்மொழியைச் சொல்லிச் சொல்லித் தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன் போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். வீட்டு உரிமையாளர் இரவில் எல்லாம் சிவாஜி படப் பாட்டுகளை ரசிக்கிறார். ஆனால் செல்லப் பாண்டியனுக்கு அவர் மனம் இளகவில்லை. இதுதான் யதார்த்தம். சினிமாக்காரனான அவனால் தான் காதலித்த பெண்ணிடம் காதலைக்கூடச் சொல்ல இயலவில்லை. அந்தக் காதல் அவனுக்குள் நறுமணம் வீசிவிட்டு காற்றோடு கலந்துவிடுகிறது. தான் காதலித்த பெண் தனக்குத் திருமணம் என்னும் சேதியைச் சொல்லிச் சென்ற பின்னர்தான் தனது கதையின் தொடக்கப்புள்ளியைக் கண்டடைகிறான். விரைவில் பெரிய இயக்குநராகிவிடுங்கள் என அந்தப் பெண் வாழ்த்திவிட்டு மாநகரின் ஏதோ ஒரு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுகிறாள். அதன் பின்னர் செல்லப் பாண்டியனுக்குத் தேவையான ஒரு முடுக்கம் கிடைத்துவிடுகிறது. அதுவும் உள்ளடங்கியே ஒலிக்கிறது. வெளிப்படையான காட்சிதன்மை கொண்டிருக்கவில்லை.

நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தன் அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதைக்கூட நிறைவேற்ற இயலவில்லை.சென்னையில் பெரிய அளவில் சம்பாதிப்பதாய் ஊரிலுள்ளோர் நம்பும் சூழலில் சென்னையில் சினிமாக் கனவுடன் அலையும் இளைஞர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுகிறார்கள். கனவுக்கு நனவுக்கும் இடையிலான யதார்த்தம் புரியாத மனிதர்கள் பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் இடையிலான பிணக்கு பற்றியான கிசுகிசுவைக் கிளுகிளுப்புடன் வினவுகிறார்கள். இவையெல்லாம் சினிமாக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். இந்தச் சிக்கலை யதார்த்தமான சினிமாவாக்கிய மருது பாண்டியன் அதை சினிமாத் தனம் என்னும் பூச்சற்று தந்துள்ளார்.



வசனங்கள் மிகவும் இயல்பானவை. பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநருடன் இரவில் செல்லப் பாண்டியன் பேசும்போது, ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏது? அவர் மொழியும்போது அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை பச்சை உண்மை தெறிக்கிறது. அதே இயக்குநர் படம் கமிட் ஆன பின்னர் காரில் வந்திறங்குகிறார். அதுதான் சினிமா. நடைமேடையில் திரியும் ஏதோ ஒரு மனிதர் சட்டென நவநாகரிக வாழ்வுக்குத் தாவிவிடுவார். இரண்டுக்கும் இடையில் கண்கட்டி வித்தை காட்டும் முதல் பட வெற்றி  கிடந்து ஆட்டுவிக்கிறது.



வினோதினி பாத்திரமேற்ற சரண்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவில் தென்படும் குறை என்றால் படத்தின் வண்ணக்கலவை சீர்மையாக இல்லை. வெவ்வேறு திட்டுத் திட்டான சம்பவங்களின் தொகுப்பாகப் படம் அமைந்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணியவகையில் இசையும் படத்துக்கு உதவியுள்ளது. அப்துல்ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதையென இலக்கிய ரசனையுடன் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தின் குறைகளைப் புறக்கணித்து படத்துக்கு ஆதரவாக நிற்கிறது பார்வையாளனின் மனம்.

வெள்ளி, ஏப்ரல் 17, 2015

ஒமர்

நீராய்ப் பரவும் துரோகம்


அவர்கள் மூவரும் பால்ய சிநேகிதர்கள். துறுதுறுப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அவர்களது தோழமையில் களங்கம் சேர்கிறது. வெகுளித் தனமான அவர்கள் உறவில் கல்மிஷம் சுவராக எழும்பி நிற்கிறது. தனிமனிதர்களிடையே அச்சுறுத்தும் அளவிலான வெம்மை சூழ்ந்த இடைவெளியை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கிறது தந்திரம். தனிமனித உறவில் ஏற்படும் சிக்கல்களை விவரிப்பதன் மூலம் துயரத்திலும் தீர்க்கப்பட முடியாத சிக்கலிலும் தவித்துக்கொண்டிருக்கும் தேசத்தின் பிரச்சினையை ஒமர் படம் மூலம் உணர்த்துகிறார் இயக்குநர் ஹேனி அபு அஸாத். இவர் இஸ்ரேலின் நாஸரேத்தில் பிறந்த பாலஸ்தீன இயக்குநர். பாலஸ்தீனப் பிரச்சினையை அவர் கையில் எடுப்பது இதுவே முதல் முறை. சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் 86ஆவது ஆஸ்கர் பரிசுக்காக அனுப்பப்பட்டது. 2013-ல் கேன் படவிழாவில் ஜூரி விருதைப் பெற்றது.   

பேக்கரி ஒன்றில் பணிபுரியும் ஒமர் (ஆதம் பக்ரி) ஒவ்வொரு முறையும் தனக்கெதிரே உயர்ந்து நிற்கும் பெரிய சுவரைத் தாண்டியே தன் காதலி நடியாவைச் (லீம் லுபானி) சந்திக்கச் செல்கிறான். பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேலிலிருந்து பிரிப்பதற்காக இஸ்ரேலியத் தரப்பு அமைத்தது இந்த 25 அடி உயர தடுப்புச் சுவர். ஒமர், தரே (இயாத் ஹூரானி), அம்ஜத் மூவரும் பாலஸ்தீனிய விடுதலைக்காகப் போராடும் தெருவோரக் குழுவினர். இந்தக் குழுவுக்குத் தலைவன் தரே, அவனுடைய தங்கைதான் நடியா.


நண்பர்கள் மூவரும் துப்பாக்கி ஏந்த அவசியமான நுட்பமான பயிற்சி எடுக்கிறார்கள். இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவரை ஓரிரவில் தொலைவில் இருந்து சுட்டுக்கொல்கிறார்கள். மூவரும் இந்தச் சம்பவத்தில் இணைந்து செயல்பட்டாலும் துப்பாக்கியால் சுடுவது அம்ஜத்தான். இந்தச் சம்பவத்தைத் துப்பு துலக்க வரும் இஸ்ரேலிய விசாரணக் குழுவிடம் ஒமர் அகப்பட்டுக்கொள்கிறான். தனியறையில் வைத்துத் துன்புறுத்துகின்றனர். விசாரணை நடத்தும் ராமி (வலீத் ஜுவைதர்) ஒமரின் அந்தரங்கப் பகுதியின் மயிர்களை சிகரெட் லைட்டரால் கொளுத்துகிறான். பெரிய அலறலோ இதயத்தைப் பிளக்கும் பகீர் இசையோ பின்னணியில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மயிர் பொசுங்கும் வாசனை நம்மை நிலைகுலையச் செய்கிறது.

இஸ்ரேலிய வீரரைக் கொன்றது தரே என நினைத்து அவனை ஒப்படைக்கும்படி ஒமரை வற்புத்துகிறான் ராமி. நடியா குறித்தும் ஒமரின் காதல் பற்றியும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாகத் தெரிவிக்கும் ராமி அதைக் கொண்டே ஒமரைத் தங்களுக்கு ஒத்துழைக்கப் பணிக்கிறான். வேறு வழியற்ற சூழலில் ராமிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுகிறான் ஒமர்.


தரேவிடம் ஒமர் நடந்ததை விவரிக்கிறான். யாரோ ஒருவன் துரோகியாகச் செயல்படுவதாகவும் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தரே ஒமரிடம் கூறுகிறான். மூவரும் அது பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள். துரோகி நீயாகவோ நானாகவோ அம்ஜத்தாகவோ வேறு யாராகவோ இருக்கலாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான் தரே. இஸ்ரேலியர்களுக்கு எதிராக மற்றொரு தாக்குதல் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள். இப்போது மீண்டும் ஒமர் பிடிபடுகிறான். தங்களை ஏமாற்றியதாகக் கடிந்துகொள்கிறான் ராமி. அவன் ஒரு அரேபியன் என்பதை அவன் பேசும் பாஷையை வைத்துக் கண்டுபிடிக்கிறான் ஒமர். நடியா குறித்த ரகசியம் எல்லாவற்றையும் தான் அறிந்திருப்பதாகத் தெரிவிக்கிறான் ராமி. எப்போது வேண்டுமானாலும் அவளை ஒரு பரத்தையாகத் தங்களால் மாற்ற முடியும் என வக்கிரத்துடன் மொழிகிறான் அவன். மனித மனத்தின் மென்மையான பகுதியை கீறுவதன் மூலம் தனக்கான அனுகூலத்தை எதிர்பார்க்கிறான் ராமி. அந்த வார்த்தைகள் ஒமரைச் சரியான இடத்தில் தாக்குகின்றன. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்கிறான் ஒமர். அவனது காலில் ஆட்காட்டிக் கருவியைப் பொருத்தி அவனை வெளியே அனுப்புகிறான் ராமி.


இருமுறை ஒமர் விசாரணையிலிருந்து வெளியே வந்ததால் அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவன் இரண்டு பக்கங்களுக்கும் வேலை செய்கிறானோ என்ற ஐயம் நடியாவுக்கே வருகிறது. நடியாவும் அம்ஜத்தும் தனியே பார்த்து உரையாடுவதை ஒமர் காண்கிறான். அவன் மனம் புண்படுகிறது. இருவரும் விவாதிக்கும்போது அவன் நாட்டுக்குத் துரோகம் செய்வதாக நடியா நினைக்கிறாள், நடியா தனக்குத் துரோகம் செய்வதாக ஒமர் எண்ணுகிறான். தனி மனித உணர்வுகளும் நாட்டுப் பற்றும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. விவாத முடிவில் கோபத்துடன் வெளியேறுகிறாள் நடியா. ஆழ்ந்த துக்கத்துடன் நகர்கிறான் ஒமர். அப்போது மன அழுத்தம் தாங்காமல் சுவரில் கைகளால் ஓங்கிக் குத்திக் காயமேற்படுத்திக்கொள்கிறான். காதலால் ஏற்பட்ட ரணத்தை கைகளின் வலியில் கரைந்துபோகச் செய்கிறான். மிகச் சிக்கலான தருணங்களை இப்படியான எளிய காட்சிகளில் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்துகிறது படம்.

தரே இறந்த பின்னர், அம்ஜத் கூறியதை நம்பி ஒமர் அவளை அம்ஜத்துக்கு மணம் முடிக்கும் பொருட்டுப் பேசச் செல்லும் காட்சியிலும் காபி கோப்பையின் கீழ் வழக்கம் போல் காதல் கடிதத்தை வைக்கிறாள் நடியா. ஆனால் ஒமர் அதைப் புறக்கணித்துவிடுகிறான். அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று கருதி அம்ஜத்துக்குச் சம்மதம் சொல்கிறாள். இருவருமே அதைப் பற்றி விவாதிக்கவே இல்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். வாழ்வில் பெரும் பிழை தரும் முடிவை வெறும் ஈகோ காரணமாக எடுத்துவிடுகிறார்கள்.  


நடியாவுடன் சேர்ந்து வாழ விழைந்து ஒமர் சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கிறான். தேனிலவுக்கு மகிழ்ச்சி நிறைந்த பாரீஸ் நகருக்குச் செல்ல விரும்புகிறாள் நடியா. இருவரும் காதலைச் சன்னமாக வெளிப்படுத்திருக்கிறார்கள். ஆனால் ஆழ் மனதை ஊடுருவும் அடர்த்தியான பார்வையைப் பரிமாறிக்கொள்கிறார்கள். சிறு சிறு காதல் கடிதங்கள் அவர்களை இணைக்கும் பாலமாக இருக்கின்றன. பதுங்கு குழி போன்ற தனிமைச் சிறையில் கிடக்கும் அவன் ஒற்றை எறும்புடன் தனது பேசுமளவுக்கு மென்மையான குணம் கொண்டவன். சிறு பூச்சியைக் கூட கொல்வதை அவன் மனம் ஒப்புவதில்லை.  

நடியாவை அடைவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவனாக, நேர்மையானவனாக ஒமர் இருக்கிறான். நடியாவும் ஒமரை ஆழமாக நேசிக்கிறாள். ஆனால் ஒமரும் நடியாவும் சேர முடியாமல் போய்விடுகிறது. இதன் பின்னணியில் சூதும் வாதும் கைகோத்து நிற்கின்றன. ஆகவே அம்ஜத் நடியாவுடன் சேர்ந்துவிடுகிறான். அவனும் நடியாவை விரும்புகிறான். ஆனால் தந்திரமாக அவளை அடைந்துவிடுகிறான். மெல்ல மனத்திரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை நம்மால் உணர முடிகிறது.

இறுதியில் மீண்டும் தன்னைத் தேடி வந்து மற்றொரு போராளிக் குழுத் தலைவனைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறான் ராமி. அவற்றைச் சொல்லாவிட்டால் ஒமரையும், நடியாவையும், அம்ஜத்தையும் அழித்துவிடுவதாக மிரட்டுகிறான். நொறுங்கிப் போன மனத்துடன் எப்போதும் சரசரவென ஏறும் சுவரில் ஏற முடியாமல் தடுமாறி உட்கார்ந்துவிடுகிறான் ஒமர். அப்போது அந்த வழியே யாசர் அரபாத் போன்ற ஒருவர் வந்து அவனுக்குச் சுவர் மீது ஏற உதவுகிறார். எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறும் அவர் அவன் சுவர் மீதேறிக்கொண்டிருக்கும்போதே மெதுவாக அந்த இடத்தைக் கடந்துபோய்விடுகிறார்.

மகிழ்ச்சி, நட்பு, காதல், சந்தேகம், ஏமாற்றம், துரோகம், விரக்தி போன்ற மனிதர்களை அலைக்கழிக்கும் உணர்வுகள் படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆழ் மன உணர்வுகள் மிக மிக மென்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எங்கேயும் பெரிய அளவிலான நாடகத் தன்மை இல்லை. படத்தின் கதையில், திரைக்கதையில் முக்கோணக் காதல் போன்ற நாடகத்தனமாக அம்சங்கள் இருந்தபோதும் அவை வெளிப்படும் விதம் நாடகத் தன்மையைப் புறந்தள்ளியதாக இருக்கிறது. 


பின்னணி இசையில் ஆங்காங்கே நாய்க் குரைப்பின் ஓசையும், தேவைப்படும் இடங்களில் வாகனங்களின் அச்சமூட்டும் ஒலியும் வெளிப்படுகின்றன. பல இடங்களில் மௌனமாகவும் அடங்கிய ஒலியுடன் காட்சிகள் நகர்கின்றன. காட்சிகள் கண்களை உறுத்தாதவாறு மிக நிதானமாக நகர்த்தப்பட்டுள்ளன. காட்சிகளின் உணர்வுகளைப் பார்வையாளன் தனக்குள் வாங்கி அவற்றை அனுபவிக்க அவசியமான கால இடைவெளிகளைப் படம் ஏற்படுத்தித் தருகிறது. நம்பிக்கைகளை நடுவது சமூகக் கடப்பாடு என்னும் வாசகத்தைத் தாங்கிய விளம்பரப் பலகை ஒன்று பின்னணியில் இடம்பெறுகிறது. ஆனால் அவர்கள் வாழ்விலோ நம்பிக்கைகள் தகர்க்கப்படும் சம்பவங்கள் நிரம்பி வழிகின்றன. பார்வையாளன் அந்த வாசகத்தின் அபத்தத்தை எண்ணி வேதனையுடன் கூடிய மெல்லிய புன்னகை பூக்கிறான். ஒரு தேசம் அந்நிய சக்தியிடம் அகப்படக் காரணம் எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும்கூட. அவர்களை அழிப்பது எதிரிகளை அழிப்பதைவிட பிரதானமானது என்னும் செய்தி நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினையைக் கையாண்டாலும் படம் நகரும் விதத்தில் ஒரு திரில்லராகவே உள்ளது. ஆனால் அடர்த்தியான கேள்விகளை ஆழ் மனதில் உருவாக்குவதில் படம் தனித்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தக் காரணத்தாலேயே ஒமர் பிற படங்களிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.

நண்பர் முரளியின் அடவி ஏப்ரல் 2015 இதழில் வெளியானது.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்