தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கியிருக்கிறார் செல்லப் பாண்டியன் (சிம்ஹா). அவருடைய நண்பன் நாகராஜ் (பிரபஞ்செயன்) சினிமா கனவுடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருகிறான். செல்லப் பாண்டியன் அறையில் தங்கியிருக்கும் கார்த்தி (லிங்கா) பெண் மோகத்தில் உழல்பவன். நாகராஜ் தங்கியிருந்த அறையில் பிரச்சினை ஏற்படவே அங்கிருந்து செல்லப் பாண்டியனின் அறைக்கு வருகிறான். கார்த்திக்கும் நாகராஜுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. இந்நிலையில் கார்த்திக்கும் வினோதினி என்ற கிராமத்துப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எல்லை மீறிய உறவால் கர்ப்பமாகிறாள் வினோதினி. கார்த்தி அவளிடமிருந்து விலகுகிறான். செல்லப் பாண்டியனும் நாகராஜும் அவளுக்கு உதவுகிறார்கள். இதனிடையே செல்லப் பாண்டியன் தங்கியிருக்கும் அறையின் உரிமையாளருடைய மகள்மீது அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. செல்லப் பாண்டியன் காதலில் வெற்றிபெற்றானா, படம் இயக்கினானா, வினோதினியும் கார்த்தியும் இணைந்தார்களா என்பதையெல்லாம் யதார்த்தமான போக்கில் சொல்லிச் செல்கிறது சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.
அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இப்படத்தை மிகவும் யதார்த்தமான தளத்தில் நகர்த்திச் செல்கிறார். சினிமா பாவனைகளைப் பெருமளவில் தவிர்த்துள்ளார். சென்னையில் சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் தலையாயது சரியான ரூம் அமையாமல் போவது. வெற்றிபெற்ற பின்னர் சமூகத்தால் கொண்டாடப்படும் திரைத்துறையினர் தங்குவதற்கு ஓர் அறைகூடக் கிடைக்காத அவலத்தைப் பகடியாகவும் வேதனையாகவும் சித்தரிக்கிறது இப்படம். ஆனால் வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இல்லை இப்படத்தில். இப்படத்தைக் கட்டமைப்பவர்கள் சென்னையின் இக்கட்டுகள் நிறைந்த வாழ்வை எதிர்கால வெற்றி எனும் கனவால் சகித்துக்கொள்ளும், கொசுக்கடியால் தூங்க இயலாத அறைகூடக் கிடைக்காத அவலத்தையும் எதிர்கொள்ளும் பரிதாபத்துக்குரிய இளைஞர்கள். இவர்களிடம் பலவீனமான பல குணாம்சங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அப்படியே சினிமாவுக்கான ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகிநிற்கிறது.
வெவ்வேறு விதமான மனிதர்கள் தங்கள் வாழ்வு ஒளிர வேண்டி, விரும்பி சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (இயக்குநர் மருது பாண்டியன்) கதையோ வேறு. கிராமத்தில் குடித்து குடித்துச் சீரழியும் அவரைப் பிழைப்புக்காகவும், குடியிலிருந்து மீட்கவும் சென்னைக்கு அனுப்புகிறார்கள் குடும்பத்தினர். குடிகாரக் கணவன் ஆனாலும் அந்த மனைவிக்கு வெறுப்பு அவனது குடியின் மீது தானே ஒழிய அவன்மீது அல்ல. ஆனால் எப்போதும் படம் திருடுபோய்விட்டதாகச் சொல்லி அந்தப் பணத்துக்கு குடித்துவிடும் கணவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும்போது அதை நம்ப முடியாத மனைவி நடுத்தெருவில் அவரைத் துடைப்பத்தால் கடுமையாக அடித்துவிடுகிறார். சரவணனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் கணவன் மனைவி உறவு சிறிதுகூட அரிதாரம் பூசப்படாமல் அப்படியே ஈரத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கார்த்தியின் காதலி வினோதினிக்குக் கார்த்தி துரோகம் இழைத்து தலைமறைவாகச் சென்றுவிடுகிறான். ஒவ்வொரு முறையும் உன்னை மட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என மொழிகிறான். அதை நம்பி அந்தப் பேதைப் பெண் தன்னை இழக்கிறாள். ஆனால் அவன் பழகும் அனைத்துப் பெண்களிடமும் அதேபோல்தான் பேசுகிறான். ஆனால் ஏற்கெனவே மணவாழ்க்கையிலிருந்து வெளியேறிய வினோதினி அவனது வார்த்தைகளை அப்படியே நம்புகிறாள். அவனது ஏமாற்றத்தை எதிர்கொண்டபோதும் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. ஏனெனில் அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவன் அவளைத் தேடி வருவானோ மாட்டானோ தெரியாது. ஆனால் அவனை மட்டுமே உள்ளத்தில் இருத்தி அவனுடன் கழித்த அன்பான நாட்களின் நினைவாக அவன் தந்த குழந்தையுடன் அந்தப் பெருநகரில் சிரமமான ஒரு வாழ்வை நடத்துகிறாள். அவளால் கிராமத்துக்குப் போக இயலாது. உன்னத கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெரு நகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிற போக்கில் சொல்கிறது.
கார்த்தியைக் காமம் அலைக்கழிக்கிறது. பெற்றெடுத்த தாய் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கையில் தனக்குக் காமத்தை வாரி இறைக்கத் தயாராகும் காதலியின் அணைப்பைத் தவிர்க்க இயலாமல் கார்த்தி காமத்தில் நனைகிறான். அதே கார்த்தி தாய் இறந்த சோகத்தைச் சொல்லும் பாடல் ஒலிக்கும்போது தன்னை மறந்த போதையில் விக்கித்து அழுகிறான். அவன் துரோகி என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் கார்த்தி சாதாரண மனிதன். உணர்வுகள் உந்தித் தள்ளும்போது அதைத் தட்டிவிடத் தெரியாமல் அவற்றிடம் சரணாகதி அடைந்துவிடும் சாமானியன்.
இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் அவனுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகாநந்தரின் பொன்மொழியைச் சொல்லிச் சொல்லித் தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன் போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். வீட்டு உரிமையாளர் இரவில் எல்லாம் சிவாஜி படப் பாட்டுகளை ரசிக்கிறார். ஆனால் செல்லப் பாண்டியனுக்கு அவர் மனம் இளகவில்லை. இதுதான் யதார்த்தம். சினிமாக்காரனான அவனால் தான் காதலித்த பெண்ணிடம் காதலைக்கூடச் சொல்ல இயலவில்லை. அந்தக் காதல் அவனுக்குள் நறுமணம் வீசிவிட்டு காற்றோடு கலந்துவிடுகிறது. தான் காதலித்த பெண் தனக்குத் திருமணம் என்னும் சேதியைச் சொல்லிச் சென்ற பின்னர்தான் தனது கதையின் தொடக்கப்புள்ளியைக் கண்டடைகிறான். விரைவில் பெரிய இயக்குநராகிவிடுங்கள் என அந்தப் பெண் வாழ்த்திவிட்டு மாநகரின் ஏதோ ஒரு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுகிறாள். அதன் பின்னர் செல்லப் பாண்டியனுக்குத் தேவையான ஒரு முடுக்கம் கிடைத்துவிடுகிறது. அதுவும் உள்ளடங்கியே ஒலிக்கிறது. வெளிப்படையான காட்சிதன்மை கொண்டிருக்கவில்லை.
நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தன் அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதைக்கூட நிறைவேற்ற இயலவில்லை.சென்னையில் பெரிய அளவில் சம்பாதிப்பதாய் ஊரிலுள்ளோர் நம்பும் சூழலில் சென்னையில் சினிமாக் கனவுடன் அலையும் இளைஞர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுகிறார்கள். கனவுக்கு நனவுக்கும் இடையிலான யதார்த்தம் புரியாத மனிதர்கள் பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் இடையிலான பிணக்கு பற்றியான கிசுகிசுவைக் கிளுகிளுப்புடன் வினவுகிறார்கள். இவையெல்லாம் சினிமாக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். இந்தச் சிக்கலை யதார்த்தமான சினிமாவாக்கிய மருது பாண்டியன் அதை சினிமாத் தனம் என்னும் பூச்சற்று தந்துள்ளார்.
வசனங்கள் மிகவும் இயல்பானவை. பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநருடன் இரவில் செல்லப் பாண்டியன் பேசும்போது, ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏது? அவர் மொழியும்போது அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை பச்சை உண்மை தெறிக்கிறது. அதே இயக்குநர் படம் கமிட் ஆன பின்னர் காரில் வந்திறங்குகிறார். அதுதான் சினிமா. நடைமேடையில் திரியும் ஏதோ ஒரு மனிதர் சட்டென நவநாகரிக வாழ்வுக்குத் தாவிவிடுவார். இரண்டுக்கும் இடையில் கண்கட்டி வித்தை காட்டும் முதல் பட வெற்றி கிடந்து ஆட்டுவிக்கிறது.
வினோதினி பாத்திரமேற்ற சரண்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவில் தென்படும் குறை என்றால் படத்தின் வண்ணக்கலவை சீர்மையாக இல்லை. வெவ்வேறு திட்டுத் திட்டான சம்பவங்களின் தொகுப்பாகப் படம் அமைந்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணியவகையில் இசையும் படத்துக்கு உதவியுள்ளது. அப்துல்ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதையென இலக்கிய ரசனையுடன் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தின் குறைகளைப் புறக்கணித்து படத்துக்கு ஆதரவாக நிற்கிறது பார்வையாளனின் மனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக