இந்த வலைப்பதிவில் தேடு

சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 15, 2025

சில்லுன்னு ஒரு பயணம்


சினிமாக்களில் மட்டுமே பார்த்துவந்த மெட்ரோ ரயிலை சென்னைவாசிகள் நேரில் கண்டுவிட்டார்கள். கடந்த திங்களன்று (29.06.2015) சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டது. புறநகர் ரயில், பறக்கும் ரயில் வரிசையில் புதிதாக இந்த மெட்ரோ ரயிலும் சேர்ந்துகொண்டது.

மெட்ரோ ரயில் பயணம் சென்னைவாசிகளுக்குப் புதுவிதமான அனுபவமே. ஏனெனில், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் வெப்பமான சென்னை நகரின் ஊடே மேம்பாலத்தில் செல்லுவது உண்மையிலேயே உற்சாகமாக இருப்பதாகவே மெட்ரோ ரயிலில் பயணம்செய்தவர்கள் கூறுகிறார்கள். வெளியே சுட்டெரிக்கும் வெயிலைக் கண்ணாடி வழியே பார்த்தபடி வானத்தில் மிதப்பது போல குளுமையுடன் பயணிக்கும்போது ஆசுவாசமாக இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட பறக்கும் ரயிலின் அமைப்பிலேயே மெட்ரோ ரயில் இருக்கிறது. பறக்கும் ரயிலில் உட்கார அதிக இடம் இருக்கும், நிற்க குறைவான இடம் இருக்கும். மெட்ரோவில் இருக்க குறைவான இடம், நிற்க அதிக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையம்கூடப் பறக்கும் ரயில் நிலையம் போலவே விசாலமானதுதான்.

ஆனால், மெட்ரோவில் தொழில்நுட்ப வசதிகள் பறக்கும் ரயிலைவிட மேம்பட்டிருக்கின்றன. நடைமேடையில் ஒரு பிளாட்பாரத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல இங்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் நடைமேடைகள் இப்படி மேம்பாலத்தால் இணைக்கப்பட்டிருக்காது.

மேலும் பறக்கும் ரயில் வந்துசெல்லும் நிலையங்களில் காற்று உள்ளே வந்துவிடக் கூடாது என்று முன்யோசனையோடு கட்டியிருக்கிறார்களே என்று தோன்றும் அளவில் அவற்றை அமைத்திருப்பார்கள். வியர்வை வழிய வழியதான் நிற்க வேண்டும். பிளாட்பாரத்தின் முனைப் பகுதியில் மட்டுமே காற்று வர முடியும். ஆனால், இங்கே அந்தப் பிரச்சினை இல்லை.

மேலே கூரையில் திறப்புகள் உள்ளன. எனவே, காற்று வர வசதியுள்ளது, பார்வையில் வானமும் படுகிறது. பிளாட்பாரத்தில் வந்து நின்றவுடன் தானியங்கிக் கதவுகள் திறப்பதும் பின்னர் மூடுவதும் பார்க்க அழகாக இருக்கின்றன. ஏற்கெனவே, சென்னையின் சொகுசுப் பேருந்துகளில் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதுதான். ரயிலில் இது முதல்முறை என்பது மட்டும் புதுசு.

பிற ரயில்களில் நின்றுகொண்டே பயணிப்பது போல மெட்ரோவில் மிகச் சுலபமாக நின்றுகொண்டு பயணம் செய்ய இயலவில்லை. கவனமாக நிற்க வேண்டியிருக்கிறது. சென்னையில் டிரெயிலர் பேருந்துகளில் செல்லும்போது பேலன்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதைப் போலவே உள்ளது மெட்ரோவின் பயணம். மெட்ரோவின் அகலமும் பிற ரயில்களைவிட குறைவு. ஆகவே, ஏதோ பொருட்காட்சி ரயிலில் போவது போன்ற உணர்வே ஏற்படுகிறது. அனைவரும் கண்காட்சியில் ஓடும் பொம்மை ரயிலில் குடும்பத்துடன் குதூகலமாக செல்வது போலவே செல்கிறார்கள்.

நகரின் சாலைகளையும் கட்டடங்களையும் போக்குவரத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஊட்டி மலை ரயிலில் போவது போல சந்தோஷத்துடன் செல்கிறார்கள். இந்தச் சந்தோஷத்தின் காரணமாக ரயில் கட்டணம் அதிகம் என்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டூர் வந்தது போல ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் உற்சாகமாக ஃபோட்டோகளும் செல்பிகளும் எடுத்து மகிழ்கிறார்கள். இதுவரை வெளிநாட்டுப் படங்களில் மட்டுமே பார்த்து மகிழ்ந்த மெட்ரோ ரயிலில் தாங்களே பயணிப்பதால் ஒருவித பரவசத்தை உணர்கிறார்களே எனத் தோன்றும்படி அமைகிறது அவர்களின் பயணம். பொதுமக்கள் போலவே விஜய்காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற பிரபலங்களும் இதில் பயணித்து மெட்ரோவைப் பெருமைப்படுத்தி விட்டார்கள்.

ரயில் கட்டணம் அதிகம் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறைந்தபட்சம் பத்து ரூபாயும் அதிகபட்சமாக நாற்பது ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினசரி மெட்ரோவில் செல்பவர்கள் இந்தக் கட்டணத்தில் ரயிலைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டண விஷயத்தில் ஏசி பேருந்து, ஆட்டோ போன்றவற்றுடன் ஒப்பிட்டு இப்போதைய கட்டணத்தை நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், டெல்லி நகரின் மெட்ரோ கட்டணத்துடன் ஒப்பிடும்போது இது அதிகம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. முதல் நாள் இருந்த கூட்டம் அடுத்தடுத்த நாள்களில் இல்லை. ஓரிரு மாதங்கள் சென்ற பின்னர் சென்னைக்கு மெட்ரோ எந்த அளவு பயன்படப்போகிறது என்பது தெரிந்துவிடும்.

இந்து தமிழ் திசையில் பிரசுரமானது. 

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2017

சினிமா ஸ்கோப் 43: நட்சத்திரம்


சினிமாக் கனவில் தினந்தோறும் தலைநகரங்களில் அடைக்கலமாகும் இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழ்நாட்டில் வீட்டைவிட்டு ஓடிவரும் இளைஞர்களில் பலர் தேசத்தைக் காக்க ராணுவத்தில் சேரவில்லை என்றால் பெரும்பாலும் கலையைக் காக்க சினிமாவில்தான் சேருகிறார்கள். அதிலும் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்குப் பிரதான இலக்கு சினிமாதான். ஒரு பெரிய நடிகராகவோ இயக்குநராகவோ ஆன பின்னர்தான் சொந்த ஊர் திரும்ப வேண்டும் எனச் சங்கல்பம் எடுத்துக்கொள்வார்கள். பள்ளி, கல்லூரிகளில் யாராவது ஒரு அமெச்சூர் நாடகத்தில் நடித்துவிட்டாலோ ஏதாவது ஒரு உப்புமா நாடகத்தை எழுதிவிட்டாலோ அவ்வளவுதான், அவரது கதை முடிந்தது. அடுத்த சத்யஜித் ரே, அடுத்த அமிதாப் என்ற கனவில் கோடம்பாக்கத்துக்கு ரயிலேறிவிடுவார். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. இப்படி வருபவர்களில் பத்து சதவீதத்தினர்கூட வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஏனெனில், சினிமா என்னும் பரமபதத்தில் ஏணிகள் சொற்பமே, அதிகமும் பாம்புகள்தாம். இடையில் எத்தனையோ இழப்புகள். அத்தனையையும் தாங்கிக்கொண்டு ஆயுள் முழுக்க இரண்டு மணி நேர சினிமா ஒன்றில் பங்களித்துவிட வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். அறிவு இதை அபத்தம் எனலாம்; உணர்வு மட்டுமே இதைப் புரிந்துகொள்கிறது.

கே. பாலசந்தரின் கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ‘சர்வம் சுந்தர’த்தில் (1964) சினிமா முயற்சியில் தோற்றுப்போய் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலைபார்க்கும், மிகவும் சுமாரான தோற்றம் கொண்ட நாகேஷ் ஒரு காதல் காரணமாக மீண்டும் முயன்று பெரிய நடிகராகிவிடுகிறார். படத்தில் அவரது காதல் கைகூடாது. பி.மாதவன் இயக்கிய ‘ராமன் எத்தனை ராமனடி’யில் (1970) கிராமத்தில் ஜமீன்தாரின் தங்கையான கே.ஆர்.விஜயாவைக் காதலித்திருப்பார் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, வெகுளித்தனமான சிவாஜி கணேசன். இதனால் ஜமீன்தார் நம்பியாரால் அவமானப்படுத்தப்படும் சிவாஜி கணேசன் பெரிய நடிகராகும் லட்சியத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறார்; படபடவென அடுத்தடுத்த காட்சிகளில் வெற்றிகரமான நடிகராகிவிடுகிறார். எந்தக் காதலியைக் கரம் பற்றுவதற்காக அவர் நடிகரானாரோ அந்தக் காதலியை அவர் மீண்டும் சந்திக்கும்போது அவர் மற்றொருவரின் மனைவி.


இதே பி. மாதவனின் இயக்கத்தில், ஷோபா, சிவகுமார் நடித்து வெளிவந்த படம் ‘ஏணிப்படிகள்’ (1979). இதில் ஒரு கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பை பெருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்லக்கண்ணுவுக்கு சினிமா எனும் சொர்க்க வாசல் திறக்கிறது. அவளை முன்னேற்ற அவளுடைய காதலன் மாணிக்கம் உறுதுணையாக இருக்கிறான். ஆனால், செல்லக்கண்ணு, கமலாதேவி என்னும் நட்சத்திரமாக மாறத் தொடங்கியபோது அவளுடைய அண்ணனும் அண்ணியும் மாணிக்கத்தைத் தந்திரமாக வெளியேற்றிவிட்டு அவளது புகழ் வெளிச்சத்தில் குளிர்காய்கிறார்கள். இந்தத் தந்திரத்தை எல்லாம் அறிந்த கமலா தேவி தற்கொலை செய்துகொண்டு செல்லக்கண்ணுவாக மாறித் தன் மாணிக்கத்தைக் கரம்பற்றுகிறாள். இந்தப் படம் தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய ‘சீதாம்மாலக்‌ஷ்மி’ படத்தின் மறு ஆக்கம்தான். வசனத்தை மகேந்திரன் எழுதியிருப்பார்.

இந்தப் படங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் காதல் காரணமாகச் சில கதாபாத்திரங்கள் நடிகர்களாகிறார்கள். பிரவீணா பிலிம் சர்கியூட் என்னும் நிறுவனத்தின் பெயரில் கே.பாக்யராஜ் தயாரித்து இயக்கிய ‘தாவணிக்கனவுக’ளில் (1984) தன் தங்கைகளைக் கரையேற்றுவதற்காகக் கதாநாயகனாக முயல்வார் பாக்யராஜ். கதாநாயகனாக மாறிக் கைநிறையச் சம்பாதிப்பார். தன் தங்கைகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் என மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ஆனால், அவர்களோ தங்களது கஷ்ட காலத்தில் உதவிய டெய்லர், போஸ்ட்மேன் போன்ற சாதாரணர்களையே கரம்பற்ற விரும்புவார்கள். இதுதான் படம் சொன்ன செய்தி. ஆனால், மக்கள் அந்தச் செய்தியைக் கேட்கவே விரும்பவில்லை; படம் தோல்வியடைந்தது. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயி’லில் விஜயன் ஏற்றிருந்த பட்டாளத்தார் போன்ற கேப்டன் என்னும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். திரைக்கதையில் கேப்டன் கதாபாத்திரம் சுப்ரமணியனுக்கு உதவியிருக்கும். படத்தைப் பொறுத்தவரை சிவாஜியால் பாக்யராஜுக்கு உதவியில்லை. சிவாஜியை இயக்கியாகிவிட்டது என்னும் பெருமை மட்டுமே அவருக்கு மிச்சம்.  

மலையாளத்தில் வெளியான ‘கட்டப்பனையிலே க்ருதிக் ரோஷன்’ (2016) படத்தின் சில காட்சிகளில் ‘தாவணிக்கனவுக’ளை நினைவுக்கு வந்தது. இப்படத்தில், விஷ்ணு உண்ணிகிருஷ்ணனை சினிமாவில் கதாநாயகனாக்க அவருடைய தந்தை முயல்வார். ஏனெனில், அவர் சினிமா நடிகராக விரும்பியிருப்பார். ஆனால், அது நடைபெறாமல் போனதால் தன் மகனை எப்படியும் நடிகனாக்க ஆசைப்படுவார். திருடனாகவே சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அவருக்கோ கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதே விருப்பம். இறுதியில் கதாநாயகனாக ஆகிவிடுவார். இந்தப் படத்தில் ஒரு காட்சி உண்டு. இயக்குநர் ஒருவர் தன் மனைவியுடன் ஹோட்டலுக்கு வருவார். அதைப் பார்த்த விஷ்ணு அவரிடம் போய் வாய்ப்பு கேட்கலாம் எனச் செல்வார். ஆனால், இயக்குநரோ குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாக மனம் வெதும்பிய நிலையிலேயே அங்கு வந்திருப்பார். விஷ்ணுவைக் கண்டபடி திட்டி அனுப்பிவிடுவார். இதுதான் யதார்த்தம். அதன் பின் அந்த இயக்குநரே அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட விஷ்ணுவுக்குக் கதாநாயகன் வாய்ப்பளிப்பார். இது திரைக்கதைக்கான சுவாரசியம். சின்னச் சின்ன திருப்பங்கள், சுவாரசியங்கள், நகைச்சுவைக் காட்சிகளுடன் கூடிய சாதாரணமான திரைப்படம் இது. படத்தின் திரைக்கதையும் விஷ்ணு உண்ணிகிருஷ்ணன்தான். படத்தை இயக்கியிருப்பவர் நாதிர்ஷா.

மார்டின் பிரகத் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பெஸ்ட் ஆக்டர்’ (2010) திரைப்படத்தில் பள்ளிக்கூட ஆசிரியரான மோகனுக்கு சினிமா ஆசை இருக்கும். நிம்மதியான ஆசிரியர் வேலையை விட்டு எதற்காக நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அவரும் சினிமா வாய்ப்புக்காகப் பல படிகளில் ஏறி இறங்குவார். ஒரு கேங்க்ஸ்டர் வேடத்தில் நடிப்பதற்காக உண்மையிலேயே ஒரு கொட்டேஷன் குழுவில் இணைந்துவிடுவார். அதனால் பல சிக்கல்கள் உருவாகும். அனைத்திலிருந்தும் விடுபட்டு இறுதியில் நாயகனாகிவிடுவார். ஒரு நடிகனுக்கு அடிப்படையில் என்ன தேவை என்பதை உணர்த்தும்வகையிலான திரைக்கதை இது.  


அனீஷ் உபாசனா இயக்கத்தில் 2012-ல் வெளியான ‘மேட்னி’ திரைப்படத்தில் ஒரு புதுவிதமான கதைக் களம். இதில் சினிமா ஆசை கொண்ட நாயகன் ஆச்சாரமான இஸ்லாமிய குடும்பத்துப் பிள்ளை. குடும்பச் சுமை காரணமாக வேலை தேடி நாயகி நகரத்துக்கு வருகிறாள். இருவரும் ஒரு சினிமாவில் நடிக்கும் சூழல் அமைகிறது. நல்ல கதைப் படம் என நம்பி அதில் நடிக்கிறார்கள். ஆனால், அந்தப் படம் திரைக்கு வரும்போது துண்டுப் படங்கள் இணைக்கப்பட்ட சதைப் படமாக மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் துன்பங்களைச் சொல்வதே இந்தப் படம். 

ஒரு திரைக்கதையில் சினிமா ஆசை கொண்ட கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்துவிடுகின்றன. ஏனெனில், திரைப்படம் வாழ்வு குறித்தான நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்பதே அதன் ஆதார மரபு. ஆனால், யதார்த்தத்தில் சினிமாவுக்காக வாழ்வைத் தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த யதார்த்தத்தைப் புரியவைக்கும் கதைகளைக் கொண்ட படங்களுக்கு உதாரணங்கள்தாம் ‘மேட்னி’ போன்றவை. இவை உங்களுக்குள் நம்பிக்கையை விதைப்பதில்லை; இந்தப் பாதை இப்படியும் அமையலாம் கவனமாக இருங்கள் என உங்களை எச்சரிக்கின்றன. எல்லா எச்சரிக்கைகளையும் மீறி சினிமாக் கதவுகளைச் சில கால்கள் வந்தடையும்; கைசோர அதன் கதவுகளைத் தட்டிப் பார்க்கும். அவர்களின் வாழ்வு விருதால் நிறையுமா விருதாவாகுமா என்பதே உண்மையில் சுவாரசியமான திரைக்கதை. 

< சினிமா ஸ்கோப் 42 >                                 < சினிமா ஸ்கோப் 44 >

வியாழன், ஏப்ரல் 30, 2015

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது



தமிழ்த் திரையுலகில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கியிருக்கிறார் செல்லப் பாண்டியன் (சிம்ஹா). அவருடைய நண்பன் நாகராஜ் (பிரபஞ்செயன்) சினிமா கனவுடன் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருகிறான். செல்லப் பாண்டியன் அறையில் தங்கியிருக்கும் கார்த்தி (லிங்கா) பெண் மோகத்தில் உழல்பவன். நாகராஜ் தங்கியிருந்த அறையில் பிரச்சினை ஏற்படவே அங்கிருந்து செல்லப் பாண்டியனின் அறைக்கு வருகிறான். கார்த்திக்கும் நாகராஜுக்கும் தொடக்கத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. இந்நிலையில் கார்த்திக்கும் வினோதினி என்ற கிராமத்துப் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. எல்லை மீறிய உறவால் கர்ப்பமாகிறாள் வினோதினி. கார்த்தி அவளிடமிருந்து விலகுகிறான். செல்லப் பாண்டியனும் நாகராஜும் அவளுக்கு உதவுகிறார்கள். இதனிடையே செல்லப் பாண்டியன் தங்கியிருக்கும் அறையின் உரிமையாளருடைய மகள்மீது அவனுக்குக் காதல் ஏற்படுகிறது. செல்லப் பாண்டியன் காதலில் வெற்றிபெற்றானா, படம் இயக்கினானா, வினோதினியும் கார்த்தியும் இணைந்தார்களா என்பதையெல்லாம் யதார்த்தமான போக்கில் சொல்லிச் செல்கிறது சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.


அறிமுக இயக்குநர் மருதுபாண்டியன் இப்படத்தை மிகவும் யதார்த்தமான தளத்தில் நகர்த்திச் செல்கிறார். சினிமா பாவனைகளைப் பெருமளவில் தவிர்த்துள்ளார். சென்னையில் சினிமாக் கனவுடன் திரியும் இளைஞர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கலில் தலையாயது சரியான ரூம் அமையாமல் போவது. வெற்றிபெற்ற பின்னர் சமூகத்தால் கொண்டாடப்படும் திரைத்துறையினர் தங்குவதற்கு ஓர் அறைகூடக் கிடைக்காத அவலத்தைப் பகடியாகவும் வேதனையாகவும் சித்தரிக்கிறது இப்படம். ஆனால் வழக்கமாகத் திரைக்கதையில் காணப்படும் ஒரே திசை சார்ந்த குவியம் இல்லை இப்படத்தில். இப்படத்தைக் கட்டமைப்பவர்கள் சென்னையின் இக்கட்டுகள் நிறைந்த வாழ்வை எதிர்கால வெற்றி எனும் கனவால் சகித்துக்கொள்ளும், கொசுக்கடியால் தூங்க இயலாத அறைகூடக் கிடைக்காத அவலத்தையும் எதிர்கொள்ளும் பரிதாபத்துக்குரிய இளைஞர்கள். இவர்களிடம் பலவீனமான பல குணாம்சங்கள் குடிகொண்டிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் அப்படியே சினிமாவுக்கான ஒப்பனையின்றி உலாவருகிறார்கள். அதனால் இது வழக்கமான திரைப்படம் தரும் அனுபவத்திலிருந்து விலகிநிற்கிறது.

வெவ்வேறு விதமான மனிதர்கள் தங்கள் வாழ்வு ஒளிர வேண்டி, விரும்பி சென்னை என்னும் பெருநகரில் குவிகிறார்கள். செல்லப் பாண்டியனின் கனவு இயக்குநராவது என்றால் அவனைத் தேடி வரும் கிராமத்து அண்ணன் சரவணனின் (இயக்குநர் மருது பாண்டியன்) கதையோ வேறு. கிராமத்தில் குடித்து குடித்துச் சீரழியும் அவரைப் பிழைப்புக்காகவும், குடியிலிருந்து மீட்கவும் சென்னைக்கு அனுப்புகிறார்கள் குடும்பத்தினர். குடிகாரக் கணவன் ஆனாலும் அந்த மனைவிக்கு வெறுப்பு அவனது குடியின் மீது தானே ஒழிய அவன்மீது அல்ல. ஆனால் எப்போதும் படம் திருடுபோய்விட்டதாகச் சொல்லி அந்தப் பணத்துக்கு குடித்துவிடும் கணவன் உண்மையிலேயே பணத்தைத் தொலைத்துவிட்டு கிராமத்துக்கு திரும்பும்போது அதை நம்ப முடியாத மனைவி நடுத்தெருவில் அவரைத் துடைப்பத்தால் கடுமையாக அடித்துவிடுகிறார். சரவணனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் இருக்கும் கணவன் மனைவி உறவு சிறிதுகூட அரிதாரம் பூசப்படாமல் அப்படியே ஈரத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



கார்த்தியின் காதலி வினோதினிக்குக் கார்த்தி துரோகம் இழைத்து தலைமறைவாகச் சென்றுவிடுகிறான். ஒவ்வொரு முறையும் உன்னை மட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என மொழிகிறான். அதை நம்பி அந்தப் பேதைப் பெண் தன்னை இழக்கிறாள். ஆனால் அவன் பழகும் அனைத்துப் பெண்களிடமும் அதேபோல்தான் பேசுகிறான். ஆனால் ஏற்கெனவே மணவாழ்க்கையிலிருந்து வெளியேறிய வினோதினி அவனது வார்த்தைகளை அப்படியே நம்புகிறாள். அவனது ஏமாற்றத்தை எதிர்கொண்டபோதும் அவளால் கார்த்தியை வெறுக்க இயலவில்லை. ஏனெனில் அவள் அவனை உண்மையாக நேசிக்கிறாள். அவன் அவளைத் தேடி வருவானோ மாட்டானோ தெரியாது. ஆனால் அவனை மட்டுமே உள்ளத்தில் இருத்தி அவனுடன் கழித்த அன்பான நாட்களின் நினைவாக அவன் தந்த குழந்தையுடன் அந்தப் பெருநகரில் சிரமமான ஒரு வாழ்வை நடத்துகிறாள். அவளால் கிராமத்துக்குப் போக இயலாது. உன்னத கிராமம் அவளது நிலையைப் புரிந்துகொள்ளாது. அவளுக்கான அடைக்கலத்தை ஒரு பெரு நகரமே வழங்க முடியும் என்பதைப் படம் போகிற போக்கில் சொல்கிறது.

கார்த்தியைக் காமம் அலைக்கழிக்கிறது. பெற்றெடுத்த தாய் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கையில் தனக்குக் காமத்தை வாரி இறைக்கத் தயாராகும் காதலியின் அணைப்பைத் தவிர்க்க இயலாமல் கார்த்தி காமத்தில் நனைகிறான்.  அதே கார்த்தி தாய் இறந்த சோகத்தைச் சொல்லும் பாடல் ஒலிக்கும்போது தன்னை மறந்த போதையில் விக்கித்து அழுகிறான். அவன் துரோகி என எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் கார்த்தி சாதாரண மனிதன். உணர்வுகள் உந்தித் தள்ளும்போது அதைத் தட்டிவிடத் தெரியாமல் அவற்றிடம் சரணாகதி அடைந்துவிடும் சாமானியன்.



இயக்குநராகும் ஆசையில் கதை எழுத உட்காரும்போதெல்லாம் அவனுக்கு ஏதாவது இடையூறு ஏற்படுகிறது. விவேகாநந்தரின் பொன்மொழியைச் சொல்லிச் சொல்லித் தான் ஆரம்பிக்கிறான். ஆனால் நடைமுறை அவனை நகரவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது. சொந்த அறையிலேயே அந்நியன் போல ரகசியமாக இரவில் வந்து தங்குகிறான். வீட்டு உரிமையாளர் இரவில் எல்லாம் சிவாஜி படப் பாட்டுகளை ரசிக்கிறார். ஆனால் செல்லப் பாண்டியனுக்கு அவர் மனம் இளகவில்லை. இதுதான் யதார்த்தம். சினிமாக்காரனான அவனால் தான் காதலித்த பெண்ணிடம் காதலைக்கூடச் சொல்ல இயலவில்லை. அந்தக் காதல் அவனுக்குள் நறுமணம் வீசிவிட்டு காற்றோடு கலந்துவிடுகிறது. தான் காதலித்த பெண் தனக்குத் திருமணம் என்னும் சேதியைச் சொல்லிச் சென்ற பின்னர்தான் தனது கதையின் தொடக்கப்புள்ளியைக் கண்டடைகிறான். விரைவில் பெரிய இயக்குநராகிவிடுங்கள் என அந்தப் பெண் வாழ்த்திவிட்டு மாநகரின் ஏதோ ஒரு வீட்டுக்கு வாழச் சென்றுவிடுகிறாள். அதன் பின்னர் செல்லப் பாண்டியனுக்குத் தேவையான ஒரு முடுக்கம் கிடைத்துவிடுகிறது. அதுவும் உள்ளடங்கியே ஒலிக்கிறது. வெளிப்படையான காட்சிதன்மை கொண்டிருக்கவில்லை.

நண்பர்களுடன் ஓசியில் குடிக்கும் நாகராஜ் தன் அண்ணன் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தர விரும்புகிறான். ஆனால் அவனால் அதைக்கூட நிறைவேற்ற இயலவில்லை.சென்னையில் பெரிய அளவில் சம்பாதிப்பதாய் ஊரிலுள்ளோர் நம்பும் சூழலில் சென்னையில் சினிமாக் கனவுடன் அலையும் இளைஞர்கள் சிங்கிள் டீக்கு வழியின்றித் தள்ளாடுகிறார்கள். கனவுக்கு நனவுக்கும் இடையிலான யதார்த்தம் புரியாத மனிதர்கள் பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் இடையிலான பிணக்கு பற்றியான கிசுகிசுவைக் கிளுகிளுப்புடன் வினவுகிறார்கள். இவையெல்லாம் சினிமாக்காரர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். இந்தச் சிக்கலை யதார்த்தமான சினிமாவாக்கிய மருது பாண்டியன் அதை சினிமாத் தனம் என்னும் பூச்சற்று தந்துள்ளார்.



வசனங்கள் மிகவும் இயல்பானவை. பாதியில் நின்றுபோன படத்தை இயக்கிய இயக்குநருடன் இரவில் செல்லப் பாண்டியன் பேசும்போது, ஏன் சார் படம் நின்று போனது எனக் கேட்கும்போது, மருதநாயகமே டிராப் ஆயிருச்சு, சினிமாவுக்கு லாஜிக் ஏது? அவர் மொழியும்போது அதில் விரக்தி மட்டும் தொனிக்கவில்லை பச்சை உண்மை தெறிக்கிறது. அதே இயக்குநர் படம் கமிட் ஆன பின்னர் காரில் வந்திறங்குகிறார். அதுதான் சினிமா. நடைமேடையில் திரியும் ஏதோ ஒரு மனிதர் சட்டென நவநாகரிக வாழ்வுக்குத் தாவிவிடுவார். இரண்டுக்கும் இடையில் கண்கட்டி வித்தை காட்டும் முதல் பட வெற்றி  கிடந்து ஆட்டுவிக்கிறது.



வினோதினி பாத்திரமேற்ற சரண்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட நடிகர்கள் இயல்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஒளிப்பதிவில் தென்படும் குறை என்றால் படத்தின் வண்ணக்கலவை சீர்மையாக இல்லை. வெவ்வேறு திட்டுத் திட்டான சம்பவங்களின் தொகுப்பாகப் படம் அமைந்துவிட்டிருக்கிறது. சில இடங்களில் தேவைப்படும் மவுனத்தைப் பேணியவகையில் இசையும் படத்துக்கு உதவியுள்ளது. அப்துல்ரகுமான், விக்கிரமாதித்யன் கவிதையென இலக்கிய ரசனையுடன் வெளிப்பட்டிருக்கும் இப்படத்தின் குறைகளைப் புறக்கணித்து படத்துக்கு ஆதரவாக நிற்கிறது பார்வையாளனின் மனம்.

வெள்ளி, ஜனவரி 30, 2015

கலைக்கும் கவளத்திற்குமிடையே

பிழைப்பின் நிமித்தம் சென்னையில் வாழ்ந்த எழுத்தாளர்களின் மனங்களில் அவர்கள் வாழ்ந்த, அவர்களைத் தன்னோடு இணைத்துக்கொண்ட நகரம் ஏற்படுத்திய நேர்மறை, எதிர்மறை பாதிப்புகளைப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு சென்னைக்கு வந்தேன். கடந்த காலச் சென்னையைக் கண்முன் காட்டி நிகழ்காலச் சென்னையைப் புரிந்துகொள்ள உதவுவது இந்நூல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பழ. அதியமான் “இந்தக் கட்டுரைகளை எழுதிய படைப்பாளர்கள் காட்டும் சென்னை அநேகமாகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்களுடையதாக இருக்கிறது” (பக்.15) எனக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. சென்னையின் நுழைவாயிலில் நின்றபடி கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுரைகளைக் குறித்தும் சென்னையின் இன்றைய பிரச்சினைகள் குறித்தும் தமது பார்வையை மிகத் தெளிவாக விவரித்த பின்னரே வாசகனைச் சென்னைக்குள் அழைத்துச் செல்கிறார் தொகுப்பாசிரியர். எனவே வாசகனுக்குக் கட்டுரைகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் கிடைத்துவிடுகிறது. கட்டுரைகளுக்குள் விரவிக் கிடக்கும் தகவல்களும் அனுபவங்களும் சென்னையைவிட அங்கு வாழ்ந்த எழுத்தாளர்களது மனநிலைகளையே பெரிதும் விவரித்துச் செல்கின்றன. “தொடர்ந்து நமது சினிமா கிராமத்தை உயர்வாகவும் நகரத்தை மோசமானதாகவும் சித்தரித்துக்காட்டி வாழ்விட பேதாபேதத்தை நமது பொதுப்புத்தியில் இறக்கிவிட்டது” (பக்.12) எனத் தன் உரையில் குறிப்பிட்டிருக்கும் அதியமான், “இது சென்னை நகரத்தைப் பற்றிய நூல் என்றாலும் உண்மையில் கிராம வாழ்க்கையைப் பற்றிய தீவிரமான சாதகப் பார்வையே இந்நூலின் அடி நீரோட்டம்” (பக்.16) என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுப்புத்தியோ சுயபுத்தியோ வகைக்குள் அடங்காவிட்டாலும் கிராம வாழ்வை நோக்கியே தம் முள்ளைச் சரியவிடுகின்றன இத்தொகுப்பின் பெரும்பான்மையான கட்டுரைகள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை இன்றைக்கு வாசிக்கும்போது அன்றைய நிலையோடு இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பது வாசகனின் இயல்பு. முப்பதுகளில் சென்னை வந்த சி. சு. செல்லப்பா ஐம்பதுகளில் எழுதும்போது, முப்பதுகளில் பத்திரிகைகளும் வாசகர்களும் மிகச் சொற்பமாக இருந்தபோதும் இலக்கியத் தீவிரம், அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் ஆனால் “இப்பொழுது பல மடங்கு வாசகப் புற உலகம் விரிந்திருப்பதற்குத் தக்க விகிதத்தில், எழுத்தாள அக உள்ளம் அந்த அழுத்தம் தீவிரம் காட்டவில்லை...” (பக். 25) என்றும் எழுதியுள்ளார். இன்றைக்கு இணையதள வசதிகள் மலிந்திருக்கும் காரணத்தால் தம் வீட்டுக் குப்பையைக்கூட அவற்றில் உலவவிட்டுவிடுகிறார்கள் எழுத்தாளர்கள். “போலிகள் மலிய மலிய, ஜேம்ஸ் ஜாய்ஸ் சொன்ன மாதிரி, ‘இலக்கியத்திலே குடும்ப ஸ்திரீகளுக்கும் விபசாரிகளுக்கும் உள்ள வித்தியாசம் குறையக் குறைய’ இலக்கிய நோக்கம் தடைப்பட்டுத் தேங்குகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்று க.நா.சு தன் கட்டுரையில் (பக்.72) எழுதியுள்ளது காலகாலத்துக்குமான வாசகமே.

பக்கம் 33இல் வல்லிக்கண்ணன், “தமிழ் எழுத்தாளர்கள் பெரும்பாலரது உள்ளத்தில் உண்மை ஒளி இல்லை, எண்ணத்தில் நல்லது இல்லை, என நாங்கள் உணர்ந்தோம். அவர்கள் எழுத்திலே அழுத்தமில்லை, வாழ்விலே ‘சுரத்’ இல்லை என அறிந்தோம். எழுத்தாளர்கள் பெரும்பாலும் சொல்வாணிபர்களாக மாறிவந்ததையும் தங்கள் எழுத்துக்களைத் தவிரப் பிறர் எழுத்தைப் படித்து ரசிக்க மனமற்றவர்களாக வளர்வதையும் உணர்ந்தோம். பரஸ்பர முகஸ்துதிப் பிரியர்கள் பெருத்து வந்ததை உணர்ந்தோம். பத்திரிகைக்காரர்களும் புத்தக வெளியீட்டாரும் ‘பிஸினஸ் பிஸினஸ்’ என்ற மந்திரத்தை உச்சரிக்கக் கற்றுக்கொண்டார்கள்” என்று எழுதியுள்ளதை வாசிக்கும்போதுதான் இதைத் தமிழ் வாசகர்கள் அதிலும் எழுத்தாளர்கள்மீது ஆர்வங்கொண்டலையும் தொடக்கநிலை வாசகர்கள் படிக்க வேண்டியதன் அவசியம் புரிகிறது. தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பற்றிய முக்கியமான எழுத்தாளர் ஒருவரின் இக்கணிப்பு வாசகனின் மனத்தில் அவர்களைப் பற்றிய மதிப்பீட்டை மறுபரிசீலனைசெய்ய வைக்கும் என்னும் வகையில் இக்கட்டுரை வாசகனின் மேல் வாஞ்சை கொண்டுள்ளது. 

இத்தொகுப்பின் மிக யதார்த்தமான கட்டுரையாக அமைந்துள்ளது கு. அழகிரிசாமியின் கட்டுரை. “சென்னையில் இருக்கும்போது மூன்று வேளைச் சாப்பாட்டுக்கு ஆசை; மூன்று வேளைச் சாப்பாடு கிடைக்கும் இடத்தில் இருக்கும்போது சென்னைமீது ஆசை” (பக்.49). சென்னையின் சாதக பாதகங்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லிச்சென்றுள்ளார் அழகிரிசாமி. அலைபாயும் நெஞ்சில் கலையார்வம் துளிர்ப்பதால் லௌகீக வாழ்வில் உருவாகும் அதிர்வுகள் காரணமான மன உளைச்சலை உணர்த்தியுள்ளார் இவர். 

சாமி சிதம்பரனார் தனது கட்டுரையில், “எழுதும் திறமை மட்டும் இருந்தால் போதாது. எதிலும் “நான் நான்” என்று முன்னே போகும் குணம் வேண்டும். அழைப்பு இருக்கிறதோ இல்லையோ எந்தக் கூட்டத்திலும் விழுந்தடித்துச் சென்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும். பத்திரிகாசிரியர்களையும் பத்திரிகை அதிபர்களையும் காக்காய்பிடிக்கும் குணம் வேண்டும்” என்று எழுத்துத் துறையிலே முன்னேற விரும்புபவர்களை அறிவுறுத்தியுள்ளார். மூத்தோர் சொல்லும் முதிர்நெல்லியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.

“நான் சென்னைக்கு வந்துதான் எழுத்தாளன் ஆனேன் என்பதாக என்னால் எண்ண முடியவில்லை. ஆமாம், நான் எழுத்தாளனாகப் பிறந்தவன்!” (பக்.85) எனச் சுயமரியாதை தொனிக்கச் சொல்லியுள்ளார் ஜெயகாந்தன். அதைப் படித்துக்கொண்டிருந்தபோது மனம் சில பக்கங்களுக்குமுன் படித்த வரி ஒன்றை நினைத்துப் பார்த்தது. அவ்வரியில், “எழுத்தையும் எழுத்தாளர்களையும் வைத்து அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ருசிகரமாகத்தானிருக்கும்” (பக்.79) என ந. சிதம்பரசுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். ருசிகரமாகத்தானிருக்கிறது. 

அனைத்து தருக்கத்தையும் சுவடின்றி மறையவிட்டு வெளிப்படும் கனவுக் காட்சிபோல் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்வுரும் களம் நகரம். நொடிதோறும் தன் வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் மாய ஓவியம் போன்ற சிக்கல் மிகுந்த நகர்ப்புறக் காட்சிகள் படைப்பாளியின் அகத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி எழுதுவதற்குத் தேவையான உந்துதலைத் தருகின்றன. கிராமத்தில் எழுதுவதற்கு அடிப்படையான அமைதிச்சூழல் அமைகிறது. ஆக இரு வாழ்விடங்களுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானதாகிறது. 

பல்வேறு இடங்களிலிருந்து சென்னை வந்த எழுத்தாளர்களது எதிர்பார்ப்புகள் பூர்த்தியான விகிதத்தைப் பொறுத்தே அவர்களது சென்னைக் காதலும் இருந்திருக்கக்கூடும். இத்தொகுப்பின் கட்டுரைகளை எழுதிய எவரும் சென்னையைப் பிறப்பிடமாகக் கொள்ளாதவர்கள். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒருவரது கட்டுரைகூட இல்லாமல் எப்படிச் சென்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும்? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனாலும் நகர வாழ்வு படைப்புக்கு வலுசேர்க்கிறதா அல்லது படைப்பாளிக்கு வலுசேர்க்கிறதா என்னும் விவாதம் எழுப்பும் பாதையில் பயணப்பட்டுக் கிராம, நகர வாழ்வு குறித்த புரிதலுக்குத் துணைபுரிவதால் இத்தொகுப்பு முக்கியமான ஒன்று. தங்களது குறைகளை நகரத்தின்மீது உதறிவிட்டு அப்பழுக்கற்றவர்களாய்த் தங்களை நிறுவ முயலும் மனிதர்களின் மனம் குறுகிக்கொண்டே போக, அது பற்றிய பிரக்ஞையற்று விரிந்துகொண்டே செல்கிறது நகரம். 

பக். : 136 விலை: ரூ. 95
முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2008
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629 001
தொலைபேசி: 04652-278525/159

காலச்சுவடு மே 2009 இதழில் வெளியான மதிப்புரை

ஞாயிறு, ஜூன் 15, 2014

மெட்ரோ ரயிலால் மேம்படும் ரியல் எஸ்டேட்

சென்னையை அறியாதவர்கள் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி யாராவது இருந்தாலும் அவர்களுக்குச் சென்னையில் நீண்டு கிடக்கும் மௌண்ட் ரோடு எனச் சொல்லப்படும் அண்ணா சாலை தெரியாமல் இருக்காது. ஏனெனில் பல தமிழ்த் திரைப்படங்களில் சென்னையின் பிரதான கட்டிடங்களில் ஒன்றாகக் காண்பிக்கப்படும் எல்ஐசி, ஸ்பென்ஸர் பிளாசா போன்றவை இந்தச் சாலையில் தான் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கும் நாளை மாநகரின் மனிதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சென்னை நகரவாசிகளைப் போலவே ரியல் எஸ்டேட் துறையினரும் மெட்ரோ ரயிலை ஆர்வமாக எதிர்கொள்ளவிருக்கிறார்கள். ஏனெனில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகத் தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும் ரயில் ஓடத் தொடங்கிய பின்னர் சென்னை அண்ணாசாலையில் தங்கள் துறை சார்ந்த வணிகம் பெருக வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர். 

ஒரு காலத்தில் அண்ணா சாலையில் அலுவலகங்களை அமைக்க போட்டா போட்டி இருந்தது. ஆனால் சென்னை மாநகரில் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தொடர்ந்து அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் உருவானது. இதன் காரணமாக அண்ணா சாலையில் அலுவலகத்திற்கு வந்துபோக சிரமமானது. மேலும் அலுவலகங்களில் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பின. இந்த நிலை மெட்ரோ ரயில் இயங்கத் தொடங்கியதும் மாறிவிடும் என ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போது அண்ணாசாலையில் இருக்கும் பல கட்டிடங்கள் சென்னை மாநகர் கட்டுமானச் சட்டம் உருவாகும் முன்னர் கட்டப்பட்டவை. எனவே அவை கட்டுமானச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியிருக்காதவை. நிலத்தின் பரப்புக்கும் அதில் உருவாக்கப்படும் கட்டிடத்தின் பரப்புக்கும் உள்ள விகிதத்தை அவை முறையாகப் பேணியிருப்பதில்லை. சில கட்டிடங்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட இரு மடங்கு பரப்பு கொண்ட கட்டிடத்தை எழுப்பியுள்ளன. ஆகவே அவை மறு சீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று ரியல் எஸ்டேட் அமைப்பு அரசிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

தரமான அலுவலகம் என வகைப்படுத்தப்படும் கிரேடு ஏ அலுவலகங்களுக்கான இடம் அண்ணாசாலையில் மிகக் குறைவாகவே உள்ளது. அநேகமான கட்டிடங்களில் கிரேடு பி, சி போன்ற வகை அலுவலகங்களே அமைந்துள்ளன. வாகன நிறுத்தம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டே கிரேடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. சென்னையில் மெட்ரோ ரயில் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பொதுப் போக்குவரத்து மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். கார்களிலும் பைக்களிலும் வந்தவர்கள் மீண்டும் பொதுப் போக்குவரத்தை நாடுவார்கள். இதனால் அண்ணாசாலை அலுவலகங்களுக்கு எளிதில் வந்து போகும் சூழல் உருவாகும்.

ஆகவே பெரும்பாலான கட்டிடங்கள் கிரேடு ஏ வகை அலுவலகங்களை உருவாக்கும் வாய்ப்பை மெட்ரோ ஊக்குவிக்கும். இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தும் நிலைமை ஏற்படும். ஏற்கனவே பல கட்டுமான நிறுவனங்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன என ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நந்தனத்திலும் ஆயிரம் விளக்கிலும் நான்கு லட்சம் சதுர அடிக்கு மேல் அலுவலகம் அமைக்கும் அளவுக்கு இடத்தை வைத்துள்ள கட்டுமான நிறுவனம் இந்த நிலையை முன்னரே உணர்ந்துள்ளதாகக் கூறுகிறது. அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உருவாவதைக் குறிப்பிடும் அந்நிறுவனம் அநேக கிரேடு ஏ அலுவலகங்கள் விரைவில் உருவாகும் என நம்பிக்கையுடன் சொல்கிறது. அத்தனை அலுவலகங்களையும் எளிதில் சென்றடைய வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைவது ரியல் எஸ்டேட் துறையினருக்கும் உற்சாகம் அளிக்கிறது.    

திங்கள், அக்டோபர் 01, 2012

சின்ன விஷயங்களின் கடவுள்: காமத்திப்பூவும் கடவுளும்

தமிழ்மொழி மூலமாக உலக இலக்கியப் பரிச்சயம்கொண்ட வாசகனின் நீண்ட கால எதிர்பார்ப்பு அன்று பூர்த்தியடைந்தது. அருந்ததி ராய் எழுதிய தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் புக்கர் பரிசுபெற்றதிலிருந்தே அந்நாவல் குறித்த பாராட்டு மொழிகளும் அதன்மீது தூற்றப்படும் அவதூறுகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. 28 ஜூலை 2012 வரை 38 மொழிகளில் பெரும் வாசகப் பரப்பை அடைந்திருந்த நாவல் அன்று தமிழிலும் வெளியாகி வாசகர்களின் எண்ணிக்கையை மேலும் சில அல்லது பல ஆயிரங்கள் அதிகரித்துக்கொண்டது- வெளியான அன்றே விற்றுத்தீர்ந்த பிரதிகள் அதற்குச் சான்று. இப்போது 39 மொழிகளில் வெளியான நாவல் என்னும் பெருமையையும் அது பெற்றுள்ளது. அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள் தன்னுடன் மேலும் 3 நூல்களை இணைத்துக்கொண்டு அரங்கேறியது. கிறிஸ்தவர்களின் மற்றொரு பக்கத்தைத் தோலுரித்த கடவுள் வெளியாக மேடை அமைத்துத் தந்தவர்கள் கிறிஸ்தவ அமைப்பினர் என்பது பகைவனையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்துவின் வார்த்தைகள் வெறும் போதனைகளாகச் சுருங்கிவிடவில்லை என்பதை உணர்த்தியது. அதை உறுதிசெய்வது போல் அருந்ததி ராயைச் சமூக நீதிக்கான குரலை வலுவாக வெளிப்படுத்துபவர் என ஜான் அலெக்ஸாண்டர் புகழ்ந்துரைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். 

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டான் போஸ்கோ பள்ளியின் ஒலிக்காட்சி அரங்கில் அந்தச் சனிக்கிழமை மாலையில் முதலில் மலர்ந்தது காமத்திப்பூ. இதிலிருந்து சில கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு ரசித்துதான் வாசித்தார் சுகிர்தராணி. அந்த அரங்கில் காமம் குறித்த தன் அவதானிப்பை, காதலுக்கும் காமத்திற்குமான விலக்க முடியாத நெருக்கத்தை, மனம் சார்ந்த புனிதமும் உடம்பு சார்ந்த இழிவும் கட்டமைக்கப்பட்ட வரலாற்றைச் சொற்களால் அடுக்கிக்கொண்டே போனார் அருந்ததி ராய் வெளியிட்ட காமத்திப்பூவைப் பெற்றுக் கொண்ட பிரபஞ்சன். ஆண்குறியினரின் அபத்தங்களையும் யோனி கொண்டோரின் சிறப்புகளையும் அரங்கைச் சற்றே சலன மடையச் செய்யும் விதத்தில் அவர் வெளிப்படுத்தினார். இறுதியாக யோனியை ஆயுதமாகக் கொண்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியதன் மூலம் ஔவையார், ஆண்டாள் வரிசையில் அடுத்த கவிஞர் சுகிர்தராணிதான் என மொழிந்து தன் உரையைப் பிரபஞ்சன் நிறைவுசெய்தார். யோனியை ஆயுதமாக்கிய கவிஞர் எனப் பிரபஞ்சனால் புகழப்பட்ட சுகிர்தராணி பிரியம் வழிந்த அணைப்பை அவருக்குக் காணிக்கையாக்கினார். அரங்கில் நெகிழ்ச்சி அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன.

அடுத்ததாகக் காலச்சுவடு நவயானா இணைந்து வெளியிட்டிருக்கும் பீமாயணம் என்னும் மொழிபெயர்ப்பு நூல் அரங்கின் மேடைக்கு வந்தது. சமூக விடுதலைக்கும் தீண்டாமைக்கும் குரல் கொடுத்த அம்பேத்கரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரங்கள் மூலமாக உணர்த்தும் புத்தகம் அது. வண்ணச் சித்திரங்களுக்கும் குழந்தைகளுக்குமான தீராப் பிணைப்பை உணர்த்தும் விதத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சோனியா, திருமூர்த்தி என்னும் குழந்தைகள். நூலை அருந்ததி ராய் வெளியிட்டார். நவயானா ஆனந்த் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் சித்திரங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். அடுத்ததாக வெளியான ராஜா சாண்டோ ஒரு பதிப்பு நூல். பேசும் படம் என்னும் இதழை நடத்திய டிவி ராமநாத் எழுதிய இந்த நூலை டிராட்ஸ்கி மருது வெளியிட்டார். இந்தியா முழுவதும் சுற்றித்திரிந்து கலை வளர்த்த ராஜா சாண்டோவின் நூலைச் சென்னை முழுவதும் மிதிவண்டியில் - மிகச் சமீபத்திலிருந்து மோட்டார் வாகனத்தில் - சுற்றித் திரிந்து புத்தகங்களை வாசகர்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர் பரிசல் செந்தில்நாதன் பெற்றுக்கொண்டதும் பொருத்தமானதே. இந்நூல் குறித்து உரையாற்றிய தியடோர் பாஸ்கரன் மௌனப்படக் காலத்தின் சிறப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் மொழிந்தார். டிராட்ஸ்கி மருது உரை நிகழ்த்தியபோது, ஆளுமைகளின் பதிவு குறித்த அவசியத்தைச் சுட்டினார். பதின் பருவத்தில்தான் பார்த்து ரசித்த ஒளிப்பதிவாளர் சுப்பாராவ் போன்ற ஆளுமைகள் குறித்தும் ஓரிரு சம்பவங்கள் குறித்துமான சில ஞாபக துணுக்குகளைப் பகிர்ந்துகொண்டார். 

இறுதியாக வெளியிடப்பட்டது சின்ன விஷயங்களின் கடவுள். வெளியிட்டவர் சுகுமாரன், பெற்றுக்கொண்டவர் கலீஸியன் எழுத்தாளர் மரியா ரெமோண்ட். தமிழறியாத இவர் வாசித்த கொஞ்சு தமிழ் உரையை அரங்கினர் ரசித்தனர் என்பதன் வெளிப்பாடுதான் சுகுமாரன் அவருக்குத் தெரிவித்த கைகுலுக்கலுடன் கூடிய பாராட்டு. இந்நூல் வெளியீடு குறித்த பல விவரங்கள் விரிவாக இதே இதழில் தொடர்ந்த பக்கங்களில் வெளியாகியுள்ளன. இறுதியாக மைக்கேல் அமலதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார். அரங்கை வடிவமைத்திருந்த ரோஹிணி மணி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்வில் இடம்பெற்ற ஒளிப்படக் காட்சிக்குப் பின்னணிக் குரல் கொடுத்த சிந்து, விட்டு விடுதலையாகி என்னும் பாரதியின் பாடலைப் பாடிய ரவி சுப்பிரமணியன் போன்ற பலரது துணையுடனும் பார்வையாளர்களின் ஒத்துழைப்புடனும் எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவேறியது காலச்சுவடு பதிப்பகத்தின் இவ்வெளியீட்டு நிகழ்வு. இந்த மாலையின் நினைவைப்போல், பள்ளிக் குழந்தைகள் உருவாக்கிய, ஆசிரியர் எஸ். டி. ராஜ் அணிவித்த ஏலக்காய் மாலையின் மணமும் சில நாட்களுக்கு அருந்ததிக்குள் கமழ்ந்துகொண்டிருக்கக் கூடும்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்