நீராய்ப் பரவும் துரோகம்
அவர்கள்
மூவரும் பால்ய சிநேகிதர்கள். துறுதுறுப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அவர்களது
தோழமையில் களங்கம் சேர்கிறது. வெகுளித் தனமான அவர்கள் உறவில் கல்மிஷம் சுவராக
எழும்பி நிற்கிறது. தனிமனிதர்களிடையே அச்சுறுத்தும் அளவிலான வெம்மை சூழ்ந்த இடைவெளியை ஏற்படுத்தி அதில்
குளிர்காய்கிறது தந்திரம். தனிமனித உறவில் ஏற்படும் சிக்கல்களை விவரிப்பதன் மூலம்
துயரத்திலும் தீர்க்கப்பட முடியாத சிக்கலிலும் தவித்துக்கொண்டிருக்கும் தேசத்தின்
பிரச்சினையை ஒமர் படம் மூலம் உணர்த்துகிறார் இயக்குநர் ஹேனி அபு அஸாத். இவர் இஸ்ரேலின் நாஸரேத்தில் பிறந்த பாலஸ்தீன
இயக்குநர். பாலஸ்தீனப்
பிரச்சினையை அவர் கையில் எடுப்பது இதுவே முதல் முறை. சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில்
86ஆவது ஆஸ்கர் பரிசுக்காக அனுப்பப்பட்டது. 2013-ல் கேன் படவிழாவில் ஜூரி விருதைப் பெற்றது.
பேக்கரி
ஒன்றில் பணிபுரியும் ஒமர் (ஆதம் பக்ரி) ஒவ்வொரு முறையும் தனக்கெதிரே உயர்ந்து நிற்கும்
பெரிய சுவரைத் தாண்டியே தன் காதலி நடியாவைச் (லீம் லுபானி) சந்திக்கச் செல்கிறான். பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியை
இஸ்ரேலிலிருந்து பிரிப்பதற்காக இஸ்ரேலியத் தரப்பு அமைத்தது இந்த 25 அடி உயர
தடுப்புச் சுவர். ஒமர், தரே (இயாத்
ஹூரானி), அம்ஜத் மூவரும் பாலஸ்தீனிய
விடுதலைக்காகப் போராடும் தெருவோரக் குழுவினர். இந்தக் குழுவுக்குத் தலைவன் தரே,
அவனுடைய தங்கைதான் நடியா.
நண்பர்கள்
மூவரும் துப்பாக்கி ஏந்த அவசியமான நுட்பமான பயிற்சி எடுக்கிறார்கள். இஸ்ரேலிய
ராணுவ வீரர் ஒருவரை ஓரிரவில் தொலைவில் இருந்து சுட்டுக்கொல்கிறார்கள். மூவரும்
இந்தச் சம்பவத்தில் இணைந்து செயல்பட்டாலும் துப்பாக்கியால் சுடுவது அம்ஜத்தான்.
இந்தச் சம்பவத்தைத் துப்பு துலக்க வரும் இஸ்ரேலிய விசாரணக் குழுவிடம் ஒமர்
அகப்பட்டுக்கொள்கிறான். தனியறையில் வைத்துத் துன்புறுத்துகின்றனர். விசாரணை
நடத்தும் ராமி (வலீத் ஜுவைதர்) ஒமரின் அந்தரங்கப் பகுதியின் மயிர்களை சிகரெட் லைட்டரால் கொளுத்துகிறான். பெரிய அலறலோ இதயத்தைப்
பிளக்கும் பகீர் இசையோ பின்னணியில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் மயிர் பொசுங்கும்
வாசனை நம்மை நிலைகுலையச் செய்கிறது.
இஸ்ரேலிய
வீரரைக் கொன்றது தரே என நினைத்து அவனை ஒப்படைக்கும்படி ஒமரை வற்புத்துகிறான் ராமி.
நடியா குறித்தும் ஒமரின் காதல் பற்றியும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதாகத்
தெரிவிக்கும் ராமி அதைக் கொண்டே ஒமரைத் தங்களுக்கு ஒத்துழைக்கப் பணிக்கிறான். வேறு
வழியற்ற சூழலில் ராமிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறுகிறான்
ஒமர்.
தரேவிடம்
ஒமர் நடந்ததை விவரிக்கிறான். யாரோ ஒருவன் துரோகியாகச் செயல்படுவதாகவும் அவனைக்
கண்டுபிடிக்க வேண்டும் என்று தரே ஒமரிடம் கூறுகிறான். மூவரும் அது பற்றி விரிவாக
விவாதிக்கிறார்கள். துரோகி நீயாகவோ நானாகவோ அம்ஜத்தாகவோ வேறு யாராகவோ இருக்கலாம்
அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறான் தரே. இஸ்ரேலியர்களுக்கு எதிராக மற்றொரு
தாக்குதல் நடவடிக்கை எடுக்க முயல்கிறார்கள். இப்போது மீண்டும் ஒமர் பிடிபடுகிறான்.
தங்களை ஏமாற்றியதாகக் கடிந்துகொள்கிறான் ராமி. அவன் ஒரு அரேபியன் என்பதை அவன்
பேசும் பாஷையை வைத்துக் கண்டுபிடிக்கிறான் ஒமர். நடியா குறித்த ரகசியம்
எல்லாவற்றையும் தான் அறிந்திருப்பதாகத் தெரிவிக்கிறான் ராமி. எப்போது
வேண்டுமானாலும் அவளை ஒரு பரத்தையாகத் தங்களால் மாற்ற முடியும் என வக்கிரத்துடன்
மொழிகிறான் அவன். மனித
மனத்தின் மென்மையான பகுதியை கீறுவதன் மூலம் தனக்கான அனுகூலத்தை எதிர்பார்க்கிறான்
ராமி. அந்த வார்த்தைகள் ஒமரைச் சரியான இடத்தில்
தாக்குகின்றன. மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்கிறான் ஒமர். அவனது காலில் ஆட்காட்டிக்
கருவியைப் பொருத்தி அவனை வெளியே அனுப்புகிறான் ராமி.
இருமுறை
ஒமர் விசாரணையிலிருந்து வெளியே வந்ததால் அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவன்
இரண்டு பக்கங்களுக்கும் வேலை செய்கிறானோ என்ற ஐயம் நடியாவுக்கே வருகிறது.
நடியாவும் அம்ஜத்தும் தனியே பார்த்து உரையாடுவதை ஒமர் காண்கிறான். அவன் மனம்
புண்படுகிறது. இருவரும் விவாதிக்கும்போது அவன் நாட்டுக்குத் துரோகம் செய்வதாக
நடியா நினைக்கிறாள், நடியா தனக்குத் துரோகம் செய்வதாக ஒமர் எண்ணுகிறான். தனி மனித
உணர்வுகளும் நாட்டுப் பற்றும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. விவாத முடிவில்
கோபத்துடன் வெளியேறுகிறாள் நடியா. ஆழ்ந்த துக்கத்துடன் நகர்கிறான் ஒமர். அப்போது
மன அழுத்தம் தாங்காமல் சுவரில் கைகளால் ஓங்கிக் குத்திக்
காயமேற்படுத்திக்கொள்கிறான். காதலால் ஏற்பட்ட ரணத்தை கைகளின் வலியில் கரைந்துபோகச்
செய்கிறான். மிகச் சிக்கலான தருணங்களை இப்படியான எளிய காட்சிகளில் உயிரோட்டத்துடன்
வெளிப்படுத்துகிறது படம்.
தரே
இறந்த பின்னர், அம்ஜத் கூறியதை நம்பி ஒமர் அவளை அம்ஜத்துக்கு மணம் முடிக்கும்
பொருட்டுப் பேசச் செல்லும் காட்சியிலும் காபி கோப்பையின் கீழ் வழக்கம் போல் காதல் கடிதத்தை வைக்கிறாள்
நடியா. ஆனால் ஒமர் அதைப் புறக்கணித்துவிடுகிறான். அவனுக்குத் தன்னைப்
பிடிக்கவில்லை என்று கருதி அம்ஜத்துக்குச் சம்மதம் சொல்கிறாள். இருவருமே அதைப்
பற்றி விவாதிக்கவே இல்லை. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். வாழ்வில்
பெரும் பிழை தரும் முடிவை வெறும் ஈகோ காரணமாக எடுத்துவிடுகிறார்கள்.
நடியாவுடன்
சேர்ந்து வாழ விழைந்து ஒமர் சிறுகச் சிறுகப் பணம் சேர்க்கிறான். தேனிலவுக்கு
மகிழ்ச்சி நிறைந்த பாரீஸ் நகருக்குச் செல்ல விரும்புகிறாள் நடியா. இருவரும்
காதலைச் சன்னமாக வெளிப்படுத்திருக்கிறார்கள். ஆனால் ஆழ் மனதை ஊடுருவும் அடர்த்தியான
பார்வையைப் பரிமாறிக்கொள்கிறார்கள். சிறு சிறு காதல் கடிதங்கள் அவர்களை இணைக்கும்
பாலமாக இருக்கின்றன. பதுங்கு குழி போன்ற தனிமைச் சிறையில் கிடக்கும் அவன் ஒற்றை
எறும்புடன் தனது பேசுமளவுக்கு மென்மையான குணம் கொண்டவன். சிறு பூச்சியைக் கூட
கொல்வதை அவன் மனம் ஒப்புவதில்லை.
நடியாவை
அடைவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவனாக, நேர்மையானவனாக ஒமர் இருக்கிறான்.
நடியாவும் ஒமரை ஆழமாக நேசிக்கிறாள். ஆனால் ஒமரும் நடியாவும் சேர முடியாமல்
போய்விடுகிறது. இதன் பின்னணியில் சூதும் வாதும் கைகோத்து நிற்கின்றன. ஆகவே அம்ஜத்
நடியாவுடன் சேர்ந்துவிடுகிறான். அவனும் நடியாவை விரும்புகிறான். ஆனால் தந்திரமாக
அவளை அடைந்துவிடுகிறான். மெல்ல மனத்திரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை
நம்மால் உணர முடிகிறது.
இறுதியில்
மீண்டும் தன்னைத் தேடி வந்து மற்றொரு போராளிக் குழுத் தலைவனைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறான்
ராமி. அவற்றைச் சொல்லாவிட்டால் ஒமரையும், நடியாவையும், அம்ஜத்தையும்
அழித்துவிடுவதாக மிரட்டுகிறான். நொறுங்கிப் போன மனத்துடன் எப்போதும் சரசரவென ஏறும்
சுவரில் ஏற முடியாமல் தடுமாறி உட்கார்ந்துவிடுகிறான் ஒமர். அப்போது அந்த வழியே
யாசர் அரபாத் போன்ற ஒருவர் வந்து அவனுக்குச் சுவர் மீது ஏற உதவுகிறார். எல்லாம்
விரைவில் சரியாகிவிடும் என்று கூறும் அவர் அவன் சுவர் மீதேறிக்கொண்டிருக்கும்போதே
மெதுவாக அந்த இடத்தைக் கடந்துபோய்விடுகிறார்.
மகிழ்ச்சி, நட்பு, காதல்,
சந்தேகம், ஏமாற்றம், துரோகம், விரக்தி போன்ற மனிதர்களை அலைக்கழிக்கும் உணர்வுகள்
படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆழ் மன உணர்வுகள் மிக மிக மென்மையாகக்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எங்கேயும் பெரிய அளவிலான நாடகத் தன்மை இல்லை. படத்தின்
கதையில், திரைக்கதையில் முக்கோணக் காதல் போன்ற நாடகத்தனமாக அம்சங்கள் இருந்தபோதும்
அவை வெளிப்படும் விதம் நாடகத் தன்மையைப் புறந்தள்ளியதாக இருக்கிறது.
பின்னணி
இசையில் ஆங்காங்கே நாய்க் குரைப்பின் ஓசையும், தேவைப்படும் இடங்களில் வாகனங்களின்
அச்சமூட்டும் ஒலியும் வெளிப்படுகின்றன. பல இடங்களில் மௌனமாகவும் அடங்கிய ஒலியுடன்
காட்சிகள் நகர்கின்றன. காட்சிகள் கண்களை உறுத்தாதவாறு மிக நிதானமாக
நகர்த்தப்பட்டுள்ளன. காட்சிகளின் உணர்வுகளைப் பார்வையாளன் தனக்குள் வாங்கி அவற்றை
அனுபவிக்க அவசியமான கால இடைவெளிகளைப் படம் ஏற்படுத்தித் தருகிறது. நம்பிக்கைகளை
நடுவது சமூகக் கடப்பாடு என்னும் வாசகத்தைத் தாங்கிய விளம்பரப் பலகை ஒன்று
பின்னணியில் இடம்பெறுகிறது. ஆனால் அவர்கள் வாழ்விலோ நம்பிக்கைகள் தகர்க்கப்படும்
சம்பவங்கள் நிரம்பி வழிகின்றன. பார்வையாளன்
அந்த வாசகத்தின் அபத்தத்தை எண்ணி வேதனையுடன் கூடிய மெல்லிய புன்னகை பூக்கிறான். ஒரு தேசம் அந்நிய சக்தியிடம் அகப்படக் காரணம்
எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும்கூட. அவர்களை அழிப்பது எதிரிகளை அழிப்பதைவிட
பிரதானமானது என்னும் செய்தி நுட்பமாக வெளிப்பட்டுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினையைக்
கையாண்டாலும் படம் நகரும் விதத்தில் ஒரு திரில்லராகவே உள்ளது. ஆனால் அடர்த்தியான
கேள்விகளை ஆழ் மனதில் உருவாக்குவதில் படம் தனித்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தக்
காரணத்தாலேயே ஒமர் பிற படங்களிலிருந்து தனிப்பட்டு நிற்கிறது.
நண்பர் முரளியின் அடவி ஏப்ரல் 2015 இதழில் வெளியானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக