இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 31, 2019

சூப்பர் டீலக்ஸ்: அடுகரி தொடர வீழ...


ஆரண்யகாண்டம் படத்துக்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸுடன் வந்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஒரு புறம் அறிவியல் மறுபுறம் ஆண்டவர் என நகரும் கருணயற்ற உலகத்தில், எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தபோதும், கிடைக்கும் தருணத்தை மகிழ்ச்சியாக வாழ்வதே நிம்மதி எனும் ஆதி காலத்து உபதேசத்தை நவீனத் திரைப்படமாக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. 

மனத் தளர்ச்சி அடைந்திருந்த முன்னாள் காதலரை வீட்டுக்கு அழைக்கிறார் திருமணமான வேம்பு (சமந்தா). வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உறவு நிகழ்கிறது. அடுத்த கணம் மரித்துவிடுகிறார் காதலன். அதிர்ச்சியில் உறைகிறார் வேம்பு. அந்த நேரத்தில் வீட்டுக்கு வருகிறார் அவருடைய கணவர்முகில் (ஃபகத் பாசில்). 


நான்கு வளரிளம் பருவ நண்பர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நண்பனுடைய வீட்டில் ‘பக்திப் படம்’ பார்க்கத் திட்டமிடுகிறார்கள். படம் தொடங்குகிறது.அதில் நடித்திருக்கும் நடிகை நண்பர்களில்ஒருவனான சூர்யாவின் தாய் லீலா (ரம்யாகிருஷ்ணன்). அதிர்ச்சியடைந்த சூர்யா தாயைக்கொல்ல விரைகிறான். 

ஜோதியின் (காயத்ரி) கணவர் மாணிக்கம் ஏழாண்டுகளுக்கு முன்னர் ஓடிச்சென்றுவிட்டார். அவர் திரும்பிவருகிறார் என்ற தகவலால் உற்சாகமடைந்திருக்கிறான் அவர்களுடைய மகன் ராசுக்குட்டி. வீடே மாணிக்கத்தின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாணிக்கம் ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறார்.


சுனாமியில் இயேசு சிலையைப் பிடித்ததால் உயிர்பிழைத்த தனசேகரன் (மிஷ்கின்) அற்புதம் என்ற கிறித்தவராகிவிடுகிறார். ஆண்டவருடைய அற்புதத்தால் நோயிலிருந்து மனிதர்களைமீட்டுவருகிறார். அவருடைய மகன் வயிற்றில் ஸ்குருடிரைவர் குத்தி உயிருக்குப் போராடுவதாகத் தகவல்வருகிறது. அவர் ஜெபத்தை நம்ப, மனைவிமருத்துவமனைக்குச் செல்லத் துடிக்கிறார். படத்தில் ஈவு இரக்கமே இல்லாமல் வெட்டி எறிந்திருக்க வேண்டிய கதை அற்புதத்தின் கதை. மிஷ்கினைத் தாங்கிக்கொள்ள தனி மனம் வேண்டும். 


இந்த நான்கு சம்பவங்களின் தொடர்ச்சிகளை அடுக்கி உருவாக்கப்பட்டுள்ளது சூப்பர் டீலக்ஸ். தற்செயல் நிகழ்வின் விளைவை அடிப்படையாகக்கொண்டு 2006-ல் வெளியான ‘பேபல்’ திரைப்படத்தைப்  போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்பை அடியொற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஏற்கெனவே இதே பட்டர் ஃப்ளை எஃபெக்ட் உத்தியைப்  பயன்படுத்தி தசாவதாரம் படத்தை கமல் உருவாக்கியிருக்கிறார். அதில் விஷ்ணு சிலை கடலில் இதில் இயேசு சிலை கடலில். அதிலும் சுனாமி இதிலும் சுனாமி.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் படம். அந்தநேரத்தைச் சுவாரசியப்படுத்த பல பின்னணி விவரங்களைப் படத்தில் பார்த்துப் பார்த்துச் சேர்த்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல் ஃப்ரேம் செட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நினைவுகளைக் கிளறும் விதத்தில் அமைந்துள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையிலான பாலியல் கிளர்ச்சி தரும் கதைகள், சொற்றொடர்கள் ஆகியவை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் திருநங்கைகளைக் கிண்டல் செய்யும் காட்சியும், வேம்புவே தான் ஒரு ஐட்டமா எனக் கேட்கும் காட்சியும் அருவருப்பாக உள்ளது. 


பின்னணியில் ஒலிக்கும் பாடல், சுவரொட்டிகள், பயன்படுத்தப்பட்டிருக்கும் அரங்கப் பொருட்கள் எனஅனைத்துமே சினிமா அனுபவத்தைத் தருவதில் உயிர்த் துடிப்புடன் உள்ளன. பப்பிலஹரியின் இசையில் உருவான டிஸ்கோ டான்சர் பாடலுடன் (இந்த டிஸ்கோ டான்சர் படம் தமிழில் பாடும் வானம்பாடி என்னும் தலைப்பில் ஆனந்த்பாபுவின் நடிப்பில் வெளியானது) முடிவடையும் இந்தப் படத்தில் பல பழைய பாடல்கள் பின்னணி இசையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னணி ஒலிகளுக்கும் இசைக்கும் பங்களித்தவகையில் யுவன் ஷங்கர் ராஜா பேரளவில் சூப்பர் டீலக்ஸை சினிமாவாக்க கைகொடுத்துள்ளார். 

தியாகராஜாவை மீறி சமந்தாவும் விஜய் சேதுபதியும் முன்னணிக்கு வந்துவிடுகிறார்கள். நடந்த சம்பவம் பற்றிய எந்தக் குற்றவுணர்வுமின்றி மிக இயல்பான மனநிலையைப் படம் முழுவதும் சமத்காரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா. அந்த நடிப்புஅந்தக் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீத நம்பகத்தன்மையை அளித்துவிடுகிறது.


திருநங்கையாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பான  உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஃபகத் பாசில் சடலத்துடன்சகஜமாக உரையாடும் காட்சி ஆசுவாசம் தருகிறது. ராசுக்குட்டியாக நடித்திருக்கும் சிறுவன் தாய் தோற்றத்தில் வந்திருக்கும் தந்தையை அப்படியேஏற்றுக்கொள்ளும் விதம் நெகிழ்ச்சியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் பக்ஸ் படத்தில் ஒட்டவே இல்லை. அவர் வரும் காட்சிகள் அலுப்பாகவே உள்ளன. 

தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்தைக் கையாண்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்த தன்மையால் எந்த இடத்திலும் உணர்வுரீதியாகப் படத்துடன் ஒன்ற வேண்டிய தேவை எழவில்லை. சினிமா என்பது ரசனையுடன் பார்ப்பதற்குகந்த சாதனம் என்ற அளவிலேயே சினிமாவைப் படைத்திருக்கும் குமாரராஜா அதில்கருத்தையும் சொல்லியிருப்பது உறுத்தலாக உள்ளது. சமகால விஷயங்களை அங்கங்கே விதைத்துவிட்டு யதார்த்தம் என்று சொல்வது யதார்த்தமல்ல. வாழ்வின் ரகசியத்தை வாழ்பவர்களே அறிந்துகொள்ள மாட்டார்களா?  


நவீனமாகப் படத்தை உருவாக்கியிருந்தாலும் படத்தின் அடிப்படை அடுகரி தொடர வீழ… எனும் விவேக சிந்தாமணிப் பாடல் தந்த வாழ்வியல் தத்துவமே என்பதால் சூப்பர் டீலக்ஸ் புதுத்தொன்னையில் பழைய நெய்.

புதன், மார்ச் 20, 2019

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்


இளைஞன் கௌதம் (ஹரிஷ் கல்யாண்) சிறுவயதிலேயே அன்னை தன்னை விட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேத்தியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் ஃபேஷன் டிசைனிங் கல்லூரி மாணவியான தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தாராவுக்கும் ரோஹித்துக்கும் திருமணம் செய்து வைப்பது எனச் சிறுவயதிலேயே பெரியவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இந்நிலையில் தாராவுக்கும் கௌதமுக்கும் காதல் மலர்கிறது. தாரா ரோஹித்தைத் திருமணம் செய்தாரா கௌதமுடன் இணைந்தாரா என்பதைத் திரைக்கதையாகக் கொண்டிருக்கிறது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.

முழுக்க முழுக்க காதல் படமான இதன் திரைக்கதை சற்றுத் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கிறது. படத்தின் உயிர்நாடியே, கௌதமின் தாய் அவருக்குப் பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஏமாற்றத்தை சிறுவன் கௌதமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்னும் உளவியல் பிரச்சினைதான். இந்த உளவியல் சரடைப் பின்பற்றிச் செல்லாதவர்களுக்குப் படம் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கக்கூடும். 

சிறு வயதில் எதிர்கொண்ட நம்பிக்கைத் துரோகத்தால் யாரையும் நம்பாமல் எவரிடமிருந்தும் எட்டியே நிற்கும் கௌதமுக்கு தாராவின் அன்பு கிடைக்கிறது. வெறும் மனரீதியான அன்பு மாத்திரமல்ல அது; காதலைக் கடந்து இருவரும் காமத்தை நுகர்கிறார்கள். அதன் உச்சபட்ச எல்லைகளைத் தாண்டிய பயணத்தில் இன்புறுகிறார்கள். வழக்கமாகக் காதலர்களுக்கிடையே எழும் அதே பிரச்சினை இவர்களுக்கிடையேயும் எழுகிறது. ஆனால், தாரா அதைப் பக்குவப்பட்ட மனத்துடன் திறம்படக் கையாள்கிறார். கௌதமுக்கு அந்த அளவுக்குக் காதல் உணர்வைக் கையாளத் தெரியவில்லை. தான் தாரா மீது கொண்டது காதலா என்பதேகூட அவருக்குக் குழப்பமாக உள்ளது.



ஷில்பா மஞ்சுநாத், ஹரிஷ் கல்யாண் இருவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். காதல் ஏக்கம், காதலனின் பக்குவமின்மை, பொறுமையின்மை குறித்த வருத்தம், இவற்றின் காரணமாகத் தான் கையறு நிலைக்குத் தள்ளிவிடப்படும் சூழல் ஆகிய அனைத்தையும் குறிப்பாக, ஆண்களால் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் இளம்பெண்ணின் உணர்வைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. கௌதமின் அப்பா (பொன்வண்ணன்) கூடத் தன் மனைவி தன்னைப் பிரிந்து போனதன் நியாயத்தை உணர்ந்தவராகவே இருக்கிறார். பிரிந்து சென்றாலும் தன் குழந்தைமீது அன்பு செலுத்தும் தாயாகத்தான் இருக்கிறார் கௌதமின் அம்மா. அவரை மணந்துகொண்டவர் கூட கௌதமின் கோபத்தைப் புரிந்தவராகவே இருக்கிறார். ஆனால், விடாப்பிடியான கோபத்தாலும் விட்டேத்தியான மனத்தாலும் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டுத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் சதா துன்பத்தில் தள்ளுபவராக இருக்கிறார் கௌதம். அவருக்கும் அது புரிகிறது. ஆனால், அவரது மனநிலை அவரை மீண்டும் மீண்டும் அந்த முட்டுச் சந்திலேயே கொண்டு நிறுத்துகிறது.

கௌதமின் அகச் சிக்கல்களை உணர்த்துவதில் படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு உறுதுணையாக உள்ளன. படத்தின் தொடக்க காட்சிகளில் கௌதம் கதாபாத்திரத்துக்குத் தரப்பட்ட ஹீரோயிசப் பளுவை அவரால் சுமக்க முடியவில்லை.  ஒரு மாஸ் நடிகருக்குரிய சுமை அவருக்குச் சற்று அதிகப்படியாகவே உள்ளது. 


உளவியல் சார்ந்த பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டதால் படத்தில் புறவயமான சிக்கல்களைவிட அகவயமான சிக்கல்களே அதிகம் எடுத்தாளப்பட்டுள்ளன. அதனாலேயே வழக்கமான ரௌடியைக் காதலிக்கும் இளம்பெண் என்ற பாணியில் செல்லாமல் திரைக்கதை உணர்வுரீதியான வேறொரு மோஸ்தரில் பயணம் செல்கிறது. அதனால்தான் இந்தப் படத்தைக் கவனத்தில் கொள்ளவும் வேண்டியதிருக்கிறது.

கௌதமின் நண்பர்களாக வரும் மாகாபா ஆனந்த், பால சரவணன் ஆகியோரது காட்சிகள் படத்தில் தீவிரத் தன்மையைச் சற்று மட்டுப்படுத்த திரைக்கதையில் பயன்பட்டுள்ளன. ஆண் பெண் உறவு குறித்த பரிசீலனை வழியே ஒழுக்கம் பற்றியும் படம் கேள்வி எழுப்புகிறது. ஒழுக்கசீலர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடிய சாத்தியம் கொண்ட இந்தத் திரைப்படத்தில். இறுதிவரை எந்த ஒழுக்கப் பாடமும் எடுக்காமல் தீர்வையும் சொல்லாமல் காதல் வாழ்வை அதன் போக்கில் அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர். அந்த வகையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உருப்படியான காதல் ஆட்ட முயற்சி.


ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

சர்வதேசத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21


மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2019-ம் ஆண்டைத் தொல்மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும்.  ஏனெனில் நாம் நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். முதல் மொழிப் போராட்டம் 1938-ல் தொடங்கி 1940வரை நடைபெற்றிருக்கிறது.  

சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ல் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையைப் பிறப்பித்தார். இதை அடுத்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பு, இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்தும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன் (1939 ஜனவரி 15 அன்றும்), தாளமுத்து (1939 மார்ச் 11 அன்றும்) ஆகிய இருவர் உயிர் தியாகம் செய்தார்கள். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

இந்த பிப்ரவரி 21தான் சர்வதேசத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அது கொண்டாடப்படுவதற்கான காரணம் நமது மொழிப் போர் அல்ல. அது வேறொரு வரலாற்றைக் குறிக்கிறது. வங்க தேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலேயே சர்வதேசத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 கொண்டாடப்படுகிறது.

மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்க தேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்க மொழியே பேசப்பட்டது என்பதால் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. தாக்கா பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பிப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் பின்னர் வங்க தேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடுவகையில் விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேசத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்குவந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும் அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் உயிரை மாய்த்துக்கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இது போக இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

1968-ம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது ”இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார்.  இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி கல்லூரிக் கல்வி வரை தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறையானது. இன்னும் உலகில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் புரிந்துகொள்ளும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.


மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும் 43 சதவீத மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இவற்றில் பல மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்துக்குள்ளேயே இருக்கும். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளது. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நாம் எவ்வளவு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இந்த நாள் நமக்குத் தரும் பாடம்.

ஞாயிறு, டிசம்பர் 30, 2018

2018 தமிழ்த் திரைப்படங்கள்: இனியொரு படம் செய்வோம்!


ஐந்நூறு, அறுநூறு கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான படத்தை உருவாக்கும் அளவுக்குத் தமிழ்த் திரைப்படம் தொழில்நுட்பரீதியாக வளர்ந்திருக்கிறது. அதே நேரம் உலக அளவில் ‘இதுதான் எங்கள் படம்’ என முன்னிறுத்தும் வகையில் நமது நிலம் சார்ந்த, பாரம்பரியம் சார்ந்த, பண்பாடு சார்ந்த கலை நுட்பம் கூடிய ஒரு படமாவது இங்கே உருவாக்கப்படுகிறதா என்றால் பெருத்த மௌனமே பதிலாகிறது. ஆனாலும், அப்படியொரு படம் உருவாகக்கூடும் என்னும் நம்பிக்கை சூறைக்காற்றிலும் அணையாத மெல்லிய சுடர் போல் உயிரைத் தேக்கிவைத்துக் காத்திருக்கிறது.

2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை முதல் பாதியைவிட இரண்டாம் பாதி பரவாயில்லை. இந்த ஆண்டு வெளியான படங்களில் மாறுபட்டவை என ‘சவரக்கத்தி’ தொடங்கி ‘கனா’ வரை பலவற்றைச் சொல்லலாம். ‘சவரக் கத்தி’யைப் பொறுத்தவரை படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவைவிட நடித்திருந்த இயக்குநர்கள் ராமும் மிஷ்கினும் அதிகம் பேசப்பட்டார்கள்; அந்த அளவுக்குப் படம் பேசப்படவில்லை.

பி.எஸ்.மித்ரன் இயக்கிய ‘இரும்புத்திரை’ பொழுதுபோக்கு நோக்கம் கொண்ட படம் என்றபோதும், டிஜிட்டல் இந்தியா என்ற முழக்கத்தின் உள் நோக்கத்தைக் கேள்வியுடன் அணுகி, துணிச்சலாகவும் புத்திசாலித்தனமாகவும் கதையை நகர்த்திச் சென்ற காரணத்துக்காகத் தனித்துத் தெரிகிறது.


திருமணத்துக்கு வெளியேயான உறவு ஒரு சாதாரணக் குடும்பத்தைப் பாதிக்கும் விதம் பற்றிப் பேசிய படம் காளி ரங்கசாமி இயக்கிய ‘ஒரு குப்பைக் கதை’. ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற படங்களில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட விஷயம்தான் படத்தின் கரு. தகவல் தொழில்நுட்பத்துறையினரின் வாழ்வு பற்றிய மேம்போக்கான பார்வையைக் கொண்டிருந்த படம் என்றபோதும், சென்னை மாநகரில் நம் பார்வையில் தினந்தோறும் தென்படும் குப்பை அள்ளும் எளிய மனிதர்களின் வாழ்வை இயன்றவரை சினிமாத்தனமற்ற காட்சிகளாகக் கொண்டதால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த படமிது. குப்பை பொறுக்குவோரை மையமாக வைத்து இயக்குநர் துரை ‘பசி’ என்னும் படத்தை இயக்கியதையும் இந்தப் படம் நினைவுபடுத்திச் சென்றது.

ரஜினி காந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தை வைத்து ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை இரண்டாம் முறையும் பேசவைத்தார் பா.இரஞ்சித் என்னும் பெருமையை அவருக்கு அளித்த ‘காலா’ தமிழ்த் திரைப்படத் துறைக்கு எந்தப் பெருமையையும் பெற்றுத் தரவில்லை. மாய யதார்த்த படம் என்னும் புதிய வகையில் முயன்றதைத் தவிர வேறொன்றும் இல்லாமல் போனதால் புது இயக்குநர் எஸ்.பி.மோகன் இயக்கிய ‘பஞ்சு மிட்டாய்’ கவனிக்கப்படாமலே போயிற்று.  



ஆகஸ்டில் வெளியான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ விமர்சகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றது. இயக்குநர் லெனின் பாரதியை அழைத்துப் பல விமர்சனக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. தமிழ் நிலமும் எளிய குடியானவனின் வாழ்வும் உலகமயமாதலில் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாவதைப் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் இல்லாமல் எளிமையாகச் சொன்ன தன்மைக்காகப் பாராட்டப்பட்ட படமிது. என்றாலும், ஒரு சினிமாவாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ அடிவாரத்திலேயே தவழ்ந்துகொண்டிருந்தது. இயக்குநர் மனோஜ் பீதாவின் இயக்கத்தில் வெளியான ‘வஞ்சகர் உலகம்’ தமிழ்ப் படத்தின் வழக்கமான தன்மையிலிருந்து சற்று மாறுபட்டிருந்தது. நிழலுகத்தில் செயல்படும் சம்பத் எனும் மனிதனின் உளவியல் சிக்கலைப் பேசிய படம் இது. நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் மாறுபட்ட திரைக்கதை விவரிப்பில் வெளியான படமாகத் திரை ரசிகர்களின் சில பகுதியினரைப் பெரிதும் கவர்ந்தாலும் பரவலான வரவேற்பைப் பெறாத படமாகவே தங்கிவிட்டது.

இத்தகைய சூழலில் வெளிவந்தது மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ என்னும் திரைப்படம். இயக்குநராகச் சம்பாதித்த பெயரைவிட அதிகமான பெயர் இந்தப் படத்தின் மூலம் பா.இரஞ்சித்துக்குக் கிடைத்தது. சாதி என்னும் கொடுமை சமூகத்தில் அகல வேண்டியதன் அவசியத்தையும் ஆதிக்கச் சக்திகளை ஒரு உரையாடலுக்கான இடத்தை நோக்கி நகர்த்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சினிமாவுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையுடன் சொன்ன படம் இது. தலித் அரசியலைப் பேசுவதற்காகவே மாரி செல்வராஜ் படத்தை இயக்கியிருந்தாலும் படத்தின் குரல் பா.இரஞ்சித் படங்களில் ஒலிப்பதைப் போல் வறண்ட போர் முழக்கமாக இல்லாமல் நட்பார்ந்த தன்மையில் இருந்ததால் பெருவாரியான ரசிகர்களால் படம் கொண்டாடப்பட்டது. இதே போல் தலித் மக்களின் சிக்கலைப் பேசிய மற்றொரு திரைப்படம் அம்ஷன் குமார் இயக்கிய ‘மனுஷங்கடா’. வணிகத் திரைப்படத்துக்குத் தேவையான எந்த நெகிழ்வுத்தன்மையும் இன்றி மாற்றுப்படத்துக்கான விடாப்பிடியான கொள்கையுடன் வெளியான படம் இது. திரையரங்குகளில் பெரிய வரவேற்புக் கிடைக்காதபோதும் மாற்றுப்பட முயற்சிகளுக்குக் கைகொடுப்போர் தயவில் இந்தப் படமும் கணிசமான பார்வையாளர்களைச் சென்று சேர முயன்றது.


தமிழ் ரசிகர்கள் காதல் மயக்கத்திலிருந்து ஒருபோதும் வெளியேறிவிட மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படம் இயக்குநர் பாலாஜி தரணிதரன்  உருவாக்கிய 96. பருவ காலத்தில் ஒன்றுசேராத பச்சை மண் காதல் காலமெனும் நீரோட்டத்தில் கரைந்த கதைதான் 96. காதலனும் காதலியும் தொட்டுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தபோதும் தொடாமல் எட்டியே நின்றதால் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். ஒரு முழுமையான வணிகப் படத்தின் கதாநாயக அம்சத்தை அப்படியே கைக்கொண்டாலும் ஒரு மாற்றுப்படமோ என்ற மயக்கத்தைத் தந்தே வெற்றிபெற்ற படம் இது.

‘பொல்லாதவ’னில் தொடங்கி தனது இயக்கப் பாதையில் தொடர்ந்து வளர்ந்துவரும் இயக்குநரான வெற்றி மாறனின் ‘வட சென்னை’ வசூல்ரீதியில் பெரிய வெற்றிபெறாத போதும் படைப்புரீதியில் கவனிக்கத்தக்கது. நிழலுக மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்ட திரைக்கதை என்றபோதும் இது அத்துடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்த மனிதர்களைப் பகடைக் காய்களாக்கி நகர்ந்த அரசியல் வரலாறு ஒன்றும் படத்தில் பேசப்படுகிறது. அதுதான் இந்தப் படத்தைப் பிற படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. எளிய மனிதர்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலம் போல் செயல்படும் அரசியல்வாதிகளின் தந்திரத்தை கலையழகுடன் சுட்டுக்காட்டும் வட சென்னை முதல் பாகம் மட்டுமே. அடுத்த பாகமான அன்புவின் எழுச்சி பற்றிய அறிவிப்புடன் நிறைவடைந்திருக்கிறது வட சென்னை.  


மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’, தாமிராவின் ‘ஆண் தேவதை’, ராம்குமாரின் ‘ராட்சசன்’, பாலாவின் ‘நாச்சியார்’, கார்த்திச் சுப்புராஜின் ‘மெர்குரி’ ஷங்கரின் ‘2.0’ போன்ற படங்களையும் உள்ளடக்கியதே இந்த ஆண்டின் பட வெளியீட்டுப் பட்டியல். இவ்வளவு படங்கள் வெளியான போதும் ஓரிரண்டு படங்களுக்கு மேற்பட்டவற்றை நல்ல படம் எனச் சொல்லத் தயங்கும் சூழலே தமிழில் நிலவுகிறது என்பது உள்ளபடியே வருத்தம் தருகிறது. ரசிகர்தம் வருத்தத்தைப் படைப்பாளிகள் தாம் போக்க வேண்டும்.     

திங்கள், அக்டோபர் 08, 2018

’தொண்ணூற்றாறு

ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கிறார்கள். இதில் முறிந்த காதல் ஜோடி ஒன்றும் சந்திக்கிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்தக் காதலர்கள் எப்படி அந்தத் தருணத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை அதீத உணர்வுடன் நாஸ்டாலஜியா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்



தனி ஒருவனாகப் பயணங்களில் ஈடுபடும் புகைப்படக் காரரான கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) திடீரெனத் தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். பழைய நண்பர்களைப் பார்க்கத் தோன்றுகிறது. எல்லோரையும் வாட்ஸ் அப் வழியே பிடிக்கிறார். நண்பர்கள் ஒரு ரீயூனியனுக்குத் திட்டமிட்டு அதை நடத்துகிறார்கள். இதன்  வழியே பள்ளிப் பருவத்து நாட்களை அசைபோடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பிரிந்த ராமச்சந்திரனும் ஜானகிதேவியும் (திரிஷா) மீண்டும் ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். ஓர் இரவு முழுவதும் ஒன்றாக நாளைச் செலவிடுகிறார்கள்.  இந்தத் தருணத்தை ஒரு சிறுகதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

மிகவும் சாதாரணக் கதை தான். ஆனால் திரைக்கதையில் சில தருணங்களைச் சுவாரசியமான தன்மையில் தந்திருப்பதால் படம் தப்பித்துவிடுகிறது. ரீ யூனியனில் நண்பர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ராமும் ஜானுவும் ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவுதான் படத்தின் பலம். அதுவும் ராமின் மாணவிகள் சூழ்ந்திருக்கும் காட்சியில் தன்னை ராமின் மனைவியாகவே காட்டிக்கொண்டு திரிஷா பேசும் காட்சி ருசிகரம். 


பள்ளிப் பருவத்தில் ராமச்சந்திரனாக நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர், ஜானகியாக நடித்திருக்கும் கௌரி உள்ளிட்ட அனைவரும் பலருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறார்கள்.

பள்ளியில் பலமுறை ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டும் ஒரு முறைகூடப் பாடாத யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே பாடலை அந்த இரவில் ஜானு பாடும் தருணமும் ராமின்பரவசமும் ரசனையானவை. காதலித்தவனைத் தனக்குத் திருமணமான பிறகு சந்திக்கும் வேளையில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் கொட்டியிருக்கிறார் திரிஷா. நிறைவேறாத காதலை நினைத்தபடியே வாழ்வைக் கடக்கும் ராமச்சந்திரனாக விஜய் சேதுபதிக்கு வித்தியாசமான வேடம். அதை முழுமையாக்கிக் கொடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியும் திரிஷாவும் படத்தை முழுமையாகத் தோளில் தாங்கி நகர்த்தியிருக்கிறார்கள்.  


இரவில் ராம், ஜானு இரவும் வரும் நகர்வலக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளை அழகுபடுத்தியிருக்கின்றன.கல்லூரியில் ஜானுவை ராம் சந்திக்க முயலும் ஒரே சம்பவத்தை மூன்று கோணங்களில் காட்டும்  அம்சம் திரைக்கதையில் மெருகு. தொண்ணூறுகளில் தேவாவும் ஏ. ஆர். ரஹ்மானும் வந்துவிட்டார்கள் என்றபோதும் இளையராஜா பாடல்களையே வைத்து அந்தக் காலக் கட்டத்தைக் காட்டியிருப்பது நெருடல்.

காதலை அளவுக்கு அதிகமாகப் புனிதப்படுத்தியிருப்பதும்,  மெலோ டிராமாவைத் திகட்டத் திகட்டத் தந்திருப்பதும் அலுப்பு. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ரசிகர்களுக்கு ஒரு ஆட்டோகிராப் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து,  காதலுக்கு முன்னர் காலம் எம்மாத்திரம் என்ற பம்மாத்தைப் பரவசமான அனுபவமாகத் தந்திருக்கும் படம் 96.

சனி, செப்டம்பர் 15, 2018

அண்ணா எனும் திராவிடப் பேரறிஞர்


பெரியாரும் அண்ணாவும்

தமிழர்களால் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆய்த எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியை ஆயுதமாகப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு பாடுபட்டவர் அறிஞர் அண்ணா. ஏழை எளியவர்களின் நலம் காக்க பாடுபட்டதாலேயே மக்கள் அவர் பெயரில் உள்ள துரையை அகற்றி விட்டு அண்ணா என்றே பிரியத்துடன் அழைக்கின்றனர்.

ண்ணாவுக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் வர் புகழைப்பாடாத அரசியல் கட்சிகளோ தனிமனிதர்களோ ல்லை. அறிஞர் அண்ணா தம்மை நீதிக்கட்சிக்காரர் ஆகவும் சுயமரியாதை இயக்கத்தினராகவுமே காட்டிக்கொண்டார். நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.

அண்ணாசாலை அண்ணாசிலை

அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே எழுதத் தொடங்கினார். என்றாலும் விடுதலை பத்திரிகையில் அவர் எழுதத் தொடங்கியதற்குப் பிறகு தான் அவரது கருத்தின் வெளிச்சம் தமிழகத்தில் சுடர்விட்டது. 'விடுதலை'யில் எழுதுவதற்கு முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார் நடத்திய 'நவயுக'த்திலும் எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை வெளியில் கொண்டுவர அடிப்படையாய் அமைந்தன.

எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார். பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர் படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா என்று எண்ணும்போது அவர் பேச்சை முடித்து விடுவார். அதுதான் அண்ணா. அதுதான் அவரது சிறப்பும். காரம் மிக்க பேச்சும் சாரம் மிக்க எழுத்தும் அண்ணாவின் தனிப்பெருமைகள். 

அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும் கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக் கடிதம்' எழுதினார். இப்படி எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 290.

அண்ணாவும் கலைஞரும்

ண்ணா பொதுவாழ்க்கைக்கு, திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2 ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார். சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை அடியோடு மாற்றிக்காட்டினார். எதிர்க்க ஆளே இல்லை என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் அடையாளம் தெரியாத ஒன்றாக மாற்றியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். அவர் இந்தியை விருப்பப் பாடமாகப் பள்ளிகளில் கொண்டுவந்தார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இப்போராட்டம் புத்துணர்ச்சி அளித்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அறிஞர் அண்ணாவுக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. போராட்டத்திலோ மறியலிலோ கலந்துகொள்ளாத அண்ணா கைதுசெய்யப்பட்டார். ஏன்? சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய  அனல் தெறித்த பேச்சுக்காக.

மேடையில் அண்ணா

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாக 1944இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார்; பெரியார்க்கு அதில் விருப்பம் இல்லை. இதன் விளைவால்தான் தி.மு.. உதயமாகியது. 1949இல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். உடனடியாகத் தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அறிஞர் அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில் திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர்.

அண்ணாவின் திமுகவுக்குப் பலம் பெருகியது; மக்கள் செல்வாக்கு கூடியது. 1966இல் இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டி வெளியானது.தன் முன்னுரையில், உலகப் பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டது இல்லஸ்டிரேட்ட் வீக்லி. அண்ணாவின் பெருமைக்கு பெருமை சேர்த்தது அந்தப் பத்திரிகை.

அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப் படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். இதன் தமிழ் மொழி பெயர்ப்பை, 'புரட்சித்துறவி' எனும் தலைப்பில் குமுதம் பத்திரிகை, அண்ணா மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.

அண்ணா முதல்வராக

ஏழை எளியவர்களை முன்னேற்றுவதும் தமது மொழி, இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவுமே அவரது அரசியல் குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் தமிழக ஆட்சியை மக்கள் மனமுவந்து அண்ணாவிடம் தந்தனர். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில் மூன்று சாதனைகளைச் செய்தார். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்; இரு மொழிக் கொள்கையைச் சட்டமாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொண்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி இரவு 12:22 மணிக்கு மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிடிவியில் பணியாற்றியபோது, 2012ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளுக்காக எழுதியது. 

வியாழன், செப்டம்பர் 06, 2018

இமைக்கா நொடிகள்

 

நகரத்தில் அடுத்தடுத்து தொடர்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிபிஐ அதிகாரி அஞ்சலி கொலைகாரனைக் கண்டுபிடிக்க முயலும்போது, ஏற்கெனவே அவரால் கொல்லப்பட்ட குற்றவாளி ருத்ராதான் இந்தக் கொலைகளையும் செய்வதாகத் தகவல் வருகிறது. அதிர்ச்சிகொள்ளும் அஞ்சலி சீரியல் கொலைகாரரைப் பிடிக்கும் முயற்சியை முடுக்கிவிடுகிறார். கொலையாளியை அஞ்சலி பிடித்தாரா, கொலைகளுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது இமைக்கா நொடிகள்.

வழக்கமான த்ரில்லர் படத்தில் காணப்படும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், விருதைக் குறிவைத்து எடுக்கப்படும் சராசரித் தமிழ்ப் படத்தைப் போல் மிக நிதானமாக நகர்கிறது படம். திரைக்கதை விவாதங்களின்போது எழுப்பப்படும் அடிப்படையான சந்தேகங்களைகூட நிவர்த்திசெய்யாமல் லாஜிக் பற்றிய கவலையற்றுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஞானமுத்து துணிச்சல்காரர். அவரைவிடத் துணிச்சல்மிக்கவர் இப்படத்தைத் தைரியமாகத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் .


சிபிஐ அதிகாரியாக நடிக்க முயன்றிருக்கிறார் நயன்தாரா. அதர்வா முரளிக்கு ஒரு டாக்டர் வேடம். கோட், ஸ்டெதஸ்கோப் போன்றவை உதவியால் அவரை டாக்டர் என நம்மால் நம்ப முடிகிறது. படத்தில் ராஷி கன்னா என்றொரு கதாநாயகியும் உண்டு. நாயகன் நாயகி இருப்பதால் காதலும் உண்டு. காதல் இருப்பதால் டூயட் உண்டு. பிரிவுத் துயர் உண்டு. எதுவுமே ரசிகர்களைச் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் போதாதென்று விஜய் சேதுபதி வேறு. அவரும் வந்தது முதல் போவது வரை பேசிக்கொண்டே இருக்கிறார்.

இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் படம் முழுக்க பவனி வருகிறார். ஒரு சிங்கம் போல் வசனம் பேசிக்கொண்டு அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதையே மறக்கடித்து அவர் அச்சுஅசல் ஒரு தமிழ் நடிகர் என்பதை மனத்தில் நிறுத்துகிறது. படத்தின் திரைக்கதையையும் எழுதி இயக்கியிருக்கும் அஜய், அதீத ஆர்வத்தின் காரணமாக சில படங்களுக்கான கதையைக் கொண்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் காட்சிகளைத் தான் எடுத்திருக்கும் தரத்தை உணர்ந்து படத்துக்கு இமைக்கா நொடிகள் எனப் புத்திசாலித் தனமான டைட்டிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.


படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தற்போதைய தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தேவைப்படும் அளவுக்குத் தரமான வசனங்களை ஒரு திரைப்படத்துக்கு எழுதிய பெரிய மனது அவருக்கு. பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த படத்தில் எப்படித் தரமான வசனங்களை எழுதினாரோ அந்தத் தரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் வசனத்தைப் பட்டைதீட்டியிருக்கிறார். படத்தில் சீரியஸான காட்சிகள் சிரிக்கவைக்கின்றன; காமெடிக் காட்சிகள் சீரியஸாக்குகின்றன. இது ஒரு புதுமையான முயற்சி.  இதற்காக இயக்குநருக்குத் தனி பாராட்டு.

படத்தை முடிந்தவரை தூக்கிநிறுத்த ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படத்தின் காட்சிகளைத் தொழில்நுட்பரீதியில் பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன். படத் தொகுப்பின் நேர்த்திக்காக இல்லாவிடினும் அவரது பொறுமைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். பின்னணி இசையமைத்துப் பாடல்களையும் தந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நமக்குத்தான் விலா நோகிறது. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களைக் கொண்ட இந்தப் படத்தை இரு பாகங்களாகக் கொடுக்காமல் ஒரே பாகமாகக் கொடுத்ததில் இயக்குநரது பரந்த மனது தெரிகிறது. இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவின் தரத்தை நிச்சயமாக சில அடிகள் நகர்த்தும். எதிர்த் திசையில் என்பது தான் சோகம்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்