நகரத்தில் அடுத்தடுத்து தொடர்கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சிபிஐ அதிகாரி அஞ்சலி கொலைகாரனைக் கண்டுபிடிக்க முயலும்போது, ஏற்கெனவே அவரால் கொல்லப்பட்ட குற்றவாளி ருத்ராதான் இந்தக் கொலைகளையும் செய்வதாகத் தகவல் வருகிறது. அதிர்ச்சிகொள்ளும் அஞ்சலி சீரியல் கொலைகாரரைப் பிடிக்கும் முயற்சியை முடுக்கிவிடுகிறார். கொலையாளியை அஞ்சலி பிடித்தாரா, கொலைகளுக்குக் காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது இமைக்கா நொடிகள்.
வழக்கமான த்ரில்லர் படத்தில் காணப்படும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், விருதைக் குறிவைத்து எடுக்கப்படும் சராசரித் தமிழ்ப் படத்தைப் போல் மிக நிதானமாக நகர்கிறது படம். திரைக்கதை விவாதங்களின்போது எழுப்பப்படும் அடிப்படையான சந்தேகங்களைகூட நிவர்த்திசெய்யாமல் லாஜிக் பற்றிய கவலையற்றுப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ஞானமுத்து துணிச்சல்காரர். அவரைவிடத் துணிச்சல்மிக்கவர் இப்படத்தைத் தைரியமாகத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் .
சிபிஐ அதிகாரியாக நடிக்க முயன்றிருக்கிறார் நயன்தாரா. அதர்வா முரளிக்கு ஒரு டாக்டர் வேடம். கோட், ஸ்டெதஸ்கோப் போன்றவை உதவியால் அவரை டாக்டர் என நம்மால் நம்ப முடிகிறது. படத்தில் ராஷி கன்னா என்றொரு கதாநாயகியும் உண்டு. நாயகன் நாயகி இருப்பதால் காதலும் உண்டு. காதல் இருப்பதால் டூயட் உண்டு. பிரிவுத் துயர் உண்டு. எதுவுமே ரசிகர்களைச் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார். இதெல்லாம் போதாதென்று விஜய் சேதுபதி வேறு. அவரும் வந்தது முதல் போவது வரை பேசிக்கொண்டே இருக்கிறார்.
இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் படம் முழுக்க பவனி வருகிறார். ஒரு சிங்கம் போல் வசனம் பேசிக்கொண்டு அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் அவர் ஒரு திறமையான இயக்குநர் என்பதையே மறக்கடித்து அவர் அச்சுஅசல் ஒரு தமிழ் நடிகர் என்பதை மனத்தில் நிறுத்துகிறது. படத்தின் திரைக்கதையையும் எழுதி இயக்கியிருக்கும் அஜய், அதீத ஆர்வத்தின் காரணமாக சில படங்களுக்கான கதையைக் கொண்டு ஒரு படத்தை எடுத்திருக்கிறார். படத்தின் காட்சிகளைத் தான் எடுத்திருக்கும் தரத்தை உணர்ந்து படத்துக்கு இமைக்கா நொடிகள் எனப் புத்திசாலித் தனமான டைட்டிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
படத்தின் வசனத்தை எழுதியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். தற்போதைய தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தேவைப்படும் அளவுக்குத் தரமான வசனங்களை ஒரு திரைப்படத்துக்கு எழுதிய பெரிய மனது அவருக்கு. பத்திருபது வருடங்களுக்கு முன் வெளிவந்த படத்தில் எப்படித் தரமான வசனங்களை எழுதினாரோ அந்தத் தரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் வசனத்தைப் பட்டைதீட்டியிருக்கிறார். படத்தில் சீரியஸான காட்சிகள் சிரிக்கவைக்கின்றன; காமெடிக் காட்சிகள் சீரியஸாக்குகின்றன. இது ஒரு புதுமையான முயற்சி. இதற்காக இயக்குநருக்குத் தனி பாராட்டு.
படத்தை முடிந்தவரை தூக்கிநிறுத்த ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். படத்தின் காட்சிகளைத் தொழில்நுட்பரீதியில் பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தின் படத் தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன். படத் தொகுப்பின் நேர்த்திக்காக இல்லாவிடினும் அவரது பொறுமைக்காகப் பாராட்டப்பட வேண்டியவர். பின்னணி இசையமைத்துப் பாடல்களையும் தந்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். நமக்குத்தான் விலா நோகிறது. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களைக் கொண்ட இந்தப் படத்தை இரு பாகங்களாகக் கொடுக்காமல் ஒரே பாகமாகக் கொடுத்ததில் இயக்குநரது பரந்த மனது தெரிகிறது. இமைக்கா நொடிகள் தமிழ் சினிமாவின் தரத்தை நிச்சயமாக சில அடிகள் நகர்த்தும். எதிர்த் திசையில் என்பது தான் சோகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக