ஆரண்யகாண்டம் படத்துக்குப் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் டீலக்ஸுடன் வந்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஒரு புறம் அறிவியல் மறுபுறம் ஆண்டவர் என நகரும் கருணயற்ற உலகத்தில், எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தபோதும், கிடைக்கும் தருணத்தை மகிழ்ச்சியாக வாழ்வதே நிம்மதி எனும் ஆதி காலத்து உபதேசத்தை நவீனத் திரைப்படமாக்கியிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.
மனத் தளர்ச்சி அடைந்திருந்த முன்னாள் காதலரை வீட்டுக்கு அழைக்கிறார் திருமணமான வேம்பு (சமந்தா). வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உறவு நிகழ்கிறது. அடுத்த கணம் மரித்துவிடுகிறார் காதலன். அதிர்ச்சியில் உறைகிறார் வேம்பு. அந்த நேரத்தில் வீட்டுக்கு வருகிறார் அவருடைய கணவர்முகில் (ஃபகத் பாசில்).
நான்கு வளரிளம் பருவ நண்பர்கள் பள்ளிக்குச் செல்லாமல் நண்பனுடைய வீட்டில் ‘பக்திப் படம்’ பார்க்கத் திட்டமிடுகிறார்கள். படம் தொடங்குகிறது.அதில் நடித்திருக்கும் நடிகை நண்பர்களில்ஒருவனான சூர்யாவின் தாய் லீலா (ரம்யாகிருஷ்ணன்). அதிர்ச்சியடைந்த சூர்யா தாயைக்கொல்ல விரைகிறான்.
ஜோதியின் (காயத்ரி) கணவர் மாணிக்கம் ஏழாண்டுகளுக்கு முன்னர் ஓடிச்சென்றுவிட்டார். அவர் திரும்பிவருகிறார் என்ற தகவலால் உற்சாகமடைந்திருக்கிறான் அவர்களுடைய மகன் ராசுக்குட்டி. வீடே மாணிக்கத்தின் வரவுக்காகக் காத்திருக்கிறது. மாணிக்கம் ஷில்பா எனும் திருநங்கையாக வந்து சேர்கிறார்.
சுனாமியில் இயேசு சிலையைப் பிடித்ததால் உயிர்பிழைத்த தனசேகரன் (மிஷ்கின்) அற்புதம் என்ற கிறித்தவராகிவிடுகிறார். ஆண்டவருடைய அற்புதத்தால் நோயிலிருந்து மனிதர்களைமீட்டுவருகிறார். அவருடைய மகன் வயிற்றில் ஸ்குருடிரைவர் குத்தி உயிருக்குப் போராடுவதாகத் தகவல்வருகிறது. அவர் ஜெபத்தை நம்ப, மனைவிமருத்துவமனைக்குச் செல்லத் துடிக்கிறார். படத்தில் ஈவு இரக்கமே இல்லாமல் வெட்டி எறிந்திருக்க வேண்டிய கதை அற்புதத்தின் கதை. மிஷ்கினைத் தாங்கிக்கொள்ள தனி மனம் வேண்டும்.
இந்த நான்கு சம்பவங்களின் தொடர்ச்சிகளை அடுக்கி உருவாக்கப்பட்டுள்ளது சூப்பர் டீலக்ஸ். தற்செயல் நிகழ்வின் விளைவை அடிப்படையாகக்கொண்டு 2006-ல் வெளியான ‘பேபல்’ திரைப்படத்தைப் போன்ற ஒன்றுக்கொன்று தொடர்பற்ற நிகழ்வுகளுக்கிடையேயான தொடர்பை அடியொற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஏற்கெனவே இதே பட்டர் ஃப்ளை எஃபெக்ட் உத்தியைப் பயன்படுத்தி தசாவதாரம் படத்தை கமல் உருவாக்கியிருக்கிறார். அதில் விஷ்ணு சிலை கடலில் இதில் இயேசு சிலை கடலில். அதிலும் சுனாமி இதிலும் சுனாமி.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் படம். அந்தநேரத்தைச் சுவாரசியப்படுத்த பல பின்னணி விவரங்களைப் படத்தில் பார்த்துப் பார்த்துச் சேர்த்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியம் போல் ஃப்ரேம் செட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு நினைவுகளைக் கிளறும் விதத்தில் அமைந்துள்ளன. இளைஞர்களைக் கவரும் வகையிலான பாலியல் கிளர்ச்சி தரும் கதைகள், சொற்றொடர்கள் ஆகியவை தொடர்ந்து இடம்பெற்றிருக்கின்றன. பள்ளி மாணவர்கள் திருநங்கைகளைக் கிண்டல் செய்யும் காட்சியும், வேம்புவே தான் ஒரு ஐட்டமா எனக் கேட்கும் காட்சியும் அருவருப்பாக உள்ளது.
பின்னணியில் ஒலிக்கும் பாடல், சுவரொட்டிகள், பயன்படுத்தப்பட்டிருக்கும் அரங்கப் பொருட்கள் எனஅனைத்துமே சினிமா அனுபவத்தைத் தருவதில் உயிர்த் துடிப்புடன் உள்ளன. பப்பிலஹரியின் இசையில் உருவான டிஸ்கோ டான்சர் பாடலுடன் (இந்த டிஸ்கோ டான்சர் படம் தமிழில் பாடும் வானம்பாடி என்னும் தலைப்பில் ஆனந்த்பாபுவின் நடிப்பில் வெளியானது) முடிவடையும் இந்தப் படத்தில் பல பழைய பாடல்கள் பின்னணி இசையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னணி ஒலிகளுக்கும் இசைக்கும் பங்களித்தவகையில் யுவன் ஷங்கர் ராஜா பேரளவில் சூப்பர் டீலக்ஸை சினிமாவாக்க கைகொடுத்துள்ளார்.
தியாகராஜாவை மீறி சமந்தாவும் விஜய் சேதுபதியும் முன்னணிக்கு வந்துவிடுகிறார்கள். நடந்த சம்பவம் பற்றிய எந்தக் குற்றவுணர்வுமின்றி மிக இயல்பான மனநிலையைப் படம் முழுவதும் சமத்காரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமந்தா. அந்த நடிப்புஅந்தக் கதாபாத்திரத்துக்கு நூறு சதவீத நம்பகத்தன்மையை அளித்துவிடுகிறது.
திருநங்கையாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி திருநங்கைகளின் துயரத்தை, மனப்போராட்டத்தை, பொதுவாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை இயல்பான உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்புத் தொனி ஆகியவை வழியே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். ஃபகத் பாசில் சடலத்துடன்சகஜமாக உரையாடும் காட்சி ஆசுவாசம் தருகிறது. ராசுக்குட்டியாக நடித்திருக்கும் சிறுவன் தாய் தோற்றத்தில் வந்திருக்கும் தந்தையை அப்படியேஏற்றுக்கொள்ளும் விதம் நெகிழ்ச்சியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் பக்ஸ் படத்தில் ஒட்டவே இல்லை. அவர் வரும் காட்சிகள் அலுப்பாகவே உள்ளன.
தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகப் படத்தைக் கையாண்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்த தன்மையால் எந்த இடத்திலும் உணர்வுரீதியாகப் படத்துடன் ஒன்ற வேண்டிய தேவை எழவில்லை. சினிமா என்பது ரசனையுடன் பார்ப்பதற்குகந்த சாதனம் என்ற அளவிலேயே சினிமாவைப் படைத்திருக்கும் குமாரராஜா அதில்கருத்தையும் சொல்லியிருப்பது உறுத்தலாக உள்ளது. சமகால விஷயங்களை அங்கங்கே விதைத்துவிட்டு யதார்த்தம் என்று சொல்வது யதார்த்தமல்ல. வாழ்வின் ரகசியத்தை வாழ்பவர்களே அறிந்துகொள்ள மாட்டார்களா?
நவீனமாகப் படத்தை உருவாக்கியிருந்தாலும் படத்தின் அடிப்படை அடுகரி தொடர வீழ… எனும் விவேக சிந்தாமணிப் பாடல் தந்த வாழ்வியல் தத்துவமே என்பதால் சூப்பர் டீலக்ஸ் புதுத்தொன்னையில் பழைய நெய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக