இந்த வலைப்பதிவில் தேடு

மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 08, 2020

என்னடே சோலி முடிஞ்சிருச்சா?

சில சொற்களைச் சொல்லிவிட்டாலே போதும். அது தொடர்பான பல சம்பவங்களும் மனிதர்களும் நமது நினைவில் வந்துவிடுவார்கள். ஹைகோர்ட்டுன்னு சொன்னா டக்குன்னு ஒரு ஞாபகம் வரும். துண்டுச் சீட்டுன்னா வேற ஒரு ஞாபகம் வரும். சமீபத்தில் அப்படியான சொல் ஒன்று பலருடைய சோலியைக் கெடுத்தது. அது சோலிய முடி. சோழின்னா எல்லோருக்கும் தெரியும். சோலின்னா தெக்கத்திக்காரங்களுக்குத்தான் தெரியும். சோலின்னா வேலை என்பது பொருள். வேலைன்னா  ஒரு வேலை இல்லைங்க பலவேலை. ஜோலி என்பது இதன் கிரந்த வடிவம் என்று சொல்கிறார்கள். ஜோலின்னு சொன்னா உடனே நமக்கு ஏஞ்சலினா ஜோலிதான் நினைவுக்கு வருவாங்க. ஆனால் சோலி கதையே வேற.  
விளக்கை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். அவளை அணைத்தான் என்பது ஒரு வாக்கியம். இரண்டிலும் அணைத்தல் என்னும் வினை வருகிறது. ஆனால், அணைத்தல் முதல் வாக்கியத்தில் ஒரு செயலின் முடிவைக் குறிக்கிறது. இரண்டாம் வாக்கியத்தில் ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு மொழியின் சிறப்பு. அதைப் போல் சோலிய முடிச்சிட்டாங்க. அப்படின்னா, அது சொல்லும் விதத்தைப் பொறுத்து, சொல்லும் சூழலைப் பொறுத்து பொருளில் மாறுபடும்.
என்ன மாப்ள ஏதோ சோலியாப் போறாப்ல இருக்குன்னு நெருங்கிய நண்பர்களுக்குள்ளான உரையாடலில் இடம்பெறும் சோலி கிண்டல் மிகுந்தது. சோலி என்றால் வேலைதான் ஆனால் இது கொஞ்சம் கிளுகிளுப்பான, விவகாரமான வேலை. உனக்கென்ன அங்க சோலி என்பது கண்டிப்பு கலந்து ஒரு எச்சரிக்கை. இனி அங்க போவாத தேவையில்லாத பிரச்சினை வரும் என்பதன் எச்சரிக்கை. அவனுக்கு இதே பொழப்பாப் போச்சு சோலிக்கழுதையைப் பாத்துக்கிட்டுக் கிடக்கமாட்டானா? என்ற சொற்றொடரிலும் ஒரு சோலி இடம்பெறுகிறது. இந்தச் சொற்றொடரில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதர் தொடர்ந்து ஏதோ தொந்தரவைத் தந்துகொண்டே இருக்கிறார். அவர் அமைதியாக இருக்க மாட்டாரா என்பதையே இந்த சோலி சுட்டுகிறது.
சீக்கிரம் சோலிய முடிச்சிட்டு வாடே என்று அறுவடைக் களத்தில் சொன்னால் ஒரு பொருள்; ஆவேசக் குணத்தில் சொன்னால் ஒரு பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் கையில் அரிவாளைத் தூக்கிக்கொண்டு ஆவேசமாக கெட்ட வார்த்தையைச் சொல்லியபடியே ஒஞ்சோலிய முடிக்காம விடமாட்டம்ல என்று சொன்னார் என்றால் அங்கே சோலியை முடித்தல் என்பது எமனின் கணக்கில் ஒன்றைக் கூட்டிவிடும்.
இப்படிப் பல சோலிக்காரங்க நாம. சோலியை முடித்தல் என்பதை ஒரு பொருளில் தட்டையாகப் புரிந்துகொள்வது சரியல்ல. ஆனால், அதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் மொழியறிவு வேண்டும். சிலருக்கு மொழியறிவு இருக்கும். ஆனால், வேண்டுமென்றே நடிப்பார்கள். அவர்களை நாம் எதுவும் செய்ய இயலாது அவங்க வேற எதோ சோலிக்காக இப்படிச் சொல்வாங்க. நாம நமது சோலியப் பாத்துட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2019

சர்வதேசத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21


மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழிவழிக் கல்விக்காகவும் ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி நாள் பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படுகிறது. 2019-ம் ஆண்டைத் தொல்மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. தாய்மொழியின் அவசியமும் அருமையும் நமக்கு நன்கு தெரியும்.  ஏனெனில் நாம் நம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காகப் பெரும் போராட்டம் நடத்தி மொழியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம். முதல் மொழிப் போராட்டம் 1938-ல் தொடங்கி 1940வரை நடைபெற்றிருக்கிறது.  

சென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ல் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜாஜி 1938 ஏப்ரல் 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையைப் பிறப்பித்தார். இதை அடுத்து தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இந்த ஆணைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பு, இந்தி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்தும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நடராஜன் (1939 ஜனவரி 15 அன்றும்), தாளமுத்து (1939 மார்ச் 11 அன்றும்) ஆகிய இருவர் உயிர் தியாகம் செய்தார்கள். இத்தகைய போராட்டத்தின் பயனாக, சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

இந்த பிப்ரவரி 21தான் சர்வதேசத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அது கொண்டாடப்படுவதற்கான காரணம் நமது மொழிப் போர் அல்ல. அது வேறொரு வரலாற்றைக் குறிக்கிறது. வங்க தேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலேயே சர்வதேசத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 கொண்டாடப்படுகிறது.

மேற்கு பாகிஸ்தானில் ஆட்சிமொழியாக இருந்த உருது 1948-ல் மொத்த நாட்டுக்குமான ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போதைய வங்க தேசம்) பெரும்பான்மையான மக்களால் வங்க மொழியே பேசப்பட்டது என்பதால் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது. தாக்கா பல்கலைக் கழக மாணவர்களும் தாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களும் 1952 பிப்ரவரி 21 அன்று நடத்திய போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த நாளை நினைவுகூரும் வகையில் பின்னர் வங்க தேசம் ஆண்டுதோறும் மொழி இயக்க நாளைக் கொண்டாடியது. இந்த நாளை அங்கீகரிக்கும் வகையில் ஐநாவின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ 1999-ல் பிப்ரவரி 21-ஐ மொழிரீதியான பன்மைத்துவத்தைக் கொண்டாடுவகையில் விடுமுறை நாளாக அறிவித்தது. இந்த நாள்தான் சர்வதேசத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நமது தாய்மொழியாம் தமிழைக் காக்க அடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ல் தொடங்கி நடைபெற்றது. இந்தப் போராட்டம் ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே விளங்கும் என்பதை எதிர்த்தது. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு அமலுக்குவந்தபோது 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சிமொழியாக இந்தியுடன் ஆங்கிலம் இருக்கும் என்றும் அதன்பிறகு இந்தி மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்கும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. இதையொட்டியே 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஓராண்டுக்கும் முன்பே, 1964 ஜனவரி 25 அன்றே சின்னசாமி என்னும் மொழிப்போர் வீரர் இந்தியின் ஆதிக்கத்தை அகற்றக் கோரி திருச்சியில் உயிரை மாய்த்துக்கொண்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சாரங்கபாணியும் தாய்மொழி தமிழுக்காகத் தன்னுயிரைத் தந்தார். இது போக இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

1968-ம் ஆண்டு சட்டப் பேரவையில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவது குறித்துக் குறிப்பிட்டுப் பேசும்போது ”இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படும்” என உறுதியளித்தார்.  இதனாலேயே அடுத்து 1969-ல் முதல்வர் பொறுப்புக்கு வந்த மு.கருணாநிதி கல்லூரிக் கல்வி வரை தமிழ் பயிற்று மொழி என்று அறிவித்தார். கோவை அரசுக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழி என்பது முதன்முதலில் நடைமுறையானது. இன்னும் உலகில் 40 சதவீத மக்கள் தாங்கள் பேசும் புரிந்துகொள்ளும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க இயலாத நிலையிலேயே உள்ளனர் என்பதே உண்மை.


மொழி என்பது மனிதர்களின் கல்வி, மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மாத்திரமல்ல அது பண்பாட்டு அடையாளம். உலகெங்கும் அடையாளம் காணப்பட்டிருக்கும் சுமார் 6,000 மொழிகளிலும் 43 சதவீத மொழிகள் அழியும் நிலையிலுள்ளன. இவற்றில் பல மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை வெறும் ஆயிரத்துக்குள்ளேயே இருக்கும். சில நூறு மொழிகள் மாத்திரமே பொதுமக்கள் பயன்பாட்டிலும் கல்வியைப் பயிற்றுவிப்பதிலும் வழக்கிலுள்ளது. அதிலும் நூற்றுக்கும் குறைவான மொழிகளே நமது டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் நமது மொழி குறித்து நாம் எவ்வளவு கவனம் கொள்ள வேண்டும் என்பதே இந்த நாள் நமக்குத் தரும் பாடம்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்