பெரியாரும் அண்ணாவும் |
தமிழர்களால் அண்ணா என
அன்போடு அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆய்த எழுத்தைக் கொண்ட தமிழ் மொழியை ஆயுதமாகப்
பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக மற்றும் அரசியல் விடுதலைக்கு பாடுபட்டவர்
அறிஞர் அண்ணா. ஏழை எளியவர்களின் நலம் காக்க பாடுபட்டதாலேயே மக்கள் அவர் பெயரில் உள்ள
துரையை அகற்றி விட்டு அண்ணா என்றே பிரியத்துடன் அழைக்கின்றனர்.
அண்ணாவுக்கென்று பெரிய குலப்பெருமை எதுவுமில்லை. ஆனாலும்
தமிழ்நாட்டில் அவர் புகழைப்பாடாத அரசியல் கட்சிகளோ தனிமனிதர்களோ இல்லை. அறிஞர் அண்ணா தம்மை நீதிக்கட்சிக்காரர் ஆகவும் சுயமரியாதை இயக்கத்தினராகவுமே காட்டிக்கொண்டார். நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரின் அரசியல் உரிமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டது. தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார்.
அண்ணாசாலை அண்ணாசிலை |
அறிஞர் அண்ணா கல்லூரி நாள்களிலேயே
எழுதத் தொடங்கினார். என்றாலும் விடுதலை பத்திரிகையில் அவர் எழுதத்
தொடங்கியதற்குப் பிறகு தான் அவரது கருத்தின் வெளிச்சம் தமிழகத்தில் சுடர்விட்டது. 'விடுதலை'யில் எழுதுவதற்கு
முன்பாக அவர் மேயர் பாசுதேவ் நடத்திய 'பாலபாரதி'யிலும், காஞ்சி மணி மொழியார்
நடத்திய 'நவயுக'த்திலும்
எழுதியிருந்தார். 'ஆனந்தவிகட'னில் அவரது ஒரு
சிறுகதையும் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் அவர் எழுத்தின் முழுப் பரிமாணத்தை
வெளியில் கொண்டுவர அடிப்படையாய் அமைந்தன.
எழுதுவது போலவே அவர் மேடையில் பேசினார்.
பேச்சில் ஒரு 'சங்கீத லயம்' இருந்தது. அவர்
படித்ததையெல்லாம் பேசுவதில்லை. தேவையானதை மட்டுமே பேசுவார். இன்னும் பேசமாட்டாரா
என்று எண்ணும்போது அவர் பேச்சை முடித்து விடுவார். அதுதான்
அண்ணா. அதுதான் அவரது சிறப்பும். காரம் மிக்க பேச்சும் சாரம் மிக்க எழுத்தும் அண்ணாவின் தனிப்பெருமைகள்.
அவர் தொடங்கி நடத்திய வார ஏடுகளான 'திராவிடநாடு' இதழிலும், 'காஞ்சி' இதழிலும்
கட்சியினரோடு தொடர்புகொள்ள 'தம்பிக்குக்
கடிதம்' எழுதினார்.
இப்படி எழுதப்பட்ட மொத்த கடிதங்களின் எண்ணிக்கை மட்டும் 290.
அண்ணாவும் கலைஞரும் |
அண்ணா பொதுவாழ்க்கைக்கு, திருப்பூரில் 1934இல் நடைபெற்ற செங்குந்தர் 2 ஆவது வாலிபர் மாநாட்டில்தான் அறிமுகமானார். அங்கேதான் அவர் பெரியாரை முதன்முதலில் சந்தித்தார். சுமார் 35 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கையில் அறிஞர் அண்ணா தமிழகத்து அரசியலை அடியோடு
மாற்றிக்காட்டினார். எதிர்க்க ஆளே இல்லை என்ற நிலையில் இருந்த காங்கிரஸ்
கட்சியை தமிழகத்தில் அடையாளம் தெரியாத ஒன்றாக மாற்றியதில் அண்ணாவின் பங்கு முக்கியமானது.
1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சித் தோற்று காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். அவர் இந்தியை விருப்பப் பாடமாகப் பள்ளிகளில் கொண்டுவந்தார். இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் 1937 மற்றும் 1938 ஆம்
ஆண்டுகளில் நடத்தப்பட்டது. தேர்தலில் தோற்றிருந்த நீதிக்கட்சிக்கு இப்போராட்டம் புத்துணர்ச்சி அளித்தது. இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அறிஞர் அண்ணாவுக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை கிடைத்தது. போராட்டத்திலோ மறியலிலோ கலந்துகொள்ளாத
அண்ணா கைதுசெய்யப்பட்டார். ஏன்? சென்னை கதீட்ரல் சாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அவர் நிகழ்த்திய அனல் தெறித்த பேச்சுக்காக.
மேடையில் அண்ணா |
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும்
இணைக்கப்பட்டுத் திராவிடர் கழகமாக 1944இல் பெயர் மாற்றம்
செய்யப்பட்டது. அண்ணா திராவிடர் கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற நினைத்தார்; பெரியார்க்கு
அதில் விருப்பம் இல்லை. இதன் விளைவால்தான் தி.மு.க. உதயமாகியது.
1949இல் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தார். உடனடியாகத்
தேர்தலில் அவர் போட்டியிட விரும்பவில்லை. அறிஞர்
அண்ணா அவசரப்படவில்லை. தனிநாடு கோரிக்கையை முன்வைத்து 1957 தேர்தலில் திமுக
போட்டியிட்டு 15 இடங்களை வென்றது. 1962 தேர்தலில்
திமுக சார்பாக 50 பேர் வெற்றி பெற்றனர்.
அண்ணாவின் திமுகவுக்குப்
பலம் பெருகியது; மக்கள்
செல்வாக்கு கூடியது. 1966இல்
இல்லஸ்டிரேடட் வீக்லியில் அண்ணாவின் பேட்டி வெளியானது. அதன்
முன்னுரையில், உலகப்
பந்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களின் இதயத்தில்
சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார்" என்று குறிப்பிட்டது இல்லஸ்டிரேட்ட்
வீக்லி. அண்ணாவின் பெருமைக்கு பெருமை சேர்த்தது அந்தப் பத்திரிகை.
அறிஞர் அண்ணா புத்தகங்ளை மிக வேகமாகப்
படிக்கக் கூடியவர். அவரது மரண படுக்கையில்கூட 'மாஸ்டர் கிரிஸ்டியன்' எனும் ஆங்கில
நாவலைப் படித்துக்கொண்டிருந்தவர். இதன் தமிழ் மொழி
பெயர்ப்பை, 'புரட்சித்துறவி' எனும் தலைப்பில் குமுதம் பத்திரிகை, அண்ணா
மரணமடைந்த சில நாள்களுக்குப் பிறகு வெளியிட்டது.
அண்ணா முதல்வராக |
ஏழை எளியவர்களை
முன்னேற்றுவதும் தமது மொழி,
இனத்திற்கு தனி அடையாளம் காண்பதுவுமே அவரது அரசியல்
குறிக்கோளாக இருந்தது. இதனால்தான் தமிழக ஆட்சியை மக்கள் மனமுவந்து அண்ணாவிடம் தந்தனர்.
9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி
அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. அறிஞர் அண்ணா தமது ஆட்சிக் காலத்தில்
மூன்று சாதனைகளைச் செய்தார். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றினார்; இரு மொழிக்
கொள்கையைச் சட்டமாக்கினார்; சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி ஆகும் விதத்தில் சட்டத்
திருத்தம் மேற்கொண்டார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச்
சென்னை அடையாறு மருத்துவமனையில். 3-02-1969ஆம் தேதி இரவு 12:22 மணிக்கு மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துகொண்டு
இறுதி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
ஜிடிவியில் பணியாற்றியபோது, 2012ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளுக்காக எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக