இந்த வலைப்பதிவில் தேடு

புதன், மார்ச் 20, 2019

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்


இளைஞன் கௌதம் (ஹரிஷ் கல்யாண்) சிறுவயதிலேயே அன்னை தன்னை விட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேத்தியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் ஃபேஷன் டிசைனிங் கல்லூரி மாணவியான தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தாராவுக்கும் ரோஹித்துக்கும் திருமணம் செய்து வைப்பது எனச் சிறுவயதிலேயே பெரியவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இந்நிலையில் தாராவுக்கும் கௌதமுக்கும் காதல் மலர்கிறது. தாரா ரோஹித்தைத் திருமணம் செய்தாரா கௌதமுடன் இணைந்தாரா என்பதைத் திரைக்கதையாகக் கொண்டிருக்கிறது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம்.

முழுக்க முழுக்க காதல் படமான இதன் திரைக்கதை சற்றுத் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கிறது. படத்தின் உயிர்நாடியே, கௌதமின் தாய் அவருக்குப் பிடித்தவருடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஏமாற்றத்தை சிறுவன் கௌதமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்னும் உளவியல் பிரச்சினைதான். இந்த உளவியல் சரடைப் பின்பற்றிச் செல்லாதவர்களுக்குப் படம் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கக்கூடும். 

சிறு வயதில் எதிர்கொண்ட நம்பிக்கைத் துரோகத்தால் யாரையும் நம்பாமல் எவரிடமிருந்தும் எட்டியே நிற்கும் கௌதமுக்கு தாராவின் அன்பு கிடைக்கிறது. வெறும் மனரீதியான அன்பு மாத்திரமல்ல அது; காதலைக் கடந்து இருவரும் காமத்தை நுகர்கிறார்கள். அதன் உச்சபட்ச எல்லைகளைத் தாண்டிய பயணத்தில் இன்புறுகிறார்கள். வழக்கமாகக் காதலர்களுக்கிடையே எழும் அதே பிரச்சினை இவர்களுக்கிடையேயும் எழுகிறது. ஆனால், தாரா அதைப் பக்குவப்பட்ட மனத்துடன் திறம்படக் கையாள்கிறார். கௌதமுக்கு அந்த அளவுக்குக் காதல் உணர்வைக் கையாளத் தெரியவில்லை. தான் தாரா மீது கொண்டது காதலா என்பதேகூட அவருக்குக் குழப்பமாக உள்ளது.



ஷில்பா மஞ்சுநாத், ஹரிஷ் கல்யாண் இருவருமே கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். காதல் ஏக்கம், காதலனின் பக்குவமின்மை, பொறுமையின்மை குறித்த வருத்தம், இவற்றின் காரணமாகத் தான் கையறு நிலைக்குத் தள்ளிவிடப்படும் சூழல் ஆகிய அனைத்தையும் குறிப்பாக, ஆண்களால் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் இளம்பெண்ணின் உணர்வைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. கௌதமின் அப்பா (பொன்வண்ணன்) கூடத் தன் மனைவி தன்னைப் பிரிந்து போனதன் நியாயத்தை உணர்ந்தவராகவே இருக்கிறார். பிரிந்து சென்றாலும் தன் குழந்தைமீது அன்பு செலுத்தும் தாயாகத்தான் இருக்கிறார் கௌதமின் அம்மா. அவரை மணந்துகொண்டவர் கூட கௌதமின் கோபத்தைப் புரிந்தவராகவே இருக்கிறார். ஆனால், விடாப்பிடியான கோபத்தாலும் விட்டேத்தியான மனத்தாலும் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டுத் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் சதா துன்பத்தில் தள்ளுபவராக இருக்கிறார் கௌதம். அவருக்கும் அது புரிகிறது. ஆனால், அவரது மனநிலை அவரை மீண்டும் மீண்டும் அந்த முட்டுச் சந்திலேயே கொண்டு நிறுத்துகிறது.

கௌதமின் அகச் சிக்கல்களை உணர்த்துவதில் படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு உறுதுணையாக உள்ளன. படத்தின் தொடக்க காட்சிகளில் கௌதம் கதாபாத்திரத்துக்குத் தரப்பட்ட ஹீரோயிசப் பளுவை அவரால் சுமக்க முடியவில்லை.  ஒரு மாஸ் நடிகருக்குரிய சுமை அவருக்குச் சற்று அதிகப்படியாகவே உள்ளது. 


உளவியல் சார்ந்த பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டதால் படத்தில் புறவயமான சிக்கல்களைவிட அகவயமான சிக்கல்களே அதிகம் எடுத்தாளப்பட்டுள்ளன. அதனாலேயே வழக்கமான ரௌடியைக் காதலிக்கும் இளம்பெண் என்ற பாணியில் செல்லாமல் திரைக்கதை உணர்வுரீதியான வேறொரு மோஸ்தரில் பயணம் செல்கிறது. அதனால்தான் இந்தப் படத்தைக் கவனத்தில் கொள்ளவும் வேண்டியதிருக்கிறது.

கௌதமின் நண்பர்களாக வரும் மாகாபா ஆனந்த், பால சரவணன் ஆகியோரது காட்சிகள் படத்தில் தீவிரத் தன்மையைச் சற்று மட்டுப்படுத்த திரைக்கதையில் பயன்பட்டுள்ளன. ஆண் பெண் உறவு குறித்த பரிசீலனை வழியே ஒழுக்கம் பற்றியும் படம் கேள்வி எழுப்புகிறது. ஒழுக்கசீலர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடிய சாத்தியம் கொண்ட இந்தத் திரைப்படத்தில். இறுதிவரை எந்த ஒழுக்கப் பாடமும் எடுக்காமல் தீர்வையும் சொல்லாமல் காதல் வாழ்வை அதன் போக்கில் அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர். அந்த வகையில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உருப்படியான காதல் ஆட்ட முயற்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக