இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மே 14, 2017

சினிமா ஸ்கோப் 33: உன்னைப் போல் ஒருவன்


இயக்குநர் மைக்கேல் ஆண்டர்சன் இயக்கத்தில் 1958-ல் வெளியான திரைப்படம் சேஸ் எ குரூக்டு ஷேடோ. டேவிட் ஆஸ்பார்ன், சார்லெஸ் சின்க்ளெய்ர் ஆகிய இருவர் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். தன் தந்தையும் சகோதரனும் இறந்த சோகத்தில் இருக்கிறார் அந்த இளம் பெண். அப்போது அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் வருகிறார். வந்தவர் தான் அந்தப் பெண்ணின் சகோதரன் என்கிறார். இளம் பெண்ணுக்கோ அதிர்ச்சி. ஏனெனில், அவளுடைய சகோதரன் விபத்தில் மரித்துப்போயிருக்கிறான். ஆனால், அவளுடைய சகோதரன் என்பதற்கான எல்லாச் சான்றுகளையும் அந்த இளைஞன் வைத்திருக்கிறான். உள்ளூர் காவல் துறையே குழம்புகிறது. சான்றுகள் மட்டுமல்ல; அவளுக்கும் சகோதரனுக்கும் தெரிந்த தனிப்பட்ட விஷயங்களைக்கூட அவன் அறிந்திருக்கிறான். அவள் தன் சகோதரனுக்கு, அவன் கடற்கரையை ஒட்டிய மலைச்சாலையின் அபாயகரமான வளைவுகளில் அநாயாசமாக காரோட்டியதற்காகப் பரிசாகத் தந்த சிகரெட் பெட்டி அந்த இளைஞனிடத்தில் இருக்கிறது. சகோதரனைப் போலவே அந்த இளைஞனும் அதே சாலையில் காரோட்டுவதில் சாகசம் நிகழ்த்துகிறான். ஆனாலும் அவன் தன் சகோதரன் அல்ல என்பதில் உறுதியாக அவள் மாத்திரம் இருக்கிறாள். அவன் எதற்காக ஆள் மாறாட்டத்தில் வந்திருக்கிறான்?  அவளிடமுள்ள வைரத்தைக் கைப்பற்றவா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காகவே என்பதை அவளால் உணர முடியவில்லை.

அவளுடைய மாமாவை அழைத்துவருகிறார்கள் அவரும் அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் என்கிறார். எல்லாமே அவளுக்கு எதிராக நிற்கிறது. இறுதியாக அவனது கைரேகையை எடுத்து அதைப் பரிசோதிக்கிறார்கள். இருவருக்கு ஒரே மாதிரியான கைரேகை அமையாது என்பதால் அவள் அதை மலை போல் நம்பியிருக்கிறாள். ஆனால், அதுவும் அவளை ஏமாற்றிவிடுகிறது. இப்போது இருவரும் ஒருவரே என்ற முடிவுக்கு வந்த நேரத்தில் அந்தப் பெண் வாய் திறக்கிறாள். குடும்ப மானத்தைக் காப்பாற்றத் தன் சகோதரனைத் தான் கொன்றதாகச் சொல்கிறாள். இப்போது எல்லோரும் அதை நம்புகிறார்கள். அந்த இளைஞனை அவளுடைய சகோதரன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்கள். இது அத்தனையும் அவர்கள் நடத்திய நாடகம் என்பது வெட்டவெளிச்சமாகிறது. இப்போது உங்களுக்கு ஒரு தமிழ்ப் படம் ஞாபகத்தில் வந்திருக்கும்.


இந்த ஆங்கிலப் படத்தின் கதையைத் தழுவி 1963-ல் சேஷ் அங்கா என்ற வங்க மொழித் திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை இயக்கியவர் ஹரிதாஸ் பட்டாச்சார்யா. திரைக்கதையை அவருடன் ஷியாமள் குப்தா, ராஜ்குமார் மொய்த்ரா ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். வங்காளத்தின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமார், ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆங்கிலப் படத்தின் கதையை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள். ஆங்கிலப் படத்தில் நாயகியிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் வைரம் என்ற விஷயம் வங்காளப் படத்தில் கிடையாது. அதே போல் சகோதர சகோதரி என்ற உறவு இங்கே கணவன் மனைவியாக மாற்றப்பட்டிருக்கும். சுதான்ஷு குப்தா என்னும் தொழிலதிபர் தன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காகக் கிளம்புவதில் படம் தொடங்கும். அவருக்கும் ஷோமா என்பவருக்கும் நடைபெறும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கல்பனா குப்தா என்பவர் சுதான்ஷுவுடைய மனைவி என்று சொல்லி குறுக்கிடுவார். வழக்கறிஞருடன் வந்த கல்பனா குப்தா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நிறுத்திவிடுவார்.

தன் மனைவி பர்மாவில் ரங்கூனில் வைத்து விபத்தில் இறந்துவிட்டதாகவும் அவளுடைய இறப்புச் சான்றிதழ் தன்னிடம் உள்ளதாகவும் சுதான்ஷு குப்தா தெரிவிப்பார். வந்திருக்கும் பெண் யாரென்று தனக்குத் தெரியாது என்றும் அவரது நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் சொல்வார். கல்பனா குப்தா மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார். காவல் நிலையத்தில் வழக்குத் தொடுப்பார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும். ஆனால், பெரும்பாலான சான்றுகள் கல்பனா குப்தா சுதான்ஷு குப்தாவின் மனைவி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே அமையும். இறுதியாக ஷோமாவும் தன் கையைவிட்டுப் போகும் நிலையில் சுதான்ஷு குப்தா தன் மனைவியைத் தானே கொன்றுவிட்டதாக ஒப்புக்கொள்வார். அவரது வாக்குமூலத்தைப் பெற நடத்தப்பட்ட நாடகமே இது என்பதும் தெளிவாகும்.

இந்த இரண்டு கதைகளைப் படித்ததுமே இவற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட, தாதா மிராசி இயக்கத்தில் 1964-ல் வெளியான படமான புதிய பறவை உங்கள் நினைவுகளில் சிறகசைத்திருக்கும். இதே கதையை மலையாளத்தில் மம்முட்டியைக் கதாநாயகனாகக் கொண்டு ஜி.எஸ். தயாளன் என்னும் இயக்குநர் படமாக்கினார். 1989-ல் வெளியான சரித்திரம் என்னும் அந்தப் படத்தில் உறவு அண்ணன் தம்பியாக மாறியிருக்கும். அண்ணனாக மம்முட்டியும் தம்பியாக ரகுமானும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சிவன் குட்டி என்னும் திரைப்படைக் கதையாசிரியர் வேடத்தில் ஜெகதி ஸ்ரீகுமார் நடித்திருப்பார். அந்தக் கதாபாத்திரமே உலகப் படங்களைப் பார்த்து உள்ளூரில் கதை பண்ணும் வேலையைத்தான் செய்யும். அவர் ஒரு காட்சியில், இறந்துபோன தம்பி உயிருடன் வரும்போது, சேஸ் ஆஃப் குரூக்டு ஷேடோ படத்தில் வருவது போலவே உள்ளதே என்பார். மலையாளிகள் எப்போதுமே கெட்டிக்காரர்கள்.   

புதிய பறவை வங்காளப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகவே அதன் டைட்டில் தெரிவிக்கும். புதிய பறவையின் திரைக்கதையை பி.பி.சந்திரா என்பவர் எழுதியிருப்பார். வசனம் ஆரூர் தாஸ். சிவாஜி கணேசனுக்காகத் திரைக்கதையில் பல மாற்றங்களைச் செய்திருப்பார்கள். வங்கப் படத்தில் காதல் உள்ளுறை வெப்பமாக இருக்கும். ஆனால், புதிய பறவையில் காதல் அனலாகக் கொதிக்கும். நவீன பாணி உடை, பகட்டான ஒப்பனை, உணர்வுபூர்வ காட்சியமைப்புகள், அட்டகாசமான பாடல்கள், ஆர்ப்பரிக்கும் இசை போன்ற எல்லாவற்றையும் சேர்த்துப் படத்தைப் பிரம்மாண்டமான இசை நாடகம் போலவே உருவாக்கியிருப்பார்கள்.


பாடல் காட்சியில் உடலழகைக் காட்டும் வகையில் பனியன் போடாமல் மெல்லிய வெள்ளைச் சட்டையை மட்டும் சிவாஜி அணிந்திருப்பார். இந்த உத்தியைப் பணக்காரன் படத்தில் ரஜினி காப்பியடித்திருப்பார். ஆங்கிலப் படத்து நாயகியும் வங்க நாயகனும் புகைபிடிப்பவர்கள் அதைப் போலவே சிவாஜியும் படத்தில் மிகவும் ஸ்டைலாகப் புகைபிடித்துக்கொண்டேயிருப்பார். உணவு மேசையில் அமர்ந்திருக்கும்போதுகூட அவரது கையில் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். கைரேகையை எடுக்கும் காட்சி வங்கப் படத்தில் கிடையாது ஆனால், ஆங்கிலப் படத்திலும் புதிய பறவையிலும் உண்டு. 

சிவாஜியின் நடிப்பு, அதிலும் இறுதிக் காட்சியில் எல்லாமே நாடகம் என்பதை உணர்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, வசன உச்சரிப்பு எல்லாமே நயமான நாடக பாணியில் அமைந்திருக்கும். இதற்கு முன்னர் வெளியான இரண்டு படங்களிலுமே கதாபாத்திரங்கள் தம் இயல்புக்குள்ளேயே சுருண்டுதான் கிடக்கும். ஆனால், கோபால் என்னும் கதாபாத்திரம் சிவாஜி என்னும் மாபெரும் நடிகனிடம் கட்டுப்பட இயலாமல் மேலெழுந்து கர்ஜிக்கும். சிவாஜியின் ரசிகர்களும் திரையரங்கில் ஆரவாரக் கூச்சலிடுவார்கள். இப்படிப் படமாக்கப்படாமல் அந்த இரண்டு படங்களையும் போல் பெரிய சத்தமின்றி உருவாக்கப்பட்டிருந்தால் புதிய பறவைக்குப் பெரிய வணிக வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

< சினிமா ஸ்கோப் 32 >                    < சினிமா ஸ்கோப் 34 >

ஞாயிறு, மே 07, 2017

சினிமா ஸ்கோப் 32: புதையல்

திடுக்கிடும் திருப்பங்களும் ரசனையான காட்சிகளும் சினிமாவை ருசிகரமானதாக்கும். அந்தத் திருப்பங்களும் காட்சிகளும் ஏதாவது ஒரு முடிச்சை உருவாக்குவதும் பின்னர் அதை அவிழ்ப்பதுமாகவே திரைக்கதையின் பயணம் அமையும். இந்த முடிச்சு ஒன்றாகவும் இருக்கலாம்; பலவாகவும் இருக்கலாம். பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு பெரிய முடிச்சிட்டு அதை அவிழ்ப்பதே திரைக்கதையின் வேலையாக இருக்கும். அந்த முடிச்சு எவ்வளவுக்கெவ்வளவு கடினமாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு அதை அவிழ்ப்பதும் சுவாரசியமாக இருக்கும். ஒரு முடிச்சைப் போட்டு அதை மட்டுமே அவிழ்ப்பதைப் போல் பல முடிச்சுகள் கொண்ட திரைக்கதையும் அமைக்கலாம். இந்த வாரம் இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று தமிழ்ப் படம், மற்றொன்று ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட பரீட் (Buried 2010) என்னும் ஸ்பெயின் நாட்டுப் படம். வாழ்வதற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட படம் இது. இந்த இரண்டு படங்களில் பரீட் ஒரே முடிச்சைக் கொண்ட படம். ஆனால், தமிழ்ப் படத்தில் பல முடிச்சுகள் உண்டு. ஒவ்வொரு முடிச்சாகப் போட்டு, ஒவ்வொன்றையும் அவிழ்த்துக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 


பரீட் படத்தில் திரையில் ஒரே கதாபாத்திரம்தான் நடித்திருக்கும். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ரேயான் ரெனால்ட்ஸ் என்னும் கனடா நாட்டைச் சார்ந்த நடிகர். படத்தை இயக்கியிருப்பவர் ரோட்ரிகோ கார்டஸ். அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரக் ஓட்டுநர், பால் கான்ராய் ஈராக்கில் பிணைக்கைதியாக மாட்டிக்கொள்கிறார். பிணைக்கைதியாக அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம் ஒரு சவப் பெட்டி. ஆம், ஒரு சவப் பெட்டியில் அவரை வைத்து மூடி அந்தப் பெட்டியை மண்ணில் புதைத்துவிடுகிறார்கள். அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரை, அதுவும் மண்ணில் புதையுண்ட அவரிடமே கேட்டு ஈராக் தீவிரவாதிகள் மிரட்டுகிறார்கள். அந்தச் சிக்கலிலிருந்து அவர் மீட்கப்பட்டாரா மீள வழியின்றி மாண்டாரா என்பதையே அந்தப் படம் சொல்லிச் செல்லும்.   

ஒரு சினிமாவை ரசனைக்குரியதாக்குபவை பசுமையான சூழல்களும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் மனதை ஈர்க்கும் வண்ணமயமான லொகேஷன்களும் தாம். அப்படியான இடங்களில் படமாக்கலை மேற்கொண்டால்தான் படத்தின் மூலம் கிட்டும் காட்சி அனுபவத்தின் ருசி கூடும். அதனால்தானே தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்காகவே இதுவரை படப்பிடிப்பே நடக்காத புதிதான ஒரு நாட்டையோ புதிரான ஓர் இடத்தையோ தேடிக் கண்டுபிடித்துச் சென்று படம் பிடிக்கும் வழக்கமே தோன்றியது. ஆனால், இந்தப் படத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில், படம் முழுவதும் அந்தச் சவப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் அந்த ஓட்டுநரையே சுற்றிச் சுற்றி வரும். ஆனாலும் படம் அலுப்புத் தட்டாமல் செல்லும். அந்த வகையில் திரைக்கதையாசிரியர் கிறிஸ் ஸ்பார்லிங் காட்சிகளை நகர்த்தியிருப்பார். 


படம் தொடங்கிய நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் அந்த ஓட்டுநர் தப்பிப்பாரா இல்லையா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை விஸ்தரித்தயபடியே செல்லும். அவரிடம் இருக்கும் மொபைல் உதவியுடன் அவர் வெளி உலகைத் தொடர்புகொண்டு அந்தச் சிக்கலிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார். அதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளாகவே படத்தின் சம்பவங்கள் அமைந்திருக்கும். அந்த ஓட்டுநரைத் தவிர ஏனைய கதாபாத்திரங்கள் எல்லாமே வெறும் குரல்களாகவே வெளிப்பட்டிருக்கும். அவரைத் தவிர படத்தில் முகத்தைக் காட்டும் ஒரு கதாபாத்திரம் அவருடன் அலுவலகத்தில் வேலைபார்த்த பெண் சகா ஒருவர். அவரும்கூட படத்தில் ஒரு வீடியோ படத்தின் காட்சியாகத்தான் வருவார். மற்றபடி அந்த ஓட்டுநர் மட்டுமே முழுப் படத்தையும் ஆக்கிரமித்திருப்பார். இது ஓர் இயக்குநருக்குச் சவாலான விஷயம்தான். இதை வெறுமனே இப்படி ஒரு த்ரில்லராக மட்டும் உருவாக்கியிருந்தால் அதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால், படத்தில் நிறுவனங்கள் தமது ஊழியரை எப்படி ஈவு இரக்கமில்லாமல் நடத்துகின்றன என்ற விமர்சனம் இடம்பெற்றிருக்கும். சிறிதுகூட குற்றவுணர்வு இன்றி நெருக்கடியில் மாட்டிக்கொண்ட ஊழியரைக் கைகழுவிவிடும் நிறுவனங்களின் குரூரத்தை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கும் பாங்கால்தான் இது மாறுபட்ட திரைப்படமாகிறது. ஒரு பேஸ் பால் விளையாட்டு வீரருக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும் ஒரு ட்ரக் ஓட்டுநருக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வசனம் உண்டு. கடைசி வரையில் அந்த ஓட்டுநர் தப்பித்துவிட மாட்டாரா, மனைவி, குழந்தையுடன் சேர்ந்துவிட மாட்டாரா என்ற ரசிகரின் எதிர்பார்ப்பு கடைசியில் பொய்த்துப்போகும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்டதன் காரணம் புரிந்துவிடும். 

குற்ற உணர்வே அற்ற அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்தின் கதையை பரீட் காட்சிப்படுத்தியிருந்தது என்றால், குற்ற உணர்வு காரணமாகத் தன் நண்பனின் மீது நீங்காத அன்பு கொண்டு வாழ்ந்த ஓர் இளைஞனைப் பற்றிச் சித்தரிந்திருந்தது, சித்திக் இயக்கிய ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம். விஜய் போன்ற மாறுபட்ட முயற்சிகளுக்கு முகம் கொடுக்காத நடிகர் நடித்திருந்தும் படம் ஓரளவு ரசனைக்குரியதாக உருவானதற்குக் காரணம் இதன் திரைக்கதைதான். அதன் பலத்தில்தான் படம் நின்றது. விஜயும் சூரியாவும் நண்பர்கள். சூரியாவின் தங்கை விஜயைக் காதலிப்பார். அவர் அதை மறுத்துவிட்டு ஓடுவார். ஆனால் விஜயோ அந்தக் காதலை ஆதரிக்கவே செய்வார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க விரும்புவார். இதனிடையே அவரும் சூரியாவும் சேர்ந்து பெரும் செல்வந்தக் குடும்பத்தின் மாளிகைக்குச் செல்ல நேரும். அங்கு தேவயானியுடன் விஜய்க்குக் காதல் வரும். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல், சூரியாவுக்கும் தேவயானிக்கும் மோதல், நண்பனுக்காகத் திருமணம் வேண்டாம் என விஜய் மறுப்பது எனப் படம் முழுவதும் ஒன்று மாற்றி ஒன்றாகப் பல முடிச்சுகள் வந்து விழும். 


படத்தின் தொடக்கத்தில் சூரியாவின் தம்பி சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வாலேயே எல்லோரையும்விட சூரியாமீது அதிக அன்பைப் பொழிபவராக இருக்கும் விஜய் கதாபாத்திரம். படத்தின் இறுதியில் அப்படியே இந்தச் சூழல் சூரியாவுக்கும் பொருந்திவரும். விஜய் சாவுக்குத் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்வு சூரியாவைப் பற்றி நிற்கும். இந்த இரு குற்ற உணர்வையும் களைந்து, படத்தை சுபமாகவே முடித்திருப்பார் இயக்குநர். விஜய் என்ற கதாநாயகத்துவ நடிகருக்காக இந்த உணர்வுபூர்வ படத்தின் கிளைமாக்ஸில் அடிதடி, சண்டை எனச் சும்மா தெறிக்கவிடுவார்கள். நம் கதாநாயகர்களது பிம்பம் காரணமாக இப்படிச் சில சேதாரம் திரைக்கதையில் நேரத்தான் செய்யும். அதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இயக்குநர்களும் படத்தை உருவாக்குகிறார்கள்; ரசிகர்களும் படத்தைப் பார்க்கிறார்கள். ஆக, ஒரு படத்தில் எத்தனை நடிகர்கள் நடித்திருக்கிறார்களோ என்பதிலோ எத்தனை முடிச்சுகள் உள்ளன என்பதிலோ ரசிகர்களின் கவனம் பதியப்போவதில்லை, அவர்களது கவனமெல்லாம் படம்  ரசிக்கத்தகுந்த வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பதிலேயே நிலைத்திருக்கும்.

< சினிமா ஸ்கோப் 31 >                           < சினிமா ஸ்கோப் 33 >

ஞாயிறு, ஏப்ரல் 23, 2017

சினிமா ஸ்கோப் 31: இதயத்தைத் திருடாதே

ஒரு திரைக்கதையை அழகுபடுத்துவது உணர்வுபூர்வ சம்பவங்கள். அடுத்தடுத்த கட்டத்துக்குக் கதை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் படம் சப்பென்றாகிவிடும். ஓடினால்தானே அது நதி, தேங்கினால் குட்டைதானே. கிட்டத்தட்ட ஒரே கதை என்றபோதும், திரைக்கதையின் பயணம் வெவ்வேறாக அமைந்த இரண்டு தமிழ்ப்  படங்களைப் பார்க்கலாம். ஒன்றைப் பிரபலமான இயக்குநர் இயக்கியிருக்கிறார். மற்றொன்றைப் பெயரறியாத இயக்குநர் இயகியிருக்கிறார்.  


முடிவல்ல ஆரம்பம் 1984-ல் வெளியான தமிழ்ப் படம். படத்தைத் தயாரித்து இயக்கியிருப்பவர் என்.மொஹியுத்தீன்; திரைக்கதையும் அவர்தான். படம் அநேகமாக ஏதோ ஒரு இந்திப் படத்தின் மறு ஆக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்திக் கதையாசிரியரும் இயக்குநருமான சரண்தாஸ் ஷோக். 

அது ஒரு மலையோரக் கிராமம். அவள் ராதா, அந்தக் கிராமத்தில் ரோட்டோர டீக்கடை நடத்தும் பெண்மணியின் ஒரே மகள். பத்தாவதுவரை படித்திருக்கிறாள். கிட்டத்தட்ட பதினாறு வயதினிலே மயிலு போன்றவள். அவன் கண்ணையா, லாரி ஓட்டுநர். தொழில் நிமித்தமாகச் செல்லும் வழியில் அடிக்கடி டீக்கடைக்கு வந்து செல்கிறவன். இருவருக்குமே இள வயது. பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளும் பருவம். காதல் வயப்படுகிறார்கள். கயிற்றுச் சடங்குக்கு முன்னரே இருவரையும் கலவி பிணைத்துவிடுகிறது. ராதா கர்ப்பமாகிவிடுகிறாள். கல்யாண தேதி குறித்துவிடுகிறார்கள். அதற்கு முன் தினம் இரவு தொழில் நிமித்தமாகச் சென்ற கண்ணையா திரும்பிவரவில்லை.


இந்தக் கதையைப் படிக்கும்போது, உங்களுக்குச் சமீபத்தில் வெளியான காற்று வெளியிடை ஞாபகம் வரலாம். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. காற்று வெளியிடையின் திரைக்கதை பழமையானது. சொல்லப்போனால் திரைக்கதை என்ற ஒன்றே இல்லை. தொழில்நுட்பத்தால் ஊதப்பட்ட பொம்மை அது. அதனால்தான் எல்லா ஃப்ரேம்களும் அழகாக இருந்தும் படம் ஜீவனற்றுக் காட்சி தருகிறது. காற்று வெளியிடை நதியல்ல, குட்டை. வருண் பாகிஸ்தான் சிறையில் மாட்டிக்கொள்கிறான். வயிற்றில் குழந்தையுடன் லீலா இருக்கிறாள். இருவரும் இணைவார்களா என்பதே கிளைமாக்ஸ். ஆனால், வெறும் காதல், மன்னிப்பு, மீண்டும் காதல் மீண்டும் மன்னிப்பு என்று பள்ளத்தில் விழுந்த லாரி டயர் போல் படம் ஒரே இடத்தில் சுழன்றுகொண்டிருக்கும். ஆணாதிக்கம், பெண் உரிமை, போர் என்ற பம்மாத்துகள் வேறு படத்தில் துருத்திக்கொண்டிருக்கும். நுட்பமாக வெளிப்படுத்துதல் வேறு, நுனிப்புல் மேய்தல் வேறு. காற்று வெளியிடை இரண்டாவது வகையானது.

லீலா ஆப்ரஹாம் போன்ற நிலையில்தான் ராதாவும் இருக்கிறாள். ஆனால், லீலா போல் ராதாவுக்கு மூளைப் பிசகில்லை; காதலுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளத் தயாராகவும் இல்லை. அவளுக்குத் தன்னை ஏமாற்றிச் சென்ற காதலன் மீது கடுங்கோபம் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் அவனைப் பழிவாங்கவும் தயாராக இருக்கிறாள். முடிவல்ல ஆரம்பம் படத்தில் ஒரு தெளிவான திரைக்கதை இருக்கிறது. பல சுவாரசியமான முடிச்சுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் அழகாக அவிழ்க்கப்படுகின்றன.


கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமான ராதா, குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதை மருத்துவமனை ஒன்றின் வாசலில், இருள் விலகியிராத அதிகாலை நேரத்தில் யாருமறியாத வகையில் விட்டுவிடுகிறாள். இதுதான் தொடக்கக் காட்சி. வெளிச்சம் வந்த பின்னர், தன் பெயரை சீதா எனச் சொல்லி அதே விடுதியில் வேலைக்கும் சேர்ந்துவிடுகிறாள். அவளது குழந்தை ஜான் என்னும் பெயரிலேயே அந்த மருத்துவமனையில் வளர்கிறது. தெளிந்த நீரோடையாக இப்படிப் பல சம்பவங்கள்  தொடர்கின்றன. 

முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்குப் பல கேள்விகள் எழுகின்றன. யாரிந்தப் பெண்? ஏன் குழந்தையை விடுதியில் கொண்டுவந்து போடுகிறாள்? குழந்தைக்கும் அவளுக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்விகள் எழும் சமயத்தில் அவளது குழந்தைதான் அது என்பது உணர்த்தப்படுகிறது. அவளது குழந்தை என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும். பிறருக்குத் தெரியாது. அதை வைத்து நகரும் கதையில் ராம் என்னும் மருத்துவர் உள்ளே வருகிறார். அவருக்கு சீதா மீது காதல் அரும்புகிறது. அவர் ராம்; அவள் சீதா. எனவே, பார்வையாளர்கள் மனதில் ஒரு கணக்கு வந்துவிடுகிறது. ஆனால், மணமாகாமலே சீதா குழந்தையுடன் இருக்கிறாளே, என்ன செய்வது? சீதாவிடம் திருமணம் பற்றிப் பேசுகிறார் ராம். அப்போது அவள் நினைவில்தான் அவளது காதல் கதை விரிகிறது. 


அந்தக் காதல் கதைக்குள் ஒரு பதினாறு வயதினிலே ஒளிந்துள்ளது. கண்ணையாவும் ராதாவும் காதல் வயப்பட்டுத் துள்ளித் திரிந்த ஊரில் பதினாறு வயதினிலே பரட்டை போல் லோகு எனும் ரௌடியும் வாழ்ந்துவருகிறான். அவனுக்கும் ராதா மீது ஒரு கண். அது மாத்திரமல்ல; சப்பாணி போல் ஒரு கதாபாத்திரமும் படத்தில் உண்டு. ஒரு செல்வந்தரின் மகனான அந்தக் கதாபாத்திரம் வைத்தி. சப்பாணி மயில் மேல் உயிராக இருப்பது போல் வைத்தி ராதா மேல் உயிராக இருக்கிறான். பதினாறு வயதினிலே சப்பாணி கதாபாத்திரமே டேவிட் லீனின் ரேயான்’ஸ் டாட்டர் (1970) படத்தின் மைக்கேல் கதாபாத்திரத்தை நினைவூட்டக்கூடியது. மைக்கேல் கதாபாத்திரமும் காலை இழுத்து இழுத்துதான் நடக்கும். இந்த வேடத்தை ஏற்றிருந்த ஜான் மில்ஸ் இந்தப் படத்தில் வெளிப்படுத்தியிருந்த நடிப்புக்காகச் சிறந்த துணைநடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சீதாவும் ஜானும் தாயும் மகனும் என்பது அனைவருக்கும் தெரியவந்துவிடுகிறது. அதன் பின்னர், ராமுக்கும் சீதாவுக்கும் திருமணம் என்னும் சூழலில் கண்ணையா வந்துவிடுகிறார். ஒரு விபத்தில் கண் பார்வை பறிபோன நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்ணையாவின் கண் பார்வையை மீட்பதற்கான அறுவை சிகிச்சையை ராம் மேற்கொள்கிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தைப் போன்று காதலியின் கணவனுக்கு சிகிச்சை செய்யும் காதலன் நிலையில் ராம் கதாபாத்திரம் இருக்கும். கண்பார்வை வந்துவிட்டால் ராதாதான் சீதா என்னும் பெயரில் மருத்துவமனையில் இருக்கிறாள் என்பது கண்ணையாவுக்குத் தெரிந்துவிடும். கண்ணையாவுக்குப் பார்வை திரும்பினால் தொழில்ரீதியில் ராமுக்கு வெற்றி. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் தோல்வி. கண்ணையாவின் பார்வை திரும்பியதா, சீதா கண்ணையாவுடன் சேர்ந்துவிட்டாளா இல்லை ராமுக்கும் அவளுக்கும் திருமணமா என்பதே கிளைமாக்ஸ் காட்சி. இப்படி ருசிகரமான காட்சிகளால் திரைக்கதை உயிர்ப்புடன் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றதா, இதன் இயக்குநர் வேறு ஏதேனும் படத்தை இயக்கியிருக்கிறாரா என்பவை தெரியவில்லை. படத்தின் வசனங்களில் பாலசந்தர் பாதிப்பு தெரிகிறது. 


முடிவல்ல ஆரம்பம் வெளியானது 80-கள். இப்போது 2017. முப்பது ஆண்டுகளுக்கும் பிறகு, முற்போக்கு சாயலில் பிற்போக்கான திரைக்கதை அமைத்திருக்கிறார் மணி ரத்னம். தொழில்நுட்பம் அவரது மிகப் பெரிய பலம். என்ன இருந்தும் திரைக்கதை உயிர்த் துடிப்போடு இல்லாவிட்டால் தொழில்நுட்பத்தால் ஒரு பயனும் இல்லை என்பதற்குக் காற்று வெளியிடை சரியான உதாரணம்.

< சினிமா ஸ்கோப் 30 >                < சினிமா ஸ்கோப் 32 >

ஞாயிறு, ஏப்ரல் 02, 2017

சினிமா ஸ்கோப் 30: சில நேரங்களில் சில மனிதர்கள்


சில வேளைகளில் சாதாரணப் படம் அநேகரால் ரசிக்கப்படும்; அநேகரால் புறக்கணிக்கப்படும் படம் கவனிக்கத்தக்க படமாக அமைந்துவிடும். இது சினிமாவின் மர்மமான அம்சங்களில் ஒன்று. தனிநபர் ரசனையைப் பொறுத்த அம்சம் இது என்பதால் ஏன், எதற்கு, எப்படி என்று எந்தக் கேள்வியையும் எழுப்ப இயலாது. புனைவும் யதார்த்தமும் சரியான கலவையில் அமையும்போது, அது பார்ப்பதற்கு உகந்த படமாகிவிடும். இந்தக் கலவை சமையலில் வெளிப்படுவது போன்ற ஒருவகையான கைப்பக்குவம்தான். எப்போதும் இந்தக் கைப்பக்குவம் ஓர் இயக்குநருக்குக் கைகொடுக்கும் என்று கூற முடியாது. மேலும், இப்படியான கைப்பக்குவத்துடன் படமாக்கப்பட்ட ஒரு படம் பெருவாரியான ரசிகர்களால் ரசிக்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், ஒரு படம் அதற்கான ரசிகர்களைச் சென்றடைவதுதான் முக்கியம். அப்படிச் சரியான ரசிகர்களைச் சென்றடைந்த படம் வெற்றிபெறும். வெற்றி என்றால் வணிகரீதியான வெற்றியல்ல; படைப்புரீதியான வெற்றி. 

சமீபத்தில் இரண்டு படங்களைப் பார்க்க நேர்ந்தது. ஒன்று பிரசாத் முருகேசன் இயக்கிய கிடாரி, மற்றொன்று சணல்குமார் இயக்கிய ஒளிவுதிவசத்து களி. கிடாரி வன்முறைப் படம் என முத்திரை குத்தப்பட்டது. ஆகவே அது பெரும்பான்மையானவர்களால் கவனிக்கப்படவில்லை. ஒளிவுதிவசத்து களியின் கதையோ இதற்கு நேரெதிர். படம் பார்க்கலையா எனத் துக்கம் விசாரிக்கும் அளவுக்குப் படம் விதந்தோதப்பட்டது. அதை ஒரு காவியம் என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்தபோது, திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு ஆகியவை பற்றிய எண்ணம் எழுந்தது. கிடாரியில் பலமான திரைக்கதை உள்ளது, ஒளிவுதிவசத்து களியிலோ திரைக்கதை என்றே ஒன்றே முற்றிலுமாக இல்லை. ஒரு கல்யாண வீடியோ எடுப்பது போன்ற தன்மையுடன் படமெடுத்திருக்கிறார்கள். ஒளிவுதிவசத்து களி சொல்லும் சேதி சமூகத்துக்கு அவசியமானதே. ஆனால், அது திரைப்படம் அல்ல; வெறும் கதைப் படம்.


ஒரு திரைப்படத்துக்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இந்தப் படம் உண்ணி ஆர் என்னும் மலையாள எழுத்தாளரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இது ஒருவகையான குறியீட்டுப் படம்தான். அதனால்தான் திரைக்கதைக்குப் பொருந்தாத அந்த கிளைமாக்ஸுடன் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான சண்டை, பாட்டு, நகைச்சுவை என்ற வகையில் அடங்காமல் புதுப் பாதையில் பயணித்த படம் இது. நான்கைந்து நண்பர்கள் அடர்ந்த வனமொன்றின் நடுவே ஒரு மாளிகையில் குடிக்கச் செல்கிறார்கள். அவர்களுக்கிடையேயான உரையாடல், சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே சமூகத்தைப் பற்றிய, ஜனநாயகத்தைப் பற்றிய இயக்குநரின் புரிதலை வெளிப்படுத்துகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதிர்ச்சி தரும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சி இருவகையானது சிலருக்கு எப்படியான படம் என்ற வியப்பு கலந்த அதிர்ச்சி, சிலருக்கு என்னடா படம் என்ற சலிப்பு கலந்த அதிர்ச்சி. இந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும்படியான திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அமையாமல் போனதால் அது ஒரு சராசரியான படமாகவே நிலைகொண்டிருக்கிறது. 

50 நிமிடங்களுக்கு மேலான ஷாட், ஸ்பாட் ரெக்கார்டிங் போன்ற முயற்சிகள் வெறும் கவன ஈர்ப்புக்கான அளவிலேயே பயன்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் அது இந்திய ஜனநாயகம் பற்றிப் பேசுகிறது, பெண்களின் நிலையைப் பற்றிப் பேசுகிறது, ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால், அது ஒரு முழுநீளத் திரைப்படமா என்று கேட்டால், அப்படிச் சொல்லிவிட முடியாது. அது மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட குறும்படம் என்ற அளவிலேயே உள்ளது. 

கிடாரி துரோகத்தின் அரசியலையும் வீரத்தின் முகவரியையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. சுவாரசியமான திரைப்படத்துக்குத் தேவையான அம்சங்களை அதன் திரைக்கதை கொண்டிருந்தது. மிகவும் முதிர்ச்சியான காட்சிமொழியால் காட்சிகள் திரையில் எழுதப்பட்டிருந்தன. தனக்காக வாழ்வதற்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வதற்குமான வேறுபாட்டைச் சுட்டியபடி படம் பயணிக்கிறது. தான் வாழ்வதற்காகத் தன் குட்டியை விழுங்கும் பாம்பு போன்ற தன்மையுடன் கொம்பையா பாண்டியன் வேடம் படைக்கப்பட்டிருந்தது. ஒரு சமூகமே வீரம் என்று கொண்டாடும் விஷயத்தை மிக லாவகமாகப் படம் நையாண்டி செய்திருக்கிறது. பழியும் வன்மமும் நிறைந்த வாழ்வில் துரோகம் சிலவேளைகளில் நிழல் தரும் மரமாகவே உருக்கொண்டுவிடுகிறது. நிழல் தந்த மரம் ஐந்துதலை நாகம் என்பது புரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? அந்த அதிர்ச்சியை அதன் கிளைமாக்ஸ் தரும். வீரம் என்பது வெறும் தந்திரம் என்பதை வெளிப்படுத்தும்போது, வீரத்துக்காக மார்தட்டும் சமூகம் தலைகுனிவதே சரியானது என்பதைப் படம் உணர்த்துகிறது. குருதி நதியில் மிதந்த சடலமாகப் படம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் ஆனால், படம் ரத்தமும் சதையுமாகக் கையில் நெளியும் பிறந்த சிசு போன்றது.  


கிடாரியில் பிரச்சினை இல்லையா, அவ்வளவு அற்புதமான படைப்பா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் மிகப் பெரிய பலவீனம் கிடாரி கதாபாத்திரத்தை சசிகுமார் வெளிப்படுத்தியிருந்தவிதம். ஒரு காட்சியில்கூடத் திரைக்கதையின், கதாபாத்திரத்தின் பளுவை அவரால் தாங்க முடியவில்லை என்பதைப் படம் பார்க்கும்போது உணரலாம். இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம், மதயானைக்கூட்டம் போன்ற படங்களை ஒத்ததுதான். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் தான் ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் சுமையைப் பறவையின் இறகு போல் தாங்கியிருந்தார். ஆனால், கிடாரியில் அவர் சறுக்கியிருக்கிறார். சாதிப் பெருமைப் படக் கதாபாத்திரங்களின் தன்மை அவர் மீது ஒரு கறையாகவே படிந்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில் த ரெவனென்ட் படத்தின் லியோனர்டோ டி காப்ரியோ நினைவுக்கு வருகிறார். படத்தின் பளுவைத் தனியொருவராக அவர் தூக்கிச்சென்றிருப்பார். அவரும் சசிகுமாரும் ஒன்றா என்று கேட்டு அடிக்க வராதீர்கள். திரைக்கதையைச் சுமக்கும் வலுக்கொண்ட நடிகர் வாய்க்காவிட்டாலும் திரைக்கதை ஜொலிக்காது என்பதைச் சொல்லவே இந்த உதாரணம்.

மொத்தத்தில், ஒரு முழுநீளத் திரைப்படம் செய்தி சொல்லலாம்; சொல்லாமல்போகலாம். அதைவிட முதன்மையான விஷயம் அது திரைப்படமாக இருக்க வேண்டும். எவ்வளவு கலைத்தரத்துடன் படைக்கப்பட்டாலும் அது பொழுதுபோக்குக்காகவே உருவாக்கப்படுகிறது; அந்தப் பொழுதுபோக்கு பயனுள்ளதாக அமைய ஒரு இயக்குநர் பிரயத்தனப்படலாம். அப்படி அமைந்துவிட்டால் அது நல்ல படமென்று சொல்லப்பட்டுவிடும். அதன் காட்சிமொழி இயல்பாகவும் பக்குவமாகவும் வெளிப்படும்போதே அது திருப்தி தரும் படமாகும். இப்படியான திருப்தியைத் தருவதற்கான அடித்தளத்தை ஒரு நல்ல திரைக்கதையால் கொடுக்க இயலும். நல்ல திரைக்கதையை அதன் கதாபாத்திரங்களுக்கு உகந்த நடிகர்களுடன் பார்ப்பதற்கேற்ற பதத்திலும் முதிர்ச்சியுடனும் நல்ல திரைப்படமாக்குவது இயக்குநரின் கைகளிலேயே உள்ளது. ஆக, கிடாரி நட்சத்திரத் தேர்வில் சறுக்கியது என்றால் ஒளிவுதிவசத்து களி திரைக்கதையில் சறுக்கியது.

< சினிமா ஸ்கோப் 29 >                     < சினிமா ஸ்கோப் 31 >

ஞாயிறு, மார்ச் 12, 2017

சினிமா ஸ்கோப் 29: வண்ணக்கனவுகள்


தொண்ணூறுகளுக்கு முன்னரான காலம் இப்போது போலில்லை. சினிமா பார்க்க வேண்டும் என்றால் தியேட்டருக்குத் தான் செல்ல வேண்டும். விரும்பிய பாடலை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால்கூடப் படத்தை மீண்டும் பார்ப்பது ஒன்றே வழி. அதனால் திரையரங்குடன் அந்தரங்க உறவு கொண்டிருந்த ரசிகர்கள் அநேகர். வண்ணக்கனவுகள் பொதிந்த பசுமையான வெளியாகத் திரையரங்கம் அவர்களது மனதில் நிலைகொண்டிருக்கும். இப்போது கேட்டாலும் அவரவரது ஊரில் இருந்த, இருக்கும் திரையரங்கின் கதையை ரசிக்க ரசிக்கச் சொல்வார்கள். அப்படியொரு ரசிகன்தான் வசந்தபாலன் இயக்கிய வெயில் (2006) படத்தின் நாயகன் முருகேசன்.  

கூத்துப்பட்டறையில் பயிற்சிபெற்ற பசுபதி, சினிமாவால் வாழ்வைத் தொலைத்த, எம்.ஜி.ஆர். ரசிகனான முருகேசன் என்னும் வேடத்தை ஏற்றிருப்பார். ஆழப்புதைய சரியான ஆழிக்காகக் காத்திருப்பவர்கள் கூத்துப்பட்டறைக்காரர்கள். பசுபதியும் சளைத்தவரல்ல என்பதை இந்தப் படத்தில் காட்டியிருப்பார். தோல்வி பெற்ற ஒருவனின் வாழ்க்கைச் சம்பவங்கள் என்பதால் பசுபதியும் ஆழ்கடலில் மூழ்கித் தரைதொட்டு மேலெழுவார். சினிமாவால் முருகேசனது வாழ்வு என்ன ஆனது என்பதன் பின்புலத்தில் காலத்தில் கரைந்துபோகும் கரிசல் வட்டாரத்தின், வாழ்வின் ஞாபகங்களை மண்ணின் மணத்துடன் மீட்டெடுக்க முயன்றிருப்பார் வசந்தபாலன். இதன் திரைக்கதையில் முருகேசனுக்கும் பாண்டிக்குமான பிரியம் வெளிப்பட்டிருந்த விதம் ஆண் பெண் உறவு பற்றிய அக்கறையுடன் கையாளப்பட்டிருக்கும்.


அண்ணன் தம்பிப் பாசம், காதல், தகப்பன் மகனின் விநோத உறவு, நலிவடையும் தொழில், உருப்பெறும் புதுத் தொழில், தொழில் போட்டி, பகைமை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான விறுவிறுப்பான அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்த படமாக வெயில் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் கன்னியப்பா டாக்கீஸ் காட்சிகள் அனைத்துமே இத்தாலிப் படமான சினிமா பாரடைஸை நினைவூட்டும். 

1990-ம் ஆண்டில் சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்ற படம் சினிமா பாரடைஸ் (1988). சினிமா பாரடிஸோ என்னும் தியேட்டரில் தனது பால்யத்தையும் பருவத்தையும் கழித்துப் பின் சினிமா இயக்குநராக உயர்ந்த, சிறுவயதில் தோத்து எனச் செல்லமாக அழைக்கப்பட்ட, சல்வதோரி தி விதாவின் கதைதான் அந்தப் படம். ஆல்ஃப்ரெதோ என்னும் சினிமா ஆபரேட்டருக்கும் தோத்துவுக்குமான உறவின் பிணைப்பு வெளியாக அந்தத் திரையரங்கமே இருக்கும். அந்த ஊரின் பிரதான சதுக்கத்தில் மையமாக அமைந்த சினிமா பாரடிஸோவின் பின்னணியில் அவர்களது வாழ்வைச் சொன்ன படம் அது. ஆல்ஃப்ரெதோவின் மறைவுச் செய்தியுடன் படம் தொடங்கும். அதை அறிந்த சல்வதோரியின் நினைவுகளாகப் படம் திரையை நிறைக்கும். வெயிலில் படம் முருகேசனின் பார்வையில் தான் சொல்லப்படும். சினிமா பாரடைஸின் காட்சிக்கோணங்களும் வண்ணத் தோற்றமும் ரசிகர்களின் மனத்தில் அப்படியே அப்பிவிடும் தன்மை கொண்டது. சுவாரஸ்யமான திருப்பங்கள் படத்தில் கிடையாது. அது ஒரு வாழ்வைச் சொல்லும் படம். எனவே, அதற்கேற்ற திரைக்கதை கண்ணாடித் தளத்தில் நீர் பரவுவதைப் போல் மென்மையாக வழுக்கிக்கொண்டு செல்லும்.


தோத்துவுக்கு சினிமா மீது ஏற்படும் காதலை இந்தப் படத்தின் திரைக்கதை மிக ரசனையுடன் காட்சிகளாகச் சித்தரித்திருக்கும். முருகேசன் வேறு வழியில்லாத சூழலில் கன்னியப்பா டாக்கீஸை தஞ்சமடைவான். ஆனால் தோத்துவுக்கு அப்படியல்ல; சினிமா பாரடிஸோ அவனது சொர்க்கம். அதன் ஒவ்வோர் அசைவையும் அவன் கூர்ந்து கவனித்து, ஆபரேட்டிங் வேலையைக் கற்றுக்கொண்டவன். தியேட்டரில் நெருப்புப் பற்றி ஆல்ஃப்ரெதோ கண்பார்வையைப் பறிகொடுத்த பின்னர் அந்த தியேட்டர் ஆபரேட்டராகப் பொறுப்பேற்றுக்கொள்வான் தோத்து. ரசிகர்கள் சந்தோஷமாகத் திரைப்படம் பார்க்கும்போது, அவர்களுக்கு அந்த மகிழ்வை அடைந்த திருப்தி ஏற்படுவதை ஆல்ஃப்ரெதோ தோத்துவிடம் பிரியத்துடன் சொல்வார். என்னதான் விருப்பத்துடன் வேலைசெய்தாலும் அந்தப் பணி குறித்த சங்கடங்களையும் அவர் தோத்துவுடன் பகிந்துகொள்வார். அதனால்தான், ‘உன் பேச்சு போதும், உன்னைப் பற்றிய பேச்சு தேவை’ என்று தோத்துவை ஊரைவிட்டு விரட்டுவார்.  

தோத்து தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறு துவாரம் வழியே பார்க்கும் ஆல்ஃப்ரெதோவைப் பார்த்து சைகையில் பேசும் காட்சியைப் போலவே வசந்தபாலனின் வெயிலில் முருகேசனின் காதலி தங்கம் தியேட்டர் இருக்கையில் அமர்ந்துகொண்டு முருகேசனுடன் காதல்கலந்த சைகை மொழியில் பேசுவாள். போதிய ஆதரவு இல்லாமல் சினிமா பாரடிஸோ இடிக்கப்படுவதைப் போலவே கன்னியப்பா டாக்கீஸும் இடிக்கப்படும். வெயிலின் ஒரு பகுதி சினிமா பாரடிஸோவை நினைவூட்டுவதைப் போல் அதன் இன்னொரு பகுதி டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் இஸ்ரேலியப் படத்தை ஞாபகப்படுத்தும்.


2001-ல் வெலியான இந்த இஸ்ரேலியப் படம் டெஸ்பரடோ ஸ்கொயர் என்னும் ஒரு தியேட்டரை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கும். ஊரைவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஓடிப் போன, ஆவ்ரம் என்னும் பெயர் கொண்ட தம்பி, தன் அண்ணன் மோரிஸின் ஓராண்டு நினைவஞ்சலி தினம் அனுசரிக்கப்படும் வேளையில் ஊருக்குள் வருகிறான். இந்த வேளையில் மோரிஸ் தன் இரண்டாம் மகன் நிஸ்ஸிம் கனவில் வந்து, மூடிக்கிடக்கும் பழைய தியேட்டரில் இறுதியாக ஒரு படத்தைத் திரையிட வேண்டும் எனச் சொல்லி மறைகிறான். தியேட்டரைத் திறக்கும் முயற்சியில் இரு மகன்களான ஜார்ஜும் நிஸ்ஸிமும் ஈடுபடுகிறார்கள். தியேட்டரின் எந்தப் படத்தைத் திரையிட வேண்டும் என்று யோசிக்கும்போது இந்திப் படமான சங்கம் அங்கே திரையிடப்பட வேண்டும் என்கிறான் அந்த ஊரில் வாழும் இந்தித் திரைப்பட ரசிகனான இஸ்ரேல் -அவன் தியேட்டர் கூரை மேல் அமர்ந்து சுவரின் சிறு துவாரம் வழியே திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பவன். தியேட்டர் ஆபரேட்டரான ஆரோனும் அதை ஆமோதிக்கிறான். அந்தப் படத்தைத் திரையிட வேண்டாமென மறுக்கிறாள் மோரிஸின் மனைவியான செனியோரா. 

ஆனால் மகன்கள் தாயின் மறுப்பைப் புறக்கணித்து சங்கம் படத்தைத் திரையிட முயல்கிறார்கள். சங்கம் படத்தின் பிரிண்ட் தேடி அலைகிறார்கள். அதுவோ ஆவ்ரமிடம்தான் இருக்கிறது. இரு நண்பர்கள் ஒரு பெண்ணைக் காதலிப்பதும் அதைத் தெரிந்துகொண்ட நண்பன் ஒருவன் நட்புக்காகக் காதலை விட்டுத் தருவதும் சங்கம் படத்தின் கதை. அதைப் போலவே மோரிஸின் வாழ்விலும் நடந்திருக்கிறது செனியோராவும் ஆவ்ரமும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் மோரிஸுடன் செனியோராவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அண்ணனுக்காகத் தன் காதலைத் துறந்து ஊரை விட்டு ஓடிப்போனவன் தான் ஆவ்ரம். இந்த உண்மை மகன்களுக்குத் தெரியவருகிறது. இப்படிச் செல்லும் டெஸ்பரடோ ஸ்கொயரின் திரைக்கதை.

வெயில், டெஸ்பரடோ ஸ்கொயர் இரண்டு படங்களிலும் பிரதானமாக தியேட்டர் உண்டு; அண்ணன் தம்பிப் பாசமுண்டு; நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டப்படுவதுண்டு; இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பும் கதாபாத்திரமுண்டு. ஆனாலும் வெயில் ஒரு தமிழ்ப் படம். அதற்கான குணாதிசயங்களுடன் அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதனாலேயே சிறந்த இந்தியப் படமென்ற தேசிய விருதும் வெயிலுக்குக் கிடைத்தது. இந்த மூன்று படங்களையும் பார்க்கும் ரசிகர் ஒருவர், வெயிலின் உருவாக்கத்தில் சினிமா பாரடைஸ், டெஸ்பரடோ ஸ்கொயர் போன்றவற்றின் சாயலைக் கண்டடைய முடியும், அவ்வளவுதான்.

< சினிமா ஸ்கோப் 28 >                             < சினிமா ஸ்கோப் 30 >            

செவ்வாய், மார்ச் 07, 2017

ஆன் தி அதர் சைடு (குரோஷியா)

உலகமெங்கும் போரால் மனிதர்கள் உறவுகளை இழக்கிறார்கள்; உறவுகளைப் பிரிகிறார்கள். பிரிந்த உறவுகளைக் கண்டடைந்துவிட மாட்டோமா எனத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் சிலர். அந்தப் பிரிவின் நினைவைக்கூடச் சிலர் தொலைத்துவிட விரும்புகிறார்கள். வெஸ்னா என்னும் செவிலி இந்த ரகத்தைச் சேர்ந்த பெண்மணி. குரோஷியாவின் தலைநகரான ஸாக்ரெப்பில் வசித்துவருகிறார் வெஸ்னா. அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள் திருமண வயதில் இருக்கிறார். மகனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. வீடுகளுக்குச் சென்று நோயாளிகளைப் பராமரிப்பது வெஸ்னாவுடைய பணி. நிம்மதியாகச் சென்றுகொண்டிருக்கும் அவரது வாழ்வைக் குலைத்துப்போடுகிறது தொலைபேசி அழைப்பு ஒன்று. முதலில் அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுக்கும் அவர் தொடர்ந்து அழைத்த நபருடன் உரையாடத் தொடங்குகிறார். இதனால், அவர் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி அந்தத் தொலைபேசியில் பேசிய நபர் வேறு யாருமல்ல; அவளுடைய கணவன் ஸார்க்கோதான்.



ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவளிடமிருந்து விலகிச் சென்றவர் எதிர்பாராத ஒரு தருணத்தில் தொடர்புகொள்கிறார். இருபதாண்டுகளாக அவர் எங்கிருந்தார்ஏன் மனைவியை விட்டுப் பிரிந்தார் போன்ற கேள்விகளுக்கான பதில்களை மாறுபட்ட திரைக்கதையாக்கி, ‘ஆன் தி அதர் சைடு’ என்னும் படத்தை உருவாக்கியுள்ளார் குரோஷிய இயக்குநர் ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா. இந்தப் படத்தை நம் நினைவில் நிலைக்கச் செய்வது இதன் திரைக்கதையே. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி அப்படியே பார்வையாளர்களைப் புரட்டிப் போட்டுவிடும் திருப்பம் கொண்டது. உணர்வுபூர்வமான இந்தத் திரைப்படத்தின் ஜீவனை முழுமையாக்குவது அந்த க்ளைமாக்ஸ்தான்.


இந்தப் படத்தில் கணவன் மனைவியின் பிரிவுக்குக் காரணம் 1991-95 ஆண்டுகளில் நடைபெற்ற குரோஷிய சுதந்திரப் போராட்டம்தான். அந்தக் காலகட்டத்தில் மத்திய குரோஷியாவின் சிசாக் என்னும் நகரில் செவிலி வெஸ்னா தன் கணவன் ஸார்க்கோவுடனும் குழந்தைகளுடனும் வசித்துவந்தார். ஜேஎன்ஏ என அழைக்கப்பட்ட, செர்பியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூகோஸ்லோவிய மக்கள் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார் ஸார்க்கோ. போர் காரணமாகவே வெஸ்னா தன் குழந்தைகளுடன் ஸாக்ரெப்புக்கு இடம்பெயந்திருக்கிறார். ஸார்க்கோ போர்க் குற்றங்களுக்காகச் சுமார் 20 ஆண்டுகளைச் சிறையில் கழிக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் தன் மனைவியை அழைத்துப் பேசுகிறார்.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும்போதும், தொலைபேசி வழியே உரையாடும் போதும், அந்த நாள்களின் ஞாபகங்களையும் மனிதர்களையும் நினைவின் ஆழத்திலிருந்து உருவிப் பேசுவது என்பது இதம் தருவது என்றபோதும் வலி மிக்கது. இந்த வலியை உணர்த்தும் விதமான ஒளிப்பதிவு, பின்னணியிசை, காட்சிப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு படத்தை இயக்குநர் நகர்த்துகிறார். அதனால்தான் மிக நிதானமாக நகரும் இந்தப் படத்தை நாம் பொறுமையுடன் பார்க்க முடிகிறது. இந்தப் போர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை பேரின் வாழ்வில் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்குமா என்ற ஆதாரக் கேள்வியைப் படம் எழுப்புகிறது.


படத்தின் பின்னணி போராக இருந்தபோதும், போர் நடந்து முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னரான வாழ்வே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வாழ்வின் வழியேதான் போரின் பாதிப்பை இயக்குநர் உணர்த்துகிறார். ஆகவே இந்தப் பாதிப்பானது மிகவும் நுட்பமாக, சன்னமான தொனியில்தான் வெளிப்பட்டிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் தன் கணவனின் நடவடிக்கை காரணமாகத் தன் குழந்தையை இழந்த சோகத்தை வெஸ்னாவால் மறக்கவோ தன் கணவனை மன்னிக்கவோ முடியவில்லை. அந்தக் கணவனுடன் மீண்டும் சேர வேண்டுமா என்பதாலேயே அவள் அவரைத் தொடக்கத்தில் மன்னிக்க மறுக்கிறார். அவர் தொலைபேசி வழியே வற்புறுத்தி அழைத்தபோதும், பெல்கிரேடு நகரில் இருக்கும் அவரைச் சந்திக்கப் பிரியப்படுவதில்லை. வெஸ்னாவின் மகனும் தன் தந்தையைப் பார்க்கவே விரும்பவில்லை.

மகளுக்கோ அவளுடைய அரசு வேலைக்கு இடைஞ்சலாக அமைந்துவிடுகிறது தன் தந்தையின் ராணுவப் பணி. இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஸார்க்கோவுடன் இணையவே விரும்பவேயில்லை. ஆனால், ஸார்க்கோவுக்கோ தன் குடும்பத்தினரைப் பார்க்கவும் அவர்களுடன் சேர்ந்துவாழவும் ஆசை. அதனால்தான் தனது உரையாடல் வழியே அதைச் சாதித்துக்கொள்ள முயல்கிறார்.


நடுத்தர வயது தரும் தனிமை காரணமாகப் பின்னிரவில் தொடரும் உரையாடல் வெஸ்னாவை ஏதோவொரு வகையில் தேற்றுகிறது. கடந்துபோன காலத்தின் துயர நினைவுகளைத் தொடர்ந்து போர்த்திக்கொண்டிருப்பதால் என்ன பயன் என்ற நினைப்பிலேயே அந்த உரையாடலை அனுமதிக்கிறார்; தொடர்கிறார். பழைய காலத்தைப் பற்றி வெஸ்னாவும் அவருடைய கணவரும் உரையாடும் பின்னிரவுக் காட்சிகள் அழகாகக் கோக்கப்பட்டுள்ளன. திடீரென்று ஒரு நாள் அழைப்பு வருவது நின்றுவிடுகிறது. பரிதவித்துவிடுகிறார் வெஸ்னா. மீண்டும் ஸார்க்கோவிடம் பேசிவிட அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றுவிடுகிறது.

வெஸ்னாவுடன் பேசிய ஸார்க்கோ இத்தனை வருடங்களுக்குப் பின்னர் தொடர்புகொண்டு முதலில் பேசியதற்கு நன்றி தெரிவிக்கிறார். அந்தச் சொற்களால் அதிர்ந்துவிடுகிறார் வெஸ்னா. அப்படியானால் இத்தனை நாள்களாகத் தன்னுடன் பேசியது யார் என்று அதிர்ந்துவிடுகிறார். காருக்குள் இருந்தபடியே, தன்னந்தனியே அழுது தீர்க்கிறார். உடனடியாக கைபேசியை எடுத்து அந்த நபரை அழைத்துக் குமுறுகிறார். அவரது வீட்டுக்கு எதிரே தனியே வசிக்கும் நடுத்தர வயது கொண்ட நபர்தான் வெஸ்னாவுடன் உரையாடியவர் என்பதைத் தெரிவித்து, படம் நம்மிடமிருந்து விடைபெறுகிறது. போரின் கடுந்துயரத்தில் ஒன்று தனிமை. போரின் நேரடித் தாக்கம் உயிரைக் கொல்வது என்றால், போரின் மறைமுகத் தாக்கம் உணர்வைக் கொல்வது என்பதைப் படம் சொல்கிறது.

ஆன் தி அதர் சைடு
நடிப்பு: செனிஜா மெரிங்கோவிக், லாஸர் ரிஸ்டோவ்ஸ்கி
இயக்கம்: ஸ்ரிங்கோ ஆஜ்ரெஸ்டா
திரைக்கதை: மேட் மடிஸிக், ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா
தயாரிப்பு: இவான் மேலோக்கா
ஒளிப்பதிவு: ப்ராங்கோ லிண்டா
இசை: மேட் மடிஸிக்


ஞாயிறு, மார்ச் 05, 2017

சினிமா ஸ்கோப் 28: மூடுபனி வீடு


வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’ என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’. 

‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.


வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள். வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூட சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடு அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. வீடு தேடி அலைந்து சுதா சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.

ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்ட கடன் கேட்டுப் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்? 


வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. 

இது யதார்த்தமான ஒரு திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளில் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும். அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும். 


இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ஹவுஸ் ஆஃப் சேண்ட் அண்ட் ஃபாக். வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் ஏலமிடப்பட்ட தன் தந்தை தந்த வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார். அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்க்ஸ்லி. 

வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் லைஃப் அஸ் ஏ ஹவுஸ். இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான். வளரிளம்பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா? வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர். நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.

< சினிமா ஸ்கோப் 27 >                      < சினிமா ஸ்கோப் 29 >

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்