இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், மார்ச் 07, 2017

ஆன் தி அதர் சைடு (குரோஷியா)

உலகமெங்கும் போரால் மனிதர்கள் உறவுகளை இழக்கிறார்கள்; உறவுகளைப் பிரிகிறார்கள். பிரிந்த உறவுகளைக் கண்டடைந்துவிட மாட்டோமா எனத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் சிலர். அந்தப் பிரிவின் நினைவைக்கூடச் சிலர் தொலைத்துவிட விரும்புகிறார்கள். வெஸ்னா என்னும் செவிலி இந்த ரகத்தைச் சேர்ந்த பெண்மணி. குரோஷியாவின் தலைநகரான ஸாக்ரெப்பில் வசித்துவருகிறார் வெஸ்னா. அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள் திருமண வயதில் இருக்கிறார். மகனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. வீடுகளுக்குச் சென்று நோயாளிகளைப் பராமரிப்பது வெஸ்னாவுடைய பணி. நிம்மதியாகச் சென்றுகொண்டிருக்கும் அவரது வாழ்வைக் குலைத்துப்போடுகிறது தொலைபேசி அழைப்பு ஒன்று. முதலில் அந்தத் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுக்கும் அவர் தொடர்ந்து அழைத்த நபருடன் உரையாடத் தொடங்குகிறார். இதனால், அவர் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி அந்தத் தொலைபேசியில் பேசிய நபர் வேறு யாருமல்ல; அவளுடைய கணவன் ஸார்க்கோதான்.



ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவளிடமிருந்து விலகிச் சென்றவர் எதிர்பாராத ஒரு தருணத்தில் தொடர்புகொள்கிறார். இருபதாண்டுகளாக அவர் எங்கிருந்தார்ஏன் மனைவியை விட்டுப் பிரிந்தார் போன்ற கேள்விகளுக்கான பதில்களை மாறுபட்ட திரைக்கதையாக்கி, ‘ஆன் தி அதர் சைடு’ என்னும் படத்தை உருவாக்கியுள்ளார் குரோஷிய இயக்குநர் ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா. இந்தப் படத்தை நம் நினைவில் நிலைக்கச் செய்வது இதன் திரைக்கதையே. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சி அப்படியே பார்வையாளர்களைப் புரட்டிப் போட்டுவிடும் திருப்பம் கொண்டது. உணர்வுபூர்வமான இந்தத் திரைப்படத்தின் ஜீவனை முழுமையாக்குவது அந்த க்ளைமாக்ஸ்தான்.


இந்தப் படத்தில் கணவன் மனைவியின் பிரிவுக்குக் காரணம் 1991-95 ஆண்டுகளில் நடைபெற்ற குரோஷிய சுதந்திரப் போராட்டம்தான். அந்தக் காலகட்டத்தில் மத்திய குரோஷியாவின் சிசாக் என்னும் நகரில் செவிலி வெஸ்னா தன் கணவன் ஸார்க்கோவுடனும் குழந்தைகளுடனும் வசித்துவந்தார். ஜேஎன்ஏ என அழைக்கப்பட்ட, செர்பியர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூகோஸ்லோவிய மக்கள் ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார் ஸார்க்கோ. போர் காரணமாகவே வெஸ்னா தன் குழந்தைகளுடன் ஸாக்ரெப்புக்கு இடம்பெயந்திருக்கிறார். ஸார்க்கோ போர்க் குற்றங்களுக்காகச் சுமார் 20 ஆண்டுகளைச் சிறையில் கழிக்கிறார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் தன் மனைவியை அழைத்துப் பேசுகிறார்.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும்போதும், தொலைபேசி வழியே உரையாடும் போதும், அந்த நாள்களின் ஞாபகங்களையும் மனிதர்களையும் நினைவின் ஆழத்திலிருந்து உருவிப் பேசுவது என்பது இதம் தருவது என்றபோதும் வலி மிக்கது. இந்த வலியை உணர்த்தும் விதமான ஒளிப்பதிவு, பின்னணியிசை, காட்சிப் பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு படத்தை இயக்குநர் நகர்த்துகிறார். அதனால்தான் மிக நிதானமாக நகரும் இந்தப் படத்தை நாம் பொறுமையுடன் பார்க்க முடிகிறது. இந்தப் போர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை பேரின் வாழ்வில் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிருக்குமா என்ற ஆதாரக் கேள்வியைப் படம் எழுப்புகிறது.


படத்தின் பின்னணி போராக இருந்தபோதும், போர் நடந்து முடிந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னரான வாழ்வே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வாழ்வின் வழியேதான் போரின் பாதிப்பை இயக்குநர் உணர்த்துகிறார். ஆகவே இந்தப் பாதிப்பானது மிகவும் நுட்பமாக, சன்னமான தொனியில்தான் வெளிப்பட்டிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் தன் கணவனின் நடவடிக்கை காரணமாகத் தன் குழந்தையை இழந்த சோகத்தை வெஸ்னாவால் மறக்கவோ தன் கணவனை மன்னிக்கவோ முடியவில்லை. அந்தக் கணவனுடன் மீண்டும் சேர வேண்டுமா என்பதாலேயே அவள் அவரைத் தொடக்கத்தில் மன்னிக்க மறுக்கிறார். அவர் தொலைபேசி வழியே வற்புறுத்தி அழைத்தபோதும், பெல்கிரேடு நகரில் இருக்கும் அவரைச் சந்திக்கப் பிரியப்படுவதில்லை. வெஸ்னாவின் மகனும் தன் தந்தையைப் பார்க்கவே விரும்பவில்லை.

மகளுக்கோ அவளுடைய அரசு வேலைக்கு இடைஞ்சலாக அமைந்துவிடுகிறது தன் தந்தையின் ராணுவப் பணி. இதனால் குடும்பத்தினர் அனைவரும் ஸார்க்கோவுடன் இணையவே விரும்பவேயில்லை. ஆனால், ஸார்க்கோவுக்கோ தன் குடும்பத்தினரைப் பார்க்கவும் அவர்களுடன் சேர்ந்துவாழவும் ஆசை. அதனால்தான் தனது உரையாடல் வழியே அதைச் சாதித்துக்கொள்ள முயல்கிறார்.


நடுத்தர வயது தரும் தனிமை காரணமாகப் பின்னிரவில் தொடரும் உரையாடல் வெஸ்னாவை ஏதோவொரு வகையில் தேற்றுகிறது. கடந்துபோன காலத்தின் துயர நினைவுகளைத் தொடர்ந்து போர்த்திக்கொண்டிருப்பதால் என்ன பயன் என்ற நினைப்பிலேயே அந்த உரையாடலை அனுமதிக்கிறார்; தொடர்கிறார். பழைய காலத்தைப் பற்றி வெஸ்னாவும் அவருடைய கணவரும் உரையாடும் பின்னிரவுக் காட்சிகள் அழகாகக் கோக்கப்பட்டுள்ளன. திடீரென்று ஒரு நாள் அழைப்பு வருவது நின்றுவிடுகிறது. பரிதவித்துவிடுகிறார் வெஸ்னா. மீண்டும் ஸார்க்கோவிடம் பேசிவிட அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெற்றுவிடுகிறது.

வெஸ்னாவுடன் பேசிய ஸார்க்கோ இத்தனை வருடங்களுக்குப் பின்னர் தொடர்புகொண்டு முதலில் பேசியதற்கு நன்றி தெரிவிக்கிறார். அந்தச் சொற்களால் அதிர்ந்துவிடுகிறார் வெஸ்னா. அப்படியானால் இத்தனை நாள்களாகத் தன்னுடன் பேசியது யார் என்று அதிர்ந்துவிடுகிறார். காருக்குள் இருந்தபடியே, தன்னந்தனியே அழுது தீர்க்கிறார். உடனடியாக கைபேசியை எடுத்து அந்த நபரை அழைத்துக் குமுறுகிறார். அவரது வீட்டுக்கு எதிரே தனியே வசிக்கும் நடுத்தர வயது கொண்ட நபர்தான் வெஸ்னாவுடன் உரையாடியவர் என்பதைத் தெரிவித்து, படம் நம்மிடமிருந்து விடைபெறுகிறது. போரின் கடுந்துயரத்தில் ஒன்று தனிமை. போரின் நேரடித் தாக்கம் உயிரைக் கொல்வது என்றால், போரின் மறைமுகத் தாக்கம் உணர்வைக் கொல்வது என்பதைப் படம் சொல்கிறது.

ஆன் தி அதர் சைடு
நடிப்பு: செனிஜா மெரிங்கோவிக், லாஸர் ரிஸ்டோவ்ஸ்கி
இயக்கம்: ஸ்ரிங்கோ ஆஜ்ரெஸ்டா
திரைக்கதை: மேட் மடிஸிக், ஸ்ரிங்கோ ஆக்ரெஸ்டா
தயாரிப்பு: இவான் மேலோக்கா
ஒளிப்பதிவு: ப்ராங்கோ லிண்டா
இசை: மேட் மடிஸிக்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக