வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’ என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’.
‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.
வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள். வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூட சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடு அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. வீடு தேடி அலைந்து சுதா சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.
ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்ட கடன் கேட்டுப் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்?
வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது.
இது யதார்த்தமான ஒரு திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளில் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும். அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.
இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ஹவுஸ் ஆஃப் சேண்ட் அண்ட் ஃபாக். வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் ஏலமிடப்பட்ட தன் தந்தை தந்த வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார். அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்க்ஸ்லி.
வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் லைஃப் அஸ் ஏ ஹவுஸ். இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான். வளரிளம்பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா? வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர். நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.
< சினிமா ஸ்கோப் 27 > < சினிமா ஸ்கோப் 29 >
< சினிமா ஸ்கோப் 27 > < சினிமா ஸ்கோப் 29 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக