இந்த வலைப்பதிவில் தேடு

பாலுமகேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலுமகேந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 23, 2019

நட்சத்திர நிழல்கள் 2: சுதாவின் கனவான இல்லம்

வீடு


தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க இயலாத படங்களில் ஒன்று பாலுமகேந்திரா இயக்கத்தில் 1988-ல் வெளியான ’வீடு’. அகிலா மகேந்திரா எழுதிய கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய பாலுமகேந்திரா ஒளிப்பதிவு, படத் தொகுப்பு இயக்கம் ஆகிய பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தனது சிறு வயதில் தன் தாய் கட்டிய வீடு பற்றிய நினைவுகளின் தாக்கத்தால் இந்தப் படத்தை உருவாக்கியதாக பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கிறார்.

‘வீடு’ படத்தின் பிரதான கதாபாத்திரமான சுதா எனும் வேடத்தை நடிகை அர்ச்சனா ஏற்று நடித்திருந்தார். படத்தின் டைட்டிலிலும் அவரது பெயரே முதலில் இடம்பெறும். செப்டம்பர் 27 அன்று, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சுதா தன் தங்கை இந்து, ஓய்வுபெற்ற பாட்டு வாத்தியாரான தாத்தா முருகேசன் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். சூட்கேஸைக் கட்டிலுக்குக் கீழே வைத்து அது தெரியாமல் மறைக்கும் அளவுக்குக் கட்டிலின் மீது விரித்திருக்கும் பெட்ஷீட்டைத் தொங்கவிட்டிருக்கும் சராசரியான நடுத்தரவர்க்க வீடு அது.

பெரிய அளவில் வெளிச்சம் வராத அந்தப் பழங்கால வீட்டில் மூவரும் சுகஜீவனம் நடத்திவருகிறார்கள். சாய்வு நாற்காலியில் தாத்தா ஓய்ந்திருக்கும்போது வரும் தகவல் அந்தக் குடும்பத்தையே ஓயவிடாமல் செய்துவிடுகிறது. வீட்டின் உரிமையாளர் அந்த நிலத்தில் ஃபிளாட் கட்டும் முடிவெடுத்திருப்பதால் அந்த வீட்டைக் காலிபண்ண நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ஒரு மாதத்துக்குள் வீடு மாறியாக வேண்டிய நிலைமை சுதாவுக்கு ஏற்படுகிறது. டுலெட் விளம்பரப் பலகைகள் தந்த ஏமாற்றத்தின் காரணமாகச் சொந்தமாக வீடு கட்டும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறாள் சுதா. 


தனியார் நிறுவனம் ஒன்றில் சாதாரணப் பணியில் இருக்கும் சுதாவின் மாதச் சம்பளம் 1,800 மட்டுமே. ஆனால், சுமார் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் மதிப்புள்ள வீட்டை அவள் கட்டியெழுப்ப வேண்டியதிருந்தது. குருவி தலையில் பனங்காயைச் சுமத்துகிறோமே என்ற எந்தக் குற்றவுணர்வும் காலத்துக்கு இல்லவே இல்லை. சில சுமைகள் மனிதரின் விருப்பத்தைக் கேட்டு அவர்கள் தலையில் ஏறிக்கொள்வதில்லை. அவை தாமாக மனிதரை உரிமை கொண்டாடிவிடும். அப்படித்தான் வீடு கட்டும் பணியும் ஒரு துடுக்கான குழந்தையைப் போல் சுதாவின் இடுப்பில் மீது ஏறி அமர்ந்துகொண்டது.

கூரைப் புடவை கட்டிக்கொள்ளக் காத்திருந்த சுதா தனக்கான கூரையை வேய்ந்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானாள். அவளுடன் பணிபுரியும் அய்யங்கார் வீடு கட்டுவது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை அல்ல என நம்பிக்கை ஊட்டுகிறார். பணத்துக்கான வழிமுறைகளையும் விலாவாரியாக விளக்குகிறார். வாய் பிளந்து கேட்கும் சுதா சுதாரித்துக்கொள்ளும் முன்பு துணிச்சலாகக் காரியத்தில் இறங்குகிறாள்.

தங்கை எனும் குழந்தைக்குத் தாயாக மாறி, தாத்தாவைத் தவிர ஆண் துணையற்ற வீட்டின் தலைமைப்பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்திவரும் சுதா, பேருந்து விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்தவள். சுதாவுக்கு ஆறுதலாக இருக்கிறான் அவளுடன் பணியாற்றும் கோபி. அவனும் பெரும் செல்வந்தனல்ல. கையிருப்பை வைத்து இரு தங்கைகளுக்குத் திருமணம் முடித்துவைக்க வேண்டிய நிலையில் உள்ளவன். இவர்களுக்கிடையேயான காதல் அன்னியோன்யமானது; ஆரோக்கியமானது. சுதாவின் நெருக்கடி நேர ஆலோசனைக்கும் அவள் ஆத்திரங்கொண்டால் அரவணைத்துக்கொள்ளவும் கோபி மட்டுமே இருக்கிறான். ஒருவகையில் அவன் இருக்கும் நம்பிக்கையிலும் சுதா வீடு கட்டத் துணிகிறாள். அவனிடம் சுதா பொருளாதார உதவி எதிர்பார்க்கவில்லை. ஆனால், மன பாரம் கூடும்போதும் இறக்கிவைக்க உதவும் நெஞ்சத்துக்குரியவனாக கோபி இருக்கிறான்.
வீடு கட்டும் மனையைப் பார்க்க வரும் அன்றே மழை ‘சோ’வெனப் பெய்கிறது. சுதாவின் துயரமும் துளித் துளியாகச் சேர்கிறது. முறையாகப் பூமி பூஜை போட்டு வீட்டின் வேலை தொடங்குகிறது. அஸ்திவாரம் போடும் நாளிலும் மழை தொடர்கிறது. வெள்ளமெனச் சூழப்போகும் துயரத்தில் அவள் மாட்டிக்கொள்ளப் போகிறாள் என்பதைக் குறிப்புணர்த்துவதுபோல் பெய்து ஓய்கிறது மழை. விவசாயி வாழ்த்தும் மழையை வீடு கட்டுபவர்கள் சபிக்கிறார்கள். வீடு கட்டும் நேரத்தில் மழை என்பது வேலைக்கு இடைஞ்சல். அதுவும் ஒவ்வொரு காசாகக் கணக்குப் பார்த்துச் செலவு செய்யும் இளம்பெண்ணான சுதாவுக்கு அந்த நேரத்திய மழை பெரும் தடைக்கல். தொந்தரவு தருவதில் இயற்கைக்குச் சளைத்தவர்கள் அல்ல மனிதர்கள் என்னும் வகையில் ஒப்பந்ததாரர் நடந்துகொள்கிறார்.




சிமெண்ட்டைத் திருடி விற்கும் ஒப்பந்தகாரரை எதிர்த்துக்கேள்வி கேட்டதால் அவர் வீடு கட்டும் பணியிலிருந்து உடனடியாக விலகிக்கொள்கிறார். விக்கித்துப்போய் நிற்கும் சுதாவுக்கு, அநீதி கண்டு ஆத்திரத்துடன் கேள்வி கேட்ட மங்கா எனும் சித்தாள் பெண் கைகொடுக்கிறார். பெண்ணின் துயரத்தைப் பெண்தான் உணர்ந்துகொள்கிறாள். மங்காவின் ஒத்துழைப்புடன் மேஸ்திரியின் மேற்பார்வையில் தளம், கூரை என வீடு வளர்கிறது.

முழுமையும் பூர்த்தியாகாவிட்டாலும் ஒதுங்குவதற்கான கூரையாக வீடு நிலைபெற்றுவிட்டத்தைப் பார்த்த சந்தோஷத்திலேயே கண்ணை மூடிவிடுகிறார் தாத்தா. இருந்த ஒரே ஆண் துணையும் கைகழுவிக்கொண்டது. தாத்தா இறந்த துக்கம் கரைவதற்குள் அடுத்த துயரம் சுதா வீட்டுக் கதவைத் தட்டுகிறது. அவள் ஆசை ஆசையாக அலைந்து திரிந்து, நயந்துபேசி பணம் புரட்டி, கடன் பெற்று, மனையின் ஒரு பகுதியை விற்றுக் கட்டிய வீடு அமைந்திருக்கும் மனை மெட்ரோ வாட்டர் நிறுவனம் கையகப்படுத்தப்போகும் நிலம் என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் அந்தத் துறையினர். ஆற்றல்மிகு இடி ஒன்று நடுமண்டையில் நச்சென்று இறங்கியதைப் போல் துடிதுடித்துப் போகிறாள் சுதா.

பஞ்சாயத்தில் அனுமதி வாங்கிக் கட்டிய வீடாயிற்றே ஏன் இப்படி ஒரு நிலைமை? என நிலைகுலைந்துபோன சுதா அந்த அலுவலகத்துக்கு விரைகிறாள். சிறிய லஞ்சத் தொகைக்கு ஆசைப்பட்டுப் பொய்யான அனுமதிச் சான்றிதழ் வழங்கிய அரசு ஊழியரின் ஒற்றைக் காகிதம் சுதாவின் கனவு வீட்டைக் காவு கேட்கிறது. வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றப் படியேறுகிறாள் சுதா. படம் நிறைவடைகிறது. எளிமையான வண்ணப்புடவை, மேட்சிங் ப்ளவுஸ், கேண்ட் பேக் சகிதமாகப் பக்கத்துவீட்டுப் பெண் போன்று படம் முழுவதும் வலம்வந்த சுதாவின் துயரம் பார்வையாளர்களைக் கலங்கவைக்கிறது. நிம்மதி தரும் என நம்பி வீடு கட்டத் துணிந்த சுதாவின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் நிம்மதியையும் வீடே காலி செய்துவிட்டதோ என்னும் கேள்வியை எழுப்புகிறது வீடு.

என்றபோதும், சுதாவின் வாழ்க்கை வழியே அவளைப் போன்ற இளம் பெண்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். வீடு கட்டுவதில் உள்ள சிக்கல்களையும் அவற்றை எப்படி அணுக வேண்டும் என்ற நடைமுறைகளையும் சுதாவின் வாழ்வுச் சம்பவங்கள் நுட்பமாகச் சுட்டிக்காட்டுகின்றன. வீட்டுக்குப் பூஜை போடுவதில் அக்கறைகொள்வதைவிட அனுமதிச் சான்றிதழ் முறையானதா ஒப்பந்ததாரர் ஒழுங்கானவரா போன்ற அம்சங்களையே கவனத்தில்கொள்ள வேண்டும் என்னும் யதார்த்தத்தை உணர்த்தி ஓய்கிறது வீடு.

படங்கள் உதவி ஞானம்

ஞாயிறு, மார்ச் 05, 2017

சினிமா ஸ்கோப் 28: மூடுபனி வீடு


வீடு கட்டுவதைப் பற்றி ஒரு கதை எழுதி அதைப் படமாக்கினால் எப்படி இருக்கும்? ரசனைக்குரியதாக இருக்காது என்று தானே சொல்வோம். ஆனால், உணர்வுபூர்வமான வீட்டைக் கட்டுவதையே உருப்படியான சினிமாவாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா. அது ‘வீடு’ (1988). தனது படங்களில் தனக்குத் திருப்தி அளித்த இரண்டில் ஒன்று ‘வீடு’ என்று பாலுமகேந்திரா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இன்னொன்று ‘சந்தியா ராகம்’. 

‘வீடு’ திரைப்படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இளம்பெண் பகீரதப் பிரயத்தனப்பட்டு வீடொன்றைக் கட்டுகிறார். வீடு கட்டி முடித்த சமயத்தில் அந்த வீடு கட்டிய நிலம் மெட்ரோ நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. தனது வீட்டைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் படியேறிப் போராடுகிறாள் அவள். இதுதான் கதை. ஒரு கதை எழுப்பும் அடிப்படைக் கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தரும் வகையில் காட்சிகளை அமைத்துவிட்டாலே திரைக்கதை சரியாக அமைந்துவிடும் என்பது திரைக்கதையின் அடிப்படைப் பாடம்.


வீடு கதையில் அந்தப் பிரதானப் பாத்திரம் 22 வயதேயான சுதா (அர்ச்சனா) என்னும் இளம்பெண். அவள் வேலை பார்த்துத்தான் வீட்டின் பாடு கழிகிறது. அவளுடன் அவளுடைய தங்கையும் தாத்தாவும் (சொக்கலிங்க பாகவதர்) இருக்கிறார்கள். சுதாவுக்கு ஒரு காதலன் (பானுசந்தர்). அவன் செல்வச் சீமானல்ல. அவனுக்கும் திருமண வயதில் இரண்டு தங்கைகள். இந்த நிலையில் அந்தப் பெண் ஏன் வீடு கட்ட முயன்றாள்? இது நமக்கு எழும் முதல் கேள்வி. அதற்கான விடைதான் படத்தின் முதல் சில காட்சிகள். வசிக்கும் வாடகை வீட்டைக் காலி பண்ண வேண்டிய சூழல் வருகிறது. வீடு தேடி அலைகிறாள். இன்றுகூட சென்னையில் வீடு தேடி அலைந்தால் நாம் பட்டினத்தார் ஆகிவிடும் அளவுக்கு நமக்கு அனுபவங்கள் கிடைத்துவிடும். சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’யில் வீடு தேடு அலைவதன் அவஸ்தையை இயக்குநர் மணிகண்டன் இயல்பாகக் காட்சிகளாக்கியிருப்பார். அன்றும் இந்த நிலைதான். அதில் மாற்றமில்லை. வீடு தேடி அலைந்து சுதா சோர்ந்திருக்கும் வேளையில் சொந்த வீடு கட்டினால் என்ன என்று நண்பர் ஒருவர் யோசனை தருகிறார். அவளுக்கும் சரியென்று படுகிறது. செயலில் இறங்கிவிடுகிறாள் சுதா.

ஏன் வீடு கட்ட வேண்டும் என்பதற்குப் பதில் கிடைத்துவிட்டது. எப்படிக் கட்டினாள் என்ற கேள்விக்குப் பதில்தான் தொடரும் காட்சிகள். வீடு கட்டத் தேவையான நிலம் (2 கிரவுண்ட்) ஏற்கெனவே அவளிடம் இருக்கிறது. நிலம் சரி. வீடு கட்டப் பணம்? தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வீடு கட்ட கடன் கேட்டுப் பெறுகிறாள். எஞ்சிய பணத்துக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை விற்கிறார்கள். நிலமும் இருக்கிறது பணத்துக்கும் வழிசெய்தாகிவிட்டது. அடுத்து மளமளவென்று வீட்டைக் கட்டிவிட வேண்டியதுதானே? அப்படியெல்லாம் முடியுமா? வீடு கட்டுவது என்றால் லேசுப்பட்ட காரியமா? சிக்கல் வரத்தானே செய்யும்? சிக்கலே இல்லையென்றால் திரைக்கதை எப்படி ரசிக்கும்? 


வீடு கட்டத் தொடங்கிய அன்றே மழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து ஒப்பந்தக்காரரின் திருட்டுத் தனம் தெரியவருகிறது. சிமெண்டையும் ஜல்லியையும் திருடி விற்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்கும்போது வேலையை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுகிறார் அவர். அந்த நேரத்தில் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறார்கள் சித்தாள் வேலை பார்க்கும் மங்காவும் (பசி சத்யா) மேஸ்திரியும். இடையில் பணப்பிரச்சினை, மனப்பிரச்சினை என்று பலதும் வருகின்றன. அத்தனையையும் சமாளித்து வீட்டை எழுப்பி முடித்தபோதுதான் சுதாவை நிலைகுலையச் செய்வது போன்ற கிளைமாக்ஸ். அவள் நீதிமன்றத்தின் படியேறுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. 

இது யதார்த்தமான ஒரு திரைப்படம். எதிரே திரையில் சலனக் காட்சிகள் நகர்கின்றன என்பதையே மறக்கடித்துவிடும் படத்தின் ஒளிப்பதிவு. அவ்வளவு தத்ரூபம். இளையராஜாவின் ஹவ் டூ நேம் இட் ஆல்பத்தின் இசையைச் சில காட்சிகளின் பின்னணியில் பயன்படுத்தியிருப்பார்கள். பிற காட்சிகளில் பின்னணியில் அப்பாஸ் கியரோஸ்தமியின் படங்களைப் போன்று இயற்கையான ஒலிகளால் நிரம்பியிருக்கும். அது உணர்வைக் கிளறும். அன்னக்கிளி வந்த பின்னர் தமிழ்நாட்டில் டீக்கடைகளில் இந்திப் பாட்டுப் போடுவது வழக்கிலிருந்து மறைந்துவிட்டது என்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு காட்சியில் டீக்கடையொன்றில் ஆர் டி பர்மனின் யம்மா யம்மா பாடல் ஒலிக்கும். தனது சிறுவயதில் தன் தாய் கட்டிய வீடு காரணமாக அவரது குணத்தில் ஏற்பட்ட மாறுபாடு பற்றிய ஆழமான நினைவுகளின் தாக்கமே இந்தப் படத்துக்கான உந்துதல் என்று பாலுமகேந்திரா சொல்லியிருக்கிறார். இதுதான் படத்தின் உயிரோட்டத்துக்குக் காரணமாக இருந்திருக்கும். 


இதே போல் வீட்டை மையமாக வைத்து 2003-ல் ஓர் அமெரிக்கத் திரைப்படம் வெளியானது அதன் தலைப்பு ஹவுஸ் ஆஃப் சேண்ட் அண்ட் ஃபாக். வீடு படத்தில் சுதா வீடு கட்டப் போராடுகிறாள் என்றால் இந்தப் படத்தில் ஏலமிடப்பட்ட தன் தந்தை தந்த வீட்டைக் கைப்பற்றப் போராடுகிறாள் படத்தின் நாயகி. வீட்டுக்கான வரியைக் கட்டவில்லை என்பதால் அவளது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுகிறது அரசு. அந்த வீட்டை அமெரிக்கக் குடியுரிமை பெற்ற அரேபியர் ஒருவர் முதலீட்டு நோக்கத்தில் வாங்கிவிடுகிறார். அவர் வீட்டைத் தர மறுக்கிறார். அந்தப் பெண்ணோ தன் வீட்டைக் கைப்பற்றத் துடிக்கிறார். இருவருக்குமான போராட்டம் திரைக்கதையாக மாறுகிறது. இறுதியில் இந்த வீடே தனக்குரியதில்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தப் பெண். அந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை அழுத்தமாகப் படமாக்கியிருப்பார் வடிம் ப்ராவ்மென் என்னும் இயக்குநர். இது இவரது முதல் படம். அரேபியர் வேடமேற்று நடித்திருப்பவர் பென் கிங்க்ஸ்லி. 

வீட்டைப் பிரதான விஷயமாகக் கொண்ட இன்னுமொரு அமெரிக்கப் படம் லைஃப் அஸ் ஏ ஹவுஸ். இதில் தன் தந்தையின் கடற்கரையோர வீட்டை இடித்துவிட்டுப் புதிய வீடு ஒன்றைக் கட்ட முற்படுவான் விவாகரத்து பெற்ற நாயகன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனை வேலையை விட்டு நிறுத்திவிடுகிறது நிறுவனம். அந்த தினமே அவனுக்குப் புற்று நோய் என்பதும் தெரிந்துவிடுகிறது. அதை யாரிடமும் அவன் தெரிவிக்கவில்லை. இறப்பதற்குள் வீட்டைக் கட்டிவிட முயல்கிறான். வளரிளம்பருவ மகனின் ஒத்துழைப்புடனும் இதைச் செயல்படுத்த விரும்புகிறான். ஆனால் மகனோ தகப்பனை வெறுக்கிறான், வீடு கட்டும் பணியில் ஒத்துழைக்க மறுக்கிறான். மகனுக்குத் தந்தையின் நோய் நிலை தெரிந்ததா? வீடு கட்டப்பட்டதா போன்றவற்றை உள்ளடக்கிய திரைக்கதையைப் படமாக்கியிருப்பார் இயக்குநர் இர்வின் விங்க்லர். நிம்மதியாக வாழலாம் என்று தான் ஒரு வீட்டுக்காக மனிதர்கள் பிரயத்தனப்படுகிறார்கள் ஆனால் வீடு அந்த நிம்மதியை அவர்களுக்கு அளிக்கிறதா என்னும் கேள்வியைத் தான் இந்தப் படங்கள் எழுப்புகின்றன.

< சினிமா ஸ்கோப் 27 >                      < சினிமா ஸ்கோப் 29 >

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

சினிமா ஸ்கோப் 25: துள்ளாத மனமும் துள்ளும்


ஒரு திரைப்படத்தை அப்படியே நகலெடுப்பது ஒரு வகை என்றால் அந்தப் படத்தின் தாக்கத்தில் கதை எழுதி திரைக்கதை அமைப்பது மற்றொரு வகை. இந்த இரண்டு வகைகளிலும் கைதேர்ந்தவர்கள் தமிழ்ப் படைப்பாளிகள். பிற படைப்பாளிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக உதாரணம் காட்டக்கூடிய ஒரு படம் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ். சற்றேறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1931-ல் வெளியான இது, மிகவும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் திரைப்படம். இதன் கதை, இன்றுவரை பல படங்களின் திரைக்கதைக்கு அடித்தளமாக  அமைந்துவருகிறது என்பதே இதன் மகத்துவம். 

சிட்டி லைட்ஸ் படத்தைப் பார்க்காதவர்களுக்காக அதன் கதையை ஓரிரு வரிகளில் பார்க்கலாம். வசிக்க வீடற்ற எளிய மனிதன் ஒருவனுக்கும் நடைமேடையில் பூவிற்றுப் பிழைப்பு நடத்தும் பார்வையற்ற பெண்ணுக்குமான உறவை மனிதநேய இழையில் தொடுத்துக்கட்டி பார்வையாளரின் முன்வைத்த படம் இது. இந்தப் படத்துக்குத் தான் சார்லி சாப்ளின் முதன்முதலில் பின்னணியிசை அமைத்தார். இதன் திரைக்கதையின் நேர்த்தி காரணமாக இன்றுவரை இதன் பாதிப்பில் உருவாக்கப்பட்ட எந்தப் படத்தாலும் இதைத் தொடவே முடியவில்லை. இது வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் என்றால், இதன் தாக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் வீட்டில் தொங்கவிடப்படும் காகித நட்சத்திரங்களாகவே காட்சிகொள்கின்றன. 


பார்வையற்ற பெண்மீது கொண்ட பிரியம் காரணமாக அவளது வறுமையைப் போக்க உதவுகிறார் எளிய மனிதரின் வேடமேற்றிருக்கும் சார்லி சாப்ளின். தற்கொலை செய்துகொள்ள முயலும் ஒரு மில்லியனரைக் காப்பாற்றும் சாப்ளினுக்கு உதவுகிறார் அவர். ஆனால் அவர் போதையில் இருக்கும்போது மட்டுமே சாப்ளினை அவருக்கு அடையாளம் தெரியும். போதை தெளிந்தால் சாப்ளினை விரட்டிவிடுவார். இப்படியொரு விநோதக் கதாபாத்திரம் அது. பூக்காரப் பெண்ணின் நெருக்கடியைப் போக்கவும் அவளது பார்வையைத் திரும்பப் பெறவுமான பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் சாப்ளின் இறங்கியபோது, எதிர்பாராத சம்பவத்தால் சாப்ளின். திருட்டுக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். பூக்காரப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு வரும் சாப்ளினைக் காவல்துறையினர் பிடித்துச் சிறைக்கு அனுப்பிவிடுகின்றனர்.

சிறைக்குச் சென்று திரும்பிவரும், பிச்சைக்காரர் போன்ற தோற்றம் கொண்ட சாப்ளினை பேப்பர் விற்கும் சிறுவர்கள் கிண்டல் செய்கிறார்கள், அவரது கிழிசலான உடையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியிருக்கிறாள் பூக்காரப் பெண். அவளுக்கு இப்போது பார்வை வந்துவிட்டது. சாப்ளின் அவள் முன்னால் வந்து நிற்கிறார். அவர் கையிலுள்ள ரோஜாப்பூவில் ஒவ்வொரு இதழாக உதிர்கிறது. அது முழுவதும் உதிர்ந்த கணத்தில் அவர்மீது இரக்கம்கொண்டு ஒரு புது ரோஜாவைக் கொடுக்கிறாள் பூக்காரப் பெண். அப்போது அவருடைய கையை வருடும்போது அந்த ஸ்பரிசம் அவர் தனக்கு உதவியவர் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இருவரும் இணைகிறார்கள். இந்தப் படத்தைப் படமாக்கியிருக்கும் தன்மை காரணமாக இப்போது நீங்கள் படத்தைப் பார்த்தால்கூட ஒரு புதிய படத்தைப் பார்ப்பது போல் உணர முடியும். படத்தின் ஒரு ஷாட்கூட தேவையற்றது என நீங்கள் சொல்ல முடியாது. அவ்வளவு கூர்மையான படைப்பு அது. 


சிட்டிலைட்ஸைப் போன்று பல திரைக்கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. 1954-ல் வெளியான ராஜி என் கண்மணி இதன் தழுவல்தான். டி.ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீரஞ்சனி நடித்த இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரிக்க இயக்கியவர் கே.ஜே. மகாதேவன். இதன் பின்னர் குல்ஷன் நந்தாவின் கதை எழுத ஏ.எல்.நாராயணன் வசனத்தில் வெளியான எங்கிருந்தோ வந்தாள் (1970) படத்தை இயக்கினார் ஏ.சி.திருலோகச்சந்தர். இது தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கரு சிட்டி லைட்ஸ் போன்றதே. 

சிட்டி லைட்ஸில் பார்வையற்ற கதாபாத்திரம் என்றால் இதில் பித்துப் பிடித்த கதாபாத்திரம். அந்த வேடமேற்றவர் சிவாஜி கணேசன். பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு ஆதரவாக வந்து அவரைக் குணப்படுத்துபவர் ஜெயலலிதா. அவரது கதாபாத்திரம் ஒரு தேவதாசிப் பெண் போன்றது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அப்படியொரு சூழலில் மாட்டிக்கொள்வார் ஜெயலலிதா. மனநிலை பாதிப்பு கொண்ட சிவாஜியைக் கவனித்துக்கொள்ளும் ஜெயலலிதாவை ஒரு அசந்தர்ப்பமான பொழுதில் தனதாக்கிக்கொள்வார் சிவாஜி. ஆனால் அவருக்குப் பித்து தெளிந்த சமயத்தில் ஜெயலலிதாவை யாரென்றே தெரியாது. பின்னர் அதை யார் தெளிவுபடுத்துகிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ். பித்துத் தெளிந்த பின்னர் சிவாஜி ஒவ்வொருவராக அடையாளம்கண்டு வரும் சிவாஜி யாரிந்தப் பெண் என ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்பார். அப்போது ஜெயலலிதா, பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லி நடித்துக்காட்டுவார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வுக்குள்ளானவர் போல் நடந்துகொள்வார். இந்தக் காட்சி உங்களுக்கு மூன்றாம் பிறை படத்தை ஞாபகமூட்டக் கூடும். 


பாலுமகேந்திரா கதை திரைக்கதை எழுதி இயக்கிய படம் மூன்றாம் பிறை (1983). இதில் ஸ்ரீதேவி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார். அவருக்கு ஆதரவு காட்டுபவர் கமல் ஹாசன். எங்கிருந்தோ வந்தாளை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்தால் அது மூன்றாம் பிறை. இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் தன்னை யாரென்று வெளிப்படுத்த, ஸ்ரீதேவியின் முன்பு நடித்துக்காட்டுவர் கமல் ஹாசன். மனநலம் பிறழ்ந்த ஒருவன் என்றே ஸ்ரீதேவி அவரை நினைத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் கமல் அவமானப்படுவது சிட்டி லைட்ஸில் சாப்ளின் அவமானப்படுவதற்கு நிகரானது. என்ன ஒன்று ‘கமல் அளவுக்கு’ சாப்ளின் நடித்திருக்க மாட்டார். அப்படி நடித்ததால்தான் கமலுக்குத் தேசிய விருது கிடைத்தது. படத்தின் வணிக வெற்றிக்கு சில்க் ஸ்மிதா பயன்பட்டிருப்பார். மூன்றாம் பிறை போன்ற படத்தில் பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளை உருவாக்கத் தனித் தைரியம் வேண்டும். அதைப் பெற்றிருந்திருக்கிறார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தை இந்தியிலும் பாலுமகேந்திரா உருவாக்கினார். நேரிடையாக சிட்டி லைட்ஸைத் தழுவி உருவாக்கப்பட்ட ராஜி என் கண்மணி தோல்விப்படம். ஆனால் எங்கிருந்தோ வந்தாள், மூன்றாம் பிறை போன்றவை எல்லாம் வெற்றிப் படங்கள்.   


இவை மாத்திரமல்ல மகேந்திரன் திரைக்கதை வசனத்தில் உருவான நிறைகுடம் (1969). எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் (1999), மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளிவந்த நிலவே முகம் காட்டு (1999) போன்ற பல படங்களில் சிட்டி லைட்ஸின் தாக்கத்தை உணர முடியும். இந்த அனைத்துப் படங்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உங்களுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் நீங்கள் புதிய திரைக்கதை ஒன்றையே எழுதிவிட முடியும். ஆனால் அது சிட்டி லைட்ஸைத் தாண்டக்கூடிய வகையில் அமையுமா என்பதுதான் உங்களுக்கான சவால். அந்தச் சவாலை இப்போதும் உங்களிடம் விதைக்கும் படமாக சிட்டி லைட்ஸை உருவாக்கியதுதான் சார்லி சாப்ளின் என்ற கலைஞனின் மேதைமை. 

< சினிமா ஸ்கோப் 24 >                         < சினிமா ஸ்கோப் 26 >

ஞாயிறு, ஜனவரி 04, 2015

உலக சினிமா வரலாறு மௌனயுகம்

மரங்களற்ற சாலையில் இறைந்து கிடக்கும் இலுப்பைப் பூக்கள்


சினிமா பற்றிப் 'பல' நூல்களைத் தமிழுக்குத் தந்திருப்பதாக முன்னுரையில் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கும் அஜயன் பாலா இதற்கு முன் சினிமா குறித்து இரண்டு நூல்கள் மட்டுமே எழுதியுள்ளதாக இந்நூலின் முதல் பக்கம் தெரிவிக்கிறது. உணர்ச்சிமிகு படைப்பாளிகளின் ஆழமான நகைச்சுவை உணர்வு வெளிப்படும் இடங்கள் நமது யூகங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதைப் பாலுமகேந்திராவின் முன்னுரை உணர்த்துகிறது. ஆள்காட்டி விரலின் நுனியால் தட்டினால் கணினி ஆயிரம் தகவல்களை அள்ளி இறைத்துவிடும். ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க இக்காலத்தில் வெறும் தகவல்களால் நிறைந்த புத்தகம் என்பது ஒருவகையான 'ஏமாற்றமே'. 

சினிமா குறித்த அடிப்படை அறிவு, ரசனை பற்றிய புத்தகங்களின் தேவையே இப்போது அவசியம் என முன்னுரையில் பாலுமகேந்திரா தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தேவையை இது பூர்த்திசெய்கிறதா? இதில் இடம்பெற்றுள்ள தகவல்களின் நெரிசல் தீபாவளிக்கு முந்தைய தின தி. நகர் ரங்கநாதன் தெருவை நினைவூட்டுகிறது. இந்தியா முதலில் சுதந்திரம் பெற்றது எப்போது? நிலவில் கால்வைத்த முதல் வீரர் யார்? ரீதியிலான பொது அறிவுக் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்ட நூல்களின் விற்பனை புறநகர் ரயில்களில் அமோகமாக நடக்கும். அவற்றிற்கும் சினிமாப் பொது அறிவு பொதியப்பட்டுள்ள இதற்கும் என்ன வித்தியாசமென எண்ணிப் பார்த்தால் விலை மட்டுமே நினைவிலாடுகிறது. முந்தையவற்றின் விலை பத்தோ இருபதோ தான். 

"இந்தப் புத்தகம் எனக்கு ஏதேனும் நற்பெயரை தருமானால் அதில் சரி பாதியை நண்பர் ஆந்திரா வங்கி பாலசுப்ரமணியனுக்கும் சேருவது நியாயமாக இருக்கும் என நம்புகிறேன்" (பக். 13) என்பதைப் புத்தகத்தைப் படித்து முடித்த பின்பு பார்க்கும்போது திருவிளையாடல் தருமி "சரி . . . பரிசு கிடைத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன் . . . வேறெதாவது கிடைத்தால் . . ." எனச் சிவனிடம் அப்பாவித்தனமாக வினவியது மனத்தில் வந்துபோனது. மேற்குறிப்பிட்ட வாக்கியத்தைப் புத்தகத்தில் உள்ளபடியே தந்திருக்கிறேன். 

சினிமாவின் முதல் திரையீட்டு நிகழ்வு தினம் இப்புத்தகத் தின் 16, 31ஆம் பக்கங்களில் 1895, டிசம்பர் 28 என்றும் 56 ஆம் பக்கத்தில் டிசம்பர் 25, 1895 என்றும் 159ஆம் பக்கத்தில் டிசம்பர் 27, 1895 என்றும் அச்சிடப்பட்டுள்ளது. எது சரி எனும் சந்தேகம் வாசகனுக்கு எழுவது இயல்பு. கிட்டத்தட்ட ஒரு ஆய்வுநூல் போன்று வெளியாகியுள்ள இதில் மேற்கோள் நூல்களின் பட்டியலாவது இச்சந்தேகத்தைப் போக்கும் எனத் தேடினால் அதற்கும் வழியில்லை. ஏனெனில், ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள புத்தகத்தில் அப்பட்டியல் ஏனோ இடம்பெறவில்லை. 

மூளைக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தார் (பக். 40) எனக் கட்டுரையின் நடுவே வரும் வரியைப் படிக்கும் தருணத்தில் அஜயன் பாலா அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர் என்ற இப்புத்தகத்தின் முதல் வரியைப் படித்த ஞாபகம் எழுந்தடங்கியது. The Mother and the Law எனும் தலைப்பில் இயக்குநர் டி. டபிள்யூ. கிரிபித் படம் ஆரம்பித்ததாகப் பக்கம் 82இல் இண்டாலரென்ஸ் (Intolerance) எனும் துணைத்தலைப்புக் கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு செய்தி வருகிறது. கட்டுரையின் முடிவில் கிரிபித் இயக்கிய படமென Intolerance குறிப்பிடப்படுகிறது. The Mother and the Law  Intoleranceஆக மாறியதா இரண்டுக்கும் என்ன தொடர்பு போன்ற தகவல்கள் கண்களுக்குப் புலப்படவில்லை. பிதாமகன்கள் கட்டுரையில் பிரபல இயக்குநர் ஐஸன்ஸ்டைன், செர்கை ஜஸன்ஸ்டைன் (Sergai Jisenstain) எனக் குறிப்பிடப்படுகிறார். 157, 171ஆம் பக்கங்களில் இதே Jisenstain ஐஸன்ஸ்டைன் ஆகியுள்ளார். சினிமாவின் முக்கியமான ஓர் ஆளுமையின் பெயர் என்பதால், சினிமாவை நேசிப்பவர்களால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

"இன்று ஒரு இளம் இயக்குநர் தனது வாய்ப்புக்காகச் சிறிய கையடக்க கேமராவில் குறும்படங்களை எடுத்துக்காண்பிப்பது போலத்தான் . . ." (பக். 166) என்ற யதேச்சையான வரிகள் குறும்படங்கள் குறித்த பொதுப்புத்தியின் புரிதலா நூலாசிரியரின் புரிதலா என்பது விளங்கவில்லை. உலகத் தமிழ் ஆவண, குறும்பட விழாவை நண்பர்களுடன் 2002இல் நடத்தியவர் அஜயன் பாலா என்பதால் அது பொதுப்புத்தியின் புரிதல் எனக் கொள்வதற்கான சாத்தியமுள்ளது. 

முகஸ்துதி என்னும் மோகத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழ்த் திரைப்படத் துறையின் மோகத்தைத் தெளிவிக்கும் சினிமாவின் உண்மையான வீரியத்தைப் புரியவைத்துத் திரைப்பட ரசனையை மேம்படுத்த உதவும் வகையிலான புத்தகங்களே நமது தேவை. இதைப் போன்ற தகவல் களஞ்சியங்கள் அல்ல. பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம் இப்புத்தகம் என இயக்குநர் பாலுமகேந்திரா சொல்லியிருக்கும்போது வேறென்ன பாராட்டு வேண்டும் இப்புத்தகத்திற்கு? ஆனாலும் புத்தகத்தைக் குறித்த உண்மையான புரிதலை அஜயன் பாலாவே வெளிப்படுத்தியுள்ளார் தன்னுரையில் இப்படி, "எங்கே அறிவு ஜீவி முத்திரை நமக்கு விழுந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக "இந்திர குமார்" எனும் பெயரில் இந்தத் தொடரை எழுதினேன். அது பொருளற்றது என்பதை இப்போது வெட்கத்துடன் உணர்கிறேன்" (பக். 12) எந்தவிதமான வெளிப்பூச்சும் இன்றி உண்மையை அப்படியே சொல்லிய அஜயன் பாலா பாராட்டுக்குரியவரே.

ஆசிரியர்: அஜயன் பாலா
பக். : 176 விலை: ரூ. 150
முதற்பதிப்பு: டிசம்பர் 2007
வெளியீடு
கே. கே. புக்ஸ் (பி) லிட்,
19, சீனிவாச ரெட்டி தெரு
தி.நகர், சென்னை 600 017

காலச்சுவடு ஆகஸ்ட் 2008 இதழில் வெளிவந்த மதிப்புரை

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்