சிறுவயது முதலே சக்திமான் மீது விருப்பம் கொண்டு சூப்பர் ஹீரோவாகும் ஆசை கொண்டவர் சக்தி (சிவகார்த்திகேயன்). ஆனால், பிழைப்புக்காக அவர் போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறார். கல்லூரிச் சேர்க்கை நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்து அதிலும் கமிஷன் பார்க்கிறார். அவருடைய தங்கை போன்ற மதிக்கு ஏரோ நாட்டிகல் படிப்புக்காக சீட்டுக்கு அலைகிறார். அது கிடைக்காமல் போகிறது. மதி கண்டுபிடித்த உப்புநீர் இன்ஜினைக் கண்காட்சிக்கு வைத்து அதனால் சீட் பெறுகிறார். ஆனால், மதி காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பைத் திருடிவிட்டார் எனச் சொல்லிவிடுகிறார்கள்.
அதில் மனமுடைந்த மதி தற்கொலைசெய்துகொள்கிறார். மதியின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னணியில் சத்தியமூர்த்தி (அர்ஜுன்) இருக்கிறார். மதி தற்கொலைக்குப் பின்னணியில் இருக்கிறார் மகாதேவ் (அபய் தியோல்). அபய் தியோலைப் பழிவாங்க சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சக்தி. அதில் அவர் வென்றாரா, எதிரிகளை ஒழித்தாரா, சத்ய மூர்த்தி எவ்வகையில் உதவினார் போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ஹீரோ.
கல்விக்கு எதிரான கருத்துப் பேசும் படமாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். நமது கல்விமுறைக்கு எதிராகக் குரல் தருவதற்காகவே ஹீரோவின் திரைக்கதை பயணிக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் படத்தில் உள்ளன. சுவாரசியமற்ற சம்பவங்களாலும் காட்சிகளால் படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். படம் முழுக்க அந்தரத்தில் பறப்பது போன்று எந்த ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இருக்கிறது.
திறமையிருந்தும் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களை சத்யமூர்த்தி அழைத்துவந்து படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார். புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். அரசுக்கே தெரியாமல் அவர் கல்வி நிறுவனம் நடத்துகிறார் என்பதெல்லாம் காதில் சுற்றப்படும் பெரிய பூ. சத்திய மூர்த்தி மாணவர்களை உருவாக்கி உலகம் முழுக்க அனுப்புகிறார். அது எப்படி சாத்தியம்? அவர் நிறுவனம் நடத்துவதே தெரியாத போது என்ன அடிப்படையில் அவருடைய மாணவர்கள் சாதிக்கிறார்கள். ஏதாவது கண்டுபிடிப்பு வெளி உலகத்துக்கு வந்தால் அதை மோப்பம் பிடித்துவிடுகிறான் வில்லன். ஆனால், சத்திய மூர்த்தி அவனுக்கே தெரியாமல் எல்லாவற்றையும் செய்கிறார் என்பதையெல்லாம் நம்பும்படியாக இல்லை.
மாணவர்களின் புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை அபகரித்து அவர்களை முடமாக்கிவிட்டுக் கண்டுபிடிப்புகளைக் காசாக்குகிறார் அபய் தியோல். அந்தக் கதாபாத்திரச் சித்தரிப்பே சரியாக இல்லை. அவர் யார், கல்வி நிறுவனம் நடத்துகிறாரா, எல்லா விஷயத்தையும் அறிந்து எப்படித் தடுக்கிறார்? இவை எதற்கும் பதில் இல்லை.
நல்ல மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்களிடமும் பெரிய திறமைகள் ஒளிந்திருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து ஊக்குவித்தால் மாணவர்கள் பெரிய அளவில் வருவார்கள். அதற்கு நமது கல்வி முறை உதவிகரமாக இல்லை. இதைச் சொல்லும் இந்தப் படம் அதை நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் சொல்லவில்லை என்பது படத்தின் பெரிய பலவீனம்.
வழக்கறிஞர் ஒருவர் தான் படிக்க நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்வதாகக் கூறுகிறார். கல்வி முறை பற்றி அறிந்த ஒருவர் இதைக் கேட்டுச் சிரிக்கத்தான் செய்வார். மாணவர்களின் ரப் நோட்டில் அவர்களுடைய திறமையை அறியலாம் என்ற சாதாரணக் கருத்தை ஊதிப் பெருக்கி சூப்பர் ஹீரோவரை கொண்டு சென்றதே அபத்தம்.
சிவகார்த்திகேயன் வழக்கம் போல் நடித்திருக்கிறார். அர்ஜுனுக்கு முக்கியமான வேடம் அதை ஒழுங்காகச் செய்திருக்கிறார். கதாநாயகி என்ற ஒருவர் வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை வைத்திருக்கிறார்கள். அழகம் பெருமாள், இளங்கோ குமார வேல், ரோபோ சங்கர் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். இசை, பாடல்கள் யுவன் சங்கர் ராஜா. இறுதியில் ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.
கல்வி முறைக்கு எதிராகக் கருத்து சொல்வதற்கும் பெரிய கல்வி அவசியம். அது இல்லாமல் படமெடுத்தால் அது சூப்பர் ஹீரோ படமாக உருவாகாது. இப்படியான அமெச்சூர் படமாகத் தான் உருவாகும். இவன் ஹீரோ அல்ல வெறும் ஜீரோ.