இந்த வலைப்பதிவில் தேடு

இந்து தமிழ் திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து தமிழ் திசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 19, 2025

லே அவுட் ஆசிரியர்


ஆசிரியர் தெரியும். பொறுப்பாசிரியர் தெரியும். கௌரவ ஆசிரியர் தெரியும். தொகுப்பாசிரியர் தெரியும். பதிப்பாசிரியர் தெரியும். அதென்ன லே அவுட் ஆசிரியர் என நீங்கள் ஒரு நொடி சிந்தித்திருக்கக் கூடும். சிந்தித்துக்கொண்டே இருங்கள். சிந்தனையின் முடிவில் உங்களுக்கு ஒரு தெளிவு வரக்கூடும். அந்தத் தெளிவை வழங்கும் வகையில், தமிழ் இதழியலில் அண்மையில் நடந்த மாற்றம் ஒன்றைச் சுருக்கமாக உங்களிடம் பேசிப் பார்க்கும் முயற்சியே இது. இது கட்டுரையா பத்தியா வெட்டி அரட்டையா என்பதை வாசிக்கும் நீங்கள் முடிவுசெய்துகொள்ளலாம். கட்டுரைக்கான இலக்கணங்களுடன் இது உள்ளதா இல்லையா என்பதை இப்போது விவாதிக்கத் தேவையில்லை என்பதால் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறேன். நான் சொல்ல விழைந்த கூற்றுக்குள் செல்வதற்கு முன்னர் இதழியல் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக, மணி ரத்ன வசனமாகப் பார்த்துவிடலாம். 

சீனாவில் தோன்றிய பீகிங் நியூஸ் இதழ்தான் உலகில் தோன்றிய முதல் இதழ் என்கிறார்கள். இது கி.பி.363 இல் தொடங்கப்பட்டு 1935 வரை வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் எலிசபெத் அரசி காலத்தில்தான் இதழியல் தொழிலாக மலர்ந்துள்ளது. இங்கிலாந்தின் முதல் நாளிதழ் 11.03.1702 அன்று தொடங்கப்பட்டது. எலிசபெத் மாலெத் எனும் பெண்மணி இவ்விதழைத் தொடங்கி நடத்தியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை முகலாயர் காலத்தில்தான் அரண்மனைச் செய்திகளை வெளியிடும் வழக்கம் வந்துள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் 1750 ஜனவரி 2 அன்று வங்காளத்திலிருந்து வெளியான வங்காள கெஜட் என்பது தான் இந்தியாவில் தோன்றிய முதல் வார இதழ் என்கிறார்கள். 1853இல் கிரிச் சந்திர கோஷ் எனும் இந்தியர் இந்து பேட்ரியட் எனும் இதழைத் தொடங்கினார். இந்தியரால் தொடங்கப்பட்ட முதல் இதழ் இது. சென்னை மாகாணச் செய்திகளை வழங்கிய த மெட்ராஸ் கூரியர் இதழ் 1785 ஆகஸ்டு 12 இல் தொடங்கப்பட்டுள்ளது. இது மாத இதழ். 1862இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் மெயில் இதழ்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மாலை நாளிதழ். 1878 இல் ஜி.சுப்பிரமணியரால் தொடங்கப்பட்ட தி இந்து ஆங்கில இதழ்  1889 ஏப்ரல் முதல் நாள் முதல் நாளிதழாக வெளிவந்தது. இது இந்துக் குழுமமாக வளர்ச்சியடைந்து, 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16 அன்று தி இந்து எனும் தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பின்னர் இந்து தமிழ் திசை எனப் பெயர் மாற்றப்பட்டது. 

இந்து தமிழ் திசை ஆசிரியராக இருந்த அசோகன் இந்த நாளிதழிலிருந்து விலகியிருக்கிறார். விலகிய அசோகன் எடிட்டர் அசோகன் என்னும் பெயரில் யூடியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். இவருக்கு முன்னரே இந்நாளிதழிலிருந்து வெளியேறிய ஒருவர் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி நடத்திவருகிறார். அவர் இந்து தமிழ் திசை நாளிதழின் இணையதளத்தில் பணியாற்றிய திரு ராம்ஜி. அவர் ரிலாக்ஸ் வித் ராம்ஜி என்னும் பெயரில் ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார்.  அவரது வழியில் பயணம்செல்கிறார் எடிட்டர் அசோகன். சரி எடிட்டர் அசோகன் அலைவரிசையை அவர் பார்த்துக்கொள்வார். அவர் மட்டும் பார்த்தா எப்படி யூடியூப் சக்சஸ் ஆகும் என எடக்கு மடக்கா கேள்வி கேட்காதீங்க. அசோகன் திறமையானவர். கோயம்புத்தூரில் இருந்துகொண்டே இந்து தமிழ் திசை நாளிதழை நான்கைந்து ஆண்டுகள் நடத்திய திறமைக்குச் சொந்தக்காரர். அவரது திறமைக்கு அவர் செவ்வாய் கிரகத்தில் இருந்திருந்தாலும் இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கக்கூடியவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.  

எந்தச் சொல் யாரைப் பண்படுத்தும், எந்தச் சொல் யாரைப் புண்படுத்தும் என்பவற்றை அறிந்து எதைத் தவிர்க்க வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும் என்ற நுட்பம் உணர்ந்து செயல்பட்டு இதழியல் பணிகளைச் செம்மையாகச் செய்பவர். இதழியல் துறையின் நெளிவுசுளிவு அறிந்தவர். திரைத்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரை அரவணைத்துச் செல்லும் அன்பாளர். கடுஞ்சொல் கூறித் தம் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளாத பண்பாளர். இதழியல் பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகவிருக்கும் சூழலில் ஒரு திரைப்படத்தையே இவர் தயாரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த அளவுக்குத் திறமையாகச் செயல்பட்டு முன்னேறியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி போல் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்குத் தம் திறமையால் வந்தவர். 

அசோகன் கோயம்புத்தூரில் இருந்து இந்து தமிழ் திசையை நடத்திய காலத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வி. வெங்கடேஸ்வரன் என்றும்  அடிப்படையில் இவர் ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற போதும், செய்தி ஆசிரியராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்றும், கிட்டத்தட்ட நிழல் ஆசிரியர்போல செயல்பட்டவர் என்றும், அவரைச் சார்ந்த நண்பர்கள் கூறுகிறார்கள். தினமலர் நாளிதழில் வடிவமைப்பாளராகப் பணியில்  சேர்ந்த வெங்கடேஸ்வரன் தினமணி, விகடன் எனச் சென்றுவிட்டு தினகரன் நாளிதழிலிருந்து தி இந்துவுக்கு வந்தவர். அவர் எழுதிய கட்டுரை எதுவும் கண்ணில் படவில்லை. அவர் எடிட்டிங் பணியை எந்த அளவு சிறப்பாகச் செய்வார் என்பதற்கான சான்று எதுவும் இல்லை. வெங்கடேஸ்வரனைப் பொறுத்தவரையில் எழுத்து என எதுவுமே இல்லை எல்லாம் படம்தான். அவர் கையில் நாளிதழ் பக்கங்களைக் கொடுக்கும்போது அவற்றைக் கையில் வாங்கி ஒரு பார்வைதான் பார்ப்பார். பார்த்துவிட்டு அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவார். ஏதேனும் பிழைகள் தென்பட்டால் சொல்வார். ஒற்றுமீது அவருக்கு அநியாயத்துக்கு ஒவ்வாமை. முடிந்தவரை ஒற்றுகளை ஒரே பார்வையில் உதிர்த்துவிட்டே நாளிதழ் பக்கங்களை இறுதிசெய்வார். மிக மிகக் கவனமாக ஒற்றுப் போட்ட இடங்களை மிக மிகக் கவனமாக அகற்றுவதில் கைதேர்ந்தவர். இந்து தமிழ் திசை நாளிதழில் செய்திகளின் தரம் உயர்வதற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றியிருப்பார் என நம்ப முடிகிறது. இல்லையெனில், நூறாண்டு மரபு கொண்ட இந்துக் குழுமம் வெங்கடேஸ்வரன் போன்ற ஒருவரை, பார்ப்பனரல்லாதவரை அவர்களின் நூறாண்டுக் கனவான தமிழ் நாளிதழுக்கு ஆசிரியராக்கி அழகுபார்க்குமா?

சரி, இப்போது ஒருமுறை தலைப்பை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். 


செவ்வாய், செப்டம்பர் 16, 2025

உண்மை நின்றிட வேண்டும்


வி.நா.மருதாசலனார் எழுதி 1935இல் வெளியிட்டஇந்தியப் பத்திரிகைத் தொழிலியல்என்னும் நூலில், “இந்திய பத்திரிகை முதலாளிகளுக்குப் பத்திரிகைத் தொழிலாளர் ஒருவாறு அடிமை முறையில் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்நூல் வெளியாகி ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்றும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இந்தக் கசப்பான உண்மையை இப்போது நினைவுபடுத்துவதற்குக் காரணம், தேசிய பத்திரிகையாளர் நாளான நவம்பர் 16 அன்று பத்திரிகையாளர் ஃப்ரண்ட்லைன் விஜயசங்கர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று. அதில், புதிய தலைமுறை ஊடக நிறுவனம் ஏறக்குறைய 40 ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்த பின்னூட்டம் ஒன்றில், தி இந்து குழுமத்திலிருந்து கடந்த சில ஆண்டுகளில் 600 ஊழியர்களும், 100 பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் எழுதியிருந்தார். புதிய தலைமுறையில் இப்படியான பணிநீக்கம் இது முதன்முறையன்று; அங்கு அது தொடர்கதை. இந்நிறுவனத்தில் அண்மையில்தான் பத்திரிகையாளர் சமஸ் பணியில் சேர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் 

வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை என்றார் பிரெஞ்சு அறிஞர் வால்டேர். இந்தச் சொற்றொடர் ஊடகவியலாளர்களை உசுப்பேற்றுவதற்காகச் சொல்லப்படுவது வழக்கம். இப்போது பேனாவால் எழுதாத, இன்னும் சொல்லப்போனால் எழுதவே எழுதாத ஊடகவியலாளர்களே ஊடகத்திலும் சமூகத்திலும் ஆதிக்கம்செலுத்துகிறார்கள் என்ற போதும், இதழியல் துறை வெகுமக்கள் மத்தியில் தன் மானம், மரியாதையைப் போதுமான அளவுக்கு இழந்துவிட்டபோதும், இன்றைக்கும் இந்தச் சொற்றொடர் அதன் பொருளை இழந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இன்னும் உண்மையான எழுத்துக்கு இருக்கும் மரியாதை. 

வலிமையான பேனாவை ஆயுதமாக ஏந்திச் செயல்படும் உழைக்கும் பத்திரிகையாளர்களின் நிலைதான் உள்ளபடியே வலியும் வாதையும் நிறைந்தது.  நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதே அவர்களது நிலை. அவர்களது தலைக்கு மேலே பணிப் பாதுகாப்பின்மைக் கத்தி எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிழக்கூடிய நிலையில் தொங்கியபடியே உள்ளது. அந்த ரணகளத்துக்கிடையே  வாசகர் கிளுகிளுப்புக்காக அவர்கள் பரபரப்புடன் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், மிகவும் இயல்பாக அவர்களது வாழ்வாதாரப் பறிப்பு நாள்தோறும் நடந்தேறுகிறது. 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழின் முன்னணி வார இதழான ஆனந்தவிகடன், நாளிதழான இந்து தமிழ் திசை, காட்சி ஊடகமான புதிய தலைமுறை உள்ளிட்ட பல பெரிய ஊடகங்களும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையிலும், ஆள்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கின. கொரோனா பெருந்தொற்று ஊடக நிறுவனங்களுக்கு அதன் ஊழியர்களைக் கசக்கிப் பிழியும் கம்ப சூத்திரத்தையைக் கற்றுக் கொடுத்துவிட்டது; சமூகத்தில் எல்லாவற்றையும் அறச்சீற்றத்துடன் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களையோ தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முணுமுணுக்கக்கூடவிடாமல் முடக்கிவிட்டது.

ஊடகவியலாளர்கள் பணிநீக்கம்செய்யப்படுவதைவிடப் பணிநீக்கம் செய்யப்படும்போது, அவர்கள் நடத்தப்படும்விதம்தான் சீற்றம் தருகிறது. பணி நீக்கத்துக்குரிய முறையான இழப்பீடுகள், அதாவது சட்டப்படி உரிமையான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குத் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான உரிமை குறித்தோ உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் குறித்தோ விழிப்புணர்வு உள்ளதா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டே இயங்கிவருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ உரிமையைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் எந்த ஓர் ஊடகவியலாளரும் ஊடகப் பணியில் சேர இயலாது எனும்போது, அவர்கள் வாய்மூடி மௌனித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். 

சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆவேசத்துடன் வாள் சுழற்றும் தலைமைப் பொறுப்பு ஊடக சூராதிசூரர்கள் சக பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டும் காணாமல் பெருந்தன்மையுடன் நடந்து, நிறுவனத்திடம் நல்ல பெயர் எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பல ஊடக நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும், ஊடகவியலாளர்கள் பெயரில்தான் இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. நமது அறிவுச் சமூகமோ கஸ்தூரி, நயன்தாரா, விஜய் செய்திகளுக்கு மூச்சுப்போட்டு விவாதிக்கிறது; ஊடகவியலாளர்கள் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம்செய்யப்படும்போதோ, வாளாவிருக்கிறது.  

கொரோனா பெருந்தொற்றைக் காரணங்காட்டி இந்து தமிழ் திசை பணிநீக்கிய றக்குறைய பதினைந்து பேரில் நானும் ஒருவன். உண்மையில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது எவருக்குமே தெரியாத அளவுக்குப் பணி நீக்கம் ரகசியமாக நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியில் சேர்ந்து, உதவி செய்தி ஆசிரியர் நிலையில் இருந்த வேளையில் என்னைப் பணிநீக்கம்செய்தார்கள். நூறாண்டுப் பாரம்பரியம் கொண்ட ஊடகம் என மார்தட்டிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியான இந்து தமிழ் திசை நாளிதழ் பணி நீக்க விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் உண்மையிலேயே ஊடக அறம் மீதான அடிப்படை நம்பிக்கையையே அற்றுப் போகச் செய்துவிட்டது. 

பணி நீக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர் அந்நிறுவனம், கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி, ஊழியர்களின் ஊதியத்தை 20 விழுக்காடு குறைத்தது. இப்படியான ஊதியக் குறைப்பில் நிறுவனம் அநியாயத்துக்குச் சமூக நீதியுடன் நடந்துகொண்டது. லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், வாய்க்கும் வயிற்றுக்கும் சண்டைபோடும் சாதாரண ஊழியருக்கும் ஒரே மாதிரியாக 20 விழுக்காட்டைக் குறைத்தது. அப்படிக் குறைத்தபோது, ஊழியர்களுக்கு முறையான அறிவிப்பு எதையும் அந்நிறுவனம் செய்திருக்கவில்லை. வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்ட பின்னர் ஊழியர்களுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பார்த்த பின்னர்தான் ஊதியக் குறைப்பு நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. செய்திகளை முந்தித் தரும் துடிப்புள்ள ஊடக நிறுவனங்களுக்கு எந்தச் செய்தியைக் காலதாமதமாகத் தர வேண்டும் என்ற நுட்பமும் தெரியும் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொள்ள முடிந்தது.  

ஊதியக் குறைப்பை அறிந்துகொண்ட உடன், அந்நாளிதழின் ஆசிரியர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு 2020 மே 4 அன்று அனுப்பிய மின்னஞ்சல் வழியே எனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன். நான்கு மாதங்கள் கழித்து கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஊடக நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கை என்பதைச் சொல்லாமல் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியபோது, நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். உழைக்கும் பத்திரிகையாளராக நான் பணியாற்றிய இணைப்பிதழின் பொறுப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், நற்குணசீலரும், தோழருமான ஆதி வள்ளியப்பன் கைபேசி வழியே அழைத்து என்னைப் பணியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் மின்னஞ்சல் வழியே தகவல் உறுதிசெய்யப்படும் என்றும் உணர்ச்சியற்ற, உள்ளடங்கிய  குரலில் சொன்னார். எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஆள்குறைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தாத, உரிய பதவியின் பெயர் குறிப்பிடப்படாமல் அநாமதேய கையெழுத்தைத் தாங்கியிருந்த பணிநீக்க அறிவிப்பு, மின்னஞ்சல் வழியே வந்தது. இயந்திரத்தின் துல்லியத்துடன் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கைக் கவனித்துக்கொள்ளும் அலுவலர் கிருஷ்ணன், இழப்பீடாக இரண்டு மாத ஊதியம் அதிலும் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறியபோது, பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியைவிட அந்தப் பெரிய நிறுவனத்தின் சிறுமைப் புத்தியே பேரதிர்ச்சியை அளித்தது.

அறிந்த செய்தியை உடனடியாகப் பொதுச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஊடகக் குருதி  உந்த, அந்தச் செய்தியை ஃபேஸ் புக் தளத்தில் பதிவிட்டேன். பணி நீக்கம் தொடர்பாக நாளிதழின் தலைமைப் பொறுப்பிலிருந்த அசோகனுடன் பேசியபோது, தனது கையறு நிலையை வெளிப்படுத்திய அவர் சட்டப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதைக் குறிப்புணர்த்தினார். அதன் பின்னர் சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவியுடன் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டேன்; அங்கு நீதிகிடைக்காத நிலையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன் (O.P. No: 107/2021). அந்த வழக்குத் தொடர்ந்ததால் எனக்கு நன்மையோ இல்லையோ அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி வேறு எவரையும் இந்து தமிழ் திசை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியிருக்கவில்லை. அநீதிக்கு எதிராகப் பலவீனமாக ஒலித்த எனது மெல்லிய குரலால் நண்பர்களுக்குக் கிடைத்த நன்மை என்னும் வகையில் அது எனக்கு அற்ப  மகிழ்ச்சியைத் தந்தது. 

உதவி செய்தி ஆசிரியராகப் பணியாற்றிவந்த நான் உழைக்கும் பத்திரிகையாளர் அல்ல என்பது மாதிரியான வாதத்தைத் தொழிலாளர் நீதிமன்றத்தில் மௌண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் சவலைக் குழந்தை இந்து தமிழ் திசை முன்வைத்தது. ‘சீச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்னும் பாரதியாரின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டதற்கிடையே, ஒருநாள் என்னை அழைத்து, ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய  நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை ஆகவே,  நான் உடன்படவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தேன். இறுதியாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி நான் உழைக்கும் பத்திரிகையாளர் என்பதை உறுதிசெய்திருந்தார்.

ஊடகவியலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அவர்கள் காக்கும் மௌனமே ஊடக நிறுவனங்களுக்குப் பலம். ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களைப் பணிநீக்கம் செய்தால், உடனே அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தரும் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு எவருக்கும் தெரியாமல் அடுத்த ஊடக நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதில்தான் ஊடகவியலாளர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். ஏதேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, நீதிக்காகச் சட்டப்போராட்டத்தைக் கையில் எடுத்தாலோ அடுத்த நிறுவனம் பணி தராமல் போய்விடுமே  என்னும் அச்சமே அவர்களிடம் தொக்கி நிற்கிறது. அவர்கள் அச்சத்தில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதே நேரத்தில் ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டோம், அதற்கான முறையான சட்டப்பூர்வ இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்களா போன்ற அடிப்படையான அம்சங்களில்கூட அவர்கள்  கவனம் எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தமளிக்கிறது. பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுக்க நிறுவனம் கோரும்போது, எதுவும் எதிர்த்துப் பேசாமல் அப்படியே எழுதிக் கொடுக்கும் கிளிப்பிள்ளைகள் இங்கே  காணப்படுகிறார்கள் என்பதை என்னவென்பது? பாலியல் குற்றத்தைப் பெண்கள் வெளியே சொல்லத் தயங்குவதற்கும் ஊடகவியலாளர்கள் தங்களது பணிநீக்கத்தை வெளியே சொல்வதை மானக்கேடாகக் கருதுவதற்கும் பெரிய வேறுபாடில்லை

இதில் இன்னொரு வருந்தத்தக்க செய்தி பத்திரிகையாளர் சங்கங்களைப் பற்றியது. பத்திரிகையாளர்கள்தாம் பலவீனமாக இருக்கிறார்கள் என்றால் பத்திரிகையாளர் சங்கங்களோ அவர்களைவிடப் பலவீனமாக உள்ளன. ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டுப் பணிநீக்கம் போன்ற விவகாரத்தை முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கக்கூடிய பெரிய பொறுப்பைக் கொண்ட பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களோ தங்களில் யார் பெரியவர் என்னும் குஸ்திப் போட்டியிலேயே முஷ்டி உயர்த்திக்கொண்டு திரிகிறார்கள்.  பத்திரிகையாளர் சங்கத்துக்குள்ளும் சங்கங்களுக்குள்ளும் ஏற்படும் உள் முரண்பாடுகளைத் தீர்க்கவே தனி தீர்ப்பாயம் அமைத்தால் தேவலை என்று சொல்லத்தக்க அளவில் அறிவுச் சமூகத்தினரிடையே அவ்வளவு முரண்கள். 

இப்படியான சூழலில் நியாயமான கேள்விகளை நிறுவனங்களை நோக்கிப் பத்திரிகையாளர்கள் கேட்கத் தொடங்கும்போதுதான், இத்தகைய அவலங்கள் சிறிதாவது மட்டுப்படும்; பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் தெரியவரும், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுக்கத் தொடங்கினால், சங்கங்களும் அவர்களுக்குக் கைகொடுத்து பிரச்சினையைத் தீர்க்க முனைந்தால்தான் சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவான  குரல் எழும்பும். சமூகச் சீர்கேடுகளை, இழிவுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய நான்காம் தூணே சீர்கேடடைவதும், ஊடக அறத்தைக் காற்றில் மிதக்கவிட்டுவிடுவதும்  நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

காக்கைச் சிறகினிலே டிசம்பர் 2024 இதழில் வெளியானது. 

 

புதன், ஜூலை 30, 2025

தவறுகளுக்கு வருந்துகிறோம்...

பொதுவாகவே நாளிதழ்கள் ஒற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விருப்பத்திற்கிணங்க அதைத் தவிர்த்துவிடுகின்றன. ஒரு நாளிதழின் தலைப்புகளில் மட்டும் தென்படும் தவறுகளைப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து, நாளிதழைத் திருப்பினால் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்ளாகவே நமக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், தவறுகளுடன் நாளிதழ்களை அச்சாக்கிக் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவதற்கு அயர்ச்சிகொள்வதேயில்லை நிறுவனங்கள். 

அந்த, இந்த, எந்த என்பவை நிலைமொழியில் இருந்து, வருமொழியில் க,ச,த,ப என்னும் எழுத்துகளில் சொல் தொடங்கினால் ஒற்றிடலாம். ஒற்றிடுதல் பெரும்பிழையன்று. 

 

உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்தவில்லை

கச்சத்தீவை என்னும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தாரைவார்த்து என்னும் சொல் வந்துள்ளது. ஆகவே, ஒற்றிடலாம். 

கச்சத் தீவைத் தாரைவார்த்துத் தமிழக மீனவர்களுக்குத் துரோகம்

சிறப்பு என்னும் சொல் வன்றொடர்க் குற்றியலுகரச் சொல். ஆகவே, அங்கேயும் ஒற்றிடலாம். 

சிறப்புப் பிரிவு

இலங்கைக் கடற்படையினரால்...

இந்தத் தலைப்பில் துவக்கம் என்று பிரசுரிக்காமல் தொடக்கம் என்றும் பிரசுரித்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது. 

குடியரசுத் தலைவருக்குக் கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு

புலிகளைக் காப்பதன் மூலம்

செல்போனைப் பறித்த

சாதியக் கொலைகளைத் தடுக்க...

பரிந்துரைக் கடிதத்தைத் தாக்கல்செய்தல் வேண்டும்

வங்க இளைஞர்கள் இருவர் கைது

எழுவாய் பன்மையாக இருக்கும்போது, தாம் என்னும் பன்மை இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

தீவிரவாதிகள்தாம்


தமிழ் நம் தாய்மொழி. அதை முறையாக எழுதுதல் நல்லது. எழுதத் தெரியாதவர்கள் எனில் மன்னித்துவிடலாம்; தெரிந்தும் எழுதாமல் விடுபவர்களை என்ன செய்வதோ? பிழைதிருத்தும் பழக்கம் வழக்கத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லைதானே?

சனி, ஜூலை 26, 2025

தலைப்பிலேயே ’த’வைக் காணோம்

பொதுவாகவே, நாளிதழ்களில் ஏகப்பட்ட பிழைகள் தென்படுகின்றன. அத்தகைய பிழைகளைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் எல்லோரும் இயல்பாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றுப் பிழையைக்கூட விட்டுவிடலாம். எழுத்துப் பிழைகளே மலிந்துவிட்டன என்பது வருந்தம் தரத்தான் செய்கிறது.  

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழைப் பிரித்து வாசித்தபோது, தலைப்பிலேயே தென்பட்ட இந்தப் பிழை கண்ணை உறுத்தியது. நாளிதழில் யாருக்குமே கண்ணை உறுத்தவில்லை போலும். அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள். 


எங்கே பிழை எனத் தேடுகிறீர்களா... தலைப்பைப் பாருங்கள்...  


திங்கள், ஜூலை 21, 2025

ஆதலினால் ஏடெழுதும் வாழ்க்கையிலே…

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் இந்து தமிழ் திசை வணிகத்துக்கு வலுச்சேர்க்கவும்; தமிழ்ப் பற்றுக் கொண்ட நாளேடாய்க் காட்டிக்கொள்ளவும் ‘தமிழால் இணைவோம்’ என்னும் சொற்றொடரைத் தனது நாளேட்டின் முதல் பக்கத்தில் தலைப்புக்கு நடுவில் இலச்சினையில் அச்சிட்டுள்ளது. சம்ஸ்கிருதத்தால் சங்கமமாவோம் எனத் துணைத் தலைப்பிடும் சூழல் நம் நிலத்தில் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவேளை துணைத் தலைப்பிட்டு நாளேடு இப்போது அளிக்கும் செய்திகளையே அளித்திருந்தாலும், பெரிய வேறுபாடு தோன்றியிருக்காது. பெரும்பாலான நாள்களில், தமிழ்ச் சமூகத்தின் நலனுக்காக நடத்தப்படும் தோற்றம்தரும் வகையில் இந்நாளேட்டின் இணைப்பிதழ்க் கட்டுரைகளும், நடுப்பக்கக் கட்டுரைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகும் அதே நேரத்தில் இந்நாளேட்டின் செய்திகளும் செய்திக் கட்டுரைகளும் நுண்ணரசியலில் தோய்த்து எழுதப்படும். நாளேட்டின் செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் எவரொருவரும் எளிதில் இந்த அரசியலைப் புரிந்துகொள்ள இயலும். அப்படியொரு செய்திக் கட்டுரையை இந்நாளேடு 2025 ஜூலை 13 அன்று தனது கடைசி பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

கட்டுரையின் தலைப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இந்தச் செய்திக் கட்டுரையை எழுதியிருப்பதாக நாளேடு தெரிவிக்கிறது. 2025 ஜூலை 12 அன்று மாநில அரசால் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வை விமர்சித்து இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. மேலோட்டமாக வாசித்துப் பார்க்கும்போது, இளந்தலைமுறைமீது அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரையாகத் தோற்றம் தருகிறது. ஏனெனில், முதல் பத்தியில் தேர்வு நடத்தப்பட்ட விதத்தை வாழ்த்தித் தொடங்கும் கட்டுரை, பெரும்பாலும் நேர்மறையான எண்ணங்களைப் பதிவுசெய்வதே நோக்கம் என்னும் மயக்கத் தொனியிலேயே எழுதப்பட்டுள்ளது. கட்டுரையைச் சற்றுக் கவனத்துடன் வாசிக்கும்போது, அதில் இடம்பெற்றுள்ள சில வாக்கியங்களும், ஐயங்களும் நம் சிந்தையைக் கிளறிவிடுகின்றன; கட்டுரையில் பொதிந்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டுகொள்ளத் தூண்டுகின்றன. கட்டுரையின் தலைப்பைக் கவனித்தீர்கள் எனில், பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு என்னும் சொற்றொடர் புதிர்க்கதவைத் திறக்கும். அறிவில் என்ன, நவீன அறிவு தொல்லறிவு எனத் தோன்றக்கூடும். தொழில்நுட்பம்சார் அறிவைத்தான் கட்டுரையாளர் நவீன அறிவு என எழுதியுள்ளார். அப்படியென்றால், தொல்லறிவு என்பது தொல்காப்பியம் தொடங்கிப் புழங்கிவரும் தமிழ் மொழியின் இலக்கண அறிவென்பதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

முதலில் வாக்கியங்களைக் குறித்து விவாதிக்கலாம். அடுத்ததாகக் கட்டுரையின் ஐயங்களை அலசலாம். “நாளுக்கு நாள் வெகுவேகமாக மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் திறன், மிக நிச்சயமாக, நம் தமிழுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இலக்கணம்’ என்கிற குடுவைக்குள் இளம் தலைமுறையின் தாய்மொழி அறிவை அடைக்க முயற்சிப்பது ஏன்?” என்றொரு வினாவை எழுப்பியுள்ளார் கட்டுரையாளர். இவ்வாக்கியத்தில் காணப்படும் பிழைகளைக் கண்டு பதறாதீர்கள், அதைப் பின்னர் விளக்கலாம். முதலில் இந்த வாக்கியத்தை எப்படி எழுத முடிந்தது, இந்த வாக்கியம் எப்படி நாளேட்டின் ஆசிரியர் முதலிய அனைவர் கண்ணையும் மறைத்து வெளிப்பட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உலகின் மிகவும் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் இலக்கணத்தை, அம்மொழியை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டிய பொறுப்புமிக்க இளந்தலைமுறை கற்றுத் தெளிய வேண்டியதன் அவசியம் உணர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இலக்கணம் தொடர்பான வினாக்களை எவ்வளவு எளிதாகக் கட்டுரையாளர் மடைமாற்றிக் காட்டுகிறார். தாய்மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ளாமல் எப்படி அந்தத் தாய்மொழியில் தெளிவைப் பெற முடியும்? இலக்கணம் என்பது இதிகாசங்களிலும் புராணக் கதைகளிலும் இடம்பெறும் குடுவைக்குள் அடைபட்ட பூதம் போன்ற புனைவுச் சரக்கா? இதில் என்ன ஆச்சரியமென்றால், இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள இதே நாளேட்டின் நடுப்பக்கத்தின் இறுதியில், இந்நாளேடு நடத்தும் பதிப்பகம் உருவாக்கி விற்றுவரும் ‘இலக்கணம் இனிது’ என்னும் நூலின் விளம்பரமும் இடம்பெற்றுள்ளது. தன் கையை எடுத்துத் தன் கண்ணையே குத்துவது போன்ற காரியமல்லவா இது? பதிப்பக விற்பனைக்கு வேட்டுவைக்கும் வேலையை நாளேடு செய்யலாமா? கட்டுரையாளருக்கு இது தெரியாமல் போகலாம். ஆனால், நாளேட்டின் செய்தி ஆசிரியர், ஆசிரியர் உள்ளிட்டோர் இப்படியொரு முரணைக் கவனித்திருக்க வேண்டுமே?

மேலே இரட்டை மேற்கோள் குறிகளுக்கிடையே குறிப்பிட்டுள்ள நாளேட்டு வாக்கியத்தில் தென்படும் பிழைகளைப் பார்க்கலாம். ‘இதையெல்லாம்’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் எழுதியுள்ளார். இந்தச் சொல் ‘இதை என்றோ’, ‘இவற்றை எல்லாம்’ என்றோ எழுதப்பட்டிருக்கவோ பிரசுரிக்கப்பட்டிருக்கவோ வேண்டும். ‘தொழில்நுட்ப தேவைகளுக்கு’ என்று அடுத்தடுத்து இடம்பெற்றிருக்கும் சொற்களுக்கு இடையே ஓர் ஒற்றெழுத்து இட்டிருக்க வேண்டும். ‘முயற்சிப்பது’ என்னும் ஒரு சொல்லைக் கட்டுரையாளர் பயன்படுத்தியுள்ளார். அவ்விடத்தில் ‘முயல்வது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். முயல் என்பது வேர்ச்சொல். ஆகவே, முயற்சிப்பது என்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். வினாத் தாளில் இடம்பெற்றுள்ள பல திரிசொற்களைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், “இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் தவறில்லை. ஆனால் அதற்கான களம் இதுவல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி, ‘ஆனால், அதற்கான களம் இதுவன்று’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ‘அல்ல’ என்பது பன்மைக்குரிய பயனிலை. கட்டுரையாளர் ஒருபோதும் குடுவைக்குள் தாய்மொழி அறிவைப் புதைத்திராதவராக இருக்கலாம். இப்படி மொழிரீதியாகப் பல பிழைகளைக் கொண்ட ஒரு கட்டுரை, இலக்கண அறிவு தேவையா என்பது குறித்து வினா எழுப்புவது நகைப்பைத் தருகிறது.

வினாத்தாளில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று சாதிய அடையாளம் தவிர்த்ததைப் பாராட்டும் கட்டுரையாளர், டாக்டர் நடேச முதலியார், திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை ஆகியோர் பெயரின் சாதிப் பெயரையும் திருத்தி இருக்கலாம் என அங்கலாய்க்கிறார். அதுவும் ‘திவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனும் பெயரை நாளேடு ‘பகவான் பகதூர் பவானந்தம் பிள்ளை’ எனப் பிரசுரித்துள்ளது. எப்போதும் பகவான் நினைவோ என்னவோ? இல்லம் தேடிக் கல்வி, விடியல் பயணம் போன்ற கொள்கை சார் கேள்விகளைப் பற்றிக் கூறி இப்படித்தான் இருக்கும் எனத் தம்மைத்தாமே சமாதானம் செய்துகொள்கிறாராம் கட்டுரையாளர். அரசுப் பணிக்கு வரும் ஒருவர் அரசுத் திட்டங்கள் சார்ந்த விவரங்களை அறிந்திருக்கிறாரா இல்லையா எனச் சோதிப்பது இயல்புதானே? அத்தகைய திட்டங்கள் சார்ந்த கேள்விகளைக் கண்டு ஏன் உச்சி வேர்க்கிறதோ, முதுகு அரிக்கிறதோ? ஒருவேளை வினாத் தாளில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்தது அதற்குக் காரணமாயிருக்குமோ?

ஒரு கட்டுரையிலேயே இத்தனை பிழைகள் எனில் நாளேட்டின் எஞ்சிய பக்கங்களில் எத்தனை எத்தனையோ? இப்படிப் பிழைகள்சூழ் செய்திகளைப் பிரசுரிக்கும் நாளேடுகள் மலிந்த சூழலில் இளந்தலைமுறையின் இலக்கண அறிவை, தொல் தமிழ்ச் சொற்கள் ஆகியவை குறித்தெல்லாம் தேர்வுகளின் வழியே சோதிப்பது ‘தெய்வக் குற்றமா’? மேலே சுட்டப்பட்ட பிழைகள் கட்டுரையாளர் செய்யாதவனவாக இருக்கலாம். ஏனெனில், ஒருவேளை கட்டுரையாளர் சரியாக எழுதி, நாளேட்டின் தரப்படுத்தலுக்கு உட்பட்டு வெளிவரும் வேளையில் பிழைபட்டிருக்கலாம். நூற்றாண்டுப் பெருமை கொண்ட குழுமக் கூடத்திலிருந்து வெளிவரும் ஒரு நாளேடு தொல் மொழி குறித்து இத்தனை பிழைகளுடன் செய்திக் கட்டுரை வெளியிடுவதை வாசித்துவிட்டு வாளாவிருக்க இயலுமா? 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்