சீனாவில் தோன்றிய பீகிங் நியூஸ் இதழ்தான் உலகில் தோன்றிய முதல் இதழ் என்கிறார்கள். இது கி.பி.363 இல் தொடங்கப்பட்டு 1935 வரை வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் எலிசபெத் அரசி காலத்தில்தான் இதழியல் தொழிலாக மலர்ந்துள்ளது. இங்கிலாந்தின் முதல் நாளிதழ் 11.03.1702 அன்று தொடங்கப்பட்டது. எலிசபெத் மாலெத் எனும் பெண்மணி இவ்விதழைத் தொடங்கி நடத்தியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை முகலாயர் காலத்தில்தான் அரண்மனைச் செய்திகளை வெளியிடும் வழக்கம் வந்துள்ளது. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் 1750 ஜனவரி 2 அன்று வங்காளத்திலிருந்து வெளியான வங்காள கெஜட் என்பது தான் இந்தியாவில் தோன்றிய முதல் வார இதழ் என்கிறார்கள். 1853இல் கிரிச் சந்திர கோஷ் எனும் இந்தியர் இந்து பேட்ரியட் எனும் இதழைத் தொடங்கினார். இந்தியரால் தொடங்கப்பட்ட முதல் இதழ் இது. சென்னை மாகாணச் செய்திகளை வழங்கிய த மெட்ராஸ் கூரியர் இதழ் 1785 ஆகஸ்டு 12 இல் தொடங்கப்பட்டுள்ளது. இது மாத இதழ். 1862இல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் மெயில் இதழ்தான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மாலை நாளிதழ். 1878 இல் ஜி.சுப்பிரமணியரால் தொடங்கப்பட்ட தி இந்து ஆங்கில இதழ் 1889 ஏப்ரல் முதல் நாள் முதல் நாளிதழாக வெளிவந்தது. இது இந்துக் குழுமமாக வளர்ச்சியடைந்து, 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16 அன்று தி இந்து எனும் தமிழ் நாளிதழ் தொடங்கப்பட்டது. இது பின்னர் இந்து தமிழ் திசை எனப் பெயர் மாற்றப்பட்டது.
இந்து தமிழ் திசை ஆசிரியராக இருந்த அசோகன் இந்த நாளிதழிலிருந்து விலகியிருக்கிறார். விலகிய அசோகன் எடிட்டர் அசோகன் என்னும் பெயரில் யூடியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். இவருக்கு முன்னரே இந்நாளிதழிலிருந்து வெளியேறிய ஒருவர் யூடியூப் அலைவரிசையைத் தொடங்கி நடத்திவருகிறார். அவர் இந்து தமிழ் திசை நாளிதழின் இணையதளத்தில் பணியாற்றிய திரு ராம்ஜி. அவர் ரிலாக்ஸ் வித் ராம்ஜி என்னும் பெயரில் ஒரு யூடியூப் அலைவரிசையை நடத்திவருகிறார். அவரது வழியில் பயணம்செல்கிறார் எடிட்டர் அசோகன். சரி எடிட்டர் அசோகன் அலைவரிசையை அவர் பார்த்துக்கொள்வார். அவர் மட்டும் பார்த்தா எப்படி யூடியூப் சக்சஸ் ஆகும் என எடக்கு மடக்கா கேள்வி கேட்காதீங்க. அசோகன் திறமையானவர். கோயம்புத்தூரில் இருந்துகொண்டே இந்து தமிழ் திசை நாளிதழை நான்கைந்து ஆண்டுகள் நடத்திய திறமைக்குச் சொந்தக்காரர். அவரது திறமைக்கு அவர் செவ்வாய் கிரகத்தில் இருந்திருந்தாலும் இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கக்கூடியவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
எந்தச் சொல் யாரைப் பண்படுத்தும், எந்தச் சொல் யாரைப் புண்படுத்தும் என்பவற்றை அறிந்து எதைத் தவிர்க்க வேண்டும், எதைச் சேர்க்க வேண்டும் என்ற நுட்பம் உணர்ந்து செயல்பட்டு இதழியல் பணிகளைச் செம்மையாகச் செய்பவர். இதழியல் துறையின் நெளிவுசுளிவு அறிந்தவர். திரைத்துறையினர், அரசியல்வாதிகள் ஆகியோரை அரவணைத்துச் செல்லும் அன்பாளர். கடுஞ்சொல் கூறித் தம் காரியத்தைக் கெடுத்துக்கொள்ளாத பண்பாளர். இதழியல் பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகவிருக்கும் சூழலில் ஒரு திரைப்படத்தையே இவர் தயாரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த அளவுக்குத் திறமையாகச் செயல்பட்டு முன்னேறியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி போல் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்துக்குத் தம் திறமையால் வந்தவர்.
அசோகன் கோயம்புத்தூரில் இருந்து இந்து தமிழ் திசையை நடத்திய காலத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்தவர் வி. வெங்கடேஸ்வரன் என்றும் அடிப்படையில் இவர் ஒரு லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற போதும், செய்தி ஆசிரியராகச் சிறப்பாகச் செயல்பட்டவர் என்றும், கிட்டத்தட்ட நிழல் ஆசிரியர்போல செயல்பட்டவர் என்றும், அவரைச் சார்ந்த நண்பர்கள் கூறுகிறார்கள். தினமலர் நாளிதழில் வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்த வெங்கடேஸ்வரன் தினமணி, விகடன் எனச் சென்றுவிட்டு தினகரன் நாளிதழிலிருந்து தி இந்துவுக்கு வந்தவர். அவர் எழுதிய கட்டுரை எதுவும் கண்ணில் படவில்லை. அவர் எடிட்டிங் பணியை எந்த அளவு சிறப்பாகச் செய்வார் என்பதற்கான சான்று எதுவும் இல்லை. வெங்கடேஸ்வரனைப் பொறுத்தவரையில் எழுத்து என எதுவுமே இல்லை எல்லாம் படம்தான். அவர் கையில் நாளிதழில் பக்கங்களைக் கொடுக்கும்போது அவற்றைக் கையில் வாங்கி ஒரு பார்வைதான் பார்ப்பார். பார்த்துவிட்டு அப்படியே திருப்பிக் கொடுத்து விடுவார். ஏதேனும் பிழைகள் தென்பட்டால் சொல்வார். ஒற்றுமீது அவருக்கு அநியாயத்துக்கு ஒவ்வாமை. முடிந்தவரை ஒற்றுகளை ஒரே பார்வையில் உதிர்த்துவிட்டே நாளிதழ் பக்கங்களை இறுதிசெய்வார். மிக மிகக் கவனமாக ஒற்றுப் போட்ட இடங்களை மிக மிகக் கவனமாக அகற்றுவதில் கைதேர்ந்தவர். இந்து தமிழ் திசை நாளிதழில் செய்திகளின் தரம் உயர்வதற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றியிருப்பார் என நம்ப முடிகிறது. இல்லையெனில், நூறாண்டு மரபு கொண்ட இந்துக் குழுமம் வெங்கடேஸ்வரன் போன்ற ஒருவரை, பார்ப்பனரல்லாதவரை அவர்களின் நூறாண்டுக் கனவான தமிழ் நாளிதழுக்கு ஆசிரியராக்கி அழகுபார்க்குமா?
சரி, இப்போது ஒருமுறை தலைப்பை வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக