இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், செப்டம்பர் 16, 2025

உண்மை நின்றிட வேண்டும்


வி.நா.மருதாசலனார் எழுதி 1935இல் வெளியிட்டஇந்தியப் பத்திரிகைத் தொழிலியல்என்னும் நூலில், “இந்திய பத்திரிகை முதலாளிகளுக்குப் பத்திரிகைத் தொழிலாளர் ஒருவாறு அடிமை முறையில் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்நூல் வெளியாகி ஏறக்குறைய 90 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்றும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இந்தக் கசப்பான உண்மையை இப்போது நினைவுபடுத்துவதற்குக் காரணம், தேசிய பத்திரிகையாளர் நாளான நவம்பர் 16 அன்று பத்திரிகையாளர் ஃப்ரண்ட்லைன் விஜயசங்கர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த செய்தி ஒன்று. அதில், புதிய தலைமுறை ஊடக நிறுவனம் ஏறக்குறைய 40 ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்த பின்னூட்டம் ஒன்றில், தி இந்து குழுமத்திலிருந்து கடந்த சில ஆண்டுகளில் 600 ஊழியர்களும், 100 பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டிருப்பதாக அவர் எழுதியிருந்தார். புதிய தலைமுறையில் இப்படியான பணிநீக்கம் இது முதன்முறையன்று; அங்கு அது தொடர்கதை. இந்நிறுவனத்தில் அண்மையில்தான் பத்திரிகையாளர் சமஸ் பணியில் சேர்ந்து தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல் 

வாள் முனையைவிட வலிமையானது பேனா முனை என்றார் பிரெஞ்சு அறிஞர் வால்டேர். இந்தச் சொற்றொடர் ஊடகவியலாளர்களை உசுப்பேற்றுவதற்காகச் சொல்லப்படுவது வழக்கம். இப்போது பேனாவால் எழுதாத, இன்னும் சொல்லப்போனால் எழுதவே எழுதாத ஊடகவியலாளர்களே ஊடகத்திலும் சமூகத்திலும் ஆதிக்கம்செலுத்துகிறார்கள் என்ற போதும், இதழியல் துறை வெகுமக்கள் மத்தியில் தன் மானம், மரியாதையைப் போதுமான அளவுக்கு இழந்துவிட்டபோதும், இன்றைக்கும் இந்தச் சொற்றொடர் அதன் பொருளை இழந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இன்னும் உண்மையான எழுத்துக்கு இருக்கும் மரியாதை. 

வலிமையான பேனாவை ஆயுதமாக ஏந்திச் செயல்படும் உழைக்கும் பத்திரிகையாளர்களின் நிலைதான் உள்ளபடியே வலியும் வாதையும் நிறைந்தது.  நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பதே அவர்களது நிலை. அவர்களது தலைக்கு மேலே பணிப் பாதுகாப்பின்மைக் கத்தி எப்போது வேண்டுமானாலும் அறுந்துவிழக்கூடிய நிலையில் தொங்கியபடியே உள்ளது. அந்த ரணகளத்துக்கிடையே  வாசகர் கிளுகிளுப்புக்காக அவர்கள் பரபரப்புடன் பணியாற்றிவருகிறார்கள். ஆனால், மிகவும் இயல்பாக அவர்களது வாழ்வாதாரப் பறிப்பு நாள்தோறும் நடந்தேறுகிறது. 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழின் முன்னணி வார இதழான ஆனந்தவிகடன், நாளிதழான இந்து தமிழ் திசை, காட்சி ஊடகமான புதிய தலைமுறை உள்ளிட்ட பல பெரிய ஊடகங்களும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையிலும், ஆள்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கின. கொரோனா பெருந்தொற்று ஊடக நிறுவனங்களுக்கு அதன் ஊழியர்களைக் கசக்கிப் பிழியும் கம்ப சூத்திரத்தையைக் கற்றுக் கொடுத்துவிட்டது; சமூகத்தில் எல்லாவற்றையும் அறச்சீற்றத்துடன் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களையோ தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முணுமுணுக்கக்கூடவிடாமல் முடக்கிவிட்டது.

ஊடகவியலாளர்கள் பணிநீக்கம்செய்யப்படுவதைவிடப் பணிநீக்கம் செய்யப்படும்போது, அவர்கள் நடத்தப்படும்விதம்தான் சீற்றம் தருகிறது. பணி நீக்கத்துக்குரிய முறையான இழப்பீடுகள், அதாவது சட்டப்படி உரிமையான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்குத் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான உரிமை குறித்தோ உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் குறித்தோ விழிப்புணர்வு உள்ளதா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டே இயங்கிவருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டபூர்வ உரிமையைப் பெறுவதைத் தடுக்கும் வகையில் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் எந்த ஓர் ஊடகவியலாளரும் ஊடகப் பணியில் சேர இயலாது எனும்போது, அவர்கள் வாய்மூடி மௌனித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள். 

சமூகத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆவேசத்துடன் வாள் சுழற்றும் தலைமைப் பொறுப்பு ஊடக சூராதிசூரர்கள் சக பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டும் காணாமல் பெருந்தன்மையுடன் நடந்து, நிறுவனத்திடம் நல்ல பெயர் எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், பல ஊடக நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருக்கும், ஊடகவியலாளர்கள் பெயரில்தான் இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன. நமது அறிவுச் சமூகமோ கஸ்தூரி, நயன்தாரா, விஜய் செய்திகளுக்கு மூச்சுப்போட்டு விவாதிக்கிறது; ஊடகவியலாளர்கள் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம்செய்யப்படும்போதோ, வாளாவிருக்கிறது.  

கொரோனா பெருந்தொற்றைக் காரணங்காட்டி இந்து தமிழ் திசை பணிநீக்கிய றக்குறைய பதினைந்து பேரில் நானும் ஒருவன். உண்மையில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது எவருக்குமே தெரியாத அளவுக்குப் பணி நீக்கம் ரகசியமாக நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியில் சேர்ந்து, உதவி செய்தி ஆசிரியர் நிலையில் இருந்த வேளையில் என்னைப் பணிநீக்கம்செய்தார்கள். நூறாண்டுப் பாரம்பரியம் கொண்ட ஊடகம் என மார்தட்டிக்கொள்ளும் நிறுவனம் ஒன்றிலிருந்து வெளியான இந்து தமிழ் திசை நாளிதழ் பணி நீக்க விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் உண்மையிலேயே ஊடக அறம் மீதான அடிப்படை நம்பிக்கையையே அற்றுப் போகச் செய்துவிட்டது. 

பணி நீக்கத்துக்குச் சில மாதங்களுக்கு முன்னர் அந்நிறுவனம், கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி, ஊழியர்களின் ஊதியத்தை 20 விழுக்காடு குறைத்தது. இப்படியான ஊதியக் குறைப்பில் நிறுவனம் அநியாயத்துக்குச் சமூக நீதியுடன் நடந்துகொண்டது. லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், வாய்க்கும் வயிற்றுக்கும் சண்டைபோடும் சாதாரண ஊழியருக்கும் ஒரே மாதிரியாக 20 விழுக்காட்டைக் குறைத்தது. அப்படிக் குறைத்தபோது, ஊழியர்களுக்கு முறையான அறிவிப்பு எதையும் அந்நிறுவனம் செய்திருக்கவில்லை. வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்ட பின்னர் ஊழியர்களுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பார்த்த பின்னர்தான் ஊதியக் குறைப்பு நடவடிக்கை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. செய்திகளை முந்தித் தரும் துடிப்புள்ள ஊடக நிறுவனங்களுக்கு எந்தச் செய்தியைக் காலதாமதமாகத் தர வேண்டும் என்ற நுட்பமும் தெரியும் என்பதை அப்போதுதான் உணர்ந்துகொள்ள முடிந்தது.  

ஊதியக் குறைப்பை அறிந்துகொண்ட உடன், அந்நாளிதழின் ஆசிரியர்கள் என அழைக்கப்படுபவர்களுக்கு 2020 மே 4 அன்று அனுப்பிய மின்னஞ்சல் வழியே எனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன். நான்கு மாதங்கள் கழித்து கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஊடக நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கை என்பதைச் சொல்லாமல் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியபோது, நான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். உழைக்கும் பத்திரிகையாளராக நான் பணியாற்றிய இணைப்பிதழின் பொறுப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், நற்குணசீலரும், தோழருமான ஆதி வள்ளியப்பன் கைபேசி வழியே அழைத்து என்னைப் பணியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் மின்னஞ்சல் வழியே தகவல் உறுதிசெய்யப்படும் என்றும் உணர்ச்சியற்ற, உள்ளடங்கிய  குரலில் சொன்னார். எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஆள்குறைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தாத, உரிய பதவியின் பெயர் குறிப்பிடப்படாமல் அநாமதேய கையெழுத்தைத் தாங்கியிருந்த பணிநீக்க அறிவிப்பு, மின்னஞ்சல் வழியே வந்தது. இயந்திரத்தின் துல்லியத்துடன் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கைக் கவனித்துக்கொள்ளும் அலுவலர் கிருஷ்ணன், இழப்பீடாக இரண்டு மாத ஊதியம் அதிலும் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறியபோது, பணியிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சியைவிட அந்தப் பெரிய நிறுவனத்தின் சிறுமைப் புத்தியே பேரதிர்ச்சியை அளித்தது.

அறிந்த செய்தியை உடனடியாகப் பொதுச் சமூகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஊடகக் குருதி  உந்த, அந்தச் செய்தியை ஃபேஸ் புக் தளத்தில் பதிவிட்டேன். பணி நீக்கம் தொடர்பாக நாளிதழின் தலைமைப் பொறுப்பிலிருந்த அசோகனுடன் பேசியபோது, தனது கையறு நிலையை வெளிப்படுத்திய அவர் சட்டப் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதைக் குறிப்புணர்த்தினார். அதன் பின்னர் சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவியுடன் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டேன்; அங்கு நீதிகிடைக்காத நிலையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் அநீதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன் (O.P. No: 107/2021). அந்த வழக்குத் தொடர்ந்ததால் எனக்கு நன்மையோ இல்லையோ அதன் பின்னர் கொரோனா பெருந்தொற்றைக் காரணம்காட்டி வேறு எவரையும் இந்து தமிழ் திசை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியிருக்கவில்லை. அநீதிக்கு எதிராகப் பலவீனமாக ஒலித்த எனது மெல்லிய குரலால் நண்பர்களுக்குக் கிடைத்த நன்மை என்னும் வகையில் அது எனக்கு அற்ப  மகிழ்ச்சியைத் தந்தது. 

உதவி செய்தி ஆசிரியராகப் பணியாற்றிவந்த நான் உழைக்கும் பத்திரிகையாளர் அல்ல என்பது மாதிரியான வாதத்தைத் தொழிலாளர் நீதிமன்றத்தில் மௌண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் சவலைக் குழந்தை இந்து தமிழ் திசை முன்வைத்தது. ‘சீச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்புஎன்னும் பாரதியாரின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். நீதிமன்ற விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டதற்கிடையே, ஒருநாள் என்னை அழைத்து, ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படியும் நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொண்டார்கள். அவர்களுடைய  நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை ஆகவே,  நான் உடன்படவில்லை. தொடர்ந்து சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தேன். இறுதியாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி நான் உழைக்கும் பத்திரிகையாளர் என்பதை உறுதிசெய்திருந்தார்.

ஊடகவியலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது, அவர்கள் காக்கும் மௌனமே ஊடக நிறுவனங்களுக்குப் பலம். ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்களைப் பணிநீக்கம் செய்தால், உடனே அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தரும் சொற்பத் தொகையைப் பெற்றுக்கொண்டு எவருக்கும் தெரியாமல் அடுத்த ஊடக நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதில்தான் ஊடகவியலாளர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். ஏதேனும் எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, நீதிக்காகச் சட்டப்போராட்டத்தைக் கையில் எடுத்தாலோ அடுத்த நிறுவனம் பணி தராமல் போய்விடுமே  என்னும் அச்சமே அவர்களிடம் தொக்கி நிற்கிறது. அவர்கள் அச்சத்தில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதே நேரத்தில் ஏன் பணி நீக்கம் செய்யப்பட்டோம், அதற்கான முறையான சட்டப்பூர்வ இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறார்களா போன்ற அடிப்படையான அம்சங்களில்கூட அவர்கள்  கவனம் எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தமளிக்கிறது. பணிவிலகல் கடிதம் எழுதிக் கொடுக்க நிறுவனம் கோரும்போது, எதுவும் எதிர்த்துப் பேசாமல் அப்படியே எழுதிக் கொடுக்கும் கிளிப்பிள்ளைகள் இங்கே  காணப்படுகிறார்கள் என்பதை என்னவென்பது? பாலியல் குற்றத்தைப் பெண்கள் வெளியே சொல்லத் தயங்குவதற்கும் ஊடகவியலாளர்கள் தங்களது பணிநீக்கத்தை வெளியே சொல்வதை மானக்கேடாகக் கருதுவதற்கும் பெரிய வேறுபாடில்லை

இதில் இன்னொரு வருந்தத்தக்க செய்தி பத்திரிகையாளர் சங்கங்களைப் பற்றியது. பத்திரிகையாளர்கள்தாம் பலவீனமாக இருக்கிறார்கள் என்றால் பத்திரிகையாளர் சங்கங்களோ அவர்களைவிடப் பலவீனமாக உள்ளன. ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டுப் பணிநீக்கம் போன்ற விவகாரத்தை முடிந்தவரை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்கக்கூடிய பெரிய பொறுப்பைக் கொண்ட பத்திரிகையாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களோ தங்களில் யார் பெரியவர் என்னும் குஸ்திப் போட்டியிலேயே முஷ்டி உயர்த்திக்கொண்டு திரிகிறார்கள்.  பத்திரிகையாளர் சங்கத்துக்குள்ளும் சங்கங்களுக்குள்ளும் ஏற்படும் உள் முரண்பாடுகளைத் தீர்க்கவே தனி தீர்ப்பாயம் அமைத்தால் தேவலை என்று சொல்லத்தக்க அளவில் அறிவுச் சமூகத்தினரிடையே அவ்வளவு முரண்கள். 

இப்படியான சூழலில் நியாயமான கேள்விகளை நிறுவனங்களை நோக்கிப் பத்திரிகையாளர்கள் கேட்கத் தொடங்கும்போதுதான், இத்தகைய அவலங்கள் சிறிதாவது மட்டுப்படும்; பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் தெரியவரும், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுக்கத் தொடங்கினால், சங்கங்களும் அவர்களுக்குக் கைகொடுத்து பிரச்சினையைத் தீர்க்க முனைந்தால்தான் சமூகத்தில் அவர்களுக்கு ஆதரவான  குரல் எழும்பும். சமூகச் சீர்கேடுகளை, இழிவுகளைத் தட்டிக்கேட்க வேண்டிய நான்காம் தூணே சீர்கேடடைவதும், ஊடக அறத்தைக் காற்றில் மிதக்கவிட்டுவிடுவதும்  நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

காக்கைச் சிறகினிலே டிசம்பர் 2024 இதழில் வெளியானது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்