இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், பிப்ரவரி 11, 2021

எழுத்தாள மனசு

நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு கதையின் முதல் வரி முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்பார்கள் ஆனால், முதல் வரியே இந்தக் கதையில் இப்படி மொக்கையா தொடங்குதே, கதை எந்த லட்சணத்துல இருக்குமோ என எடுத்த எடுப்பிலேயே எதிர்மறையா யோசனை போவுதா? மனசை அப்படிக் கண்டபடி அலையவிடாதீங்க. எல்லாத்துலயும் ஒரு விதிவிலக்கு இருக்கும். அதனால என்னதான் சொல்றான்னு பார்ப்போம், பிடிச்சா படிப்போம் இல்லாட்டிப் போய்டுவோம் என அதை சமாதானப்படுத்துங்கள். பரவாயில்லயே, சொன்ன உடனே அதுக்கு மதிப்புக் கொடுத்து மனச சமாதானப்படுத்தி தொடர்ந்து வாசிக்கிறீங்களே, அந்த நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது தைரியமா வாசிங்க. அதெல்லாம் இருக்கட்டும் முதலில் கதையைச் சொல்லுன்னு நீங்க தலையில் தட்டுவதற்குள் நான் கதையைச் சொல்லிவிடுகிறேன்.

கதையில் என்ன பெரிய சுவாரசியம் இருந்துரப்போவுது என அலுத்துக்கொள்ளும் நண்பர்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான கதை. கதையைவிட உண்மைச் சம்பவத்துல நல்ல சுவாரசியம் இருக்குங்கிறது உங்களுக்குத் தெரியும்லா? ஆனா அதை அப்படியே சொன்னால் சுவையா இருக்காதுல்ல அதனால அத கதையா மாத்திட்டேன். இப்ப இது சுவாரசியமான கதையா ஆயிருச்சு. இது சுவாரசியமான கதையா இல்லையாங்கிறத வாசிக்கிற நாங்கல்லா முடிவுபண்ணனும்னு நீங்க நினைக்கிறது சரிதான். கதையை எழுதுற நான் என்னதான் அடக்கமா இருந்தாலும் கதையைப் பற்றிய உண்மையைச் சொல்லாட்டி நான் கதைக்குத் துரோகம் செஞ்சவனா ஆயிரக்கூடாதுல்லா? அதனால்தான் கதை சுவாரசியமானதுன்னு உண்மையைச் சொன்னேன். அது கதையன்று கதை பற்றிய நிஜம். கதைக்குள்ள உண்மையும் இருந்தாதான நல்லது. ஆனா, நீ கடைசி வரை கதையைச் சொல்ல மாட்டபோல என உங்களுக்கு இந்த நேரம் தோனியிருக்கும். அதனால கதைக்குள்ள போறன்.
இந்தக் கதையைக் கொஞ்சம் குஷியா தொடங்குறேன். குஷின்ன உடனே குஷியாயிட்டீங்களா. இடுப்பு கிடுப்புன்னு மனசு எங்கெங்கோ போயிராம பாத்துக்கங்க. அது உங்க பாடு. என்னோட பாடு கதை சொல்றதுதான். பொதுவா, நம்மோட ஃப்ரண்ட்ஸ் நமக்கு எப்படியெப்படியெல்லாமோ உதவுவாங்க. சில வேளைல இப்படியெல்லாம் உதவ முடியுமான்னு நமக்கு திக்பிரமை ஏற்படுற மாதிரி உதவிடுவாங்க. அப்படியொரு நண்பனின் உதவிதான் இந்தக் கதை. இப்ப புரியுதா ஏன் குஷியா தொடங்குறதா சொன்னன்னு. நாம்பாட்டுக்கு குஷின்னு சொல்லிட்டேன். நீங்க குஷி பார்த்திருக்கீங்களான்னு கேக்கவேயில்ல? ஆனா பாத்துருப்பீங்கங்க நம்பிக்கையில் தொடர்றேன். சில லாஜிக் பார்த்தா கதை நகராது. ஏற்கெனவே இங்க அப்படியே செக்குலக்கை மாதிரி கதை ஒரே இடத்திலதான் நட்டமா நிக்குது அப்படீங்கிறீங்களா? கதையோட சுருக்கத்தைச் சொல்லிட்டானே இனி ஏன் இதை வாசிக்கணும்னு உங்களுக்குத் தோனலாம். தப்பில்ல, ஆனா என்ன உதவின்னு பாப்பமேன்னு உங்க மனசு இப்ப உங்கட்ட சொல்லும் பாருங்க. அது நம்ம பக்கம் சாஞ்சிருச்சு. நெனப்புதான் பொழப்ப கெடுக்குதாம் என்னும் பழமொழியை இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம நெனைக்கீங்க.
இந்தக் கதை ரொம்ப கலோக்கியலாவும் சாதாரணமாவும் தொடங்குனாலும் இதன் முடிவு ரொம்ப சோகமா இருக்கும். சோகமா, அது பிடிக்காதேன்னு டக்குன்னு வாசிப்புக்கு குட்பை சொல்லப் பாக்குறீங்களே கொஞ்சம் பொறுமையா இருங்க. முடிவு சோகமாக இருந்தாலும் நீங்க அந்தச் சோகத்துக்காகக் கண்ணீர் விடமாட்டீங்க. அந்தச் சோகத்தை நெனச்சு சிரிக்கத்தான் போறீங்க. சோகமான விஷயத்துக்கு எப்படிச் சிரிப்பு வரும்னு ஒரு யோசனை வருதா. இப்ப யாராவது வாழப்பழத் தோல் வழுக்கி விழுந்தா அது சோகமான நிகழ்வுதான? ஆனால், அதுக்கு வருத்தப்படுவீங்களா, சிரிப்பீங்களா. வருத்தப்படுவோம் ஆனால் சிரிப்பு வந்துரும் அப்படிங்கிறீங்களா. நீங்க இந்த அளவு வெளிப்படையா உண்மையைச் சொல்லும்போது நானும் உண்மையைத்தான சொல்லணும். அதனாலதான் கதையோட முடிவு எப்படி இருக்கும்னு முன்னாடியே சொல்லிட்டேன் ஆனா சொல்லல. இன்னும் டீ வரலன்னு வட போச்ச காமெடியில் வடிவேலு சொல்றமாதிரி இன்னும் கதை வரலன்னு நீங்க சொல்லப்போறீங்கன்னு எனக்கும் தெரியுது.
இந்தக் கதையின் நாயகன் ஓர் எழுத்தாளன். டக்குன்னு தலைப்பைப் படிச்சீங்க பாரு அங்க நிக்கிறீங்க. உங்களோட சமயோஜிதப் புத்திக்கு ஒரு சபாஷ். அவன் எப்டியாப்பட்ட ஆளுன்னா, சுஜாதா மாதிரி, ஜெயமோகன் மாதிரி, தமிழ்வாணன் மாதிரி, ஜி.எஸ்.எஸ்.மாதிரி (ஜி.எஸ்.எஸ். யாருன்னு தெரியாட்டா நீங்க சமகாலச் செய்திப் பத்திரிகைகளை வாசிச்சிருக்க மாட்டீங்க அல்லது அத கவனத்தில் வைத்திருக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏனெனில், ஜி.எஸ்.எஸ். நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் மலை மலையா எழுதுறாரு.) என்னன்னாலும் அசராம எழுதுற ஆளு. அவன் ஒரு தொலைபேசி நிறுவனத்துல அதிகாரியா இருந்தான். அங்க அவனுக்கு வேலையே இருக்காது. எந்த வேலையும் இல்லையேன்னு எழுத ஆரம்பிச்சான். ஒருத்தனுக்கு நேரம் நல்லாயிருந்தா அவன் என்ன செஞ்சாலும் சும்மா மஜாதாம்பாங்க. அப்படி தான் அவனுக்கு ஆயிருச்சு. அவன் என்ன எழுதினாலும் எல்லாரும் படிக்க ஆரம்பிச்சாங்க. படிச்சதோட நிறுத்திட்டாப் பராவாயில்ல. சூப்பர் சூப்பர்னு சும்மா அவனப் பாராட்டித் தள்ளிட்டாங்க. அதனால அவன் துணிச்சலா ஒரு வேலையைச் செய்தான்.
அது எப்படிங்க, துணிச்சலா ஒரு வேலையை எழுத்தாளன் செய்தான்னு சொன்ன உடனே அது நாவல்தான்னு முடிவு பண்ணுனீங்க? உண்மையிலேயே உங்களுக்கு செம அறிவுங்க. அப்படியில்லாட்டி நீங்க எதுக்கு இந்தக் கதையைப் படிக்கப் போறீங்க? கோவிச்சுக்காதீங்க. இது சும்மா இடையில் ஒரு விளம்பரம்தான். பிடிக்காட்டி இதைப் படிச்சத மறந்துட்டு மேல படியுங்க. என்னங்க படிச்ச வரிய மறுபடி படிக்கிறீங்க. ஓ மேலன்னு சொன்னதாலயா, அய்யய்யோ சாரிங்க மேலன்னா மேல இல்ல, கீழ. அப்ப கீழன்னா கீழ இல்லயா மேலயான்னு சட்டுனு கோபப்படுறீங்களே? இது ஒரு காமெடிக் கதைதான. அதுக்குப் போய் இவ்வளவு கோபமா? ஓ புரியுது இதை காமெடி கதைன்னு சொன்னதாலதான் கோபமா? பாத்தீங்களா நமக்குள் ஒரு அன்னியோன்யமான உறவு வந்துருச்சு. இதுதான் ஒரு கதைக்கு அவசியம். எழுத்தாளனும் வாசகனும் ஏதாவது ஒரு கட்டத்தில் இப்படி ஒருத்தருக்கொருத்தர் பேசி உறவாடுவதும் உரையாடுவதும் ரொம்ப ஆரோக்கியமானதுதான். டேய் சவ்வப்போடாம கதைக்கு வாடா? வாடான்னா நான் வாட மாட்டேன். ஏன்னா அது உங்களுக்கு இந்தக் கதைமேல உள்ள உரிமையில வந்த வார்த்தைன்னு எனக்கும் தெரியும். கதை சொல்றதத் தவிர எல்லாம் உனக்குத் தெரியுதுடான்னு நீங்க கொஞ்சம் சத்தமாவே சொல்லிட்டீங்க. அமைதியா சொன்னாவே எனக்குக் கேட்கும் ஆனா நீங்க சத்தமாவே சொல்லிட்டாதாலே. சட்டுனு என் காதில் விழுந்திருச்சு. உனக்கு காதே விழுந்துருச்சுன்னு நெனச்சோம். நல்லவேளை காது இன்னும் இருக்குதுன்னு சொல்றன்னு ஆசுவாசம் அடைஞ்சிட்டீங்களே. சமத்துதான் நீங்க.
ஆங் கதையை எங்க விட்டேன்? என்னடா தீப்பொறி ஆறுமுகம் மாதிரி கேக்குறன்னு நினைக்காதீங்க. எனக்குக் கொஞ்சம் ஞாபக மறதி. இது வேறயா? உருப்பட்ட மாதிரிதான்னு தோனுதா? ஞாபகம் வந்துருச்சு. ஞாபகம் வந்துருச்சு. நாயகனான நம்ம எழுத்தாளன் ஒரு நாவலை எழுதினான். கிட்டத்தட்ட எழுத்து ஒரு தவம்னு சொல்ற மாதிரி கடுமையான தவம் பண்ணுன மாதிரி நாவலை முழு மூச்சா எழுதி முடிச்சான். மொத நாவல எழுதி முடிச்ச உடனே அவனுக்கு அப்படியே சும்மா கிர்ர்ர்ர்ன்னு இருந்துச்சு. ஆனா பாருங்க. எழுதுறதவிட அதை யாராவது வாசிச்சு சொன்னாதான அது எப்படி வந்திருக்கும்னு தெரியும். அதுக்கு என்ன பண்ண? இந்த மாதிரி நேரத்துல இருக்கவே இருக்கான் நம்ம பஞ்சாயத்துன்னு சொல்ற மாதிரி (ஆமா, சரிதான் களவாணி பஞ்சாயத்துதான். அதென்ன களவாணி பஞ்சாயத்துன்னு யாராவது ஒரு பஞ்சாயத்த கூட்டிராதீங்க. அதனாலதான் ப்ராக்கெட்டுல போட்டுட்டேன். நீங்க இதப் படிக்காட்டிக்கூடப் பரவாயில்ல, கதையைப் படிக்காம விட்டுட்டுப் போயிறாதீங்க.) எல்லாருக்கும் ஒரு ஃப்ரண்டு இருப்பானே. அப்படி நம்ம நாயகனுக்கும் ஒரு ஃப்ரண்ட் இருந்தான். அவனுக்கு போன போட்டான். உடனே என்ன ஏதுன்னு கேக்கவே நேராவே வந்துட்டான். அதெப்படின்னு லாஜிக்லாம் கேக்காதீங்க.
டேய் நண்பா, முதன்முதலா ஒரு நாவல் எழுதியிருக்கேன். இது மட்டும் வெளிவந்துச்சுன்னா தமிழில் இதுவரை இப்படி ஒரு நாவல் வந்ததில்லன்னு சொல்லும்படி இருக்கும். இந்த நாவல எனக்கு அடுத்து வாசிக்கிற வாய்ப்ப ஒனக்குத் தான் கொடுக்குறேன். அப்படி இப்படின்னு என்னவெல்லாமோ பிட்டப் போட்டான். நண்பன் கொஞ்சம் வாசிக்கிற ஆளு. அவனுக்கு உண்மை புரிஞ்சுபோச்சு. ஆனாலும் என்ன பண்ண முடியும் துரோகமே பண்ணுனாலும் நண்பனா இருந்தா மன்னிச்சிரணும்ங்கற தமிழர் மரபுல வந்தவனாச்சே. கண்டிப்பா வாசிக்கிறேன்னு விருப்பத்தோட தலையை நீட்டினான்.
ஆனால், ஒருவிஷயம்டா. என்னப் பொறுத்தவரை இந்த நாவல் இங்கிலீஷுல மட்டும் வந்தா எங்கெயோ போயிரும். அதுக்காக நீ இதை நல்லா இருக்குன்னு சொல்லணும்னு அவசியமில்லை. உன்னோட கருத்த நான் ரொம்ப மதிக்கிறேன். நீ படிச்சிப்பாரு. நல்லாயில்லன்னு தோனுச்சுன்னா அப்படியே என்ட்ட வந்து சொல்லு. நான் நாவலை அப்படியே கொளுத்திடுறேன் என்று கொஞ்சம் ஓவராவே உணர்ச்சிவசப்பட்டான். என்னமோ பெரிய காஃப்கான்னு நினைப்பு அவனுக்கு. சரி அவனும் எழுத்தாளன் தானே அவனுக்கும் உணர்ச்சி இருக்காதா என்ன? சே சே ஏன்டா அப்படிச் சொல்ற உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ நல்லா எழுதிருப்பே. அப்படின்னு அவன் சொல்லவுமே நம்ம எழுத்தாளருக்குப் பரவாயில்ல நாம சொன்னது ஒர்க் அவுட் ஆயிருச்சுன்னு ஒரு பரவசம் வந்திருச்சு. கண்டிப்பா நான் படிச்சிட்டு உண்மையைச் சொல்றேன். ஆனால், எனக்கு ஒரு பத்து நாள் டைம் வேண்டும் என்றான் நண்பன். நாயகனும் தாராளமா டைம் எடுத்துக்கோ. ஆனால், மறுபடியும் சொல்றேன் கதையைப் பத்துன உண்மையைத் தான் நீ சொல்லணும்னு அடம்பிடிச்சான். இனியும் பொறுக்க முடியாதுன்னு நெனச்ச நண்பன் கதையை வாங்கிட்டு நடையைக் கட்டிட்டான்.
பத்து நாள் பத்து யுகம் மாதிரி கழிஞ்சுச்சு நம்ம எழுத்தாளருக்கு. பன்னிரண்டு நாளுக்குப் பிறகு நண்பன் எழுத்தாளரப் பார்க்க வந்தான். ஆனால் கையில நாவலோட பிரதி இல்ல. அதைப் பார்த்ததும் எழுத்தாளருக்குப் பக்குன்னு ஆயிருச்சு. ஆனா அவரு எழுத்தாளராச்சே. உணர்ச்சியை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்துவாரா? எதையும் கண்டுக்கிடாத மாதிரி எப்போதும்போல ஃப்ரண்டுட்ட பேசிட்டிருந்தாரு. இவரோட ஃப்ரண்டுன்னு அவரு எப்படி இருப்பாரு. அவரும் எப்போதும்போல நல்லா ஜாலியா பேசிகிட்டே இருக்காரு. எழுத்தாளரோட மனசு ஃபுல்லா நாவலப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டக்கானேன்னு இருந்துச்சு. ஆனால் கேக்க முடியல. நண்பரும் நேரமாயிருச்சு கிளம்ப ஆயத்தமாயிட்டாரு. எழுத்தாளருக்கோ இருப்பு கொள்ளல. நாவலப் படிச்சியான்னு கேக்க வாய்வர வார்த்த வந்துருச்சு ஆனாலும் ஆர்வத்த அடக்கிட்டு நண்பர வழியனுப்பி வச்சிட்டாரு.
இப்படி இன்னும் ஒரு பத்து நாளு போச்சு. மறுபடியும் ஒரு நாள் நண்பர் வந்தாரு. இப்பவும் அவர் கையில நாவலோட பிரதி இல்ல. இந்த முறை எப்படியும் கேட்டுடணும்னு எழுத்தாளரு முடிவு பண்ணிட்டாரு. என்னடா எப்படியிருக்கன்னு கொஞ்சம் கெத்தாவே கேட்டாரு நம்ம எழுத்தாளரு. அவரோட ஃப்ரண்டுக்குப் புரிஞ்சு போச்சு. சாரிடா போன தடவயே சொல்லணும்னு நெனச்சேன். ஆனா மறந்துட்டேன் சாரிடான்னு என்னமோ கூட்டமான பஸ்ல தெரியாம கால மிதிச்ச மாதிரி சொன்னாரு. எழுத்தாளருக்கோ என்னவோ போலாயிருச்சு. எப்படிப்பட்ட நாவல எழுதி இவன்ட்ட கொடுத்தோம் அதைப் பத்திப் பேசாமா ஏதேதோ பேசுறான்னேன்னு இருந்துச்சு.
நாவலப் பத்தி நாம பேசும்போது நீ என்னடா சொன்னன்னு எழுத்தாளர்ட்ட நண்பர் கேட்டார். இங்கிலீஷ்ல மட்டும் வந்தான்னு எழுத்தாளர் ஆரம்பிச்சாரு. அதில்லடா கடைசியா என்ன சொன்ன? நல்லாயில்லன்னா சொல்லு கொளுத்திட்றேன்னு சொன்னேன் எனச் சொல்லும்போதே எழுத்தாளருக்கு ஒரு மாதிரி கலவரமாயிருச்சு. குரல் ஒடஞ்சிருச்சு. கொஞ்சம் விட்டா அழுதுருவாரு போல இருந்துச்சு. அதுக்கென்னடா இப்போ? என எழுத்தாளர் கேக்குறதுக்குள்ள நண்பர் முந்திக்கிட்டாரு. அதான் ஒனக்கு எதுக்கு சிரமம்னு நானே கொளுத்திட்டேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள எழுத்தாளர் உடம்புல சொக்கப்பனை கொளுத்திய மாதிரி ஆயிருச்சு. இருந்தாலும் ஃப்ரண்ட் பொய் சொல்றானோன்னு அவன் கண்ணைப் பார்த்தார். அதில் தீர்க்கமான முடிவு தெரிஞ்சுச்சு.
இவ்வளவு நடந்ததுக்குப் பிறகு நம்ம எழுத்தாளர் நண்பர்ட்ட கேட்டாருங்க ஒரு கேள்வி. அதுதான் இந்தக் கதையோட தலைப்ப வைக்க உதவுச்சு. அப்படி என்னதான் கேட்டாரு? இருங்க சொல்லிட்றேன். டேய் நீ உண்மையிலேயே கதையைப் படிச்சியான்னு கேட்டாரு. என்னங்க இப்படிச் சிரிக்கீங்க. இது சோகக் கதைன்னு தெரிஞ்சும் சிரிக்கிறீங்க பாருங்க. அந்த நாவல் மேல் எழுத்தாளருக்கு இருந்த நம்பிக்கையை நீங்களும் புரிஞ்சிக்காம சிரிக்கீங்க பாருங்க, உண்மையிலேயே இதுதாங்க சோகம். இனிமேயும் இந்தக் கதையைத் தொடர்வதில் எனக்கு இஷ்டமில்லீங்க. இத்தோட கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்றேன்.

செவ்வாய், ஜனவரி 26, 2021

கராத்தே மாஸ்டரா, புரோட்டா மாஸ்டரா?

ஜனவரி 11, காலை 9:19 

உண்மையான மாஸ்டருக்காக நாடு காத்துக்கிடக்கிறது. ரசிகர்களோ மாஸ்டரைப் பார்க்கப் பரிதவிக்கிறார்களே எனப் பெரியவர்கள் ஆதங்கம் கொள்கிறார்கள். இதே பெரியவர்கள் எம்ஜிஆரின் படத்தை ரத்ததானம் செய்து பார்த்திருக்கிறார்கள். வியாழக் கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஐந்து ரூபாய்க்காகத் தங்கள் உதிரத்தைத் தானம் செய்து, எம்ஜிஆரின் படத்தைப் பார்த்தவர்கள் ரசிகர்கள் என்று சதானந்த் மேனன் சொல்வதை மறந்துவிடலாகாது. (இணைப்பு முதல் கமெண்டில்) எம்ஜிஆர் போட்ட விதை விஜய்வரை வளர்ந்து நிற்கிறது. தாத்தா எம்ஜிஆரைப் போற்றினார், மகன் ரஜினியைத் துதித்தான் பேரன் விஜய் எனக் கிறங்குகிறான். சீரழிவுக்கான வெதய எம்ஜிஆர் போட்டார் என்பதை எப்படி மறக்க முடியும்?

***

ஜனவரி 11 காலை 11:35

என்னை அரசியலுக்கு அழைக்காதீர்கள் என அவரே அறவழிப் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் போல.

***

ஜனவரி 11 காலை 11:40

இன்றைய அறிக்கையைப் பார்த்தபோது, குஜராத் கலவரத்தின்போது, கும்பிட்ட கைகளுடன் வெளியான அந்தப் புகைப்படம் நினைவில் எழுந்தது.

***

ஜனவரி 11 நண்பகல் 12:01

முதலமைச்சர் ஆவார் என்றெல்லாம் சொன்னாங்க... போற போக்கப் பாத்தா ஓட்டுப்போடக்கூட வர மாட்டாரு போல...

🙏

ஜனவரி 13, காலை 9:42 

சிஸ்டத்தப் பாத்துட்டு மண்ணுமாதிரி உக்காந்து இருக்காத... சாயந்தரம் வர நேரமாகும் சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு வையி... என்று உரிமையுடன் வையும்போதுதான் அந்தத் தாய் ஒரு தங்கை என்பதை அவன் உணர்வான்.

***
ஜனவரி 13 பகல் 2:17

நெனச்சது கராத்தே மாஸ்டர்
கெடச்சது பரோட்டா மாஸ்டர்

🙏

ஜனவரி 14 நண்பகல் 10:29

1986, பொங்கல். அப்போது அவன் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தான். அந்தப் பொங்கலுக்கு ரஜினி நடித்த மிஸ்டர் பாரத் வெளியானது. அந்தப் பொங்கலுக்கான வாழ்த்தட்டைகளில் வெள்ளையுடையில் ரஜினி கோல்ஃப் மட்டையுடன் நிற்கும் காட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. அஞ்சலட்டைபோல் இருக்கும் அது. அட்டையின் முன்பக்கத்தில் ரஜினியின் ஸ்டில் இடம்பெற்றிருக்கும். பின்பக்கத்தில், அகலவாக்கில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் அட்டையில் இடப் புறம் பொங்கல் வாழ்த்தும் வலப் புறம் முகவரி எழுதுவதற்கான இடமும் இடம்பெற்றிருக்கும். அந்த வாழ்த்தட்டைகளில் ஒன்றை வாங்கி, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவன் அனுப்பினான். ரஜினிக்கும் ராஜீவுக்கும் என்ன தொடர்பு? யார் இந்த ஐடியாவை அவனுக்குத் தந்தது? போன்றவற்றை 35 ஆண்டுகளுக்குப் பிறகு யோசித்துக்கொண்டிருக்கிறான்.


அந்தப் படத்தின் வில்லனாக நடிக்க முதலில் செந்தாமரை தேர்வு செய்யப்பட்டிருந்ததாகவும் ஆனால், ரஜினி விரும்பி அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த சத்யராஜை, (தன்னைவிட வயது குறைந்த சத்யராஜைத் தனக்குத் தந்தையாக நடிக்கவைத்து மகிழ்ந்திருப்பார் ரஜினி காந்த்.) வில்லனாகப் போடும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் படத்தில் ரஜினியை சத்யராஜ் ஓவர் டேக் செய்துவிட்டார் என்பதைப் பெரியவர்கள் அப்போது சொன்னதைக் கேட்டபோது, வருத்தமாக இருந்தது. இந்தப் பொங்கலுக்கு வெளியான மாஸ்டரில் பவானிதானே தனித்துத் தெரிகிறான்?

🙏

ஜனவரி 15 இரவு 10:17

நண்பர் ஒருவர் பேசினார். உன்னிடம் நேரம் நிறைய இருக்கிறது என்னும் ஆணவத்தில் அதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஆடம்பரமாகச் செலவழிக்கிறாய். நேரம் போனால் திரும்ப வராது. உன்னைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டார்.
அவரது உணர்வை அவன் புரிந்துகொண்டான் அல்லது அப்படி நினைத்துக்கொண்டான்.
உன் மன அமைதிதான் முக்கியம் என்று நினைத்தால் எனது நட்பை முறித்துவிடு. உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்றான் அவன்.
எனக்கும் நல்லது என்னும் சொற்கள் தன்னைச் சங்கடப்படுத்தியது என்று சொன்ன நண்பர் சட்டென்று சென்றுவிட்டார். அவனுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.
நல்லதுக்குத்தான் நண்பர் சொல்கிறார். அவர் நல்லதுக்காக அவன் எதுவுமே சொன்னதில்லை. அவர் வாழ்வை அவர் வாழ்கிறார் என்று இருந்துவிடுகிறான். அப்படியிருக்கும்போது, நண்பர் விரும்பும் வாழ்வை அவன் வாழ வேண்டும் என ஏன் அவர் ஆசைப்பட வேண்டும், இப்படி அவதியுற வேண்டும்?

🙏

திங்கள், ஜனவரி 11, 2021

பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க

ஜனவரி 1

டிசம்பர் 31ஆம் நாளுக்கு மறுநாள் பிறந்த காரணத்தாலேயே இந்த நாளுக்குச் சிறப்பளித்துவிடுவது ஒருவகையில். இந்த நாளின் ஆதிக்கத்தை ஆமோதிக்கும் ஆபத்துக் கொண்டது என்பதுடன் பிறப்பு காரணமான உயர்வுக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் அதை ஒத்துக்கொள்ளும் விருப்பமின்றி இந்த நாளை இதற்கு அடுத்த ஒரு நாள்போல் இயல்பான ஒன்றாகக் கருதவே எத்தனிக்கும் மனத்தை ஆற்றுப்படுத்தி, இல்லையில்லை இந்த நாள் பிறநாள்களைவிடச் சற்றுக் கூடுதலான முக்கியத்துவம் கொண்டதுதான் என்பதற்குத் தகுந்த சான்றளித்து, இப்படியொரு செய்தியைக் கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் யாராவது ஒருவர் வெற்றிபெற்றுவிட்டால் மாத்திரமே அவனைப் பொறுத்தவரை இந்த நாள் சிறப்புக்குரியதாகுமே ஒழிய, மற்றபடி இந்த நாளும் நேற்றைப் போன்றதன்றிச் சிறப்புக்குரியதன்று என்பதே அவன் அனுமானம் என்று நீட்டி முழக்காமல் எல்லோரையும் போல் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்றே சொல்லியிருந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவன் சேர்ந்ததற்கும் கமலைத் தலைவனாக ஏற்றுக்கொண்டதற்கும் என்னதான் பொருளிருக்கும்?

🙏

புத்தாண்டு பலன் கூறும் சோதிடர்கள் முகத்தில் உற்சாகத்தை மீறிய கலக்கம் தென்படுகிறது. ஷெல்வீ எஃபெக்டோ!

🙏

ஜனவரி 7

நண்பர் ஒருவர் பேசினார். நெல்லிக்கனி எப்படியிருந்தது என்றார்?
நெல்லிக்கனியா?
என்ன தெரியாததுபோல் கேட்கிறாய் உனக்கு அனுப்பிவைத்தேனே?
எப்போது?
இன்று காலையில்.
எந்த வண்டியில்?
நீண்ட நேரம் வண்டிக்காரன் உன் வீட்டு வாசலிலே நின்றான். நீயும் வந்து சென்றாய். எனவே, அவனது வண்டியில் அனுப்பிய நெல்லிக்கனியை எடுத்திருப்பாய் என்றுதான் நினைத்தேன். நீ சொல்வதைப் பார்த்தால் அதை நீ கவனிக்கவேயில்லைபோல.
சரி விடு அடுத்த முறை நானே உன்னிடம் வந்து வாங்கிக்கொள்கிறேன்.
இல்லையப்பா அந்த நெல்லிக்கனி மிக அரிதானது. அப்படியொரு நெல்லிக்கனி அபூர்வமாகத்தான் கிடைக்கும். அதனால்தான் அதிகப் பிரியத்துடன் உனக்குத் தந்தேன் இப்படி அசட்டையாக இருந்துவிட்டாயே என்று கடிந்துகொண்டார்.
சட்டென்று அவனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த சிவப்பு கலர் பார்சலிலா, அதில்கூட என் பெயர் முகவரி எல்லாவற்றையும் மிகத் தெளிவாக எழுதியிருந்தாயே அதில்தான் நெல்லிக்கனியைப் பொதிந்திருந்தாயா?
ஆமாம். அதே பார்சல்தான். இவ்வளவு தெளிவாகச் சொல்கிறாய். அதை ஏன் எடுக்காமல் விட்டுவிட்டாய்?
நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், ஒரு குப்பை வண்டியில் அப்படியொரு பார்சலைப் பார்த்ததும் எனக்கு எடுக்கவா வேண்டாமா என்று தோன்றியது.
நான் வெளியில் வரவும் அந்த வண்டிதான் வந்தது. உன் வீட்டுக்கு வருவதாகச் சொன்னான். எந்த வண்டி என்றால் என்ன நல்ல பார்சலில்தானே அனுப்புகிறோம் என்று அப்படியே அதில் போட்டனுப்பினேன். இப்படிக் கோட்டைவிட்டுவிட்டாயே?
நண்பர் வருத்தத்துடன் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
***
அவன் இப்போது அமர்ந்து அந்த நிகழ்வு குறித்து யோசித்துப் பார்த்தான். அவ்வளவு அழகாகப் பொதியப்பட்ட பார்சலில் தன் பெயர் இருந்தும் அதை ஏன் தன்னால் எடுக்க முடியாமல் போனது என்று யோசித்தான். குப்பை வண்டி என்பது மட்டுமே அவன் கண்ணை மறைத்திருக்கிறது. ஏனெனில், அவன் இதுவரை குப்பை வண்டியில் பயன்படாத பொருளை எறிந்திருக்கிறானே தவிர ஒருபோதும் அதில் பயன்படும் பொருளைப் போட்டதில்லை. குப்பை வண்டியில் இப்படி ஒருவருக்கொருவர் பயன்படும் பொருளைப் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்று சட்டம் ஒன்றுமில்லையே என்று நண்பன் கேட்டானே அது சரிதானே. அப்படியிருந்தும் அந்த பார்சலை எடுத்துக்கொள்ள முடியாமல் போனால், பிழை தனதல்லவா என்று அவன் நினைத்துக்கொண்டான்.
***
குப்பை வண்டி என்றால் குப்பை வண்டி மட்டும்தானே என்றால் இல்லை. அதே போல் தான் நெல்லிக்கனி என்றாலும் நெல்லிக்கனி மாத்திரமில்லை. கணிதத்தில் கண்டுபிடிக்க வேண்டிய இலக்கத்துக்குப் பதில் எக்ஸ் என்க என்று படித்திருப்போம். சரி, இப்போது குப்பை வண்டி என்றால் என்ன, நெல்லிக்கனி என்றால் என்ன என்பதற்கு விடை காண வேண்டும் என்று தோன்றுகிறதா? விடை காணுங்கள் அது உங்கள் பாதை. அதில் பதிவெழுதியவன் குறுக்கிட இயலாது. உங்கள் பாதையில் பயணம் தொடரட்டும். பதிவெழுதிய அவன் அதிலிருந்து விலகிக்கொள்கிறான்.

🙏

ஜனவரி 8

வாழ்க்கையைப் பராக்குப் பார்த்துக்கொண்டே இருக்கிறான். என்னதான் கிடைக்கிறதோ?

🙏

சில பதிவுகளுக்கு விருப்பக் குறியிட்டு நகர்கிறான் படிக்க மறந்துவிடுகிறான்
சில பதிவுகளைப் படிக்கிறான் விருப்பக் குறியிட மறக்கிறான்
பதிவிட்டவன் எதைக் கணக்கிலெடுப்பான் விருப்பக் குறியையா படித்ததையா
படிக்கப்படுவதை விரும்புபவன் விருப்பக் குறியை விட்டுவிட வேண்டும்
விருப்பக் குறியை விரும்புவன் படிக்கப்படுவது பற்றிய கவலையைத் துறக்க வேண்டும் எனச் சொல்லிவிடலாம் எளிதாக
ஆனால், படிக்கப்படுவதை விரும்புவதைப் போல் விருப்பக்குறியையும் விரும்பத்தானே செய்வான் பதிவிட்டவன்?
விருப்பக் குறிகளை எண்ணிப் படித்தவர்களைக் கணக்கிடுதல் எப்படிச் சரியாக இருக்காதோ அப்படியே விருப்பக் குறியில்லை என்றாலும் ஒருவரும் படிக்கவில்லை என்றும் சொல்ல முடியாதுதானே?
சரி,
படித்தவர்களை எப்படித்தான் அடையாளம் காண்பது?
படித்தவன் படிக்கவில்லை என்று சொன்னாலோ
படிக்காதவன் படித்துவிட்டேன் என்று சொன்னாலோ
நீ என்ன செய்ய முடியும்?
அதுவும் சரிதான்.
எனில், என்னதான் செய்வது,
விருப்பக் குறியிடுவதா, படிப்பதா?
படித்துவிட்டு விருப்பக் குறியிடுவதா
விருப்பக் குறியிட்டுவிட்டுப் படிப்பதா?
எப்போதுமே அவனுக்குக் குழப்பம்தான்.
இந்தக் குழப்பம் மிகவே
சில பதிவுகளுக்கு விருப்பக் குறியிட்டு நகர்கிறான் படிக்க மறந்துவிடுகிறான்
சில பதிவுகளைப் படிக்கிறான் விருப்பக் குறியிட மறக்கிறான்

🙏

நடந்தபோது நரகம்
கடந்தபின்னே சொர்க்கம்
இதென்ன மாயம்?

🙏

ஜனவரி 10

நண்பர் ஒருவர் பேசினார்.
எப்படியும் தோல்விதான் எனத் தெரிந்தும் ஏன் போராடுகிறார்கள், என்று கேட்டார்.
எப்படியும் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்தும் வாழத்தானே செய்கிறோம் என்றான் அவன்.
நண்பர் முகம் சுருங்கிவிட்டார்.
அவனால் என்ன செய்ய முடியும்?

🙏

செவ்வாய், ஜனவரி 05, 2021

பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து

இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதால் யாரும் லாஜிக் பார்க்காதீர்கள். ஆனால், கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராவிட்டால் கவலைப்படாதீர்கள். இப்படியொரு கதையை எப்படி நகைச்சுவைக் கதை என்று சொன்னான் இந்த மடையன் என்று நினைத்துச் சிரித்துக்கொள்ளுங்கள். அப்போது இது நகைச்சுவைக் கதை என்பது உறுதிப்பட்டுவிடும். ஏனென்றால், நீங்கள்தான் சிரித்துவிட்டீர்களே! 

இந்தக் கதை நடந்து சுமார் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இப்போதுள்ள சூழலுக்கும் பொருந்திப்போகும்வகையில் கதை இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. சரி கதைக்குள் போவோமா? கதையைக் கவனமாகப் படியுங்கள். கதையின் இடையிடையே நகைச்சுவைக்கான சாத்தியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைத் தவறவிட்டுவிட்டால் கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராமல் போய்விடக் கூடும். அப்படிக் கதையைப் படித்து முடித்த பின்னர் சிரிப்பு வராதவர்களுக்காகவே முதல் நான்கு வாக்கியங்கள். கதையைப் படித்து முடித்தபின்னர் சிரிப்பவர்கள் முதல் நான்கு வாக்கியங்களைப் படிக்கத் தேவையில்லை. ஆனால், பழக்கதோஷத்தில் முதலிலேயே படித்துவிட்டீர்கள் என்றால் பரவாயில்லை. அதற்காக வருந்தாதீர்கள். ஒரு நகைச்சுவைக் கதையைப் படித்துவிட்டு அதிலும் அதற்காகச் சிரித்துவிட்டு வருத்தப்படுவது நன்றாக இருக்காது அல்லவா? 

எப்படா அலுவலகம் திறக்கும் என்றாகிவிட்டது அவனுக்கு. சுமார் பத்து மாதங்கள் அடைத்தே வைத்துவிட்டார்கள். இன்றுதான் அலுவலகத்தைத் திறக்கிறார்கள். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பத்து மாதங்கள்தான் நிறுவனம் நல்ல லாபமீட்டியதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே இன்று அலுவலகம் திறக்கப்பட்டதாகவும், கொண்டாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்தி கசிந்தது. அது உண்மையா பொய்யா என்று ஒருவருக்கும் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஏன் இன்னும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தன் மனதுக்குள் கேள்வி கேட்ட ஊழியன் ஒருவன் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டான். தான் மனத்தில் நினைத்திருந்ததை எப்படி அலுவலகம் கண்டுபிடித்தது என்பது அந்த ஊழியனுக்குத் தெரியவேயில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் நினைத்தது அதுதான் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுபோலவே அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. இந்த மாயம் எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. எனவே, எவருக்கும் எந்தக் கேள்வியும் நாவில் எழவேயில்லை. எல்லாரும் அநியாயத்துக்கு மௌனம் காத்தார்கள். பொதுவான விஷயம் என்றால் சும்மா பிச்சு உதறும் சூராதி சூரர்களும் அலுவலக விஷயமென்றால் அமைதியாகிவிடுவார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள்தாம். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் திறந்ததால் எல்லாரையும் போல் அவனும் உற்சாகத்துடன் அலுவலகத்துக்குச் சென்றான். அவன் அலுவலகத்தில் நுழையும்போது, அவனது கையைப் பிடித்துக்கொண்டு அழகான பெண்மணி ஒருத்தியும் அவன் தோளோடு தோள் உரசி வந்தாள். நீண்ட நாள்களாகத் திருமணமே செய்யாமல் இருந்தவன் யாரோ ஓர் அழகியின் பிடியில் விழுந்துவிட்டான் போல என அனைவரும் கருதினார்கள். ஆனால், மனைவியை அவன் ஏன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தான் என்பதுதான் அவர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தை அவன் படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டிருப்பான் போல என்று அவர்களில் சிலர் நினைத்துக்கொண்டார்கள். 

அவன் மேலாளர் அறைக்குச் சென்றான். அதுவரை குனிந்து கணக்குவழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர், ஏதோ உள்ளுணர்வு உறுத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். அந்த அழகி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் வாயைத் துடைக்க நாலைந்து கைக்குட்டைகள் தேவைப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்னர்தான் அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்தவுடன் சற்றென்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டது. மனைவியைத் தான் நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டோமே எனப் பதறினாரோ என்னவோ? ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காகத் தான் மனைவியை அழைத்துவந்ததுபோல் நடந்துகொண்டான். 

பெரிதாக எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலையாகிவிட்டது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டதால் அவன் மனைவியுடன் புறப்பட ஆயத்தமானான். வெளியே செல்ல எத்தனித்தபோது, அலுவலக செக்யூரிட்டி அவனை மட்டுமே போக அனுமதித்தான். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டான். அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அப்போதுதான் காலையில் நண்பர்கள் சிலர் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கேட்கலாம் என நினைத்தவனை செக்யூரிட்டி அழைத்துப் போய் காரணத்தைச் சொன்னார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்படி அந்த ஷரத்தைக் கவனிக்காமல் இருந்தான் என்று புரியவில்லை. அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது அலுவலகத்துக்குக் கணவனையோ மனைவியையோ அழைத்து வந்தால் அவர்கள் அலுவலக அடிமை ஆக்கிக்கொள்ளப்படுவார்கள் என. இப்படி ஏற்கெனவே அடிமையாக்கப்பட்டவர்கள் அந்த அலுவலகத்தில் ரகசிய அறையில் பணியில் உள்ளார்களாம். ரகசிய அறையில் என்ன பணி நடைபெறுகிறது என்பது ரகசியமாதலால் யாருக்கும் அதுபற்றித் தெரியாதாம். 

இந்த அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்த அவனுக்கு இந்த ஷரத்தோ இந்த விஷயமோ தெரியாமல் இருந்திருக்கிறது. ஆண்டுதோறும் அவன் பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறான். ஆனால், அப்படியோர் ஆபத்தான ஷரத்தைக் கவனிக்காமலே இருந்திருக்கிறான். எப்படியும் சட்டம் என்றால் சட்டம்தான். அலுவலகம் அதன் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவன் தனியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். 

அவன் பின்னாலேயே வந்த அலுவலக நண்பன் அவனிடம் இப்படியாகிவிட்டதே உன் நிலைமை என வருத்தப்பட்டான். அப்போது ராஜகுமாரன் படத்தில் செந்தில் சிரித்ததுபோல் இடி இடியெனச் சிரித்தான் அவன். நண்பனுக்கோ ஆச்சரியம். இப்படியொரு துன்பகரமான சூழலில் உனக்கு எப்படிச் சிரிப்பு வருகிறது என்று கேட்டான். அப்போது, அவன் சொன்னான், தான் அழைத்துவந்தது தன் மனைவி அல்ல என்றும் மேலாளருடைய மனைவிதான் என்றும். அப்படியென்றால் மேலாளருக்கு அது எப்படித் தெரியாமல் போயிற்று என நண்பன் லாஜிக்காகக் கேட்டான். அலுவலகத்தில் இருந்த காரணத்தால் கடமையே கண்ணாகச் செயல்படும் மேலாளர் தன் மனைவியின் முகத்தைச் சுத்தமாக மறந்துவிட்டார். அவர் வீட்டுக்குப் போனதும் இருக்கிறது வேடிக்கை என்று கூலாகச் சொன்னான் அவன். இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குப் பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து பற்றி எதுவும் தெரியவில்லை என்பதே பொருள். சரி இந்தக் கதைக்கு ஏன் ரஜினி காந்த் படம் என யாராவது நினைத்தீர்களா? நினைத்தீர்கள் எனில் முதல் வாக்கியத்தைப் படியுங்கள் காரணம் தெரியும். 

ஞாயிறு, டிசம்பர் 20, 2020

மலரே என்னென்ன கோலம்...


இன்று காலை நடைப்பயிற்சி செல்லும்போது, கேட்ட இரண்டு பாடல்கள்தாம் இந்தப் பதிவுக்கு வித்திட்டன. எத்தனையோ பாடல்களைக் கேட்கிறோம். சில நம் மனத்தைக் கவர்கின்றன. பல கேட்டதுடன் மறந்துவிடுகிறோம். அப்படி மறந்த சில பாடல்களில் ஒன்றை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எங்கோ கேட்கும்போது, மனம் சட்டென்று மலர்ந்துவிடுகிறது. அந்தப் பாடல் மனத்தின் ஆழத்தில் எங்கே கிடக்கிறது. அந்தப் பாடல் இடம்பெற்ற படம் என்ன, இசை யார் என்றெல்லாம் அதைத் தொடர்ந்து விசாரணைகள் மனத்தில் எழும்புகின்றன. அவற்றுக்கான விடையைக் கண்டடைய மனம் தொடர்ந்து முயலும். சிலவேளை சரியான விடைகளைத் தரும். சிலவேளை மனம் தோல்வியைத் தழுவும். 

இன்று அப்படிக் கேட்ட இரண்டு பாடல்கள் என்று முதல் வாக்கியத்தில் குறிப்பிட்டேன் அல்லவா, அதில் ஒன்று மலரே என்னென்ன கோலம்... என்னும் பாடல். மற்றொன்று, சல சல என ஓடும் குளிரோடையின் சங்கீதமே... என்னும் பாடல். முதல் பாடலைக் கேட்டேன். அதில் இடம்பெற்ற, 
...சமவெளி மலைகளைத் 
தழுவிட நினைத்தால் 
வழியேது முடியாது...
என்னும் வரியைப் பலமுறை முணுமுணுத்தேன். அந்தப் பாடலை அடிக்கடி கேட்ட நினைவு இருக்கிறது. ஆனால், எந்தப் படம் யாரிசையமைத்தது என்பன போன்ற தகவல்கள் தெரியவில்லை. இப்போது, அந்தப் பாடல் குறித்த விவரங்களைப் பார்ப்போம். பாடல் பற்றிய விவரம் அறிந்தவர்கள் ஏற்கெனவே விலகியிருப்பார்கள். விலகாத நல்லவர்கள் சும்மா வாசிப்புக்காக வாசிக்கிறீர்கள். உங்களுக்கு நன்றி. 


மலரே... பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஆட்டோராஜா (1982). விஜய் காந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் கே.விஜயன். இதே பெயரில் வெளியான கன்னடப் படத்தின் மறு ஆக்கம் இந்தப் படம். படத்துக்கு இசை சங்கர் கணேஷ், இளையராஜா ஆகியோர். ஒரு பாடலுக்கு மட்டும் இளையராஜா இசையமைத்துள்ளார். அந்தப் பாடலை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அந்தப் பாடல், சங்கத்தில் காணாத தமிழை... என்பதே. சரி, மலரே பாடலைக் கேட்க விரும்பினால் இந்த இணைப்பில் கிடைக்கும். சங்கர் கணேஷ் இசையில் பிறந்த மலரே பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். 

அடுத்த பாடலைக் கேட்ட முதல் கணத்தில் அது குறித்த விவரம் ஞாபகத்தில் எழவில்லை. ஆனால், பாடல் முடிந்தபோது, மனம் ஒரு தகவலை எடுத்துத் தந்தது. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் புதுப்பாடகன் என்றது. ஆனால், மனம் தந்த தகவல் பிழையானது. உண்மையில் அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் பொண்ணு பாக்க போறேன் (1989).  1989ஆம் ஆண்டில் டிசம்பர் 22 அன்று படம் வெளியாகியிருக்கிறது. இன்று டிசம்பர் 20.  முப்பத்தியோறு ஆண்டுகளாகியுள்ளன. படத்துக்கு இசையமைத்தவர் கே.பாக்யராஜ். கதையையும் அவர் தான் எழுதியுள்ளார். திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் வி.சேகர். இயக்கம் என்.முருகேஷ். பிரபு, சீதா, மனோ போன்றோர் நடித்திருக்கிறார்கள். சல சல என ஓடும்... பாடலுக்கான இணைப்பு இதோ. பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. 

சரி, அந்தப் புதுப்பாடகன் குறித்தும் சில தகவல்களைப் பார்த்துவிடுவோமா? அந்தப் படத்தின் இயக்கம், இசை எல்லாம் எஸ்.தாணு. அந்தப் படத்துக்கு முதலில் வைத்த பெயர் தெருப்பாடகன். விஜயகாந்த், அமலா ஆகியோர் நடித்திருந்தனர். இதிலும் மனோ நடித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் படத்துக்கும் பொண்ணு பாக்க போறேன் படத்துக்கும் உள்ள ஒற்றுமை.  

ஞாயிறு, டிசம்பர் 06, 2020

டெனெட்: புளுட்டோனிய போர் தடுக்கும் கொள்கை

கிறிஸ்டோபர் நோலன் என்ற பெயர் ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே மகத்துவமானதாகப் பார்க்கப்படுகிறது. மெமெண்டோ என்னும் அவரது படம் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மெமெண்டோவின் தாக்கத்தில் உருவானது என்பதை நம்மில் அறியாதோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. அந்தப் படம் தமிழில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஏ.ஆர். முருகதாஸுக்கு இந்திய இயக்குநர் அந்தஸ்து கிடைக்க காரணமான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்சோம்னியா, இன்ஸெப்ஷன், இண்டர்ஸ்டெல்லர், டன்கிர்க் படங்களைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் டெனெட். 

டெனெட் திரைப்படத்தின் கதையைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கிண்டல்களும் கேலிகளும் உலவிவருகின்றன. ஏனெனில், அவ்வளவு சிக்கலான கதை அது. கடந்த காலத்துக்குள் சென்று நமது தவறு ஒன்றைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? அல்லது எதிர்காலத்துக்குள் சென்று நாம் எதிர்கொள்வதை அறிந்துகொண்டால் அதை எப்படி எதிர்கொள்வோம்? இதை யோசித்துப் பாருங்கள். ஒரு சுவாரசியம் தென்படுகிறதல்லவா? அந்த சுவாரசியத்தின் அடிப்படையில் தான் இந்தப் படமே அமைந்திருக்கிறது. 

ஒருமுறை பார்த்து அதன் கதையையும் திரைக்கதையையும் முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது உண்மையிலேயே சாதனைதான். தொடர்ந்து ஆங்கிலப் படங்களிலேயே மூழ்கி முத்தெடுப்பவர்களுக்கு ஒருவேளை அதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால், அவ்வளவு கடினப்பட்டுப் பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கியமான படமா டெனெட் என்றால் தொழில்நுட்பரீதியில் சரிதான். ஏனெனில், தொழில்நுட்பரீதியாக செறிவான இந்தப் படம் உள்ளடக்கரீதியில் தக்கையான, தட்டையான படம்தான். மனித உணர்வுகளுக்கு இடமே அளிக்காத ஒரு படம் இது. முழுக்க அறிவியல் புனைவு என்னும் வறண்ட வானிலையில் நகரும் படமிது. 

தனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்னும் மனப் போக்கு கொண்டவர் ஆங்கில ரஷ்யரான, ஆந்த்ரேய் சேட்டர் (கென்னத் ப்ரனா என்னும் வட அயர்லாந்து நடிகர்). ஆயுத வியாபாரியான இவர் உலகை அழிக்கும் தன்மையிலான நேர்மாறு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறார். ரஷ்யாவின் ரகசிய நகரத்தில் இவருடைய நேர்மாறு ஆயுத ஆலை இயங்குகிறது. நேர் மாறு ஆயுதம் என்பது அணு ஆயுதத்தைவிட மோசமானது. அதனால் கடந்த காலத்துக்கும் சென்று சேதம் விளைவிக்க முடியும். இப்படிப்பட்ட ஆயுதங்களை விற்கும் முகவரான சேட்டரால் உலகம் அழியும் ஒரு சூழல் உருவாகிறது. இதிலிருந்து மனிதர்களைக் காக்கும் பொறுப்பு சிஐஏ ஏஜண்டான நாயகனிடம் விடப்படுகிறது. இந்த வேடமேற்றிருப்பவர் ஜான் டேவிட் வாஷிங்டன். அதை அவர் நிறைவேற்றுகிறாரா, மனிதர்களை அவரால் காக்க முடிந்ததா என்பதே திரைக்கதையின் எஞ்சிய பயணம். 

வழக்கம் போன்ற ஹாலிவுட் படங்களில் காணப்படும் நன்மை தீமைக்கான போர் தான் இந்தப் படத்தின் கருவும். திரைக்கதையை உன்னிப்பாகக் கவனித்தால்தான் படத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது. நமது புராணங்களில் உள்ளதுபோல் பல ஜீபூம்பாக்கள் திரைக்கதையைத் தேற்றியுள்ளன. ஆனால், இடையிடையே இயற்பியல் விளக்கம் தருகிறார்கள். ஆனால், படத்தில் ஒரு வசனம் வருகிறது: இதைப் புரிந்துகொள்ள முயலாதே உணர்ந்துகொள் என்று அது தான் உண்மை. படத்தைப் புரிந்துகொள்ள முயன்றால் படத்தின் காட்சி அனுபவத்தைத் தவறவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே, காட்சிகளைத் தொடர்ந்து அப்படியே சென்றோம் என்றால் படம் புரிந்துவிடும்.

தன்னைத் துளைத்த தோட்டா நேர்மாறானது என்பதால் அந்த தோட்டாவின் உலோகக் கலவை இந்தியாவைச் சேர்ந்தது என்று அறிந்துகொண்ட நாயகன் இந்தியாவுக்கு வருகிறான். அங்கே அவன் ஆயுத தரகரையும் அவருடைய மனைவியையும் சந்திக்கிறான். பிரியா என்னும் பெயர் கொண்ட அவர் நடிகை டிம்பிள் கபாடியா. அவரிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆந்த்ரேய் சேட்டரின் மனைவியான கேத்ரினைக் (எலிசபெத் டெபிக்கி என்னும் ஆஸ்திரேலிய நடிகை) காண்கிறான். என்னா உயரம் அந்த நடிகை! அவர் கலைப்பொருள்களை மதிப்பிடுபவர். அவர் வழியே சேட்டரைப் பிடிக்க முயல்கிறான் நாயகன். இதில் நாயகனுக்கு உதவுபவன் நீல் என்பவன் (ராபர்ட் பேட்டின்சன் எனும் ஆங்கில நடிகர்). 

வில்லன் எதிர்காலத்துக்குள் சென்று என்ன நடக்கும் என்பதைக் கண்டறிந்து அதன்பின்னர் அந்தச் சம்பவம் நடக்கும்போது அதைச் சமாளிக்கிறான். இப்படியான காட்சிகளை நம்பித்தான் ஆக வேண்டும். நாயகன் மட்டும் லேசுப்பட்டவனா அவனும் கடந்த காலத்துக்குச் சென்று நம்பவியலாத காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிறான். பார்ப்பவரைக் கவரும் விதத்திலான பிரும்மாண்டமும் தொழில்நுட்பத் தரமும் படத்தை வாய் பிளந்து பார்க்கவைக்கின்றன. ஆனால், முழுவதும் பார்த்து முடித்தபிறகு, ஒரு பூஞ்சையான படத்தைப் பார்க்கவே நேரத்தைச் செலவழித்திருக்கிறோம் என்பது தெரிகிறது. 

ஹாலிவுட் படங்களுக்கே உரிய சேஸிங் காட்சிகளும் வானளாவிய கட்டிடத்தில் கயிறு போட்டு ஏறும் பழங்கால உத்தி நவீனத் தொழில்நுட்பத்துடன் உதவும் காட்சிகளும் உண்டு. ஒரே நேரத்தில் ஒரு குழுவினர் இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதியினர் கடந்த காலத்துக்கும் ஒரு பிரிவினர் நிகழ்காலத்துக்கும் செல்வது போன்ற காட்சிகளை எல்லாம் நம்பினால் தான் படத்தை ரசிக்க முடியும். படத்தின் தொடக்கத்தில் நிகழும் ஓபரா அரங்கில் நிகழும் தாக்குதல் முதல் இறுதிக்காட்சியில் புளுட்டோனியம் 241ஐ எடுப்பது வரை பார்வையாளர்களை திரையரங்கில் இருத்திவைப்பதற்கான நேர்த்தியான திரைக்கதைதான். என்றபோதும் வழக்கமான ஹாலிவுட் படங்களைப் பார்த்துப் பிரமிப்போருக்கான படம் இது என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை. கிறிஸ்டோபர் நோலன் படம் என்பதால் பார்க்கலாம். ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் நல்ல படங்களில் ஒன்று இதுவல்ல என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். 

வியாழன், டிசம்பர் 03, 2020

நிலவறைக் குறிப்புகள்: நிலைக்கண்ணாடி போன்றவை


பரிசுத்த வேதாகமத்தில் பிரசங்கி என்னும் அதிகாரத்தின் ஒன்றாம் அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 18ஆம் வசனம் இப்படிச் சொல்கிறது: ‘அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு, அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன்.’ ஃபியோதர் தஸ்தவ்யெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள் நாவலும் அதையே முன்மொழிகிறது. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க இயலாதவன்; அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியில் நிலைக்க முடியாது; அவனது மனம் சதா அவனை அலைக்கழித்துக்கொண்டேயிருக்கும், இதிலிருந்து மீள்தல் சாத்தியமற்றது என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறது இந்த நிலவறைக் குறிப்புகள். 

தஸ்தயெவ்ஸ்கியின் இந்த நாவலில் தன்னைப் பற்றிச் சொல்பவன் ஒரு நிலவறை மனிதன். ஆனால், அவன் தன்னைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. அவன் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறான். அவனைச் சமுதாயம் ஒதுக்கிவைத்திருக்கிறதா அவன் சமுதாயத்தை ஒதுக்கிவைத்திருக்கிறானா என்பது அவ்வளவு எளிதில் விடைகாணக்கூடிய வினாவன்று. அவனது இயல்புகளைச் சொல்லும்போது அவனிடம் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மனத்தின் பாவனை, ஒப்பனை எல்லாவற்றையும் களைந்துவிட்டு பிறந்தகுழந்தையின்  தன்மையுடன் அவற்றை வெளிப்படுத்துகிறான். இந்த வாக்கியத்தில் ஓர் ஒப்பனை வந்து அமர்ந்துவிட்டது. இப்படிச் சொல்வதால் இந்த வாக்கியத்திலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன் என்று எனக்குள் வாழும் நிலவறை மனிதன் என்னைப் பார்த்து ஏளனம்செய்கிறான். நீயாக எழுதிவிட்டு வாக்கியத்தின் மீது பழிபோடுகிறாயே நியாயமா? என்று கேட்கிறான். இப்படியான கேள்விகளை நிலவறைக் குறிப்புகளில் நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ளலாம். 

இந்த நாவலை ஒருமுறை வாசித்தால் போதாது; ஒவ்வொரு முறையும் அது தன்னை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகிறது என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசித்து மகிழலாம். ஆனால், மகிழ்ச்சி என்பதை ஆய்வகத்தில் கொண்டு நிறுத்தும் நிலவறை மனிதன் அதையும் ஈவு இரக்கமின்றி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுகிறான். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனது கேள்விக் கணைகள் உங்கள் கழுத்தைப் பிடித்து திருகுகின்றன, உங்கள் மனசாட்சியை உலுக்குகின்றன. 

தன்னுணர்வு அற்றவன் எப்படி மனிதனாக முடியும் என்ற கேள்வி எழுப்பும் அதே வேளையில் மனிதனின் தன்னுணர்வு அவனை மகிழ்ச்சிக் கடலிலிருந்து வெளியேற்றித் துன்பக் கரையில் போட்டுவிடும் அபத்தத்தை நிலவறை மனிதன் மிக இயல்பாக உணர்த்தும்போது, இயல்பான மனிதனுக்கு அது புரிவதேயில்லை. ஆனால், தன்னுணர்வு கொண்ட மனிதன் அதைப் புரிந்துகொண்டு அவதியுறுகிறான். இயல்பான மனிதன் முட்டாளாக இருக்கலாம், சராசரியானவனாக இருக்கலாம். ஆனால், அவனைப் பார்த்து தன்னுணர்வு கொண்ட நிலவறை மனிதன் பொறாமைப்படுகிறான். அவனைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறான். அதே நேரத்தில் அவனை முட்டாள் எனத் தூற்றுகிறான். இந்த வேறுபாடு உங்களுக்கு விளங்குகிறதுதானே?

நிலவறைக் குறிப்புகள் நாவல் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நிலவறை மனிதன் தனது இயல்புகளைக் குறித்து விவரிக்கிறான். இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தான் எலி வளை போன்ற நிலவறையில் வசித்துவருவதையும் தான் யார் என்பதையும் வாசகர்களிடம் சொல்கிறான். ஆனால், அவன் வாசகர்களுக்காக எழுதவில்லை தனக்காக எழுதுவதாகவும் சொல்கிறான். இப்படிக் கணம்தோறும் நிலைமாறும் சிலவேளை நிலைதடுமாறும்  மனத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கிறான். அதன் எல்லா வேடங்களையும் நுட்பமாகக் கவனிக்கிறான். எதனால் இப்படி வேடம் புனைகிறது என்று ஆராய்கிறான். தனது மேன்மையைச் சொல்லி நமது பாராட்டைக் கோரவில்லை அவன். தனது கீழ்மையைச் சொல்லி நமது ஏளனத்தையும் எதிர்கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், தனது மேன்மை கீழ்மை எல்லாவற்றையும் எந்தப் பிரதிபலனையும் பாராமல் சொல்கிறான். அதனால், அவனுக்கு ஆசுவாசம் கிடைக்கலாம். ஆனால் ஆசுவாசம் கிடைக்கும் என்பதற்காக அவன் அதைச் சொல்லவில்லை.  

நிலவறைக் குறிப்புகளின் இரண்டாம் பாகத்தில் நிலவறை மனிதன் எதிர்கொண்ட சில சம்பவங்களை விவரிக்கிறான். அந்தச் சம்பவங்கள் அவனை அலைக்கழிக்கின்றன. இந்தச் சம்பவங்கள் நம்மில் பலர் எதிர்கொண்டதைப் போன்றவைதாம். இவற்றைப் போன்ற சம்பவங்கள் நமக்கும் ஏற்பட்டிருக்கலாம். நாமும் நிலவறை மனிதன் போன்ற அவசத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால், நம்மால் அதைத் தீர்மானமாக விளக்க முயன்றிருக்காது. ஆனால், நிலவறை மனிதன் அதைத் தீர்க்கமான தருக்கங்களுடன் எடுத்துவைக்கிறான். தன்னிலிருந்து விலகி தனது நடத்தையையும் அவன் கறாராக விமர்சிக்கிறான். சிலபோது, தனது நடத்தைகளுக்கான காரணத்தையும் மொழிகிறான். இந்தத் தருக்கத்தை அவனிடம் எடுத்துக்காட்டும் அவனது தன்னுணர்வுதான் அவனது மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. 

நிலவறை மனிதனால், ஒரு எஜமானனாகவோ ஒரு பணியாளனாகவோ ஒரு நண்பனாகவோ ஒரு காதலனாகவோ ஏன் ஒரு மனிதனாகவோ கூட இருக்க இயலவில்லை. அது தான் அவனது துயரம். அவனுக்குக் கிடைக்கும் அன்பையும் அவனால் அனுபவிக்க இயலவில்லை. அவனது தன்னுணர்வு அவனைச் சதா கலக்கத்திலேயே காலங்கழிக்க வைக்கிறது.  நிலவறை என்பது சிறிய குடிலாக இருக்கலாம் சிறிய பொந்தாக இருக்கலாம் பெரும்பரப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், அங்கே வசிக்கும் மனிதனின் மனம் மிகச் சுருங்கிக் கிடக்கிறது. அது அவனை நிம்மதியின்மையில் மூழ்கடிக்கிறது. தன்னைப் பெரிய அறிவாளி எனக் கருதும் நிலவறை மனிதனால் அவன் முட்டாளாகக் கருதும் இயல்பான மனிதன் துய்க்கும் இன்பத்தைக்கூடத் துயக்க இயலவில்லை. 

மகிழ்ச்சியை அவன் வேண்டினாலும் அவனால் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. அவனது மகிழ்ச்சிகூட அவனைக் கையைப்பிடித்து துன்பத்துக்கே அழைத்துச் செல்கிறது. அவன் அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பள்ளிக்காலத்திலேயே வாசித்துவிட்டான். ஆனால், அது அவனது இருண்ட வாழ்க்கையில் எந்த வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. அதன் வெளிச்சமெல்லாம் அவனது கலக்கத்தைத் துலக்கப்படுத்தவே உதவுகிறது. நட்பு, உறவு, காதல் என்ற எல்லா உணர்வுகளிலிருந்து விடுபட்ட மனிதனாக அவன் இருந்தபோதும் அதன் காரணமாக அவன் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கவில்லை. வெறுப்பு சமுத்திரம் அவனது மூச்சை முட்டவைத்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களுடன் அமர்ந்து ஒரு விருந்தை அவனால் இயல்பாக உண்ண இயலவில்லை. அங்கே நடக்கும் அபத்தங்கள் அவனைப் பாடாய்ப்படுத்துகின்றன. அதனால் அவன் வெளிப்படுத்தும் எதிர்வினையோ அவனை இன்னும் நார்நாராய்க் கிழித்துவிடுகிறது. குருதி வழிய வழிய குமைகிறான். எல்லாராலும் வெறுக்கப்படும் மனிதனாகத் தான் இருக்கிறோமோ எல்லாரும் தன்னைப் புறக்கணிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என எண்ணும் அதே வேளையில் தன்னால் அப்படி மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அவன் உணர்கிறான். தன்னைத் தேடி வந்து நேசம் செலுத்திய பெண்ணின் நேசத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உன்னதமான பளிங்கு மாளிகை போன்ற ஒன்றில்கூட அவனால் வசித்திருக்க முடியாது. அந்தப் பளிங்குமாளிகையையும் அவன் நிலவறையாக மாற்றிக்கொண்டுவிடுகிறான்.  

எந்தப் பெருமிதமும் இல்லாத மனிதனாக இருக்க நேர்வதன் சோகத்தை அவன் பரப்பும் அதே நேரம் பெருமிதங்கள் மீது சாணியடிக்கவும் அவன் தவறவில்லை.  ஒரே சமயத்தில் அவனது மனம் பல்வேறு எண்ணக் குழப்பங்களால் பீடிக்கப்படுகிறது. அந்த மாயச் சுழலில் அவன் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து  அவன் வெளிவர விரும்பினாலும் அதிலேயே கிடந்து உழலவும் பிரியம் கொள்கிறான். இதற்கெல்லாம் என்னதான் முடிவு? எந்த முடிவும் இல்லை என்பதே முடிவு. இப்படியொரு நாவலை எழுதுவதேகூட அவனுக்குப் பெரிய உவப்புக்குரியதாக இல்லை. அதை ஒரு பெரிய தண்டனை என்றுகூடச் சொல்கிறான். 

இந்த நாவலைப் படித்து முடித்தபின் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றவில்லை; இப்படித்தானே இருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதுதான் நாவல் உருவாக்க விரும்பிய எண்ணமா எனவெல்லாம் தெரியவில்லை. ஆனால், இந்த நாவலை வாசிக்கும்போது, ஒரு நிலைக்கண்ணாடி முன் அமர்ந்திருப்பதுபோல்தான் உள்ளது. இப்படியான நாவல்கள் நமது துயரத்திலிருந்து நம்மை விடுவிடுப்பதில்லை. ஆனால், நமது துயரங்களுக்கு என்ன மதிப்பிருக்கிறது என ஏளனம் செய்கின்றன. இன்பத்துக்கும் துன்பத்துக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்க்கை சிதைந்துகொண்டேயிருக்கிறது. சிதைவுகளின் வழியே சிரித்துக்கொண்டேயிருக்கிறோம். அந்தச் சிரிப்புக்குப் பொருளென்ன?

நிலவறைக் குறிப்புகள் 
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 
தமிழில்: எம்.ஏ.சுசீலா
விலை ரூ. 250/-
வெளியீடு: நற்றிணை பதிப்பகம் 
தொடர்புக்கு: +919486177208


லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்