இது ஒரு நகைச்சுவைக் கதை என்பதால் யாரும் லாஜிக் பார்க்காதீர்கள். ஆனால், கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராவிட்டால் கவலைப்படாதீர்கள். இப்படியொரு கதையை எப்படி நகைச்சுவைக் கதை என்று சொன்னான் இந்த மடையன் என்று நினைத்துச் சிரித்துக்கொள்ளுங்கள். அப்போது இது நகைச்சுவைக் கதை என்பது உறுதிப்பட்டுவிடும். ஏனென்றால், நீங்கள்தான் சிரித்துவிட்டீர்களே!
இந்தக் கதை நடந்து சுமார் மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகள் இருக்கும். ஆனாலும் இப்போதுள்ள சூழலுக்கும் பொருந்திப்போகும்வகையில் கதை இருக்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பு. சரி கதைக்குள் போவோமா? கதையைக் கவனமாகப் படியுங்கள். கதையின் இடையிடையே நகைச்சுவைக்கான சாத்தியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றைத் தவறவிட்டுவிட்டால் கதையைப் படித்து முடித்த பின்னர் உங்களுக்குச் சிரிப்பு வராமல் போய்விடக் கூடும். அப்படிக் கதையைப் படித்து முடித்த பின்னர் சிரிப்பு வராதவர்களுக்காகவே முதல் நான்கு வாக்கியங்கள். கதையைப் படித்து முடித்தபின்னர் சிரிப்பவர்கள் முதல் நான்கு வாக்கியங்களைப் படிக்கத் தேவையில்லை. ஆனால், பழக்கதோஷத்தில் முதலிலேயே படித்துவிட்டீர்கள் என்றால் பரவாயில்லை. அதற்காக வருந்தாதீர்கள். ஒரு நகைச்சுவைக் கதையைப் படித்துவிட்டு அதிலும் அதற்காகச் சிரித்துவிட்டு வருத்தப்படுவது நன்றாக இருக்காது அல்லவா?
எப்படா அலுவலகம் திறக்கும் என்றாகிவிட்டது அவனுக்கு. சுமார் பத்து மாதங்கள் அடைத்தே வைத்துவிட்டார்கள். இன்றுதான் அலுவலகத்தைத் திறக்கிறார்கள். நிறுவனம் தொடங்கிய நாள் முதல் இந்தப் பத்து மாதங்கள்தான் நிறுவனம் நல்ல லாபமீட்டியதாகவும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடவே இன்று அலுவலகம் திறக்கப்பட்டதாகவும், கொண்டாட்டம் முடிந்த பின்னர் மீண்டும் அலுவலகம் மூடப்பட்டுவிடும் என்றும் செய்தி கசிந்தது. அது உண்மையா பொய்யா என்று ஒருவருக்கும் தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் ஏன் இன்னும் அலுவலகம் திறக்கப்படவில்லை என்று தன் மனதுக்குள் கேள்வி கேட்ட ஊழியன் ஒருவன் உடனே பணியிலிருந்து நீக்கப்பட்டான். தான் மனத்தில் நினைத்திருந்ததை எப்படி அலுவலகம் கண்டுபிடித்தது என்பது அந்த ஊழியனுக்குத் தெரியவேயில்லை. ஆனால் அவன் மனத்துக்குள் நினைத்தது அதுதான் என்பது மட்டும் அவனுக்குத் தெரிந்திருந்தது. அதுபோலவே அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. இந்த மாயம் எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. எனவே, எவருக்கும் எந்தக் கேள்வியும் நாவில் எழவேயில்லை. எல்லாரும் அநியாயத்துக்கு மௌனம் காத்தார்கள். பொதுவான விஷயம் என்றால் சும்மா பிச்சு உதறும் சூராதி சூரர்களும் அலுவலக விஷயமென்றால் அமைதியாகிவிடுவார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே புரட்சியாளர்கள்தாம்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் திறந்ததால் எல்லாரையும் போல் அவனும் உற்சாகத்துடன் அலுவலகத்துக்குச் சென்றான். அவன் அலுவலகத்தில் நுழையும்போது, அவனது கையைப் பிடித்துக்கொண்டு அழகான பெண்மணி ஒருத்தியும் அவன் தோளோடு தோள் உரசி வந்தாள். நீண்ட நாள்களாகத் திருமணமே செய்யாமல் இருந்தவன் யாரோ ஓர் அழகியின் பிடியில் விழுந்துவிட்டான் போல என அனைவரும் கருதினார்கள். ஆனால், மனைவியை அவன் ஏன் அலுவலகத்துக்கு அழைத்து வந்தான் என்பதுதான் அவர்களில் சிலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்தை அவன் படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டிருப்பான் போல என்று அவர்களில் சிலர் நினைத்துக்கொண்டார்கள்.
அவன் மேலாளர் அறைக்குச் சென்றான். அதுவரை குனிந்து கணக்குவழக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்தவர், ஏதோ உள்ளுணர்வு உறுத்த சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். அந்த அழகி மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அவர் வாயைத் துடைக்க நாலைந்து கைக்குட்டைகள் தேவைப்பட்டன. நீண்ட நேரத்துக்குப் பின்னர்தான் அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்தவுடன் சற்றென்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டது. மனைவியைத் தான் நீண்ட நேரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டோமே எனப் பதறினாரோ என்னவோ? ஆனால், அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்காகத் தான் மனைவியை அழைத்துவந்ததுபோல் நடந்துகொண்டான்.
பெரிதாக எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலையாகிவிட்டது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்துவிட்டதால் அவன் மனைவியுடன் புறப்பட ஆயத்தமானான். வெளியே செல்ல எத்தனித்தபோது, அலுவலக செக்யூரிட்டி அவனை மட்டுமே போக அனுமதித்தான். அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டான். அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. அப்போதுதான் காலையில் நண்பர்கள் சிலர் தன்னை ஆச்சரியத்துடன் பார்த்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்களிடம் கேட்கலாம் என நினைத்தவனை செக்யூரிட்டி அழைத்துப் போய் காரணத்தைச் சொன்னார். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் எப்படி அந்த ஷரத்தைக் கவனிக்காமல் இருந்தான் என்று புரியவில்லை. அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது அலுவலகத்துக்குக் கணவனையோ மனைவியையோ அழைத்து வந்தால் அவர்கள் அலுவலக அடிமை ஆக்கிக்கொள்ளப்படுவார்கள் என. இப்படி ஏற்கெனவே அடிமையாக்கப்பட்டவர்கள் அந்த அலுவலகத்தில் ரகசிய அறையில் பணியில் உள்ளார்களாம். ரகசிய அறையில் என்ன பணி நடைபெறுகிறது என்பது ரகசியமாதலால் யாருக்கும் அதுபற்றித் தெரியாதாம்.
இந்த அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்த அவனுக்கு இந்த ஷரத்தோ இந்த விஷயமோ தெரியாமல் இருந்திருக்கிறது. ஆண்டுதோறும் அவன் பணி ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறான். ஆனால், அப்படியோர் ஆபத்தான ஷரத்தைக் கவனிக்காமலே இருந்திருக்கிறான். எப்படியும் சட்டம் என்றால் சட்டம்தான். அலுவலகம் அதன் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவன் தனியே அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான்.
அவன் பின்னாலேயே வந்த அலுவலக நண்பன் அவனிடம் இப்படியாகிவிட்டதே உன் நிலைமை என வருத்தப்பட்டான். அப்போது ராஜகுமாரன் படத்தில் செந்தில் சிரித்ததுபோல் இடி இடியெனச் சிரித்தான் அவன். நண்பனுக்கோ ஆச்சரியம். இப்படியொரு துன்பகரமான சூழலில் உனக்கு எப்படிச் சிரிப்பு வருகிறது என்று கேட்டான். அப்போது, அவன் சொன்னான், தான் அழைத்துவந்தது தன் மனைவி அல்ல என்றும் மேலாளருடைய மனைவிதான் என்றும். அப்படியென்றால் மேலாளருக்கு அது எப்படித் தெரியாமல் போயிற்று என நண்பன் லாஜிக்காகக் கேட்டான். அலுவலகத்தில் இருந்த காரணத்தால் கடமையே கண்ணாகச் செயல்படும் மேலாளர் தன் மனைவியின் முகத்தைச் சுத்தமாக மறந்துவிட்டார். அவர் வீட்டுக்குப் போனதும் இருக்கிறது வேடிக்கை என்று கூலாகச் சொன்னான் அவன். இதை எப்படி நம்புவது என்று கேட்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்குப் பணி ஒப்பந்தத்தின் பத்தாவது ஷரத்து பற்றி எதுவும் தெரியவில்லை என்பதே பொருள். சரி இந்தக் கதைக்கு ஏன் ரஜினி காந்த் படம் என யாராவது நினைத்தீர்களா? நினைத்தீர்கள் எனில் முதல் வாக்கியத்தைப் படியுங்கள் காரணம் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக