இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூன் 20, 2020

இப்பட்டிப்பட்ட ஆளா மலேசியா வாசுதேவன்?

கொலுசு மலேசியா வாசுதேவன்

பிரபலப் பிண்ணனிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் பிறந்தநாள் ஜூன் 15 அன்று என பேஸ்புக்கில் பல பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்தவுடன் மலேசியா வாசுதேவன் குறித்த நினைவுகள் எழுந்தன. அவர் பாடிய பாடல்களைப் போல் அவர் நடித்த படங்களைப் பற்றியும் எண்ணங்கள் மேலெழுந்தன. மலேசியாவைப் பிரபலமாக்கிய படம் ஒரு கைதியின் டைரி. ஆனால், அவர் முதலில் நடித்த படம் கொலுசு. இந்தப் படத்தை இயக்கியவர் கே.எஸ்.மாதங்கன். இந்தப் படத்தை அம்பாசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா திரையரங்கில் பார்த்திருக்கிறேன். அநேகமாக எட்டாம் வகுப்பு விடுமுறையின்போது உறவினர் வீட்டுக்குச் சென்றபோது பார்த்ததாக ஞாபகம். 

கொலுசு சரிதா

கொலுசு திரைப்படத்தின் இசையும் மலேசியா வாசுதேவன் தான். யூடியூப்பில் கொலுசு படம் கிடைக்கிறது. மிகவும் சாதாரணப் படம் தான். மலையப்பன் என்னும் கிராமத்து பண்ணையார் வேடத்தில் நடித்திருக்கிறார் மலேசியா வாசுதேவன். கிராமத்தில் அவர் வைத்ததுதான் சட்டம். யாரும் எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாது. தனி அரசாங்கமே நடத்திவருகிறார். கிராமத்தில் பள்ளிக்கூடம் உண்டு. ஆனால், மாணவர்கள் அனைவரும் கல் குவாரியில் வேலை பார்க்கிறார்கள். எனவே, பள்ளியில் குடிகாரர்களே வாசம் செய்கிறார்கள். 

கொலுசு சுரேஷ்

பண்ணையார் இருந்தால் விசுவாசமான பணியாள் இருக்க வேண்டுமே? மலையப்பன் என்ன சொன்னாலும் தட்டாமலும் சந்தேகப்படாமலும் செய்யும் பழனி என்னும் பணியாள் கதாபாத்திரத்தில் ராஜேஷ் நடித்திருக்கிறார். பண்ணையாரால் பாதிக்கப்பட்ட வெங்கலத்தான் என்பவரின் மகனாக நடிகர் சுரேஷ். அவர் அந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார். அவருக்கு ஜோடியாக ஊரின் காந்திபக்தரின் மகளாக நடிகை சசிகலா வேடமேற்றிருக்கிறார். கிட்டத்தட்ட படத்தின் கதை ஒரு கைதியின் டைரியின் அடிப்படைக் கதைபோல்தான். அதில் அரசியல் கட்சியின் தொண்டரது மனைவியை அரசியல் தலைவர் அபகரித்து வல்லுறவுகொள்வார். இங்கே தனது பணியாளின் மனைவியைப் பண்ணையார் பெண்டாட முயல்வார். 

கொலுசு சசிகலா

ராஜேஷின் மனைவியாக பொன்னுத்தாய் என்னும் கதாபாத்திரத்தில் சரிதா நடித்திருக்கிறார். ஏற்கெனவே தனது கிராமத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயலும் பண்ணையாரை ஊரைக்கூட்டி அவமானப்படுத்துகிறார் சரிதா. அதற்குப் பழிவாங்கவும் அவரை அடையவும் திட்டமிட்டு சரிதாவை ராஜேஷுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மலேசியா வாசுதேவன். அதில் அவர் வெற்றிபெறுகிறாரா, என்ன ஆகிறது சரிதாவின் நிலைமை, ராஜேஷ் பண்ணையாரின் சுயரூபத்தை அறிந்துகொண்டாரா என்பதையெல்லாம் விவரித்துச் செல்கிறது திரைக்கதை. ஒருபுறம் கல்விக்கான போராட்டம் மறுபுறம் கலவிக்கான போராட்டம் எனத் திரைக்கதை நகர்கிறது. பொறுமையாகத்தான் படத்தைப் பார்க்க முடிகிறது. சிறுவயதில் பார்த்தபோது கல்வி தொடர்பான காட்சிகள் மனத்தில் பதிந்திருக்கவே இல்லை என்பது புரிகிறது. மலேசியா வாசுதேவன் சரிதாவை அடைய முயல்வார் என்பது மட்டும் நினைவில் இருந்தது. 

கொலுசு ராஜேஷ்

வெள்ளி, மே 29, 2020

ஊரடங்கு டாக்கீஸ்

ஃபோட்டோகிராஃப்
மாண்புமிகு பாரதப் பிரதமர் மார்ச் 24 அன்று கரோனா ஊரடங்கை அறிவித்தபோது, நாள்தோறும் ஒரு படம் பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன். அதன்படி முதலில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தைப் பார்த்தேன். மிகப் பிரமாதமான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு பரவாயில்லை என்ற ரகத்தைச் சேர்ந்த படம். வெறும் பொழுதுபோக்குப் படம் என்பதால் அதில் பெரிதாகப் போற்றவோ தூற்றவோ எதுவும் இல்லை.

அடுத்த நாளில் கிம் கி டுக் இயக்கிய ஹுயூமன் ஸ்பேஸ் டைம் அண்ட் ஹுயூமன் படத்தைப் பார்த்தேன். 2018ஆம் ஆண்டின் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் தவறவிட்ட படம். அந்தச் சமயத்தில் அந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்யும் முயற்சியில் எனது கிரெடிட் கார்டில் எழுநூறு எண்ணூறு ரூபாயை இழந்திருந்தேன். அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டையே மாற்றும் அளவுக்கு நிலைமை ஆனது. எனவே, அந்தப் படம் கிடைத்தபோது உடனே பதிவிறக்கிவைத்தேன். ஆனாலும் பார்க்கும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது. வாழ்க்கை, மரணம், காமம், கடவுள், உறவு என எல்லாவற்றையும் கேள்வி கேட்கத் தூண்டும் படம். சற்றுக் கடினமான படம்தான். அதிலும் மனித இறைச்சியைத் தின்னும் காட்சிகளை எல்லாம் காண மனவலு வேண்டும். படத்திலும் கரோனா போன்ற ஒரு நெருக்கடி நிலைமை வருகிறது. அப்போது மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள். உணவுக்கான போராட்டத்தில் எப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள் என்பதையெல்லாம் படம் காட்சிப்படுத்தியிருந்தது.

ட்ரான்ஸ்
அடுத்ததாக வி1 கொலை வழக்கு படம் பார்த்தேன். பரவாயில்லை. திரில்லர் படம். இருட்டுக்குப் பயப்படும் நாயகன், கொலை வழக்கு ஒன்றைத் தீர்க்கும் வகையிலான திரைக்கதை. சற்று மாறுபட்ட திரைக்கதைதான். இப்படியான ஒரு திரில்லரில் ஆணவக் கொலை என்பதை எதிர்பாக்க இயலவில்லை. 

அடுத்ததாக ஃபோட்டோகிராப் இந்திப் படம் பார்த்தேன். நவாஸுத்தின் சித்திக்கி நடித்த திரைப்படம். ஒருமாதிரி நாவல் தன்மையில் நகர்ந்தது படம். இந்தப் படம் ஒருவகையில் ஒரு கனவு போன்றது. எப்படி இப்படியெல்லாம் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சுகமான கனவு. எனவே, அதன் முடிவும் கனவுபோல் சட்டென்று நிகழ்ந்துவிடுகிறது. 

இவற்றைத் தொடர்ந்து பாராசைட் படம் பார்த்தேன். வர்க்க வேறுபாடுகள் மனிதரைப் பதம் பார்க்கும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டிய படம். தொடர்ந்து அய்யப்பனும் கோஷியும், ஹெலன், ட்ரான்ஸ், லூசிபர், டிரைவிங் லைசன்ஸ், உண்ட, ஈ.ம.யா., அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டு, தமாஷ, ஈடே  எனப் பல மலையாளப் படங்கள் பார்த்தேன்.

அய்யப்பனும் கோஷியும்
அய்யப்பனும் கோஷியும் கிட்டத்தட்ட தூள், கில்லி மாதிரியான கமர்ஷியல் காம்போதான். ஆனால், நாட்டுப்புறப் பாடல் ஒன்றும், பழங்குடியின அய்யப்பன் கதாபாத்திரமும் அதற்கு வேறொரு பரிணாமத்தை அளித்துவிடுகின்றன. டிரைவிங் லைசன்ஸ் படத்தை அடியொற்றியே இந்தப் படமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரசிகர் நடிகர் இடையிலான பிரச்சினை டிரைவிங் லைசன்ஸில் என்றால், அய்யப்பனும் கோஷியும்மில் அது அதிகாரம் பெற்ற அதிகாரி, செல்வாக்கு மிக்க செல்வந்தர் இருவருக்கிடையேயான ஈகோ மோதல்.   

உண்ட வழக்கமான மம்மூட்டியின் இன்னுணர்வுத் திரைப்படம். சீருடைக்குள்ளே உழன்று திரியும் மனித அவஸ்தைகளைச் சொன்ன படம். ஈ.ம.யா. மரணத்தின் அழகைச் சொல்லும் படம். இறந்தவருக்காக ஒருவர் குழி தோண்டுகிறார். இறுதியில் அவரே அதில் புதைக்கப்பட்டுகிறார். இப்படி மனித வாழ்வின் மரணம் பொருட்டு நிகழும் அவலங்களும் நகைச்சுவைகளுமான படம் இது.

ஈ.ம.யா.
சிறு வயது முதலே சினிமாக் கனவுடன் சுற்றும் இளைஞனின் கதை அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டு. படமெடுக்க அவன் பிரயாசைப்படுவதுடன் அவனது பாடு முடியடையவில்லை. நல்ல படம் எடுத்த பிறகும் அதற்கு உலக அங்கீகாரம் பெறுவதற்கு என்னவெல்லாம் பாடு பட வேண்டியதுள்ளது என்பதைச் சொல்லும் படம் இது. ஆஸ்கார் கிடைக்காவிட்டாலும். மற்றொரு திரைப்படத்துக்கான கதையும் திரைக்கதையும் இயக்குநருக்குக் கிடைத்துவிடுகிறது. அதுதான் இந்தப் படம். 

தமாஷ உருவ கேலி என்பதை விமர்சிக்கும் சாதாரணத் திரைப்படம். வழுக்கைத் தலை வாய்க்கப்பெற்ற கல்லூரி ஆசிரியர் ஒருவரது திருமண முயற்சிகளில் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களே திரைப்படமாகியுள்ளது. ஈடே காதல் படம். ஆனால், இருதுருவ அரசியல் நிலைப்பாடுகள் கொண்டோரிடைய முகிழ்த்த காதல் என்பதால் புது மோஸ்தர் கிடைத்துவிடுகிறது. திருமணத்தை ஒரு கட்சியே தீர்மானிப்பது எல்லாம் உச்சபட்ச அடாவடிதான். ஆனால், அடாவடியை மேற்கொள்ளும் கட்சி தோழர்களுடையது.

பாராசைட்
இப்படி ஊரடங்கு காலம் பல திரைப்படங்களைக் காண வாய்ப்பளித்துள்ளது.   

வெள்ளி, மே 22, 2020

சாட்டை இல்லாத பம்பரம்


நான் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, கோடை விடுமுறைக்குக் குடும்பத்துடன் கோவில்பட்டிக்குச் செல்வோம். கோவில்பட்டியில் அப்போது சரஸ்வதி, ராமசாமி, நாராயணசாமி என மூன்று திரையரங்குகள் இருந்தன. கடைசியாக 1987 ஆம் ஆண்டு சென்றோம். அதன்பின்னர் அங்கே செல்வது இல்லை. சில உறவுகளும் நட்புகளும் அப்படியே சில பல காரணங்களால் அறுந்துபோவதுபோல் கோவில்பட்டியுடனான தொடர்பும் அறுந்துவிட்டது. ஆனால், பால்யத்தில் அங்கே பார்த்த பல படங்கள் அவ்வப்போது நினைவில் எழும். இந்த ஊரடங்கு காலத்தில் அப்படி எழுந்த நினைவுகளால் சில படங்களைப் பார்த்தேன்.


சிறு வயதில் ஏன் அந்தப் படத்தில் என்ன காட்சிகள் நினைவில் பதிந்திருந்தன, அவை ஏன் நினைவில் நின்றன போன்றவற்றை ஆராய்ந்து பார்ப்பதில் மனம் ஏதோ ஒருவகை ஆறுதல் கொள்கிறது. கோவில்பட்டியில் பார்த்த படங்களென ஒரே ரத்தம், ராமன் ஸ்ரீராமன், சாட்டை இல்லாத பம்பரம், அம்மன் கோவில் கிழக்காலே, பூவிழி வாசலிலே எனச் சில மனத்தின் மேல் வரிசைக்கு அடிக்கடி வந்து செல்லும். அப்போது கோவில்பட்டி நாடார் பள்ளியில் பொருட்காட்சி நடைபெறும். பொருட்காட்சியிலும் தினந்தோறும் சினிமா ஒன்று திரையிடுவார்கள். பொருட்காட்சியில் பட்டணம் பொடி விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய ஆள் உட்கார்ந்து கொண்டு கையில் உலக்கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற உருவம் ஒன்று இப்போதுகூட நினைவிலாடுகிறது.


சாட்டை இல்லாத பம்பரம் படத்தைத் திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். மிகவும் சாதாரணப் படம். நாயகன் வெகுளியான பணக்கார இளைஞன். அவன் வீட்டு வேலையாட்களே அவனை வேலை வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு அப்பாவி அவன். அவன் வீட்டுக்கு எதிரே கடைவைத்திருக்கும் பொன்னம்மா என்னும் பெண்மணி, ஒரு விவரமான பொண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொண்டால் அவனது வாழ்வு உருப்படும் என்கிறாள். அவனும் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைக் காதலித்துத் திருமணம்செய்துகொள்கிறாள். அவள் ஏழைக் குடும்பத்துப் பெண். அவர்களது வாழ்வு திருமணத்துக்குப் பிறகு என்னவானது என்பது தான் படத்தின் கதை. யூடியூபில் படம் கிடைக்கிறது.


சிவகுமார், சரிதா, சோ, சங்கிலி முருகன், சாமிக்கண்ணு, காந்திமதி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தின் கதையை கே. பாக்யராஜ் எழுத, வசனத்தை கவிஞர் வாலி எழுதியுள்ளார். ஈரோடு என் முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. 



புதன், ஏப்ரல் 29, 2020

நிச்சலனம்: எல்லாம் அல்லது எதுவுமில்லை


உயிரோடு இருப்பவர்கள் சொன்னாலே பல புத்தகங்களை வாசிக்க மாட்டோம். ஆனால், இறந்துவிட்ட எழுத்தாளர் ஒருவர் எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிந்துரைத்தார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இறந்துபோனவர் எப்படிப் பரிந்துரைக்க முடியுமென. ஆனால், நான் சொல்வது உண்மைதான் எழுத்தாளர் நஞ்சுண்டன் மறைந்த பின்னர் அவருக்கான அஞ்சலிக் குறிப்பை (இருக்கும்போது ஒருவருக்கு அஞ்சலிக் குறிப்பெழுத முடியுமா என்ன?) எழுதியதற்காக காலச்சுவடு பதிப்பகம் எனக்கொரு நூலை அனுப்பிவைத்தது. அந்தப் புத்தகத்தை எனக்கு நஞ்சுண்டன் பரிந்துரைத்தார் என்பதை இப்போது நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். 

பொதுவாக, பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களையே அலமாரியில் வைத்துவிட்டு வாய்ப்பு வரும்போது படித்துக்கொள்ளலாம் என முடிவுசெய்வதுதான் எனது பழக்கம். இப்படிப் பல புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. சில புத்தகங்களை ஐம்பது அறுபது பக்கங்கள் வாசித்துவிட்டு அப்படியே மூடிவைத்துவிடுவேன். வாசிப்பதற்கு, புத்தகமும் நேரமும் இருந்தால் மட்டும் போதாது, ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். மனநிலை வாய்க்காதபோது எவ்வளவு சிறப்பான புத்தகம் கிடைத்தாலும் வாசிக்க இயலாது என்பதுதான் எனது அனுபவம். 

காலச்சுவடு எனக்குப் புத்தகம் அனுப்பியிருந்தது என்று சொன்னேனே ஒழிய அது என்ன புத்தகம் என்று இன்னும் சொல்லவில்லையே. அந்தப் புத்தகம் நிச்சலனம். அது ஒரு துருக்கிய நாவல். அகமத் ஹம்தி தன்பினார் என்பவர் எழுதியது. 20ஆம் நூற்றாண்டின் துருக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் இவர் என ஓரான் பாமுக் குறிப்பிட்டுள்ளார். அவர் டிரையாலஜியாக எழுதிய நாவலில் இது இரண்டாவதாக வெளிவந்திருக்கிறது. இந்த நாவல் துருக்கியில் 1949ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நாவல் தீவிரமான மொழிநடையில் அமைந்திருக்கிறது. துருக்கியின் கலை, அரசியல், பண்பாடு, இசை, வாழ்க்கை முறை எனப் பலவற்றையும் அலசிச் செல்கிறார் நாவலாசிரியர். இஸ்தான்புல், அனடோலியா எனப் பல இடங்களுக்கும் நாவல் பயணப்படுகிறது. நாவல் முதலில் துருக்கியில்  நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அங்குள்ள நாளிதழின் தரத்தை நமது நாட்டின் நாளிதழ்களின் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் பெருமூச்சுதான் விட இயலும். 


பொதுவாக, ஒரு நாவலையோ புத்தகத்தை வாசிக்க ஒரு தூண்டுதல் வேண்டும். அந்தத் தூண்டுதலை நண்பர் ஒருவர் தரலாம், இல்லையெனில் எங்கோ வாசிக்கும் ஏதோவொரு வரியில் குறிப்பிடத்தக்க தூண்டுதல் கிடைத்துவிடலாம். அப்படிக் கிடைத்தபோது அதை நாம் வாசிக்கத் தொடங்குவோம். நிச்சலனத்தைப் பொறுத்தவரை எனக்கு நஞ்சுண்டனைத் தவிர யாரும் பரிந்துரைக்கவில்லை. அவருடைய பரிந்துரையும் அது ஒரு வகையான மாய எண்ணம்தானே. இப்படியெல்லாம் எதையாவது நினைத்து மனம் மகிழ்ந்துகொள்கிறது என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும். 

கரோனா காலத்தின் முதல் ஊரடங்கைத் தொடர்ந்து திரைப்படங்களாகப் பார்த்துக் கழித்தேன். பார்க்க வேண்டிய பல படங்களைப் பார்த்து முடித்தேன். அதைத் தனிப் பதிவாக எழுதுகிறேன். இந்தப் பதிவில் நிச்சலன குறித்து மட்டும் எழுத வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் அதற்குத் தாவுகிறேன். இப்படியெல்லாம் நமக்கு நாமே எதையாவது கட்டுப்பாடுகளை விதித்துத்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். இது ஒருவகையில் அபத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும். இதுதானே நிலைமை? 

எனது வாசிப்பு என்பது மிகவும் சுணக்கம் கொண்டது. நாவலின் பக்கங்களைக் கொண்டு ஒருநாளுக்கு எத்தனை பக்கம் படித்தால் அதை எத்தனை நாளில் முடிக்கலாம் என முதலில் திட்டமிடுவேன். அதன்படி சில நாள்கள் படித்தும் முடிப்பேன். அதன் பின்னர் அந்தத் திட்டத்துக்கு ஏதோ ஒரு நோவு வந்துவிடும். நாவலைக் கசந்த காதல் போல் தள்ளிவைத்துவிடுவேன். மீண்டும் அந்தக் காதல் துளிர்க்குமோ துளிர்க்காதோ அது காலத்துக்குத்தான் வெளிச்சம். 

அகமத் ஹம்தி தன்பினார்
நிச்சலனம் நாவல் 424 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 40 பக்கம் வீதம் வாசித்தால் சுமார் பதினோரு நாளில் முடித்துவிடலாம் என ஒரு கணக்குப் போட்டேன். எனது கணக்கில் பிழை இருக்காது எனது வாசிப்பில்தான் பிழை இருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து நீங்கள் இதை எப்படி வாசித்திருப்பான் எனச் சந்தேகப்படாதீர்கள். எப்போதும் ஒருவன் சோம்பேறியாக இருக்க மாட்டான். சிலவேளை அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு சுறுசுறுப்புப் படகு வந்து அவனைக் கரை சேர்த்துவிடும். அப்படியான படகு எனக்கு நிச்சலனம் நாவல் விஷயத்தில் நடந்தேறியது. மிகவும் ஆச்சரியகரமான வகையில் 2020 ஏப்ரல் 18 அன்று வாசிக்கத் தொடங்கி ஏப்ரல் 27 அன்றிரவில் முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டேன். எனக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. அப்படி என்னை வாசிக்க வைத்தது நாவலின் நடை. ஆகாய விமானம் பரந்த வெளியில் தடம்பிறழாமல் செல்வது போன்றதொரு நடையில் நாவல் நகர்த்தப்பட்டிருந்தது. 

வாழ்க்கைமீது உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகளும் வாழ்க்கை குறித்து உங்களுக்கு அநேக சிந்தனைகளும் இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் நிச்சலனத்தை வாசிக்க வேண்டும். அது தரும் இலக்கிய சுகம் இப்படி அப்படியென்றில்லை அது ஒரு பரம சுகம். கதை என்று பார்த்தால் வெறும் காதல் கதைதான். என்ன வெறும் காதல் என்கிறான் மரமண்டைப்பயல் என நீங்கள் எனைத் திட்டக் கூடும். காதலை வெறும் காதல் என்பதால் எனக்குக் காதல் மீது வெறுப்பு என்று கருதிக்கொள்ளாதீர்கள். அது சும்மா வெறும் நடிப்பு. ஒவ்வொரு முட்டாளுக்குள்ளும் ஒரு ‘அறிவுஜீவி’ முளைவிடத் துடிக்கத்தானே செய்வான். அவனது செயல்பாடுகள் கொஞ்சம் அசட்டுத்தனமாகத்தானே இருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தில் வெளிப்பட்டதுதான் அந்த வெறும் காதல். 

மும்தாஜ் எனும் இளைஞனின் காதல்தான் நாவலின் நடு நரம்பு. அதை அடிப்படையாகக் கொண்டு நாவல் அங்குமிங்கும் சென்று வருகிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நாவலில் முதல் பாகம் இக்ஸான், இரண்டாம் பாகம் நூரன், மூன்றாம் பாகம் சூயத், நான்காம் பாகம் மும்தாஜ். நான்கு பாகங்களில் இரண்டாம் பாகமான நூரன் அதிகப் பக்கங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த நூரன் தான் மும்தாஜின் காதலி. தன் வாழ்வின் பல சோகங்களை பால்யம் முதலே அனுபவித்துவந்த மும்தாஜின் வாழ்க்கையில் அவனை அவனது இடர்பாடுகளிலிருந்து கைதூக்க வந்தவள் நூரன் என்று நம்பினான் மும்தாஜ். ஆனால் அவள் அவனுக்குத் துக்கத்தையே பரிசளித்துச் சென்றுவிட்டாள். நூரனுடன் மும்தாஜ் படகில் இரவு பகல் என்று பாராமல் சுற்றியிருக்கிறான். அந்தத் தேவதையுடன் திருமணத்துக்கான நாளை எல்லாம் குறித்துவிட்டான். எல்லாவற்றையும் ஒரு மரணம் வந்து அழித்துவிட்டது. அதுவும் ஒரு தற்கொலை. நூரனோ மும்தாஜோ இறந்திவிட்டிருந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், நூரனை எப்போதோ காதலித்திருந்த ஒருவன் இறந்து இவர்கள் காதலை நிறைவேறாத ஒன்றாக மாற்றிவிட்டான். 

அகமத் ஹம்தி தன்பினார்

தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டிருந்த நூரனுக்கு மும்தாஜ் எல்லாமுமாக இருந்தான். அவனைக் கைபிடிக்கலாம் என்றிருந்தபோது அவளுடைய கணவன் திரும்பிவந்து அவளுடைய காதலின் திசையை மாற்றிவிட்டான். நிறைவேறாத காதலின காவியச் சோகம் இந்த நாவலின் பக்கங்களில் எல்லாம் நிரம்பிவழிகிறது. ஆனால், அது மாத்திரமே நாவலா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். துருக்கி நாட்டின் வரலாறு ஒட்டாமன் பேரரசின் சரித்திரம், அந்த நாட்டின் நவீன வாழ்க்கை, பழம்பெருமை என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறார் தன்பினார். 

தனி மனிதரின் அக உணர்வுகளையும் புறச் சூழல்களையும் ஒருசேர எடுத்துவைத்துக்கொண்டே போகிறார். துருக்கிய இஸ்லாம் வாழ்வின் பல பக்கங்களைத் திறந்துகாட்டுகிறார். அதன் இசை, தத்துவம் என வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் துருக்கிய பண்பாட்டின் விதைகளைத் தூவிச் செல்கிறார் தன்பினார். இந்த நாவலின்வழியே இசைபட வாழும் ஒரு பண்பாடு வாய்க்கப்பெற்ற நாடாக துருக்கி துலக்கம் கொள்கிறது.  இரண்டாம் உலகப் போர் மூளுமா மூளாதா என கேள்விகள் பல்கிப் பெருகிய காலகட்டத்தில் தொடங்கும் நாவல் நிறைவுறும் வேளையில் இரண்டாம் உலகப் போர் மூண்டுவிடுவதான அறிவிப்பு வருகிறது. 

அறிவுப்பூர்வமான வாழ்வை வாழும் மனிதனின் உணர்வுபூர்வ காதல் வழியே ஒரு நாட்டின் வரலாற்றைக் குழைத்து இலக்கிய ருசியுடன் அகமத் ஹம்தி தன்பினார் படைத்திருக்கும் ரசனையான விருந்து நிச்சலனம். ஆங்கிலத்தில் இந்த நாவல் A mind at piece என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. துருக்கிய மொழியில் இதன் தலைப்பு ஹோஸோர் (Huzur). தமிழில் இதை மொழிபெயர்த்திருக்கிறார் தி.அ.ஸ்ரீனிவாசன். நாவல் முழுவதும் ஒற்றுப்பிழைகள் ஏராளம் காணப்படுகின்றன. நஞ்சுண்டன் பரிந்துரைத்த நாவல் ஆனால் அவரால் சகித்துக்கொள்ள இயலாத ஒற்றுப்பிழைகளுடன் வாசிக்க நேர்ந்தது நகைமுரண்தான். 

நிச்சலனம் 
அகமத் ஹம்தி தன்பினார் 
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் 
வெளியீடு:  காலச்சுவடு
பக்கங்கள்: 424
விலை ரூ. 375 
தொடர்புக்கு: 04652278525

ஞாயிறு, மார்ச் 29, 2020

வசனங்களால் வாழ்ந்தார் வாழ்கிறார் இன்னும் வாழ்வார்

அஞ்சலி: இயக்குநர் விசு (01.07.1945 – 22.03.2020)


இயக்குநர் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகைகள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள். விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல் இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம் போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால் பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் விசு.

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபோத்தனமான துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமான கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மையான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி.  தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய பட்டினப்பிரவேசத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய அவன் அவள் அது, கீழ்வானம் சிவக்கும் போன்ற படங்களை முக்தா வி சீனிவாசன் இயக்கினார்.


எஸ்பி. முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருந்தபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான கண்மணிப் பூங்காவில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தினருக்கான படமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்தப் படம் பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் படம் இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது இந்தப் படம்.  விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், மோடி மஸ்தான் என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான மணல் கயிறுதான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தின் காது கேளாத மாமா போன்ற அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தனர் சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்றவர்கள். இப்படியான நிலையக் கலைஞர்களைப் பயன்படுத்திய தன்மை நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

1986-ல் வெளியான சம்சாரம் அது மின்சாரம் விசுவின் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் குடும்ப புராணம் என்னும் பெயரில் மலையாளத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மன்னன் என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ரஜினிகாந்துடன் இவரது பயணம் 1978-ல் இவரது கதை வசனத்தில் ’பசி’ துரையின் இயக்கத்தில் உருவான சதுரங்கம் திரைப்படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத் தான் பின்னர் விசு, திருமதி ஒரு வெகுமதி என்னும் பெயரில் படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான் ரஜினி காந்த் நடித்திருந்தார். ரஜினி காந்த் அரசியலில் தனது காலைப் பதிப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவரைவிட ஓரிரு வயது மூத்த விசு காலமானது ஒரு சோகமே.


கமல் ஹாசனை விசு இயக்கியதில்லை ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த சிம்லா ஸ்பெஷல் படத்துக்கு விசு கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் அண்ணாமலை. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. அப்படியான சமரசத்துக்குத் தயாராக இருந்ததால் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு பாட்ஷா கிடைத்தது. விசுவோ தன் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டவராக வரலாற்றில் நிலைபெறுகிறார்.  

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஆனந்தக் கண்ணீர் திரைப்படத்தில்கூட அவரை நினைவுபடுத்துவது தோராயமாக என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவர் டாக்ஸி டிரைவரிடம் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றுயிருக்கிறது. ஆனால், விஜய் காந்த் நடிப்பில் அவர் இயக்கிய டௌரி கல்யாணம் என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப்   பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயமாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்திருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங்களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில் அவருக்கு இறுதிவரை எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம்.

ஞாயிறு, மார்ச் 15, 2020

தாராள பிரபு


சென்னையில் கருத்தரிப்பு மையத்தை நடத்தி வருகிறார் டாக்டர் கண்ணதாசன் (விவேக்). அவரிடம் தம்பதியர் பலர் குழந்தையின்மை பிரச்சினைக்காக வருகிறார்கள். தகுந்த ‘ஸ்பெர்ம் டோனர்’ இல்லாமல் அவதிப்படும் அவர் டோனரைத் தேடிக் கொண்டிருக்கிறார். கால்பந்து விளையாட்டு வீரரான பிரபுவைக் (ஹரிஷ் கல்யாண்) கண்டுபிடிக்கிறார் கண்ணதாசன். முதலில் டோனராக இருக்க மறுக்கும் பிரபு பின்னர் சம்மதிக்கிறார். இதற்கிடையே நிதி வந்தனாவுடன் (தான்யா ஹோப்) பிரபுக்குக் காதல் ஏற்படுகிறது. தான் டோனர் என்பதை நிதியிடன் சொல்லவா வேண்டாமா எனக் குழம்புகிறார் பிரபு. இதன் பின்னர் பிரபுவின் வாழ்வின் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதற்கு விடையாக உள்ளது தாராள பிரபு.

அறிவியல் எவ்வளவோ முன்னேறிவருகிறது; புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப மனித மனங்களும் மாறினால்தான் பயனுண்டு என்பதை உணர்த்தும் வகையிலான திரைக்கதை அமைந்திருக்கிறது. விக்கி டோனர் (2012) என்னும் இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து தமிழுக்கு ஏற்ற வகையில் தந்திருக்கிறார். என்றபோதும், தமிழுக்குப் படம் சற்று அந்நியமாகத் தான் இருக்கிறது. விந்து தானம், மறு மணம், தத்தெடுப்பு எனப் பல விஷயங்களைப் படம் கையாண்டிருக்கிறது. ஆனால், இயன்றவரை அதைப் பிரச்சாரப்படுத்தாமல் இயல்பான கதையோட்டத்திலேயே தந்திருப்பதால் படத்தை ரசிக்க முடிகிறது. எல்லோருக்கும் குழந்தை தந்த ஒருவருக்குக் குழந்தை இல்லாத சூழல் அதை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்ற ஒருவரிக் கதையை ஒரு முழுநீளப் படமாகத் தரத் தேவையான அம்சங்களைக் கொண்டே திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. விந்தணு தானம் என்ற, சமூகம் சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலாத, அம்சத்தைப் படம் மையமாகக் கொண்டிருந்தாலும் அதை முகம்சுளிக்கச் செய்யாத வகையில் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார்கள்.  


நடிகர் ஹரிஷ் கல்யாண் சுறுசுறுப்பான கால்பந்து விளையாட்டு வீரனாக, ஸ்போட்ர்ஸ் கோட்டாவில் வேலை தேடிவிட வேண்டும் என்ற யத்தனிப்புடன் செயல்படுபவராக நடித்திருக்கிறார். விந்தணு தானத்துக்காகத் தன்னைத் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகிவிலகி ஓடுவது, பின்னர் தனது கோச்சுக்குக் குழந்தை இல்லாததால் அவர் பட்ட கஷ்டங்களை உணர்ந்து தான் விந்து தானம் தரச் சம்மதிப்பது, காதலிடம் உண்மையைச் சொல்வதா வேண்டாமா எனத் தவிப்பது என பல காட்சிகளில் உறுத்தல் இல்லாமல் நடித்திருக்கிறார்.

விவேக்குக்கு முக்கியமான படம் இது. நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டும் கலந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அதைச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஆனால், அவரது கதாபாத்திரம்தான் சற்று நெருடல். ஒரு பெரிய மருத்துவமனையை நடத்திவரும் அவர் ஒரே ஒரு டோனரை நம்பிச் செயல்படுவதும், எப்போதும் ஹரிஷை மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பது நம்பும்படியாக இல்லை.  ஆர்.எஸ். சிவாஜியின் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும் உண்மையை பிரபுவிடம் போட்டு உடைத்துவிட்டு விவேக்கிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்கும் இடம் அழகு.



தான்யா ஹோப் அழகாக இருக்கிறார் ஆனால் அழகுப் பதுமையாக மட்டும் பயன்பட்டிருக்கவில்லை. தான் விவாகரத்தானவள் என்பதைக் காதலனிடம் மிக இயல்பாகச் சொல்கிறார். தன்னால் குழந்தையைத் தர முடியாது என்பதை உணரும்போது வெடித்தழுகிறார்; குழந்தையைத் தத்தெடுக்கும் காட்சியில் இயல்பான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். செல்வ குமாரின் ஒளிப்பதிவு, காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணியிசை சராசரி.   

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலரையாவது இதைப் போன்ற படங்கள் சிந்திக்க வைத்தால் நலமாக இருக்கும். சாதி, மதம், வெட்டுக் குத்து எனத் தொடர்ந்து படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் எந்த வில்லத்தனமும் இல்லாமல் மனித உறவுகளை முன்னிருத்தி, ஆரோக்கியமான அறிவியல் உத்தியின் சாதக அம்சங்களைத் தாங்கி வந்திருக்கும் படம் என்பதாலேயே படத்தை ரசிக்க முடிகிறது.

ஞாயிறு, மார்ச் 08, 2020

ஜிப்ஸி: மதம் பிடிக்காத மனித சாதி


காஷ்மீரீல் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பெற்றோர் பலியான சூழலில் கைக்குழந்தையாக ஒரு பெரியவரிடம் அடைக்கலமாகிறார் ஜிப்ஸி (ஜீவா). சே எனும் குதிரையும் அந்தப் பெரியவரும் ஜிப்ஸிக்குத் துணை. பெரியவர் மறைந்துவிட்டபிறகு நாகூருக்கு வரும் ஜிப்ஸியின் காதலுக்குரியவளாகிறாள் வஹிதா (நடாஷா சிங்). அவளும் ஜிப்ஸியும் மணமுடித்துக்கொண்டு வடக்கே ஒரு சிறு நகரில் குடியேறுகிறார்கள். வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் வஹிதாவையும் ஜிப்ஸியையும் பிரித்துவிடுகிறது ஒரு மதக் கலவரம். அதன் பின்னர் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதை அரசியல் பார்வையுடன் சொல்கிறது ஜிப்ஸி.  

இயக்குநர் ராஜுமுருகன் மத்திய அரசின் திட்டமொன்றைப் பகடியை உத்தியாக்கி விமர்சித்த ஜோக்கர் படத்துக்குப் பின்னர் வெளியாகியுள்ள ஜிப்ஸி தணிக்கைத் துறையினருக்குக் கடுமையான வேலை வைத்திருக்கும் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது கலைஞர்கள் மக்கள் பக்கம் நின்று அவர்களது வாதைகளையும் வேதனைகளையும் சொல்ல வேண்டும். அந்த வேலையைத் தான் ராஜுமுருகன் செய்திருக்கிறார். அதைத் திருத்தமாகச் செய்திருந்தால் ஜிப்ஸி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கும். 


ஜிப்ஸியை வளர்த்த பெரியவர் மறைந்தபோது அவரை நீரோட்டத்தில் ஒரு பாறைமீது கிடத்தியிருக்கும் தோற்றம் நமக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டும். கலவரத்தின்போது வஹிதாவை வாளுயர்த்தி மிரட்டும் சோனுகுமாரை பின்னர் ஒரு காட்சியில் கொல்ல வரும் மதவாதி ஒருவனை மக்கள் திரண்டு செங்கற்களால் எறிந்துவிரட்டுகிறார்கள். இந்திய வரலாற்றில் மதப் பிரிவினையின் குறியீடான செங்கற்கள் இங்கே மத ஒற்றுமைக்குக் குறியீடாக மாறி நிற்பது அழகு. இப்படிப் படத்தில் ஆங்காங்கே சமகால கடந்தகால அரசியல் நிகழ்ச்சிகளை வாய்ப்புக் கிடைத்த இடங்களிலெல்லாம் தூவி மக்களிடையே ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க முயன்றிருக்கிறார் ராஜுமுருகன். ஆனால், அதில் அவர் முழு வெற்றியைப் பெறவில்லை என்பது சோகமே.   

திரைக்கதையைப் பொறுத்தவரை ஒரு கோவையாக இல்லாமல் காட்சிகள் வெவ்வேறு நிலப் பரப்புக்கும் வெவ்வேறு உணர்வுக்கும் அடுத்தடுத்து மாறுகின்றன. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கால இடைவெளி பேணப்படவில்லை; தகுந்த காரணங்களும் படத்தில் இடம்பெறவில்லை. தணிக்கைத் துறையின் குப்பைக் கூடைகளுக்குச் சென்ற படச் சுருள்களைச் சேர்த்துப் பார்த்தால் படம் ஒரு சீராக இருக்கக்கூடும். 


ஒரு நாடோடிக் கதாபாத்திரத்தை ஜீவா பொறுப்புணர்ந்து உயிர்ப்புடன் தந்திருக்கிறார்.  கலவரப் பொழுதில் கர்ப்பிணியான மனைவியை நடுத் தெருவில் விட்டுவிட்டு வந்த அவஸ்தையை, தன் உயிருக்குயிரான சே கொல்லப்பட்ட சோகத்தை எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் தன்னைத் துன்புறுத்தும் காவல் துறையினரின் கொடுங்கோன்மையை எதிர்கொள்ளும் காட்சியில் வேதனையையும் கோபத்தையும் இயலாமையையும் என உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் நீதிமன்றத்தில் காவல் துறையினரது சித்திரவதைகளைக் காட்டுவதற்காகச் சட்டையைக் கழற்றி நிற்பது, கேரளத்தில் காவல் நிலையத்தில் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகளில் கவர்கிறார். 

நடாஷா சிங் கவலரத்தின் போது மலங்க மலங்க விழித்தபடி கைகூப்பி நிற்கும் போதும், மீண்டும் தன்னை வந்து பார்க்கும் ஜிப்ஸியை அடையாளம் காணாமல்  சிலையாக நிற்கும்போதும் உரிய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நாயகியின் தந்தை முத்தலிப்பாக நடித்திருக்கும் லால் ஜோஷ் மத அடிப்படைவாதியாகத் தனது கதாபாத்திரத்தை இயன்ற அளவு இறுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது குரல்தான் அந்நியமாக உள்ளது. 


செல்வ குமாரின் ஒளிப்பதிவில் இந்தியாவின் பல இடங்களும் இரவும் பகலும் பனிப் பாறைகளையும் மணம் மேடுகளும் நதிக்கரைகளும் கலவரம்சூழ் பொழுதுகளும் அப்படி அப்படியே பதிவாகியுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணியிசை படத்துடன் ஒத்திசைந்து செல்கிறது. ஆனால். பாடல்கள் திரைப்படத்துடன் கேட்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை. தெருப்பாடகனான ஜிப்ஸி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தந்திருக்கும் கிளைமாக்ஸ் பாடல்கூட எடுபடவில்லை.  அனைவரையும் ஈர்க்கக்கூடிய குரல் பெற்றவன் ஜிப்ஸி என்பது வசனத்தில்தான் வெளிப்படுகிறது; காட்சியிலோ பாடல்களிலோ வெளிப்படவே இல்லை. 

சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் அப்பாவிகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்துபோகிறது, அதைப் பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டிய வகையில் ராஜு முருகன் கவனம் ஈர்க்கிறார்.  ஒரு பைக்கிலேயே கேரளாவிலிருந்து வடக்கே ஜிப்ஸி செல்வது நகைப்பையே தருகிறது.  ஆனாலும், சோனுகுமாரைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரைத் தேடிப் போகும் ஜிப்ஸி அவரை விரட்டும்போது, தடுமாறி விழுந்த அவர் கைகளை இழந்தவர் என்பது தெரியவரும்போது திடுக்கிட நேர்கிறது. மதத்தில் பெயரால் அவரைப் பயன்படுத்திக்கொண்டு சாதியின் பெயரால் அவரை இழிவுபடுத்திய கும்பலுக்கு அவரும் இரையாகியுள்ளார் என்பது அதிர்ச்சி தருகிறது. ஆனால் அதன் பின்னரான சம்பவங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்கின்றன. இப்படிப் படம் முழுமை பெறாமல் பாதிக் கிணற்றைத் தாண்டிய நிலையிலேயே பெரும் பள்ளத்தில் விழுந்து விழுந்து எழுகிறது. 


பாதிக்கப்பட்ட கைகூப்பிய கரங்களும் மதத்தின் பெயரால் வாளேந்திய கையும்  கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களுக்குப் பல வரலாற்றுச் சம்பவங்களை நினைவூட்டி எச்சரிக்கின்றன. ஆனால், ஜிப்ஸி வஹீதாவிடையே கண்டவுடன் காதல் மலரும் காட்சிகள் பெரிதாக ரசிக்கவில்லை. மறுநாள் மணமுடிக்க உள்ள நிலையில் ஜிப்ஸியுடன் வஹிதா புறப்பட்டு வருவது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாக உள்ளது.  காதல் காட்சிகள் மெஹந்தி சர்க்கஸ் படத்தை நினைவுபடுத்துகின்றன. அதில் சர்க்கஸ், இதில் குதிரை நடனம் அதுதான் வேறுபாடு. ஒட்டுமொத்தமான ஒரு வார்ப்பாகப் படம் அமையாமல் துண்டு துண்டு துணுக்குகளாகக் கோக்கப்பட்டுள்ளதால் முழுதாகப் படத்தை ரசிக்க இயலாமல் போகிறது.    

தான் எச்சரிக்க விரும்பிய அரசியல் தொடர்பான விஷயங்களை உணர்த்த மட்டுமே படம் உருவாக்கப்பட்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது. அவையும் ஆழமான புரிதலின் அடிப்படையில் அமையாமல் வெறும் துணுக்குத் தோரணங்களாகவே உள்ளன. ஆகவே, அந்த அரசியல் மிளிர்ந்த அளவுக்குத் திரைப்படமாக ஜிப்ஸி மிளிரவில்லை. 

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்