இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், அக்டோபர் 17, 2019

பெரிய திரையில் வாட்ஸ் அப் பாருங்கள்

எப்போதும் ஸ்மார்ட்போனிலே வாட்ஸ் அப் பார்த்து அலுப்பாக இருக்கிறதா? கவலையே படாதீர்கள். உங்கள் வாட்ஸ் அப் செய்திகளையும் வீடியோக்களையும் கணினியில் எளிதாகப் பார்க்கலாம். எப்படி? 



உங்கள் ப்ரௌசரில் https://web.whatsapp.com/ என்னும் முகவரியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் ஒரு QR code இடம்பெறும். இப்போது உங்கள் மொபைலில் வாட்ஸ் அப்பைத் திறந்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப் பக்கத்தில், வலது மூலையில், உயரத்தில் மூன்று புள்ளிகள் மேலிருந்து கீழாக இடம்பெற்றிருக்கும். அதைத் தொடுங்கள். வரிசையாக ஆறு செய்திகள் மேலிருந்து கீழாகத் திரையில் தோன்றும். அதில் மூன்றாவதாக whatsApp Web என்பது இடம்பெற்றிருக்கும். அதைத் தொட்டீர்கள் என்றால் Scan QR code என்ற கட்டளையுடன் திரை QR codeஐத் தேடும். 



இப்போது கணினியில் உள்ள QR codeஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்தீர்கள் என்றால் உங்கள் வாட்ஸ் அப் கணக்கு கணினிக்குத் தாவிவிடும். இனி, மொபைலைக் கீழே வைத்துவிட்டு கணினி வழியாகவே நீங்கள் வாட்ஸ் அப்பை இயக்கிக்கொள்ளலாம். மொபைலில் வாட்ஸ் அப் இணைப்பு துண்டிக்கப்படும்வரை கணினியில் வாட்ஸ் அப் இயங்கும்.

ஞாயிறு, அக்டோபர் 13, 2019

உண்ணாதீங்க உயிர் போயிடும்!




உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெகன் (சித்தார்த்) கலப்படம் இல்லாத உணவை வழங்குவதே தன் கனவு என்ற லட்சியத்துடன் பணியில் செயல்படுகிறார். உணவுப் பொருளை மோப்பம் பிடித்தே கலப்படம் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவர் கலப்பட உணவுப் பொருள்கள் தொடர்பான எல்லா இடங்களையும் சீல் வைத்துப் பூட்டுகிறார். இதனால் உணவுத் தொழிலதிபர்களின் பகையைச் சம்பாதிக்கிறார். பள்ளி ஆசிரியையான ஜோதியின் (கேத்ரின் தெரசா) சேவை மனப்பான்மையால் ஈர்க்கப்படுகிறார். எந்த மணத்தையும் மோந்தறிய இயலாத தன் குறை காரணமாகத் திருமணத்தைத் தவிர்க்கிறார் ஜோதி. ஜெகன், ஜோதி திருமணம் நடந்ததா, ஜெகனின் தொழிற்பகையால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டதா போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது அருவம்.


கதையில் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளன. ஒன்று கலப்பட உணவுக்கு எதிராகச் செயல்படும் நேர்மையான அதிகாரி. இரண்டு, வாசம் என்றால் என்னவென்பதே தெரியாத பெண். இந்த இரண்டையும் பிணைத்து, சமூக அக்கறை, அமானுஷ்யம் ஆகியவற்றின் வழியே சொல்லப்பட்ட திரைக்கதை சுவாரசியமாக இல்லை. எந்த காட்சியும் ரசிகரை நிமிர்ந்து உட்காரவே விடவில்லை. உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக சித்தார்த் விரைந்து சென்று கடைகளுக்கும் நிறுவனங்களும் சீல் வைக்கும் காட்சிகள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கின்றன. ஆனாலும் அவை அளவுக்கு மீறிய விரைப்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அலுப்பு. இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேய் பழிவாங்கும் என்னும் கதையைப் படமாக்குவார்கள்?


சித்தார்த் உருவமாகவும் வருகிறார் அருவமாகவும் இருக்கிறார். இரண்டிலுமே ரசிகர்களைக் கவரும் வாய்ப்பு அமையவில்லை. கண்டிப்பான அதிகாரியாக அவர் காட்டும் மிடுக்கும் எல்லையைத் தாண்டிவிட்டதால் காமெடியாகிவிடுகிறது. கேத்ரின் தெரசா அழகாக இருக்கிறார். அவரை ஆக்‌ஷன் காட்சிகளில் பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது.

ஆடுகளம் நரேன், சதீஷ், இளங்கோ குமாரவேல் எனப் பல நடிகர்கள் இருந்தும் ஒரு காட்சியைக்கூட ரசிக்க முடியாதபடி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் சேகர். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பார்க்கும்படி இருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் அழுத்தமான இசை தருவதாக நினைத்து சத்தமான இசையைத் தந்திருக்கிறார். சரியான சவுண்ட் ம்யூசிக். படத்தில் ஓரிரு பாடல்களும் இருக்கின்றன.  


ஒரு படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் ரசிகர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்னும் அடிப்படைப் பாடத்தையே இயக்குநர் மறந்திருப்பார் போல. படத்தின் தொடக்கமே படு மந்தம். எல்லா அபத்தங்களையும் காட்சிகளாகக் காட்டிவிட்டு, வெறும் படம் என்று ஒரு காட்சி எடுத்துவிட்டால் அபத்தம் போய்விடும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். நல்ல விஷயங்களைச் சொல்லும் அக்கறை இருந்தால் மட்டும் போதாது அவற்றை ரசிக்கும்படியாக அழுத்தமாகச் சொல்லும் திறமையும் தேவை என்பதை இயக்குநர் அறிவது நல்லது.


அருவம் ஆச்சரியம்தராத வெறும் உருவம்.

ஞாயிறு, அக்டோபர் 06, 2019

அசுரன்: ஒடுக்கப்பட்டவர்களின் நாயகன்.


சிவசாமி (தனுஷ்) குடும்பத்தினரிடம் இருக்கும் சிறு நிலத்தைத் தன் தம்பி வெங்கடேசன் (பவன்) தொடங்கப்போகும் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சிவசாமியோ அது அவருடைய மனைவிக்கு அவளது அண்ணன் தந்த நிலம். அதை விற்க முடியாது என மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவசாமியின் மூத்த மகன் முருகனை ஆள்வைத்துக் கொன்றுவிடுகிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாம் மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) அதற்குப் பழிவாங்கும்வகையில் நரசிம்மனையே கொன்றுவிடுகிறான். பள்ளிச் சிறுவனான அவன் செய்த கொலையால் அவனை நரசிம்மன் குடும்பத்தினரிடமிருந்தும் போலீஸாரிடமிருந்தும் காப்பாற்றுவதற்காகக் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் சிவசாமி. அவர்கள் போலீசாரிடம் மாட்டினார்களா, காட்டுக்குள் சென்ற அவர்களது நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு விடைகளாக இருக்கிறது அசுரன்.  


எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிமாறனும் வெற்றிமாறனும் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். நாவலின் சில அம்சங்களைத் திரைப்படத்துக்காக மாற்றியுள்ளனர். திரைக்கதையில் பஞ்சமி நிலப் பிரச்சினை, ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை போன்ற அம்சங்களைச் சேர்த்து அதற்கு வேறு வண்ணம்பூசியுள்ளனர். திரைக்கதையை விறுவிறுப்பாகவே அமைத்துள்ளனர். வணிகநோக்கத்துடன் கதாநாயக அம்சம் தூக்கலாகத் தெரியும் வகையில் மூன்று சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  அது சற்று நெருடலாகவே உள்ளது. மற்றபடி திரைப்படம் ஒரு நாவலை வாசிப்பதுபோல் அடர்த்தியாகவே உள்ளது. 


தனுஷ் என்னும் நடிகரை நம்பியே இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தனுஷும் அதற்குத் தன்னுடைய முழு உழைப்பை வழங்கியுள்ளார். தொடக்கத்தில் தனுஷுக்குப் பொருந்தாததுபோல் தோன்றிய அந்தக் கதாபாத்திரத்துக்கு தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார். மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் ஓகே ஆனால் குரலில்தான் அந்நியத்தன்மை தென்படுகிறது.  பசுபதி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் என நடிகர்கள் எல்லோரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர். 

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக்காட்டைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறது. காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் வழியே கதாபாத்திரங்களின் மனநிலையைத் தத்ரூபமாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். 


அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு… காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூபா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது… போன்ற வசனங்களிலும் பெண் குழந்தையைத் தாய் என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்கவைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும் வெற்றிமாறனும்.

பாடல்களைவிடப் பின்னணியிசையில் ஜி.வி.பிரகாஷ்குமார் கவனத்தை ஈர்க்கிறார். அதிலும் அசுரன் தீம் ம்யூசிக்கில் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். கால கட்டத்தைச் சித்தரிப்பதில் கலை இயக்குநர் குறிப்பிடத்தக்கவகையில் பங்களித்துள்ளார். 


ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கியதில் இயக்குநர் வெற்றிமாறன் திறமையைக் காட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணிவதைக்கூட அனுமதிக்க முடியாமல் இருந்த காலநிலையையும் பெரிய மனிதர்களின் மனப்போக்கையும் அழுத்தமான காட்சிகளின் வழியே சித்தரித்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குக் கல்வி மட்டுமே உயர்வைத் தரும் என்பதை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். இதற்காகவெல்லாம் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், எண்பதுகள், அறுபதுகள் எனும் காலகட்டத்தை உணர்த்தும்போது சுவர் விளம்பரங்கள், பின்னணிப் பாடல்கள் போன்றவற்றையே தொடர்ந்து பயன்படுத்துவது அலுப்பு. ஒருவிதமான டெம்பிளேட் இயக்குநராகும் அபாயத்தின் விளிம்பில் நிற்கிறார் வெற்றிமாறன்.  

சனி, செப்டம்பர் 21, 2019

ஒத்த செருப்பு



மாசிலாமணி (பார்த்திபன்) ஒரு கொலை செய்ததாகக் கூறி காவல் துறையினர் அவரை ஒரு அறையில் இருத்தி விசாரணை நடத்துகிறார்கள். அரிதான உடல்நலப் பிரச்சினையால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கும் அபாயம் நிலையில் இருக்கும் மாசிலாமணியின் மகன் மகேஷையும் அழைத்துவந்துவிட்டார்கள். இந்த விசாரணை வழியே மாசிலாமணியின் குடும்பம், வாழ்க்கை என ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. தொடர்ந்து பல கொலைச் சம்பவங்கள் அரங்கேறியதாகத் தெரியவருகிறது. அந்தக் கொலைகளுக்கும் மாசிலாமணிக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்கிறது ஒத்த செருப்பு.

முழுக்க முழுக்க பார்த்திபனின் ராஜ்ஜியம்தான். அவருக்கு முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறது தொழில்நுட்பக் குழு. மாசிலாமணி ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத வகையிலேயே விசாரணைக்குப் பதில் அளிக்கிறார். ஆனால், அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கிறது. திரையில் பார்த்திபன் மட்டுமே தெரிகிறார். எஞ்சிய கதாபாத்திரங்களை நாம் குரல்வழியே தான் அடையாளம் காண முடிகிறது.

ஒரே அறை, ஒரே நடிகர் என்பதையெல்லாம் தாண்டி சுமார் இரண்டு மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடுகிறது திரைக்கதை. அழகான மனைவி, அன்பான குழந்தை, சிறிய குடும்பம் என்ற ஒரு கூட்டைக் கலைத்துவிடுகிறார்கள் மனிதர்கள் சிலர். அந்த மனிதர்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள். அவர்களுக்கு என்ன முடிவு ஏற்பட்டது என்பதையெல்லாம் தனி மனிதராக இருந்து திறமையான திரைக்கதை வழியே நல்ல திரைப்படமாக்கியிருக்கிறார் பார்த்திபன்.

இசை முக்கியப் பங்கை வகிக்கிறது. மாசிலாமணியின் தவிப்பையும் பாசத்தையும் காதலையும் காமத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்துவதில் பின்னணியிசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ரசூல் பூக்குட்டி படத்துக்குப் பெரிய அளவில் உதவியிருக்கிறார். படத்தின் பெரும்பான்மையான சம்பவங்கள் திரையில் நிகழாமல் நம் மனத்திரையிலேயே நிகழ்கின்றன. அதனால் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் புதுமையானது.

சமூகத்தில் நிலவும்பொருளாதாரரீதியான பாகுபாடுகள் காரணமாக ஒரு சிறிய குடும்பம் என்னவிதமான பாதிப்புகளைச் சந்திக்கிறது என்பதையே திரைக்கதை தனது மையமாகக் கொண்டிருக்கிறது. உணர்வுபூர்வமான திரைக்கதையை உருவாக்கியிருப்பதால் பார்வையாளர்களால் மாசிலாமணியின் விவரிப்பின் வழியே அவனுடைய வாழ்க்கையை முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது.



நடிகர்பார்த்திபனும் தனது பங்கை முழுமையாக உணர்ந்து திரைக்கதையாசியரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். சற்றே மனப் பிறழ்வுக்கு உள்ளானவர் போல் அவரது நடவடிக்கை காணப்பட்டாலும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறார். மனைவி உஷாவின் அழகை விவரிக்கும்போதும், உஷாவுக்கும் தனக்குமான காதல் உறவை எடுத்துச்சொல்லும்போதும் மாஞ்சா நூல் மூலம் கழுத்தை அறுத்ததாகச் சொல்லும்போதும் தான் ஒரு நல்ல நடிகர்தான் என்பதை நிரூபிக்க முயன்றிருக்கிறார். விசாரணையின் போது காவல்துறையினருக்குப் பதில் அளித்துக்கொண்டே தன் மகன் சாப்பிட்டானா, மருந்துகள் எடுத்துக்கொண்டானா என்பதை எல்லாம் விசாரித்து அறிந்துகொள்ளும் பாசமிக்கத் தந்தையாகவும் நடந்துகொள்கிறார். 

எதற்குமே பயன்படாத ஒத்த செருப்பைத் தனது புத்திசாலித்தனத்தால் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவுகிறார் மாசிலாமணி. சட்டம் ஏழைகளை ஒருவிதமாகவும் செல்வந்தர்களை ஒருவிதமாகவும் அணுகுவதைக் கேள்விகேட்கிறார்.சமகாலத்தொழில்நுட்ப வளர்ச்சி என்ன மாதிரியான தாக்கத்தை ஒரு சமூகத்தில் ஏற்படுத்துகிறது என்பதை அழகாகவும் நாசூக்காகவும் வெளிப்படுத்திவிடுகிறார் பார்த்திபன்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜிஒரே அறைக்குள் பல கோணங்கள் வழியே காட்சிப் படுத்தி படத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக அளித்துள்ளார். ‘இத்துப் போன உறவைவிட அத்துப் போன உறவே மேல்’ என்பது போன்ற பல வசனங்கள் நெகிழ்ச்சியைத் தருவதாக உள்ளன.  பார்த்திபனுக்கே உரிய நக்கல் நையாண்டி, நெகிழ்ச்சி நிறைந்த உரையாடல் படத்தைச் சுவாரசியமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது. கணவன் தரப்பில் எந்தத் தவறும் காட்டப்படாமல் மனைவி தரப்பையே முழுக் குற்றவாளியாக்கியது சற்று நெருடலாக இருக்கிறது. மற்றபடி தமிழ்த் திரைப்பட உலகில் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சி என்னும் வகையில் பெரிதாகக் கவர்கிறது இந்த ஒத்த செருப்பு.

சனி, செப்டம்பர் 14, 2019

அவர் ஒரு பொன்மாலைப் பொழுது

அஞ்சலி: (ராபர்ட்) ராஜசேகரன்

தொலைக்காட்சித் தொடரில் ராபர்ட் ராஜசேகரன்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்னும் செய்தி செப்டம்பர் 8 அன்று ஊடகங்களில் வெளியானது. அந்தச் செய்தியைக் கண்ட உடன், சிறுவயதில் பார்த்த, பெரிய வெற்றியைப் பெற்ற ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ (1987) என்னும் படம் நினைவில் வந்தது. அந்தப் படத்தை ராபர்ட்டுடன் இணைந்து ராஜசேகரன் இயக்கியிருந்தார்.

பதினோறாம் வகுப்பு தொடங்குவதற்கு முந்திய நாளில், குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சியிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்வேலிக்குச் சென்று ராயல் திரையரங்கில் வெளியாகியிருந்த அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போது, அந்தப் படத்தின் இயக்குநர் பெயரோ பிரபு என்னும் பெயரில் ‘நிழல்கள்’ (1980) படத்தில் ராஜசேகரன் நடிகராக அறிமுகமாகி யிருந்தார் என்பதோவெல்லாம் தெரியாது. பிரபு நடித்த படம் என்ற அளவிலேயே அது பதிந்திருந்தது.



காதலில் தோல்வியடைந்த டேவிட், காதலர்களான ராஜாவையும், ரேகாவையும் சேர்த்துவைப்பதுதான் கதை. ராஜாவாக அறிமுகமான ராம்கி தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்; ஆனால், ரேகாவாக அறிமுகமான நர்மதாவை அதன் பிறகு எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவிலில்லை. வில்லனாக நடித்திருந்த செந்தாமரை நீளமாக வளர்ந்திருக்கும் தனது கேராவை (கிருதாவை) அடிக்கடி கைகளால் அழுத்தமாகப் பிடித்துத் தடவிவிட்டுக்கொண்டேயிருப்பார். அது அந்தப் படத்தில் அவரது மேனரிஸம். சின்னி ஜெயந்த், குமரி முத்துசுதா சந்திரன், சபிதா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படத்தின் பாடல்களை எழுதி, இசையமைப்பாளராக அறிமுகமானார் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரது குரலில் ஒலித்த ‘ஏ புள்ள கருப்பாயி’ பாடலும்‘கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே’ பாடலும் அவரைக் கவனிக்கச் செய்தன. 

சமீபத்திய ஆண்டுகளில் வீட்டுக்கு வரும்போது, ராஜசேகரன், பாசமிகு அப்பாவாகத் தன் பிள்ளைகளிடம் இதமான குரலில், நெகிழ்வான அன்பில் பிரியத்தைக் கொட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கிறேன். இவற்றுக்கிடையே முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் ஓடிவிட்டன. 

தமிழ்த் திரைத்துறையில் நான்கு ராஜசேகர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பி.எஸ்சி. என்னும் பட்டத்தால் அறியப்படும் ராஜசேகர். ரஜினிகாந்தையும் கமல் ஹாசனையும் இயக்கியவர். ரஜினி நடித்த ‘தர்மதுரை’ படத்தின் நூறாம் நாளன்று மரணமடைந்தவர். மற்றொருவர் ‘டாக்டர்’ என்பதால் கவனிக்கப் பட்டவர். பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ணில் அறிமுகமானவர்; ‘இது தாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம்பெற்றவர். மூன்றாமவர் ‘பாரதி’ படத்தை இயக்கியவர், இந்திய ஆட்சிப்பணியில் இருந்து திரைப்படத் தணிக்கைத் துறையிலும் பங்களித்த ஞான.ராஜசேகரன். இறுதியானவர் (ராபர்ட்) ராஜசேகரன். இந்த ராஜசேகரனுக்குக் கவனம் தருவது அவரது பெயருடன் இணைந்திருந்த ராபர்ட் என்னும் அவரது நண்பரின் பெயர்.

பாலைவனச்சோலை


சென்னை தரமணியில் அமைந்திருக்கும் அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த இரட்டையரான ராபர்ட்டும் ராஜசேகரனும் இணைந்து பணியாற்றிய முதல் படம் ‘குடிசை’ (1979). ஜெயபாரதி இயக்கிய இந்தப் படத்தில் ராஜசேகர் ராபர்ட் என்னும் பெயரில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய படம் ‘ஒரு தலை ராகம்’ (1980). இந்தப் படத்திலிருந்து அவர்கள் பரவலாக ராபர்ட் ராஜசேகரன் என்றே அறியப்பட்டி ருக்கிறார்கள். ‘குடிசை’, ‘ஒரு தலை ராகம்’ இரண்டு படங்களிலுமே ஒளிப்பதிவாளர்கள் என்னும் பொறுப்பைத் தாண்டி படத்தின் உருவாக்கத்தில் பலவிதங்களில் உதவியிருக்கிறார்கள். சினிமா என்னும் கலையை நேசித்ததன் விளைவாகவே இது சாத்திய மாகியிருக்கிறது.

இருவரும் இணைந்து இயக்கிய முதல் படம் ‘பாலைவனச்சோலை’ (1981). நாலைந்து ஆண் நண்பர்கள், அவர்களுடன் வந்துசேரும் ஒரு பெண் கதாபாத்திரம் என்னும் ஒரு போக்கைத் தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் இது. தெருவோரப் பையன்கள் என்னும் ஓர் அம்சத்தையும் இந்தப் படம்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறது. ‘அந்தி மழை’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் ராஜசேகரனே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எழுபதுகளில் எழுந்துவந்த புதிய அலையின் தொடர்ச்சியாக மலர்ந்த திரைப்படம் இது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை இருவரும் சேர்ந்து மேற்கொண்டிருந்தாலும் கதையை ராஜசேகரனே எழுதியிருக்கிறார்.

மனசுக்குள் மத்தாப்பு


இந்தப் படத்தின் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’, ‘மேகமே மேகமே’ போன்ற வைரமுத்துவின் வரிகளில் சங்கர் கணேஷ் இசையில் மலர்ந்த பாடல்கள் இன்றைக்கும் பாலைவன மனங்களில் சோலையைக் கொண்டுவருபவை. ‘ஒன் ஃப்ளு ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்’ என்னும் அமெரிக்கப் படத்தின் தழுவலில் உருவாக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் ‘தாளவட்டம்’. பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தைத் தமிழில் ‘மனசுக்குள் மத்தாப்பு’ (1988) என்னும் பெயரில் ராபர்ட் ராஜசேகரன் இயக்கினர். இந்தப் படம் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தை நினைவூட்டக்கூடிய  கதையமைப்பைக் கொண்டது. 

இந்தப் படத்தில் டாக்டர் கீதா என்னும் வேடத்தில் நடிக்க வந்தார் சரண்யா. மனோதத்துவ நிபுணராக வேடமேற்றிருந்த சரண்யா படத்தில் தன் காதலி மறைவால் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபுவைக் குணப்படுத்துவார்; அதே நேரத்தில் பிரபுவுக்கும் சரண்யாவுக்கும் காதல் மலர்ந்திருக்கும். படத்தின் கதை இப்படிப் போகும்.

நிஜத்தில் பின்னர் ராஜசேகரன் சரண்யாவை மணந்துகொண்டார். ஆனால், அந்த மண வாழ்வு நீடிக்கவில்லை; மண முறிவு ஏற்பட்டிருக்கிறது. சரண்யாவை விட்டுப் பிரிந்துவிட்டார். ‘தாரா’ என்பவரை மணந்துகொண்ட ராஜசேகரன் இறக்கும்வரை அவருட னேயே வாழ்வைக் கழித்திருக்கிறார். திருமணமே செய்துகொள்ளாத ராபர்ட் 2018-ல் மரணமடைந்தார்.

நிழல்கள் 


புது இயக்குநர்களும் பெரும் இயக்குநர்களும் இளையராஜா வின் இசையை நம்பிய காலத்தில் இவர்கள் தங்களது படங்களுக்கு இளையராஜாவைப் பயன்படுத்திய தாகத் தெரியவில்லை. தொடக்க காலத்தில் சங்கர் கணேஷையும் பின்னர் எஸ்.ஏ.ராஜ்குமாரையுமே இசையமைப்பாளர்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அநேகமாக அனைத்துப் படங்களிலும் வசனத்தை என். பிரசன்ன குமார் எழுதியிருக்கிறார். மிகத் திறமையான வசனகர்த்தாவாக அறியப்பட்டிருந்த பிரசன்ன குமார் 2008இல் தனது 49ஆம் வயதில் காலமானார். இவரது மரணம் அதிர்ச்சியைத் தந்ததொரு மரணமே. 

சர்வதேசத் திரைப்பட தரவுத் தளமான ஐ.எம்.டி.பியில் ராஜசேகர் B.Sc., ராபர்ட் ராஜசேகரன் இவர்களை இருவரையும் குழப்பிக்கொண்டு அவர்கள் இயக்கிய, ஒளிப்பதிவு செய்த படங்களின் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ராஜசேகரனுக்கென்று விக்கி பீடியாவில் கூட ஒரு பக்கம் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திரைத் துறையை ஆத்மார்த்தமாக நேசித்துத் தன் வாழ்நாளை அதிலேயே செலவிட்ட மனிதர்களுக்கு இத்தகைய விபத்து நேர்வது பெரும் சோகம்தான். ஆனாலும், இங்கே இதுதான் யதார்த்தம். கலை எத்தனையோ கலைஞர்களின் உயிரைக் குடித்துதான் தனது ஜீவனைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பது யதார்த்தத்தின் குரூரம்.

இந்து தமிழ் திசை நாளிதழில் 13.09.2019 அன்று வெளியானது. 


ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மகாமுனி: உலகத் தரத்துக்கு ஆசைப்படும் உள்ளூர் சினிமா


தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக இருக்கும் மகாதேவன் (ஆர்யா). வண்ணமயமான வாழ்க்கை வாழ ஆசைப்படும் இளம் மனைவி விஜி (இந்துஜா), மகன் பிரபாவுடன் சராசரியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். முத்துராஜ் (இளவரசு) என்னும் உள்ளூர் அரசியல்வாதிக்காகச் சில அடிதடி, கொலை போன்றவற்றுக்கான திட்டம் போட்டுக் கொடுக்கிறார். அதில் ஏற்பட்ட பகை காரணமாக மகாவையும் எதிரிகள் கொல்லத் துடிக்கின்றனர்.

ஈரோடு அருகே கிராமம் ஒன்றில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டபடி குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கான கல்வியைக் கற்றுக்கொடுத்துவருகிறார் ஒடுக்கப்பட்ட சமூகத் தாய் வளர்க்கும் முனிராஜ் (ஆர்யா). பிரம்மச்சாரியாகவே வாழ்க்கையை நகர்த்தும் முனிராஜின் வாழ்வில் குறுக்கிடுகிறார் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த தீபா (மஹிமா நம்பியார்). இதை விரும்பாத தீபாவுடைய தந்தை ஜெயராம் (ஜெயபிரகாஷ்) முனியைக் கொல்ல நினைக்கிறார்.

மகா, முனி இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதே மகாமுனியாக விரிகிறது.


மௌன குரு படத்தின் மூலம் கவனம் பெற்ற சாந்தகுமார் சமகால அரசியல், சாதிய ஒடுக்குமுறை போன்ற விஷயங்களின் வழியே திரில்லர் படமொன்றையே மறுபடியும் தந்திருக்கிறார். வழக்கமான வன்முறைப் படங்களுக்கான திரைமொழியைத் தவிர்த்துருப்பதால் படம் கவனிக்கவைக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஜானி போன்ற ஒரு தன்மையுடன் படம் நகர்கிறது. மிக நிதானமாகவே காட்சிகள் நகர்கின்றன. ஒருவிதமான தீவிரமான கதை சொல்லல் பாணியிலேயே திரைக்கதை அமைந்துள்ளது. சமகால அரசியலை ஒரு சரடாகவும், சமகால சமூகத்தின் சாதியப் பார்வையை மற்றொரு சரடாகவும் பிணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.   

படத்தின் தொடக்கத்தில் மனநிலைக் காப்பகத்தில் காணப்படும் ஆர்யா தொடர்பான காட்சிகள் படத்தைக் குறித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் தொடர்ந்துவரும் காட்சிகள் பெரிதாகக் கவராமல் மந்த கதியில் நகர்கின்றன. ஓரளவு படம் நம்மைப் பிடித்து இருத்துவதற்கே முக்கால் மணி நேரம்வரை ஆகிவிடுகிறது. தெருமுனை திருமூர்த்தி கதையில் திருப்பமான கதாபாத்திரம் என்றபோதும் அவர் தொடர்பான மேடைப் பேச்சு காட்சி சுவாரசியமற்று உள்ளது.

ஆர்யாவுக்குச் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம். மகாவானாலும் சரி, முனியானாலும் சரி இரண்டிலுமே அவசியமான உடல்மொழியுடன் மென்மையான குரலில் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


முத்துராஜின் மனைவி மிகையாக நடித்திருக்கிறார். மகாவின் மனைவியான விஜியாக வரும் இந்துஜா நடிப்பில் ஒரு செயற்கைத் தனம் தென்படுகிறது. முனியை விரும்பும் தீபாவான மஹிமா நம்பியார் பத்திரிகையாளர், ஆதிக்க சாதியில் பிறந்தபோதும் ஆதிக்கத்தை வெறுப்பது போன்றவற்றை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தை மீது கொண்ட கோபத்தில் அவருக்கு வேலையாள் எடுத்துச் செல்லும் மதுவைப் பிடிங்கிப் படபடவெனக் குடித்துவிட்டு பாட்டிலைப் போட்டு உடைத்துவிட்டுப் பேசும் அழகு தமிழுக்குப் புதிது.

மேடையில் தாறுமாறாகப் பேசும் திருமூர்த்தியை அழைத்துவரச் செய்து துடைப்பத்தால் சாத்தும் காட்சியும் நன்றாக இருக்கிறது. திருமூர்த்தியைக் கொல்லும் முடிவால் படத்தில் திரைக்கதையின் பாதை மாறுகிறது. மகாவின் அளவுக்கு மீறிய பணிவு இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.

படத்தில் பல இடங்களில் லாஜிக் மீறல்கள் சரமாரியாகத் தென்படுகின்றன. உதாரணத்துக்கு, கத்தியால் அவ்வளவு ஆழமாகக் குத்துப்பட்ட மகா ஏதோ முள் குத்தியைப் போல் அதைப் பிடுங்கிவிட்டு இயல்பாக நகர்வதை நம்ப முடியவில்லை. வன்முறை தொடர்பான படம் என்றபோதும் முடிந்தவரை திரையில் வன்முறைத் தவிர்த்திருப்பது நன்று. சாதிய ஆணவக் கொலை முயற்சிக்கு விஷப் பாம்பைப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. கத்தியால் குத்துவது, துப்பாக்கியால் சுடுவது போன்றவற்றில் இல்லாத ஒரு மென்மைத் தன்மை பாம்பின் விஷத்தில் இருக்கிறது. சாதியம் உதிரத்தில் விஷம் போல் பரவும் என்பதைக் குறிப்பதுபோலும் உள்ளது.


அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு, எஸ்.தமனின் இசை, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு ஆகியவை படத்துக்கு உறுதுணை புரிந்திருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மௌனகுருவில் கைவப்பட்டிருந்த நேர்த்தி மகாமுனியில் தவறியிருக்கிறது. ஹாலிவுட் கிளாஸிக் தன்மையில் படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் சாந்தகுமார் ஆனால், அவர் நினைத்த உயரத்தைப் படம் தொட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்துடன் வரும்போது அது முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருந்திருந்தால் மகாமுனியைக் கொண்டாடியிருக்கலாம்.

திங்கள், ஆகஸ்ட் 26, 2019

பக்ரீத்: முழுமை பெறா பிரியாணி


அண்ணன் தம்பிகளுக்கிடையேயான வழக்கில் ஏழு ஆண்டுகள் நீதிமன்ற அலைச்சலுக்குப் பிறகு ரத்தினத்தின் பாகமான நிலம் அவன் கைக்கு வருகிறது. கையிலிருந்த பணமெல்லாம் வழக்கில் காலியாகிவிட விவசாயம் செய்ய வங்கிக் கடனுக்காக அலைகிறான் அவன். அந்த முயற்சியில் ரத்தினத்திடம் ஒட்டகக் குட்டி ஒன்று வந்து சேர்கிறது. அதன் பின்னர் ரத்தினத்தின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களே பக்ரீத்.
விலங்குகள், தாவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினராகக் கருதி அன்பு காட்டுகிறது ரத்தினத்தின் குடும்பம். பக்ரீத் பண்டிகைக்கான ஒட்டகத்துடன் வந்து சேர்ந்த குட்டி ஒட்டகத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இரும்புக் கடை பாய் தவிக்கிறார். சட்டென்று அதைத் தான் கொண்டுபோய் வளர்ப்பதாகச் சொல்கிறார் ரத்தினம்.  அதற்கான காரணம் வலுவாக இல்லை. ஆனால், அந்தக்  குடும்பத்தில் ஒட்டகக் குட்டி அடியெடுத்துவைத்த பின்னர் அது அவர்களுக்குப் பல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. சாரா எனப் பெயர்வைத்து அதன் மீது பிரியம் காட்டுகிறார்கள்.  

பிரியத்துடன் வளர்க்கும் சாராவுக்கு உடல்நலமில்லாமல் போனவுடன் மருத்துவரை அழைத்துவருகிறார் ரத்தினம். அதற்கு சிகிச்சையளித்த மருத்துவர் அது வாழும் இடத்தில் அது இருப்பது தான் அதற்கு நல்லது. இங்கிருந்தால் அது இறந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறார். ஆகவே அதை ராஜஸ்தானில் கொண்டுபோய் விட முடிவுசெய்கிறார் ரத்தினம். இந்தப் பயணம்தான் படத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது. அதன் மூலம் வாழ்க்கை குறித்த அனுபவப் பாடத்தைச் சொல்ல ஏராளமான வாய்ப்புள்ள திரைக்கதை. ஆனால், அதைச் சொன்னவிதத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. என்பது படத்தின் சறுக்கல்.
விக்ராந்த்துக்குப் பெயர் பெற்றுத் தரும் பாத்திரம். மிகவும் தணிவான, கனிவான குரலிலேயே பேசுகிறார். குழந்தை வாசுகி (ஷ்ருத்திகா) ஆசையுடன் கேட்கும் லேஸ் சிப்ஸை வாங்கித் தந்தும் அதைத் தின்னவிடாமல் அழகாக ஏமாற்றும் தன்மை ரசிக்கவைக்கிறது. தான் ஆசையாக வளர்த்த ஒட்டகம் காணாமல் போய்விட்ட காட்சியில் வெளிப்படும் அவரது பதற்றம் மஜித் மஜிதியின் ‘த சாங் ஆஃப் ஸ்பேரோஸ்’ படத்தில் நெருப்புக் கோழியைத் தேடி அலையும் கரீமை நினைவூட்டுகிறது. ஆனால், ரத்தினத்தின் பதற்றத்துக்கான காரணம் அவ்வளவு வலுவாக இல்லை என்பதால். இது போலச் செய்தல் ரகத்தில் அடங்கிவிடுகிறது.
ரத்தினத்தின் மனைவி கீதா (வசுந்தரா) முகம் கோணாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்; முகம் மலரச் சிரிக்கிறார். தனக்கான வேடத்தை ஒழுங்காகச் செய்திருக்கிறார். குழந்தையான ஷ்ருத்திகாவும் மனம் கவர்கிறார்.  மாடுகளுக்கு நண்பர்களின் பெயரை வைத்து மகிழ்கிறார்.
ரத்தினத்தின் நண்பனான சுந்தரம், இரும்புக் கடை பாய், லாரி டிரைவர், வெளிநாட்டுப் பயணி எனப் பல துணைக் கதாபாத்திரங்கள் படத்தை உணர்வுபூர்வமானதாக்குவதில் உறுதுணைபுரிந்திருக்கின்றன.
தொடர்ந்து இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துவந்த தமிழ்ப் பட போக்கிலிருந்து விலகி அவர்களைச் சராசரி மனிதர்களாக நல்லுணர்வு கொண்டவர்களாகச் சித்திரித்திருக்கும் போக்கு வரவேற்கத்தக்கது.  
விவசாயக் கிராமம் என்றவுடன் மதுரை, நெல்லை, தஞ்சை எனச் செல்லாமல் சென்னைக்கு அருகில் சோழவரம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தவிதம் ரசிக்கைவைக்கிறது. ஒட்டகம் என்னும் விலங்கு கதையில் கவர்கிறது. ஆனால், அதை ஒரு சாதாரண ஆடு, மாடு போன்றே பயன்படுத்தியிருக்கும் விதம் ஈர்க்கவைக்கவில்லை. மாடு பழகிய தடத்திலேயே திரும்ப வரும். ஒட்டகம் அப்படி வருமா என்ன?
ஆலங்குருவிகளா, கரடு முரடு பூவே போன்ற பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணியிசை சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். பச்சைப் பசேலென்ற வயல் காட்சிகள் ராஜஸ்தான் மணல் காட்சிகள் என வடக்கையும் தெற்கையும் இணைத்துத் தந்திருக்கிறது ஒளிப்பதிவு. ஒட்டகம் என்பது புதுக் களம் ஆனால், பக்ரீத் நேரத்தில் ஒட்டகம் எதற்குப் பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு தொலைவு கொண்டுசேர்த்து அது பக்ரீத்துக்குப் பலியாகப் போகிறதே என்ற ரத்தினத்தின் பதற்றம் மிகையாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேயப் படத்தைத் தந்ததில் ஜெகதீசன் சுபு கவர்கிறார்; ஆனால் அது முழுமையாக அமையாமல் குறைப்பட்டுப்போனதில் சறுக்குகிறார்.

லேட்டஸ்ட்

ரஜினியாவாரா விஜய்?

தொடர்பவர்