அண்ணன் தம்பிகளுக்கிடையேயான வழக்கில் ஏழு ஆண்டுகள் நீதிமன்ற அலைச்சலுக்குப் பிறகு ரத்தினத்தின் பாகமான நிலம் அவன் கைக்கு வருகிறது. கையிலிருந்த பணமெல்லாம் வழக்கில் காலியாகிவிட விவசாயம் செய்ய வங்கிக் கடனுக்காக அலைகிறான் அவன். அந்த முயற்சியில் ரத்தினத்திடம் ஒட்டகக் குட்டி ஒன்று வந்து சேர்கிறது. அதன் பின்னர் ரத்தினத்தின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களே பக்ரீத்.
விலங்குகள், தாவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினராகக் கருதி அன்பு காட்டுகிறது ரத்தினத்தின் குடும்பம். பக்ரீத் பண்டிகைக்கான ஒட்டகத்துடன் வந்து சேர்ந்த குட்டி ஒட்டகத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இரும்புக் கடை பாய் தவிக்கிறார். சட்டென்று அதைத் தான் கொண்டுபோய் வளர்ப்பதாகச் சொல்கிறார் ரத்தினம். அதற்கான காரணம் வலுவாக இல்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் ஒட்டகக் குட்டி அடியெடுத்துவைத்த பின்னர் அது அவர்களுக்குப் பல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. சாரா எனப் பெயர்வைத்து அதன் மீது பிரியம் காட்டுகிறார்கள்.
பிரியத்துடன் வளர்க்கும் சாராவுக்கு உடல்நலமில்லாமல் போனவுடன் மருத்துவரை அழைத்துவருகிறார் ரத்தினம். அதற்கு சிகிச்சையளித்த மருத்துவர் அது வாழும் இடத்தில் அது இருப்பது தான் அதற்கு நல்லது. இங்கிருந்தால் அது இறந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறார். ஆகவே அதை ராஜஸ்தானில் கொண்டுபோய் விட முடிவுசெய்கிறார் ரத்தினம். இந்தப் பயணம்தான் படத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது. அதன் மூலம் வாழ்க்கை குறித்த அனுபவப் பாடத்தைச் சொல்ல ஏராளமான வாய்ப்புள்ள திரைக்கதை. ஆனால், அதைச் சொன்னவிதத்தில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. என்பது படத்தின் சறுக்கல்.
விக்ராந்த்துக்குப் பெயர் பெற்றுத் தரும் பாத்திரம். மிகவும் தணிவான, கனிவான குரலிலேயே பேசுகிறார். குழந்தை வாசுகி (ஷ்ருத்திகா) ஆசையுடன் கேட்கும் லேஸ் சிப்ஸை வாங்கித் தந்தும் அதைத் தின்னவிடாமல் அழகாக ஏமாற்றும் தன்மை ரசிக்கவைக்கிறது. தான் ஆசையாக வளர்த்த ஒட்டகம் காணாமல் போய்விட்ட காட்சியில் வெளிப்படும் அவரது பதற்றம் மஜித் மஜிதியின் ‘த சாங் ஆஃப் ஸ்பேரோஸ்’ படத்தில் நெருப்புக் கோழியைத் தேடி அலையும் கரீமை நினைவூட்டுகிறது. ஆனால், ரத்தினத்தின் பதற்றத்துக்கான காரணம் அவ்வளவு வலுவாக இல்லை என்பதால். இது போலச் செய்தல் ரகத்தில் அடங்கிவிடுகிறது.
ரத்தினத்தின் மனைவி கீதா (வசுந்தரா) முகம் கோணாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்; முகம் மலரச் சிரிக்கிறார். தனக்கான வேடத்தை ஒழுங்காகச் செய்திருக்கிறார். குழந்தையான ஷ்ருத்திகாவும் மனம் கவர்கிறார். மாடுகளுக்கு நண்பர்களின் பெயரை வைத்து மகிழ்கிறார்.
ரத்தினத்தின் நண்பனான சுந்தரம், இரும்புக் கடை பாய், லாரி டிரைவர், வெளிநாட்டுப் பயணி எனப் பல துணைக் கதாபாத்திரங்கள் படத்தை உணர்வுபூர்வமானதாக்குவதில் உறுதுணைபுரிந்திருக்கின்றன.
தொடர்ந்து இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துவந்த தமிழ்ப் பட போக்கிலிருந்து விலகி அவர்களைச் சராசரி மனிதர்களாக நல்லுணர்வு கொண்டவர்களாகச் சித்திரித்திருக்கும் போக்கு வரவேற்கத்தக்கது.
விவசாயக் கிராமம் என்றவுடன் மதுரை, நெல்லை, தஞ்சை எனச் செல்லாமல் சென்னைக்கு அருகில் சோழவரம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தவிதம் ரசிக்கைவைக்கிறது. ஒட்டகம் என்னும் விலங்கு கதையில் கவர்கிறது. ஆனால், அதை ஒரு சாதாரண ஆடு, மாடு போன்றே பயன்படுத்தியிருக்கும் விதம் ஈர்க்கவைக்கவில்லை. மாடு பழகிய தடத்திலேயே திரும்ப வரும். ஒட்டகம் அப்படி வருமா என்ன?
ஆலங்குருவிகளா, கரடு முரடு பூவே போன்ற பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணியிசை சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். பச்சைப் பசேலென்ற வயல் காட்சிகள் ராஜஸ்தான் மணல் காட்சிகள் என வடக்கையும் தெற்கையும் இணைத்துத் தந்திருக்கிறது ஒளிப்பதிவு. ஒட்டகம் என்பது புதுக் களம் ஆனால், பக்ரீத் நேரத்தில் ஒட்டகம் எதற்குப் பயன்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வளவு தொலைவு கொண்டுசேர்த்து அது பக்ரீத்துக்குப் பலியாகப் போகிறதே என்ற ரத்தினத்தின் பதற்றம் மிகையாகத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஒரு மனிதநேயப் படத்தைத் தந்ததில் ஜெகதீசன் சுபு கவர்கிறார்; ஆனால் அது முழுமையாக அமையாமல் குறைப்பட்டுப்போனதில் சறுக்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக