இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, அக்டோபர் 13, 2019

உண்ணாதீங்க உயிர் போயிடும்!




உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெகன் (சித்தார்த்) கலப்படம் இல்லாத உணவை வழங்குவதே தன் கனவு என்ற லட்சியத்துடன் பணியில் செயல்படுகிறார். உணவுப் பொருளை மோப்பம் பிடித்தே கலப்படம் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அவர் கலப்பட உணவுப் பொருள்கள் தொடர்பான எல்லா இடங்களையும் சீல் வைத்துப் பூட்டுகிறார். இதனால் உணவுத் தொழிலதிபர்களின் பகையைச் சம்பாதிக்கிறார். பள்ளி ஆசிரியையான ஜோதியின் (கேத்ரின் தெரசா) சேவை மனப்பான்மையால் ஈர்க்கப்படுகிறார். எந்த மணத்தையும் மோந்தறிய இயலாத தன் குறை காரணமாகத் திருமணத்தைத் தவிர்க்கிறார் ஜோதி. ஜெகன், ஜோதி திருமணம் நடந்ததா, ஜெகனின் தொழிற்பகையால் அவருக்கு ஆபத்து ஏற்பட்டதா போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது அருவம்.


கதையில் இரண்டு நல்ல விஷயங்கள் உள்ளன. ஒன்று கலப்பட உணவுக்கு எதிராகச் செயல்படும் நேர்மையான அதிகாரி. இரண்டு, வாசம் என்றால் என்னவென்பதே தெரியாத பெண். இந்த இரண்டையும் பிணைத்து, சமூக அக்கறை, அமானுஷ்யம் ஆகியவற்றின் வழியே சொல்லப்பட்ட திரைக்கதை சுவாரசியமாக இல்லை. எந்த காட்சியும் ரசிகரை நிமிர்ந்து உட்காரவே விடவில்லை. உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக சித்தார்த் விரைந்து சென்று கடைகளுக்கும் நிறுவனங்களும் சீல் வைக்கும் காட்சிகள் மட்டுமே விறுவிறுப்பாக இருக்கின்றன. ஆனாலும் அவை அளவுக்கு மீறிய விரைப்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது அலுப்பு. இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேய் பழிவாங்கும் என்னும் கதையைப் படமாக்குவார்கள்?


சித்தார்த் உருவமாகவும் வருகிறார் அருவமாகவும் இருக்கிறார். இரண்டிலுமே ரசிகர்களைக் கவரும் வாய்ப்பு அமையவில்லை. கண்டிப்பான அதிகாரியாக அவர் காட்டும் மிடுக்கும் எல்லையைத் தாண்டிவிட்டதால் காமெடியாகிவிடுகிறது. கேத்ரின் தெரசா அழகாக இருக்கிறார். அவரை ஆக்‌ஷன் காட்சிகளில் பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது.

ஆடுகளம் நரேன், சதீஷ், இளங்கோ குமாரவேல் எனப் பல நடிகர்கள் இருந்தும் ஒரு காட்சியைக்கூட ரசிக்க முடியாதபடி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் சேகர். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பார்க்கும்படி இருக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் அழுத்தமான இசை தருவதாக நினைத்து சத்தமான இசையைத் தந்திருக்கிறார். சரியான சவுண்ட் ம்யூசிக். படத்தில் ஓரிரு பாடல்களும் இருக்கின்றன.  


ஒரு படத்தின் முதல் பத்து நிமிடங்களுக்குள் ரசிகர்களைக் கவர்ந்துவிட வேண்டும் என்னும் அடிப்படைப் பாடத்தையே இயக்குநர் மறந்திருப்பார் போல. படத்தின் தொடக்கமே படு மந்தம். எல்லா அபத்தங்களையும் காட்சிகளாகக் காட்டிவிட்டு, வெறும் படம் என்று ஒரு காட்சி எடுத்துவிட்டால் அபத்தம் போய்விடும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். நல்ல விஷயங்களைச் சொல்லும் அக்கறை இருந்தால் மட்டும் போதாது அவற்றை ரசிக்கும்படியாக அழுத்தமாகச் சொல்லும் திறமையும் தேவை என்பதை இயக்குநர் அறிவது நல்லது.


அருவம் ஆச்சரியம்தராத வெறும் உருவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக