இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 14, 2019

அவர் ஒரு பொன்மாலைப் பொழுது

அஞ்சலி: (ராபர்ட்) ராஜசேகரன்

தொலைக்காட்சித் தொடரில் ராபர்ட் ராஜசேகரன்
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்னும் செய்தி செப்டம்பர் 8 அன்று ஊடகங்களில் வெளியானது. அந்தச் செய்தியைக் கண்ட உடன், சிறுவயதில் பார்த்த, பெரிய வெற்றியைப் பெற்ற ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ (1987) என்னும் படம் நினைவில் வந்தது. அந்தப் படத்தை ராபர்ட்டுடன் இணைந்து ராஜசேகரன் இயக்கியிருந்தார்.

பதினோறாம் வகுப்பு தொடங்குவதற்கு முந்திய நாளில், குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சியிலிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநெல்வேலிக்குச் சென்று ராயல் திரையரங்கில் வெளியாகியிருந்த அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போது, அந்தப் படத்தின் இயக்குநர் பெயரோ பிரபு என்னும் பெயரில் ‘நிழல்கள்’ (1980) படத்தில் ராஜசேகரன் நடிகராக அறிமுகமாகி யிருந்தார் என்பதோவெல்லாம் தெரியாது. பிரபு நடித்த படம் என்ற அளவிலேயே அது பதிந்திருந்தது.



காதலில் தோல்வியடைந்த டேவிட், காதலர்களான ராஜாவையும், ரேகாவையும் சேர்த்துவைப்பதுதான் கதை. ராஜாவாக அறிமுகமான ராம்கி தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்; ஆனால், ரேகாவாக அறிமுகமான நர்மதாவை அதன் பிறகு எந்தப் படத்திலும் பார்த்ததாக நினைவிலில்லை. வில்லனாக நடித்திருந்த செந்தாமரை நீளமாக வளர்ந்திருக்கும் தனது கேராவை (கிருதாவை) அடிக்கடி கைகளால் அழுத்தமாகப் பிடித்துத் தடவிவிட்டுக்கொண்டேயிருப்பார். அது அந்தப் படத்தில் அவரது மேனரிஸம். சின்னி ஜெயந்த், குமரி முத்துசுதா சந்திரன், சபிதா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படத்தின் பாடல்களை எழுதி, இசையமைப்பாளராக அறிமுகமானார் எஸ்.ஏ.ராஜ்குமார். அவரது குரலில் ஒலித்த ‘ஏ புள்ள கருப்பாயி’ பாடலும்‘கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே’ பாடலும் அவரைக் கவனிக்கச் செய்தன. 

சமீபத்திய ஆண்டுகளில் வீட்டுக்கு வரும்போது, ராஜசேகரன், பாசமிகு அப்பாவாகத் தன் பிள்ளைகளிடம் இதமான குரலில், நெகிழ்வான அன்பில் பிரியத்தைக் கொட்டிக்கொண்டிருக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கிறேன். இவற்றுக்கிடையே முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் ஓடிவிட்டன. 

தமிழ்த் திரைத்துறையில் நான்கு ராஜசேகர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் பி.எஸ்சி. என்னும் பட்டத்தால் அறியப்படும் ராஜசேகர். ரஜினிகாந்தையும் கமல் ஹாசனையும் இயக்கியவர். ரஜினி நடித்த ‘தர்மதுரை’ படத்தின் நூறாம் நாளன்று மரணமடைந்தவர். மற்றொருவர் ‘டாக்டர்’ என்பதால் கவனிக்கப் பட்டவர். பாரதிராஜாவின் ‘புதுமைப்பெண்’ணில் அறிமுகமானவர்; ‘இது தாண்டா போலீஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம்பெற்றவர். மூன்றாமவர் ‘பாரதி’ படத்தை இயக்கியவர், இந்திய ஆட்சிப்பணியில் இருந்து திரைப்படத் தணிக்கைத் துறையிலும் பங்களித்த ஞான.ராஜசேகரன். இறுதியானவர் (ராபர்ட்) ராஜசேகரன். இந்த ராஜசேகரனுக்குக் கவனம் தருவது அவரது பெயருடன் இணைந்திருந்த ராபர்ட் என்னும் அவரது நண்பரின் பெயர்.

பாலைவனச்சோலை


சென்னை தரமணியில் அமைந்திருக்கும் அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த இரட்டையரான ராபர்ட்டும் ராஜசேகரனும் இணைந்து பணியாற்றிய முதல் படம் ‘குடிசை’ (1979). ஜெயபாரதி இயக்கிய இந்தப் படத்தில் ராஜசேகர் ராபர்ட் என்னும் பெயரில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றிய படம் ‘ஒரு தலை ராகம்’ (1980). இந்தப் படத்திலிருந்து அவர்கள் பரவலாக ராபர்ட் ராஜசேகரன் என்றே அறியப்பட்டி ருக்கிறார்கள். ‘குடிசை’, ‘ஒரு தலை ராகம்’ இரண்டு படங்களிலுமே ஒளிப்பதிவாளர்கள் என்னும் பொறுப்பைத் தாண்டி படத்தின் உருவாக்கத்தில் பலவிதங்களில் உதவியிருக்கிறார்கள். சினிமா என்னும் கலையை நேசித்ததன் விளைவாகவே இது சாத்திய மாகியிருக்கிறது.

இருவரும் இணைந்து இயக்கிய முதல் படம் ‘பாலைவனச்சோலை’ (1981). நாலைந்து ஆண் நண்பர்கள், அவர்களுடன் வந்துசேரும் ஒரு பெண் கதாபாத்திரம் என்னும் ஒரு போக்கைத் தமிழ்த் திரைக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் இது. தெருவோரப் பையன்கள் என்னும் ஓர் அம்சத்தையும் இந்தப் படம்தான் அறிமுகம் செய்துவைத்திருக்கிறது. ‘அந்தி மழை’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் ராஜசேகரனே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். எழுபதுகளில் எழுந்துவந்த புதிய அலையின் தொடர்ச்சியாக மலர்ந்த திரைப்படம் இது. திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகியவற்றை இருவரும் சேர்ந்து மேற்கொண்டிருந்தாலும் கதையை ராஜசேகரனே எழுதியிருக்கிறார்.

மனசுக்குள் மத்தாப்பு


இந்தப் படத்தின் ‘ஆளானாலும் ஆளு இவ அழுத்தமான ஆளு’, ‘மேகமே மேகமே’ போன்ற வைரமுத்துவின் வரிகளில் சங்கர் கணேஷ் இசையில் மலர்ந்த பாடல்கள் இன்றைக்கும் பாலைவன மனங்களில் சோலையைக் கொண்டுவருபவை. ‘ஒன் ஃப்ளு ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட்’ என்னும் அமெரிக்கப் படத்தின் தழுவலில் உருவாக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் ‘தாளவட்டம்’. பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தைத் தமிழில் ‘மனசுக்குள் மத்தாப்பு’ (1988) என்னும் பெயரில் ராபர்ட் ராஜசேகரன் இயக்கினர். இந்தப் படம் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தை நினைவூட்டக்கூடிய  கதையமைப்பைக் கொண்டது. 

இந்தப் படத்தில் டாக்டர் கீதா என்னும் வேடத்தில் நடிக்க வந்தார் சரண்யா. மனோதத்துவ நிபுணராக வேடமேற்றிருந்த சரண்யா படத்தில் தன் காதலி மறைவால் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபுவைக் குணப்படுத்துவார்; அதே நேரத்தில் பிரபுவுக்கும் சரண்யாவுக்கும் காதல் மலர்ந்திருக்கும். படத்தின் கதை இப்படிப் போகும்.

நிஜத்தில் பின்னர் ராஜசேகரன் சரண்யாவை மணந்துகொண்டார். ஆனால், அந்த மண வாழ்வு நீடிக்கவில்லை; மண முறிவு ஏற்பட்டிருக்கிறது. சரண்யாவை விட்டுப் பிரிந்துவிட்டார். ‘தாரா’ என்பவரை மணந்துகொண்ட ராஜசேகரன் இறக்கும்வரை அவருட னேயே வாழ்வைக் கழித்திருக்கிறார். திருமணமே செய்துகொள்ளாத ராபர்ட் 2018-ல் மரணமடைந்தார்.

நிழல்கள் 


புது இயக்குநர்களும் பெரும் இயக்குநர்களும் இளையராஜா வின் இசையை நம்பிய காலத்தில் இவர்கள் தங்களது படங்களுக்கு இளையராஜாவைப் பயன்படுத்திய தாகத் தெரியவில்லை. தொடக்க காலத்தில் சங்கர் கணேஷையும் பின்னர் எஸ்.ஏ.ராஜ்குமாரையுமே இசையமைப்பாளர்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அநேகமாக அனைத்துப் படங்களிலும் வசனத்தை என். பிரசன்ன குமார் எழுதியிருக்கிறார். மிகத் திறமையான வசனகர்த்தாவாக அறியப்பட்டிருந்த பிரசன்ன குமார் 2008இல் தனது 49ஆம் வயதில் காலமானார். இவரது மரணம் அதிர்ச்சியைத் தந்ததொரு மரணமே. 

சர்வதேசத் திரைப்பட தரவுத் தளமான ஐ.எம்.டி.பியில் ராஜசேகர் B.Sc., ராபர்ட் ராஜசேகரன் இவர்களை இருவரையும் குழப்பிக்கொண்டு அவர்கள் இயக்கிய, ஒளிப்பதிவு செய்த படங்களின் விவரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ராஜசேகரனுக்கென்று விக்கி பீடியாவில் கூட ஒரு பக்கம் உருவாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திரைத் துறையை ஆத்மார்த்தமாக நேசித்துத் தன் வாழ்நாளை அதிலேயே செலவிட்ட மனிதர்களுக்கு இத்தகைய விபத்து நேர்வது பெரும் சோகம்தான். ஆனாலும், இங்கே இதுதான் யதார்த்தம். கலை எத்தனையோ கலைஞர்களின் உயிரைக் குடித்துதான் தனது ஜீவனைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பது யதார்த்தத்தின் குரூரம்.

இந்து தமிழ் திசை நாளிதழில் 13.09.2019 அன்று வெளியானது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக