சர் பிட்டி தியாகராய செட்டி
சென்னை மாநகராட்சி கட்டடம் |
சென்னை மாநகராட்சிக் கட்டடத்தின் முன்னே நுழைவாயில் வருவோருக்கு முகம் காட்டி வெள்ளைவெளேரென நின்றிருப்பது வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராய செட்டியின் சிலை. மெட்ராஸ் மாகாணத்தின் ஏகாட்டூரில் தெலுங்கு செட்டி குடும்பத்தில் 1852, ஏப்ரல் 27 அன்று பிறந்த இவர் சிறந்த வழக்கறிஞர், தொழிலதிபர், புகழ் பெற்ற அரசியல்வாதி. சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் இவர். 1916இல் பார்ப்பனர் அல்லாதாரின் நலன் பேண நீதிக்கட்சியை டி எம் நாயரோடு இணைந்து தொடங்கியவர். இக்கட்சியின் கொள்கைகளைப் பரப்ப 1927இல் ஜஸ்டிஸ் என்னும் பத்திரிகைத் தொடங்கி நடத்தினர் இருவரும். டி.எம். நாயர் தான் இப்பத்திரிகையின் முதல் ஆசிரியர். தென்னிந்திய வர்த்தக சபையைத் தொடங்கியவர்; 1910முதல் 1921வரை அதன் தலைவராகவும் இருந்தவர் தியாகராய செட்டி. 1882இலிருந்து 1923வரை சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்தார். ஏழை மக்கள் கல்வி கற்க வசதியாக வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்தப் பள்ளிதான் இப்போது தியாகராய கல்லூரி என்னும் பெயரோடு விளங்கிவருகிறது.
இந்தத் தியாகராய கல்லூரியின் உள்ளே இவரது சிலை ஒன்று உள்ளது. 1985, செப்டம்பர் 28 அன்று அப்போதை தொழிற்துறை அமைச்சர் கே.ராஜாராம் திறந்துவைத்த சிலை இது. அந்நிகழ்ச்சிக்கு தியாகராய கல்வி அறக்கட்டளையின் தலைவர் விஎம்ஜி ராமகண்ணப்பன் தலைமை தாங்கினார்; பி. சிதம்பரம் முன்னிலை வகித்தார். இந்தச் சிலை கும்பகோணம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி அன்பளிப்பாக வழங்கியது. இக்கல்லூரிக்கு அருகிலேயே இவரது பெயரில் சென்னை மாநராட்சி பூங்கா ஒன்றை நிறுவியுள்ளது. இப்பூங்காவிலும் இவரது மார்பளவு சிலை ஒன்று உள்ளது.
1920இல் முதன்முறையாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி பெரும் வெற்றி பெற்றது. அப்போதைய சென்னை கவர்னர் லார்டு வெலிங்டன் தியாகராய செட்டியை பிரதராகப் பதவியேற்று மந்திரிசபை அமைக்கச்சொன்னார். ஆனால் இவரோ அப்பதவி தனக்கு வேண்டாமென மறுத்துவிட்டார். சென்னை வரலாற்றில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்துக்கொண்ட இவர் 1925 ஏப்ரல் 28 அன்று காலமானார்.
சர் பிட்டி தியாகராய செட்டி (சீனியர்)
சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராய கல்லூரி வளாகத்தில் சர் பிட்டி தியாகராய செட்டி (சீனியர்) சிலை உள்ளது. பிப்ரவரி 9, 2004இல் கல்லூரி குழுத் தலைவர் பி. தியாகராயன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் திறந்து வைத்த சிலை இது.
பி. ராமசாமி செட்டி
சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராய கல்லூரியின் நிறுவனர் திரு பி ராமசாமி செட்டி. இவரது சிலை இக்கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை 1955, அக்டோபர் 6 அன்று அப்போதைய சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சர் லட்சுமணசாமி முதலியார் திறந்துவைத்துள்ளார். பிட்டி தியாகராய செட்டி (சீனியர்), சர் பிட்டி தியாகராய செட்டி இருவரும் 1897இல் வடசென்னையில், வண்ணாரப்பேட்டையில் வட சென்னை இந்து பள்ளியைத் தொடங்கினர். செட்டி சகோதரர்கள் மரணத்திற்குப் பின் தியாகராய செட்டி இந்து பள்ளி என அழைக்கப்பட்டது அந்தப் பள்ளி. ஜூன் 1947இல் இப்பள்ளியின் மாணாக்கர் எண்ணிக்கை 1600ஆக இருந்தது. எனவே இப்பள்ளியை கல்லூரியாக உயர்த்தினால வட சென்னை பகுதி மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் என நம்பியதால் ராமசாமி செட்டி இண்டர்மீடியேட் கோர்ஸோடு 1950இல் தியாகராய கல்லூரியைத் தொடங்கினார். 1954இல் முதல் நிலை கல்லூரியானது இது. 1963முதல் 1965வரை இக்கல்லூரி மேலாண்மைக் குழுத் தலைவராக முன்னாள் முதல்வர் எம் ஜி ராமச்சந்திரன் இருந்துள்ளார். 1907இல் பிறந்த ராமசாமி செட்டி 1954 மே 28இல் காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக