சர்வதேச திரைப்பட விழா 2013
திங்களன்று (2013 டிசம்பர் 16) மாலை உட்லண்ட்ஸில் பார்த்த படம் In bloom. ஜியார்ஜியா நாட்டுப் படம். வேறொரு படம் திரையிடுவதாக இருந்தது. ஆனால் கடைசியில் மாறுதல் ஏற்பட்டு இந்தப் படம் திரையிடப்பட்டது. தெளிவான திரைக்கதையைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. இரண்டு தோழிகள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள், சமூகச் சூழல், நாட்டில் நிலவும் சிக்கல்கள், மனிதர்களின் கண்மூடித்தனம், மனிதர்களிடையே நிலவும் போலித்தனம் போன்ற பல்வேறு விஷயங்களை விமர்சனத்துடன் மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தியது இந்தப் படம். தொடக்க காட்சியில் ரேஷனில் ரொட்டி வாங்க நிற்கும் கும்பலும் அங்கே நடக்கும் களேபரமும் நமது சூழலை ஒத்திருந்தது. காதலியின் பாதுகாப்புக்கு காதலன் ரிவால்வரை வழங்குகிறான். அதை ஒரே முறை அதுவும் ரௌடித்தனத்திற்கு எதிரான மிரட்டலுக்கு மட்டுமே பயன்படுத்தும்படியான காட்சியமைப்பு.
அஹிம்சையை வலியுறுத்துகிறது படம். தான் நேசிப்பவனிடமிருந்து தன்னை தட்டிப்பறித்து கட்டாய மணம் புரிகிறான் ஒருவன். அந்தப் பெண்ணுக்கு அதைத் தட்டிக்கேட்க முடியவில்லை. அந்த அத்துமீறலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறாள். தோழியின் திருமணத்திற்கு வந்த சின்னப் பெண்ணிற்கு தோழியின் போக்கும் அங்கும் நிலவும் போலித்தனமும் எரிச்சலை உண்டாக்குகிறது. அதை வெளிப்படுத்தும் விதமாக அவள் போடும் ஆட்டம். கோபத்தை கலையம்சத்துடன் வெளிப்படுத்துகிறது.
தன் கணவனே தனது காதலனை கொன்றது அறிந்து ஆத்திரத்துடன் அவனைக் கொல்லத் துடிக்கும் தோழி. ஆனால் ரிவால்வரின் குண்டுக்கு வேலை இல்லை. அந்த ரிவால்வர் மௌனமாக நீருக்குள் மூழ்குகிறது. வன்முறைக்கு விடை வன்முறை அல்ல என்பதை படம் உணர்த்துகிறது.
படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்த பெண்ணின் தந்தை கதாபாத்திரம் சிறையில் இருப்பது போன்று சித்திரிப்பு இடம்பெற்றிருக்கிறது. ஆனால் கடைசி வரை அந்தப் பாத்திரம் பார்வையாளர்களுக்கு காட்சியாவது இல்லை. இறுதியில் தனது தந்தையைப் பார்க்க அந்தப் பெண் சிறைக்கு செல்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக