சைக்கோ |
மனித மனம் மிகவும் புதிரானது. மிக நெருக்கமாக மனத்தை நோக்கினால் அங்கே இன்னும் மிருக குணத்தின் தடத்தைக் கண்டடைய முடியும். என்னதான் கணினிக் காலத்து நாகரிக வாழ்வை மேற்கொண்டாலும் மனிதரது ஆழ்மனத்தில் கற்காலத்தின் சுவடுகள் எளிதில் புலனாகும். பழிவாங்குதல் என்னும் கோர குணம் தன் குரூர முகத்தைக் காட்டிக்கொண்டு பல்லிளிக்கும். பெரும்பாலான மனிதர்களுக்குப் பழிவாங்குதல் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. அது சில வேளையில், மனம் பிசகாகிக் கிடக்கும் போதில், மனத்தின் மேல் தளத்துக்கு வந்து ஆட்டுவிக்கும். அப்போது மனிதர்களின் நடத்தையில் நாகரிகத்தை எதிர்பார்க்க இயலாது. அவரை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் அந்த மிருகவெறி, இளஞ்சூடான உதிரச் சுவை அறியத் துடிக்கும். எல்லோரது மனத்திலும் இந்த மிருகவெறி மினுக்கிட்டுக்கொண்டேயிருக்கிறது. எனவே, அது எப்போது வேண்டுமானாலும் உயிர்பெற்றெழுந்துவிடுகிறது. ஆழ்மனத்தில் பேரழிவு தரும் சிதிலம் ஏற்பட்டுவிடும்போது, இந்த உயிர்த்தெழுதலைத் தடுக்க முடியாது.
பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர் |
இத்தகைய மனப்பிசகு கொண்ட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலைகளை நிகழ்த்தும் திரைக்கதையமைத்து ரசிகர்களுக்குத் திகிலைத் தரும் வகையிலான படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தொடர் கொலைகளை நிகழ்த்தும் சைக்கோ கொலைகாரர்களைப் பற்றிய படங்களில் மிகவும் ரசனையானது, கலாபூர்வமானது எனச் சொல்லத்தக்கது ‘பெர்ஃபியூம்: த ஸ்டோரி ஆஃப் எ மர்டரர்’ என்னும் ஜெர்மானியப் படம். ‘ரன் லோலா ரன்’ படத்தின் இயக்குநரான டாம் டைக்வார் இயக்கிய இந்தப் படம் திரையில் திரவிய வாசனை பரப்பிய அதிசயத்தை நிகழ்த்தியது.
கலைஞன் கமல் |
தமிழில் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக் டிக் டிக்’ தொடங்கி, கமல் நடித்த ‘கலைஞன்’, ‘வேட்டையாடு விளையாடு’ வரை அநேகப் படங்களைத் ரசிகர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். ஆல்ஃபிரட் ஹிட்சாக் இயக்கிய ‘சைக்கோ’ படத்தை இத்தகைய படங்களுக்கான முன்னோடி எனலாம். இதன் சாயலில் இயக்குநர் பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை உருவாக்கினார்.
வேட்டையாடு விளையாடு கமல் |
மிருகவெறியேறிய கதாபாத்திரங்கள் தங்கள் மன அமைதிக்காக அடுக்கடுக்காகக் கொலைகளைச் செய்வதுதான் இத்தகைய படங்களின் ஜீவ இழை. இரவில் உறக்கம் வராமல் தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும், அவ்வப்போது மனநிலை மாறுபாடு கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தின் கதை ‘டாக்ஸி டிரைவர்’ (1976). இதன் திரைக்கதையை எழுதியிருப்பவர் பால் ஸ்ரேடெர். படத்தை இயக்கியிருப்பவர் மார்டின் ஸ்கோர்ஸேஸி. இவர் ‘லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீஸ்ஸ் கிறைஸ்ட்’ படத்தை இயக்கியவர். வஸந்த் இயக்கிய ‘அப்பு’ திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் இதே போல் தூக்கம் வராமல் இரவு முழுவதும் டாக்ஸி ஓட்டும். ‘டாக்ஸி டிரைவர்’ படத்தில் ட்ரேவிஸ் கதாபாத்திரம் பாலியல் விடுதியிலிருந்து ஐரிஸ் என்னும் பெண்ணைக் காப்பாற்றியது போல் பிரசாந்த் பாலியல் விடுதிப் பெண்ணான தேவயானியைக் காப்பாற்றுவார். ஆனால் ‘அப்பு’ திரைப்படம், மகேஷ் பட் இயக்கத்தில் வெளியான ‘சடேக்’ என்னும் இந்திப் படத்தின் மறு ஆக்கம் என்றே குறிப்பிடப்படுகிறது.
டாக்ஸி டிரைவர் |
இரவுக்கும் தனிமைக்கும் கொலைகளுக்கும் ஏதோவோர் உறவு இருக்கும்போல. இத்தகைய படங்களில் பெரும்பாலான கொலைகள் இரவில்தான் நிகழ்த்தப்படுகின்றன. 1986-ல் வெளியாகி தமிழகத்தையே கலக்கிய ‘ஊமைவிழிக’ளில் ரவிச்சந்திரன்கூடக் கொலைகளை இரவில்தான் செய்வார்; அதுவும் அமானுஷ்யமான சூழலில். சூனியக்காரி போன்ற தோற்றம் கொண்ட அந்தப் பாட்டி, காலால் தரையில் பள்ளம் தோண்டும் குதிரை, தனியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வெங்கல மணியிலிருந்து வெளிப்படும் மர்மமான மணியோசை, இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியின் பயணம் என அனைத்துமே பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும். ஆபாவாணன் திரைக்கதையில் அர்விந்த்ராஜ் இயக்கிய ‘ஊமைவிழிகள்’ திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பெயரை வெள்ளித் திரையில் உறுதிபட எழுதியது.
ஊமை விழிகள் விஜயகாந்த், சரிதா |
லட்சியவாத நோக்கில் பத்திரிகை நடத்தும் ஜெய்சங்கர், சந்திரசேகர் அருண்பாண்டியன் நட்பு, காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை, நேர்மை தவறாத காவல் அதிகாரி டி.எஸ்.பி.தீனதயாளு, இனிமையான பாடல்கள், திகிலூட்டும் பின்னணியிசை எனப் பொழுதுபோக்கு சினிமாவுக்கான அத்தனை இடுபொருள்களையும் கலந்து உருவாக்கப்பட்ட படம் இது. க்ளைமாக்ஸில் வரிசையாக கார்கள் வரும் காட்சி அப்போது மிகவும் சிலாகித்துப் பேசப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் படம் போன்றே அது உருவாக்கப்பட்டது. கௌபாய் படங்களில் வரும் கதாபாத்திரம் போல் அருண்பாண்டியன் வேறு ஒரு மவுத் ஆர்கனை வாசித்துக்கொண்டிருப்பார்.
மேற்கண்ட படங்களில் எல்லாம் கொலை செய்பவர் யார், எதற்காகக் கொலை செய்கிறார் போன்ற விவரத்தைப் படத்தின் பயணம் தெளிவாக்கிக்கொண்டே வரும். ஆனால் கொலைகள் எதற்காக நடைபெறுகின்றன, யார் கொலை செய்வது என்ற விவரத்தைத் தெளிவாகச் சொல்லாமலே ஒரு படத்தை உருவாக்க முடியுமா? சந்தேகம்தான் என்று நினைக்கிறீர்களா? ஆனால் பாங் ஜூன் ஹோ, தான் இயக்கிய ‘மெமரிஸ் ஆஃப் மர்டர்’ படத்தை அப்படித்தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மெமரிஸ் ஆஃப் மர்டர் |
மழை பொழியும் இரவுகளில் மிகவும் அழகான, சிவப்பு உடை அணிந்த இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். கொலைக்கான காரணத்தையோ கொலையாளியையோ கண்டுபிடிக்க முடியாமல் புலனாய்வுத் துறையினர் திணறுகிறார்கள். இந்த மர்ம முடிச்சுகளைக் கண்டறிய சியோலிலிருந்து புலனாய்வாளர் ஒருவர் வருகிறார். அவர் நிதானமாகச் செயல்படுகிறார். கையில் கிடைத்த விவரங்களை வைத்து மேலும் ஒரு கொலை நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதே போல் இரு நாட்களுக்குள் அந்தப் பிணத்தையும் கண்டுபிடிக்கிறார். கொலைகள் அனைத்தும் ஒரே மாதிரி செய்யப்பட்டிருக்கின்றன, சடலங்கள் ஒரே போல் கிடத்தப்பட்டிருக்கின்றன. கொலைகள் தொடர்கின்றன. ஆனால், சாட்சிகள் மட்டும் கிடைக்கவில்லை. கொலை நடைபெறும் இரவுகளில் எல்லாம் ரேடியோ நிலையத்தில் வருத்தமான கடிதம் என்னும் ஒரு பாடல் ஒலிபரப்பாகியிருக்கிறது என்னும் உண்மையைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தத் துப்பை வைத்துக் கொலையாளியை நெருங்க முடியுமா என்னும் கோணத்தில் செல்கிறார்கள். ஆனாலும், இறுதிவரை அவர்களால் கொலையாளி இவர்தான் எனத் திட்டவட்டமாகச் சொல்ல ஒரு சான்றுகூடக் கிடைக்கவில்லை.
மெமரிஸ் ஆஃப் மர்டர் |
இந்தப் படத்தின் சிறப்பு இதன் நிதானம். புலன்விசாரணை என்ற அதன் நேர்கோட்டுப் பயணம் எந்த இடத்திலும் சிறு விலகலைக்கூடச் சந்திப்பதில்லை. அநாவசியமான திகில் எதுவும் பார்வையாளர்களுக்கு ஊட்டப்படவில்லை. ஆனால், இந்த மர்மம் தெளிவாகிவிடாதா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கதை ஏற்படுத்திவிடும். இது தென் கொரியாவின் ஹ்வஸியாங் என்னும் நகரத்தில் 1986-லிருந்து 1991-க்குள் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைச் சித்தரித்து உருவாக்கப்பட்ட படம். இந்த உண்மைச் சம்பவத்திலும் கொலையாளி இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை. யார் கொன்றார், எதற்குக் கொன்றார் என்ற விவரம் வெளியுலகுக்குத் தெரியவரவேயில்லை. உலகெங்கும் இதைப் போல் தெளிவாகாத மர்ம வழக்குகள் இருந்துகொண்டேயிருக்குமோ?
< சினிமா ஸ்கோப் 18 > < சினிமா ஸ்கோப் 20 >
< சினிமா ஸ்கோப் 18 > < சினிமா ஸ்கோப் 20 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக