இப்படி
அடுக்கடுக்காகக் கொலை, கொள்ளை, விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் பெரும்புனைவுபோல்
உருண்டு திரண்டது கொடநாட்டு மர்மம். ஒரு சுவாரசியமான திரில்லர் நாவலை ஒத்திருந்தது
இந்த விவகாரம். இதன் பின்னணியில் இருப்பவர் யார் என்னும் கேள்வி தமிழ்நாட்டு அரசியல்
ஆர்வலர்கள், வெகுமக்கள் மனத்தைக் குடைந்தது. அது தொடர்பான முறையான விசாரணை மட்டுமே
இந்த விவகாரத்தின் மர்மங்களை விலக்கி உண்மையைத் தெளிவாக்கும் என்பது பொதுத்தளத்தில்
விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் மீண்டும் தோண்டப்படுவதையோ மறுவிசாரணை நடத்தப்படுவதையோ
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக விரும்பவில்லை.
மறுவிசாரணை என்னும் நடவடிக்கை அதிமுகவைப் பெரும் பதற்றத்தின் பிடிக்குள் தள்ளியிருக்கிறது.
ஆட்சியில் இருந்த காலத்தில் ஒன்றிய அரசுடன் முரண்படாமல் தன் மீது எந்தப் பழியும் விழாமல்
பார்த்துக்கொண்ட அதிமுகவால் இப்போது அப்படி நடந்துகொள்ள இயலவில்லை. மாநிலத்தின் ஆட்சி
அதிகாரத்தை இழந்து நிற்கும் அந்தக் கட்சி இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில்
விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தது அந்தக் கட்சி.
இந்த விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கரம் கோத்து செயல்படுகிறார்கள்.
தங்கள் கட்சியை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் பொருட்டு இந்தக் கொடநாடு விவகாரத்தைக்
கையில் எடுத்திருக்கிறது ஆளும் திமுக தரப்பு என்பது அவர்களது வாதம். கொடநாடு விவகாரத்தைச்
சுற்றிப் படர்ந்துள்ள மர்மங்களை விலக்கி அங்கே என்ன நடந்தது என்பதை முறையாக விசாரித்து
மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக ஆளும் திமுக தரப்பு சொல்கிறது.
ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் இந்த விவகாரத்தை முன்னிட்டு அதனதன் தரப்பை நியாயப்படுத்தும் காட்சிகளை
அரங்கேற்றுகின்றன. இந்தக் கொடநாடு எஸ்டேட் அதன் உரிமையாளர்களான ஜோன்ஸ் குடும்பத்தினரிடமிருந்து
கட்டாயப்படுத்தி 1994இல் வாங்கப்பட்டதிலிருந்தே அதைச் சுற்றி அநேகக் கதைகள் புனையப்பட்டுப்
பொதுவெளியில் புழக்கத்துக்கு வந்தன. அவற்றில் உண்மையும் பொய்யும் புரட்டும் கலந்தே
காணப்படுகின்றன. எது உண்மை எது பொய் என அறிந்துகொள்வது சாமானியமான செயலன்று.
முன்னாள்
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இரண்டாம் தலைமைச் செயலகத்தையே கொடநாட்டில் அமைத்துவிட்டாரோ
என்று தோன்றும்படியாகவே தமிழ்நாட்டை ஆண்டார். அதிகாரமிகு மன்னராட்சிக் காலத்தைப் போல்
மக்களாட்சியை மாற்றியமைத்தார். கேள்வி கேட்க இயலாதவராகவும் மக்களிடமிருந்து தன்னைத்
தனிமைப்படுத்திக்கொண்ட ஒருவராகவும் அவர் நடந்துகொண்டார். அதிகார துஷ்பிரயோகம் என்பதைப்
பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல அதிகாரங்களைத் தனக்குத் தோதாக ஆட்டம்போடவைத்தார்.
அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளை வாரிக்குவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக
முதலமைச்சர் பதவியிலிருந்தே இறங்க நேரிட்டது. ஆனாலும் துளியும் ஜெயலலிதா தன் போக்கை
மாற்றிக்கொள்ளவில்லை.
போயஸ்கார்டன்,
சிறுதாவூர், கொடநாடு என ஜெயலலிதா எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் சாமானியர்கள் தங்கள்
வாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவருக்காகப் போக்குவரத்து
மணிக்கணக்காக நிறுத்தப்பட்டது. தான் மக்கள் சேவகர் தன்பொருட்டு மக்கள் துன்பப்படுவதா
என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதா என்றே தெரியவில்லை. அவர் வணங்கும் கடவுள் அவருக்கு
ஆளும் வாய்ப்பையும் அதிகாரத்தின் பயனையும் தந்திருக்கிறார் என்றே நம்பியிருப்பாரோ என்னவோ?
வழிபாடுகளில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை சகலரும் அறிந்த ஒன்றுதான். ஆகவே, அவருக்கு
இப்படியான எண்ணம் உருவாகியிருக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டைச்
சார்ந்த எந்த முதலமைச்சரும் இப்படியான நடவடிக்கையில் இறங்கியதில்லை. அரசாங்க கோப்புகள்
முதலமைச்சரின் கையெழுத்துக்காக விமானத்தில் பறந்த வரலாற்றை ஜெயலலிதா படைத்தார். முதலமைச்சர்
உள்ளிட்ட அரசாங்கப் பணிகள் அனைத்தும் மக்களுக்கான வேலைகளைப் புரிய மக்கள் அளித்த ஒரு
வாய்ப்பு என்பதை மறந்து அதன் அதிகாரங்களில் திளைப்பவர்கள் அரசியலில் பெருகிய பிறகு
மக்களாட்சியின் மாண்பு பெரிதும் கேள்விக்குள்ளானது. தலைமைப் பதவிகளில் தகுதியற்றோர்
அமரும்போது, பதவிக்கான மாண்புகள் காற்றில் பறந்துவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டானார்
ஜெயலலிதா.
மக்களாட்சி
என்னும் பெரும் தத்துவத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள் இப்படியான அரசியல்வாதிகளும்
தலைமைப் பொறுப்பாளர்களும். மன்னராட்சிக் காலத்தில் மன்னர் வைத்ததுதான் சட்டம். மக்களெல்லாம்
அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டார்கள். பல மன்னர்கள் கொடுங்கோலாட்சி
நடத்தி மக்களை வதைத்தார்கள். இப்படியான கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவிக்கக்கூடிய
ஒன்றாக மக்களாட்சி பார்க்கப்பட்டதென்னவோ உண்மை. ஆனால், நடைமுறை யதார்த்தத்தில் மக்களாட்சி
என்பது மக்களுக்காக இருக்கிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கும்போது தலையைக் குனியத்தான்
வேண்டியதிருக்கிறது. மக்கள் பணிக்காக நம்மை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்னும்
புரிதல் இருந்தால் ஒரு முதலமைச்சர் தனக்கென எந்தத் தனிப்பட்ட உரிமையையும் கோர மாட்டார்.
மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக மட்டுமே தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.
தமிழ்நாட்டு
அரசியல் வரலாற்றில் 1967 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஒன்றாகிறது. அந்த ஆண்டில் நடைபெற்ற
தேர்தலில்தான் சாமானியர்கள் கையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 174
தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 137 இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சி பெற்ற வாக்குகள்
62,30,552. வெறும் 62 லட்சம் சொச்சம் பேர் தான் அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தனர். அந்தத்
தேர்தலில் மொத்த வாக்காளர்கள் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர். இதேபோல் திமுகவிடமிருந்து
ஆட்சியை அதிமுக கைப்பற்றிய 1977 தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 130
இடங்களைக் கைப்பற்றியது. அந்தக் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 51,94,876தான்.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 2.81 கோடிப் பேர். இன்றுவரை இப்படியான நடைமுறைதான்
தொடர்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1.74 கோடிதான்.
பெரும்பான்மை
மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு கட்சியைப் பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதில்லை.
சிறுபான்மையோர் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்தான். மக்களாட்சியின்
குறைபாடுகளில் இதுவும் ஒன்று. மக்களாட்சி தந்த வாய்ப்பால் முதலமைச்சரான அறிஞர் சி.என்.அண்ணாதுரை
இரண்டு ஆண்டுக்குள் மறைந்துவிட்டார். அவரையடுத்து முதலமைச்சரான மு.கருணாநிதி தமிழ்நாட்டு
முதலமைச்சர்களின் தரமிறங்கியதற்கான மூல விதை விதைத்தவராகக் கருதப்படுகிறார். அவரைத்
தொடர்ந்து முதலமைச்சராக ஆன எம்.ஜி.ஆர். தன்னை வழிபடுகிறவர்களுக்கு வள்ளலாகத் தோற்றமளித்தபோதும்
தன்னைப் பகைத்துக்கொண்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார். அவரது ராமாவரம் தோட்டம்
பற்றிய கதைகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்தவை. எம்.ஜி.ஆர்.
அங்கே அளித்த விருந்துகள் போல அங்கே அரங்கேறிய கொடுஞ்சம்பவங்களும் அதிகப்படியானவை.
இருந்தபோதும், எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு மக்களால் கடவுள்போல் வழிபடப்பட்டார். மக்களின்
இந்த அறியாமைதான் அரசியல்வாதிகளுக்குத் தாங்கள் சாதாரண மக்களைவிட உயர்ந்த இடத்தில்
இருப்பவர்கள் என்ற மமதையை அளித்துவிடுகிறது.
எம்.ஜி.ஆர்
மறைந்த பிறகு அவரது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா.
மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை எல்லாம் அசுர வேகத்தில் கடந்துவிட்டார்.
1991 ஆம் ஆண்டில் அமைந்த அவரது ஆட்சியில் பட்டம் பெற்றவர்கள் அநேகர் இருந்தனர். கிட்டத்தட்ட
ஒரு சர்வாதிகாரி போல் செயல்படும் வாய்ப்பை ஜெயலலிதா பெற்றிருந்தார். ஜெயலலிதா மட்டும்
மக்கள் சேவைக்காகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால்
தமிழ்நாட்டு மக்கள் எத்தனையோ நன்மைகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டு
மக்களின் துரதிர்ஷ்டம் மக்களுக்கான தலைவராக இல்லாமல் மக்கள் தலைவராகவே அவர் நின்றுவிட்டார்.
மக்களால் நான் மக்களுக்காக நான் என்பதை வெறும் முழக்கத்துடன் மூலைக்கு அனுப்பிவிட்டார்.
அதிகாரம் தரும் அத்தனை வசதி வாய்ப்புகளையும் ஒரு முதலமைச்சராகத் தான் அனுபவித்ததுடன்
தன் தோழிக்கும் அதை மடைமாற்றிவிட்டார். கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின்
தோழி சசிகலாவின் கைங்கர்யம் குறிப்பிடத்தக்கது.
மு.கருணாநிதி
முதலமைச்சராக இருந்தபோது, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு
வித்திட்டார் என்ற குற்றச்சாட்டு இன்றுவரை அவரது சமூகநீதிப் பங்களிப்பையும் மீறிய கறையாக
நிலைத்திருக்கிறது. தினகரன் ஊழியர் எரிப்பு விவகாரத்தில் திமுகவின் பெயர் எந்த அளவுக்கு
அடிபட்டது என்பதைத் தமிழ்நாட்டு அரசியலை அறிந்தோர் மறந்துவிட முடியாது. அதே போல் இப்போது
இந்த கொடநாடு விவகாரத்தில் அதிமுகவின் தொடர்பு என்பது பல விபரீத எல்லைக்குச் சென்றுள்ளது
என்றுதான் தோன்றுகிறது.
தொழில்நுட்ப
வளர்ச்சி பெருகிய இந்தக் காலத்திலும், ஒவ்வொருவர் கையில் கைபேசி என்னும் நவீன சாதனம்
எல்லா மர்மங்களையும் வெளிப்படுத்திவிடக் கூடிய வீரியத்துடன் செயல்படும்போதும், கொடநாடு
எஸ்டேட் போன்ற விவகாரங்களின் மர்மம் ஒரு புகை மூட்டம் போல தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில்
படர்வது மக்களாட்சி என்பதையே கேலிக்குரியதாக்குகிறது. இதை எப்படிச் சாமானியர்களால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதே நேரத்தில் அவர்களால்
இதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? ஆட்சியிலிருக்கும் திமுககூட இதை அரசியல்ரீதியான
காய்நகர்த்துதலுக்குத்தான் பயன்படுத்துகிறதோ என்று கருதவும் இடமிருக்கிறது. ஏனெனில்,
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற முனைப்பு காட்டும் திமுக அரசு கருணாநிதி
நினைவிடம் போன்ற வெகுமக்களுக்குப் பயன் தராத விஷயங்களிலும் வீரியத்துடன் செயல்படுவது
கண்கூடு. பாஜக ஆட்சியில் 3,000 கோடி சர்தார் பட்டேல் சிலை விவகாரம் எப்படி விமர்சிக்கப்பட்டது?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் சொல்லப்பட்டபோது
திமுக அதை எப்படி எதிர்கொண்டது? இவை எல்லாம் வெகு மக்கள் மூளையில் பதிவாகியிருக்கிறது
என்பதை மறந்துவிட முடியாது.
ஜனநாயக
நாட்டில் வாக்களிப்பதுடன் மக்களின் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களால் ஆட்சியை மாற்றியமைக்க
முடியும். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்துகொள்ளும்போது
அதைக் கேள்வி கேட்க இயலாது. மக்களுக்கான ஆட்சியை மக்களுக்காக அமைத்திருக்கிறோம் என்னும்
புரிதலற்ற ஆளுமைகளிடம் அதிகாரம் சிக்கும்போது, அதனால் மக்கள்தாம் பாதிக்கப்படுகிறார்கள்.
சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அந்தச் சட்டத்துக்குத் தாங்களும்
கட்டுப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடுதல் கூடாது. அப்படி மறந்துசெயல்படும்போது, மக்கள்தாம்
அவர்களுக்கு அதை நினைவூட்ட வேண்டும். மக்கள் சார்பாக நின்று ஊடகங்கள் அந்த வேலையைச்
செய்ய வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால்தான் மக்களாட்சி என்பது உரிய மகத்துவம் பெறும்.
இல்லாவிட்டால் ஜனநாயகம் சிதைந்துவிடும். ஜனநாயகம் சிதைவது ஜனங்களுக்கு நல்லதன்று.
டைம்ஸ் சமயம் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரையின் மூல வடிவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக