இந்த வலைப்பதிவில் தேடு

சிவகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 01, 2020

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

கொன்றவளா அவள் கொண்டவளா?


இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்த படம் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ (1982). ஒளிப்பதிவு, விஸ்வம் நட்ராஜன். இசை, சங்கர் கணேஷ்.  முழுமையான பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிக்கும் நயமான திரில்லர் வகைப் படம் இது.

அன்பான கணவன், மனைவி, அழகுக் குழந்தை என்று நிம்மதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட சிக்கலும் அதிலிருந்து அது எப்படி மீண்டது என்பதுமே கதை. ராஜேஷ் (சிவகுமார்) ஒரு பெரிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவருடைய மனைவி ராதா (அம்பிகா). இவர்களுடைய குழந்தை ப்ரியா (பேபி மீனா). பிற பெண்களுடன் ராஜேஷுக்குத் திருமணம் தாண்டிய உறவு உள்ளதோ என்பது ராதாவின் சந்தேகம். அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. காரசாரமாக வந்துவிழும் வார்த்தைகள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றன. ராதாவை வர்கீஸ் என்னும் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான் ராஜேஷ்.

அன்று ஏப்ரல் 1. வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறான் ராஜேஷ். குழந்தை வரவேற்பறையில் இருக்கிறாள். ராதா படுக்கையறையில் பொட்டு கலைந்து, காதில் ஒரு தோடு இல்லாமல் சற்று அலங்கோலமான தோற்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ராஜேஷின் வாசிப்பு அறையில் ரிக்கார்ட் ப்ளேயர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பயன்படுத்திய இரண்டு கப் அண்ட் சாஸர்கள் அப்புறப்படுத்தப்படாமல் டீப்பாயின் மீது உள்ளன. இவையெல்லாம் ராஜேஷுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது அவன் தன் வாசிப்பறைக்குச் செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது. அவனை மட்டுமல்ல; பார்வையாளர்களையும்தான்.

லாரன்ஸ் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன்ஸ் (சத்யராஜ்). இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர் ராதா. லாரன்ஸுடைய மனைவி ஷீலா (சத்யகலா). அவர்களுடைய குழந்தை மேரி பார்வைத்திறனற்றவள். லாரன்ஸுக்குப் பெண்கள் பலருடன் உறவிருப்பதாக அவரது கடையில் வேலை பார்க்கும் கமல் உட்படப் பலரும் பேசுகிறார்கள். இது ஷீலாவுக்கும் தெரியும். இந்த லாரன்ஸின் சடலம்தான் ராஜேஷின் வாசிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறது. லாரன்ஸை யார் கொலைசெய்திருப்பார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.

முழு உண்மையை அறியாமல், கேட்ட, பார்த்த தகவல்களின் அடிப்படையிலான ஊகத்தின் உதவியுடன் உண்மையைப் பார்க்க விழைந்தால் அது எத்தகைய விபரீதத்தில் கொண்டுவிடும் என்பதையே திரைக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்பார்கள். அதைத் தான் இந்தப் படமும் சொல்கிறது. லாரன்ஸை ராதா கொலைசெய்திருப்பாளோ எனச் சந்தேகிக்கிறார் ராஜேஷ். ராஜேஷ் கொன்றிருப்பாரோ எனச் சந்தேகிக்கிறாள் ராதா. ராதாதான் லாரன்ஸைக் கொன்றாள் என்றே சொல்கிறாள் ஷீலா. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவரவர் ஊகத்துக்குத் தேவையான தடயங்களும் சந்தர்ப்ப சாட்சியங்களும் அவரவர் ஊகத்தை வலுப்படுத்துகின்றன. இப்படி ஒரு பயணத்தின் வழியே கொலைசெய்தவர் யார் என்பதும், அதற்கான காரணம் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியவரும்போது அது எதிர்பாராததாக உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு, பின்னணியிசை இரண்டும் அமானுஷ்யத் தன்மையுடன் இயங்கும்வேளையில் வசனமோ பூடகத்தன்மையிலானது. சிவகுமார், அம்பிகா, பேபி மீனா, சத்யராஜ், சத்யகலா, விஜயராகவன் எனப் படத்தில் பங்குகொண்ட அனைவரும் அவரவர் தரப்பைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு திரில்லராக எந்த இடத்திலும் இறுக்கம் குலையாமல் இறுதிவரை பயணிக்கிறது படம். நகைச்சுவைக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உள்ளார்கள். ’பைரவி’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சிவகுமாரைப் படுத்தி எடுக்கும் சில காட்சிகளை மட்டும் ரசிக்க முடிகிறது.

மனைவிமீது அன்புகொண்ட அதே நேரத்தில் அவள் மீது எழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலாத ஒரு சராசரிக் கணவனாக சிவகுமார் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாசம், கோபம், எரிச்சல், ஆற்றாமை என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனரீதியான பாதிப்பு கொண்ட பெண்ணாக இருந்தபோதும் அம்பிகாவின் கதாபாத்திரம் இயல்பான ஒரு மனைவின் தன்மையிலிருந்து பெரிதும் மாறாதது. கணவனே கண் கண்ட தெய்வம் என்னும் பழமையில் ஊறிப்போனது. அதே நேரத்தில் தன் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும் தயங்காதது. வேர் பழமையிலும் கிளை புதுமையிலும் ஊடாடும் கதாபாத்திரத்தை அம்பிகா இயல்பான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.  கனவில் அம்மா மலையிலிருந்து விழுந்ததைக் கண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில் மருத்துவமனையில் அம்மா அம்பிகாவைப் பார்க்க வரும் காட்சியில் பேபி மீனாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்த்துவிடக் கூடியது. தந்தை இரவின் கெட்ட கனவால் கத்தும்போது பேபி மீனா, “ஏன் டாடி கத்துத இனிமே இப்படிக் கத்தாத எனக்குப் பயமா இருக்கு” என்பது மிக யதார்த்தமான வசனம். திரைக்கதையும், அதற்குத் தேவையான கூர்மையான வசனங்களும் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

படத்தின் வசனங்களில் பாஸ்கரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறது. உதாரணமாக சில வசனங்கள்:

“செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.”

”மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.”

”கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”

”குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”

”எங்குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”

இயன்றவரை யதார்த்தமான திரைமொழியில் படத்தை நகர்த்தினாலும் தான் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற விவேகத்துடன் பாஸ்கர் படத்தை இயக்கியிருப்பதால் எந்த இடத்திலும் சினிமாத்தனங்கள் வரம்பை மீறி வெளிப்படவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை இப்போதும் எந்த விலகலுமின்றிப் படத்தைப் பார்க்க முடிவதே இந்தப் படத்தின் சிறப்பைச் சொல்லும்.

புதன், நவம்பர் 04, 2020

இயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஓர் அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அவர் எல்லாவகையான படங்களையும் உருவாக்கியுள்ளார். 

மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழப் போராட்டம் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன், கோவை மாவட்டம் சூலூரில் 1953-ல் ஒரு வியாபாரக் குடும்பத்தில் R.சுப்ரமணியம், மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சூலூர் அரசுப் பள்ளியில் பயின்ற நாட்கள் முதலே அவர் கலைகளில் ஆர்வங்கொண்டிருந்திருக்கிறார். பள்ளிநாட்களில் கதாகாலட்சேபம்’ என்னும் பெயரில் மேடைகளில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். கோவை அரசுக் கல்லூரியில் பி.யூ.சி. படித்த நாட்களில் ஷியாம் பெனகல், மிருணாள் சென் ஆகியோரது படங்களையும் மலையாளத்தில் வெளியான யதார்த்தவாதப் படங்களையும் கண்டுகளித்திருக்கிறார். அதன் வழியே சினிமாவுக்கான உந்துதல் கிடைத்துள்ளது. தமிழ்ப் படங்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே என்று அவர் சலிப்படைந்திருந்த நேரத்தில் 16 வயதினிலே’, முள்ளும் மலரும்’, உதிரிப்பூக்கள்’ போன்ற மாற்றத்தை நோக்கிய திரைப்படங்கள் வெளிவந்தது அவருக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. மாறுபட்ட படத்தைத் தர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த அவருக்கு சினிமாவில் தாமும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை இத்தகைய திரைப்படங்கள் அளித்துள்ளன. எனவே, மணிவண்ணன் சென்னைக்கு வந்துள்ளார். என்னையும் சினிமாவையும் மட்டுமே நம்பி நான் சென்னைக்கு வந்தேன்” என்கிறார் மணிவண்ணன்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு, கிழக்கே போகும் ரயில்’ பற்றி எழுதிய விமர்சனக் கடிதம் வழியே அவரது அறிமுகத்தைப் பெற்ற மணிவண்ணன் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்திருக்கிறார். நிழல்கள்’, அலைகள் ஓய்வதில்லை’ ஆகிய படங்களின் கதையையும் வசனத்தையும் எழுதிய மணிவண்ணன், காதல் ஓவியம்’ படத்தில் வசனத்தை மட்டும் எழுதியுள்ளார். ஆகாய கங்கை’ படத்தின் வசனத்தை எழுதியுள்ளதுடன் அதன் திரைக்கதையை இயக்குநர் மனோபாலாவுடன் இணைந்து எழுதியுள்ளார்.

மணிவண்ணன் பல படங்களுக்குக் கதை எழுதியபோதும் அவரது முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை’யின் கதை கலைமணியுடையது. அந்தக் கதைக்கு மணிவண்ணன் திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியிருந்தார். அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு இளையராஜாதான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் வினுச்சக்ரவர்த்திக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அருக்காணி என்னும் வேடத்தில் நடிகை சுஹாசினி நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எளிமையான கதை, சுவாரசியமான திரைக்கதை உணர்வுபூர்வக் காட்சிகள் என்று தனது இயக்குநர் பயணத்தை மிகத் தெளிவான புரிதலுடன் தொடங்கியிருந்தார் மணிவண்ணன். அடுத்த ஆண்டில், 1983இல் ஜோதி’, வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’, இளமைக் காலங்கள்’ என்னும் மூன்று படங்களை இயக்கினார்;  1984இல் அவர் இயக்கிய ஆறு படங்களில் நூறாவது நாள்’, இங்கேயும் ஒரு கங்கை’ ஆகிய இரண்டும் முக்கியமானவை.

நூறாவது நாள்’ படத்தில் நடிகர் சத்யராஜ், காட்சி ஒன்றுக்காக மொட்டை போட்டு நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதற்குப் பிறகு மொட்டை போட்டு நடிகர் நடித்தால் படம் வெற்றிபெறும் எனும் ஒரு நம்பிக்கை திரைத்துறையில் உருவாகிவிட்டது. சூரியன்’ திரைப்படத்தில் சரத்குமாரும் ஜென்டில் மேன்’ படத்தில் சரண் ராஜும் மொட்டை போட, அந்தப் போக்கு தொடர்ந்தது. நடிகரை மொட்டை போட வைத்தாலும் அவருடைய தயாரிப்பாளர் மொட்டை போடும்படியான நிலைமையை மணிவண்ணன் உருவாக்கியதில்லை. 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தனக்குத் தலையில் கொம்பு முளைத்ததும் இல்லை, தோல்வியின்போது தான் தலைகுனிந்ததுமில்லை என்றே அவர் கூறியிருக்கிறார். அவர் இயக்கிய ஐம்பது படங்களில் 25இல் நாயகனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்; அதில் ஜல்லிக்கட்டு’ முதல் அமைதிப்படை’ வரை 12 படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன.

இங்கேயும் ஒரு கங்கை’ படத்தின் கதை சற்றேறக்குறைய அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதையை ஒத்திருக்கும். சூழல் காரணமாகக் காதலியைப் பிரிந்துவிடுகிறான் காதலன். அவளுக்கு மணமாகிவிடுகிறது. இந்த வேளையில் மீண்டும் அவள் வாழ்வில் குறுக்கிடுகிறான். இப்போது காதலி மனைவியாகத் தொடர்கிறாளா, காதலனைக் கைபிடிக்கிறாளா என்பதுதான் முடிவு. படத்தின் திரைக்கதை விஷயத்தில் மணிவண்ணன் வேறு ஒரு பாதையில் பயணம் செய்திருந்தார். காதலனாக முரளியும், காதலியாக தாராவும், கணவனாக சந்திரசேகரும் (இந்தப் படத்தில்தான் சந்திரசேகர் தாடியை எடுத்துவிட்டு நடிக்கத் தொடங்கியிருந்தார்) நடித்திருந்தனர். பாக்யராஜ் தாலி செண்டிமெண்டைக் கையில் எடுத்திருந்தார். மணிவண்ணனோ மனிதாபிமான அடிப்படையில் முடிவை எடுத்திருந்தார்.

1986ஆம் ஆண்டு தீபாவளி நாளில் மணிவண்ணன் இயக்கிய ‘விடிஞ்சா கல்யாணம்’, பாலைவன ரோஜாக்கள்’ என்னும் இரு படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. இரண்டிலும் நாயகன் சத்யராஜ்தான். இரண்டும் வெவ்வேறு வகையான படங்கள். பாலைவன ரோஜாக்கள்’ மு.கருணாநிதி கைவண்ணத்தில் உருவான அரசியல் படம். இது மலையாளப் படமான வர்தா’வின் மறு உருவாக்கம். விடிஞ்சா கல்யாணம்’ ஒரு திரில்லர். ஆஃபாயில் ஆறுமுகம் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். ஒரே நாள், ஒரே இயக்குநர் இரண்டும் வெற்றி என்பதையெல்லாம் இனிப் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். போதைப் பொருள் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மணிவண்ணன் இயக்கிய படம் புயல் பாடும் பாட்டு’.


மணிவண்ணன் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட எல்லாப் படங்களும் பொழுதுபோக்கை நோக்கமாகக் கொண்ட படங்கள்தாம். அதில் மாறுபட்டு நிற்கிறது இனி ஒரு சுதந்திரம்’. சிறந்த நடிகருக்கான தேசிய விருதுப் போட்டியில் நாயக’னின் வேலுநாயக்கருடன் களத்தில் மோதிய கதாபாத்திரம் இது. விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் எவ்வளவு பாழ்பட்டுப்போயிருக்கிறது என்பதைக் குறித்து அவருக்கு எழுந்த ஆதங்கத்தில் உருவான படம் அது. விடுதலைப் போராட்டத் தியாகியாக நடிகர் சிவகுமார் நடித்திருப்பார். அவர் நுட்பமாக நடித்திருந்த படம் இது. அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான பணத்துக்காக, வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி, வெள்ளை வேட்டி சட்டை, கையில் மஞ்சள் பை, குடை சகிதம் அவர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நடந்துநடந்து தேய்ந்துபோன அழகை மணிவண்ணன் வசனமே இன்றிக் காட்டியிருப்பார். “உண்மை ஊசலாடிக்கிட்டிருக்கப்போ அதைக் காப்பாத்துறதுக்கு உணர்ச்சியாவது இருக்கனும். உணர்ச்சியே செத்துப்போனதுக்கப்புறம் உண்மையை யார் காப்பாத்துறது?”, “நாப்பது வருஷமா எனக்குள்ள ஊறிப்போயிருந்த நல்ல தத்துவத்தை நாலே வருஷத்துல நாசமாக்கிட்டியேடா” போன்ற வசனங்கள் அவரது உட்கிடக்கையைத் தெளிவாகக் காட்டும். கல்வி வியாபாரமான அவலத்தையும் இதில் சொல்லியிருப்பார் அவர்.

அவரை வெகுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த முக்கியமான படம் அமைதிப் படை’. நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனங்கள் குத்தீட்டியாகக் குத்தவல்லவை என்பதை இந்தப் படத்தில் மணிவண்ணன் காட்டியிருப்பார். இவ்வளவுக்கும் இது ஓர் அரசியல் படம் என்று சொல்லத்தக்கது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு குடும்பம் படம். அதனூடாக அரசியலைத் தூவியிருப்பார். இதன் அடுத்தபாகமாக வெளியான நாகராஜன் சோழன் MA, MLA’தான் மணிவண்ணனின் இறுதிப் படம்.

இயக்குநர் மணிவண்ணன் சுமார் பத்துப் படங்களைத் தயாரித்திருக்கிறார், நானூறு படங்களில் நடித்திருக்கிறார். நடிகனாக அவருடைய ஆதர்ஸம் எம்.ஆர்.ராதாதான் என்கிறார் அவர். கொடிபறக்குது’ படத்தில் அவரை பாரதிராஜாதான் வில்லன் நடிகராக்கினார். கில்பர்ட் தனசேகரன் என்னும் அந்த வேடத்துக்கு பாரதிராஜாதான் குரல் தந்திருப்பார். பெரிய மனித போர்வையில் அயோக்கியத்தனங்களில் ஈடுபடும் கதாபாத்திரம் அது. முதன்முதலில் வாய்ப்புத் தந்த வெளி இயக்குநர் என்றால் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். படம் தேவா’. அதில் மொட்டை போட்டு மீசையுடன் காட்சி தருவார்.

படையப்பா’ படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்த சிவாஜி கணேசன், “டேய் தாடிக்காரா உன்னிடம் தொழில் இருக்குதுடா நீ பெரிய ஆளா வருவ” என்று சொல்லிக் கட்டியணைத்துத் தலையைத் தடவிக்கொடுத்த சம்பவத்தை நினைவுகூரும் மணிவண்ணன் பல விருதுகளைவிட மதிப்பு மிக்க விருது அது எனப் புளகாங்கிதமாகக் கூறுகிறார் மணிவண்ணன்.

இயக்குநர் அகத்தியனின் காதல் கோட்டை’யில் இவர் ஒரு டெலிபோன் பூத் வைத்து நடத்துவார். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பே காதல் விவகாரங்களின் தூதுவனே’ என்று பேசியபடி காதலைக் கலாய்க்கும் அவரது நடிப்பு வெகுஜன மனத்தில் வெகுகாலமாக நிற்கக்கூடியது. கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி’, கார்த்திக்குடன் கோகுலத்தில் சீதை’ என எல்லாப் பெரிய நடிகரோடும் சேர்ந்து நடித்துள்ளார்.  ‘சங்கமம்’ திரைப்படத்து நாட்டுப்புறக் கலைஞர் பாத்திரம் ஒரு நடிகராக அவருக்கு நிறைவைத் தந்ததாகக் கூறியிருக்கிறார். மணிவண்னனும் சத்யராஜும் சேர்ந்து தாய் மாமன்’, மாமன் மகள்’ போன்ற படங்களில் அடித்த லூட்டி இப்போதும் யூடியூபில் ஆதிக்கம் செலுத்துகிறது. யதார்த்தமான நகைச்சுவையில் மிளிர்ந்த நடிகராக இருந்தபோதும் நகைச்சுவை தனித் தடத்தில் பயணம்செல்வதை அவர் விரும்பியதில்லை. கடவுள் நம்பிக்கையில்லாத மணிவண்ணன் கடவுள்’ திரைப்படத்தில் கடவுளாக நடித்திருக்கிறார்.


தமிழீழ அரசியலைப் பேசும் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இயக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்திருக்கின்றன. ஆனால், அது நடைபெறாமலே போய்விட்டது. ஆனால், அவரது படங்கள் மணிவண்ணைப் பற்றிய சேதிகளை ரசிகர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். இன்று (ஜூலை 31) அவரது பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.   

 இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான கட்டுரை இது.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்