இந்த வலைப்பதிவில் தேடு

பாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 01, 2020

தண்டிக்கப்பட்ட நியாயங்கள்

 இனிய தாம்பத்யம் இடையே ஒரு நண்பன்


இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்த படம் ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ (1983). ஒளிப்பதிவு, T.S.வினாயகம். இசை, சங்கர் கணேஷ். 

மூளை ஆபரேஷன் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் பிரபு (சிவகுமார்). ‘சின்னதா இருந்தாலும் கறை கறைதான். அது உடையில இருந்தாலும் சரி உள்ளத்துல இருந்தாலும் சரி என்னால பொறுத்துக்க முடியாது’ என்று வாழ்பவர் அவர். மருத்துவம் தொழிலாக இருந்தபோதும் கலைரசனையும் மிக்கவர். அவருடைய மனைவி ராதா (லட்சுமி). அவர் வழக்கமான மனைவி. கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்பவர். கணவன் எதிரே புடவை மாற்றவே கூச்சப்படுவர். இந்தத் தம்பதிக்கு லட்சுமி (பேபி மீனா) என்றொரு பெண் குழந்தை.

மகிழ்ச்சியாகவும் அன்யோன்யமாகவும் சென்றுகொண்டிருக்கும் குடும்பத்தில் பிரபுவுடைய நண்பர் ஓவியர் ராஜேஷ் (சிவச்சந்திரன்) வந்துசேர்கிறார். திரைக்கதையில் ஒரு திருப்பத்தையும் மாற்றத்தையும் உருவாக்கும் கதாபாத்திரம் இது. ராஜேஷ், ரசனையற்ற மனைவியுடன் குடும்பம் நடத்த இயலாமல் விவாகரத்துப் பெற்றுக்கொண்டவர். பிரபு படிப்பதற்கு உதவிய குடும்பத்தின் வாரிசு ராஜேஷ் என்பதால் நட்புடன் நன்றியுணர்வும் கொண்டிருக்கிறார் பிரபு. ராஜேஷ் கடுமையான குளிர் காய்ச்சலால் தவிக்கும்போது அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கிறார் பிரபு. கூடமாட ஒத்தாசையாக இருக்கும்படி மனைவி ராதாவையும் நிர்ப்பந்திக்கிறார் பிரபு. 

முதன்முறை ராஜேஷுக்கு ஊசி மருந்துசெலுத்துவதற்காக அவன் கையைப் பிடித்துக்கொள்ளும்படி பிரபு சொல்லும்போது, ராதா சேலையை ராஜேஷ் கையில் போர்த்திப் பிடிப்பார். பின்னர் வீட்டில் ஒருவருமற்ற நேரத்தில் மயங்கிவிழுந்த ராஜேஷைத் தொட்டுத் தூக்கிப் படுக்கையில் படுக்கவைக்க நேரிடுகிறது. பிரபுவிடம் இதைச் சொல்கையில் பிரபு அதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட அட்வகேட் சிதம்பரத்தின் மூளையில் உருவான கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையைச் செய்து முடிக்க குறிக்கப்பட்ட நாளன்று பிரபுவின் திருமண நாள். சிகிச்சை காரணமாகக் கோவிலுக்குச் செல்ல முடியாமல் அம்மா படத்துக்கு முன்பே பிரபுவைக் கும்பிடுகிறார் ராதா. குனியும்போது தாலிச் சரட்டின் ஒரு பகுதி அறுந்து தரையில் விழுகிறது. பதறிப் போகிறார் ராதா. ராதாவைச் சமாதானப்படுத்திவிட்டு பிரபு மருத்துவமனைக்குப் புறப்படுகிறான். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்கிறான். இரவில் நண்பன் ராஜேஷுக்கு விருந்து தருகிறார்கள்.  

அப்போது ராஜேஷுக்கு மிகவும் பிடித்த பால் பாயசம் செய்திருக்கிறார் ராதா. அதைச் சாப்பிடும் ராஜேஷ், ‘இந்த ருசியை மாத்திரம் என்னால் வரைய முடிஞ்சிருந்தா நான் வரைந்த ஓவியங்கள்லேயே இதுதான்  நம்பர் ஒன்னா இருக்கும்டா’ என்று கூறி பூரித்துப்போகிறார். திருமண நாளன்று எப்போதும் பாடும் பாடலை அன்றும் ராதா பாடுகிறார்; பின்னர் ராதா மூச்சுத்திணறலால் மயங்கிவிழுகிறார். அந்தத் திருமணநாள் ஏதோ விபரீதமான நாளாகப் படுகிறது ராதாவுக்கு.

மறுநாள் செய்தியாளர் சந்திப்பில் மனைவியின் பெருமையைப் பேசிவிட்டு வீட்டுக்கு வருகிறார் பிரபு. அங்கே மனைவி இல்லை. அவர் எழுதிவைத்த கடிதம் மட்டுமே இருக்கிறது. இடிவிழுந்ததுபோல் ஆகிவிடுகிறது பிரபுவுக்கு. கால் போன போக்கில் போகிறான். அதன் பின்னர் அந்தக் குடும்பம் என்ன ஆனது என்பது அதன் பின்னரான திரைப்படம்.

என்ன ஏதென்றே புரியாமல் வீட்டில் தனிமையில் பிரபு தவிக்கிறார். அவரது தவிப்பை, துயரத்தைக் காட்சிகளாகவே விவரித்திருப்பார் பாஸ்கர். லட்சுமி வரைந்த ‘வீட்டுக்கு முன்னே ஆமை இருக்கும்’ ஓவியம், மீன் தொட்டி தரையில் விழ, துடித்துக்கொண்டிருக்கும் மீன்கள், ‘அப்பா மீனு, அம்மா மீனு, நானு மீனு’ எனக் குழந்தை லட்சுமி கூறிய வார்த்தைகள் இவற்றைக் கொண்டே அந்தக் காட்சியை அருமையான சோக ஓவியமாகத் தீட்டியிருப்பார் பாஸ்கர். 

கணவன் மனைவி அன்யோன்யத்தை, மனிதரின் பிரியத்தை மிகவும் யதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர். அநேக மிட் ஷாட்கள். எந்தக் கதாபாத்திரமும் கேமராவைத் தப்பித்தவறிக்கூடப் பார்ப்பதில்லை. அப்படியொரு நுட்பம். ஒரு கதைக்கு என்ன தேவையோ அதைத் தரும் காட்சியமைப்பு. காட்சியில் கதாபாத்திரங்கள் நிற்கும் இடங்கள், அவற்றின் தோரணை, உடல்மொழி, வசனங்கள் (‘இடிவிழுந்த வீட்டுக்கு யாருமே குடிபோக மாட்டாங்கப்பா’, ‘இது மாடு மேஞ்ச துளசி இனி மாடத்துல வைக்க முடியாது’), பார்வை, பின்னணி இசைத் துணுக்குகள் அவற்றை கேமரா உள்வாங்கியிருக்கும் விதம் என ஒவ்வொன்றும் திரைக்கதையை விவரிக்கும் போக்கு ரசிக்கவைக்கிறது. முழுமையான சினிமா அனுபவம் தருகிறது.

முற்பகுதியில் அலோபதி மருத்துவம் இழையாகப் பயன்படுகிறது என்றால், பிற்பகுதியில் நாட்டு மருத்துவம் இடம்பெறுகிறது. பங்களா போன்ற வீட்டைவிட்டு வந்த ராதா பார்வையற்றவராகவும் பூ விற்கும் பருவப் பெண்ணாக லட்சுமியும் (ரோகிணி) பாழடைந்த மண்டபத்தில் வசிக்கின்றனர். அந்த ஊருக்கு வருகிறார் பிரபு. இப்போது அவர் பரதேசியான தாடி பாபா. கணிதச் சூத்திரம் மூலம் அவிழும் கணக்கைப் போல் திரைக்கதையில் ஒவ்வொரு முடிச்சும் அழகாக விழுந்து அப்படியே அவிழ்கிறது. அதுதான் இந்தத் திரைக்கதையின் தனித்துவம்.

அன்று தனக்கும் ராஜேஷுக்கும் இடையே என்ன நடந்தது என்பதை பாபாவிடம் அவர் யாரென்பதே தெரியாமல் ராதா சொல்வார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டே இருப்பார் பாபா. படித்துறையில் நடக்கும் இந்தக் காட்சி உணர்வுமயமானது. விபத்தில் சிக்கிய லட்சுமியை பாபா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை வழியே காப்பாற்றுவார். இறுதியில் பாபா யார் என்பது தெரிந்தபின்னர் ராதா என்ன செய்கிறார், பாபா குடும்பத்துடன் சேர்கிறாரா என்பதை யூடியூபில் கிடைக்கும் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.    

ஒரே ஒரு கணம் மனம் தடுமாறியதால் இவ்வளவு பெரிய தண்டனையா? உண்மையில் உடம்பு மனம் இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? ஆண், பெண் உறவு, குடும்ப அமைப்பு, மரபு, நவீனம் இவை தொடர்பான பல உணர்வுபூர்வக் கேள்விகளைப் படம் எழுப்புகிறது. ராதா ஏன் ஊரை விட்டு ஓடி வந்தார்? ராஜேஷ் ஏன் தனக்கு அப்படி ஒரு தண்டனையை அளித்துக்கொண்டார்? பிரபுவால் ஏன் குடும்ப வாழ்வுக்குள் மீண்டும் வர இயலவில்லை? ஓவியத்தைப் பார்த்துப் புரிந்துகொள்வதுபோல் அவரவர் புரிதலுக்குத் தகுந்த வாய்ப்பைப் பார்வையாளர்களுக்கு இயக்குநர் அளித்துள்ளார்.



படத்தின் தலைப்பிலிருந்து இறுதிவரை அனைத்தையும் அலசிப் பார்த்து பார்வையாளர்கள் ஒரு முடிவுக்கு வரலாம். ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தைப் பிறருடன் விவாதிக்கலாம். அப்படியோர் அம்சத்தைத் திரைக்கதையில் புழங்கவிட்டிருப்பது செய்நேர்த்திக்கு உதாரணம். பாஸ்கர் இயக்கிய படங்களில் தீவிரமான படம் இது. இதிலும் திரைக்கதைதான் முதுகெலும்பு. அது மிகவும் தெளிவு, நேர்த்தி. ஆனால், ராதா குளியலறையில் மயங்கிவிழும் அந்தத் தருணத்தில் அப்படியொரு நிகழ்வுக்குச் சாத்தியமா எனும் கேள்வி எழுகிறது. ஆனால், திரைக்கதையை நகர்த்த சில லாஜிக் மீறல் தேவைப்படுகிறது என்னும் அம்சம் அந்தக் கேள்வியை நீர்த்துப்போகச் செய்கிறது.   

சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சையை அரசின் அனுமதிபெற்று, படம்பிடித்து அதைப் படத்தின் டைட்டில் காட்சியில் பயன்படுத்தியிருக்கிறார் பாஸ்கர். தமிழ்த் திரையுலகின் முக்கியப் படங்களில் ஒன்றாக இடம்பெறத் தகுதிகொண்ட படம் இது.

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

கொன்றவளா அவள் கொண்டவளா?


இயக்குநர் M.பாஸ்கர் M.A. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்த படம் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ (1982). ஒளிப்பதிவு, விஸ்வம் நட்ராஜன். இசை, சங்கர் கணேஷ்.  முழுமையான பொழுதுபோக்குக்கு உத்தரவாதமளிக்கும் நயமான திரில்லர் வகைப் படம் இது.

அன்பான கணவன், மனைவி, அழகுக் குழந்தை என்று நிம்மதியாக வாழ்ந்த ஒரு குடும்பத்துக்கு ஏற்பட்ட சிக்கலும் அதிலிருந்து அது எப்படி மீண்டது என்பதுமே கதை. ராஜேஷ் (சிவகுமார்) ஒரு பெரிய நிறுவனத்தில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிகிறார். அவருடைய மனைவி ராதா (அம்பிகா). இவர்களுடைய குழந்தை ப்ரியா (பேபி மீனா). பிற பெண்களுடன் ராஜேஷுக்குத் திருமணம் தாண்டிய உறவு உள்ளதோ என்பது ராதாவின் சந்தேகம். அது தொடர்பாக அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது. காரசாரமாக வந்துவிழும் வார்த்தைகள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கின்றன. ராதாவை வர்கீஸ் என்னும் உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறான் ராஜேஷ்.

அன்று ஏப்ரல் 1. வழக்கம்போல் அலுவலகம் சென்று வருகிறான் ராஜேஷ். குழந்தை வரவேற்பறையில் இருக்கிறாள். ராதா படுக்கையறையில் பொட்டு கலைந்து, காதில் ஒரு தோடு இல்லாமல் சற்று அலங்கோலமான தோற்றத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். ராஜேஷின் வாசிப்பு அறையில் ரிக்கார்ட் ப்ளேயர் இயங்கிக்கொண்டிருக்கிறது. பயன்படுத்திய இரண்டு கப் அண்ட் சாஸர்கள் அப்புறப்படுத்தப்படாமல் டீப்பாயின் மீது உள்ளன. இவையெல்லாம் ராஜேஷுக்கு ஏதோ ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது அவன் தன் வாசிப்பறைக்குச் செல்கிறான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் மூழ்கடிக்கிறது. அவனை மட்டுமல்ல; பார்வையாளர்களையும்தான்.

லாரன்ஸ் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளர் லாரன்ஸ் (சத்யராஜ்). இவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர் ராதா. லாரன்ஸுடைய மனைவி ஷீலா (சத்யகலா). அவர்களுடைய குழந்தை மேரி பார்வைத்திறனற்றவள். லாரன்ஸுக்குப் பெண்கள் பலருடன் உறவிருப்பதாக அவரது கடையில் வேலை பார்க்கும் கமல் உட்படப் பலரும் பேசுகிறார்கள். இது ஷீலாவுக்கும் தெரியும். இந்த லாரன்ஸின் சடலம்தான் ராஜேஷின் வாசிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடக்கிறது. லாரன்ஸை யார் கொலைசெய்திருப்பார்கள் என்பதை சுவாரசியமான திரைக்கதை மூலம் விவரித்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்.

முழு உண்மையை அறியாமல், கேட்ட, பார்த்த தகவல்களின் அடிப்படையிலான ஊகத்தின் உதவியுடன் உண்மையைப் பார்க்க விழைந்தால் அது எத்தகைய விபரீதத்தில் கொண்டுவிடும் என்பதையே திரைக்கதை தெள்ளத் தெளிவாக எடுத்துவைத்திருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய் என்பார்கள். அதைத் தான் இந்தப் படமும் சொல்கிறது. லாரன்ஸை ராதா கொலைசெய்திருப்பாளோ எனச் சந்தேகிக்கிறார் ராஜேஷ். ராஜேஷ் கொன்றிருப்பாரோ எனச் சந்தேகிக்கிறாள் ராதா. ராதாதான் லாரன்ஸைக் கொன்றாள் என்றே சொல்கிறாள் ஷீலா. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவரவர் ஊகத்துக்குத் தேவையான தடயங்களும் சந்தர்ப்ப சாட்சியங்களும் அவரவர் ஊகத்தை வலுப்படுத்துகின்றன. இப்படி ஒரு பயணத்தின் வழியே கொலைசெய்தவர் யார் என்பதும், அதற்கான காரணம் என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரியவரும்போது அது எதிர்பாராததாக உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவு, பின்னணியிசை இரண்டும் அமானுஷ்யத் தன்மையுடன் இயங்கும்வேளையில் வசனமோ பூடகத்தன்மையிலானது. சிவகுமார், அம்பிகா, பேபி மீனா, சத்யராஜ், சத்யகலா, விஜயராகவன் எனப் படத்தில் பங்குகொண்ட அனைவரும் அவரவர் தரப்பைச் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு திரில்லராக எந்த இடத்திலும் இறுக்கம் குலையாமல் இறுதிவரை பயணிக்கிறது படம். நகைச்சுவைக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி, வனிதா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் உள்ளார்கள். ’பைரவி’ திரைப்படத்தை நினைவுபடுத்துவது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாகக் கவரவில்லை. ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி சிவகுமாரைப் படுத்தி எடுக்கும் சில காட்சிகளை மட்டும் ரசிக்க முடிகிறது.

மனைவிமீது அன்புகொண்ட அதே நேரத்தில் அவள் மீது எழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலாத ஒரு சராசரிக் கணவனாக சிவகுமார் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையான பாசம், கோபம், எரிச்சல், ஆற்றாமை என அத்தனை உணர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார். மனரீதியான பாதிப்பு கொண்ட பெண்ணாக இருந்தபோதும் அம்பிகாவின் கதாபாத்திரம் இயல்பான ஒரு மனைவின் தன்மையிலிருந்து பெரிதும் மாறாதது. கணவனே கண் கண்ட தெய்வம் என்னும் பழமையில் ஊறிப்போனது. அதே நேரத்தில் தன் உரிமைக்காகக் குரல் கொடுக்கவும் தயங்காதது. வேர் பழமையிலும் கிளை புதுமையிலும் ஊடாடும் கதாபாத்திரத்தை அம்பிகா இயல்பான நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்.  கனவில் அம்மா மலையிலிருந்து விழுந்ததைக் கண்ட அதிர்ச்சி நீங்காத நிலையில் மருத்துவமனையில் அம்மா அம்பிகாவைப் பார்க்க வரும் காட்சியில் பேபி மீனாவின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்த்துவிடக் கூடியது. தந்தை இரவின் கெட்ட கனவால் கத்தும்போது பேபி மீனா, “ஏன் டாடி கத்துத இனிமே இப்படிக் கத்தாத எனக்குப் பயமா இருக்கு” என்பது மிக யதார்த்தமான வசனம். திரைக்கதையும், அதற்குத் தேவையான கூர்மையான வசனங்களும் இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

படத்தின் வசனங்களில் பாஸ்கரின் எழுத்து வன்மை வெளிப்படுகிறது. உதாரணமாக சில வசனங்கள்:

“செத்துப் போனவனுக்கு ஜாதகம் பாக்குறதும் கெட்டுப் போன என் கணவனப் பத்திப் பேசுறதும் ஒண்ணுதான்.”

”மாங்கல்யம் பறிபோயிடுச்சு தாங்கிக்கிட்டேன் ஆனா என் மானம் பறிபோனா என்னால தாங்கிக்கவே முடியாது.”

”கொலைப்பொருளா இல்ல கலைப் பொருளா வச்சிருக்கேன்.”

”குறுக்குவிசாரணை பண்ணுங்க குருட்டு விசாரணை பண்ணாதீங்க”

”எங்குணம் துளசி மாதிரி மத்தவங்களுக்கு மருந்தா இருப்பேனே ஒழிய விருந்தா இருக்க மாட்டேன்”

இயன்றவரை யதார்த்தமான திரைமொழியில் படத்தை நகர்த்தினாலும் தான் எடுப்பது ஒரு பொழுதுபோக்கு சினிமா என்ற விவேகத்துடன் பாஸ்கர் படத்தை இயக்கியிருப்பதால் எந்த இடத்திலும் சினிமாத்தனங்கள் வரம்பை மீறி வெளிப்படவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை இப்போதும் எந்த விலகலுமின்றிப் படத்தைப் பார்க்க முடிவதே இந்தப் படத்தின் சிறப்பைச் சொல்லும்.

பக்கத்து வீட்டு ரோஜா

இது ஒரு ‘நகை’ச்சுவைப் படம்


இயக்குநர் M.பாஸ்கர் M.A. இயக்கிய நான்காம் படம் ‘பக்கத்து வீட்டு ரோஜா’. 1982 செப்டம்பர் 2 அன்று வெளியாகியிருக்கிறது. ‘பைரவி’ படத்தில் நடிக்க மறுத்திருந்த நடிகர் முத்துராமனின் மைந்தனான கார்த்திக்தான் இந்தப் படத்தின் நாயகன். இதில் அவருக்கு ஒரு காட்சியில் பெண் வேடமும் உண்டு. இந்த ஆண்டில் நடிகர் கார்த்திக் நடித்த ‘நினைவெல்லாம் நித்யா’, ‘வாலிபமே வா வா’, ‘இளஞ்ஜோடிகள்’ உள்ளிட்ட பத்துப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஜோடியாக நடிகை ராதா நடித்திருந்தார். 1982-ல் ராதா ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’ உள்ளிட்ட 14 படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திக், ராதா இருவரும் இந்த ஆண்டில் ஆறு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். 1981-ல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகிய வெற்றி ஜோடி இவர்கள் என்பதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

படத்தின் கதையும் தயாரிப்பும் கலைஞானம். அவருடைய உதவியாளர் பனசை மணியன் திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். இயக்கம் மட்டுமே பாஸ்கர். இசை சங்கர் கணேஷ். மனோரமா, கவுண்டமணி, ஜனகராஜ், S.S.சந்திரன், தியாகு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். மலையாள நடிகர் பிரேம் நஸீரின் மகனான ஷாநவாஸ் எதிர்மறை நாயகனாகவும் அப்போதைய பிரபல நடிகை ராணி பத்மினி நடனக்காரியாகவும் வேடமேற்றிருக்கிறார்கள். நிஜ வாழ்வில் கொலைக்காளான ராணி பத்மினிக்கு இந்தப் படத்திலும் அதே கதிதான்.

மிக எளிய கதை. படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், பெண் ஒருவர் நகைமீது கொண்ட ஆசையால் எதிர்கொண்ட ஏற்ற இறக்கமான சம்பவங்கள் என்று சொல்லலாம். பொதுவாகவே பாஸ்கர் தனது படத்துக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்குப் பெரிதாக மெனக்கெடவில்லை. என்ன இருந்தாலும் இது சினிமாதான் என்ற புரிதல் காரணமாக இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். இந்தப் படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு நடிகர்களது பெயரே வழங்கப்பட்டிருக்கிறது. ராதாவுக்கு நகை என்றால் கொள்ளைப் பிரியம். கோயிலில் அர்ச்சகரிடம் இரவலாக அம்பாள் நகையையே கேட்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். யாராவது கண்ணைப் பறிக்கும் புது நகை ஒன்றை அணிந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும் அதை எப்படியாவது அணிந்துபார்க்க வேண்டும் என்ற அடங்காத ஆசை அவருக்கு எழுந்துவிடும்.

நகைக்கடை அதிபர் மதன் ஒரு காமுகன். நகைகளுக்கு மயங்கும் பெண்களைத் தன்வசப்படுத்தி மகிழ்பவன். அவனது நகைகளைப் பறிக்க முயன்ற கூட்டத்தினருடன் சண்டையிட்டு அவனுக்கு கார்த்திக் உதவியதால் இருவரும் நண்பர்களாகின்றனர். தனது கடையிலேயே மதன், கார்த்திக்கைப் பணியில் அமர்த்துகிறான். நகைக்கடைக்கு வரும் ராதா கார்த்திக்கை அதன் உரிமையாளர் என எண்ணிக்கொள்கிறாள். அழகான பெண் என்பதால் கார்த்திக்கும் அதை அப்படியே பராமரிக்கிறான். இருவருக்கும் காதல் வந்துவிடுகிறது.

தன்னைக் கடையின் உரிமையாளர் என நினைப்பதால் தனக்கு உதவுமாறு மதனிடம் வேண்டுகிறான் கார்த்திக். ராதாவுக்காக அவனும் கார்த்திக்குக்கு உதவுவதாக ஒத்துக்கொள்கிறான். ராதா குடும்பத்தினரிடம் கார்த்திக்கின் கடையில் தான் வேலை பார்ப்பதாகச் சொல்கிறான் மதன். கார்த்திக் ராதா திருமணம் நடந்துவிடுகிறது. மணமான மறுநிமிடம் ராதாவுக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. அதன் பின்னர் ராதாவுக்கு கார்த்திக்கை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவரும் ஒன்றாக இருந்தும் ஒன்றிணைய அவளுக்கு மனம் ஒப்பவில்லை. இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதைச் சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

பெண்களின் நகை மோகத்தால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைச் சுட்டிக்காட்டும் படம். நகைச்சுவையான திரைக்கதைதான் படத்தை நகர்த்துகிறது. சிஸ்டர் என்று கூறியே பெண்களைக் கட்டிலில் தள்ளத்துடிக்கும் மதன் கதாபாத்திரம் வழியே சமூகத்தில் சகோதரி என்னும் பதம் எப்படியான பொல்லாங்குப் போர்வை என்பதைச் சுட்டுகிறார் இயக்குநர். பாஸ்கர் படங்களில் பெண்களின் உரிமை என்பது பேசப்பட்டாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது வரம்புக்குள் இருக்கும்வரைதான் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இந்தப் படத்திலும் அந்தப் போக்குதான் உள்ளது. என்றபோதும், ஆண்களின் புரிதலின்மையையும் படம் பேசுகிறது. தன்னை நாடாத மனைவி ராதாவை வழிக்குக் கொண்டுவர இன்னொரு பெண்ணுடன் காதல் கொள்வதுபோல் நடிக்கிறார் கார்த்திக். ஆண்களின் இந்த நடவடிக்கை எவ்வளவு அபத்தம் என்பதைப் படம் கவனப்படுத்துகிறது.  

படத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் பெண் இயக்குநராக வருகிறார் மனோரமா. நாயகர்கள் டூப் போடுவதை நக்கலடிக்கும் காட்சி ஒன்று படத்தில் வருகிறது. நாயகியைச் சாட்டையால் அடிக்கும் காட்சியை டூப் போட்டு எடுக்கிறார்கள். தயாரிப்பாளர் உதவி இயக்குநரிடம் ‘டூப்புக்கு வசனம் உள்ளதா?’ என்று கேட்கிறார். வாய்ப்பு கேட்டு வரும் நடிகர் ஒருவர் பல் செட் வைத்துக்கொண்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனம் பேசி பல் தெறித்து நிற்கிறார். கீழே விழுந்து கிடக்கும் பல் செட் தமிழ் சினிமாவைக் கேலியாகப் பார்க்கிறது. சினிமாவில் இருப்பதால் அதை உன்னதமான வேலையாகக் கருதாமல், தனக்குக் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளில், அதன் அபத்தங்களை வெளிக்கொணரும் காட்சிகள் இயக்குநரின் முத்திரைகளாகின்றன.

முந்தையப் படங்களைப் போல் இதிலும் நட்பு, பாசம், காதல், பாலியல் வல்லுறவு, கொலை என ஒரு பொழுதுபோக்குப் படத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கலந்து, தன்னால் இயன்ற அளவு தெளிவாகவும் நேர்த்தியாகவும் படத்தைத் தந்திருக்கிறார் பாஸ்கர். யூடியூபில் இதன் மட்டமான பிரிண்ட்தான், அதுவும் பாடல்கள் எவையுமின்றிக் கிடைக்கிறது.  

ஞாயிறு, நவம்பர் 15, 2020

சூலம்: பாடலாசிரியர் வைரமுத்துவின் முதல் படம்


ஆஸ்கார் மூவிஸ் M.பாஸ்கர் M.A. தயாரித்து கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘சூலம்’ (1980). வசனம் மதுரை தங்கம். இந்தப் படத்தில்தான் வைரமுத்து பாடலாசிரியராக முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்தப் படத்தின், ‘பெண்ணின் மானம் காக்கும் சூலம்…’, ‘பூனைக்கண்ணி ஜூலி…’ என்னும் இரண்டு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். திரைத்துறைக்கு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவர் பாஸ்கர்தான். ஆனால், இந்தப் படம் வெளிவரும் முன்னரே அவர் பாடலெழுதிய ‘நிழல்கள்’ படம் வெளியாகிவிட்டது. ஆக, வைரமுத்துவின் முதல் படம் ‘நிழல்கள்’ என்றாகிவிட்டது.  

ராதிகா, ராஜ்குமார், சுதிர், புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இது. ‘சூல’த்தின் ஒருவரிக் கதை என்று பார்த்தால், வீரமான பெண் ஒருத்தியின் ஞானமிகு மானப் போராட்டம் என்று சொல்லலாம். தன்மானம் மிக்க பெண் ஒருத்தியைக் குடும்ப கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்வாக நினைக்கும் இளைஞன் ஒருவன் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். தனக்கு ஏற்பட்ட அந்த மோசமான சம்பவத்தை அந்தப் பெண் எப்படிக் கையாளுகிறார் என்பதே திரைக்கதையாக விரிந்திருக்கிறது.


மகாலட்சுமி மில் அதிபர் மகாலட்சுமி அம்மா மில் தொழிலாளர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். அவருடைய மகன் அமெரிக்காவில் படித்துவிட்டு வரும் சின்னதுரை. அவருக்கோ பணமும் கௌரவமும்தாம் பெரிது. தொழிலாளர்களைவிட மில்லே அவருக்கு முதன்மையானது. அந்த மில் அருகே உணவுக் கடை நடத்திவருகிறார் அன்னம்மா. அவள் தன்மானமிக்க குப்பத்துப் பெண். பர்மாவிலிருந்து வந்தவள். அவள் என்ன சொன்னாலும் குப்பத்து ஜனங்கள் கேட்பார்கள். அந்த அளவுக்கு அவளுக்கு அங்கே செல்வாக்கு.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய சின்னதுரை குப்பத்து மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கும் இடத்தில் மில் ஒன்றை நிறுவத் துடிக்கிறான். இதற்கு மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கிறாள் அன்னம்மா. பணத்துக்கும் அவள் மசியவில்லை. தங்களது குடிசைகளை எரிக்க வந்த சின்னதுரை அனுப்பிய ஆட்களையும் குப்பத்து ஜனங்கள் விரட்டி அடித்துவிடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து சின்னதுரையின் கொடும்பாவியை எரிக்க ஆத்திரமடைந்த சின்னதுரை அதற்குப் பழிவாங்க நினைத்து அன்னம்மாவைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். 

சின்னதுரை கையாலேயே தனக்குத் தாலி கட்டவைப்பதாகச் சவால் விடுகிறாள் அன்னம்மா. சின்னதுரையின் காதலியான ரீட்டா எனும் நடனக்காரி ஹோட்டலில் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறாள். அந்தப் பழி அன்னம்மாமீது விழுகிறது. அவள் கொலைப்பழியிலிருந்து மீண்டாளா, சின்னதுரையிடம் இட்ட சவாலில் வெற்றிபெற்றாளா என்பதுதான் திரைக்கதையின் எஞ்சிய பயணம். 


படத்தில் அன்னம்மாவுக்கு ஆதரவாக, உடன் பிறக்காத அண்ணனாக இருப்பவன் பீட்டர் (சுதிர்). பீட்டர் ஒரு தொழுநோயாளி. மருத்துவமனையில் அன்னம்மாவுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவன் அனைவருக்கும் பிரியத்துடன் சாக்லேட் வழங்குகிறான். ஆனால், அவனது தொழுநோய் பாதிப்பு கண்ட கையைப் பார்த்த ஒருவரும் அவனிடம் சாக்லேட் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அவனிடம் அன்னம்மா மாத்திரம் பிரியத்துடன் சாக்லேட்டைப் பெற்று, ‘உங்க மனசு மாதிரி ரொம்ப இனிப்பா இருக்கு அண்ணன்’ என்று சொல்லிச் சுவைக்கிறாள். தொழுநோய் என்பது தொற்று நோயல்ல என்பதை வசனமாகச் சொல்லாமல் காட்சியாகச் சொல்லிய விதத்தில் ‘சூலம்’ நிமிர்ந்து நிற்கிறது. வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் தொழுநோயாளிகளை இவ்வளவு நேர்மறைத் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?  

திரைக்கதையின் அடுத்த பகுதி உடுப்பியில் நிகழ்கிறது. அங்கேயும் சின்னதுரை மில் ஒன்றை நிறுவ முயல்கிறான். ஆனால், அங்கே எஸ்டேட் அதிபராக இருக்கும் ஜூலி என்னும் பெண் அவனது நினைப்புக்கு இடைஞ்சலாக இருக்கிறாள். அந்த ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காமுகன் ஒருவன் அப்பாவிப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினான். அவனை மாறு கை மாறு கால் வாங்க பஞ்சாயத்து முடிவுசெய்து நிறைவேற்றியது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாறு கை மாறு கால் விழா எடுப்பது அவர்களது வழக்கம்.


ஜூலியின் கொட்டத்தை அடக்க அவள் நடத்தும் மீன்பிடித் தொழிலில் சின்னதுரையும் ஈடுபடுகிறான். அன்னம்மாவுக்கு அவன் செய்த துரோகத்துக்குப் பழிவாங்குவது போல் ஜூலி ஒவ்வொன்றாக நிகழ்த்துகிறாள். இறுதியில் தன்னை அவன் பாலியல் வல்லுறவுசெய்துவிட்டதாகவும் பழி போடுகிறாள். அவளைப் பழிவாங்க சின்னதுரை அவளைக் கொல்ல முயல்கிறான். அப்போது அவன் புதை மணலில் விழுந்துவிடுகிறான். தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உடுத்தியிருந்த உடையைக் கழற்றி, கயிறாக்கி அவனைக் காப்பாற்றுகிறாள் ஜூலி. அன்னம்மாவின் மானம்போகக் காரணமாக இருந்த சின்னதுரையைத் தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் காப்பாற்றுகிறாள் ஜூலி. இப்போது ஜூலி தான் யாரெனச் சொல்கிறாள். என்றபோதும் அவளை சின்னதுரை திருமணம் செய்துகொள்கிறான்.

ராதிகாவுக்குக் கிடைத்த வேடத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரிய குறை என்றால் நாயகனாக நடித்த, நடிகை லதாவுடைய தம்பியான ராஜ்குமார்தான். ஏனோ அவர் அந்தக் கதாபாத்திரத்தில் ஒட்டவேயில்லை. ஒரு செல்வந்தனுக்குரிய தோற்றம் இருந்தபோதும் அவரிடம் ஓர் அந்நியத்தன்மை வெளிப்படுகிறது. இந்த வேடத்தில் முதலில் நடிகர் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமாவதாக இருந்திருக்கிறது.


இதன் பின்னர் வெளியான ‘விதி’, ‘புதியபாதை’, ‘வள்ளி’ போன்ற படங்களில் பாலியல் வல்லுறவுக்காளான பெண்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருந்தது. ‘சூலம்’ அதற்கெல்லாம் முன்னோடிப் படம். படத்தின் நாயகிப் பாத்திரம்தான் கனமானது. நாயகனுக்குப் பெரிய பங்கில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது, பாலியல் வல்லுறவுக்கு ஆளான நாயகி தற்கொலை செய்துகொள்ளவில்லையே தவிர அவள் பாலியல் வல்லுறவுசெய்தவனையே அடைவேன் எனப் போராடுவதும் ஒரு பிற்போக்குத்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால், அந்தப் பாத்திரம் மரபுக்கு உட்பட்டு முற்போக்கை வெளிப்படுத்தும் வகையிலேயே இயக்குநர் பாஸ்கர் அதை உருவாக்கியிருக்கிறார்.

தனது ‘பைரவி’ திரைப்படத்தில் நாயக அம்சம் தூக்கலாக இருந்தது என்றால் தான் தயாரித்த முதல் படமான இதில் இயக்குநர் பாஸ்கர் நாயகியை முதன்மையாக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான், விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தை இயக்கிய செந்தில்நாதன் உதவி இயக்குநராக அறிமுகமானார். செந்தில்நாதன்தான் சரத்குமாரை நாயகனாக்கியவர். தயாரிப்பாளர் கே. ராஜன் ‘சூலம்’ திரைப்படத்தில் ஊர்த் தலைவராக நடித்திருக்கிறார். திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கிறார் பாஸ்கர். எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் அப்படியே நூல் பிடித்ததுபோல் உள்ளது திரைக்கதை. ஆனால், சின்னதுரைக்கு ஜூலி யாரென்பதுகூடத் தெரியவில்லை என்பதை நம்ப இயலவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட அதே நேரத்தில் வழக்கமான பாதையிலிருந்து சற்று விலகிப் பயணப்படும் படம் ‘சூலம்’.

சனி, ஆகஸ்ட் 08, 2020

பைரவி: ரஜினியை ஸ்டாராக்கிய சூப்பர் படம்

‘பைரவி’ திரைப்படம் 1978-ம் ஆண்டில் வெளியாகியுள்ளது. இதே ஆண்டில் வெளியான ‘முள்ளும் மலரும்’ போல் இதுவும் ஓர் அண்ணன் தங்கைப் படமே. ‘பைரவி’ வெளியாவதற்கு முன்னரே ரஜினி, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘16 வயதினிலே’, ‘காயத்ரி’ போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்துவிட்டார். ஆனால், தனியான கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் என்பதே M.பாஸ்கர் M.A. இயக்கிய ‘பைரவி’யின் தனிச் சிறப்பு.

படத்தில் ரஜினியின் பெயர் மூக்கையன். அவருக்கு ஒரு தங்கை. அவளது பெயர்தான் பைரவி (கீதா). தாயற்ற குடும்பம். ஒரு நாள் குடிகாரத் தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்துத் தங்கைக்கு உணவு வாங்கி வருகிறான் சிறுவனான மூக்கையன். இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளை எடுத்துக் குழந்தைகளை வெட்ட வருகிறார். அவரிடமிருந்து தப்பித்து வரும் மூக்கையன் நதியோரம் கிடந்த பரிசலில் தங்கையை அமர்த்தி, பரிசலை ஓட்டி வருகிறான். நதியின் சுழலில் மாட்டிய பரிசல் கவிழ்கிறது. மூக்கையனும் பைரவியும் நதியில் விழுகிறார்கள். மூக்கையன் பிழைத்துவிடுகிறான். தங்கை பெயர் சொல்லிக் கதறிப் பார்க்கிறான். ஆனால் பதிலேதுமில்லை. தங்கை இறந்துவிட்டதாகக் கருதி, துயரத்துடன் தான் ஒதுங்கிய கிராமத்துக்கு வருகிறான்.

அந்த ஊரின் பண்ணையார் குடும்பத்துப் பெண்மணி அவனுக்கு அடைக்கலம் தருகிறார். தன் மகன், மகளுடன் மூக்கையனையும் வளர்க்கிறார் அவர். அந்த நன்றிக்கடனுக்காகவே அவன் வயதையொத்த பண்ணையார் ராஜலிங்கம் (ஸ்ரீகாந்த்) கூடவே இருக்கிறான் மூக்கையன். அவருக்கு எதிராக யாரும் ஒரு சொல் சொன்னாலும் மூக்கையன் வெகுண்டெழுந்துவிடுவான். அவனது அநீதிகளுக்குத் துணைபோகிறான். பழியேற்றுக்கொள்கிறான். ராஜலிங்கத்தின் தங்கை மீனா (Y.விஜயா). அவளுக்கு அண்ணன் செயல் பிடிக்கவேயில்லை. மூக்கையன் மேல் பரிதாபமேகொள்கிறாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பவுனுக்கு (ஸ்ரீபிரியா) மூக்கையன் மீது காதல். அவளும் சொல்லிப் பார்க்கிறாள் ஆனால், மூக்கையன் முதலாளி விசுவாசத்தை விடுவதாக இல்லை. ராஜலிங்கத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்களை காட்டு பங்களாவில் அடைத்துவிடுவது மூக்கையனின் வழக்கம். அப்படியொரு நாளில், பக்கத்து ஊர் கன்னிப்பெண்ணான பாக்கியம் என்பவளைக் கரும்பு திருடியதற்காகக் காட்டு பங்களாவில் அடைக்கச் சொல்கிறான் ராஜலிங்கம். மூக்கையன் அப்படியே செய்கிறான். மூக்கையனுக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணைப் பாலியல் வல்லுறவுசெய்துவிடுகிறான் ராஜலிங்கம். மயக்கமுற்ற அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பாக்கியத்தின் அண்ணன்கள் மாணிக்கமும் (சுதிர்), பழைய பண்ணை பஞ்சாட்சரமும் (சுருளி ராஜன்) அவளைக் காப்பாற்ற முயல்கிறார்கள். அவர்கள் குறித்து அறிய வந்த மூக்கையனுக்கு, தன் தங்கை பைரவி சாகவில்லை, பாக்கியம்தான் பைரவி என்ற உண்மை தெரியவருகிறது. சொந்தத் தங்கை சீரழியக் காரணமாகிவிட்டோமே என்று வருந்துகிறான்.

தன் முதலாளியிடம் தங்கைக்கு வாழ்க்கை தருமாறு கோருகிறான். அப்போதுதான் ராஜலிங்கத்தின் சுயரூபம் மூக்கையனுக்குத் தெரியவருகிறது. பாக்கியத்தை மூக்கையன்தான் வல்லுறவு செய்தான் என்று பழியை அவன்மீது போட்டு அவனைச் சிறைக்கு அனுப்புகிறான் ராஜலிங்கம்.  சிறையிலிருந்து தப்பிய மூக்கையன் ராஜலிங்கத்தைப் பழிவாங்கப் புறப்படுகிறான். மருத்துவமனையிலிருந்த பாக்கியத்தைக் கொன்று அந்தப் பழியையும் மூக்கையன் மேல் போடுகிறான் ராஜலிங்கம். தன் தங்கையைச் சீரழித்துக் கொன்ற மூக்கையனைப் பழிக்குப் பழி வாங்குவேன் என்று சூளுரைக்கிறான் மாணிக்கம்.  மாணிக்கத்திடம் மூக்கையன் மாட்டினானா, ராஜலிங்கத்தை அவனால் பழிவாங்க முடிந்ததா என்பதையெல்லாம் எஞ்சிய படம் விவரிக்கிறது.

படத்தைத் தயாரித்திருக்கும் கலைஞானம் எழுதிய கதைக்குத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார் மதுரை திருமாறன். கதையம்சம் வலுவாக உள்ள படம்தான். நகைச்சுவைக்காக சுருளிராஜன், வி.கே.ராமசாமி, மனோரமா ஆகியோர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். நகைச்சுவை பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ‘உனெக்கெல்லாம் எதுக்கு மீசை’ என்று மனோரமா கேட்கையில், ‘தானா வளருது யூரியா போட்டா வளர்க்கேன்’ என சுருளி சொல்வது நயமான பதில். வீரத்துக்கு அடையாளமான ஜல்லிக்கட்டு இந்தப் படத்தில் நகைச்சுவைக்குப் பயன்பட்டுள்ளது.

ரஜினிக்கு நல்ல கதாபாத்திரம். ரசிகர்களை ஈர்க்கும்படியான வேடம். முதலாளிக்கு விசுவாசமாக இருந்தும் சொந்தத் தங்கை மீது அவன் நடந்துகொண்ட விதம் ரஜினிக்கு ஆத்திரமூட்டும்போது அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். அப்போது பேசும் வசனங்களும் நடிப்பும் ரஜினியின் இமேஜை உயர்த்தியதில் பெரும்பங்காற்றியுள்ளன. இடக் கண்ணை மூடிக்கொண்டு உடல்மொழியில் ரஜினி காட்டும் ஸ்டைல் கவரக்கூடியது. தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை நிரூபிக்க தனக்குக் கிடைத்த வாய்ப்பை ரஜினி சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.  

இளையராஜாவின் இசையில் ‘கட்டபுள்ள குட்ட புள்ள…’ என்னும் காதல் பாடலும், ‘நண்டூருது நரியூருது…’ என்னும் சோகப் பாடலும் இப்போது கேட்டாலும் அலுக்காதவை. ரஜினிக்கு டி.எம்.சௌந்திரராஜனின் குரல்தான். இந்தப் படத்தை எண்பதுகளின் இறுதியில் ஏதோ ஒரு கோயில் திருவிழாவுக்காக திருநெல்வேலி மாவட்டம், இப்போது தென்காசி மாவட்டம், இலஞ்சியில், திரை கட்டி படம் போட்டபோது பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் இப்போது யூடியூபில் பார்த்தேன். படம் அலுப்பேற்படுத்தாமல் இப்போதும் சுவாரசியமாகப் பார்க்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ரஜினி நடித்த ’வேலைக்காரன்’, ’முத்து’ போன்ற படங்களில் ரஜினி ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தின் மூக்கையன் கதாபாத்திரம் தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.  படத்தில் நட்பு இருக்கிறது, காதல் இருக்கிறது, அண்ணன் தங்கைப் பாசம் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒரு முழுமையான வணிகப்படமாக்கியதில் பாஸ்கரின் இயக்குமும் முக்கியப் பங்குவகிக்கிறது. ரஜினி காந்த் சிறையிலிருந்து தப்பித்து வரும் காட்சியில் கட்டவிழ்த்து ஓடி வரும் குதிரையையும் ரஜினியையும் மாற்றி மாற்றிக் காட்டும் காட்சியில் இயக்குநரின் முத்திரை தென்படுகிறது.   

தன்னைத் தேடிக்கொண்டு போலீஸ் ஸ்ரீபிரியா வீட்டுக்கு வந்து விசாரிக்கும்வேளையில், மரத்தடியில் மறைந்திருப்பார் ரஜினி.  அப்போது  நல்ல பாம்பு ஒன்று வர அதைக் கையில் பிடித்துக்கொண்டு, படமெடுத்தாடும் அதன் தலையில் தட்டுவார். ரஜினி ரசிகர்களைப் பெரிதும் கவரும் வகையில் காட்சி அமைந்திருக்கும். பாம்பைப் பிடித்தபடி ரஜினி மரத்தடியில் மறைந்திருக்கும் காட்சியை சுவரொட்டியில் பயன்படுத்தியுள்ளார் அப்படத்தின் சென்னை விநியோகஸ்தரான கலைப்புலி தாணு. அது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் சுவரொட்டிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினி என தாணு அச்சிட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த சூப்பர் ஸ்டார் என்னும் முன்னொட்டு இன்றுவரை ரஜினியின் பெயரை அலங்கரிக்கிறது.

இந்தப் பாம்புக் காட்சியில் பல் பிடுங்காத பாம்பே பயன்படுத்தப்பட்டிருந்ததாம். அதை முதலில் அறியாத ரஜினிகாந்த் காட்சியில் நடித்துவிட்டார். அடுத்து அவருக்கு உண்மை தெரிந்தபோது, பல் பிடுங்காத பாம்பைப் பிடித்துக்கொண்டு நடிக்கப் பயந்துள்ளார். ஆனால், பாஸ்கர் தொடர்ந்து காட்சியின் முக்கியத்துவம் கருதி பாம்பைப் பிடிக்க வலியுறுத்தியதுடன் எப்படிப் பிடிக்க  வேண்டும் என பல் பிடுங்காத பாம்பைப் பிடித்து நடித்துக் காட்டியுள்ளார். அதன் பின்னரே ரஜினி அந்தக் காட்சியில் நடித்துக்கொடுத்திருக்கிறார். 

ரஜினி ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டியதொரு தொடக்கக் காலப் படம் பைரவி.

சனி, ஆகஸ்ட் 01, 2020

பாஸ்கர்: ஒரு தனித்துவ இயக்குநர்


பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா எனப் பரவலாக அறியப்பட்ட இயக்குநர்களது படங்களைப் பற்றிப் பலரும் எழுதுகிறார்கள். ஆகவே, அவர்களது படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. உலக சினிமா குறித்தும் உலக இயக்குநர்கள் குறித்தும்கூடத் தமிழிலே பல கட்டுரைகள் கிடைக்கின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ள இயக்குநர்கள் சிலரது படங்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைப்பதில்லை. கரோனா கால ஊரடங்கு நேரத்தில் அவர்களில் சிலரது படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆகவே, அப்படியான சிலரைப் பற்றியும் அந்தச் சிலரது படங்களைப் பற்றியும் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன். 

முதலில் இயக்குநர் எம்.பாஸ்கர் பற்றிப் பார்க்கலாம். ஆலமரத்துக்குக் கீழே எதுவுமே வளராது என்று இயக்குநர் எம்.பாஸ்கர் தனது ‘பௌர்ணமி அலைகள்’ படத்தில் வசனம் ஒன்றை எழுதியிருப்பார். இந்தப் பழமொழி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், அதைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் வசனமாகக் கையாண்டிருப்பார் அவர். தங்கள் படங்களுக்காகக் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியவர்கள் என பாக்யராஜையும் டி ராஜேந்தரையும் முன்னிறுத்தும் பலருக்கும் பாஸ்கர் பெயரை அந்த வரிசையில் ஒன்றாக நிறுத்தத் தோணாது. காரணம்  மேலே வாசித்த அந்தப் பழமொழிதான். யாரிந்த பாஸ்கர்? 

பாஸ்கரைப் பற்றிய உடனடி அறிமுகம் வேண்டுமென்றால் இவர்தான் ரஜினி காந்த் முதலில் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தை இயக்கியவர். 1978 ஜூன் 2 அன்று வெளிவந்தபைரவிமகத்தான வெற்றிப் படமாக அமைந்தது. ரஜினிகாந்தின் நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. எனது பள்ளிப் பருவங்களில் இவரது படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். சட்டப் பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கியவர் இவர் என்பது மட்டும் மனத்தில் பதிந்துபோயிருந்தது. இவரைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடியபோது, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 1935 ஏப்ரல் 3 அன்று, வி.எஸ்.மாரியப்பன் - ஜானகி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை முடித்திருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரின் உதவியாளராகத் திரையுலகில் நுழைந்திருக்கிறார். இயக்குநர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், தூயவன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்திருக்கிறார். 

இதன் பின்னர்தான் இவருக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் படம் ’இன்னும் ஒரு மீரா’ என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஆனால், அது தவிர்த்து வேறு எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கிய படம்தான் ’பைரவி’. இந்தத் திரைப்பட வாய்ப்பு முதலிலேயே இவருக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இயக்குநர் பட்டாபிராமனுக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். ஆகவே, பாஸ்கருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. ’பைரவி’ படத்தைத் தயாரித்த கலைஞானம் ரஜினியைக் கதாநாயகனாக்கியதால் அவருக்கு ஆதரவு தருவதாக வாக்களித்திருந்த சாண்டோ சின்னப்பா தேவர் கையைவிரித்துவிட்டார். அப்போது வில்லனாக நடித்துவந்த ரஜினியைக் கதாநாயகனாக்கியது தேவருக்கு உவப்பாயில்லை என்பதே காரணம். படம் வெற்றிபெறுமா என்னும் சந்தேகத்தின் காரணமாகவே கலைஞானத்துக்கு தேவர் உதவவில்லை. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க விரும்பாத கலைஞானம் ரஜினிதான் கதாநாயகன் என்று உறுதியாக இருந்தார். இந்தச் சூழலில்தான் எம். பாஸ்கரை இயக்குநராக்க அவர் முடிவுசெய்திருக்கிறார். 


ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்காக முத்துராமனை அணுகியிருக்கிறார்கள். ஆனால், அவரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் இதே முத்துராமன் ரஜினிக்கு வில்லனாக ’முரட்டுக்காளை’யில் நடித்திருந்தார். ஆகவே, அதுவரை நாயக பாத்திரத்தில் நடித்துவந்த ஸ்ரீகாந்தை அணுகி வில்லனாக நடிக்கச் சம்மதம் கேட்டிருக்கிறார்கள், அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டிலில் முதலில் ஸ்ரீகாந்த் பெயர்தான் இடம்பெறும். அதற்குக் கீழேதான் ரஜினி காந்தின் பெயர் வரும். இப்படித்தான் ’பைரவி’ படம் உருவாகியிருக்கிறது. படத்தின் விநியோகஸ்தரான தாணு இந்தப் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி என விளம்பரம் செய்திருந்தார். படமும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது.  

ஏறக்குறைய ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை எடுத்து, திரைக்கதையை உருவாக்கி அதற்குப் பின்னர் அந்தத் திரைக்கதையை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, பின்னர்தான் படப்பிடிப்புக்குச் செல்வார், எம்.பாஸ்கர் என இவரைப் பற்றி நடிகர் சிவகுமார் கூறியிருக்கிறார் எனத் தகவல் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. பாஸ்கரின் இயக்கத்தில் சிவகுமார் ‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’, ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’, ‘பௌர்ணமி அலைகள்’, ‘பன்னீர் நதிகள்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ’பைரவி’யும் இந்த நான்கு படங்களுமே எம். பாஸ்கரின் திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. இதன் பின்னர் கார்த்திக் நாயகனாக நடிக்க ‘சட்டத்தின் திறப்பு விழா’, ‘சக்கரவர்த்தி’ ஆகிய படங்களை உருவாக்கியுள்ளார். மொத்தம் 11 படங்களை இயக்கியுள்ளார். பிரமாதமான இயக்குநர் என்று இவரை முன்வைக்க இயலாவிடினும் தனித்துவமான இயக்குநர் என்று சொல்லத்தக்க வகையில் படங்களை உருவாக்கியுள்ளார். ’விஷ்ணு’, ’காதல் ரோஜாவே’, ’தோட்டா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நான்கு முறை செயலாளராக இருந்துள்ளார். இவரது திருமணத்துக்கு சிவாஜி கணேசன் தன் துணைவியாருடன் சென்று கலந்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்திருக்கவில்லை என்றபோதும், பாஸ்கர் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்கிறார்.


2013 ஜூலை 12 அன்று மாரடைப்பால் இவர் மரணமடைந்துள்ளார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்