இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஆகஸ்ட் 14, 2021

இருளாய்த் தொடரும் வெறுப்பு


தெளிவற்ற சம்பவங்களாகத் தொடங்குகிறது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள குருதி என்னும் மலையாளப் படம். சிறிது சிறிதாகப் படம் தெளிவடைகிறது. படம் தெளிவடையும்போது, நமக்குக் குழப்பம் அதிகரிக்கிறது. மதம், மனித நேயம், கடவுள், தண்டனை, நம்பிக்கை, கடவுள் நிமித்தமான பழிவாங்கல் எனப் படம் பல விஷயங்களைப் பேசுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருப்பதில் பிழையில்லை. ஆனால், ஒன்றை விரும்பி மற்றதை வெறுக்கும்போது அங்கே சிக்கல் உருவாகிறது. மனிதர்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சமயங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் உண்மையில் என்ன செய்து வருகின்றன? மக்களிடையே வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காய்கின்றன. அப்படிக் குளிர்காயும் மதங்களில் சிக்குண்டு சாமானிய மனிதர்களின் வாழ்வு சிதிலமடைகிறது. மதம் சீரழிப்பதறியாமல் மீண்டும் மீண்டும் கடவுள், மதம் என அந்தக் கழிசடைக் கருத்துருக்களிலேயே கிடந்துழல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவேயில்லையா?

இப்ராஹிம் தன் மனைவியையும் குழந்தையையும் நிலச்சரிவில் இழந்துவிட்டு அவர்களை மறக்க முடியாமல் வனப் பகுதியில் ஒரு தனிமையான வீட்டில், தன் தம்பி ரசூல், தந்தை மூசா ஆகியோருடன் வசித்துவருகிறான். அந்த வீட்டுக்கு அருகிலேயே, நிலச்சரிவில் தன் மனைவியை இழந்த தன் தமையனுடன் வசித்துவருகிறாள் சுமதி. சுமதி  இப்ராஹிம் மீது அன்புகொள்கிறாள். பெண்ணற்ற அந்த வீட்டுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவள்தான் செய்கிறாள். இப்ராஹிமுக்கு அவள் மீது பிரியம் இருக்கிறது. ஆனால், அவனால் அவளைத் திருமணம்செய்துகொள்ள முடியவில்லை. மனைவி குழந்தை ஞாபகம், மதம் போன்றவை அவனைத் தடுக்கின்றன. இந்தச் சூழலில் ஓரிரவில் இப்ராஹிம் வீட்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் சத்யன் ஓர் அப்பாவி வியாபாரியான இஸ்லாமியரைக் கொன்ற இந்து இளைஞனான விஷ்ணு என்னும்  ஒரு கொலைக் குற்றவாளிக் கைதியுடன் வருகிறார். யாரையும் வெளியே செல்லக் கூடாது என்று சொல்லி அவர்களது மொபைல் போன்களைப் பறித்துவைத்துவிடுகிறார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் உணவு கொண்டு வந்து மாட்டிக்கொள்கிறாள் சுமதி. அடுத்து விஷ்ணுவைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அவனைத் தேடி வருகிறார் கொல்லப்பட்ட வியாபாரியின் மகனான லைக். அதைத் தொடர்ந்து அந்த இரவில் அடுத்தடுத்துப் பல திகில் சம்பவங்கள் நிகழ்ந்தேறுகின்றன.

மனித மனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை மிக அண்மையில் போய்ப் படம்பிடித்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பெரும்பாலான சம்பவங்கள் ஓரிரவில் நடந்துமுடிந்துவிடுகின்றன. ஓரிரவில் இத்தனை சம்பவங்களை ஒரு குடும்பம் எதிர்கொண்டால் அதன் நிலைமை என்னவாகும்? துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதம் மனிதரைப் பயமுறுத்தவும் பயன்படுகிறது; பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. அது யார் கையில் எந்தச் சூழலில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாடு இருக்கிறது. கைதியைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கிறார் சத்யன். வீட்டுக்கு வந்த அவர்கள் மாற்று மதத்தினர் என்றபோதும் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இப்ராஹிம் இருக்கிறான். ஆனால், அவன் தம்பி ரசூலுக்கோ மனிதர்களைவிட மதம் முக்கியமாகப் படுகிறது. தங்கள் மதத்துக்காக ஏதாவது செய்தாக வேண்டும் அது தனது புனிதக் கடமை என்ற கருத்தில் ஊறிப்போய்க்கிடக்கிறான். சுமதிக்கு இப்ராஹிம் மீது காதல் இருக்கிறது. அதே நேரத்தில் தன் மதத்தினனான விஷ்ணுவைக் காப்பாற்றவும் விரும்புகிறாள். இது ஒருவகையான ஆடு புலி ஆட்ட விளையாட்டுதான்.

சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்வதற்காகத் திரைக்கதையில் பலவிடங்களில் லாஜிக் மீறலை எதிர்கொண்டிருக்கிறார்கள். நம்ப முடியாத விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் படத்தைத் தொடர வேண்டியதிருக்கிறது. இது முழுக்க முழுக்க சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை. இருவேறு மதங்களைப் பற்றி விமர்சிக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் வலுவான வாதங்களை எடுத்துவைக்கிறார்கள். வசனங்களும் கூராயுதம் போல் படத்தில் பயன்பட்டிருக்கின்றன. பல காட்சிகளில் பூடகமான மன உணர்வை இசை வழியே வெளிப்படுத்துகிறார்கள். பெரும்பாலான காட்சிகள் இருளின் மத்தியிலேயே நகர்ந்தாலும் மதங்களில் நிரம்பி வழியும் வெறுப்பு அரசியலை அம்பலமாக்குகிறார்கள்.

முதல் இருபது நிமிடங்கள் எதுவும் புரியாமலே படத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது. படம் எங்கே போகப் போகிறது என்ன நடக்கப் போகிறது என்பதையே உணர முடியாத திரைக்கதையில் சப் இன்ஸ்பெக்டர் சத்யன் நுழையும் போதுதான் ஓரளவுக்குப் படத்தின் திசையை ஊகிக்க முடிகிறது. ஒரு குற்றச் செயல் அதுவும் மத அடிப்படையிலான கொலைச் சம்பவம் மனிதர்களிடையே எப்படி விஷ விதைகளைத் தூவுகிறது என்பதை மிகவும் துணிச்சலாக, வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்வதை விரும்புகிறார்கள். ஆனால், அப்படிப் பகிர்வதைச் சிக்கலாக்குகின்றன மதமும் அது தொடர்பான நம்பிக்கைகளும். மனிதர்களுக்குத் தேவை மனிதர்கள்தாம் மதமல்ல. ஆனால், இன்னும் மனிதர்கள் மதத்தைத் தூக்கிச் சுமந்துகொண்டே இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் இப்படி ஆடு புலி ஆட்டம் விளையாடிக் கொண்டே இருப்பார்களோ? இந்த விபரீத விளையாட்டுக்கு எல்லையே இல்லையா? இப்படியான பல கேள்விகளுடன் படம் முடிந்துவிடுகிறது. இப்படியான கேள்விகளை எழுப்பவதையே படம் முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் மானு வாரியரின் முதல் மலையாளப் படம் இது. கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார் அனிஷ் பல்யால். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவைக் கவனிக்க இசையமைத்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். ரோஷன் மேத்யூ, பிரித்வி ராஜ், மம்மு கோயா, ஸ்ரீண்டா, முரளி கோபி, சைன் டாம் சாக்கோ ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கிறது குருதி. திரில்லர் வகைப் படமாக இருந்தபோதும், தீவிரமான மன உணர்வுகளையும் படம் வெளிப்படுத்தியிருக்கிறது; சமூகம் சார்ந்த அரசியலை விவாதித்திருக்கிறது. ஆகவே, லாஜிக் மீறல்களைச் சகித்துக்கொண்டு படத்தை அலுப்பில்லாமல் ரசிக்க முடிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக