முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி ‘பராசக்தி’ திரைப்படத்துக்காக எழுதிய, ‘கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக’ என்னும் வசனம் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானது. அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் கோவில் என்பதை வெறும் வழிபாட்டுத் தலம் என்று சுருக்கிப் பார்த்துவிடல் ஆகாது. தமிழ்ப் பண்பாடு, கலை ஆகியவற்றின் வரலாற்றுச் சான்றும் அதுவே. கோவில்களில் மிளிரும் கட்டடக் கலையும் ஓவியக் கலையும் சிற்பக் கலையும் தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்திவருபவை; கடும் உடலுழைப்பால் உருவானவை. இத்தகைய கோவில்களில் குடிகொண்டுள்ளதாக நம்பப்படும் கடவுள் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும் அப்படியொரு நிலைமை இன்றுவரை உருவாகியிருக்கிறதா?
கடவுள் அளவில்லா ஆற்றல் கொண்டவர் என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அவர் எல்லா மொழிகளையும் அறிந்தேயிருப்பார். சம்ஸ்கிருதத்தில் வேதங்களை ஓதினாலும் தமிழில் வேதங்களை ஓதினாலும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், மனிதர்களால் மேற்கொள்ளப்படும் கடவுள் வழிபாட்டு நடைமுறையில் மொழி ஆதிக்க உணர்வு மேலோங்கியுள்ளது. இதற்கான காரணத்தை எல்லாரும் அறிவர். வழிபாட்டு மொழியின் நிலையில் எப்படிச் சமநீதி பேணப்படவில்லையோ அதுபோலவே வழிபாடு நடத்துகிறவரான அர்ச்சகர் விஷயத்திலும் இதுவரை சமநீதி நிலைநாட்டப்படவில்லை. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையிலும், அது அமலாகும் பாதையில் ஆயிரம் தடைக்கற்கள் விழுகின்றன என்பது ஆகம விதிகளின் பலத்தையல்ல; ஆதிக்கத்தின் பலத்தையே புலப்படுத்துகிறது.
அரசியல் அதிகாரப் பலம் மிகுந்த இந்த ஆதிக்கத்துக்கு நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் வேர் சோழர் காலத்தில் சூல்கொண்டது. அப்போது சூல் கொண்ட வேர் நின்று நிலைத்துப் பெரும் விருட்சமாகி உள்ளது. அது தலவிருட்சமாகிக் கோவிலை ஆக்கிரமிக்காமல் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அக்கறை. கோவில் நிர்வாகம் எப்படிக் குடிமைச் சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பதற்கு விடைசொல்கிறது, பொ.வேல்சாமியின் ‘கோவில் நிலம் சாதி’ என்னும் நூல். ‘பல்லவர் காலத்தில் தோன்றிய சைவ – வைணவக் கோவில்களுக்கு ஆடு மாடுகளே தானமாக வழங்கப்பட்டிருக்கின்றன.’ ’சோழர் காலத்தில் பார்ப்பனர்கள் பலர் தங்கள் நிலங்களைக் கோவில்களுக்கு விற்று வந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார் பொ.வேல்சாமி. அப்படி விற்ற பிரம்மதேய நிலங்களுக்குப் பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டாலும் கோவில் நிலங்களின் நிர்வாகிகள் என்னும் பெயரில் அந்த நிலங்களின் மீதான அதிகாரம் தங்களை விட்டுப் போகாமலும் பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டனர் என்றும் அந்நூல் தெரிவிக்கிறது. கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களை உரிமை கொண்டாடியோர் குடிமைச் சமூகத்தின் மீதும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திவந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருக்கும் திமுகவுக்கும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் அடிப்படையிலான கருத்தியல் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. கடவுள் விஷயத்தில் இரண்டு கட்சிகளும் முற்றிலும் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டுள்ளன. திமுக கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னெடுக்கும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தொடங்கப்பட்ட கட்சி. பாஜக ராமர் கோவில் விவகாரத்தைக் கையிலெடுத்து அரியணையைக் கைப்பற்றிய கட்சி. இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான அம்சம் தேர்தல் அரசியல்தாம். அந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் தேவையை முன்னிட்டே மக்களை ஒன்றுதிரட்டும் முகமாகத் தமிழ்நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் இரு பிரிவுகளை பாஜக இந்து, இந்து அல்லாதோர் என்னும் பிரிவாக மாற்ற முயன்றுவருகிறது. பாஜகவின் இந்தச் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாக உள்ளவை கோவில்களும் அதன் சொத்துக்களும் அவற்றின் பாதுகாப்பும்.
இப்போது,
இந்தக் கோவில்கள், அவற்றின் பாதுகாப்பு அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின்
கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகிறது என்பது விதியன்று; விதிமுறை. தமிழ்நாட்டில் உள்ள
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்குச் சொந்தமாகத் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன; அத்துடன் லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் உள்ளன. இவற்றின் வாடகைத் தொகை, குத்தகைத் தொகை,
கோவில் உண்டியல் வருமானம், நகைகளின் மதிப்பு எனக் கோவில்களின் சொத்து மதிப்பு எக்கச்சக்கமானது.
இது முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.
ஆனால், அதை யார் மேற்கொள்வது என்பதே அதிகாரப் போட்டியாக மாறி நிற்கிறது.
தமிழ்நாட்டில்
அமைந்த திராவிடக் கட்சிகளின் அரசுகள் கோவில் சொத்துக்களைத் முறையாகப் பாதுகாக்கவில்லை
என பாஜகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அதுவும் ஈஷா யோகா மைய நிறுவனர்
ஜக்கி வாசுதேவ் கோவில் அடிமை நிறுத்து என்னும் இயக்கத்தை முன்னெடுத்த பிறகு கோவில் சொத்து விவகாரம் பரவலாக
விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதன் பின்னணியிலுள்ள அரசியலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியுள்ளது.
கோவில்கள் தொடர்பான விஷயத்தில் அக்கறையுடன் செயல்படும் தரப்பு யார் என்பதில் பாஜகவுக்கும்
திமுகவுக்கும் கடும்போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் ஆறு அன்று நடைபெற்ற
சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுக்கு இணக்கமாக ஆட்சி நடத்திவந்த அதிமுகவை வீழ்த்தி
ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. தேர்தலில் இந்துக்களில் பெரும்பான்மையோர் வாக்களிக்காமல்
திமுகவால் ஆட்சியமைத்திருக்க முடியாது என்பது யதார்த்தம். அதுவும் கோவில் நகரங்கள்
எனச் சொல்லப்படும் திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், மயிலாப்பூர், பழனி, திருச்செந்தூர், திருத்தணி,
மதுரை மத்தி ஆகிய தொகுதிகளில் திமுக பெரிய வெற்றியைப் பெற்றதால் ஆண்டவனே நம் பக்கம்தான்
என்று திமுகவினர் ஆர்ப்பரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோதாதென்று, தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுக்கொண்ட புதிய அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான பி.கே.சேகர் பாபு, தான் பதவியேற்றதிலிருந்தே கோவில்களின் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதை முடுக்கிவிடும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 7 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. தமிழக அரசுக்குக் கோவில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து 75 உத்தரவுகளை உயர்நீதிமன்றம் இட்டுள்ளது.
கோவில்
சொத்துக்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றப்படும் என்று ஏற்கெனவே அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அதன்படி, கோவில்களுக்குச்
சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி
முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர்
நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.
கோவில் சொத்துக்கள் மீட்கப்படும் நடவடிக்கை ஒருபுறம் என்றால், மறுபுறம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும் என்றும், பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் சேகர்பாபு கூறியிருந்தார். ‘அமைச்சரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது' எனத் தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுக்காலச் சமூக நீதிப் பயணத்தில், இந்த அறிவிப்பு ஓர் மைல் கல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனும், பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்னும் அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளனர். கோவிலின் ஆகம விதிகள் தெரிந்தவர்களையே கோவில் அர்ச்சகராகத் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்தணர் முன்னேற்றக் கழகம் இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. (பார்க்க: பெட்டிச் செய்தி)
அர்ச்சகர்
பணி என்பது அரசுப்பணி. அரசுப்
பணியில் பொது அறிவிப்பு, தேர்வு,
நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது.
பரம்பரைவழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள்
ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில், திருவரங்கம் அரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது இது அரசியல் சட்டம்,
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்
சங்கம் கூறியிருப்பதும், அந்தணர் முன்னேற்றக் கழகம் இந்த அறிவிப்பை ஆகம விதிகளைக் காரணங்காட்டி
எதிர்ப்பதும் உற்றுநோக்கத் தக்கது.
இத்துடன் நில்லாமல், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் எனவும் தமிழில் அர்ச்சனை செய்வதற்குப் பயிற்சி தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப் போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும், அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இவையெல்லாம் ஆகம விதிகளின் பாற்பட்டு நிற்போருக்கு உவப்பான விஷயமாக இருக்க மாட்டா.
கோவில் பணியாளர்களை நியமிக்கும் அதிகாரத்தை அறங்காவலருக்கு வழங்கும் ‘இந்து சமய அறநிலையக் கொடைகள்
சட்டம் 1959 இன் பிரிவு 55 இல்
ஆண் / பெண் என்ற பாலினப்
பாகுபாடு ஏதுமில்லை. எனவே, பெண் ஒருவரை அர்ச்சகராக
நியமிக்க சட்டப்படி தடை ஏதுமில்லை’ என்கிறார்
விடுதலை சிறுத்தைக் கட்சியின் எம்பியான து.ரவிக்குமார்.
கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதும், தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதும், பெண்கள் அர்ச்சகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் அவசியமான, முற்போக்குகரமான சீர்திருத்தங்களே. இவை அரசியல் நோக்கமின்றி முறையான ஆன்மிக அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, கோவில் என்பது கொடியவர்களின் கூடாரமாக மாறாமல் கும்பிடத்தகுந்த இடமாக நின்று நிலைக்கும் என்பதே உண்மை.
*
பெட்டிச்
செய்தி
அந்தணர்
முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை
“தமிழக பாஜக (தமிழக திராவிட பாஜக) பிராமணர்களுக்கு எதிராகத் திரும்புவதை உணருங்கள் பிராமணர்களே. பாஜக தேசிய மகளிரணிச்
செயலாளர் திருமதி வானதி சீனீவாசன் எம்எல்ஏவும், தமிழக பாஜக தலைவர் திரு
எல். முருகனும், ஆகம விதிகளுக்கு எதிராக, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அர்ச்சகர் நியமனம்
மகளிருக்கு அர்ச்சகர் பயிற்சி என்கிற திமுகவின் செயலை வரவேற்பதாகத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டிகொடுத்துள்ளனர்.
“தமிழகத்தில் பாஜக, பிராமணர் கட்சி என்கிற இல்லாத
ஒன்றைக் கூறிவரும் திராவிடர் கூட்டத்தின் கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக, அரசியலுக்காக, திராவிட இயக்கங்கள் பகுத்தறிவுக் கூட்டங்களின் இந்துவிரோத போக்குக்குத் துணைபோகும்விதமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றபடும் ஆகம விதிகளுக்கு எதிராக
ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை பூஜைமுறைகளைச் சிதைக்கும் நோக்கத்தோடு அர்ச்சகர் நியமனத்தையும், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும் வரவேற்றுள்ளனர். திக நாத்திகக் கூட்டத்துக்குத்
துணைபோகும் இவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.”
(நியூஸ்ஸ்ட்ரோக் இதழில் ரோஹின் என்னும் பெயரில் எழுதிய கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக