எல்லோருமே மன நிலைப் பாதிப்பு கொண்ட ஒருவரை வாழ்வில் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்திருப்போம். ஆனால், உடம்பு நோயைப் புரிந்துகொள்வது போல் மன நோயைப் புரிந்துகொள்கிறோமா என்பது சந்தேகமே. மனநிலைப் பிறழ்வு, மனச்சிதைவு போன்ற பல மன நோய்கள் உள்ளன. இவற்றை வைத்துப் பல திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. பொதுவாக மனநிலைப் பிறழ்வு என்பதை நமது படங்கள் இறப்புக்குப் பதிலான இன்னொரு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. அம்மன் கோவில் கிழக்காலே, காதல் போன்ற படங்களில் தாங்க முடியாத துக்கத்தாலும் மூன்றாம்பிறை, சேது போன்ற படங்களில் விபத்தாலும் மன நிலைப் பிறழ்வு உருவாகிவிடுகிறது. மனநிலைப் பிறழ்வுக்குள்ளான பல கதாபாத்திரங்களைக் கொண்டு நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்குவதும் பெரும் போக்காக நடந்துவருகிறது.
ஸ்ரீதர் வெண்ணிற ஆடை படத்தில் மனப் பிறழ்வைக் கையாண்டிருப்பார். மனநல நிபுணர் ஒருவர் செல்வந்தப் பெண் ஒருவரை (ஜெயலலிதா) பித்து நிலையிலிருந்து மீட்பார். அந்தச் சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அவர் மீது மையல் கொண்டுவிடுவார். அந்த மருத்துவருக்கு ஏற்கெனவே ஒரு காதலி வேறு உண்டு. இப்போது மருத்துவர் யாரைக் கரம் பிடிப்பார்? யாரைக் கரம் பிடித்தாலும் மற்றவருடைய மனம் பேதலிக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் அந்தப் பிரச்சினையை ஸ்ரீதர் தனக்கேயான பாணியில் சமாளித்திருப்பார்.
மனச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு எது நிஜம் எது கற்பனை என்ற வேறுபாட்டை உணர முடியாது என்கிறார்கள். இந்த நோயையும், மல்டிபிள் பெர்ஸனாலிடி (அந்நியனை மறந்துவிடுங்கள்) என்னும் நோயையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இரண்டு படங்களைப் பார்க்கலாம். ஒன்று ஆளவந்தான் (2001); மற்றொன்று தென்கொரியப் படமான எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் (2003).
ஜீ-வான்-கிம் இயக்கிய தென்கொரியப் படம் ஜாங்க்வா ஹாங்க்ரியான்ஜியான் என்னும் அந்நாட்டு வாய்வழிக் கதையின் அடிப்படையில் உருவானது. ஒரு சிற்றன்னை தனக்குப் பிறந்த மகன்களுக்காகத் தன் கணவனின் முதலிரண்டு மகள்களைக் கொன்றுவிடுகிறாள். ஆனால், அவர்கள் ஆவியாக வந்து பழிதீர்க்கிறார்கள். இந்தக் கதை 1924 முதலே பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் தாக்கத்தில் அல்லது பாதிப்பில் ஜீ-வான்-கிம் எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸை உருவாக்கியிருக்கிறார். ஏனென்றால் வாய்மொழிக் கதைக்கும் இவருடைய திரைப்படத்துக்கும் சில அடிப்படையான ஒற்றுமைகள் இருந்தாலும் பாரதூரமான வேறுபாடுகளும் உண்டு. மாறுபட்ட இதன் திரைக்கதையால் வழக்கமான ஒரு சைகாலஜி திரில்லராகவோ வெறும் பேய்ப்படமாகவோ அடையாளம் காட்டப்படுவதிலிருந்து இது தப்பித்திருக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் சு-மியிடம் மருத்துவர் நீயாரென நினைக்கிறாய் என்று கேட்கிறார். குடும்பப் படத்தைக் காட்டி இது யாரெனத் தெரிகிறதா என்கிறார். அந்த நாளில் என்ன நடந்தது என விசாரிக்கிறார். அவள் மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்க்கிறாள். கதை விரிகிறது. படம் ஒரு அமானுஷ்ய பயணத்தை மேற்கொள்ளும் என்பதைப் படமாக்கக் கோணங்களும் பின்னணி இசையும் சொல்லிவிடுகின்றன. தன் தங்கை சு-ய்யான், தந்தை ஆகியோருடன் வீட்டுக்கு வருகிறாள் சு-மி. வீட்டில் சிற்றன்னை இருக்கிறாள். அந்த வீட்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தேறுகின்றன. தன் சிற்றன்னையால் தன் தங்கை சு-ய்யானுக்குப் பாதிப்பு வந்துவிடும் என்பதால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறாள் சு-மி.
ஒரு கட்டத்தில் சு-மியின் செயல்பாடுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சு-மியின் தந்தை அவளை ஏன் இங்கு வந்ததிலிருந்தே இப்படி நடிக்கிறாய் என ஆத்திரத்துடன் கேட்கிறார். தன் சிற்றன்னை தங்கையை எப்போதும் அலமாரியில் வைத்துப் பூட்டி சித்திரவதை செய்வதை நீங்கள் உணரவில்லையா எனக் கோபத்துடன் கேட்கிறாள். அப்போது அவர் வெளியிடும் தகவல் பார்வையாளரைப் புரட்டிப் போடும். அந்த வீட்டில் அதுவரை பார்வையாளர்கள் பார்த்த பல சம்பவங்கள் சு-மியின் கற்பனையில் நிகழ்ந்தவை என்பதை விவரிக்கும். அந்த வீட்டில் சு-மியும் அவளுடைய தந்தையும் மட்டுமே உள்ளார்கள் என்பதை உணரும்போது அதிர்ச்சி ஏற்படும். மேக மூட்டம் விலகிய நிலவு போல் காட்சிகள் தெளிவாகும்.
படம் பின்னோக்கித் திரும்பும். சு-மியின் தந்தை மற்றொரு பெண்ணை விரும்புகிறார். அவளை மணமுடிக்கத் திட்டமிடுகிறார். இந்தச் சிக்கலின் காரணமாக சு-மியின் தாய் ஒரு அலமாரியில் தூக்கிட்டு இறந்துகிடக்கிறார். இதைப் பார்த்து அலறும் சு-ய்யான் மீது அலமாரி கவிழ்ந்துவிடுகிறது. அவள் கதறல் யாருக்கும் கேட்கவில்லை. எனவே சு-மியாலும் அவளைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்தக் குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட அவளை மல்டிபிள் பெர்ஸ்னாலிடி டிஸார்டர் என்று மன நிலைக் கோளாறு தாக்குகிறது. அதன் விளைவுகளாலேயே அவள் தங்கை, சிற்றன்னை ஆகியோராகத் தன்னைக் கற்பனை செய்துகொள்கிறாள். நடிகர்களின் வரம்புக்குட்பட்ட நடிப்பும் படமாக்க நேர்த்தியும் கதாபாத்திரங்களின் உணர்வைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு நகர்த்தும். படத்தில் அவசியமின்றி ஒரு ஷாட் கூட இடம்பெற்றிருக்காது.
இப்போது ஆளவந்தானுக்கு வாருங்கள். கமல் ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்தப் படத்தில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒருவர் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் ராணுவ கமாண்டோவான விஜய். மற்றொருவர் தன் சித்தியிடமிருந்து தன் தம்பியைக் காப்பாற்றத் துடிக்கும், மனச் சிதைவின் ஒருவகையான சீஸோபெர்னிக் வித் பாரானாய்டு டெல்யூஷன்ஸ் காரணமாகக் மனநோய்க் காப்பகத்தில் பராமரிக்கப்படும் நந்து.
இதிலும் அப்பா மற்றொரு மணம் புரிகிறார். ஆகவே கொடுமைக்காரச் சிற்றன்னை உண்டு. அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். தம்பியைப் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குண்டு என நம்புகிறான் நந்து. இப்படியொரு கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறொருவர் படைத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தின் வரம்புகளை அவர் நீட்டித்துவிட்டதுதான் சோகம். மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வன்முறையாளர் இல்லை. பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவர்கள் என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது. இதை கமல் அறிந்திராதவராக இருக்க இயலாது. ஆனால், கமலின் கைவண்ணமான நந்து அளப்பரிய ஆற்றல் கொண்டவர்; ஒரு அதிசய மனிதர். தன் தம்பி விஜயின் காதலியான தேஜஸ்வினியைச் சித்தியின் மறு வடிவம் என்றே நந்து நம்புகிறார். எனவே, அவரிடமிருந்த தம்பியைக் காப்பாற்ற பல அசகாய சூரத்தனங்களில் ஈடுபடுகிறார். இறுதியில் தன்னையே அழித்துக்கொள்கிறார்.
எ டேல் ஆஃப் டூ சிஸ்டர்ஸ் அடர்ந்த வனத்தில் ஓடும் மயான அமைதி கொண்ட நதி என்றால், ஆளவந்தான் நகரத்தில் சலசலத்து பாயும் ஆக்ரோஷ ஆறு. படத்தின் ஒரு காட்சியில் நந்து தவறுதலாக ஒரு பெண்மணியின் கழுத்தை அறுத்துவிட்டு சாரி ராங் நம்பர் என்பார். படத்தில் கமல் அந்த உத்தியைப் பயன்படுத்தியிருந்தால் அலுப்பூட்டும் அரை மணி நேர கிளைமாக்ஸ் காட்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால், கலைஞானி கமலுக்கு அந்த மனம் வரவில்லை போலும். ஆகவே, திரைக்கதையைப் பொறுத்தவரை கொரியப் படம் புத்திசாலித்தனமானது; ஆளவந்தான் சற்று அசட்டுத்தனமானது.
< சினிமா ஸ்கோப் 36 > < சினிமா ஸ்கோப் 38 >
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக