இந்த வலைப்பதிவில் தேடு

ராதிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராதிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 15, 2020

சூலம்: பாடலாசிரியர் வைரமுத்துவின் முதல் படம்


ஆஸ்கார் மூவிஸ் M.பாஸ்கர் M.A. தயாரித்து கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘சூலம்’ (1980). வசனம் மதுரை தங்கம். இந்தப் படத்தில்தான் வைரமுத்து பாடலாசிரியராக முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்தப் படத்தின், ‘பெண்ணின் மானம் காக்கும் சூலம்…’, ‘பூனைக்கண்ணி ஜூலி…’ என்னும் இரண்டு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். திரைத்துறைக்கு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவர் பாஸ்கர்தான். ஆனால், இந்தப் படம் வெளிவரும் முன்னரே அவர் பாடலெழுதிய ‘நிழல்கள்’ படம் வெளியாகிவிட்டது. ஆக, வைரமுத்துவின் முதல் படம் ‘நிழல்கள்’ என்றாகிவிட்டது.  

ராதிகா, ராஜ்குமார், சுதிர், புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இது. ‘சூல’த்தின் ஒருவரிக் கதை என்று பார்த்தால், வீரமான பெண் ஒருத்தியின் ஞானமிகு மானப் போராட்டம் என்று சொல்லலாம். தன்மானம் மிக்க பெண் ஒருத்தியைக் குடும்ப கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்வாக நினைக்கும் இளைஞன் ஒருவன் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். தனக்கு ஏற்பட்ட அந்த மோசமான சம்பவத்தை அந்தப் பெண் எப்படிக் கையாளுகிறார் என்பதே திரைக்கதையாக விரிந்திருக்கிறது.


மகாலட்சுமி மில் அதிபர் மகாலட்சுமி அம்மா மில் தொழிலாளர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். அவருடைய மகன் அமெரிக்காவில் படித்துவிட்டு வரும் சின்னதுரை. அவருக்கோ பணமும் கௌரவமும்தாம் பெரிது. தொழிலாளர்களைவிட மில்லே அவருக்கு முதன்மையானது. அந்த மில் அருகே உணவுக் கடை நடத்திவருகிறார் அன்னம்மா. அவள் தன்மானமிக்க குப்பத்துப் பெண். பர்மாவிலிருந்து வந்தவள். அவள் என்ன சொன்னாலும் குப்பத்து ஜனங்கள் கேட்பார்கள். அந்த அளவுக்கு அவளுக்கு அங்கே செல்வாக்கு.

அமெரிக்காவிலிருந்து திரும்பிய சின்னதுரை குப்பத்து மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கும் இடத்தில் மில் ஒன்றை நிறுவத் துடிக்கிறான். இதற்கு மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கிறாள் அன்னம்மா. பணத்துக்கும் அவள் மசியவில்லை. தங்களது குடிசைகளை எரிக்க வந்த சின்னதுரை அனுப்பிய ஆட்களையும் குப்பத்து ஜனங்கள் விரட்டி அடித்துவிடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து சின்னதுரையின் கொடும்பாவியை எரிக்க ஆத்திரமடைந்த சின்னதுரை அதற்குப் பழிவாங்க நினைத்து அன்னம்மாவைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். 

சின்னதுரை கையாலேயே தனக்குத் தாலி கட்டவைப்பதாகச் சவால் விடுகிறாள் அன்னம்மா. சின்னதுரையின் காதலியான ரீட்டா எனும் நடனக்காரி ஹோட்டலில் கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிறாள். அந்தப் பழி அன்னம்மாமீது விழுகிறது. அவள் கொலைப்பழியிலிருந்து மீண்டாளா, சின்னதுரையிடம் இட்ட சவாலில் வெற்றிபெற்றாளா என்பதுதான் திரைக்கதையின் எஞ்சிய பயணம். 


படத்தில் அன்னம்மாவுக்கு ஆதரவாக, உடன் பிறக்காத அண்ணனாக இருப்பவன் பீட்டர் (சுதிர்). பீட்டர் ஒரு தொழுநோயாளி. மருத்துவமனையில் அன்னம்மாவுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவன் அனைவருக்கும் பிரியத்துடன் சாக்லேட் வழங்குகிறான். ஆனால், அவனது தொழுநோய் பாதிப்பு கண்ட கையைப் பார்த்த ஒருவரும் அவனிடம் சாக்லேட் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அவனிடம் அன்னம்மா மாத்திரம் பிரியத்துடன் சாக்லேட்டைப் பெற்று, ‘உங்க மனசு மாதிரி ரொம்ப இனிப்பா இருக்கு அண்ணன்’ என்று சொல்லிச் சுவைக்கிறாள். தொழுநோய் என்பது தொற்று நோயல்ல என்பதை வசனமாகச் சொல்லாமல் காட்சியாகச் சொல்லிய விதத்தில் ‘சூலம்’ நிமிர்ந்து நிற்கிறது. வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் தொழுநோயாளிகளை இவ்வளவு நேர்மறைத் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?  

திரைக்கதையின் அடுத்த பகுதி உடுப்பியில் நிகழ்கிறது. அங்கேயும் சின்னதுரை மில் ஒன்றை நிறுவ முயல்கிறான். ஆனால், அங்கே எஸ்டேட் அதிபராக இருக்கும் ஜூலி என்னும் பெண் அவனது நினைப்புக்கு இடைஞ்சலாக இருக்கிறாள். அந்த ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காமுகன் ஒருவன் அப்பாவிப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினான். அவனை மாறு கை மாறு கால் வாங்க பஞ்சாயத்து முடிவுசெய்து நிறைவேற்றியது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாறு கை மாறு கால் விழா எடுப்பது அவர்களது வழக்கம்.


ஜூலியின் கொட்டத்தை அடக்க அவள் நடத்தும் மீன்பிடித் தொழிலில் சின்னதுரையும் ஈடுபடுகிறான். அன்னம்மாவுக்கு அவன் செய்த துரோகத்துக்குப் பழிவாங்குவது போல் ஜூலி ஒவ்வொன்றாக நிகழ்த்துகிறாள். இறுதியில் தன்னை அவன் பாலியல் வல்லுறவுசெய்துவிட்டதாகவும் பழி போடுகிறாள். அவளைப் பழிவாங்க சின்னதுரை அவளைக் கொல்ல முயல்கிறான். அப்போது அவன் புதை மணலில் விழுந்துவிடுகிறான். தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உடுத்தியிருந்த உடையைக் கழற்றி, கயிறாக்கி அவனைக் காப்பாற்றுகிறாள் ஜூலி. அன்னம்மாவின் மானம்போகக் காரணமாக இருந்த சின்னதுரையைத் தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் காப்பாற்றுகிறாள் ஜூலி. இப்போது ஜூலி தான் யாரெனச் சொல்கிறாள். என்றபோதும் அவளை சின்னதுரை திருமணம் செய்துகொள்கிறான்.

ராதிகாவுக்குக் கிடைத்த வேடத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரிய குறை என்றால் நாயகனாக நடித்த, நடிகை லதாவுடைய தம்பியான ராஜ்குமார்தான். ஏனோ அவர் அந்தக் கதாபாத்திரத்தில் ஒட்டவேயில்லை. ஒரு செல்வந்தனுக்குரிய தோற்றம் இருந்தபோதும் அவரிடம் ஓர் அந்நியத்தன்மை வெளிப்படுகிறது. இந்த வேடத்தில் முதலில் நடிகர் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமாவதாக இருந்திருக்கிறது.


இதன் பின்னர் வெளியான ‘விதி’, ‘புதியபாதை’, ‘வள்ளி’ போன்ற படங்களில் பாலியல் வல்லுறவுக்காளான பெண்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருந்தது. ‘சூலம்’ அதற்கெல்லாம் முன்னோடிப் படம். படத்தின் நாயகிப் பாத்திரம்தான் கனமானது. நாயகனுக்குப் பெரிய பங்கில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது, பாலியல் வல்லுறவுக்கு ஆளான நாயகி தற்கொலை செய்துகொள்ளவில்லையே தவிர அவள் பாலியல் வல்லுறவுசெய்தவனையே அடைவேன் எனப் போராடுவதும் ஒரு பிற்போக்குத்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால், அந்தப் பாத்திரம் மரபுக்கு உட்பட்டு முற்போக்கை வெளிப்படுத்தும் வகையிலேயே இயக்குநர் பாஸ்கர் அதை உருவாக்கியிருக்கிறார்.

தனது ‘பைரவி’ திரைப்படத்தில் நாயக அம்சம் தூக்கலாக இருந்தது என்றால் தான் தயாரித்த முதல் படமான இதில் இயக்குநர் பாஸ்கர் நாயகியை முதன்மையாக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான், விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தை இயக்கிய செந்தில்நாதன் உதவி இயக்குநராக அறிமுகமானார். செந்தில்நாதன்தான் சரத்குமாரை நாயகனாக்கியவர். தயாரிப்பாளர் கே. ராஜன் ‘சூலம்’ திரைப்படத்தில் ஊர்த் தலைவராக நடித்திருக்கிறார். திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கிறார் பாஸ்கர். எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் அப்படியே நூல் பிடித்ததுபோல் உள்ளது திரைக்கதை. ஆனால், சின்னதுரைக்கு ஜூலி யாரென்பதுகூடத் தெரியவில்லை என்பதை நம்ப இயலவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட அதே நேரத்தில் வழக்கமான பாதையிலிருந்து சற்று விலகிப் பயணப்படும் படம் ‘சூலம்’.

ஞாயிறு, அக்டோபர் 30, 2016

சினிமாஸ்கோப் 20: மதயானைக் கூட்டம்

தேவர் மகன் சிவாஜி, கமல்
சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி அன்று வெளியானது கமல் ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ (1992). அதே நாளில்தான் ரஜினி காந்த் நடித்த ‘பாண்டிய’னும் வெளியானது. ரஜினி, கமல் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரஜினி காந்த் நடித்த படமே வெற்றி வரிசையில் முந்திச் செல்வது வழக்கம். ‘நாயக’னுடன் வெளியான ‘மனிதன்’தான் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் நின்றது என்பது ஓர் உதாரணம். ஆனால் ‘பாண்டியன்’ படுதோல்வி அடைந்தபோது, ‘தேவர் மகன்’ தமிழகமெங்கும் வசூலை வாரிக்குவித்தது. அது மட்டுமல்ல; அந்த ஆண்டில் 5 தேசிய விருதுகளையும் அப்படம் பெற்றது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற, சாதிப் பெருமையை உரக்கச் சொல்லும் ‘போற்றிப்பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே’ என்ற பாடல் அதன் பின்னர் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்மத்தை ஒருங்கிணைக்கப் பிரதான களம் அமைத்துக் கொடுத்தது. அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்ற உண்மை சிலருக்குக் கசக்கும். அந்தப் படத்தின் செய்தியோ அகிம்சை என்பதுதான் ஆச்சரியம். படத்தின் இறுதிக் காட்சியில் கையில் கொலையாயுதத்தை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வேற்படுத்தும் வசனங்களைப் பேசிச் செல்வார் சக்தி. ஆனால் அதன் திரைக்கதைப் பயணத்தில் சாதிப் பெருமிதம் மிதமிஞ்சி வழிந்த காரணத்தால், படம் உணர்த்த விரும்பிய அகிம்சை ஆழியில் கரைத்த உப்பானது. படத்தின் பிரதான கதாபாத்திரமான சக்தியே ஒரு காட்சியில், ‘நான் சக்திவேல் தேவன்’ என்ற வசனத்தை மொழியும்.
ரேணுகா, கமல், சிவாஜி, பரதன், கௌதமி
பெரிய தேவர் வேடமேற்ற சிவாஜி பஞ்சாயத்தில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவுடன் ஒட்டுமொத்த ஊரும் எழுந்து நிற்கும். அவர் அமரச் சொன்ன பின்னர்தான் அனைவரும் அமர்வார்கள். இது வெறும் மரியாதையல்ல; ஒரு வகையான ஆதிக்கம். படத்தின் ஒரு காட்சியில் சிவாஜியும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று காட்டப்படும். தன்னைப் பெரியார் வழியில் நடப்பவராகக் காட்டிக்கொள்வதில் விருப்புடன் செயல்படும் கமல்ஹாசனே இதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருந்தார். கமல் ஹாசன் சக்தியாக அறிமுகமாகும் காட்சியிலேயே கறுப்பு நிற உடைதான் அணிந்திருப்பார். ஆனால் திருமணம் முடிந்த அன்று சக்தியின் கால்களில் விழுந்து வணங்குவார் பஞ்சவர்ணம். சக்தியும் அந்த மரியாதையை அப்படியே ஏற்றுக்கொள்வார். அத்தனை வகையான ஆதிக்கத்தையும் எதிர்த்த பெரியாரின் புகைப்படம் வெறும் செட் புராபர்ட்டி தானா? அல்ல அல்ல, நல்ல சினிமாவுக்காகத் தன் கொள்கைகளைக் கூடத் தளர்த்தி கமல் தன்னை வருத்திக்கொள்கிறார்!  


இதற்கு அடுத்த தீபாவளி அன்று வெளியானது பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ (1993). இதன் கதை வசனம் எம்.ரத்னகுமார். இது அண்ணன் தங்கைப் பாசப் படம் எனப்பட்ட போதும், இதில் அதே சமூகத்துப் பண்பாட்டு வழக்கங்களும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதங்களால் ஏற்படும் இன்னல்களுமே திரைக்கதையாகியிருந்தன. ‘பொசுக்கப்பட்ட பூமியில் நசுக்கப்பட்ட மனிதர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருப்பது பாசம் என்ற உணர்ச்சியே. இது ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்த கலாச்சாரத்தின் கதை’ என்று பாரதிராஜாவின் கணீர் குரலில் தொடங்கும் படத்தின் முடிவில் விருமாயி அந்த மனிதர்களின் குரோதத்தால், நிலத்தில் குருதி சிந்திக் கிடப்பாள். பாரதிராஜா மனிதர்கள் அனைவரும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் வக்கிரங்களை அழிக்க வேண்டும் என்று வேதாந்தம் பேசுவார். பாக்யராஜ், மணிவண்ணன், இளையராஜா போன்றோர் இல்லாத வறுமை இந்தப் படத்தில் தென்படும். விருமாயி வேடமேற்றிருந்த ராதிகாவின் சிவாஜியாகும் முனைப்புக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்திருப்பார் பாரதிராஜா. ‘பசும்பொன்’னில் ராதிகா ரசிகர்களைப் பதம் பார்த்ததற்கு இந்தப் படத்தின் வெற்றியே அச்சாரமிட்டது. இந்தப் படத்தின் பல காட்சிகள் வெறும் செண்டிமெண்ட் பூச்சுக்கள். உதாரணம், அண்ணனுக்காக விருமாயி கையை வெட்டிக்கொள்ளும் காட்சி. 

இந்த இரண்டு படங்களிலுமே ஒரு சமூகத்தின் மூர்க்க குணத்தால் அதன் மானிடர்கள் படும் இன்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. ஆனால் அதே சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்திய படங்களாகவே இவை ரசிகர்களால் பார்க்கப்பட்டன; அதன் சான்று இவற்றின் வணிக வெற்றி. மரணத்தைக் கொண்டாடும் ஒரு நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் தவறவிட்ட அம்சங்களைக் கச்சிதமாகக் கைப்பற்றி இதே சமூகத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்சிப்படுத்தியது, அன்பைப் போதித்த கிறிஸ்து பிறந்த தினத்தில் வெளியான (25.12.2013) விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’. ‘கிழக்குச் சீமையிலே’ மாயாண்டி-விருமாயி போல் இதில் செவனம்மாள்-வீரத் தேவர் என்னும் பாசமிக்க அண்ணன் தங்கை உண்டு. விருமாயி போல் செவனம்மாள் செண்டிமெண்ட் குளத்தில் முழுகாதவள். இவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். வெறும் பார்வையிலும் ஓரிரண்டு வாக்கியங்களிலும் முழுமையான அன்பை வெளிப்படுத்தி நிற்பார்கள். தன் அண்ணனுக்காகச் செவனம்மாள் ஒரு கொலையைக்கூட மிக நிதானமாக, நைச்சியமாகத் செய்து முடித்திருப்பவள். 

சடங்குகளுக்குள் புகாமல் அந்தச் சமூகத்தைத் தெருவில் நின்று வேடிக்கை பார்த்ததுபோல் திரைக்கதை அமைத்திருப்பார் கமல் ஹாசன், திருமணம் போன்ற மங்களகரமான சடங்குகளைத் தனது படத்தில் காட்சிகளாக்கியிருப்பார் பாரதிராஜா. ஆனால் ‘மதயானைக் கூட்ட’த்திலோ விக்ரம் சுகுமாரன் மரண வீட்டின் சடங்குகளைக் காட்சிகளாக்கியிருப்பார். முதலிரண்டு படங்களும் நேர்கோட்டில் செல்லும் ஆனால் இந்தப் படமோ முன்பின்னாகச் செல்லும் திரைக்கதையமைப்பைக் கொண்டிருக்கும். இதன் தலைப்பே அந்தச் சமூகத்தை விமர்சிக்கும். அச்சமூகத்தின் பெண்களிடம் வெளிப்படும் ஆக்ரோஷத்தையும் குரோதத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தியது இப்படம். ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலாவது சிவனாண்டியின் தாய் விஷமேற்றிய சொற்களையே விதைத்துக்கொண்டிருப்பார். ஆனால் ‘தேவர் மக’னில் பெரிய தேவர் வீட்டு அண்ணி சாந்த சொரூபியாகவே வலம் வருவார். பெண்களிடம் வெளிப்படும் வன்மம் ஒரு சமூகத்தின் வேரையே சிதைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிய படம் மதயானைக்கூட்டம். 


சக்தியும் விருமாயியும் வசனங்களாகப் பேசிய அதே விஷயத்தை ஒற்றை சைகையில் வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் கதாபாத்திரம். மூர்க்கத்தனத்துக்கு எதிராக அந்தப் படம் பார்வையாளரின் மனத்தில் எழுப்பிய கேள்வி உக்கிரமமானது. இப்படியான கேள்வியை எழுப்புவதுதான் ஒரு நல்ல படத்தின் தன்மை. ‘மதயானைக் கூட்டம்’ வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை எனினும் இந்தத் தன்மை இந்தப் படத்தை நினைவுகூரச் செய்யும். ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியைப் படைப்பாளி தீர்மானிக்க இயலாது; அதைப் பார்வையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். ஆனால் அதன் கலைரீதியான அம்சத்தில் வெற்றியைப் பெறுவது படைப்பாளியின் கையில் தான் உள்ளது. அந்த வகையில் கமல் ஹாசனும் பாரதிராஜாவும் தர இயலாத கலை அம்சத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் புத்துணர்வான ‘மதயானைக் கூட்ட’த்தின் மூலம் தந்திருக்கிறார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்