இந்த வலைப்பதிவில் தேடு

விக்ரம் சுகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விக்ரம் சுகுமாரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 21, 2025

விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்


மரணிக்கப்போவது எங்கள் உடல்கள்; நாங்களல்ல – பாலுமகேந்திரா

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்தநாள்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த 2025 ஜூன் 2 அன்று காலையில், எதிர்பாராத அதிர்ச்சியாக இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மரணச் செய்தி திடுமென வந்து விழுந்தது. மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? எனத் தனது ஜே.ஜே:சில குறிப்புகள் நாவலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி எழுப்பியிருப்பார். அந்த நாவலை வாசித்த பின்னர் பல அகால மரணம் அந்தக் கேள்வியை நினைவூட்டிச் செல்லும். ஆனாலும், சிலரது மரணம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சில நொடிகள் சித்தத்தைக் கலங்கவைத்துவிடும். அப்படிச் சட்டென மனத்தில் கனத்த கல்லெறிந்த மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடையது.

அவருடன் ஏற்பட்ட சிறு அறிமுகம் நட்பென்று சொல்லத்தக்க நிலையை அடைந்ததற்கு அவரே காரணம். அவரை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் செல்வ புவியரசனுடன் தற்செயலாகச் சந்தித்தபோது, இதுதான் அவரை நேரில் இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் மனம் உணரவே இல்லையே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது எனக் கேட்ட கவிஞர் கண்ணதாசனும், நடிகர் முத்துராமனும் அடுத்தடுத்த நாள்களில் மறைந்த செய்தியைச் – முன்னவர் 1981 அக்டோபர் 17 அன்றும், பின்னவர் அக்டோபர் 16 அன்றும் - எட்டு வயதில் கேள்விப்பட்டபோது, மரணம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிதலும் புரிதலும் ஏற்பட்டிராத அந்த வயதில் ஏதோ ஓர் இனம்புரியாத கலக்கத்தை உணர முடிந்தது. கண்ணதாசன் 54 வயதிலும் முத்துராமன் 52 வயதிலும் உலகிலிருந்து விடைபெற்றிருந்தனர். அந்த வயதுக்குள் பெரும் புகழையும் தம் துறையில் மதிப்பு மிக்க இடத்தையும் சம்பாதித்துக்கொண்டனர். விக்ரம் சுகுமாரனுக்கும் இயற்கை சற்றுக் கருணை காட்டியிருக்கலாம். அவர் தனது துறையில் இன்னும் ஏராளம் சாதிக்க வேண்டியவர் அந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால், இயற்கை கருணை காட்டாதது திரைத்துறைக்கு இழப்பென்றுதான் உணர்வு சொல்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவரது சராசரி ஆயுள் காலம் தற்போதைய நிலவரப்படி 75 வயது என்னும் சூழலில் அவர் இன்னும் ஐம்பது வயதைக்கூடத் தொட்டிருக்கவில்லை. அவரது சுய விவரத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாக இல்லை. அவரது வயது 47, 48, 49 என வெவ்வேறுவிதமான தகவல்களே கிடைக்கின்றன. ஏப்ரல் 11 அன்று பிறந்த அவரது பிறப்பு குறித்த தகவல் விக்கிபீடியாவில் கூட ஒழுங்காக இல்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மதயானைக் கூட்டம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிலையான இடம்பெற்றுவிட்ட ஓர் இயக்குநருக்கு இதுதான் நிலையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படத் துறையானது அரைகுறை நடிகர்கள்கூட மாநிலத்தை ஆள ஆசைப்படும் அளவுக்கு அரசியல்ரீதியான செல்வாக்கைப் பெற்றுத் தரும் களமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ள சூழலிலும், இப்படியான நிலைமை தொடர்வது என்பது ஆவணப்படுத்துதலில் தமிழர்தம் சுணக்கத்தையே சுட்டுகிறது.


மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான ஜெயக்கொடித் தேவர் அப்படத்தில் தன் மகளுக்கு நடத்திவைத்த சிறப்பான திருமணத்தை, நினைத்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துவைக்க இயலவில்லையே எனும் மனத்தாங்கலில் மாரடைப்பால் உயிர்விட்டிருப்பார். திரைப்படக் கலைமீது பேரார்வம் கொண்டிருந்த விக்ரம் சுகுமாரனும் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டுச் சென்னைக்குப் பேருந்தில் திரும்பிய வேளையில் மாரடைப்பால் உயிரை விட்டிருந்தார். இன்னும் தம் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பொன்றை உருவாக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்னும் மனத்தாங்கல் அவருக்கும் இருந்திருக்கக் கூடும். தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமைசேர்க்கும் பல படங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாளி அவர் என்பது மரணத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எந்த எதிர்க்கேள்வியுமற்று இயற்கையின் ஏவலுக்குப் பழகிய விசுவாசமான வேலையாள்தானே மரணம்?

இயக்குநர் ருத்ரய்யா, S. கணேச ராஜ் வரிசையில் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒன்றால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்துவிட்ட திருப்தியில் சென்றுவிட்டாரோ என்னவோ? அவள் அப்படித்தான் மூலம் ருத்ரய்யாவும் சின்னத்தாயி வழியே S. கணேச ராஜும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைத்துவிட்டர்கள். ருத்ரய்யா இரண்டாவதாக இயக்கிய கிராமத்து அத்தியாயம், S. கணேச ராஜின் மாமியார் வீடு இரண்டும் ரசிகர்கள் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இவர்கள் இருவருக்கும் இல்லாத சிறப்பு விக்ரம் சுகுமாரனுக்கு உண்டு. இவர்கள் இருவராவது தமது படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பக்க பலமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், விக்ரம் சுகுமாரனோ எந்தப் பெரிய தொழில்நுட்பக் கலைஞரையும் சாராது தனது கலைத் திறனை மட்டும் நம்பிக் களமிறங்கி அதில் வெற்றியை நோக்கி நகர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவில் இயக்குநர்கள் அவரிடம் பணியாற்றிவிட்டுத் தனியே இயக்குநராகியிருக்கிறார்கள். மணிவண்ணன், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும். அதே போல் பாலுமகேந்திராவிடமிருந்தும், பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் வரிசையில் இயக்குநரானவர் அவர். தனது ஜூலி கணபதி படத்தை, ‘தமிழ் சினிமாவை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் என் இளைய தலைமுறைக்கு’ சமர்ப்பித்த பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன். பாலுமகேந்திராவின் கதைநேரம் உள்ளிட்ட சில படைப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் வெற்றிமாறனுடனும் பணியாற்றி, அவரது பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களின் உருவாக்கத்தில் பங்களித்து விடைபெற்றுத் தனியே இயக்குநரானவர் விக்ரம் சுகுமாரன். போர்ச் சூழலால் வதைபட்ட இலங்கையிலிருந்து பாலுமகேந்திரா திரைப்படத்துறைக்கு வந்திருந்தார் என்றால், விக்ரம் சுகுமாரனோ வறட்சி வாட்டியெடுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அத்துறைக்கு வந்தவர்.


“என்னுடைய சினிமாவிலே ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது என யாராவது சொன்னால் அது எனக்கும் இலக்கியத்துக்குமான பரிச்சயம்” என்கிறார் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில். அப்படிப்பட்ட இயக்குநரிடம் பாடம் பயின்ற விக்ரம் சுகுமாரன் உலக இலக்கியம், உலகத் திரைப்படம் என்றெல்லாம் கதைபேசாமல் உள்ளூர் படங்களான கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்களைப் பார்த்தே திரைத்துறைக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் மேடையில் ஏறி உலகப் படம், உலக இலக்கியம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதற்குப் பெரிய வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு அவர்களது படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். அதற்குக் காரணம் உலக இலக்கியம், உலக சினிமா என வீறாப்பாகப் பேசும் அவர்களது படங்களில் அவற்றின் சிறு தடயமும் தென்படாத வகையில் அசல் தமிழ் சினிமாவை உருவாக்கிவிடுவதே. ஆனால், பேராரவாரமின்றி விக்ரம் சுகுமாரன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரின் பண்பாட்டை விமர்சனரீதியில் திரைக்கதையாக்கி அதை ஒரு கலை ஆவணமாக மதயானைக் கூட்டம் என்னும் பெயரில் படைத்துள்ளார். சாதிப் பெருமிதம் பொங்கிய கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற தமிழ்நாட்டில் சாதியை விமர்சித்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது நகைமுரணே.

இயக்குநர் விக்ரம் சுகுமாரனை நேர்காணல் ஒன்றுக்காக நுங்கம்பாக்கத்தில் இராவண கோட்டம் திரைப்பட அலுவலகத்தில் சந்தித்த வேளையில், அவர் திரைப்படத் துறைக்கு வந்த கதையை மிகவும் எளிமையாக, வெள்ளந்தியான மொழியில் விரிவாகப் பேசினார். மிகவும் சரியான விதத்தில் உருவாக்கப்பட்டும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட திரைப்படமான மதயானைக் கூட்டம் வெளியான வேளையில் அது சரிவரக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் வழக்கமாக வெளிப்படும் மிகைப்படுத்துதல் எதுவுமின்றி மிகவும் நுட்பமான முறையில், திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கிய முதல் படமான அது வெளியான தருணத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால் விக்ரம் சுகுமாரன் என்னும் இயக்குநர் அப்படம் போன்ற மேலும் பல படங்களைத் தந்திருக்கக்கூடும். ஆனால், இயற்கையின் கணக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் இறுதியாக இயக்கிய தேரும் போரும் படம் என்னவானது என்பது விடையற்ற கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

நுண்ணுணர்வுகளால் இழைக்கப்பட்ட நுட்பமான ஒரு திரைப்படத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தை நெரித்த சமூகத்தை எதிர்கொண்டதாலோ என்னவோ விக்ரம் சுகுமாரன் அடுத்து உருவாக்கிய இராவண கோட்டம் அந்த அளவுக்கு நுட்பமாக உருவாக்கப்படாமல் வழக்கமான தமிழ்ப் படப் பாதையில் பயணித்துவிட்டது. ஒரு கலைஞன் சுதந்திரமான மனநிலையில் சிந்தித்துக் கதை திரைக்கதையை எழுதி, உயிரோட்டமான வசனங்களைப் படைத்துப் படமாக்கினால் உருவாகும் படத்துக்கும், அதே கலைஞன் சமூகத்தின் அழுத்தத்துக்கு உட்பட்டு உருவாக்கும் படத்துக்குமான வேறுபாட்டை எளிதில் உணர வேறெதுவும் செய்ய வேண்டாம். அடுத்தடுத்து, மதயானைக் கூட்டத்தையும், இராவண கோட்டத்தையும் பார்த்தால் போதும். ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம். இவ்வளவுக்கும் விக்ரம் சுகுமாரனின் இரண்டாம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை மன்னன் எனக் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகனுக்கு நல்ல படம் ஒன்றை உருவாக்கித்தரும் பொறுப்பை விக்ரம் சுகுமாரனிடம் வழங்கியிருந்தார் என்றால் விக்ரம் சுகுமாரனின் திரைக்கதை மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். அந்தப் படமும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.

விக்ரம் சுகுமாரன் தனது மதயானைக் கூட்டம் படத்துக்கு ஒரு நேர்மறையான விமர்சனம்கூட வரவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுப. குணராஜன் காட்சிப்பிழை இதழில் எழுதிய சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் என்னும் கட்டுரை அப்படத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் இனவரைவியல் கூறுகளையும்,படமாக்க உத்திகளையும் செய்நேர்த்தியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட நூலிலும் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆவணத்தின் துல்லியமும் புனைவின் நேர்த்தியும் சரியான விகிதத்தில் கலந்து அசலான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த அத்திரைப்படத்தைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட விமர்சனம் அது.

(2025 ஜூலை காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது) 

ஞாயிறு, அக்டோபர் 30, 2016

சினிமாஸ்கோப் 20: மதயானைக் கூட்டம்

தேவர் மகன் சிவாஜி, கமல்
சரியாக 24 ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி அன்று வெளியானது கமல் ஹாசன் நடித்த ‘தேவர் மகன்’ (1992). அதே நாளில்தான் ரஜினி காந்த் நடித்த ‘பாண்டிய’னும் வெளியானது. ரஜினி, கமல் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரஜினி காந்த் நடித்த படமே வெற்றி வரிசையில் முந்திச் செல்வது வழக்கம். ‘நாயக’னுடன் வெளியான ‘மனிதன்’தான் பாக்ஸ் ஆபீஸில் முன்னணியில் நின்றது என்பது ஓர் உதாரணம். ஆனால் ‘பாண்டியன்’ படுதோல்வி அடைந்தபோது, ‘தேவர் மகன்’ தமிழகமெங்கும் வசூலை வாரிக்குவித்தது. அது மட்டுமல்ல; அந்த ஆண்டில் 5 தேசிய விருதுகளையும் அப்படம் பெற்றது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற, சாதிப் பெருமையை உரக்கச் சொல்லும் ‘போற்றிப்பாடடி பொன்னே தேவர் காலடி மண்ணே’ என்ற பாடல் அதன் பின்னர் தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான வன்மத்தை ஒருங்கிணைக்கப் பிரதான களம் அமைத்துக் கொடுத்தது. அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்ற உண்மை சிலருக்குக் கசக்கும். அந்தப் படத்தின் செய்தியோ அகிம்சை என்பதுதான் ஆச்சரியம். படத்தின் இறுதிக் காட்சியில் கையில் கொலையாயுதத்தை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வேற்படுத்தும் வசனங்களைப் பேசிச் செல்வார் சக்தி. ஆனால் அதன் திரைக்கதைப் பயணத்தில் சாதிப் பெருமிதம் மிதமிஞ்சி வழிந்த காரணத்தால், படம் உணர்த்த விரும்பிய அகிம்சை ஆழியில் கரைத்த உப்பானது. படத்தின் பிரதான கதாபாத்திரமான சக்தியே ஒரு காட்சியில், ‘நான் சக்திவேல் தேவன்’ என்ற வசனத்தை மொழியும்.
ரேணுகா, கமல், சிவாஜி, பரதன், கௌதமி
பெரிய தேவர் வேடமேற்ற சிவாஜி பஞ்சாயத்தில் நாற்காலியிலிருந்து எழுந்து நின்றவுடன் ஒட்டுமொத்த ஊரும் எழுந்து நிற்கும். அவர் அமரச் சொன்ன பின்னர்தான் அனைவரும் அமர்வார்கள். இது வெறும் மரியாதையல்ல; ஒரு வகையான ஆதிக்கம். படத்தின் ஒரு காட்சியில் சிவாஜியும் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று காட்டப்படும். தன்னைப் பெரியார் வழியில் நடப்பவராகக் காட்டிக்கொள்வதில் விருப்புடன் செயல்படும் கமல்ஹாசனே இதன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியிருந்தார். கமல் ஹாசன் சக்தியாக அறிமுகமாகும் காட்சியிலேயே கறுப்பு நிற உடைதான் அணிந்திருப்பார். ஆனால் திருமணம் முடிந்த அன்று சக்தியின் கால்களில் விழுந்து வணங்குவார் பஞ்சவர்ணம். சக்தியும் அந்த மரியாதையை அப்படியே ஏற்றுக்கொள்வார். அத்தனை வகையான ஆதிக்கத்தையும் எதிர்த்த பெரியாரின் புகைப்படம் வெறும் செட் புராபர்ட்டி தானா? அல்ல அல்ல, நல்ல சினிமாவுக்காகத் தன் கொள்கைகளைக் கூடத் தளர்த்தி கமல் தன்னை வருத்திக்கொள்கிறார்!  


இதற்கு அடுத்த தீபாவளி அன்று வெளியானது பாரதிராஜா திரைக்கதை அமைத்து இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ (1993). இதன் கதை வசனம் எம்.ரத்னகுமார். இது அண்ணன் தங்கைப் பாசப் படம் எனப்பட்ட போதும், இதில் அதே சமூகத்துப் பண்பாட்டு வழக்கங்களும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதங்களால் ஏற்படும் இன்னல்களுமே திரைக்கதையாகியிருந்தன. ‘பொசுக்கப்பட்ட பூமியில் நசுக்கப்பட்ட மனிதர்களை இன்னும் ஈரத்துடன் வைத்திருப்பது பாசம் என்ற உணர்ச்சியே. இது ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்த கலாச்சாரத்தின் கதை’ என்று பாரதிராஜாவின் கணீர் குரலில் தொடங்கும் படத்தின் முடிவில் விருமாயி அந்த மனிதர்களின் குரோதத்தால், நிலத்தில் குருதி சிந்திக் கிடப்பாள். பாரதிராஜா மனிதர்கள் அனைவரும் மனிதநேயத்தை வளர்க்க வேண்டும் வக்கிரங்களை அழிக்க வேண்டும் என்று வேதாந்தம் பேசுவார். பாக்யராஜ், மணிவண்ணன், இளையராஜா போன்றோர் இல்லாத வறுமை இந்தப் படத்தில் தென்படும். விருமாயி வேடமேற்றிருந்த ராதிகாவின் சிவாஜியாகும் முனைப்புக்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்திருப்பார் பாரதிராஜா. ‘பசும்பொன்’னில் ராதிகா ரசிகர்களைப் பதம் பார்த்ததற்கு இந்தப் படத்தின் வெற்றியே அச்சாரமிட்டது. இந்தப் படத்தின் பல காட்சிகள் வெறும் செண்டிமெண்ட் பூச்சுக்கள். உதாரணம், அண்ணனுக்காக விருமாயி கையை வெட்டிக்கொள்ளும் காட்சி. 

இந்த இரண்டு படங்களிலுமே ஒரு சமூகத்தின் மூர்க்க குணத்தால் அதன் மானிடர்கள் படும் இன்னல்கள்தான் படத்தின் திரைக்கதை. ஆனால் அதே சமூகத்தின் பெருமையை வெளிப்படுத்திய படங்களாகவே இவை ரசிகர்களால் பார்க்கப்பட்டன; அதன் சான்று இவற்றின் வணிக வெற்றி. மரணத்தைக் கொண்டாடும் ஒரு நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் தவறவிட்ட அம்சங்களைக் கச்சிதமாகக் கைப்பற்றி இதே சமூகத்தின் மற்றொரு பக்கத்தைக் காட்சிப்படுத்தியது, அன்பைப் போதித்த கிறிஸ்து பிறந்த தினத்தில் வெளியான (25.12.2013) விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘மதயானைக் கூட்டம்’. ‘கிழக்குச் சீமையிலே’ மாயாண்டி-விருமாயி போல் இதில் செவனம்மாள்-வீரத் தேவர் என்னும் பாசமிக்க அண்ணன் தங்கை உண்டு. விருமாயி போல் செவனம்மாள் செண்டிமெண்ட் குளத்தில் முழுகாதவள். இவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவே மாட்டார்கள். வெறும் பார்வையிலும் ஓரிரண்டு வாக்கியங்களிலும் முழுமையான அன்பை வெளிப்படுத்தி நிற்பார்கள். தன் அண்ணனுக்காகச் செவனம்மாள் ஒரு கொலையைக்கூட மிக நிதானமாக, நைச்சியமாகத் செய்து முடித்திருப்பவள். 

சடங்குகளுக்குள் புகாமல் அந்தச் சமூகத்தைத் தெருவில் நின்று வேடிக்கை பார்த்ததுபோல் திரைக்கதை அமைத்திருப்பார் கமல் ஹாசன், திருமணம் போன்ற மங்களகரமான சடங்குகளைத் தனது படத்தில் காட்சிகளாக்கியிருப்பார் பாரதிராஜா. ஆனால் ‘மதயானைக் கூட்ட’த்திலோ விக்ரம் சுகுமாரன் மரண வீட்டின் சடங்குகளைக் காட்சிகளாக்கியிருப்பார். முதலிரண்டு படங்களும் நேர்கோட்டில் செல்லும் ஆனால் இந்தப் படமோ முன்பின்னாகச் செல்லும் திரைக்கதையமைப்பைக் கொண்டிருக்கும். இதன் தலைப்பே அந்தச் சமூகத்தை விமர்சிக்கும். அச்சமூகத்தின் பெண்களிடம் வெளிப்படும் ஆக்ரோஷத்தையும் குரோதத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தியது இப்படம். ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலாவது சிவனாண்டியின் தாய் விஷமேற்றிய சொற்களையே விதைத்துக்கொண்டிருப்பார். ஆனால் ‘தேவர் மக’னில் பெரிய தேவர் வீட்டு அண்ணி சாந்த சொரூபியாகவே வலம் வருவார். பெண்களிடம் வெளிப்படும் வன்மம் ஒரு சமூகத்தின் வேரையே சிதைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டிய படம் மதயானைக்கூட்டம். 


சக்தியும் விருமாயியும் வசனங்களாகப் பேசிய அதே விஷயத்தை ஒற்றை சைகையில் வெளிப்படுத்தியிருக்கும் பார்த்திபன் கதாபாத்திரம். மூர்க்கத்தனத்துக்கு எதிராக அந்தப் படம் பார்வையாளரின் மனத்தில் எழுப்பிய கேள்வி உக்கிரமமானது. இப்படியான கேள்வியை எழுப்புவதுதான் ஒரு நல்ல படத்தின் தன்மை. ‘மதயானைக் கூட்டம்’ வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை எனினும் இந்தத் தன்மை இந்தப் படத்தை நினைவுகூரச் செய்யும். ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியைப் படைப்பாளி தீர்மானிக்க இயலாது; அதைப் பார்வையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். ஆனால் அதன் கலைரீதியான அம்சத்தில் வெற்றியைப் பெறுவது படைப்பாளியின் கையில் தான் உள்ளது. அந்த வகையில் கமல் ஹாசனும் பாரதிராஜாவும் தர இயலாத கலை அம்சத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் புத்துணர்வான ‘மதயானைக் கூட்ட’த்தின் மூலம் தந்திருக்கிறார்.

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்