த வின்ட் வில் கேரி அஸ்
சில திரைப்படங்கள்
வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்துபவை. சில படங்களோ வாழ்க்கையை மேம்படுத்துபவை. இந்த
இரண்டுவகைப் படங்களுமே நமக்கு அவசியமானவை. நமது மனநிலையைப் பொறுத்து ஏதோ ஒரு
வகையைப் பார்க்கிறோம். திரைப்படத்தை ஒரு கலையாகக் கருதும் இயக்குநர்கள் இரண்டாம்
வகைப் படங்களை உருவாக்குவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதுமே
இப்படியான இயக்குநர்கள் வாழ்வு பற்றியும் சமூகம் பற்றியும் தாங்கள் கொண்டிருக்கும்
புரிதலை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தை, மனிதர்களை மேம்படுத்தும் வகையிலான படங்களை
இயக்கினார்கள், இயக்குகிறார்கள். இவர்களில் ஒருவரென ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியைக்
குறிப்பிடலாம்.
அப்பாஸ் கியரோஸ்தமியின் குளோஸ் அப், த்ரூ த
ஆலிவ் ட்ரீஸ், டேஸ்ட் ஆஃப் செரி, த வின்ட் வில் கேரி அஸ் போன்ற படங்களுக்கு
உலகெங்கும் பார்வையாளர்கள் அநேகர். கியரோஸ்தமியின்
படங்களில் பார்வையாளருக்குப் பிரதான இடமிருக்கும். அவரும் படைப்புடன்
பிணைக்கப்படுவார். அவரது அனுபவங்கள் வழியேதான் படத்தின் காட்சிகளை அவரால்
புரிந்துகொள்ள இயலும். இதனால் ஒரே படம் ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொருவித
அனுபவம் தரும். அவரவரது வாழ்வனுபவங்களின் அடிப்படையில் படத்தின் கருவும் கதையும்
பார்வையாளருக்குத் தரிசனம் தரும்.
படைப்பூக்கம் மிக்க
கலையின் தரம் கொண்ட ஒரு திரைப்படம் நல்ல நாவலை வாசித்த திருப்தி தரும். அப்பாஸின்
த வின்ட் வில் கேரி அஸ் திரைப்படமோ ஒரு கவிதையைப் படித்த உணர்வைத் தருகிறது. ஒரு
கதை, அதற்கான திரைக்கதை, அதைத் தூண்டும் வகையிலான சம்பவங்கள், பின்னணியிசை என்ற
மரபார்ந்த திரைப்பட மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தப் படத்தின் திரைமொழி அந்நியமாகத்
தோன்றலாம், ஆனால் இதன் பயணம் வித்தியாசமானது என்பதை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.
நவீனமான திரைமொழியை
வெளிப்படுத்தி பார்வையாளரின் திரைப்பட அனுபவத்தை விசாலமாக்கும் சாத்தியத்தைக்
கொண்டிருக்கும் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. கதை என்றும் திரைக்கதை
என்றும் இருந்தபோதும் படம் திரையைவிட நம் மனதிலேயே அதிகம் நகர்கிறது. திரையில்
சொல்லப்படம், காட்டப்படும் சம்பவங்களைவிட அவற்றைத் தொடர்ந்து நம் மனதில் அவை
உருக்கொள்ளும் அனுபவம் புதுவிதமானது. அதுதான் இப்படத்தை வித்தியாசமானதாக்குகிறது. காட்சிகளை
முழுவதுமோ கதாபாத்திரங்களை முழுமையாகவோ கியரோஸ்தமி காட்டவில்லை. இப்படத்தின்
பிரதான பாத்திரமே பார்வையாளருக்குக் காட்டப்படவில்லை. இப்படி முகம் காட்டாத
பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் இந்தப் படத்தில். படத்தில் ஒரு காதல் உண்டு.
ஆனால் காதலன் காட்டப்படவில்லை, காதலியின் முகத்தைப் பார்க்க முடியாது.
ஃபெஹ்சாத் என்னும்
ஊடகவியலாளர் தலைமையில் குழு ஒன்று அந்த மலைக் கிராமத்துக்கு வருகிறது. அவர்களின்
நோக்கம் அங்கே இறக்கும் தருவாயிலிருக்கும் மலேக் என்னும் மூதாட்டி ஒருவரது மரணத்தின்
பின்னர் அனுசரிக்கப்படும் பாரம்பரிய வழக்கமான மரணச்சடங்கைப் பதிவுசெய்வதே. ஃபர்சாத்
என்னும் சிறுவன் ஃபெஹ்சாத்துக்குக் கிராமத்தில் வழிகாட்டி போல இருக்கிறான். அந்த
நோக்கத்துக்காக அவர்கள் காத்திருக்கும்போது, பண்பாட்டின் எச்சமாய் விளங்கும் அந்தக்
கிராமத்தைப் பார்வையாளர்களுக்கு கேமரா படம்பிடித்துக் காட்டுகிறது. மலையின்
அழகையும், புழுதி கிளம்பும் சாலையையும், அதனூடே செல்லும் காரையும் அதில் அமர்ந்து
செல்லும் மனிதர்களின் உரையாடலையும் தாங்கியபடி தொடங்கும் முதல் காட்சியே உங்களைப்
புதியதொரு பயணத்துக்குத் தயார்படுத்திவிடும்.
ஃபெஹ்சாத் தனது
கைப்பேசியில் ஓர் அழைப்பை ஏற்றுத் தொந்தரவு இல்லாமல் பேச வேண்டுமானால்கூட வீட்டிலிருந்து
கிளம்பி தனது ஜீப் போன்ற வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த ஊரிலேயே மிகவும் மேடான
இடுகாட்டுக்கு வந்தால்தான் முடியும். அந்த அளவு புராதனமான கிராமம் அது.
கிராமத்தின் நிலக்காட்சிகளை மிகவும் நிதானமாகவும், விரிவாகவும் அந்தக்
கிராமத்திலேயே நாம் இருப்பது போன்ற உணர்வுடனும் அந்த உணர்வை ஏற்படுத்தும்
பின்னணியொலியுடன் படமாக்கியிருக்கிறார் கியரோஸ்தமி. ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று
வீட்டுக்குத் திரும்புவது, கோழிகள் தன் குஞ்சுகளுடன் அலைந்து திரிவது, பெண்கள்
ஏதாவது வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பது- ஃபெஹ்சாத் தங்கியிருக்கும்
வீட்டுக்கு எதிர் வீட்டில் வாழும் அந்தப் பெண் பத்தாவது குழந்தையைப் பெற்றெடுத்த
மறுதினமே வழக்கம்போல வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறாள்- போன்ற கிராமத்தின் இயல்பான
எந்த நிகழ்வையும் அதன் தன்மை கெடாமல் ஒரு மலரைச் சற்றுத் தொலைவில் இருந்துகொண்டு
வெற்றுக்கண்களால் பார்ப்பது போல் படமாக்கியிருக்கிறார்.
அந்தக் கிராமத்தில் சில
பண்பாட்டு வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன. மரணமடைந்தவர் மீது பெண்கள் கொண்டிருந்த
அன்பை வெளிப்படுத்தும்விதமாக முகத்தின் மீது தழும்பிட்டுக்கொள்ளும்
வழக்கமிருக்கிறது. அது தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்த
வழக்கம் பெண்கள் மீது விழுந்திருக்கும் அழுத்தமான சுமை என்றே சொல்ல விழைகிறார்
கியரோஸ்தமி. வயது முதிர்ந்தோர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையிலிருக்கும்போது,
அவருக்கு ஊரிலுள்ள அனைவருமே ஏதாவது உணவுப் பொருளைத் தந்தவண்ணம் இருக்கின்றனர்.
யாருடைய உணவை முதியவர் உண்கிறாரோ அந்த உணவை அளித்தோர் மனதில் நினைத்திருக்கும்
காரியம் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இப்படி நவீன வாழ்வின் நச்சுக்
காற்றுத் தன்னைத் தீண்ட அனுமதிக்காத ஒரு கிராமத்தின் முகத்தை அம்மனிதர்களின் வாழ்வை
உறுத்தலின்றிப் படம் பிடித்திருக்கிறார் அப்பாஸ் கியரோஸ்தமி.
ரகசியத்தை
பாதுகாப்பதைவிட அதைப் பிறரிடம் பரப்புவதிலேயே நமக்குப் பிரியம் போன்ற மிகச்
சாதாரணமாக நாம் கடந்துவிடும் பல விஷயங்களைப் படம் பல இடங்களில் சுட்டிச்
செல்கிறது. ஆனால் அதன் போக்கு மிகவும் இயல்பாக உள்ளதால் அதை ஒரு விஷயமாகக்
கருதாமல் கடந்துசெல்லும் ஆபத்தும் இருக்கிறது. நம்மைக் கடந்து செல்லும் சிறு சிறு
தருணங்களையும் கவனிக்கச் செய்யும் நிதானத்துக்குப் பார்வையாளரைப்
பக்குவப்படுத்துகிறது இந்தப் படம். மனிதர்கள் மீது, இயற்கை மீது கொள்ள வேண்டிய கரிசனம்
காட்சிகளில் இடையே மிகவும் அநாயாசமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு காட்சியில் ஃபெஹ்சாத்,
புதையுண்டு கிடந்த மூதாதையரின் கால் எலும்பை ஒரு கையிலும் மறு கையில் கைபேசியையும்
சுமந்தபடி பேசும் காட்சி புராதனத்தையும் நவீனத்தையும் ஒரு கோட்டால் இணைக்கிறது.
கியரோஸ்தமி எதையும் முழு வெளிச்சத்தில் வெளிப்படுத்தவில்லை. புலர்ந்தும் புலராத
அதிகாலை போன்ற தன்மை படம் முழுவதும் வெண்மேகக் கூட்டம் போல் விரவிக் கிடக்கிறது.
அந்த மஞ்சுப் பொதியை விலக்கி காட்சியை நுட்பமாகக் காணும் பொறுமையை மட்டும் படம்
வேண்டி நிற்கிறது. அப்பாஸ் கிரயோஸ்தமி ஒரு நேர்காணலில், ‘கதைப் படமாக இருப்பினும்
அதில் சில வெற்றிடங்களும் இடைவெளிகளும் இருக்கும்போது பார்வையாளர் ஒரு புதிரை
நிரப்புவது போலோ புலன் விசாரணை அதிகாரி துப்புத் துலக்குவது போலோ அவற்றை நிரப்பி
மகிழ்வார்’ என்று கூறியிருப்பது இந்தப் படத்துக்கு மிகவும் பொருந்தும்.
ஃபரூக் ஃபரோஹ்சாத்
என்னும் ஈரானிய நவினக் கவிஞரின் கவிதையிலிருந்து இந்தப் படத்தின் தலைப்பை
எடுத்திருக்கிறார் கியரோஸ்தமி. 32 வயதில் மறைந்த கவிஞரும் திரைப்பட இயக்குநருமான
ஃபரூக் பற்றிப் பால் கறக்கும் இளம்பெண்ணிடம் ஃபஹ்சாத் உரையாடும் காட்சியில் அந்தக்
கவிதையை அந்தப் பெண் பால் கறக்கும் பொழுதில் இருவருக்குமான இடைவெளியை இட்டு
நிரப்பப் பயன்படுத்துகிறார். ஒரு புதரை விலக்கி
வயல்வெளியைப் பார்ப்பது போலவோ ஒரு புதிரை அவிழ்ப்பது போலவோ பல காட்சிகள்
ஒரு சன்னல் போல் பயன்பட்டுள்ளன. அவற்றின் வழியே பரந்து உலகத்தை நீங்கள் பார்க்க
முடியும். ஒரு திரைப்படம் தொட வேண்டிய உச்சபட்ச உயரத்தைத் தொட்டு நிற்கிறது இந்தப்
படம்.
நோய்வாய்ப்பட்டு மரணப்
படுக்கையில் கிடக்கும் மலேக் என்ற அந்த நூறு வயதுப் பெண்மணியின் மரணத்துக்காக
அனைவரும் காத்திருக்கின்றனர். அவருடைய மகன் வீட்டின் வெளியே படியில் அமர்ந்தபடி
காத்திருக்கிறார். அவரின் மரண நிகழ்வு இன்று நாளை என இழுத்துக்கொண்டே போகிறது. ஒரு
கட்டத்தில் அவர் சற்றுத் தேறிவிடுகிறார், உணவுண்ணாமல் எவரிடம் உரையாடாத அவர் அந்த
ஊரில் டீக்கடை நடத்தும் தாஜ்தோலத் தந்த சூப்பைக் குடிக்கிறார், தெம்பாகப் பேசுகிறார்,
உறவுகள் குறித்து விசாரிக்கிறார். இனி அவர் இறக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்
அவருடைய மகன்கூட வேலைக்குத் திரும்பிவிடுகிறார். ஆனால் ஃபெஹ்சாத் அவர் இன்னும்
மூன்று நாள்களில் இறந்துவிடுவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அதே
நேரத்தில் ஃபெஹ்சாத்தின் உறவினர் ஒருவரது மரணத்துக்கு அவரால் சென்றிருக்க
முடியவில்லை. அவர் இந்த வேலையில் மாட்டிக்கொள்கிறார். வாழ்வு பற்றி, மரணம் பற்றி,
மரணத்துக்குப் பின்னான நிலை பற்றி, மருத்துவம் பற்றி, பெண்ணியம் பற்றி எனப் பல
விஷயங்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது படம். ஆனால் திரைப்படம் என்னும் கலையின்
வரம்புக்குட்பட்ட நிலையிலேயே இது நடக்கிறது.
கேமராவின் நகர்வு இயற்கையான
ஒளியில் அந்த மலைக் கிராமத்தின் ஒவ்வொரு அசைவையும் கிராமத்து முதியவரின் கண்கள்
வழியே பார்ப்பது போல் காட்டிச் செல்கிறது. பின்னணியில் கிராமத்தில் ஒலிக்கும்
சத்தங்களைத் தவிர இசை என்று எதுவுமே இல்லை. நாய்க் குரைப்பு, கோழிகளின்
கொக்கரிப்பு, ஆடுகளின் ம்ம்மே, என ஒரு கிராமத்தில் இயல்பாக ஒலிக்கும் அத்தனை
சத்தங்களையும் அப்படியே இசையாக நிரப்பியிருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில்
அதுவும் படம் நிறைவடைந்து இறுதி டைட்டில் இடம்பெறும் தருணத்தில் மட்டுமே
பின்னணியிசை படத்தின் பின்னணியில் படர்கிறது. மலேக் இறந்துவிடுகிறார், புதையுண்டு
கிடந்த மூதாதையரின் கால் எலும்பு நீரோடையில் மேலே அழகாக மிதந்து செல்கிறது, அந்தப்
பயணம் தொடர்கிறது, படத்தின் பயணம் நிறைவுறுகிறது. அந்தக் காட்சி ஓர் அழகான படிமமாக
நம் மனதில் தங்கிவிடுகிறது.
நண்பர் முரளியின் அடவி அக்டோபர் 2016 இதழில் வெளிவந்தது.
நண்பர் முரளியின் அடவி அக்டோபர் 2016 இதழில் வெளிவந்தது.