இந்த வலைப்பதிவில் தேடு

கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 21, 2025

விக்ரம் சுகுமாரன்: மதயானைக் கலைஞன்


மரணிக்கப்போவது எங்கள் உடல்கள்; நாங்களல்ல – பாலுமகேந்திரா

இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் மணிரத்னம் ஆகியோரது பிறந்தநாள்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்த 2025 ஜூன் 2 அன்று காலையில், எதிர்பாராத அதிர்ச்சியாக இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மரணச் செய்தி திடுமென வந்து விழுந்தது. மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? எனத் தனது ஜே.ஜே:சில குறிப்புகள் நாவலில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி கேள்வி எழுப்பியிருப்பார். அந்த நாவலை வாசித்த பின்னர் பல அகால மரணம் அந்தக் கேள்வியை நினைவூட்டிச் செல்லும். ஆனாலும், சிலரது மரணம் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சில நொடிகள் சித்தத்தைக் கலங்கவைத்துவிடும். அப்படிச் சட்டென மனத்தில் கனத்த கல்லெறிந்த மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரனுடையது.

அவருடன் ஏற்பட்ட சிறு அறிமுகம் நட்பென்று சொல்லத்தக்க நிலையை அடைந்ததற்கு அவரே காரணம். அவரை அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் செல்வ புவியரசனுடன் தற்செயலாகச் சந்தித்தபோது, இதுதான் அவரை நேரில் இறுதியாகப் பார்க்கும் சந்தர்ப்பம் என்பதற்கான எந்தத் தடயத்தையும் மனம் உணரவே இல்லையே? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது எனக் கேட்ட கவிஞர் கண்ணதாசனும், நடிகர் முத்துராமனும் அடுத்தடுத்த நாள்களில் மறைந்த செய்தியைச் – முன்னவர் 1981 அக்டோபர் 17 அன்றும், பின்னவர் அக்டோபர் 16 அன்றும் - எட்டு வயதில் கேள்விப்பட்டபோது, மரணம் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிதலும் புரிதலும் ஏற்பட்டிராத அந்த வயதில் ஏதோ ஓர் இனம்புரியாத கலக்கத்தை உணர முடிந்தது. கண்ணதாசன் 54 வயதிலும் முத்துராமன் 52 வயதிலும் உலகிலிருந்து விடைபெற்றிருந்தனர். அந்த வயதுக்குள் பெரும் புகழையும் தம் துறையில் மதிப்பு மிக்க இடத்தையும் சம்பாதித்துக்கொண்டனர். விக்ரம் சுகுமாரனுக்கும் இயற்கை சற்றுக் கருணை காட்டியிருக்கலாம். அவர் தனது துறையில் இன்னும் ஏராளம் சாதிக்க வேண்டியவர் அந்த ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆனால், இயற்கை கருணை காட்டாதது திரைத்துறைக்கு இழப்பென்றுதான் உணர்வு சொல்கிறது.

தமிழ்நாட்டில் ஒருவரது சராசரி ஆயுள் காலம் தற்போதைய நிலவரப்படி 75 வயது என்னும் சூழலில் அவர் இன்னும் ஐம்பது வயதைக்கூடத் தொட்டிருக்கவில்லை. அவரது சுய விவரத் தகவல்கள் பொதுவெளியில் தெளிவாக இல்லை. அவரது வயது 47, 48, 49 என வெவ்வேறுவிதமான தகவல்களே கிடைக்கின்றன. ஏப்ரல் 11 அன்று பிறந்த அவரது பிறப்பு குறித்த தகவல் விக்கிபீடியாவில் கூட ஒழுங்காக இல்லை. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மதயானைக் கூட்டம் என்னும் ஒரு திரைப்படத்தின் மூலம் நிலையான இடம்பெற்றுவிட்ட ஓர் இயக்குநருக்கு இதுதான் நிலையா? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரைப்படத் துறையானது அரைகுறை நடிகர்கள்கூட மாநிலத்தை ஆள ஆசைப்படும் அளவுக்கு அரசியல்ரீதியான செல்வாக்கைப் பெற்றுத் தரும் களமாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ள சூழலிலும், இப்படியான நிலைமை தொடர்வது என்பது ஆவணப்படுத்துதலில் தமிழர்தம் சுணக்கத்தையே சுட்டுகிறது.


மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமான ஜெயக்கொடித் தேவர் அப்படத்தில் தன் மகளுக்கு நடத்திவைத்த சிறப்பான திருமணத்தை, நினைத்த அளவுக்குச் சிறப்பாகச் செய்துவைக்க இயலவில்லையே எனும் மனத்தாங்கலில் மாரடைப்பால் உயிர்விட்டிருப்பார். திரைப்படக் கலைமீது பேரார்வம் கொண்டிருந்த விக்ரம் சுகுமாரனும் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லிவிட்டுச் சென்னைக்குப் பேருந்தில் திரும்பிய வேளையில் மாரடைப்பால் உயிரை விட்டிருந்தார். இன்னும் தம் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் படைப்பொன்றை உருவாக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்னும் மனத்தாங்கல் அவருக்கும் இருந்திருக்கக் கூடும். தமிழ்த் திரைப்பட உலகுக்குப் பெருமைசேர்க்கும் பல படங்களை உருவாக்கும் திறன் மிக்க படைப்பாளி அவர் என்பது மரணத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எந்த எதிர்க்கேள்வியுமற்று இயற்கையின் ஏவலுக்குப் பழகிய விசுவாசமான வேலையாள்தானே மரணம்?

இயக்குநர் ருத்ரய்யா, S. கணேச ராஜ் வரிசையில் இரண்டு படங்களை இயக்கி அதில் ஒன்றால் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்துவிட்ட திருப்தியில் சென்றுவிட்டாரோ என்னவோ? அவள் அப்படித்தான் மூலம் ருத்ரய்யாவும் சின்னத்தாயி வழியே S. கணேச ராஜும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நிலைத்துவிட்டர்கள். ருத்ரய்யா இரண்டாவதாக இயக்கிய கிராமத்து அத்தியாயம், S. கணேச ராஜின் மாமியார் வீடு இரண்டும் ரசிகர்கள் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதவை. இவர்கள் இருவருக்கும் இல்லாத சிறப்பு விக்ரம் சுகுமாரனுக்கு உண்டு. இவர்கள் இருவராவது தமது படங்களுக்கு இளையராஜாவின் இசையைப் பக்க பலமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால், விக்ரம் சுகுமாரனோ எந்தப் பெரிய தொழில்நுட்பக் கலைஞரையும் சாராது தனது கலைத் திறனை மட்டும் நம்பிக் களமிறங்கி அதில் வெற்றியை நோக்கி நகர்ந்தவர்.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா பரம்பரை என்று சொல்லக்கூடிய அளவில் இயக்குநர்கள் அவரிடம் பணியாற்றிவிட்டுத் தனியே இயக்குநராகியிருக்கிறார்கள். மணிவண்ணன், கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலரைக் குறிப்பிட முடியும். அதே போல் பாலுமகேந்திராவிடமிருந்தும், பாலா, சீனு ராமசாமி, வெற்றிமாறன் வரிசையில் இயக்குநரானவர் அவர். தனது ஜூலி கணபதி படத்தை, ‘தமிழ் சினிமாவை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கும் என் இளைய தலைமுறைக்கு’ சமர்ப்பித்த பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவர் விக்ரம் சுகுமாரன். பாலுமகேந்திராவின் கதைநேரம் உள்ளிட்ட சில படைப்புகளில் பணியாற்றியுள்ளார். பின்னர் வெற்றிமாறனுடனும் பணியாற்றி, அவரது பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களின் உருவாக்கத்தில் பங்களித்து விடைபெற்றுத் தனியே இயக்குநரானவர் விக்ரம் சுகுமாரன். போர்ச் சூழலால் வதைபட்ட இலங்கையிலிருந்து பாலுமகேந்திரா திரைப்படத்துறைக்கு வந்திருந்தார் என்றால், விக்ரம் சுகுமாரனோ வறட்சி வாட்டியெடுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அத்துறைக்கு வந்தவர்.


“என்னுடைய சினிமாவிலே ஏதோ ஒரு தனித்தன்மை இருக்கிறது என யாராவது சொன்னால் அது எனக்கும் இலக்கியத்துக்குமான பரிச்சயம்” என்கிறார் பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில். அப்படிப்பட்ட இயக்குநரிடம் பாடம் பயின்ற விக்ரம் சுகுமாரன் உலக இலக்கியம், உலகத் திரைப்படம் என்றெல்லாம் கதைபேசாமல் உள்ளூர் படங்களான கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்களைப் பார்த்தே திரைத்துறைக்கு வந்ததாகக் கூறியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் மேடையில் ஏறி உலகப் படம், உலக இலக்கியம் என்றெல்லாம் பேசுவதைக் கேட்பதற்குப் பெரிய வியப்பாக இருக்கும். அதைவிட வியப்பு அவர்களது படங்களைப் பார்க்கும்போது ஏற்படும். அதற்குக் காரணம் உலக இலக்கியம், உலக சினிமா என வீறாப்பாகப் பேசும் அவர்களது படங்களில் அவற்றின் சிறு தடயமும் தென்படாத வகையில் அசல் தமிழ் சினிமாவை உருவாக்கிவிடுவதே. ஆனால், பேராரவாரமின்றி விக்ரம் சுகுமாரன் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரிவினரின் பண்பாட்டை விமர்சனரீதியில் திரைக்கதையாக்கி அதை ஒரு கலை ஆவணமாக மதயானைக் கூட்டம் என்னும் பெயரில் படைத்துள்ளார். சாதிப் பெருமிதம் பொங்கிய கிழக்குச் சீமையிலே, தேவர் மகன் போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற தமிழ்நாட்டில் சாதியை விமர்சித்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது நகைமுரணே.

இயக்குநர் விக்ரம் சுகுமாரனை நேர்காணல் ஒன்றுக்காக நுங்கம்பாக்கத்தில் இராவண கோட்டம் திரைப்பட அலுவலகத்தில் சந்தித்த வேளையில், அவர் திரைப்படத் துறைக்கு வந்த கதையை மிகவும் எளிமையாக, வெள்ளந்தியான மொழியில் விரிவாகப் பேசினார். மிகவும் சரியான விதத்தில் உருவாக்கப்பட்டும் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட திரைப்படமான மதயானைக் கூட்டம் வெளியான வேளையில் அது சரிவரக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. தமிழ்த் திரைப்படத்தில் வழக்கமாக வெளிப்படும் மிகைப்படுத்துதல் எதுவுமின்றி மிகவும் நுட்பமான முறையில், திரைக்கதை அமைத்து அவர் உருவாக்கிய முதல் படமான அது வெளியான தருணத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டிருந்தால் விக்ரம் சுகுமாரன் என்னும் இயக்குநர் அப்படம் போன்ற மேலும் பல படங்களைத் தந்திருக்கக்கூடும். ஆனால், இயற்கையின் கணக்கு வேறுவிதமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர் இறுதியாக இயக்கிய தேரும் போரும் படம் என்னவானது என்பது விடையற்ற கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.

நுண்ணுணர்வுகளால் இழைக்கப்பட்ட நுட்பமான ஒரு திரைப்படத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கழுத்தை நெரித்த சமூகத்தை எதிர்கொண்டதாலோ என்னவோ விக்ரம் சுகுமாரன் அடுத்து உருவாக்கிய இராவண கோட்டம் அந்த அளவுக்கு நுட்பமாக உருவாக்கப்படாமல் வழக்கமான தமிழ்ப் படப் பாதையில் பயணித்துவிட்டது. ஒரு கலைஞன் சுதந்திரமான மனநிலையில் சிந்தித்துக் கதை திரைக்கதையை எழுதி, உயிரோட்டமான வசனங்களைப் படைத்துப் படமாக்கினால் உருவாகும் படத்துக்கும், அதே கலைஞன் சமூகத்தின் அழுத்தத்துக்கு உட்பட்டு உருவாக்கும் படத்துக்குமான வேறுபாட்டை எளிதில் உணர வேறெதுவும் செய்ய வேண்டாம். அடுத்தடுத்து, மதயானைக் கூட்டத்தையும், இராவண கோட்டத்தையும் பார்த்தால் போதும். ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் நெருக்கடியை உணர்ந்துகொள்ளலாம். இவ்வளவுக்கும் விக்ரம் சுகுமாரனின் இரண்டாம் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். தமிழ்த் திரைப்பட உலகில் திரைக்கதை மன்னன் எனக் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் தன் மகனுக்கு நல்ல படம் ஒன்றை உருவாக்கித்தரும் பொறுப்பை விக்ரம் சுகுமாரனிடம் வழங்கியிருந்தார் என்றால் விக்ரம் சுகுமாரனின் திரைக்கதை மீது அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருந்திருப்பார். அந்தப் படமும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.

விக்ரம் சுகுமாரன் தனது மதயானைக் கூட்டம் படத்துக்கு ஒரு நேர்மறையான விமர்சனம்கூட வரவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆனால், சுப. குணராஜன் காட்சிப்பிழை இதழில் எழுதிய சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் என்னும் கட்டுரை அப்படத்தை நேர்மறையான கண்ணோட்டத்துடன் அணுகி, அதன் இனவரைவியல் கூறுகளையும்,படமாக்க உத்திகளையும் செய்நேர்த்தியையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியது. அதே தலைப்பில் உருவாக்கப்பட்ட நூலிலும் இந்தக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆவணத்தின் துல்லியமும் புனைவின் நேர்த்தியும் சரியான விகிதத்தில் கலந்து அசலான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த அத்திரைப்படத்தைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட விமர்சனம் அது.

(2025 ஜூலை காக்கைச் சிறகினிலே இதழில் வெளியானது) 

ஞாயிறு, நவம்பர் 20, 2016

சினிமாஸ்கோப் 22: கறுப்புப் பணம்

அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய மகாத்மா போதித்த அஹிம்சை தேவையில்லை; வெள்ளைப் பணமோ கறுப்புப் பணமோ அவர் படம் அச்சடிக்கப்பட்ட பணம் தேவையாயிருக்கிறது. வெறும் தாள் என்றாலும் அது இல்லாதவரே இங்கு வெறும் ஆள் என்பதே சமூகத்தின் புரிதல். பணம், பணம் என ஆலாய்ப் பறக்கும் மனிதர்கள் நிறைந்த சமூகத்தில் அதன் மதிப்பை எளிதாக எடை போட்டுவிட முடியாது. பணத்தால் எந்த நிம்மதியும் இல்லை; பணத்தை ஒதுக்கி உறவை இணைத்தாலே இன்பம் போன்ற ஆலோசனைகள் தரும் சொற்பொழிவாளரும் பணம் தராவிட்டால் வந்து ஆலோசனை தரமாட்டார் என்பதே யதார்த்தம். இந்தப் பணத்தால் படாதபாடு பட்டவராக அறியப்பட்டிருப்பவர் காலஞ்சென்ற கவிஞர் கண்ணதாசன். ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே ஒரு சுவர் போல் எழும்பி, இரு தரப்பினரையும் பிரித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தின் பாதிப்புகளையும் தாக்கத்தையும் உணர்ந்ததால், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அவர் தயாரித்த படம் கறுப்புப் பணம் (1964).   
தணிகாசலம் என்ற பெரியவர் வேடத்தில் கண்ணதாசனே நடித்திருப்பார். அத்துடன் அப்படத்தின் கதை, வசனம், பாடல்களையும் அவர் எழுதியிருப்பார். திரைக்கதையை வலம்புரி சோமனாதன் எழுத, படத்தின் ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டும் ஜி.ஆர்.நாதன். பொருளாதார வசதி ஒத்துழைக்காத காரணத்தால் சிறு வயதில் உரிய கல்லூரிக் கல்வி தணிகாச்சலத்துக்கு மறுக்கப்படுகிறது. அதனால் பாதிக்கப்பட்ட அவர் வளர்ந்த பின்னர் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைப்பவர்களிடமிருந்து- மில் அதிபர், பஸ் முதலாளி, நடிகை போன்றவர்கள்- பணத்தைக் கொள்ளையடித்துக் கல்லூரி கட்டுகிறார். இறுதியில் அவர்தான் கொள்ளைக்காரர் என்பது தெரியவருகிறது. அவரைக் கைது செய்த காவல் துறை அதிகாரி, அவரது வழக்கை விசாரிக்கும் நீதிபதி போன்ற அனைவருமே அவரால் ஆதாயம் பெற்றவர்கள். நன்றியுணர்ச்சிக்கும் கடமைக்கும் நடுவிலே மாட்டிக்கொண்டு தத்தளிக்கிறார்கள். ஆனால். கடமையே முக்கியம் அதைச் செய்யத் தயங்க வேண்டாம் என தணிகாசலம் தெரிவிக்கிறார். நீதிமன்றத் தண்டனையை உளப்பூர்வமாக அனுபவிக்கிறார். நீதிமன்றத்தில் அவர் தரும் வாக்குமூலம் அவரது நிலையைத் தெளிவாக எடுத்துரைக்கும். 
கறுப்புப் பணம் போலவே சமூகத்தில் சிக்கலை ஏற்படுத்தும் மற்றொன்று கள்ளப் பணம். தமிழில் வெளியான ஆனஸ்ட் ராஜ் (1994) என்னும் படத்தில் கள்ள நோட்டால் நண்பர்களுக்கிடையேயான பாதிப்பு திரைக்கதையாகியிருக்கும். இதே போல் கள்ளப் பணப் பிரச்சினையைக் கையாண்ட உலகப்  படங்களில் ஒன்று த கௌண்டர்ஃபெய்ட்டர்ஸ் (The Counterfeiters, 2007). இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை இது. பாஸ்போர்ட், பணம் போன்றவற்றை அச்சு அசலாக உருவாக்குவதே சாலமோன் சாரோவிட்ச் என்னும் ஓவியக் கலைஞனது திறமை. நாஜிக்களின் வதை முகாமில் மாட்டிக்கொண்ட இவனை உயிருடன் காப்பாற்றுவது இவனது கலையே. நாஜிக்களுக்காக பவுண்ட், டாலர் போன்ற வெளிநாட்டுப் பணத்தை உருவாக்க ஜெர்மன் அதிகாரிகளால் இவன் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கள்ளப்பணத்தை உருவாக்க வேண்டும். ஆனால் இவனுடன் இருக்கும் மற்றொரு கைதியான, கம்யூனிஸச் சிந்தனை கொண்ட அடால்ஃப் பர்கர் நாஜிக்களுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்கிறான். இருவருக்கும் இடையே கொள்கை மோதல் உருவாகிறது. அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று செல்லும் படத்தின் திரைக்கதை. படம் முழுவதுமே ஒருவகையான சாம்பல் வண்ணத்தில் காட்சி தரும். இந்தப் படம் சிறந்த வெளிநாட்டுப் படம் என்னும் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. 
கறுப்புப் பணம் கதையைப் படித்ததும் உங்கள் மனதில் கே.டி.குஞ்சுமோனின் ஜென்டில் மேன் படம் நிழலாடியிருக்கும். கறுப்புப் பணம் படம் முழுக்க முழுக்க வர்க்க பேதத்தைச் சாடி, பொதுவுடைமையை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கும். கல்லூரிக் கல்வி ஓர் ஏழைக்கு மறுக்கப்படுகிறது அதன் காரணம் பணம்தான் என்று அவன் மனதில் படுகிறது. சமூக ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும் என்று அவன் படித்துணர்ந்த பாரதியார் கவிதைகள் போன்றவை அவனுக்கு உந்துதல் தந்ததால் கொள்ளையடித்தாவது ஏழைகளுக்குக் கல்வி தரத் துணிகிறான். எந்த நிலையிலும் பெரியவர் தணிகாசலம் தன் குற்றத்தை மறைக்கவில்லை; தன் நிலையைச் சரி என்று வாதாடவில்லை, சமூகத்தைக் குற்றம்சாட்டவில்லை. ஆனால் ஜென்டில் மேன் படத்தில் கிச்சா பிறரைக் குற்றம்சாட்டுவான். முதல்வரைத் தண்டிக்க கோருவான். கிருஷ்ண மூர்த்தி (கிச்சா) தானாகவே கல்லூரி கட்ட வேண்டும் என்ற முடிவெடித்திருக்க மாட்டான். அவன் ஒரு சத்ரியனாக அருவாளைத் தூக்குவான் ஆனால் ரமேஷின் தந்தை அவனைச் சாணக்யன் ஆக்குவார். திரைக்கதையில் இங்கு மிகத் தந்திரமாகச் சாதி புகுத்தப்பட்டுவிடுகிறது. ஷங்கர் தன் சகாக்களுடன் திரைக்கதையில் புரிந்த மாறுதல் இதுதான். இதன் வசனம் எழுத்தாளர் பாலகுமாரன் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். 
பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வி கிடைப்பதாக இறுதிக் காட்சியில் கிச்சா ஆவேசமாக முழங்குவான். திரையரங்கில் பலத்த கரகோஷமும் கிடைத்தது. ஆனால் இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நிலைமை இல்லை. ஏனெனில் நுழைவுத் தேர்வுமுறை அமலாகிவிட்டது. அதிக மதிப்பெண் பெற்ற எல்லோராலும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் சேர முடிந்தது. ஆகவே மாவட்டத்திலேயே முதலிரண்டு இடங்களைப் பெற்ற ரமேஷுக்கும் கிச்சாவுக்கும் எளிதாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். அந்தச் சூழலில் பணம் ஒரு விஷயமே இல்லை. இதற்கு மாறாக, பணம் படைத்தவர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படித்து சமூகத்துக்குத் தீங்கிழைப்பதாக படத்தில் கிச்சா வசனம் பேசுவான். அவனது ஆவேசப் பேச்சால் ஒரு மாணவன் கொலைகாரனாகவே மாறிவிடுவான். சமூகத்தின் காலரைப் பிடித்துக் கேள்வி கேட்ட ஷங்கரின் படத்தின் கருத்தியல்ரீதியான தவறைக் கேள்வி கேட்க வேண்டாமா? 

திரைக்கதையின் மிகப் பெரிய இந்த ஓட்டையை ஷங்கர் பிரம்மாண்டத்தாலும், மயக்கும் பாடல்களாலும் கவுண்டமணி செந்தில் நகைச்சுவையாலும் சரிக்கட்டியிருப்பார். இதன் வெற்றி ஷங்கரை உச்சபட்ச இயக்குநராக்கியது. பிரம்மாண்டமும் சமூகக் கொடுமையைச் சாடுவதும் அவருடைய முத்திரைகளாயின. ஆனால் ஒரு இயக்குநர் என்பவர் சமூகப் பிரச்சினையின் வேரைக் கண்டறிய வேண்டும்; அதை ஆராய வேண்டும் உலக அளவில் போற்றப்படும் இயக்குநர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். கடுமையான உழைப்பாளி என்றபோதும் ஷங்கரிடம் அதை நாம் எதிர்பார்க்க முடியாது, அவர் வெறும் திரைப்பட ஒருங்கிணைப்பாளர். சட்டெனச் சமூகத்தைக் கிளுகிளுக்கச் செய்யும் லஞ்சம் போன்ற சமூகப் பிரச்சினையைக் கையிலெடுத்து, அதை மேலெழுந்தவாரியாகப் புரிந்துகொண்டு கதை, திரைக்கதை எழுதி, அதில் மனங்கவரும் பாடல்கள், நகைச்சுவை என்று இட்டுநிரப்பி எப்படி வெற்றியாக்கலாம் என்று மட்டுமே கருதி செயல்படுபவர், அதுதான் அவரது பலமும்கூட. அவரை ஒரு இயக்குநராகக் கருதுவது நம் போதாமை. இவற்றை ஷங்கரே உணர்ந்திருக்கக் கூடும். அதனால்தான் குறைந்த முதலீட்டில் படங்களைப் பிற இயக்குநர்களை வைத்துத் தயாரித்துவருகிறார்.

< சினிமா ஸ்கோப் 21 >                  < சினிமா ஸ்கோப் 23 >

ஞாயிறு, நவம்பர் 01, 2015

காதலில் கசிந்துருகிய ஆன்மாவின் கதை

தமிழ்த் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் நீங்காத இடம்பிடித்த நடிகை சாவித்திரி. திரையுலக வாழ்வில் மகத்தான வெற்றிகளைப் பெற்ற இவரது தனிப்பட்ட வாழ்க்கை சொல்லொணாத் துயரங்களைக் கொண்டது. சாவித்திரியின் இறுதிக்கால வாழ்க்கையின் சம்பவங்களைக் கேட்கும் யாரின் கண்களிலும் கண்ணீர் ததும்பாமல் இருக்காது. அப்படியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக் கொண்டுவருவதற்கே தனி தைரியம் தேவை. ஏனெனில் அசாத்தியத் துணிச்சல் இருந்தால் மட்டுமே அவருடைய வாழ்வின் சம்பவங்களை ஒரு நூலாகத் தொகுக்க முடியும். அந்தத் துணிச்சல் கைவரப்பெற்ற நாஞ்சில் மு.ஞா.செ. இன்பா இந்த நூலை உருவாக்கியுள்ளார்.

இந்த நூல் நேர்கோட்டு வடிவில் சாவித்திரியின் வாழ்வைச் சொல்லவில்லை. மாறாக அவருடைய வாழ்வில் நடந்தேறிய முக்கியமான நிகழ்வுகளை அரிய தருணங்களை விவரிப்பதன் மூலம் படிப்பவருக்கு சாவித்திரியின் வரலாறு சொல்லப்படுகிறது. சாவித்திரிக்கும் ஜெமினி கணேசனுக்கும் இடையே மலர்ந்த காதல் விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. ஜெமினியால் அவரடைந்த மனத் துயரும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நடிகையாக அறிமுகமான சாவித்திரி தயாரிப்பாளராக மாறியதால் அடைந்த துயரங்களுக்கும் அளவில்லை. அந்தத் துயரக் கதையும் இந்நூலின் பக்கங்களை நிறைத்துள்ளது. சாவித்திரியின் ஜனனம் தொடங்கி மரணம் வரையான பல முக்கிய தருணங்களையும் நிகழ்வுகளையும் கொண்டுள்ள இந்த நூலில் சாவித்திரியின் வாழ்வு தொடர்பான பல அரிய ஒளிப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அவர் பங்களித்த திரைப்படங்களில் பட்டியல் தரப்பட்டுள்ளது. மொத்தத்தில் சாவித்திரியின் வாழ்வை அறிந்துகொள்ள விரும்பும் வாசகரை இந்நூல் கவர்ந்துவிடும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கனிவான பாடல்கள் தந்த கவியரசு

தமிழ்க் கவிஞர்களில், பாடலாசிரியர்களில் கண்ணதாசனுக்குக் கிடைத்திருக்கும் இடமும் புகழும் அளப்பரியது. தனது வாழ்வில் கடந்துவந்த சம்பவங்களைப் பாடல்களாகச் சமைத்து அவற்றுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தவர் கண்ணதாசன். இன்றும் காற்றில் தவழ்ந்து வரும் ஏதாவது ஒரு கண்ணதாசனின் பாடலைக் கேட்கும்போது அது தொடர்பான ஒருசில செய்திகளை நம் மனம் அசைபோடும். அப்படியான கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை, பாடல்களை ரசித்த கவிபாஸ்கர் அவற்றை ஆய்வு செய்து கட்டுரைகளாக்கியிருக்கிறார். கண்ணதாசனின் கவிதைகளில் காணப்படும் கவிநயம், அழகியல் போன்றவற்றை விவரிக்கும் அதே நேரத்தில் திரைப்படப் பாடல்களில் தென்படும் நயத்தையும் அழகையும் சுட்டிக்காட்ட கவிபாஸ்கர் தவறவில்லை.

கண்ணதாசன் பாடல்களைப் புனைந்த சம்பவங்களைப் பற்றிய பல கதைகள் காற்றில் தவழ்ந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் எது புனைவு எது நிஜம் என்பதைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. இதை கவிபாஸ்கரும் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரும் சில பாடல்களின் பின்னணியாகச் சொல்லப்பட்டும் சில சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இலக்கிய ரசனையும் கவிமனமும் கொண்ட கவிபாஸ்கரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இந்த நூல் கண்ணதாசனின் ரசிகர்களுக்குப் பிடிக்கக்கூடியது; அவர்கள் விரும்பிப் படிக்கக்கூடியது.

அக்டோபர் 30 தி இந்து நாளிதழில் வெளியானது

லேட்டஸ்ட்

அமலா எனும் பொன்மான்

தொடர்பவர்