இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

சினிமா ஸ்கோப் 16: நண்பன்

உறவுகள் இல்லாமல் வாழ்வு முழுமையடைவதில்லை. அதே போல நண்பர்கள் இல்லாவிட்டாலும் வாழ்வு குறைவுடையதாகிவிடும். நெருக்கடியில் கைகொடுத்தவர்கள், அவசர உதவிக்கு அகப்படாதவர்கள், துன்பத்தைப் போக்கியவர்கள், துரோகமிழைத்தவர்கள் எனப் பலவகையான நண்பர்களை வாழ்வில் கடந்துவருகிறோம். வாழ்வில் நண்பர்களுக்கு இவ்வளவு இடம் இருக்கும்போது திரைப்படங்களில் மட்டும் இடமில்லாது போய்விடுமா? 

தமிழ்ப் படங்களில் காதலைப் போலவே நட்பையும் அடிகாணாமல் விடுவதில்லை என்னும் அளவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க ஸ்ரீதரின் திரைக்கதை இயக்கத்தில் வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தைப் பொழுதுபோக்கு வரிசையில் சரியான உதாரணமாகச் சொல்ல முடியும். இதில் நட்பு, காதல், துரோகம் எனப் பலவகையான உணர்வுகளும் கொட்டிக் கிடக்கும். இனிய பாடல்கள், ஈர்க்கும் வகையிலான நடிப்பு எனத் திரைப்படத்துக்குத் தேவையான, சுவாரசியமான அனைத்து அம்சங்களையும் கொண்ட படம் இது. இதே போல் கார்த்திக் ராதாரவி நடித்த ‘நட்பு’, கமல், சரத் பாபு நடித்த ‘சட்டம்’- இதன் திரைக்கதையை எழுதியிருப்பவர்கள் ‘ஷோலே’ படத்துக்குத் திரைக்கதை எழுதிய சலீம் ஜாவேத்- ‘அண்ணாமலை’, ‘தளபதி’, ‘நண்பர்கள்’, ‘நண்பன்’, ‘அஞ்சாதே’ எனப் பல படங்களைப் பட்டியலிட முடியும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

நட்பென்றாலே காத தூரம் ஓடவைத்த ‘நாடோடிகள்’, ‘சுந்தரபாண்டியன்’ போன்ற படங்களும் வெளிவரத்தான் செய்தன. நட்பை தனக்கே உரிய பாணியில் இயக்குநர் பாலா கையாண்டிருந்த படம் ‘பிதாமகன்’. ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். இதில் சித்தன் என்னும் பெயர் கொண்ட வெட்டியான் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் கிட்டத்தட்ட 1989-ல் வேலு பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ‘நாளைய மனிதன்’ என்னும் படத்தில் அஜய் ரத்னம் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை ஒத்த மிருக வெறி கொண்டது. ஆனால் விக்ரமுக்குக் கிடைத்த தேசிய விருது பாவம் அஜய் ரத்னத்துக்குக் கிடைக்கவில்லை. 

அன்பு பாசம் என்றால் என்னவென்றே புரியாத சித்தனுக்கு சக்தியின் நட்பு கிடைக்கிறது. சக்தி கொல்லப்பட்டதால் வெகுண்டு எழுந்த சித்தன் கொலைக்குப் பழிவாங்குகிறான். அஜய் ரத்னம் ஏற்றிருந்த கதாபாத்திரம் கொலைவெறி கொண்டதற்குக் காரணம் மருத்து ஆராய்ச்சியில் ஏற்பட்ட சிறு பிழை. ஆனால் சித்தன் இப்படிக் கொலை வெறி கொள்வதற்கோ, பேசாமல் நாய் மாதிரி உறுமுவதற்கோ எந்தக் காரணமும் இல்லை. ஆனால் அன்பின் நிமித்தமாக வெளிப்படுத்தும் எந்த வன்முறையையும் கோரத் தாண்டவத்தையும் ரசிகர்கள் எந்த சங்கோஜமுமின்றி பார்க்கிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தின் வெற்றி உதாரணம். 

நட்பில் பெண்கள் வரும்போது அது நட்பா காதலா என்பது புரியாமலே நாயகர்கள் பலர் சாவின் விளிம்புவரை சென்றுவிடும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கும் உதாரணம் உண்டு. ஆனால் எந்தப் பெண் கதாபாத்திரத்துக்கும் இப்படிக் குழப்பம் வந்ததாகத் தெரியவில்லை. கதிரின் இயக்கத்தில் ‘காதல் தேசம்’ என்று ஒரு படம் வெளியானது. அதில் இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பார்கள். அந்தப் பெண்ணுக்கு இருவருமே நண்பர்கள். ஆனால் ஒருவரைக் காதலராகக் கொண்டால் மற்றொரு நண்பரின் மனம் சங்கடப்படுமே என்பதால் இருவரின் காதலையும் மறுத்துவிடுவார். இத்தகைய அரிய உணர்ச்சி வெளிப்பாடுகள்தாம் தமிழ்ப் படங்களின் தனித்துவம். இப்படியான தனித்துவத்தைத் தருவதற்காகத் தான் நம் இயக்குநர்கள் தவமாய்த் தவமிருக்கிறார்கள். 

காதல், நட்பு இரண்டையும் பற்றிப் பேசும்போது, இயக்குநர் சேரனின் ‘பாண்டவர் பூமி’யைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தப் படம் மிகவும் யதார்த்தமான படம் போன்ற சாயல் கொண்டது. குடும்ப பாசம், அன்பு, காதல், நட்பு, செண்டிமெண்ட், விவசாய நேசம் எனப் பல அம்சங்களைக் கலந்து சேரன் விளையாடியிருப்பார். கிராமத்தினர் எல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு நகரத்துக்குச் சென்றால் விவசாயம் பாழாகிவிடாதா எனச் சமூகத்தின் சட்டையைப் பிடித்து இழுக்கும் கேள்வியை எழுப்பும் இந்தப் படம். ஆனால் படத்தில் அந்தக் குடும்பமே நகரத்துக்குச் சென்றுதான் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும். இந்தப் படத்தில் இரண்டு ஆணவக் கொலைகள் வேறு உண்டு. காதல் மணம் புரிந்ததால் சொந்தத் தங்கையையும் அவளுடைய கணவரையும் வெட்டிக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்றுவிடுவார் அண்ணன் ஒருவர். சிறைக்குச் சென்ற நாள் முதலாகத் தங்கையைக் கொன்றுவிட்டோமே என்று தவியாய்த் தவிப்பார் அந்த அண்ணன். கொலை செய்த அந்த அண்ணனுக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என்பதற்காகத் தன் மகளைத் தரத் தயாராக இருப்பார் ஒரு சகோதரி. கேட்டாலே புல்லரித்துப்போகும் அளவுக்குப் பொங்கிவழியும் குடும்பப் பாசம். வெறும் சண்டை, பாட்டு, காமெடி எனப் படமெடுக்கும் இயக்குநர் அல்லவே சேரன். அவர் சமூக அக்கறை கொண்ட படங்களையே தொடர்ந்து தருபவராயிற்றே? 

இந்தப் படத்தில் நட்பின் பெருமையையும் காதலின் அருமையையும் விளக்குவதற்காகத் தோழா தோழா என்னும் பாடல் இடம்பெற்றிருக்கும். நாயகன் காதல் கட்சியில் நின்று பாட, நாயகி நட்பு பற்றிப் பாட, பாடல் முடியும் தருவாயில் நாயகனும் இருவரும் நட்பாகவே இருந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்துவிட்டுப் புறப்படுவார்கள். அதிலும் ஆணும் பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம் என்றும் அது ஆயுள் முழுவதும் களங்கப்படுத்தாமல் பார்த்துக்கலாம் என்றும் பாடிவிட்டுச் செல்வார்கள். ஆனால் அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல அந்தப் பாடல் முடிந்த அடுத்த கணத்திலேயே பொல்லாத காதல் நாயகன் மனத்தில் தன் வாசத்தைப் பரப்பிவிடும். காதல் வந்த மனதும் குடியில் விழுந்த குரங்கும் சும்மா இருக்குமா? தன் அப்பாவிடம் சொல்லி அந்தப் பெண்ணையே தனக்குப் பெண் பேசி முடிக்குமாறு வேண்டுவார் நாயகன். 

ஒரு திரைப்படத்தின் பயணத்தில் இத்தகைய திருப்பங்கள் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் இருக்கும்போது அது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். ஆனால் ரசிகர்கள் முன்கூட்டியே தீர்மானத்துக்கு வந்துவிட்ட விஷயத்தையே திரைப்படமும் திருப்பமாக வெளிப்படுத்தினால் ரசிகர்களுக்கு சப்பென்றாகிவிடும். ‘பாண்டவர் பூமி’யில் அவர்கள் இருவரும் காதலர்கள் என்ற முடிவுக்கு ரசிகர்கள் எப்போதோ வந்திருப்பார்கள். ஆனால் திரைக்கதையோ தொடர்ந்து நட்பின் உன்னதத்தை வலியுறுத்தி, குடும்ப பாசம் என்ற பழைய பல்லவியைப் பாடி, இறுதியில் காதல் என்ற நிலைக்கு வந்து சேரும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை காதலைவிட நட்பே போதும் என்ற நிலை எடுத்த அடுத்த காட்சியிலேயே இப்படித் தலைகீழான முடிவெடுத்ததால் திரைக்கதை பெரும் பள்ளத்தில் விழுந்து தத்தளிக்கும். இப்படியான திருப்பங்களைத் திரைக்கதையில் கையாள்வது மிகவும் ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக