வாழ்க்கையைப் பேசும் படங்களை உருவாக்கியவர் எனத் துருக்கிய இயக்குநர் நூரி பில்கே ஸிலானைச் சொல்ல முடியும். 1959 ஜனவரி 26 அன்று பிறந்த ஸிலானை, சிறு வயது முதலே கலைகளைக் கண்டுணரும் சூழலில் வாழ்ந்தவர் எனச் சொல்ல முடியாது. ஏனெனில், சிறுவயதில் கிராமிய இசையைக் கேட்கும் சூழலும் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பும் மட்டுமே அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஓவியக் கண்காட்சிகள் போன்றவை நடந்திட வாய்ப்பில்லாத சிற்றூர் ஒன்றில் ஸிலானின் பால்யம் கழிந்தது. ஆனால், அவரது படங்களின் பல காட்சிகள் நகரும் ஓவியங்கள் போலவே அமைந்துள்ளன என்பது ஆச்சரியம் தருகிறது. தான் கலைத் துறைக்கு வந்தது குறித்த ஆச்சரியம் அவருக்கே இருக்கிறது. உயர் பள்ளிக் கல்விக்காகத் தான் வசித்த யூனைஸ் என்னும் ஊரிலிருந்து இஸ்தான்புல் நகருக்கு வந்தபோது கலைத் துறையின்பால் அவர் கவனம் சென்றிருக்கிறது. அவரைப் போலவே அவருடைய சகோதரியும் கலைத் துறையில் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார்.
சிறு வயதில் ஸிலானுக்கு உறவினர் ஒருவர் புகைப்படக் கலை தொடர்பான புத்தகம் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். தனக்குப் புகைப்படக் கலை மீதான ஆர்வம் தோன்றியதற்கு அந்தப் புத்தகம் காரணம் என்கிறார் ஸிலான். இந்தச் சம்பவத்தைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வழங்கும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் அந்தக் குழந்தையின் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடக்கூடிய சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் என்கிறார் ஸிலான். அந்தப் புத்தகத்தை வாசித்த பின்னர், அது தந்த உற்சாகத்தில் அவர் புகைப்படம் எடுக்கவும் அதை பிரிண்ட் போடவும் தொடங்கியுள்ளார். அதை ஒரு விளையாட்டுப் போலத் தான் தொடங்கியிருக்கிறார். ஆனால், நாள் செல்லச் செல்ல அது ஒரு கலை என்பதை உணர்ந்திருக்கிறார். இப்போதும் அவரது படங்களில் பல காட்சிகளில் கேமரா அசைவின்றி அப்படியே உறைந்துபோய்விட்டதோ என்று நினைக்கும் அளவுக்குக் காட்சிகள் நிதானமாக அமைந்திருப்பதற்குப் புகைப்படக் கலைமீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக இருக்கலாம். அவர் வளர்ந்த காலகட்டத்தில் வீடியோ கேமரா என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்திருக்கவில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் வீடியோ கேமரா இருந்துள்ளது. அவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின்னரோ இராணுவ சேவை முடித்த பின்னரோ கூட சினிமா துறைக்கு வருவதைப் பற்றி எந்த முடிவும் எடுத்திருக்கவில்லை.
எல்லோரையும் போல் ஸிலானுக்கும் சினிமா பார்ப்பதில் விருப்பம் இருந்திருக்கிறது. திரைப்பட உருவாக்கம் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்திருக்கிறார் அவர். அதுதான் அவரைத் திரைத் துறையின் பக்கம் தள்ளிவிட்டிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ராணுவத்தில் இருந்தபோது, போலந்து இயக்குநர் ரோமன் பொலான்ஸ்கியின் தன் வரலாற்றைப் படித்திருக்கிறார். அது அவரிடம் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. சாதனைச் சம்பவங்கள் நிறைந்த அந்தப் புத்தகம் நாஜி முகாமில் ஒன்றுமில்லாமல் இருந்த பொலான்ஸ்கி ஹாலிவுட்டுக்குப் போனதுவரையான வாழ்க்கையை உள்ளடக்கியிருந்தது. அந்தப் புத்தகம் சினிமாவை எளிதில் உருவாக்கலாம் எனும் எண்ணத்தை ஸிலானிடம் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து சினிமா தொடர்பான நூல்களுடன் சினிமா தொழில்நுட்பம் பற்றியும் வாசித்திருக்கிறார்.

அவர் ஒரு குறும்படத்தில் நடித்தபோது சினிமா உருவாக்கத்தின் அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர்தான் ஏரிஃப்ளக் 2சி கேமரா ஒன்றை வாங்கியிருக்கிறார். அது இயங்கும்போது, இயந்திரத் துப்பாக்கி போன்று அதிகப்படியான ஓசையை எழுப்புமாம். அந்த கேமரா வாங்கிய பின்னரும் பத்தாண்டுகளாகத் தான் படமெதுவும் எடுத்திருக்கவில்லை என்கிறார் ஸிலான். பிறகு குக்கூன் என்னும் பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார். அதில் குடும்ப உறுப்பினர்களே நடித்திருக்கிறார்கள். தான் எடுத்ததிலேயே மிகவும் கடினமான படம் அது என்று ஸிலான் சொல்கிறார். குறும்படம் எடுத்து முடித்த பின்னர் ஒரு முழுநீளப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அதுவும் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை ஒட்டி உருவாக்கப்பட்ட படமே. அதன் பெயர் த ஸ்மால் டவுன் (1997). இந்தப் படத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களே நடித்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து க்ளவுட்ஸ் ஆஃப் மே (1999), டிஸ்டண்ட் (2002) ஆகிய படங்களையும் உருவாக்கினார். இந்த மூன்றுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒருவகையில் இந்த மூன்று படங்களும் ஒரு தொகுதி என்று சொல்ல முடியும்.
நூரி பில்கே ஸிலான் துணை இயக்குநராகக்கூடப் பிறரது படங்களில் பணியாற்றியிருக்கவில்லை. அவர் முழுக்க முழுக்க புத்தகங்கள் மூலமாகவே சினிமாவின் அத்தனை துறைகளைப் பற்றியும் அறிந்திருக்கிறார். அவரே படத்தை உருவாக்கி அவரே அதை வணிகமும் செய்திருக்கிறார். ஓர் இயக்குநருக்கு சினிமா தொடர்பான அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார் ஸிலான். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் ஓர் இயக்குநர் தொழில்நுட்பக் குழுவையே சார்ந்திருக்க வேண்டியதிருக்கும். இயக்குநருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தால் அவரால் தொழில்நுட்பக் குழுவைச் சிறப்பாக இயக்க முடியும் என்பதை ஸிலான் நம்புகிறார்.
சினிமாவின் பின்னணியிசை குறித்து ஸிலானுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. சினிமாவில் இசை விஷயங்களைக் கொன்றுவிடுகிறது என்கிறார் ஸிலான். அதனால்தான் அவரது படங்களில் பின்னணியிசையின் குறுக்கீடு இருக்காது. காட்சிகள் நடைபெறும் களங்களில் அரங்கப் பொருள்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றிடமிருந்து வெளிப்படும் சத்தங்களைக் கொண்டே காட்சி தொடர்பான அர்த்தங்களை உருவாக்குவதிலேயே அவரது கவனம் இருக்கும். இசைக்கருவிகளை நம்பி இராமல் புறச்சூழலின் ஒலிகளை வைத்து அக உணர்வை உணர்த்த முயல்வார்.
குடிமைப் பணி செய்த பெற்றோருக்குப் பிறந்தார் நூரி பில்கே ஸிலான். யெனைஸ் பகுதியில் வசித்த அவரது தந்தை மிகக் கடினமான சூழலிலும் படித்து முடித்தவராக இருந்தார். அவர் வேளாண்மைப் பொறியியலாளர். அந்தப் பகுதியில் அப்போது நல்ல பள்ளிகள் கூட இருந்திருக்கவில்லை. ஸிலானின் சிறுவயதில் யெனைஸ் பகுதியில் இருந்த அவரது குடும்பம் கல்வியின் பொருட்டு இஸ்தான்புல்லுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. சற்று வறுமையான சூழலிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார். புகை பரப்பும் அடுப்பில் சமையல் செய்து அம்மா பட்ட அவஸ்தையை ஸிலான் நினைவுகூர்கிறார். அம்மா சதா இருமிக்கொண்டே இருப்பார் என்கிறார் அவர். த ஸ்மால் டவுன் படத்தில் குடும்பத்துடன் வெட்ட வெளியில் உரையாடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதில் அந்த அம்மா பாத்திரத்தில் பழமொன்றை வெட்டிப் போடும்போது, இருமிக்கொண்டே இருப்பார், அருகில் குளிர்காய்வதற்காகப் போடப்பட்ட நெருப்பில் புகைவெளியேறிக்கொண்டேயிருக்கும் என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

சிறு வயதில் ஸிலானுக்கு ஆங்கில எழுத்தான ஆர் என்பதை உச்சரிக்க முடியாமல் இருந்திருக்கிறது. எனவே, அவரது பெயரின் நடுவில் இருக்கும் பில்கே என்பதையே பெயராகச் சொல்வது வழக்கமாம். ஆனால், துருக்கியில் இந்தப் பெயர் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. அவர் ஒருமுறை பள்ளியில் பில்கே எனப் பெயரைச் சொன்னபோது, கேலிக்காளாகியிருக்கிறார். அதனால்தான் அவர் எவரையும் இழிவுபடுத்துவது என்பதை வெறுக்கிறார்.
த ஸ்மால் டவுன் படத்தில் ஆசிரியர் வருகைப் பதிவேடு எடுத்துக்கொண்டிருப்பார். இஸ்மாயில் எனப் பெயர் சொல்வார். அந்த மாணவன் வந்திருக்க மாட்டான். ஆசிரியர் அப்படியே வெளியில் பார்ப்பார். வெளியில் பனி பெய்துகொண்டிருக்கும். இப்போது வகுப்பில் பாடம் தொடங்கிவிடும். சிறிது நேரத்துக்குப் பின்னர் மேல் கோட்டில் சிறு சிறு பனித் திட்டுகளைக் கொண்டபடி ஒரு மாணவன் வந்துசேர்வான். அவன் இஸ்மாயில். ஆசிரியர் பார்த்த பார்வைக்கு இப்போது நமக்குப் பொருள் விளங்கும். ஐயோ பனி பெய்துகொண்டிருக்கிறதே மாணவன் நனைந்துவிட்டு வருவானே என்ற அவரது பதைபதைப்பை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். எந்த வசனமும் இல்லாமல் மௌனமாகவே இதை உணர்த்திவிடுகிறார் நூரி பில்கே ஸிலான். இதுதான் அவரது பலம். அதே நேரத்தில் மிக அவசியம் என்று தோன்றும் இடங்களில் வசனங்களை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார் ஸிலான். இதே படத்தில் சிகரெட்டின் பயனற்ற முனை போல் என் இளமை வீணாகிக்கொண்டிருக்கிறது என ஒரு வசனத்தை சஃபேத் பேசுவார். இவர் ஸிலானின் உறவினர்.
ஸிலானின் அடுத்த படமான க்ளவுட்ஸ் ஆஃப் மே படம், சினிமாவுக்குள் சினிமாவைக் கொண்டது. முந்தைய படமான த ஸ்மால் டவுனில் தாத்தா ஒருவர் தனது போர்க்கால அனுபவங்களைப் பற்றிப் பேசுவார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸிலானின் தந்தை. இந்தத் தாத்தா பற்றிய சம்பவங்களை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சிதான் க்ளவுட்ஸ் ஆஃப் மே என்னும் படம். இப்படத்தில் சஃபேத் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுவார். திரைப்படப் பணிக்காக அந்த வேலையை விட்டுவிடுவார். படத்தில் இயக்குநராக வருவார் முஸாஃபர். இந்த முஸாஃபர் டிஸ்டண்ட் படத்தில் மஹ்மூத்தாக வருவார்; சஃபேத் யூசுஃபாக மாறிவிடுவார்.
இந்த க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தில் தையல்காரர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் பேசுபவர், தனக்கெனத் தைத்த பேண்ட் மிகவும் இறுக்கமாக இருப்பதாகவும் இடுப்புப் பகுதியில் காலை நுழைக்கவே முடியவில்லை என்றும் புகார் கூறுவார். முக்கியமான சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் புதிய உடையைத் தைத்ததாகவும் உடனே சரிசெய்ய வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் கூறுவார். உலகம் முழுவதும் தையல்காரர்களும் அவர்களிடம் உடைகளைத் தைக்கும் வாடிக்கையாளர்களும் ஒரே போல் தான் இருப்பார்கள் போல. இப்படியான இயல்பான காட்சிகள் மூலம் மனிதருடைய இயல்பான வாழ்வைத் திரையில் பிசிறின்றிக் காட்சிக்குவைக்கிறார் ஸிலான்.

இந்தப் படத்தில் நாற்பது நாள் முட்டையை உடைக்காமல் வைத்திருந்தால் மியூசிக் வாட்ச் கிடைக்கும் என்பதற்காகச் சிறுவன் அலி அதைப் பாதுகாத்து வருவான். ஒருநாள் தக்காளிப் பழங்கள் நிறைந்த கூடையொன்றை ஒரு வீட்டில் கொடுத்துவிடும்படி பெண்மணி ஒருவர் அவனிடம் கொடுத்துவிடுவார். மிகக் கவனமாக அதை எடுத்துச் சென்ற அலி கூடையைத் தர வேண்டிய வீட்டில் கொண்டுபோய் வைக்கும்போது, ஒரு தக்காளி தவறிக் கீழே விழுந்துவிடுகிறது. அதை எடுப்பதற்காகக் குனிகிறான் அலி. அப்போது பையிலிருந்து முட்டை உடைந்துவிடுகிறது. உடைந்த முட்டையைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட அடுத்த விநாடி தக்காளிக் கூடையைக் காலால் உதைக்கிறான். முட்டையை உடையாமல் காப்பாற்ற வேண்டிய தனது முயற்சியை இந்தத் தக்காளி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டதே எனும் கோபமே இந்த உதையாக வெளிப்படுகிறது. தக்காளிகள் நிலத்தில் நாலாபுறம் சிதறுகின்றன. மனிதரின் கீழான பண்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதையும் சிறுவயது முதலே நமது பண்பு வெளிப்படத் தொடங்குகிறது என்பதையும் இப்படித்தான் வாய்ப்புக் கிடைக்கும் காட்சிகளில் அழகாகக் கடைபரத்துகிறார் இயக்குநர். சட்டபூர்வமான ஆவணங்கள் தனி மனிதரது வாழ்வில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதையும் இந்தப் படம் காட்சிகளாகக் கொண்டிருக்கும். முஸாஃபரின் தந்தையான எமின் தனது நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்ற படும் பாட்டை மிகைப்படுத்துதலின்றிக் காட்சிப்படுத்தியிருப்பார் ஸிலான்.
இந்த வரிசையின் இறுதியான டிஸ்டண்ட் படத்தில் ஒரே அறையில் தங்கும் இருவருக்கிடையேயான தொலைவைப் பற்றி மிகவும் நுட்பமான வகையில் படமாக்கியிருக்கிறார். மஹ்மூத் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் இஸ்தான்புல்லில் தனியே வசித்துவருகிறார். இவரது அறைக்குக் கிராமத்திலிருந்து உறவினரான யூசுஃப் வேலை தேடி வந்து தங்குகிறார். அப்போது இருவருக்குமான உறவில் ஏற்படும் கசப்புகளையும் விருப்பு வெறுப்புகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். மஹ்மூத்தின் இரட்டை வேடத்தை மிக இயல்பாகக் காட்சிகளின் வழியே வெளிப்படுத்துகிறார் நூரி பில்கே ஸிலான். தன்னுடன் வந்து தங்கியிருக்கும் யூசுஃபின் வருகை மஹ்மூத்துக்கு உவப்பாக இல்லை. அதே நேரத்தில் அவரது வருகையைத் தவிர்க்கவும் இயலவில்லை. யூசுஃபின் வருகை தனது தனிமையைக் குலைப்பதாக நினைக்கிறார் மஹ்மூத். யூசுஃப் தன் தாயுடன் போனில் பேசும்போது, ஒட்டுக்கேட்கிறார். தனது வாட்ச் ஒன்று தொலைந்துவிட்டதெனக் கூறி யூசுஃபுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துகிறார். யூசுஃப் அறையில் ஒழுங்கைக் குலைக்கிறார் என்று அவர் மீது குற்றம்சுமத்துகிறார் மஹ்மூத். தார்கோவெஸ்கி இயக்கிய நீளப் படங்களைப் பார்க்கும் மஹ்மூத் அடுத்த கணமே நீலப்படத்தைப் பார்க்கக்கூடியவராகவும் இருக்கிறார். நீளப் படத்தை நண்பருடன் பார்க்கும் அவர் நீலப்படத்தைத் தனியே ரகசியமாகப் பார்க்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மனிதர்களிடம் இவ்வளவு கீழ்மைக் குணங்கள் ஏன் குவிந்துகிடக்கின்றன என்ற கேள்வி தோன்றிவிடுகிறது.
வீட்டுக்குள் தொந்தரவு தரும் எலியைத் தரையில் பசை தடவிய அட்டையை வைத்து சிக்கவைக்கிறார் மஹ்மூத். அந்த எலியின் சத்தம் யூசுப்பை இம்சைப்படுத்துகிறது. ஆகவே, எலியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு அந்த கவரைத் தெருவில் போட்டுவிட வருகிறார் யூசுப். ஏற்கெனவே தெருவில் கிடக்கும் சில கவருடன் இதையும் போட்டு விட முயல்கிறார். ஆனால், அந்த கவர்களைச் சுற்றிச் சுற்றி வரும் பூனைகளால் எலிக்கு ஆபத்து வருமோ என அச்சப்படுகிறார். ஆகவே, பாலிதீன் கவரை அருகிலிருந்து சுவரில் படார் படாரென சில அடிகள் அடிக்கிறார். அதன் பின்னர் அந்த கவரை தெருவில் போடுகிறார். எலியைப் பூனைகள் பிறாண்டிவிடும் என்பதால் அதை கவரில் போட்டுக் கொன்றுவிடுகிறார். இப்போதும் எலி செத்துத்தான் போயிருக்கும். யூசுப்பைப் பொறுத்தவரை பூனைகளால் எலி குதறப்படுவதில்லை என்பதே நிம்மதியான உணர்வாக இருக்கிறது. தானே எலியைக் கொன்றுவிட்டது குறித்து அவருக்கு எந்தப் புகாரும் இல்லை. இப்படியான அம்சம்தான் ஸிலான் படங்களைத் தனித்துக் காட்டுகிறது.

இவரது படங்களில் படம் ஒரு கதையைப் பற்றிப் படர்ந்துகொண்டிருக்கும். கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு வாழ்க்கையைப் பேசிக்கொண்டிருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா இல்லையா என்பதைப் பரிசீலிக்கும் பொறுப்பு பார்வையாளரிடம் விடப்பட்டுவிடும். படத்தில் வெளிப்பட்டு நிற்கும் பூடகமும் மர்மமும் ஒருபோதும் விளக்கப்படுவதில்லை, விலக்கப்படுவதுமில்லை. பார்வையாளரது புரிதலுக்கு விடப்பட்ட சவாலாகவே அவை எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதிருக்கிறது.
பொதுவாகவே, ஸிலான் தனது படங்களில் மனித உணர்வுகளை வெளிப்படுத்த பின்னணியிசையையோ வசனங்களையோ நம்புவதில்லை. த ஸ்மால் டவுன் படத்தில் ஆமையைத் திருப்பிப் போட்டுவிட்டு ஓடுகிறானே சிறுவன் அலி. ஆமையைத் திருப்பிப் போட்டால் ஆமையால் திரும்ப இயலாது என முந்தைய காட்சியில்தான் அலியின் அக்கா அவனிடம் கூறியிருப்பாள். ஆனாலும், அதைச் செய்கிறான். இந்தக் காட்சி தரும் உணர்வை எந்த வசனமும் இசையும் தந்திருக்க இயலும்? ஒரு காட்சியைப் படமாக்கும் உத்தியின் வழியே, கேமரா நகரும் விதம், அரங்கப் பொருள்கள் காட்சியில் புலனாகும் தன்மை, நடிகர்களது உடல்பாவனை போன்றவை வழியே பார்வையாளர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறார். அதாவது, கேமரா கோணம், சட்டகத்தில் கதாபாத்திரங்களையும், அரங்கப் பொருள்களையும் இருத்திவைக்கும் தன்மை ஆகியவற்றை ஒருங்கமைத்து ஒரு காட்சியைப் படம்பிடிப்பதன் வழியே காட்சிக்கு ஓர் அர்த்தத்தை சிருஷ்டித்துவிடுகிறார் ஸிலான். வழக்கமான காட்சிகளை வழக்கத்துக்கு மாறான வகையில் பயன்படுத்தும் உத்தியால் காட்சிக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிடும்.
நடிகர்கள் பெரிய அளவில் அவருக்கு உதவுகிறார்கள். சிறிய கண்ணசைவு, தலையசைப்பு என ஒவ்வொன்றும் ஸிலானின் பட உருவாக்கத்தில் முதன்மை பெற்றுவிடுகிறது. வழக்கமான படங்களைப் பார்த்துச் சலித்த பார்வையாளர்களுக்கு ஒரு மாறுபட்ட திரையனுபவத்தை வழங்குவதில் ஸிலான் கவனம்பெறுகிறார். அதே நேரத்தில் சினிமாவில் சுவாரசியம் விரும்பும் பார்வையாளர்களுக்கு இவரது படங்கள் அலுப்பையும் சலிப்பையும் தந்துவிடுபவை என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது. வாழ்க்கையை உற்றுநோக்குபவருக்கு இவரது படங்கள் உருப்பெருக்கிக் கண்ணாடிபோல் உதவுகின்றன.
இவரது விண்டர் சிலீப் என்னும் படத்தின் பெயரைக் கேள்விப்பட்டவுடன் அவரது விநியோகஸ்தர்களும் அவரைச் சேர்ந்தவர்களும் அந்தத் தலைப்பு வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். நீங்களோ மெதுவாக நகரும் காட்சிகளைக் கொண்டு படமெடுப்பவர்; இந்தப் படத்தின் நீளமும் அதிகம். அதிலும் தலைப்பு தூக்கம் என்பது இடம்பெற வேண்டுமா எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ஸிலான் தலைப்பில் உறுதியாக இருந்திருக்கிறார். ஜப்பானிய இயக்குநர் யாஸிஜிரோ ஓஸுவும், பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸனும் இவருக்குப் பிடித்த இயக்குநர்கள். தனது க்ளவுட்ஸ் ஆஃப் மே படத்தை எழுத்தாளர் ஆண்டன் செக்காவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.
ஒன்ஸ் அபான் எ டைம் இன் அனடோலியா (2011) படத்தில், யாசர் உயிரோடு புதைக்கப்பட்டிருப்பதை அறிந்தும் மருத்துவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதைக் குறிப்பிடவில்லை. ஏன் அப்படிச் செய்தார்? மருத்துவரது கன்னத்தில் தெறித்த அந்த ஒற்றைத் துளி ரத்தத்தை நோக்கிச் சென்ற கேமரா அதை ஏன் அத்தனை நெருக்கமாகக் காட்சிப்படுத்தியது? இந்தத் திரைப்படம் அடிப்படையில் ஒரு குற்றப்பின்னணியிலானது. ஆனால், படம் நமது குற்றத்தை நமது நடத்தையை எல்லாம் மறுபரிசீலனை செய்ய வைக்கும். ஸிலான் திரைப்படங்களில் இயற்கைக்கும் நிலக் காட்சிக்கும் முதன்மையான பங்கு உண்டு. இந்தப் படத்திலும் இரவில் மூன்று வாகனங்கள் ஊர்ந்து வரும் காட்சிகளில் தொனிக்கும் பூடகமான உணர்வு நம்மைப் படத்துடன் பிணைத்து நிற்கும். படத்தின் விடைகாணப்படாத மர்மங்களை உணரும்போது, நமது வாழ்வின் விடைகாணப்படாத மர்மங்களை நோக்கி நாம் நகர்வோம்.
இந்தப் படத்தில் உயிருள்ள மனிதர்கள் உயிரற்ற சடலம் ஒன்றைத் தேடி வருகிறார்கள். அந்தச் சடலத்துக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அது தேமே என்று எங்கோ புதைந்து கிடக்கிறது. அதைத் தேடி அலையும் இந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் சிக்கல் இருக்கிறது. கெனான் என்னும் மனிதன் ஒருவன் தன் நண்பனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறான். அந்தச் சடலத்தைத் தேடித்தான் காவலர்களும் வழக்கறிஞரும் மருத்துவரும் இன்னும் சில அரசு ஊழியர்களும் அந்த அர்த்த ராத்திரியில் அந்த மலைப்பாங்கான பாதையில் பயணப்படுகிறார்கள். கொன்றவனுக்குச் சடலத்தை எங்கே புதைத்தான் என்பது நினைவிலில்லை. உடனிருந்தவனோ தூங்கிவிட்டேன் எனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறான். சடலம் புதைத்த இடத்தைக் காட்டுவதாகச் சொல்லி அழைத்து வந்தவன் அலைக்கழிக்கிறான். காவல் துறை அதிகாரிக்குக் கோபம் வருகிறது. அவனைப் போட்டு அடிக்கிறார். வழக்கறிஞர் அதைத் தடுக்கிறார்.
சடலத்தைப் பொதிந்துகொள்ளத் தேவையான பையை எடுத்துவர மறந்துவிடுகிறார்கள். இப்போது சடலத்தை காரின் டிக்கியில் வைப்பதற்குள் படாதபாடு படுகிறார்கள். உயிருக்கும்போது எளிதாய் நிறைவேற்றும் ஒரு காரியத்தை இறந்தபிறகு நிறைவேற்ற எவ்வளவு அவதிப்பட வேண்டியதிருக்கிறது? ஒரு மரணம் எல்லோருக்கும் மரணமன்று. மரணமடைந்தவரைச் சாராதவர்களுக்கு மரணம் மிகச் சாதாரணமான நிகழ்வாகவே இருக்கிறது. காவல் துறை அதிகாரி, சடலத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டால் போதும் தனது வேலை முடிந்துவிடும் என்று நினைக்கிறார். சடலம் கிடைக்கிறது. சாவுக்கான காரணம் என்பதை அறியும் பொறுப்பு மருத்துவருக்கு வந்துவிடுகிறது. அதை அவர் கண்டுபிடிக்கிறார் ஆனால், அதை வெளியே சொல்லவில்லை. எல்லோரும் எதையாவது மறக்கிறார்கள்; அல்லது மறைக்கிறார்கள். அதன் வழியே வாழ்வில் சிக்கல் இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். ஆனால், மறைப்பதன் மூலம் வாழ்வில் சிக்கல் வந்துதான் விடுகிறது. ஏன் மறைக்க வேண்டும்? உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சல் மனிதருக்கு ஏன் இல்லை. உண்மைக்குப் பதில் பொய்யை ஏன் அங்கு இருத்திவைக்கிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடிப் பார்வையாளர் செல்லட்டும் என்பதற்காகவே இப்படியான புதிரைத் தனது படங்களில் விட்டுச் செல்கிறார் ஸிலான். இந்தப் புதிருக்கு விடைதேடுவதே ஒரு புதிரான பயணமாக இருப்பதால் பார்வையாளரால் ஸிலானின் படங்களை ரசிக்க இயலுகிறது.
இந்தப் படத்தில் சில காட்சிகள் நம்மை அப்படியே ஆவிசேர்த்து அணைத்துக்கொள்கின்றன. இரவில் எல்லோரும் பசியுடன் அந்த அந்துவானக் காட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒருவர் மரத்தை உலுக்க ஆப்பிள் பழங்கள் உதிர்ந்துவிழுகின்றன. அதிலொரு பழம் அப்படியே நழுவி உருண்டு நீரோடையில் மிதந்துசெல்கிறது. ஓரிடத்தில் மேலும் சில பழங்கள் ஒதுங்கிக்கிடக்கின்றன அவற்றுடன் சேர்ந்துகொள்கிறது இந்தப் பழம். எந்த வசனமும் இல்லாத இந்த காட்சி வாழ்வின் அபத்தத்தை உணர்த்துகிறது. யாருடைய பசியையோ ஆற்ற வேண்டிய இந்தப் பழம் யாருக்கும் பயனற்று ஏன் அப்படி உருள வேண்டும்?
கொல்லப்பட்ட யாசர் கொல்லப்பட்ட அன்று இரவில் நாயொன்றுக்கு உணவளித்திருப்பான். அவனது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் அந்த நாய் நின்று குரைத்துக்கொண்டிருக்கும். உடனிருந்த நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட உறவு காரணமாக நண்பனையே கொன்ற மனிதர்கள் வாழும் அதே ஊரில் தான் ஒரு நேரம் உணவிட்டவனின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது அந்த நாய்.
பொதுவாகவே ஸிலான் படங்களில் வசனமற்ற காட்சிகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானவை கதாபாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள். இந்தப் படத்தில் வழக்கறிஞருக்கும் மருத்துவருக்கும் இடையேயான உரையாடல் கவனம்கொள்ளத்தக்கது. தனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தபோது, பிரசவத்துக்குப் பின்னர் தான் இறந்துவிடுவேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு அதே போல் மரித்தார் என்று சொல்கிறார் வழக்கறிஞர். அந்தப் பெண் வழக்கறிஞரின் மனைவி என்பது பின்னர் பூடகமாகச் சொல்லப்படுகிறது. ஒரு பொதுக் கதை இருந்தபோதும், ஒவ்வொருக்கும் தனித் தனிக் கதைகளும் உள்ளன. பொதுக் கதையைப் பேசும் சாக்கில் படம் தனித் தனிக் கதைகளையும் சொல்கிறது. வாகனம் பாதையில் சென்றாலும் நாம் சன்னல் வழியே புறக் காட்சிகளைப் பார்த்தபடியேதானே பயணப்படுவோம். அப்படியான அனுபவம் தரக்கூடிய இயக்குநர் நூரி பில்கே ஸிலான். வாய்ப்புக் கிடைக்கும்போது, ஸிலானில் படத்தைப் பார்ப்பதன் மூலம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் அபத்தங்களை நாம் உணர முடியும். அதற்காகவாவது அவரது படங்களைப் பார்க்கலாம். முதன்முறை அலுப்புத் தரும் அவரது படங்களை மறுமுறை பார்த்தால் அது நம்மை வசீகரித்துவிடக்கூடும். இதுதான் அவரது படங்களின் மாயம்.
இவரது த்ரீ மங்கீஸ், க்ளைமேட்ஸ், விண்டர் சிலீப், த வைல்ட் பியர் ட்ரீ ஆகியவையும் தனித் தனியாகச் சிந்தித்துப் பார்க்கத்தக்கவை.
(2022 ஏப்ரல் அகநாழிகை இதழில் வெளியான கட்டுரை)