இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், அக்டோபர் 03, 2013

தங்க மீன்கள்

பரிசுத்த அன்பில் நீந்தும் மீன்கள்

சமூகச் சிக்கல்களின் மையத்திலிருந்து தனது முதல் திரைப்படமான கற்றது தமிழின் ஆதி இழையை இயக்குநர் ராம் தேர்ந்தெடுத்திருந்தார். மென்பொருள் துறையினரால் சமூகத்தில் ஏற்பட்டிருந்த அழுத்தமான தாக்கத்தை உள்வாங்கியிருந்த கற்றது தமிழ் முழுமையான திரைப்படமாகப் பரிமளிக்கவில்லை. சில குறைகளைக் கொண்டிருந்தபோதிலும் சமகாலத்தின் ஒரு பிரச்சினையை அந்தத்  திரைப்படம் அலச முற்பட்டது. தங்க மீன்கள் ராமின் இரண்டாம் படம். இதன் வெளியீடு தொடர்பாக நாளிதழ்களில் பிரசுரமாகியிருந்த விளம்பர வாசகங்கள் இதை அதீதப் புனைவு வரிசைப் படமாக எண்ணவைத்திருந்தன. ஆனால் திரைப்படத்தை எதிர்கொண்ட மனத்தில் இப்படம் உருவாக்கிய அதிர்வுகள் அசாதாரணமானவை.



நிசப்த அரங்கின் திரையில் அலைந்துகொண்டேயிருந்த தங்க மீன்கள் இதுவரையான தமிழ்த் திரைப்படங்கள் பயணப்பட்டிராத பாதையைத் துலக்கமாக்கியது. தொடக்கத்திலிருந்தே தீவிரமான உணர்வுகளும் பதற்றத்தின் துளிகளும் தளும்பிய காட்சிகளில் கசிந்த துக்கம் ஆழ் மனத்தில் நோவேற்படுத்தியது. இடைவேளை வரையான காட்சி அமைப்புகளில் காணப்படும் இறுக்கமும் அடர்த்தியும் இதுவரை எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் சாத்தியப்பட்டிருக்காதவை. அதன் பின்னர் படத்தைக் கோத்திருந்த மைய இழையில் அவ்வப்போது சிறிது தளர்வும் இறுதியில் முழுமையான தளர்வும் ஏற்பட்டிருந்தன. படத்தின் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் உச்சக்கட்ட போதனைக் காட்சி சட்டென வெளியேற்றியதால் சலிப்பும் வருத்தமும் உருவாயின. 

மனக்கூட்டுக்குள் சுருங்கிக்கொள்ளும் மனிதர்களின் சராசரிப் பதற்றங்களையும் பரிதவிப்புகளையும் விசும்பல்களையும் கேவல்களையும் இயலாமைகளையும் ஏமாற்றங்களையும் பிரியங்களையும் நேர்த்தியான காட்சிமொழியாக்கிய நுட்பத்தில் ராம் வித்தியாசப்படுகிறார். பழுக்கக்காய்ச்சிய வார்த்தைகளின்  வாதைக்காளான உள்ளங்களின் கொப்பளங்கள் காட்சிகளில் நிணம் பரப்புகின்றன. தனக்கென சுய அடையாளமின்றி ஏதோ ஒரு கிராமத்திலோ நகரத்திலோ அன்றாட வாழ்வை நகர்த்துவதிலேயே ஆயுளைக் கழிக்கும் வறியவர்களின் அவலங்களே சிந்தையை நிறைக்கின்றன. 



நல்லாசிரியர் விருது பெற்ற தகப்பனுக்குப் பிறந்த தலைமகன் கல்யாணி. முறையாகக் கல்வி கற்காத அவன் சரியான வயதில் காதல் வயப்பட்டுவிடுகிறான். இளவயதிலேயே மணம் முடித்தும்விடுகிறான். வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான வருமானம் இல்லை என்ற சூழலில் அப்பனோடு ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துகிறான். தந்தையிடம் போதிய வருமானமும் தேவையான அளவு சொத்தும் உள்ளன. தங்கை மென்பொருள் துறையில் கார்டு நிறையச் சம்பாதிக்கிறாள். ஆனால் கல்யாணி தன் பிரிய மகளின் படிப்புச் செலவுக்கே திணறுகிறான். படத்தின் தொடக்கக் காட்சியில் சிறு மகளுடன் மரணம் குறித்து உரையாடும் தந்தையைக் காணும்போதே மனம் துணுக்குறுகிறது. அர்த்தம் பொதிந்த நறுக்குத் தெரித்த உரையாடலுக்கான வெளியைத் தமிழ்த் திரைப்பட பரப்பில் பார்ப்பது அரிதிலும் அரிது. அப்படியொரு வெளி தங்க மீன்களில் திறந்துகிடக்கிறது.

செல்லம்மாவின் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் வாழ்வின் முழுமையை உணர்கிறான் கல்யாணி. எனவே எந்த விகற்பமுமின்றி முகத்தில் வெள்ளிப்பூச்சுடன் சில்வர் மேனாக மகளிடம் கதை பேசியபடியே சைக்கிளில் ஊருலா வருகிறான். மகளை மட்டுமின்றி எல்லாக் குழந்தைகளையும் அவன் நேசிக்கிறான். கடன் கேட்கச் சென்ற இடத்தில் நண்பனுடைய மகன் ஆசையாய்க் கேட்ட வெண்ணிலா கேக்கை மறுமுறை ஞாபகமாக வாங்கிச்செல்ல அவனால் முடிகிறது. செல்லம்மா புத்திசாலிப் பெண். அவள் நேயமிக்க கல்விக்கு ஏங்குகிறாள். ஆங்கில வழிக் கல்வி அவளது உலகத்துடன் சுத்தமாகப் பொருந்தவில்லை. எனவே மந்தமானவளாகப் புரிந்துகொள்ளப்படுகிறாள். கற்பதில் பரிவுடன் கூடிய அன்பு அவளுக்குத் தேவைப்படுகிறது. அதைத் தருபவனாகத் தந்தை இருக்கிறான். 


சாமி படத்தின் முன்பு மகளுக்குத் தேவையான பள்ளிக் கட்டணத்தைக் கல்யாணியின் தந்தை வைத்திருக்கும் காட்சியில் சாமி படத்தின் இடத்திலிருந்து சம்பவத்தை கேமரா படம்பிடித்துள்ள தன்மை பொருள் பொதிந்தது. பேத்தியின் படிப்புக்கு உதவும் தாத்தா போகிறபோக்கில் மகனின் சுய மரியாதையைச் சீண்டிவிடுகிறார். பணத்தை எடுக்க மனமின்றித் தானே கட்டிக்கொள்வதாகத் தெரிவித்துக் கல்யாணி மகளுடன் வெளியேறுகிறான். குழந்தை செல்லம்மா போகும்வழியில் தன் தோழி நித்யஸ்ரீயிடம் தனக்கொரு பூ கேட்க அவள் அதை இயல்பாய் எடுத்துத் தருகிறாள். அடுத்தடுத்து வரும் இந்தக் காட்சிகள் பெரியவர்களின் உலகத்திற்கும் சிறுவர்களின் உலகத்திற்குமிடையேயான முரணை உள்வாங்க உதவுகிறது. இப்படிப் பல செய்திகளை அதிகாலைப் புலர்வது போன்று நுட்பமாக உணரச்செய்கிறது படம். 

இரவில் கல்யாணியும் வடிவும் ரயிலடியில் பேசிக்கொள்ளும் காட்சியில் தண்டவாளத்தில் தடதடத்து ஓடும் ரயிலின் ஓசை பதற்றமான கதாபாத்திரங்களின் மனநிலையோடு பார்வையாளனின் மனநிலையை ஒன்றுகூட்டுகிறது. தினசரி நிகழ்வுகளில் இயல்பாக ஒலிக்கும் ஓசைகளைப் பொருத்தமான தருணத்தில் பின்னணி இசையாக மீட்டியதால் திரைப்படத்தின் ஜீவன் பெருகுகிறது.


ஆசிரியர் எவிட்டாவின் ஆதரவாகப் பழகும் தன்மை செல்லம்மாவைக் கவர்ந்துவிடுகிறது. பள்ளியிலிருந்து திடீரென விலகிவிட்ட எவிட்டாவிடம் பேச செல்லம்மா விரும்பியதால் அவரது வீட்டிற்குக் கல்யாணி தேடிப்போகும் காட்சி குறிப்பிடத்தக்க ஒன்று. நமது சமூகச் சூழலைக், கீழ் மத்திய தரக் குடும்பத்துப் பெண்களின் தாம்பத்திய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காட்சி அது. அந்தக் காட்சி உருவாக்கப்பட்ட நேர்த்தியில் அது மேன்மையானதாக மாறியுள்ளது. நேரிடையான வசனங்கள் இல்லாமல் கதாபாத்திரங்களின் சுருக்கமான உரையாடல், அங்க அசைவுகள், ஆழமான பார்வைகள் ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் அக நெருக்கடியை  அப்படியே உணர்த்துகிறார் இயக்குநர். சந்தேகக் குணம் கொண்ட கணவனின் ஆக்கிரமிப்புக்குள் ஒடுங்கிப்போன சராசரிப் பெண்ணாக எவிட்டா வந்துநிற்கிறாள். பின்புலச் சுவரில் குழந்தையைச் சுமந்திருக்கும் கன்னி மரியாளின் படம் மாட்டப்பட்டிருக்கிறது. எவிட்டா திக்கித் திணறி செல்போனில் ஒருசில வார்த்தைகள் பேசுகிறாள். அப்போது வெளிப்படும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அன்பு சந்தேகக் குணம் கொண்ட கணவனின் அழுக்குகளை அகற்றிவிடுகிறது. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டது போன்ற தரிசனம் கிடைக்கிறது.  உலக இலக்கியங்கள் வலியுறுத்தும் பிரதிபலன் பாராத இந்த எளிய அன்புதான் உலகமயமாக்கலில் சிக்கித் தவிக்கும் நவீன மனத்தின் தற்காலத் தேவை என்பதை மௌனமாக உணர்த்தும் இந்தக் காட்சி நிச்சயமாகத் தமிழ்த் திரைப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

குடும்பம், சமூகம் ஆகியவற்றின் சூழல்கள் காரணமாக எந்த நேரத்திலும் மீட்சி எல்லைக்கு வெளியே சென்றுவிடக்கூடிய அபாயகரமான மன அழுத்தத் தருணங்களை அடிக்கடி எதிர்கொள்கிறான் கல்யாணி. அந்த மனப்போராட்டம்தான் அவனை மற்றவர்களிடமிருந்து தள்ளிவைக்கிறது. தந்தையும் தன் மகன்மீது பாசங்கொண்டவர்தான். ஆனால் பொருள் தேட இயலாத மகன் குறித்த ஆற்றாமையைத் தான் அவரும் வெளிப்படுத்துகிறார். அயலானின் ஆயிரம் சொற்கள் உருவாக்காத வடுவை நெருக்கமானவனின் சிறு விசனம் ஏற்படுத்திவிடுமே? ஓலங்களைவிட விசும்பலின் தீவிரம்தானே மனத்தை ஓய்வற்று உழலவிடுகிறது.


இயலாமையின் வெம்மையும் தவிப்பின் வெதும்பலும் வெளியேற வழியின்றி உள்ளுக்குள்ளேயே அலைமோதுவதால் மனம் அடையும் வேதனைத் துயரைப் பார்வையாளனால் உணரமுடிகிறது. தந்தையுடன் சரிசெய்ய இயலாத அளவிலான பிணக்கு கொண்ட கணத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவுசெய்து, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதே தன்னுடன் வந்த காதல் மனைவியைக் கல்யாணி அழைக்கும்போது அவள் மறுப்பதுடன் குழந்தையையும் தர மறுத்துக் கதவை அழுத்தமாக மூடிவிடுகிறாள். மூடிய கதவின் முன்னர் முட்டி மோதி “நான் என்ன தப்பு செய்தேன்” என மாசுபட்ட சமூகச் சூழலில் மாசுபடாத கல்யாணி கதறுகிறான். திறமையற்ற காரணத்தால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த கதறலாக அது இருப்பதால் உக்கிரத்துடன் ஒலிக்கிறது.

காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் திரைக்கதைக்கு நூறு சதவிகிதம் பொருத்தமாக அமைத்துவிட்டதால் பார்வையாளனை இயக்குநர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வெவ்வேறு நிலங்களுக்கு அவரது விருப்பம் போல் அழைத்துச்செல்ல முடிகிறது. கேள்விகளற்றுத் தொடர்கிறான் பார்வையாளன். காட்சிகளின் பின்னணியில் எழும் ஒலிகள், திரையில் வரும் அஃறிணைப் பொருள்கள் ஆகியன காட்சிகளின் உணர்வைப் பார்வையாளனிடம் பரிவோடு கொண்டுசேர்க்கின்றன.


கல்யாணி கடன் பெறுவதற்காக மலையாளியான தன் நண்பன் முருகன் வீட்டின் பூட்டிய கதவுக்கு முன்னால் காய்ந்த சருகுகளைப் பார்த்தவாறு கையைப் பிசைந்தபடி காத்திருக்கிறான். முற்றத்தில் குழந்தைகள் அழகான தமிழ்ப் பாட்டுக்கு ஆனந்தமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆங்கிலப் பாடலுக்கு ஒழுங்காக ஆடத் தெரியவில்லை என்ற காரணத்தால் பிஞ்சு மகள் ஆசிரியையிடம் திட்டு வாங்கி மனம் வெதும்பிக்கொண்டிருக்கிறாள். மனம் உடைந்து அழுதுகொண்டே பசுமையான தோப்புகளின் பின்னணியில் செல்லம்மா வருகிறாள். பிரபஞ்சத்தின் ஊடே அவளின் அழுகை மட்டும் சின்னஞ்சிறு பறவையின் கேவலாக ஒலிக்கக் கண்ணெதிரே தெரியும் அந்தத் தொலைதூரக் காட்சி ஒளிப்பதிவாளர் அர்பிந்த் சாராவை மனத்துக்கு மிக நெருக்கத்தில் கொண்டுவருகிறது.  இருளும் ஒளியும், பசுமையும் வெறுமையும், மேடும் பள்ளமுமான களங்களாலும் ஆவேசமும் அமைதியும், சந்தோஷமும் துக்கமுமான உணர்வுகளாலும் வனையப்பட்ட காட்சிகளை அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு உறுத்தலின்றிக் காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சராசரியான வாழ்வு நடத்தக்கூடப் பணமற்றுக் கல்யாணி கொச்சிக்குச் செல்ல முருகன்தான் மறைமுகக் காரணம். அயல் நாட்டில் பிறந்த டால்ஃபின் ஆண்ட்டி கொச்சியில் கலைப்பொருள்கள் வர்த்தகத்தில் ஏகத்திற்குச் சம்பாதிக்கிறார். தன் தந்தைக்கு உதவ நினைக்கும் மகளுக்குத் தொலைக்காட்சி தொடர் ஒன்று திருடக் கற்றுத் தருகிறது. செல்லம்மாவின் விருப்பமான வோடோஃபோன் விளம்பர நாயைப் பெற டால்ஃபின் ஆண்ட்டி, எங்கோ வயநாட்டில் வாழும் பழங்குடியினப் பெரியவர் ஆகியோரின் உதவி தேவையாக உள்ளது. இத்தகைய காட்சிகள் ஒவ்வொன்றும் முரண்கள் நிறைந்த  வாழ்வின் நிதர்சனங்கள். எளிய மனிதனின் சுதந்திரமான வாழ்வைத் தாறுமாறாகக் கலைத்துப்போடுவதில் சமூகம் பெரும் பங்காற்றுகிறது என்னும் அரசியல் கருத்து பூடகமாக உணர்த்தப்படுகிறது.


ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளியில் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்கள், பெற்றோர் சந்திக்கும் பள்ளி நிர்வாக அராஜகம், மரியாதையின்மை, சுரண்டல் என அதன் அத்தனைப் பக்கங்களையும் மிகத் தெளிவாகக் காட்சிகள் புலப்படுத்துகின்றன. செல்லம்மாவுக்கு மறு தேர்வுக்கான ஒப்புதல் தரும்போது அதற்கும் சேர்த்துக் கட்டணத்தை வசூலிப்பவராகத்தான் பள்ளித் தலைமை ஆசிரியர் இருக்கிறார். குறைந்த ஊதியம் பெறும் ஸ்டெல்லா போன்ற ஆசிரியர்களின் மன உளைச்சல் குழந்தைகள்மீது வேறு விதமாகப் பாய்கிறது.  ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் செல்லம்மா மட்டுமல்ல அரசுப் பள்ளியில் படிக்கும் பூரி நித்யஸ்ரீயும் சரியாகப் படிக்கவில்லை என அவள் தாய் திட்டியதால் இறந்துவிட முடிவுசெய்கிறாள். ஆனால் மனசுக்குப் பிடித்த பூரிக்காகக் கடினமான ஓரிரவைப் பொறுத்துக்கொள்கிறாள். 

நல்லாசிரியர் விருது பெற்ற நன்கு சம்பாதித்த தந்தையைவிடப் படிப்பைப் பாதியில் துறந்த, போதுமான அளவு சம்பாதிக்காத தந்தையான கல்யாணி நல்ல தந்தை என்னும் பெயரை எளிதில் பெற்றுவிடுகிறான், காரணம் குறைகளைப் பெரிதுபடுத்தாத தூய அன்பு. கல்விக் கட்டணமான இரண்டாயிரம் ரூபாய், வோடோஃபோன் நாய்க்கான அலைச்சல் ஆகியவற்றிற்கு நேரடியான பொருள் கொள்வது அவசியமல்ல என்பதைப் பார்வையாளன் முதல்முறையே புரிந்துகொள்வது சந்தேகமே.


“நானும் செல்லம்மா மாதிரி தானே” எனக் கல்யாணியிடம் ஃபோனில் கெஞ்சுவது, “செல்லம்மாவைத் திருடின்னு சொல்லாதீங்க மாமா” எனக் கண்டிப்புடன் கூறுவது, சுய மரியாதையைவிட முடியாமலும் மாமியாரின் குத்தல் பேச்சுகளைச் சகிக்க முடியாமலும் மருகுவது என அனைத்து உணர்ச்சிகளையும் அளவாக வெளிப்படுத்தியுள்ளார் வடிவாக நடித்துள்ள ஷெல்லி.

“ஆச்சி எப்பம்பா சிரிச்சிருக்கா” என்று பெரிய மனுஷ தோரணையில் பேசுவது, “மிஸ் மிஸ்” எனப் பதறுவது, அந்நியோன்யமான ஆணிடம் அவனது நேசத்தை விழையும் பெண் கொஞ்சிக் குழைந்து பேசுவது போல் தன் தகப்பனிடம் பேசுவது, சொக்கியிடம் மனவருத்தங்களை எல்லாம் சொல்லிவிட்டுக் குளத்தில் குதிக்கத் தயாராவது, தந்தைக்குக் காய்ச்சல் என அவன் சொன்னவுடன் ஆடும் ஊஞ்சலில் இருந்து இறங்கி அனுசரனையுடன் அதைச் செவிமெடுப்பது எனப் பலவித உணர்ச்சிகளையும் இயன்றவரை எல்லை மீறாதபடி கையாண்டுள்ளாள் செல்லம்மா வேடமேற்றுள்ள சாதனா.


கோபமான இடங்களிலும் பாசமான சந்தர்ப்பங்களிலும் வசனங்கள்  நறுக்கென வந்து விழுகின்றன. நாகர்கோயில் அருகே உள்ள வீராணி ஆளூர், அச்சன்கோவில், வயநாடு, கொச்சி, செஞ்சி எனக்  கதைக்குப் பொருத்தமான களங்களை ராம் தேர்வு செய்துள்ளார். உலகமயமாக்கலால் நலிவடைந்த சிறு தொழில், தனியார் பள்ளிகளின் சுரண்டல், விளம்பரங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றின் பாதிப்பு, பழங்குயினர் வாழ்வு போன்ற சமூகக் காரணிகளின் தாக்கத்தை வெறும் புள்ளிகளாக அங்கங்கே வைத்துள்ளார் ராம். நம்பிக்கையும் பொறுமையும் கொண்ட பார்வையாளன் புள்ளிகளை இணைத்து ஓவியத்தை ரசித்துக்கொள்கிறான். ஆகவே அவனது ஆழ்மன இண்டு இடுக்குகளிலெல்லாம் நீந்திக்கொண்டேயிருக்கின்றன இந்தத் தங்க மீன்கள்.

காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக